- வெங்கட் சாமிநாதன் -இப்போது ஞானி வானம்பாடிகள், அவர்கள் கவிதைகள், அவர்களை ஒன்றிணைத்து செயல்பட தான் முனைந்தது, அவர்களின் தனிப்பட்ட ஆளுமைகள்,  வானம்பாடி இதழ் கொண்டு வரும் முன் அவர்களின் தனிப்பட்ட ஆளுமைகள், வானம்பாடி இதழில் அவர்கள் வெளிப்படுத்திய கவிதைகளின் பண்புகள், தான் அவர்களிடம் எதிரார்த்த ஒன்றுபட்ட கருத்தாக்கமும், அவர்களது செயல்பாடுகளும் என்று எழுபதுகளின் ஆரம்பத்திலிருந்து வானம்பாடி இதழும் இயக்கமாக தான் அதைச் செயல்படுத்த விழைந்ததும், இடையே அவர்களுக்கிடையே எழுந்த முரண்பாடுகள், பின்னர் வானம்பாடி இதழ் செயல்பட முடியாது போனதும் , இன்று சுமார் நாற்பது ஆண்டுகளுக்குப் பின்னர் அது பற்றிய அவரது  சிந்தனைகள் எல்லாம் அவ்வப்போது எழுதிய கட்டுரைகள், கடிதங்களை எல்லாம் தொகுத்து அளித்திருக்கிறார், படிக்க சுவாரஸ்யமாகத்தான் இருக்கிறது. வெளியில் சொல்லப்பட்டதும்,சொல்லிக்கொண்டதும்  தன் எதிர்பார்ப்புகளும் ஏமாற்றங்களுமாக நம் முன் அவை விரியும்போது, இவற்றினிடையே ஞானியின் மாறிவரும் அபிப்ராயங்களையும் மாறாது அவர் வலியுறுத்தும் பார்வைகளையும் பார்க்க முடிகிறது.

ஞானி தன் அளவுக்கு தனக்கு உண்மையாகத்தான் இருக்கிறார். அவ்வப்போது அவர் தன் சக கவிஞர்களைப் பற்றியும் அவ்வப்போது தன் மாறி வரும் அபிப்ராயங்களையும் சொல்லிச்  சொல்லும் போது , எல்லோரும் கூட்டாக செயல்படும்போது சில விஷயங்கள் மனதுக்கு ஒத்து வராவிட்டாலும் பாராட்டாது கூட்டுச் செயல்பாட்டிலேயே கவனம் செலுத்தும் காரணத்தாலா, இல்லை, பின்னர் எல்லாம் சரியாகிவிடும், மார்க்ஸிஸம் தான் இந்த முரண்களைச் சரி செய்துவிடும்  சர்வரோக நிவாரணி என்ற நம்பிக்கையா, எதுவென்று ஏதும் புரிவதில்லை. ஆனால் இந்த முரண்களை யெல்லாம் தானே முன் வந்து முன் வைக்கும்போது, அவரை நாம் முன்னுக்கு பின் முரணாகப் பேசுகிறார் என்று கருத முடிவதில்லை. எனினும் ஒவ்வொரு கூட்டு இயக்கத்தின் பின்னும், கூட்டாக செயல்பட வருபவர்களின் அவரவரது உள்நோக்கங்களும், எதிர்பார்ப்புகளும், பலவாக வேறுபடும் போது, அது அவருக்குத் தெரிந்த போதிலும் அதை மார்க்ஸிஸம் சரி செய்துவிடும் என்று அவர் நம்பினாலும் அந்த முரண்களும் தனி நபர் ஆசைகளும்  இல்லாமலாகி விடுவதில்லை. அவரவர் கவித்வ மகுடமும், ஒருமித்த செயல்பாட்டில் கிடைக்கும் பிராபல்யமும் இல்லாமலாக்கி விடுவதில்லை. அவரவர் தனியாகவும் சரி, கூட்டாகவும் சரி, தம் பிம்பத்தை வளர்த்துக் கொள்வதிலேயே கருத்தாக இருப்பார்கள் போலும். போலும் என்ன?. அது தான்

