
கேள்வி: வணக்கம் குரு அரவிந்தன் அவர்களே, கனடாவில் இம்மாதம் தமிழ் இலக்கிய சேவைக்காக வாழ்நாள் சாதனையாளர் உயர் விருது பெறும் உங்களைப் பற்றிய ஓர் அறிமுகத்துடன் ஆரம்பிக்கலாமா?
பதில்: வணக்கம், வாழும்போதே ஒருவரின் சிறந்த சேவைக்காகக் கௌரவிக்க வேண்டும் என்ற நல்ல நோக்கத்தோடு கனடாவில் கடந்த 32 வருடங்களாக இலக்கியச் சேவையாற்றிவரும் எழுத்தாளர் இணையத்தினர் கனடாவின் உயர் விருதாக இதை அறிவித்திருக்கிறார்கள். என்னைப்பற்றி அறிமுகம் என்றால் இலங்கையின் வடபகுதியில் உள்ள காங்கேசந்துறையில் உள்ள மாவிட்டபுரம் எனது தந்தை அருனாசலம் குருநாதபிள்ளையின் ஊராகும். தாயார் இலக்சுமி சண்டிலிப்பாயைப் பிறப்பிடமாகக் கொண்டவர். தந்தை காங்கேசந்துறை நடேஸ்வரக் கல்லூரியில் கனிஸ்டபாடசாலை அதிபராகவும், காங்கேசந்துறை பட்டினசபை 2 ஆம் வட்டார பிரதிநிதியாகவும், பட்டினசபை முதல்வராகவும் பணியாற்றியவர். எனது கடந்தகால வாழ்விடங்கள் காங்கேசந்துறை, கொழும்பு, ரொறன்ரோ என்று சொல்லலாம்.
இலங்கையில் நடேஸ்வரக்கல்லூரி, மகாஜனக்கல்லூரி, பட்டயக்கணக்காளர் நிறுவனம் ஆகியவற்றில் கல்வி கற்று கொழும்பில் மகாராஜா நிறுவனத்தில் கணக்காளராகப் பணியாற்றினேன். போரச்சூழல் காரணமாக கனடா நாட்டிற்கு 1988 ஆம் ஆண்டு புலம்பெயர்ந்து இங்கும் கணக்காளராகவும், பகுதிநேர ஆசிரியராக ரொறன்ரோ கல்விச்சபையிலும் பணியாற்றுகின்றேன். எழுத்தாளரான மனைவி மாலினி அரவிந்தனும் கணக்காளராகவும், ஆசிரியராகவும் இங்கு பணியாற்றினார். இலங்கை வங்கியின் அதியுயர் முகாமையாளராக பணியாற்றிய திரு.கு. சிவகணநாதன் எனது மூத்த சகோதரர், மகாஜனக் கல்லூரி முன்னாள் அதிபர் பொ. கனகசபாபதி எனது மூத்த சகோதரியின் கணவர்,
2. கேள்வி: நீங்கள் எழுத்துலகில் வருவதற்கு என்ன காரணம்?
பதில்: எனது தந்தையார் வீட்டிலே ஒரு சிறிய படிப்பகம் வைத்திருந்தார். விகடன், கல்கி, கலைமகள், மஞ்சரி, இதயம் பேசுகிறது போன்ற இதழ்கள் வீட்டிற்கு வரும். எங்களுக்காக அம்புலிமாமா, கண்ணன், அரும்பு போன்ற சிறுவர் இதழ்களும் கிடைக்கும், அக்கா கௌரி திருச்சியில் உயர்படிப்பு படிக்கும்போது எனக்காகக் கதைப்புத்தகங்கள் வாங்கிக்கொண்டு வருவார். அதனல் மாணவப்பருவத்தில் அதிகம் வாசிக்க சந்தர்ப்பம் கிடைத்தது, அதுவே எழுதலாம் என்ற நம்பிக்கையை எனக்குத் தந்தது. 3. கேள்வி: எழுத்துலகில் உங்கள் பயணம் எப்போது எங்கே ஆரம்பமானது, தாயகத்துப் பத்திரிகைகளில் எழுதிய அனுபவம் உண்டா?
