தி.க.சி. யின் நினைவில்
என்னை மிகவும் திகைப்புக்கும் ஆச்சரியத்துக்கும் உள்ளாக்கிய மனிதர் சமீபத்தில் மறைந்த தி.க.சி. அறுபதுகளின் இடை வருடங்களிலிருந்து தான் தி.க.சி. எனக்குத் தெரிய வந்ததே. தாமரை என்னும் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வெளிவந்து கொண்டிருந்த பத்திரிகையின் ஆசிரியராக. தமிழ் நாட்டு முற்போக்கு எழுத்தாளர்களுக்கு ஆதரவாளராக, கட்சிக் கோட்பாடுகளுக்கு , பிரசாரகராக, வழிகாட்டியாக. இவையெல்லாம் அவரது வெளித்தெரிந்த ரூபங்கள் பலவென்றாலும் அதிகம் கேட்கப்படும் குரல் ஒன்று தான். பின்னிருந்து தூண்டும் சக்தியும் ஒன்றுதான். இவை எதுவும் எனக்கு பிடித்தமான காரியங்கள் அல்ல. அதே காலத்தில் வெளிவந்து கொண்டிருந்த, எழுத்து, இலக்கிய வட்டம் போன்ற பத்திரிகைகள் எனக்குப் பிடித்தமானவையாக, என் பார்வைக்கு ஒத்திசைவு கொண்டவையாக இருந்தன. தாமரை அல்ல. ஆனால், இந்த முற்போக்கு முகாமில் இருப்பவர்கள் பற்றியோ அவர்கள் செயல்பாடுகள் பற்றியோ எதுவும் கறாராகச் சொல்லி விட முடிந்ததில்லை. முற்போக்கு கூடாரத்திலிருந்தவர்களோடு மிக நெருக்கமாக இருந்த வல்லிக்கண்ணன், தாமரை இதழ் கட்சிக்கென தொடங்கப் பட்டதே விஜய பாஸ்கரன் நடத்தி வந்த சரஸ்வதியின் திறந்த மனப்போக்கும் செயல்பாடுகளும் ஜீவாவுக்குப் பிடிக்காமல் போய்விடவே, கட்சியின் குரலை முழுக்க பதிவு செய்வதற்கென்றே தொடங்கப்பட்டது தான் தாமரை என்று சொல்லியிருக்கிறார். இதை அவர் சொன்னது, தாமரை தொடங்கப்பட்ட போது அல்ல. வெகு காலம் பின்பு. அனேகமாக, என் நினைவு சரியெனில், தீபம் பத்திரிகையில், சரஸ்வதி காலம் என்னும் தொடரின் கடைசி பக்கங்களில் அதன் மரணத்தைப் பற்றிச் சொல்லும் போது இந்த திரைக்குப் பின் நடந்த கதையைச் சொல்கிறார். சரஸ்வதி பத்திரிகை அச்சாகி வந்த ஜனசக்தி பிரஸ்ஸில் அதைத் தாமதப் படுத்தியே ஜீவா சரஸ்வதியை கடை மூட வைத்தாராம். அவர் சொல்லியிராவிட்டால் இந்த ரகசியங்கள் வெளிவராமலே போயிருக்கும். வல்லிக்கண்ணன் தைரியமாக தன் மனதில் பட்டதை, தான் பார்த்த உண்மைகளைப் பதிவு செய்த மிக அரிதான சந்தர்ப்பங்களில் இதுவும் ஒன்று. இன்னொன்றையும் சொல்லி விடுகிறேனே. விஜய பாஸ்கரனின் சமரன் என்ற இதழில் திமுகவையும் அதன் தலைவர்களையும் சாட்டையடி என்று தான் அந்த விளாசலைச் சொல்ல வேண்டும். அப்படி விளாசியவர் தான் அதற்கு முன்னரும் மௌனம். பின்னரும் சுமார் 50 வருடங்களுக்கு வாயைத் திறக்கவில்லை. இவை யெல்லாம் எப்படி நிகழ்கின்றன என்பது எனக்கு இன்னமும் புரியாத புதிராக, ஆச்சரியமாக இருந்து வருகிறது.