இங்கே எதற்காக - ஜெயபாரதியின் திரையுலக வாழ்க்கைக் குறிப்புகள்
இங்கே எதற்காக என்று ஒரு புத்தகம் திரைப்பட இயக்குனர் ஜெயபாரதியினது ஒரு புது வரவு சில மாதங்களுக்கு முன் வெளிவந்தது. மிகப் பழைய நினைவுகள் சில, அதிகம் இல்லை. எப்போதோ எழுபதுகளின் ஆரம்ப வருஷங்களில், நான் தஞ்சையில் விடுமுறையில் இருந்த போது ஒரு கடிதம் வந்தது. சினிமா பற்றி ஏதாவது எழுதும்படி. அது மாலனோ அல்லது ஜெயபாரதியோ அல்லது இருவருமே அடுத்தடுத்தோ, சரியாக நினைவில் இல்லை. என்ன எழுதினேன் என்று நினைவில் இல்லை. என்ன எழுதக்கூடும் நான் என்ற தயக்கத்தோடு தான் எழுதிய ஞாபகம். ஏதும் குறிப்பிட்டுச் சொல்லக் கூடிய எதுவும் இல்லை. இதை நினைவு கூறக் காரணம், நான் என்ன எழுதினேன் என்பது அல்ல. இப்போது தனக்கு அறுபத்து மூன்று வயதாவதாகச் சொல்லும் ஜெயபாரதி அப்போது 22 வயதினராக இருக்க வேண்டும். ஒரு பத்திரிகை, சினிமா பற்றி, அதுவும் தமிழில் சினிமா பற்றி மிகவும் வித்தியாசமாக, சிந்திக்கும் மனதில் உருவாக்கிக் கொண்டிருக்கும் ஜெயபாரதி. சத்யஜித் ரே, மிருணால் சென், ரித்விக் காடக், என பலர் அகில இந்திய தளத்திலும் உலக சினிமா தளத்திலும் புதிய சரித்திரம் படைப்பவர்களாக, உலவத் தொடங்கிய பிறகு, தமிழ் நாட்டிலும் ஒரு ஜெயகாந்தன் ஒரு எளிய தொடக்கமாக உன்னைப் போல் ஒருவனைத் தந்து விட்ட பிறகு, ஒரு சில நூறு பேராவது, சரி ஒரு சில ஆயிரம் பேர்களாவது முற்றிலும் வேறு பாதையில் தமிழ் சினிமாவைப் பற்றி சிந்திக்கவாவது தொடங்கியிருந்திருக் கிறார்கள். இதனால் எதுவும் ஆகிவிடப்போவதில்லை ஆகிவிடவுமில்லை.