வணக்கம் முருகபூபதி, முதலில்  கனடா தமிழ் இலக்கியத் தோட்டம்  உங்களுக்கு வழங்கிய இயல்விருது 2022 இற்காக எம் வாழ்த்துகள்.  பல தசாப்தங்களாக எழுத்துத்துறை, ஊடகத்துறையில் ஈடுபட்டு வருகின்றீர்கள். சிறுகதை, நாவல், கட்டுரை என உங்கள் இலக்கியப் பங்களிப்பு பன்முகத்தன்மை மிக்கது. உங்களுக்கு எழுத்துத்துறையின் மீது ஆர்வம் ஏற்பட்டதற்கான காரணங்கள் குடும்பச்சூழலா அல்லது நூலகங்களா அல்லது ஆசிரியர்களா அல்லது வேறு ஆளுமைகளா?

முருகபூபதி :  பாடசாலையில் கற்கும் கலத்தில் எனக்கு மிகவும் பிடித்தமான பாடமாக அமைந்தது சரித்திரம்தான்.  இந்தப்பாடத்தில் நூற்றுக்கு நூறு புள்ளிகளும் பெற்றுள்ளேன். இலங்கை  - இந்திய மற்றும் உலக சரித்திரம் என்பன கதைபோன்றது.  சிறுவயது முதலே வாழ்வில் பெற்ற தரிசனங்களை கதைபோன்று சொல்லும் இயல்பையும் கொண்டிருந்தேன். அதற்கு எனது பாட்டியும் ( அம்மாவின் அம்மா ) முக்கிய காரணம்.  இரவில் உறங்கும்வேளையில்  பாட்டி தையலம்மா எனக்கு பல கதைகளை சொல்லித்தந்தவர். பாடசாலையில்  க. பொ. த. சாதாரண தரம் படிக்கும்போது எமது தமிழ்ப்பாட ஆசிரியர் சுபியான் அவர்கள் எம்மிடம்  வாசிக்கும் ஆற்றலை  வளர்த்தார். ஊக்குவித்தார். அதில் தேறிவந்தவர்களில்  நானும் ஒருவன்.

பிரதி வெள்ளிக்கிழமை தோறும் ஆசிரியர் சுபியான் எமக்கு ஒரு வீட்டு வேலை தருவார். வார இறுதியில் ஞாயிற்றுக்கிழமை வெளியாகும் வீரகேசரி வாரவெளியீடு, தினகரன் வார மஞ்சரி, சிந்தாமணி ஆகிய பத்திரிகைகளில் ஏதாவது  ஒன்றில்  , லகர, ளகர, ழகர,  ரகர,  றகர சொற்கள்  இடம்பெற்ற  செய்திகளை தெரிவுசெய்து ஒவ்வொன்றிலும் ஐந்து வசனங்களை எழுதிவருமாறு பணிப்பார்.
அதனால், நானும் வீட்டில்  வாங்கப்படும் ஒரு வாரப்பத்திரிகையை கருத்தூண்றிப்படித்தேன். ஒருசமயம் சிறுதுளி பெருவெள்ளம் என்ற தலைப்பில் ஒரு சிறுதை எழுதச்சொன்னார்.  எழுதிய எனக்கு கூடுதல் புள்ளிகள் கிடைத்தன. அவ்வாறு எழுதுவதும் வாசிப்பதும் எனக்கு பிரியமானது.

           - இயல் விருது 2022 பெற்றபோது... -

2. இலக்கியம் எத்தகையதாக இருக்க வேண்டுமென்று கருதுகின்றீர்கள். மக்களுக்கானதா? கலைக்கானதா? படைப்புகள் எத்தகையதாக இருக்க வேண்டுமென்று கருதுகின்றீர்கள்?  மக்கள் இலக்கியம் பற்றிய உங்கள் கருத்துகள் என்ன?