3. கேள்வி: எழுத்துலகில் உங்கள் பயணம் எப்போது எங்கே ஆரம்பமானது, தாயகத்துப் பத்திரிகைகளில் எழுதிய அனுபவம் உண்டா?
பதில்: மாணவப் பருவத்தில் யாழ். மாணவர் வட்டம் என்ற அமைப்பை நிறுவி, மாவை ஆனந்தன், சிலோன் விஜேந்திரன், மாவை கனகராசா போன்றோர் ஒன்று சேர்ந்து சிறுகதைப் போட்டி ஒன்றை நடத்தினார்கள். அதில் எனது கதைக்குப் பரிசு கிடைத்த போது, மல்லாகம் இந்துக்கல்லூரியில் பரிசளிப்புவிழா நடந்தது. அதில் பாரதிபாடல், திருக்குறள் போன்ற நூல்கள் எனக்குப் பரிசாகக் கிடைத்தன. மாணவனாக இருந்த போது, ‘அணையாத தீபம்’ என்ற எனது முதற்கதை ஈழநாடு ஞாயிறு இதழில் முதலில் வெளிவந்தது. தொடர்ந்து வீரகேசரி, ஈழநாடு, அரும்பு, ஞானம், தினக்குரல், ஜீவநதி போன்ற இதழ்களில் எனது ஆக்கங்கள் வெளிவந்தன.
4. கேள்வி: புலம் பெயர்ந்த பின் உங்கள் எழுத்துகள் எவ்வாறு மாற்றமடைந்ததன?
பதில்: சிந்தனைகளிலும், செயற்பாடுகளிலும் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டன. தாயகத்தில் தவறு என்று சொல்லப்பட்டவை இங்கே சரியானதாகவும், அங்கே சரி என்று நினைத்தவை இங்கே தவறானதாகவும் இருப்பதை உணரமுடிந்தது. எழுத்துச் சுதந்திரம் இங்கே இருந்ததால் துணிந்து எழுத முடிந்தது. போர்ச் சூழலில் எம்மினம் பட்ட அவலங்களை தமிழக பிரபல பத்திரிகைளில் வெளிக் கொண்டுவர வாய்ப்புக் கிடைத்தது. குறிப்பாக விகடன், குமுதம், கல்கி, கலைமகள், கணையாழி, யுகமாயினி, இனிய நந்தவனம் போன்ற இதழ்களில் பல கதைகள் வெளிவந்ததால் எனக்கான பெரியதொரு வாசகர் வட்டம் அங்கே உருவானது. வாசகர்வட்டம் நடத்திய திறனாய்வுப் போட்டியில் 14 நாடுகளில் இருந்து பலர் பங்குபற்றியிருந்தார்கள்.
5. கேள்வி: இலங்கையில் ‘ஞானம் இலக்கியப் பண்ணை’ கதாவித்தகர் என்ற பட்டத்தை 2019 ஆம் ஆண்டு உங்களுக்குக் கொடுத்திருக்கிறார்களே, அப்டியானால் இதுவரை எத்தனை சிறுகதைகள் எழுதியுள்ளீர்கள்.
பதில்: சுமார் 150 மேற்பட்ட கதைகளைப் புலம்பெயர்ந்த மண்ணில் எழுதியிருக்கின்றேன். சிறுகதை. கொம் என்ற இணைய இதழ் ‘தமிழினி’ என்ற எனது 100 வது கதையை வெளியிட்டு பாராட்டியிருந்தார்கள். கல்கியில் வெளிவந்த ‘ஒரு அப்பா, ஒரு மகள், ஒரு கடிதம்’ என்ற கதையை சுமார் 265,000 சர்வதேச வாசகர்கள் இதுவரை படித்திருக்கிறார்கள், அதில் எனது சில கதைகளை ஒருலட்சத்திற்கு மேற்பட்டவர்கள் படித்திருக்கிறார்கள் என்பதையும் அவதானித்தேன். வாசகர்  ஒவ்வொருவரின் ரசனையும் வித்தியாசமானது, ஆனாலும் எனது கதைகளை விரும்பி வாசிக்கிறார்கள்.