இத்தொகுப்பில் உள்ள கட்டுரைகள் பெரும்பாலும் ஞானியுடையனவே. அவ்வப்போது எழுதியவை. வானம்பாடி இயக்கம், வானம்பாடி கவிஞர்களோடு ஞானியின் உறவுகள். வானம்பாடி iஇயக்க கவிதைகள்,கவிஞர்கள் பற்றிய ஞானியின் மாறிவரும் அபிப்ராயங்கள், இவரது எதிர்பார்ப்புகள் என வானம்பாடி இதழ்கள், பின்னர் வானம்பாடி கவிஞர்களிடமிருந்து ஞானி விலகியதும் அதன் விளைவாக தன் தரப்பைச் சொல்லுமுகமாக அவர் வெளியிட்ட வேள்வி  என்ற பத்திரிகையில் வெளிவந்தவை, வானம்பாடி இதழ் தொடங்குமுன் பூம்பொழில் இலக்கிய வட்டத்தில் பரிமாறிக் கொண்டவை என 1971 முதல்,2010 வரையிலான ஞானியின் மார்க்ஸிஸத்தில் தோய்ந்த கவிதைப் பார்வை இத்தொகுப்பில் நமக்குக் கிடைக்கின்றன. இது ஏதும் 40 வருடகால தொடர்ந்த பதிவுகள் அல்ல. வானம்பாடி கவிதைகளின் தொகுப்புக்கு ஞானி எழுதிய முன்னுரை இதில் இல்லாதது பெரிய குறை. இரண்டாவது வெளிச்சங்கள் ஏன்னும் தொகுப்புக்கு நான் எழுதிய விமர்சனம் தெறிகள் இதழ் 4 1975-ல் வெளியானதை வைத்துக்கொண்டு அனுமானமாக வெளிச்சங்கள் 1974-ல் வெளிவந்திருக்க வேண்டும். ஆக, ஞானியின் வெளிச்சங்கள் அறிமுகக் கட்டுரையை 1974 அல்லது 1975 எனக்கொள்ள வேண்டும். இத்தொகுப்பில் உள்ள ஞானியின் கட்டுரைகளையும் அது சார்ந்து ஞானி கொடுத்துள்ள மற்ற கட்டுரைகளையும் கால வரிசைப் படுத்தினால், 1971, 1975, 1978, பின் ஒரு தாவல் 1994, பின் மறுபடியும் இரண்டு தாவல்கள் 2001, 2010. இதை பெரிது படுத்துவதில் அர்த்தமில்லை. ஞானி எப்போதெல்லாம் வானம்பாடியுடனான தன் உறவாடலைக் கொள்ள நேர்ந்ததோ அவற்றையெல்லாம் தொகுத்துத் தந்துள்ளார். வெளிச்சங்களுக்கான அறிமுகக் கட்டுரை தவிர. அதில் அவர் வானம்பாடிக் கவிதைகளை வெகு உற்சாகத்தோடும், எதிர்பார்ப்போடும் புகழ்ந்து வரவேற்றுள்ளார்.

