ஐம்பது வருடங்களின் வளர்ச்சியும் மாற்றங்களும் (3)
இந்த இடத்தில், சந்தர்ப்பத்தில் சல்மா என்னும் கவிஞரைப் பற்றிப் பேசுவதும் பொருத்தமாக இருக்கும். அதற்கான காரணங்கள் சுவாரஸ்யமானவை பல. சல்மா தன் கவிதைகளில் தன் சொந்த துயரங்களையும் இழப்புகளையும் பற்றித் தான் பேசுகிறார் என்று தோன்றும். ஆனால் அவை உண்மையில் அத்தோடு நிற்பதில்லை. இறக்கை முளைத்துப் பறக்கத் தொடங்கி விடுகின்றன. அக்கவிதைகள் வேறு நிலைகளுக்கு நம்மை இட்டுச் செல்கின்றன. தன் சொந்த துயரங்கள், தன் குடும்பத் துயரங்களாக, ஒரு சமூகத்தின் துயரங்களாக, அவர் சார்ந்திருக்கும் மதத்தின் நிலைப் பாட்டிலிருந்து பெறும் துயரங்களாக விரிவடைகின்றன, அவரை மட்டிலும் ஒரு பெண்ணாக, தனிப்பட்ட வியக்தியாகத் தாக்கி வதைக்கும் துயரமாக நின்றுவிடாது பெண் சமூகம் முழுதையும், தான் சார்ந்த இஸ்லாமிய பெண் சமூகம் முழுதும் ஆழ்த்தியிருக்கும் துயரமாக, இழப்புக்களாக விரிவு படுகிறது. மதம் மாத்திரமல்ல, ஆண் வர்க்கமே தன் மதத்தின் துணை கொண்டு தன் மேலாண்மைக்கு தன் மதத்தையே ஆயுதமாக, சமூக நியாயமாக பயன்படுத்திக்கொள்கிறது. சல்மாவின் சொந்த துயரங்களும் இழப்புக்களும் பெண்சமூகத்தின் துயரங்களுக்கும் இழப்புக்களுக்கும் metaphor ஆகிறது. அவரது குரல் பெண்சமூகமே, குறிப்பாக இஸ்லாமிய பெண் சமூகமே அதை அழுத்தி வதைக்கும் ஆணாதிக்கத்துக்கு எதிராக எழுப்பும் குரலாகிறது. சல்மாவுக்கு அவரது கவிதைகள் விடுதலைக்கான மொழியாகிறது.