6. கேள்வி: இந்த எழுத்துலகில் தொடர்ந்து செயற்படுவதற்கு நீங்கள் எதிர் கொள்ளும் தடைகள் அல்லது சவால்களாக எதனைப் பார்க்கிறீர்கள்.
பதில்: எம்மவர்களில் நல்ல மனம் கொண்ட பலர் இருந்தாலும், சிலர்தான் பாராட்டும் குணம் கொண்டவர்கள் என்பதால், அவர்கள் பாராட்டுவார்கள். எழுத்தாளன் எதிர்பார்ப்பதும் அதைத்தான். அதற்காக ஏனையவர்களைக் குறைசொல்ல முடியாது. பொதுவெளி என்பதால் சவால்களை நிறையச் சந்திக்க வேண்டும். எனது சிறுகதைத் தொகுப்பிற்குச் ‘சதிவிரதன்’ என்று பெயரிட்டேன். நான்தான் புதிதாகத் தமிழில் அந்தச் சொல்லை உருவாக்கினேன். ஆனால் சிலருக்கு அதில் உடன்பாடு இல்லை. தமிழில் ஒரு புதிய சொல்லை உருவாக்க கற்றறிந்த அறிஞர்கள்தான் உருவாக்க வேண்டுமே தவிர எழுத்தாளன் அல்ல என்று மெய்நிர் வழியாக வாதிட்டார்கள். பேராசிரியர் சுப்ரமணிய ஐயரும், பேராசிரியர் கரு முத்தையாவும் அதற்கு மறுப்புத் தெரிவித்து எழுத்தாளனுக்கு அதற்கான தகுதி இருக்கிறது, அகராதியில் உள்ள சொற்கள் எல்லாம் கவிஞர்களும், எழுத்தாளனும் உருவாக்கிய சொற்களே என்று சிறந்ததொரு விளக்கம் கொடுத்தார்கள். பதிவிரதை என்ற தமிழ் சொல்லுக்கு எதிர்ப்பாலாக ‘சதிவிரதன்’ (மனைவிக்கு நேர்மையாக இருப்பவன்) என்ற இந்தச் சொல்லை நான் உருவாக்கினேன். இNதுபோல ஆறாம்நிலத்திணையை நான் முதலாவது உலக தொல்காப்பிய மாநாட்டில் அறிமுகம் செய்தபோது சிலர் அதில் உடன்படவில்லை. தொல்காப்பியத்தை விட்டு விலகிப் போகமுடியாது என்றார்கள். அப்படியானால் பாலை நிலம் எப்படி ஐந்தாவது நிலத்திணையாக வந்தது என்ற எனது கேள்விக்கு இதுவரை அவர்களிடம் பதில் இல்லை. திறமை இருந்தால் யார்தான், என்னதான் அலட்சியப் படுத்தினாலும் அது தானாக வெளிவரத்தான் செய்யும், வாசகர்கள் தேடி வாசிக்கத் தொடங்கினால் அவர்கள் உங்கள் எழுத்தை அங்கீகரிக்கிறார்கள் என்று அர்த்தம் கொள்ளலாம்.
7. கேள்வி: இங்கே பலரும் எழுதுகின்றார்கள் ஆனால் பெரியதொரு சர்வதேச வாசகர் வட்டத்தை எப்படி உங்களால் உருவாக்க முடிந்தது?
பதில்: நான் கனடாவில் எழுதத் தொடங்கிய காலத்தில் கனடா உதயன் பத்திரிகை ஆசிரியர் ஆர். என் லோகேந்திலிங்கம் தனது முழு ஆதரவையும் தந்தது என்னைக் கனடிய வாசகர்களுக்கு அறிமுகமாக்கினார். தமிழகத்தில் முதலில் விகடன் இதழும் அதன் பின் ஏனைய பிரபல இதழ்களும் முழு ஆதரவையும் தந்ததால், தமிழக வாசகர்களுக்கு அறிமுகமானேன். இலங்கையில் வீரகேசரி, தினக்குரல், ஈழநாடு, ஞானம், ஜீவநதி இதழ்கள் எனது ஆக்கங்களை வெளியிட்டன. லண்டனில் புதினம் ஆசிரியர், ஜேர்மனியில் வெற்றிமணி ஆசிரியர், பிரான்சில் உயிர்நிழல் ஆசிரியர்கள் வேற்றுமை காட்டாது எனது ஆக்கங்களை விரும்பி வெளியிட்டனர். இப்பொழுது இணைய இதழ்கள் பலவற்றில் எனது அக்கங்கள் வெளிவருகின்றன. குறிப்பாக தாய்வீடு, பதிவுகள், விளம்பரம், தமிழர்தகவல், திண்ணை, செந்தாமரை, இலக்கியவெளி, அருவி, குவிகம், தென்றல், இரவி போன்றவற்றிலும் எனது ஆக்கங்கள் இடம் பெறுகின்றன. எழுத்துத்துறை மட்டுமல்ல சினிமா, நாடகம், சிறுவர் இலக்கியம் போன்ற துறைகளும் வாசகர்களைத் தேடித்தந்தன. இதுவே சர்வதேசப் புகழ் பெற்ற ஒரு எழுத்தாளனாக என்னை மாற்றியது.