ஞானி எதையும் மறைக்கவில்லை. தான் உறவாடியதும், பின்னர் ஒதுக்கி விலக்கப் பட்டதும் ஆன காலகட்டத்திலும் இப்போது முப்பது வருடங்களுக்குப் பின் தன் சிந்தனை அவற்றில் தோய்ந்து விடும் போதும் அலை மோதும் முரண்கள் எதையும் அவர் மறைக்கவில்லை. தமிழ்ச் சூழலில் இது மிகப் பெரிய விஷயம். ஆனால் இம்முரண்கள் பற்றிக் கவலைப் படாத, அது பற்றி பிரக்ஞையே இல்லாதவர்கள் எல்லா தலைமுறைகளிலும் உண்டு. அவர்கள் தமக்குச் சாதகமானவற்றையே கண்டு உற்சாகம் ததும்ப ஆரவாரத்தில் ஆழ்வார்கள். ஒன்றை வைத்துக்கொண்டு அதற்கு எதிரான முன்னதை அலட்சியப்படுத்தி எறிந்து விடுவார்கள். கருத்துக்கள் மாறும் தான். ஆனால் முன்னர் கொண்ட கருத்தையும் கூறி, பின்னர் நிகழ்ந்த மாற்றத்தையும் சொல்லி, மாற்றத்திற்கான காரணங்களையும் சொல்ல வேண்டும். அது தான் நேரிய கருத்துலகின் பண்பாகும். இல்லையெனில் அது நேர்மையற்ற சந்தர்ப்ப வாதம். அது அறிவுலகையோ, இலக்கிய கலை உலகையோ சார்ந்த தல்ல.

ஞானியின் முரண்கள், அவ்வப்போதைய உணர்ச்சி வசப்பட்ட முரண்கள். என்றும், அவருள் நிலவும் குழப்பமான மனநிலையோ என்றும் ஒரு அல்லாடல்..  1970 களில் அவர் கருத்துக்களில் காணும் முரண்கள் தான், 2010-ளிலும்  காணும் முரண்கள். சில சமயம் ”இப்போதைக்கு தட்டிக் கொடுப்போம், இல்லையெனில் வளர்ச்சி கெடும்,” என்ற ஆசிரிய/பெற்றோர் மனோ பாவமாகவும் இருக்கலாம். ஞானி அடிக்கடி சொல்லும் தாரக மந்திரம் மார்க்ஸிஸம்.  அவர் விவாதிக்கும் எப்பொருளுக்கும் அடித்தளம் மார்க்ஸிசம் என்னும் மந்திரச் சொல் தான். 1971 லும் சரி, 2011லும் சரி.  1971 லேயே ரஷ்யாவிலும் சரி, சைனாவிலும் சரி, மார்க்ஸ் என்ற பெயர் மறையத் தொடங்கிவிட்டது அல்லது மறைந்து விட்டது.. 1971-ல் ப்ரெஷ்ன்யேவும் சரி, மாவோவும் சரி மார்க்ஸ் என்ன, லெனின், ஸ்டாலின் பெயர்களை உச்சரித்ததாகக் கூட பத்திரிகைகளில் படித்த நினைவு எனக்கில்லை ஒருத்தர் க்ருஷேவைத் திட்ட, இன்னொருவர் தன்னையே முதன்மைப் படுத்திக்கொண்டார். மோ சே துங் சிந்தனைகள் கையில் இருக்கவேண்டும். எப்போதும். ரயில் ஓட்டினாலும் வயல்களில் நாற்று நட்டாலும். நம்மூர் கம்யூனிஸ்டுகளே கூட மார்க்ஸை அடியோடு மறந்தாயிற்று  தா பாண்டியனோ, ஜி ராமகிருஷ்ணனோ மார்க்ஸ் பெயரை உச்சரித்து எத்தனை தலைமுறைகளாயிற்று என்று கேளுங்கள். இன்று கம்யூனிஸ்ட் அரசே எங்கும் இப்பூவலகில் இல்லை. சைனாவிலும் சரி, ரஷ்யாவிலும் சரி. நிலவுவது முதலாளித்துவம். மந்திரிகளே திருட்டுச் சொத்து சேர்த்த குற்றத்துக்கு உயிரிழக்கிறார்கள். தமிழ் நாட்டின் இவ்விரு கம்யூனிஸ்ட் தலைவர்களும் அதிகம் பேச நான் கேட்டது அவர்கள் சார்ந்திருக்கும் கூட்டணியைப் பொருத்து எதிர் அணி கூட்டணியின் ஊழல் பற்றித் தான். இவரகள் கவலை எல்லாம் தமக்குக் கிடைக்க விருக்கும் பதவி வாய்ப்பு பற்றித் தான். ஏதோ ஒரு சட்ட/நாடாளுமன்றத்தின் உறுப்பினர் நாற்காலி. மார்க்ஸை மறந்து எத்தனையோ ஜன்மங்களாயிற்று. ஆக, ஞானி ஏதோ உலகத்தில் தான் இன்னமும் இருந்து வருகிறார். மார்க்ஸிசத்தில் கால் பதிக்காதவர்கள் என்று ஞானி அன்று குற்றம் சாட்டிய சிற்பி, மு. மேத்தா தமிழன்பன் போன்றோர் வாழும் வாழ்க்கையும் கொண்டுள்ள பார்வை வேறு. இல்லாத ஒரு மார்க்ஸிசம் கற்பனையான ஒன்று யாரை கடைத்தேற்றியது?.