முருகபூபதி: முதலில் அம்புலி மாமா, கண்ணன் சிறுவர் இதழ் முதலானவற்றில் வெளியாகும் கதைகளைத்தான்  படித்து வளர்ந்தேன்.  பாடசாலையை விட்டு வெளியேறியதும், எனது வாசிப்பு தேவையை எங்கள் நீர்கொழும்பூர் பொது நூலகம் ஓரளவு பூர்த்தி செய்தது. எனது அப்பா லெட்சுமணன், எங்கள் ஊரில் பழைமை வாய்ந்த கணேசன் கபேயில் பின்னாளில் ( 1970 இற்குப்பின்னர் )  கஷியராக பணியாற்றினார்.
இந்த கணேசன் கபேதான் எங்கள் பிரதேசத்தின் வீரகேசரி விற்பனை பிரதிநிதி. இங்கு வீரகேசரி பிரசுரங்கள் விற்பனைக்கு வரும். அப்பா எனக்கு வாசிக்கத்தருவார்.

அத்துடன், மு. வரதராசன், அகிலன் ஆகியோரின் கதைகளையும் படித்தேன்.  1972 இற்குப்பின்னர் ஜெயகாந்தன், கி. ராஜநாராயணன், இந்திரா பார்த்தசாரதி, தி. ஜானகிராமன் ஆகியோரின் படைப்புகள் எனக்கு அறிமுகமாகின்றன. அத்துடன் மல்லிகை, புதுயுகம், பூரணி முதலான ஈழத்து இதழ்களில் எழுதத் தொடங்குகின்றேன். அதனால், எனது வாசிப்பு அனுபவத்தில் மாற்றங்கள் நேர்ந்தன. அத்துடன்,  ஈழத்து எழுத்தாளர்கள் டொமினிக்ஜீவா, கே. டானியல், என். கே. ரகுநாதன், செ. கணேசலிங்கன்,  மு. தளையசிங்கம், தெணியான், தெளிவத்தை ஜோசப்,    செ. கதிர்காமநாதன், செ. யோகநாதன், செங்கை ஆழியான்,          க. சட்டநாதன், நீர்வை பொன்னையன், ஐ. சாந்தன், உட்பட மற்றும் ஒரு தலைமுறையினரின் படைப்புகளை வாசிக்கின்றேன்.

அப்போது படைப்பிலக்கியம் எவருக்காக இருக்கவேண்டும், எவ்வாறு இருக்கவேண்டும் என்ற பார்வை கிட்டுகிறது. நானும் சிறுகதைகளை எழுதத் தொடங்குகின்றேன். முதலில் எனது பிரதேச ( நெய்தல் நில மக்கள் பற்றியது ) மண்வாசனை கமழும் கதைகளை எழுதத் தொடங்குகின்றேன். இலக்கியம் மக்களுக்கானதுதான் என்ற தீர்மானத்திற்கு தொடக்கத்திலேயே வந்துவிடுகின்றேன். அத்துடன் அதில் அழகியலும் இருக்கவேண்டும் என கருதுகின்றேன்.

தொழில் ரீதியில்  1970 இற்குப்பின்னர் ஊடகவியலாளனாகியபோது,  எழுதிய செய்திகளும் மக்களுக்கானதுதான்.  அவ்வேளையில் சமூகத்திற்காக பேசுவதும், சமூகத்தை பேசவைப்பதுமே ஒரு ஊடகவியலாளனின் கடமை என்ற உணர்வு வருகின்றது. 1987 இற்குப்பின்னர் புலம்பெயர்ந்து அவுஸ்திரேலியா செல்கின்றேன்.  அக்காலப்பகுதியில் புலம்பெயர்ந்தோர் இலக்கியம் பேசுபொருளாகிறது. அப்போதும் கதைகள் எழுதுகின்றேன். அவையும் மக்களுக்கானதாக அமைகிறது.  எனது இந்தப்பதிலிருந்து நான் எங்கே நிற்கின்றேன் என்பது உங்களுக்கு புலப்படும்.

