நாஞ்சில் நாடன் தன் சிறுகதைகளிலும் நாவல்களிலும் அரசியல் வாதிகள், மற்றும் பிரமுகர்களின் வேஷதாரித்தனத்தை தனக்கே உரிய கேலியுடன் சித்தரிக்கிறார். வாக்குப் பொறுக்கிகள் என்னும் அவரது சிறுகதைத் தொகுப்பு ஒரு உதாரணம். தன் மிதவை என்னும் நாவலில் தான் பிறந்த கன்னியாகுமரி மாவட்டத்தின் ஒரு சிற்றூரிலிருந்து வேலை தேடி பம்பாய் வந்த கதையைச் சொல்கிறார். அதில் தான் சந்திக்க நேர்ந்த அரசியல் பிரமுகர்களின் வெளி வேஷங்களையும், சாதி உணர்வுகளையும் பற்றி கொஞ்சம் விரிவாகவே எவ்வித தயக்கமின்றி கேலியுடன் தான் எழுதுகிறார். கோபி கிருஷ்ணனின் எழுத்துக்களில் தான் (அதைக் கதை என்பதா, இல்லை சிறுகதை என்பதா, அல்லது குறிப்புகள் என்பதா, எந்த வகைப்படுத்தலுக்கும் இயைவதாக, ஆனால் அதே சமயம் முழுவதும் அந்த வகைப்படுத்தலுக்கு அடங்காததாக இருப்பவை), ஒவ்வாத உணர்வுகள் என்ற தொகுப்பில் அவற்றைப் பார்க்கலாம், அவருடைய நடையும், எழுத்து பெறும் வடிவமும், கிண்டலும், சுய எள்ளலும் தனி ரகமானவை. தன்னைச் சுற்றியிருக்கும் வாழ்வை, நடை முறையை, மதிப்புகளை, சமூகத்தை அவர் செய்யும் கிண்டல், அதில் அவரது சுய எள்ளலும் சேர்ந்தது, எல்லாவற்றையும் தவிடு பொடியாக்கும் ரகம். இன்றைய தமிழ் சமூகத்தின் மதிப்புகளின் அது எதையெல்லாம் தன் வெற்றியாகக் கருதி வியக்கிறதோ அந்த அலங்கோலங்கள், கீழ்த்தரங்கள், ஆபாசங்களையெல்லாம் மதிப்புகள், வாழ்க்கைத் தர உயர்வு, வெற்றி என்று சொல்லிப் பெருமைப் பட்டூக் கொள்வது, தமிழ் மொழியையே கொச்சைப்படுத்துவதும் ஆபாசமாக்குவதும் ஆகும். கோபிகிருஷ்ணன் தனக்கென தனி ஒரு நடையையும், எழுத்து வடிவையும், உருவாக்கிக்கொண்டுள்ளார், தன்னையே கிண்டல் செய்து கொள்ளும் பாணியில் சமூகத்தைக் கிண்டல் செய்வதற்கு. அவர் போல ஒரு நடை, எழுத்து பாணி, கிண்டல், அவரதேயான ஒரு பார்வை கொண்ட இன்னொரு எழுத்தாளர் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. அவரைப் பற்றிய எதுவும் அவரது தனித்துவத்தையே சொல்லும்.