அந்த மார்க்ஸீயத்தை கொடியில் வரைந்து வைத்துக்கொண்டு கம்யூனிஸ்ட் என்று பெயர் சொல்லிக்கொண்டு கட்சி யதேச்சாதிகாரம் செய்த ப்ரெஷ்னயேவ் நாடு கடத்திய சால்செனிட்ஸின் பற்றி ஒரு இடத்தில் பேசும்போது ஞானியின் சகா, ஜன சுந்தரம் அவர் எழுதிய Gulag Archipelago என்னும்  ரஷ்ய கட்டாய வேலைத் தளங்கள் என்னும் சிறை முகாம்களில் தள்ளப்படுவோர் அனுபவிக்கும் வாழ்க்கையின் கொடுமை பற்றி ஜனசுந்தரத்திடமிருந்து என்ன எதிர்வினை வருகிறது? தேசத்துரோஹி, எகாதிபத்தியத்துக்கு தன்னை அடிமைப் படுத்திக்கொண்டவர் ரஷ்யா அவரை நாடு கடத்தியது மனிதாபிமான செயல். பிறகு இந்த இடத்தில் லெனினின் மேற்கோள் உதவுகிறது ஜன சுந்தரத்துக்கு.
”நீங்கள் சுதந்திரத்தையும் ஜனநாயகத்தையும் பற்றி இடைவிடாது பேசுகிறீர்கள் இது வெறும் ஏமாற்று வேலை. வெறும் விளம்பர போர்டு. உங்கள் ஆவேசம் நீசத்தனமானது. உங்களது கல்வி, பண்பாடு பெருநோக்கு எல்லாம்  வெறும் விபச்சாரத்திற்காகத்தான். ஏனெனில் நீங்கள் உங்கள் ஆன்மாவை விற்கிறீர்கள்……” (பக்கம் 172).

வானம்பாடி இதழ் நின்றதும், ஞானியும் அவரது நண்பர்கள் ஜனசுந்தரம் போன்றோர் கூட்டாகத் தொடங்கியதுதான் வேள்வி. அதில் தான் ஞானி என் இரண்டு கட்டுரைகளூக்கு அவரது பதிலைப் பிரசுரித்துள்ளார். வானம்பாடி தொடங்கும்முன் பூம்பொழில் வட்டத்தில் இளமுருகு என்னும் அன்பர்/கவிஞர் பேசியதன் சுருக்கத்தை ஒரு கடிதத்தில் சொல்கிறார் ஞானி.

“தாகூரிலிருந்து விரிவான மேற்கோள் காட்டி (இளமுருகு) சொன்னது கவிதை உணர்ச்சியின் மொழி இது இவ்வாறு என் மனதில் தோன்றுகிறது என்பதைக் கவிஞர் எடுத்துரைப்பது கவிதை. நேரிடையாகக் கூறமுடியாததற்கு கவிதை மொழி, உணர்ச்சி மொழி பயன்படுகிறது. எல்லையற்றது பற்றி எல்லையுடைய சொற்களைக் கொண்டு விளக்க முடியாது அப்போது எல்லைக்குட்பட்ட மொழியை உடைப்பது தேவையாகிறது. இதற்கு உருவகம்  தேவைப்படுகிறது…… (இப்படி நிறைய சொல்லிக் கொண்டே போகும் இளமுருகு கடைசியில் இவ்வாறு முடிக்கிறார்.)

