நினைவுகளின் தடத்தில் - (3, 4 & 5)
- அண்மையில் மறைந்த கலை, இலக்கிய விமர்சகர் வெங்கட் சாமிநாதனின் 'நினைவுகளின் சுவட்டில்..' முதல் பாகம் டிசம்பர் 2007 இதழிலிருந்து, ஜூலை 2010 வரை 'பதிவுகள்' இணைய இதழில் வெளியானது. இது தவிர மேலும் பல அவரது கட்டுரைகள் அக்காலகட்டப் 'பதிவுகள்' இதழ்களில் வெளிவந்திருக்கின்றன. அவை அனைத்தும் மீண்டும் 'பதிவுகள்' இதழில் மீள்பிரசுரமாகும். - பதிவுகள் -
நினைவுகளின் தடத்தில் - (3)
நான் நிலக்கோட்டையில் பாட்டியுடனும் மாமாவுடனும் இல்லாதிருந்தால், அப்பாவும் அம்மாவும் இருக்கும் உடையாளூர் கிராமத்திலியே இருந்திருந்தால், என் விருப்பங்களும், ரசனையும் எப்படி இருந்திருக்கும் என்று நினைத்துப் பார்ப்பேன். எனக்கு விருப்பமானது என்பது ஏதும் உள்ளிருந்து சதா கொதித்துக் கொண்டு இருக்கும் மூடியை உதறித் தள்ளிக்கொண்டு வெளியே பீறிடும் ஏதும் ஆன்மீக, கலைப் பசி என்கிற சமாச்சாரங்கள் ஏதும் இல்லை என்று தான் நான் நினைக்கிறேன். விதவைப் பாட்டிக்கு புராணப்படங்களே தஞ்சம் எனவாகிப் போனதும், வீட்டுக்கு நேர் எதிரே ரோட்டுக்கு அந்தப் புறம் சினிமாக் கொட்டகை என்று ஆகிப் போனதும் சந்தர்ப்பங்கள் தான். நிலக்கோட்டையில் தங்கியிருந்த வீடு ஊருக்குள்ளே இருந்திருந்தால் பாட்டிக்கு இதெல்லாம் சாத்தியமாகியிராது. எனக்கும் அந்த சந்தர்ப்பங்கள் கொசுராகக் கிடைத்திராது. பாட்டிக்கு இது புண்ணியம் சம்பாதிக்கும் நவீன மார்க்கமாகிப் போனது. எனக்கு விளையாடுவது போல, சோளக்கொல்லியில் புகுந்து சோளக் கொண்டை திருடித் தின்பது போல, கல்லெறிந்து மாங்காய் அடித்துத் தின்பது போல, வேறு ஒருவிதமான பொழுது போக்கு. இப்போது என் சொந்த கிராமம் என்றும், நான் பிறந்த இடம் என்றும் சொல்லிக்கொள்ளும், (அது பிறந்த இடமும் இல்லை, சொந்தமும் இல்லை) உடையாளூரில் இருந்திருந்தால், சினிமா, நாடகம், சோளக்கொண்டை திருடித் தின்பதெல்லாம் ஒரு புறம் இருக்கட்டும், முதலில் ஊடையாளூரில் அப்போதிருந்த திண்ணைப் பள்ளிக்கூடத்தைத் தாண்டி மேற்சென்றிருப்பேனா என்பதே சந்தேகம். என் பாட்டிக்கு நான் பிரியமாகிப் போனது, தன் பேரப்பிள்ளையைத் தானே வளர்க்கவேண்டும் என்று ஆசைப்பட்டதும் என் நிலக்கோட்டை வாசத் திற்குக் காரணமாகிப் போயின. பாட்டி ஆசைப்பட்டது இருக்கட்டும், அம்மாவுக்கு எப்படி தன் முதல் குழந்தையை அதன் இரண்டு வயதில் விட்டுப் பிரிய மனம் வந்தது என்று சில சமயம் யோசிப்பேன். பதில் கிடைக்காது. அத்தோடு அந்தக் கேள்வி மறைந்து விடும்.