8. கேள்வி: இந்திய பல்வேறு சஞ்சிகைகளில் உங்கள் கதைகள் பிரசுரமாகியது அது எப்படிச் சாத்தியமாயிற்று, அந்த அனுபவம் பற்றி..
பதில்: தமிழ்நாட்டில் உள்ள பிரபல பத்திரிகைகள் எல்லாம் எனக்குத் தளம் அமைத்துக் கொடுத்தன. முதன் முதலாக 10 லட்சம் பிரதிகள் வெளிவரும் விகடனின் நிர்வாக ஆசிரியர் பாலசுப்ரமணியன் அவர்களும், முதன்மை ஆசிரியர் வியெஸ்வியும் எனது எழுத்துக்கு மதிப்பளித்தார்கள். விகடன் பவளவிழாவின்போது எனது குறுநாவல் பரிசு பெற்றதைத் தொடர்ந்து எனது ஆக்கங்களை விகடனின் முக்கிய விசேட மலர்களில் குறிப்பாக பவளவிழா மலர், தீபாவளி மலர், காதலர்தின மலர், மிலேனியம் மலர் போன்றவற்றில் வெளியிட்டு வி.ஐ.பி எழுத்தாளராக என்னை மாற்றினார்கள். அதைத் தொடர்ந்து கல்கி, குமுதம், கலைமகள், கணையாழி, யுகமாயினி, இனிய நந்தவனம் போன்ற தமிழக இதழ்களில் எனது ஆக்கங்கள் வெளிவரத் தொடங்கின. இதனால் சுமார் 2 கோடிக்கு மேற்பட்ட என் இனிய வாசகர்களை எழுத்துலகின் மூலம் உருவாக்க முடிந்தது.
9. கேள்வி: இந்தியாவில் முனைவர்பட்ட ஆய்விற்கு உங்கள் கதையை ஒருவர் எடுத்து ஆய்வு செய்வதாக அறிந்தேன் அது உண்மையா? அது பற்றி உங்கள் கருத்து
பதில்: ஆமாம், ஆய்வு செய்வதற்காக என்னிடம் கேட்டிருந்தனர். சென்னையில் மட்டுமல்ல, திருச்சி, தேனி போன்ற மாவட்டங்களில் உள்ள பல்கலைக்கழகங்களிலும் ஆய்வு செய்ய எனது நூல்களைப் பற்றிய விபரங்களைக் கேட்டிருந்தனர். கனடாவில் டிப்ளோமா பட்டப் படிப்பிற்காக முதலில் திருமதி சித்திரா பிலீக்ஸ் என்பவர் ஆய்வு செய்தார். அதன் பின் சுபாசினி முத்துக்குமார் என்பவர் ஆய்வு செய்து தனது ஆய்வை நூல் வடிவமாக எனக்கு அனுப்பியிருந்தார். சிறுகதைத் திறனாய்வுப் போட்டியில் பங்கு பற்றிப் பரிசு பெற்ற தமிழகத்தைச் சேர்ந்த பலர் எனது கதைகளையும், புதினங்களையும் தங்கள் பட்டப்படிப்பிற்காக ஆய்வு செய்ததாகக் குறிப்பிட்டிருந்தனர். தமிழகக் கவிஞர் மு. முருகேஸ் அவர்கள் எனது நூல்கள் பற்றி இருபத்தியொரு பிரபல எழுத்தாளர்கள் ஆய்வு செய்த கட்டுரைகளை ‘மனதைத் தொட்ட எழுத்தின் பக்கங்கள்’ என்ற தலைப்பில் இந்தியாவில் தொகுத்து வெளியிட்டிருந்தார். சமூகத்திற்கு நல்லதை எடுத்துச் சொல்ல எனது கதைகள் உதவியாக இருப்பதையிட்டு மகிழ்ச்சியாக இருக்கின்றது.