      - பெற்ற விருதுகளுடன் எழுத்தாளர் முருகபூபதி -

3. உங்களைக் கவர்ந்த மிகவும் முக்கியமான கலை, இலக்கிய மற்றும் அரசியல் ஆளுமைகள் யார் யார்? ஏன்?

முருகபூபதி:  ஒருவரின் இயல்புகள்தான் அவரின் அடிப்படை அழகு. எனக்கு எளிமை மிகவும் பிடித்தமானது. இலங்கையில் என்னை முதலில் கவர்ந்தவர் குரும்பசிட்டி இரசிகமணி கனகசெந்திநாதன்.  அடுத்து, தமிழகத்தின் இடைசெவல்   கி. ராஜநாராயணன்.  இவர்களைத்தேடி நீண்ட பயணங்களும் சென்றிருக்கின்றேன். அவர்களின் ஆளுமைப்பண்புகள் என்னை பெரிதும் கவர்ந்தன.  அரசியலை எடுத்துக்கொண்டால், இலங்கையில் கலாநிதி தகநாயக்கா.  (  தகநாயக்கா பற்றிய எனது அனுபவங்களை எனது சொல்ல மறந்த கதைகள்  நூலில் எழுதியிருக்கின்றேன். ) தமிழ் நாட்டில் கர்மவீரர் காமராஜர். மற்றும் நெல்சன் மண்டேலா.

4. உங்கள் புனைகதை இலக்கியப் பங்களிப்பில் உங்களுக்குத் திருப்தி தந்த படைப்புகள் எவை? ஏன்?

முருகபூபதி: எனது தொடக்க கால படைப்புகள்தான்.  அவை எனது பிரதேச கடற்றொழிலாளர்கள் பற்றியவை. அவர்களிடம் உண்மை இருந்தது. எளிமையும் நேர்மையும் இருந்தன. போலித்தனங்களற்ற வாழ்க்கை இருந்தது. பின்னாளில் புகலிடம் சென்றதையடுத்து நான் சந்தித்த மாந்தர்களிடம் நான் தரிசித்தவை வேறு வேறு.

5.உங்கள் ஊடகத்துறையில் ஏற்பட்ட மறக்க முடியாத சம்பவங்கள் அல்லது சம்பவம் இருப்பின் பகிர முடியுமா?

முருகபூபதி: நிறைய இருக்கின்றன. குறிப்பிட்டுச்சொல்வதாயின், 1986 ஆம் ஆண்டு இறுதியில் வடமராட்சியில் நடந்த வான் தாக்குதல் சம்பவம் தொடர்பான செய்தியை எழுதநேர்ந்து, சந்தித்த சிக்கல்கள், மற்றும் மறக்க முடியாத அனுபவங்கள். இதுபற்றியும்  எனது சொல்ல மறந்த கதைகள் நூலிலும் எழுதியிருக்கின்றேன். நீங்களும் அந்த நூலைப்படித்துவிட்டு விரிவான உங்கள்  வாசிப்பு அனுபவத்தை உங்கள்  பதிவுகள் இணையத்தில் எழுதியிருக்கிறீர்கள். அந்த செய்தி வேட்டையிலும் நான் மக்களுக்காகத்தான் செயற்பட்டேன்.

6. நீங்கள் படித்த நாவல்களில் , சிறுகதைகளில் உங்களை மிகவும் பாதித்த படைப்புகள் எவை? ஏன்?

முருகபூபதி: பல இருக்கின்றன. இதற்கு பதில் தருவது சற்றுச்சிரமம்.

7. நீங்கள் சமூகச் செயற்பாட்டாளரும் கூட. இலங்கை மாணவர் கல்வி  நிதியம் என்ற தன்னார்வத் தொண்டு அமைப்பின்  மூலம் பல தசாப்தங்களாகச் சேவையாற்றி வருகின்றீர்கள். அது பற்றிச் சிறிது கூற முடியுமா?