“இலக்கியத்தில் இசையும் ஓவியமும் கலக்கின்றன. சொல்லுக்கு அப்பாற்பட்ட அழகைச் சொல்லுக்குள் நிலை நிறுத்த இவை தேவை. ஓவியம் உடல், இசை உயிர்”

இதைப் படிக்கும் போது எனக்குத் தோன்றியது, இந்த இளமுருகு, இந்த கூட்டத்தில் எப்படி வந்து சிக்கினார்.? எவ்வளவு நாளைக்கு இவர் தாக்குப் பிடிக்க முடியும்? என்று எனக்குள் ஒரு சந்தேகம். இது வெறும் மாயாவாதம் என்று ஞானி தீர்மானிக்கிறார். அதற்கான அவரது காரணங்களும் சொல்கிறார் தான். அதன் பிற்கு அவர் சொல்கிறார். “இளமுருகுவின் கருத்தில் ஏற்றுக்கொள்ளக்கூடியது ஒன்றும் இல்லையா என்று கேட்கலாம். முதலில் மார்க்ஸீயத்தில் காலூன்றி நிற்கவேண்டும்.. பிறகு இச்சோதனகள் செய்து பார்க்கலாம்.: படிமங்கள் அழகு சேர்ப்பவை. ஆகவே அவை தேவை. என்ற முறையில் அவர் கருத்து அமையுமானால் நல்லது. ஆனால் படிமங்களுக்கே  மரியாதை முழுதும் என்பதை நாம் ஏற்பதற்கில்லை……… அப்படியானால் தாகூரைப் பற்றி என்ன சொல்கிறாய் என்று கேட்கலாம். தாகூரைப் பற்றி மிக விரிவாக ஆராய்வு செய்யவேண்டியது. நிச்சயமாக தாகூர் ஒரு மேதை. கவிஞர்க்கு வழிகாட்டி. மேதை. ஐயமில்லை.  தாகூரை நாம் முழுமையாக எடுத்துப் பார்க்கவேண்டும். கடினமான நீண்ட கால பணி. மார்க்சீயம் தாகூரை செரிக்கும் ஆற்றலுடையது. நமக்கு தாகூர் வழித்துணையாகக் கூட இருக்கலாம். வழிகாட்டியாக முடியாது.(பக்கம் 146-47) கடைசி இரண்டு பாராக்களைப் பார்க்கவும். முதலில் அவர் ஒரு மேதை. கவிஞர்க்கு வழிகாட்டி. கடைசி வரியில் அவர் வழித்துணையாகக் கூட இருக்கலாம். வழிகாட்டியாக முடியாது.