10. கேள்வி: பொதுவாக தாயக எழுத்திற்கும் புலம் பெயர் எழுத்திற்கும் என்ன வேறுபாடு அல்லது எந்த மனநிலையில் கதைகள் அமைவதாக நீங்கள் பார்க்கிறீர்கள்.
பதில்: தாயகத்திலும் சரி, தமிழ்நாட்டிலும் சரி கருப்பொருட்கள் அனேகமாக ஒன்றாகத்தான் இருக்கும். சிலர் அரைத்த மாவை திரும்பத் திரும்ப அரைக்கிறார்கள் என்பது நல்ல வாசகனுக்கு புரியும். எழுத்து நடை மட்டும் வேறுபட்டிருக்கும். சில சமூகக் கட்டுப்பாடுகள் வரம்பை மீறமுடியாமல் அவர்களைத் தடுத்துவிடும். அறிவியல் சார்ந்து எழுதினாலும் சில இதழ் ஆசிரியர்கள் அதை ஏற்றுக் கொள்ளத் தயங்குகிறார்கள். அதனால் சமூகத்திற்கு விழிப்புணர்வைத்தரும் நல்ல சில கதைகள் முடக்கப்பட்டு விடுகின்றன. புலம்பெயர்ந்த மண்ணில் விரும்பியபடி சுதந்திரமாக எழுதமுடியும், கட்டுப்பாடுகள் இல்லை. வாசகர்களுக்குப்பிடித்தால் தொடர்ந்தும் வாசிப்பார்கள். அறிவியல் சார்ந்து எழுதமுடியும், ஆனால் சில ஆசிரியர்களின் மனநிலையைப் பொறுத்துத்தான் அவை பிரசுரமாகும். காதல் கதைகள் இலக்கிமாகாது என்று சொல்பவர்களும் உண்டு, மக்கள் மனசைத் தொட்ட வெற்றி பெற்ற தமிழ் காவியங்கள், காப்பியங்கள் எல்லாம் காதல் கதைகள்தான் என்பதில் யாருக்கும் சந்தேகமில்லை.
11. கேள்வி: புலம் பெயர்ந்த நாட்டில் சிறுகதைகள் எழுதும் பட்டறை ஏதும் நடத்தீனீர்களா? அது பற்றிய உங்கள் அனுபவம்.
பதில்: சிறுகதைப் பட்டறை நேரடியாகவும், மெய்நிகர் மூலமும் நிறையவே நடத்தி எனது அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டிருக்கின்றேன். அதில் பங்குபற்றிய 16 பெண்கள் எழுதிய கதைகளைத் தொகுத்து ‘நீங்காத நினைவுகள்’ என்ற பெயரில் சொப்கா மன்றத்தின் சார்பில் வெளியிட்டேன். இதுவே கனடாவில் வெளிவந்த தமிழ் பெண்களின் முதலாவது சிறுகதைத் தொகுப்பாகும். தொடர்ந்து சிறுகதைப் பயிலரங்கில் பங்குபற்றிய 26 பெண்கள் எழுதிய சிறுகதைகளையும் ‘ஆறாம் நிலத்திணைச் சிறுகதைகள்’ என்ற பெயரில் கிராமத்து வதனம் பெண்கள் அமைப்பின் சார்பில் தொகுத்து வெளியிட்டேன். இதன் மூலம் கனடாவில் சுமார் 40 புதிய எழுத்தாளர்களை இனம்கண்டு உருவாக்கியிருப்பது கனடிய தமிழ் இலக்கியத்தின் எதிர்காலத்திற்குச் சிறப்பாகும். மேலும் சுமார் நாற்பது பெண்களின் மற்றொரு குழுவினர் இப்போது இலங்கையில் உள்ள தங்கள் மூதாதையர் கிராமங்களைப் பற்றிய கட்டுரைகளை விரைவில் வரவிருக்கும் தொகுதிக்காக எழுதிக் கொண்டிருக்கிறார்கள். இந்தப் படைப்பு இலக்கியத்தைப் போலவே கலாச்சார வரைபட உருவாக்கத்தையும், தங்கள் முன்னோரின் இடங்களைப் பற்றி அடுத்த தலைமுறையினர் அறிந்து கொள்ளவும் உதவியாக இருக்கும்.