முருகபூபதி: நான் செய்தியாளனாக வீரகேசரியில் பணியாற்றத் தொடங்கிய காலப்பகுதியில் இலங்கையில் போர் மேகங்கள் சூழ்ந்துவிட்டன.  அந்த உள்நாட்டுப்போரில் பெரிதும் பாதிக்கப்படப்போகின்றவர்கள் பெண்களும் குழந்தைகளும்தான் என்ற தெளிவு எனக்கு இருந்தது. சிங்கள மக்கள் தரப்பில்  1971 இல் தொடங்கிய கிளர்ச்சியையும்,  தமிழர் தரப்பில் தமிழ் இன விடுதலைக்காக 1980 இற்குப்பின்னர்  தொடங்கப்பட்ட போராட்டத்தையும் பார்த்தேன்.  எனது ஊடகப்பார்வையில், இந்தப்போராட்டங்களில் அந்நிய சக்திகள் ஊடுறுவும் என்பதும் எனக்கு நன்கு தெரிந்திருந்தது. இறுதியில்  இந்தப்போராட்டங்கள்,  விதவைத் தாய்மாரையும்,  தந்தைமாரை இழந்த குழந்தைகளையும்தான் உருவாக்கும் என்பதை வீரகேசரியில் பணியாற்றிய காலத்திலேயே தெரிந்துகொண்டேன். நானும் சிறுவயதில் பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில் வளர்ந்திருக்கின்றேன்.

அவுஸ்திரேலியாவுக்கு சென்ற பின்னர்,  ஆயுதப்போராட்டத்திற்கு எனது ஆதரவை வழங்காமல், போரிலே நேரடியாக  பாதிக்கப்பட்ட தமிழ் மாணவர்களின் கல்வி சார்ந்த பணிகளுக்கு உதவவேண்டும் என்பதற்காக பல இரக்கமுள்ள அன்பர்களையும் ஒன்றுதிரட்டிக்கொண்டு 1988 ஆம் ஆண்டிலேயே இந்த கல்வி நிதியத்தை ஆரம்பித்தேன். அக்காலப்பகுதியில் வெளியான எனது இரண்டாவது கதைத் தொகுதி சமாந்தரங்கள் நூலுக்கு மெல்பனில் வெளியீட்டு அரங்கு நடத்தி, அதில் கிடைத்த ஐநூறு அவுஸ்திரேலியன் வெள்ளிகளுடன், நிதியத்தை ஆரம்பித்தேன்.  அப்போது நான் அங்கே நிரந்தர வதிவிட அனுமதியும் அற்ற ஒரு அகதிதான். ஆயினும் இரக்கமுள்ள அன்பர்கள் உதவ முன்வந்தார்கள்.  நூறுக்கும் மேற்பட்ட அன்பர்கள் உறுப்பினர்களாக ( Sponsors ) இணைந்தார்கள்.  இலங்கையில் வடக்கிலும், கிழக்கிலும், மலையகத்திலும் , மேற்கிலும் எமக்கு  மாணவர் கண்காணிப்பு – தொடர்பாளர்கள் இருக்கிறார்கள்.

1988 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த கல்வி நிதியம், அவுஸ்திரேலியாவில் பதிவுசெய்யப்பட்ட  ( Incorporated  ) அமைப்பாக இயங்கிவருகிறது.  இந்நிதியத்தின் உதவியினால், ஆயிரக்கணக்கான ஏழைத் தமிழ் மாணவர்கள் பயனடைந்துள்ளனர். அவர்களில் பலர்,  ஆசிரியர்களாக, அதிபர்களாக, பரீட்சை திணைக்களத்தில் உயர் பதவிகளையும்  சிறந்த தொழில் வாய்ப்புகளைப் பெற்றவர்களாக  மட்டுமன்றி குடும்பத்தலைவன், குடும்பத்தலைவியாகவும் மாறிவிட்டனர். இந்நிதியம் தொடங்கப்பட்ட காலத்தில் அவுஸ்திரேலியாவில் பிறந்திருக்காத இரண்டு பெண்கள்தான் தற்போது இதன் செயலாளர் – நிதிச்செயலாளர் பொறுப்புகளில் இருக்கிறார்கள். இதன் பணிகளை புதிய தலைமுறையினரிடம் ஒப்படைத்து வருகின்றோம். இத்துடன் இணைக்கப்பட்டுள்ள காணொளிகளை  நீங்கள் பார்க்கலாம்.