இது தான் ஞானியிடம் ஆரம்பத்திலிருந்து காணும் குழப்பம். குழம்பிய மனநிலையை நான் முரண் என்று தவறாக எடுத்துக் கொள்கிறேனோ என்னவோ தெரியவில்லை. ஏன்? அவர் எல்லாவற்றையும் முன் வைத்து விடுகிறார்.  முரணாக இருப்பின் அது தெரியாதவாறு வெட்டிக் கழித்து ஏதும் செய்வதில்லை. இதெல்லாம் ஆரம்ப காலத்தில் ஞானிக்குத் தெரியவில்லை. அல்லது தெரிந்தும், இப்போது அதையெல்லாம் சொல்லி, கூட்டியக்கத்தைக் கெடுக்க வேண்டாம் என்ற நல்லெண்ணமாக இருக்கவேண்டும். ஆனால் எல்லாம் சிதைந்து ஒரு தலைமுறைக் காலம் கடந்து நஷ்டக் கணக்கு பார்க்கும் போது (2014-ல்) ஞானி எழுதுகிறார் ’அழுகி நாறிக்கொண்டிருக்கும் உடமை வர்க்க சமூகத்தின் இறுதிக்கால விளைச்சல்கள் இவர்கள். மார்க்ஸீயம் தெரியாதவர்கள். இவர்கள் மாமேதைகள். கவிதை அறியாதவர்கள் மத்தியில் இவர்கள் பாரதிக்குப் பேரர்கள்.. “இவர்கள் சிதைந்ததில் இழப்பு ஏதும் இல்லை. இவர்கள் ஒரு காலத்தின் கெட்டகனவு இவர்களை மறப்பது நல்லது. இவர்கள் கவிஞர்களாகவே இருப்பது என்று முடிவு கட்டிக் கொண்டவர்கள்………..கவிதைச் சூழலில் முளைத்த காளான்கள்………எதிர் நீச்சலில் வலிமை பெற்றிருக்க வேண்டியவர்கள் சுகக் குளியலில் சொக்கிக் கிடந்தார்கள். இந்த விமர்சனத்துக்கு உரியவர்கள் முதன்மையாக, தமிழ்நாடன், கங்கை, சிற்பி, ;புவி, மேத்தா, இவர்களின் சகபாடிகள், ஆதரவாளர்கள் (இவர்கள் உற்பத்தி செய்திருக்கிற பாப்ரியாக்கள், சூரிய காந்தன்கள், இவர்களைத் தூக்கி நிறுத்த முயலும், முயன்ற, விமர்சகர்கள்………… மார்க்ஸிய போக்கு தாங்கிய கட்சிகள் தமக்கென கூத்தாடிகளைத் தேடிய போது இவர்கள் அந்த இடங்களை அலங்கரித்தார்கள்……சோவியத்  யூனியன் சமூக ஏகாதிபத்தியமாகக் கொழுத்த சமயத்தில்தான் இவர்கள் சினேக புஷ்பங்களை அதற்கு அணிவித்தார்கள். வசந்தத்தின் இடிமுழக்கத்தின் ஓசைநயத்தில் தான் இவர்கள் கவிதைக்குரல் தொடங்கினார்கள். நெருக்கடி நிலையில் அரக்கர்களின் காலடி நிழலில் பதுங்கி அரக்கிக்கு தம் கவிதையை அலங்காரமாக்கினார்கள். கலை இலக்கிய மன்றமும் இவர்களது சந்தர்ப்பவாத பயணத்தில் ஒரு தங்குமிடம் தான். இவர்கள் தான் நெருக்கடிகாலத்தின் போது, “இந்திராவே இந்தியா, இந்தியாவே இந்திரா” என்று நூல் வெளியிட்டனர். (பக்கம் 118) தமிழ்க் கவிதையில் இவர்கள் சாதனை சிறிதளவு தான். தொகுத்தால் ஒரு நூறு பக்கங்களுக்குள் அடக்கி விடலாம். பிறகெல்லாம் வார்த்தைக் குவியல்கள், அடுக்குகள், ஆரவாரங்கள் இவை பெரும்பகுதி உண்மை சொல்ல வில்லை. சொற்கோவைகளைக் கவிதை என்று மயங்கும் ரசிகர்களுக்கு மத்தியில் இவர்கள் தமிழ் வாணிகம் சிறப்பாக நடந்ததில் வியப்பில்லை…….. சந்தர்ப்பவாதத்தையும், திருத்தல் வாதத்தையும் தமக்கான பலமாகக் கொண்ட கட்சி, இவர்களோடு கூட்டு சேர்ந்ததில் வியப்பில்லை.(பக்கம் 122)

இவர்கள் கூறிக்கொண்டது என்ன?...,,,,தங்களுக்கு சலுகை வேண்டும். தங்கள் விருப்பத்திற்கேற்ப, கவிதை எழுத, வாசிக்க, பெருமை கொள்ள, வெளியிட, பாராட்டுப் பெற, உயர்பீடங்களை அலங்கரிக்க, அதிகாரத்தில் உள்ளவர்களோடு சமமாகக் கொஞ்சநேரம் அமர்ந்திருக்க, பெரிய மனிதர்களின் அருள் பெற, சந்தர்ப்பவாதிகளின் உறவில் ஒளி பெற --- இவற்றைத் தான் செய்து கொண்டார்கள்.,,(பக்கம் – 124)