12. கேள்வி: சினிமா, நாடகம், கவிதை, கட்டுரை போன்ற பல இலக்கியத் துறைகளில் பல்துறை வித்தகராக இருக்கிறீர்கள், எப்படி சிறுவர் இலக்கியத்தில ஈடுபாடு வந்தது?
பதில்: கனடா நாட்டிற்கு வந்தபோது, இங்குள்ள தமிழ் பிள்ளைகளுக்குத் தமிழ் கற்பிக்கப் போதிய வசதிகள் இருக்கவில்லை. எனவே அயலில் உள்ள தமிழ் பிள்ளைகளுக்கு ஞாயிற்றுக்கிழமைகளில் இலவசமாக நானும் எனது மனைவியும் தமிழ் கற்பித்தோம். இதைவிட ரொறன்ரோ கல்விச்சபையிலும், பீல் கல்விச்சபையிலும் ஆசிரியராக இணைந்து கல்வி கற்பித்தோம். அப்போது ஒன்ராறியோ தமிழ் ஆசிரியர் சங்கத்தின் தலைவராகவும் பொறுப்பேற்றுக் கடமையாற்றினேன். பிள்ளைகளின் தேவைகருதி தமிழ் ஆரம் பயிற்சி நூல்களை தமிழ் பிள்ளைகளுக்காக உருவாக்கினோம். சிறுவர் பாடல்களையும் நானே எழுதி கனடிய சூழலுக்கு ஏற்றது போல இசையுடன் குறுந்தட்டு வெளியிட்டோம். அனேகமான தமிழ் குழந்தைகள் ஆங்கில தொலைக்காட்சசி நிகழ்ச்சிகளைப் பார்ப்பதில் ஆர்வம் காட்டியதால், ஆடல், பாடல் நிறைந்த ‘தமிழ் ஆரம்’ என்ற ஒளித்தட்டை உருவாக்கினோம். இது போன்ற செயற்பாடுகளே இன்று கடனாவில் இளைதலைமுறையினர் தமிழ் மொழி பேசுவதற்குப் பெரிதும் உதவியாக அமைந்தன. கடந்த 25 வருடங்களாக சிறுவர்களுக்காக வெளிவரும் ‘தமிழ் ஆரம்’ என்ற சிறுவர் இதழின் முதன்மை ஆசிரியராகவும், இளையதலைமுறையினருக்காக வெளிவரும் ‘வதனம்’ இதழின் முதன்மை ஆசிரியராகவும் இருக்கின்றேன்.
13. கேள்வி: நீங்கள் வாங்கிய விருதுகள் பற்றிக் கூறமுடியுமா?