8. புகலிடத்  தமிழ்  இலக்கியம் பற்றி என்ன கருதுகின்றீர்கள்? ஆரோக்கியமாக  உணர்கின்றீர்களா?

முருகபூபதி: தமிழ் இலக்கிய வளர்ச்சிப்போக்கில் இது 1980 இற்குப்பின்னர் தோன்றிய புதிய வடிவம். தேசிய இலக்கியம், பிரதேச மொழி – மண்வாசனை இலக்கியம், என வளர்ந்து போர்க்கால இலக்கியத்தை நோக்கி நகர்ந்தது. ஈழத்தமிழர்களின் அந்நியப் புலப்பெயர்வையடுத்து, அவர்கள் மத்தியிலிருந்த உள்ளார்ந்த கலை, இலக்கிய ஆற்றல் மிக்கவர்களினால் தோற்றுவிக்கப்பட்டது. கனடா, ஜேர்மனி, பிரான்ஸ், இங்கிலாந்து, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து, நோர்வே, டென்மார்க், சுவிட்சர்லாந்து முதலான நாடுகளிலிருந்தெல்லாம் எம்மவர்கள் இலக்கியம் படைக்கிறார்கள்.

இங்கும் இளம் தலைமுறை  தோன்றிவிட்டது.  அந்தந்த நாட்டின் பிரதான மொழியிலும் புதிய தலைமுறை எழுதத் தொடங்கிவிட்டது.  இந்த மாற்றம் ஆரோக்கியமானது.  மொழிபெயர்ப்புகளும் வெளிவருகின்றன. இலங்கை – இந்திய வாசகர்கள் விழியுயர்த்திப்பார்க்கிறார்கள்.   முகநூல்களில் வெளிவரும் இலக்கிய சர்ச்சைகள் புதுவெள்ளம்தான்.  அவை நின்று நிலைக்காது.  
படித்தோம் சொல்கின்றோம் என்ற தலைப்பில் நான் நூறுக்கும் மேற்பட்ட புகலிட இலக்கிய நூல்கள் பற்றி எழுதியிருக்கின்றேன். வாசகர் முற்றம் என்ற தலைப்பில் பல தேர்ந்த புகலிட வாசகர்களை அறிமுகப்படுத்தியிருக்கின்றேன்.

புலம்பெயர்ந்தோர் இலக்கியம் புகலிட இலக்கியமாகி தற்போது அந்தந்த நாட்டின் தமிழ் இலக்கியமாகிவிட்டது.  குறிப்பாக சொல்வதாயின் ஆறாம் திணை இலக்கியம்   ( பனியும் பனி சார்ந்த நிலத்தின் இலக்கியம் )  எனப்பேசப்படுகிறது.

 - இடமிருந்து..: முருகபதி, வ.ந.கி & சட்டத்தரணி பாலச்சந்திரன் முத்தையா -

9. இணைய இதழ்கள் பதிவுகள் உட்படப் பத்திரிகைகள், சஞ்சிகைகளில் தொடர்ந்து சமகாலத்தில்  எழுதி வருகின்றீர்கள். எப்படி இது உங்களால் சாத்தியமாகின்றது.