சில ஆண்டுகளுக்குள் தமிழகத்தில் மார்க்ஸியக் கட்சி வட்டாரத்தைச் சார்ந்த கலை இலக்கிய வாதிகள் புதுக்கவிதை முறையை வெட்கமில்லாமல் ஏற்கத் தொடங்கினர் பாரதியின் வாரிசு, பேரன் என்றெல்லாம் கவிஞர் பரிணாமனைப் பாராட்டி வானமாமலை எழுதினார். தொடக்கத்தில் வானம்பாடிகளை முற்றாக ஒதுக்கிய கட்சி வட்டாரத்தினர் மெல்ல மெல்ல வானம்பாடி இயக்கத்தினுள் ஊடுருவி இயக்கத்தின் பிளவுக்கும் ஓரளவு காரணமாயினர். தி,க.சி மிகச் சாதுர்யமாய் இந்தப் பணியைச் செய்தார். அப்புறம் வானம்பாடியினரின் இடது சாரியினருக்கும் வலது சாரியினருக்கும் பகை இன்றளவும் தொடர்கிறது (பக்கம் 119 – வருஷம் 2004)

வானம்பாடிகளுடன் சேரும் முன்னரே வார்த்தைகளைக் கவர்ச்சிகரமாக தொகுத்து அடுக்குவதில் அவர்(சிற்பி) தனித்திறமை கொண்டிருந்தார்……..இவரது ஒரு பக்கச் சாய்வு காரணமாக கூட்டம் இயக்கமாகாததற்கு இவர் முக்கிய காரணமானார். ’எங்களைத்தாங்க எந்தக் கூண்டிற்கும் சக்தி இல்லை,’ என்ற ஆரவாரமான பிரகடனம் சிற்பியுடையது தான். கடைசியாகக் கிடைத்த கலை இலக்கியப் பெருமன்றக் கூண்டு இவருக்கு வசதியாக இருக்கக் கூடும். நெருக்கடி நிலைக் காலத்தில் கிழிந்த தங்கள் முகத்திரையை மீண்டும் தைத்துப் போர்த்திக்கொள்வதற்கான வசதியை இது தந்திருக்க வேண்டும். இது சிற்பிக்கு மாத்திரம் இல்லை. வேறு சிலருக்கும் கூட (பக்கம் 121)

இதே 2004-ம் வருஷம், இதே கட்டுரையில் சில பக்கங்கள் முன்னர் (பக்கம் 113)  ”இவர்கள் அனைவருக்குள்ளும் இயல்பாகவே கோவைச் சூழலில் உருவான மார்க்ஸீயத்தின் தாக்கமும் நக்ஸல் பாரி இயக்கத்தின் வீறும் நுழைந்து கவிதைகளில் உருப்பெற்றன. வானம்பாடி கவிதைகளை ஒரு முறை புரட்டிப்பார்க்கிற அனைவரும் மேற்குறிப்பிட்ட கவிஞர்களுக்குள் நக்ஸர் பாரி இயக்கத்தின் ஆற்றல் மிகுந்த சில இழைகளையேனும் காணமுடியும். மார்க்ஸீயத்தின் சம தர்மம் என்ற ஊற்று இவர்களுக்குள் மக்கள் திரளின் பிரச்சினைகளை உணர்வோடு வெளிப்படுத்தும் முறையில் கவிதைகளாய்ப் பொங்கின. வானம்பாடி இயக்கத்தின் இந்த பேராற்றலை இன்று வரை யாரும் மறுப்பதற்கில்லை.”
மறுபடியும் இத் தொகுப்பின் முன்னுரையில் ஞானி அழுத்தமாகச் சொல்வதை நான் குறிப்பிடவேண்டும்:( முன்னுரை பக்கம் iii)
“கோவையில் 1970 களின் தொடக்கத்தில், நெடுங்காலத் தமிழ்க் கவிதை வரலாற்றில் இன்னொரு கவிதை இயக்கம் என்ற முறையில் வானம்பாடிகளின் கவிதை இயக்கம் சிறப்பாகச் செயல் பட்டதை தமிழ்க் கவிஞர்களும் தமிழ் ஆய்வாளர்களும் இன்றும் நினைவு கூர்கின்றனர். வானம்பாடி இயக்கம் சில காலமே செயல்பட்ட போதிலும் வானம்பாடி இயக்கத்தில் இருந்த கவிஞர்கள்,  மற்றும் திறனாய்வாளர்கள் பலரும் இன்றும் சிறப்பாகச் செயல்படுகின்றனர்.”