பதில்: பரிசுகள், விருதுகள் நிறையவே வாங்கியிருக்கின்றேன். இங்கே குறிப்பிட இடம் போதாது. சிலவற்றை மட்டும் குறிப்பிடுகின்றேன். தங்கப் பதக்க விருது: உதயன் சிறுகதைப்போட்டி – கனடா, சிறந்த சிறுகதை விருது: வீரகேசரி மிலேனியம் மலர், ஆனந்தவிகடன் பவளவிழா போட்டி - ‘நீர்மூழ்கி’ குறுநாவல் பரிசு, சிறுகதைப் போட்டி - முதற்பரிசு: ‘சுமை’ கனேடிய தமிழ் வானொலி, சிறுகதை சிறப்புப் பரிசு: கந்தர்வன் நினைவுப் போட்டி, நகுலன் குறுநாவல் போட்டி: ‘அம்மாவின் பிள்ளைகள்’ யுகமாயினி, குறுநாவல் போட்டி கலைமகள் விருது:’ தாயுமானவர்’ - ராமரத்தினம் நினைவுப் பரிசு, பாரிஸ்; கல்விநிலைய வெள்ளிவிழா சிறுகதைப் போட்டி- ‘கனகலிங்கம் சுருட்டு’,  தமிழர் தகவல் கனடிய இலக்கிய விருது, ஞானம் சிறுகதைப் போட்டி சிறப்புப் பரிசு - பரியாரிமாமி, கனடா தமிழ் மிரர் இலக்கிய விருது, கனடா தமிழ் எழுத்தாளர் இணையம் - 25 வருட இலக்கிய சேவை விருது, சிறந்த ஊடகவியலாளருக்கான கவணர் விருது, ரொறன்ரோ கல்விச்சபை 25 வருடகால ஆசிரியர் சேவை விருது, உதயன் இலக்கிய மேன்மை விருது, ஞானம் கலை இலக்கியப் பண்ணை விருது, பழைய மாணவருக்கான மகாஜனக்கல்லூரியின் ‘சிறந்த சாதனையாளர் விருது, ‘என்ன சொல்லப்போகிறாய்?’ சிறந்த நாவலுக்கான பரிசு – உலகப் பல்கலைக்கழகம், அமெரிக்கா, ‘சொல்லடி உன் மனம் கல்லோடி?’ சிறந்த நாவலுக்கான பரிசு கோவை தமிழ் மன்றம், ‘அம்மாவின் பிள்ளைகள்’ சிறந்த நாவலுக்கான பரிசு –ஞானம் இலக்கிய சஞ்சிகைப் போட்டி. இலங்கை. ‘தாயகக் கனவுடன்’ குவிகம் இதழ் பரிசு, அமெரிக்க தமிழ் சங்கம் (குநவுNயு) 2024 நடத்திய குறுங்கதைப் போட்டியில் ‘காலம் செய்த கோலம்’ என்ற கதை முதற்பரிசு பெற்றது. கனடாவின் 150 வது பிறந்தநாள் ஞாபகமாக நான் எழுதிய ஆங்கிலச் சிறுகதையான ‘பிறீடம் இஸ் பிறி’ என்ற கதை தெரிவாகி பிரெஞ்சு மொழியிலும் மொழிமாற்றம் செய்து வெளியிடப் பெற்றது. சிறந்த திரைக்கதை வசனகர்த்தாவிற்கான ஜனகன் பிக்சேர்ஸ் விருது கிடைத்தது. ‘அன்னைக்கொரு வடிவம்’ மேடை நாடக சிறந்த கதை, நெறியாள்கைக்காக விருது கொடுத்தார்கள். மகாஜனாவின் ‘இலக்கிய நவரத்தினங்களில்’ ஒருவராக 100வது ஆண்டு நிறைவு மலரில் எனது படத்தைப் பிசுரித்து விருது கொடுத்து பாடசாலையிலும் அந்தப் படத்தைப் பார்வைக்கு வைத்துக் கௌரவித்தார்கள்.
14. கேள்வி: புதிய எழுத்தாளர்களுக்கு உங்கள் அறிவுரை என்று எதனை கூற விரும்புகீறீர்கள்?
பதில்: எல்லோரிடமும் ஏதாவது ஒரு திறமை இருக்கிறது. பொது ஊடகங்கள் நிறையவே இருப்பதால், அதன் மூலம் உங்கள் திறமையை வெளிக் கொண்டுவர முடியும். தொடக்கத்தில் கவனிக்ப்படாவிட்டாலும், திறமை இருந்தால், கடின உழைப்பின் மூலம் வாசகர்களைத் திரும்பிப் பார்க்க வைக்கலாம். எழுத்துத்துறை ஒன்றுதான் எல்லோரையும் இலகுவில் சென்றடையக் கூடியது, முடியும் என்ற நம்பிக்கையோடு செயற்படுங்கள். வாசகர்களுக்கு எனது இனிய வணக்கம், நன்றி.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
[டிஜிட்டல் ஓவியத் தொழில் நுட்ப [Google Nano Banana] உதவி:VNG]