என்ன சொல்லட்டும்? இன்னும் நிறைய மேற்கோள்கள் கொடுத்துக் கொண்டே போகலாம். ஆனால் நான் அதிகம் கொடுத்துவிட்டேனோ என்றும் ஒரு எண்ணம். நானே இது பற்றியெல்லாம் என் வார்த்தைகளிலேயே சொல்வதைக் காட்டிலும் புத்தகத்திலிருந்து ஞானியின் சொற்களையே தருவது தான் சரி என்று கொடுத்துள்ளேன். ஞானியின் கருத்துக்கள் எதுவும் ஸ்தாபனம் சார்ந்ததல்ல. யாரும் கொடுத்து நிர்ப்பந்திததல்ல. அவரது படிப்பிலும் சுய சிந்தனையிலும் வரித்துக் கொண்டது என்பது நிச்சயம். அவர் யாரையும் புண்படுத்தும் சுபாவத்தினரும் இல்லை. மிக அடங்கிய குரலில் தன் தரப்பு வாதங்களை விடாது முன் வைப்பவர். எல்லோருடனும் நட்பு பாராட்டுபவர். சினேக பாவம் கொள்பவர் அதனாலேயே அவர் எவ்வளவு தான் நட்பு பாராட்டினாலும் அது கிடைப்பதில்லை என்பது இந்த புத்தகத்திலிருந்தும் மேலுள்ள மேற்கோளிலிருந்தும் தெளிவாகும்.

அவர் தன் சிந்தனைகளோடு தனித்து நிற்கலாமே தவிர, அதை முன்வைத்து அடித்தளமாகக் கொண்டு ஒரு இயக்கத்தை, ஸ்தாபனத்தை எழுத்தாளர்களையும் கவிஞர்களையும் கவிஞர்களாக ஆசைப்படுவர்களையும் கொண்டு ஸ்தாபித்து விட முடியாது. உண்மையான கவிஞர்கள் தனித்தே வாழ்பவர்கள். கட்சி சேவகம் செய்பவர்கள், ஸதாபனம் சார்ந்தவரகள் தான் கூட்டாக செயல்பட முடியும். அவர்கள் கவிஞர்களாக மாட்டார்கள்.

ஞானியின் மார்க்ஸியமும் சரி, அவரது இலக்கிய சிந்தனைகளும் சரி அவருக்கே சொந்தம். அதற்கு என் மரியாதை. ஒரே கட்டுரையில் முரண்பட்ட கருத்துக்களை அவர் கூறினாலும். அது அவர் சிந்தனைகளின் குழப்ப நிலை என்று தோன்றுகிறது. உலகத்தின் மறுகோடியிலிருந்து தான் (கனடா, டோரண்டோ) அவரைக் கொண்டாடி மரியாதை செய்பவர்களைக் காணலாம். அவர்கள் ஞானியின் இடம் தேடி வருவார்கள். வந்தார்கள். இங்கு அதை அவர் எந்த கட்சியிடமிருந்தும் எதிர்பார்க்க முடியாது.. கவிஞன், எழுத்தாளன் என்றும் தனியன் தான்..8.2015

<இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.