முருகபூபதி: எனக்குத் தெரிந்த தொழில் எழுத்து. என்னை,  எனது குடும்பத்தை வாழ வைத்த தொழில். அதனால் தொடர்ந்தும் எழுதிவருகின்றேன்.  எழுதவேண்டிய தேவைகள் இருக்கின்றன. ஆவணப்படுத்தப்பட  வேண்டிய விடயங்கள் பல எமது தமிழ் பரப்பிலிருக்கின்றன.  நேரத்தை உரிய முறையில் பயன்படுத்தினால், எதனையும் சாத்தியமாக்க முடியும் என நம்புகின்றேன். என்னிடத்தில் முகநூல் கணக்கு இல்லை. அதனாலும்  வீண்  சர்ச்சைகளில் ஈடுபடாமல் ஆக்கபூர்வமாக இயங்க முடிகிறது.

10. பதிவுகள் இணைய இதழ் பற்றி என்ன நினைக்கின்றீர்கள்?

முருகபூபதி: உங்கள் பதிவுகள் இணைய இதழ் சிறப்பானது.  அவுஸ்திரேலியாவில் நான் காலையில் கண்விழித்ததும் முதலில் பார்க்கும் இணைய இதழ்களில் உங்கள் பதிவுகளும் ஒன்று.  எனக்கே போதிய களம் தந்திருக்கிறீர்கள். எனது முந்நூறுக்கும் மேற்பட்ட  ஆக்கங்கள் உங்கள் பதிவுகளின் உள்ளடக்கத்தில் சேமிப்பாக இருக்கின்றன. பல புதிய படைப்பாளிகளை இலங்கை – இந்தியா –  மலேசியா – சிங்கப்பூர் மற்றும் புகலிட தேசங்களிலிருந்து அறிமுகப்படுத்தி, அவர்களின் ஆக்கங்களுக்கு களம் அமைத்து வருகிறீர்கள். இது சிறந்த சேவை. இம்முறை உங்கள் பணிகளையும் பாராட்டி கனடா தமிழ் இலக்கியத்தோட்டம் விருது வழங்கி கௌரவித்திருப்பதையிட்டு மிகவும் மகிழ்ச்சியடைந்தேன். உங்கள்  கலை, இலக்கிய சேவை தொடர வேண்டும்.

11. இலங்கைக் கலை, இலக்கிய ஆளுமைகள் பற்றிய உங்கள் கட்டுரைகள் உண்மையில் பாதுகாக்கப்பட வேண்டிய வரலாற்றுப் பொக்கிசங்களும் கூட.  ஆவணப்படுத்தப்பட வேண்டுமென்று எண்ணி எழுதுகின்றீர்களா? அல்லது பகிர்ந்துகொள்ளலே முக்கிய காரணமா?

முருகபூபதி: நான் கலை, இலக்கிய ஆளுமைகளை மாத்திரமன்றி சாதாரண பாமர மக்களையும் உளமாற நேசிக்கும் இயல்புள்ளவன்.  அவர்களின் சமூகப்பயன்பாட்டு பக்கங்கள் பற்றி நாம் அவசியம் பேசவேண்டும். அவர்களிடம் கற்றுக்கொள்வதற்கும் பெற்றுக்கொள்வதற்கும் நிறைய இருப்பதாகத்தான் நான்  கருதுகின்றேன். தனிப்பட்ட விருப்பு – வெறுப்புகளுக்கு அப்பால், ஒருவரிடத்தில் காணப்படும் மேன்மைகளையே நான் முதலில் கவனத்தில் கொள்வேன். அவர்ளை எமது வாசகர்களுக்கு  இனம்காண்பிக்கவேண்டும். 1990 களில்  இரசிகமணி கனகசெந்திநாதன் பற்றிய பதிவை பாரிஸ் ஈழநாடு ( ஆசிரியர்: எஸ். எஸ். குகநாதன் ) இதழில் முதலில் எழுதத்தொடங்கியதிலிருந்து தொடர்ந்து பல இலங்கை, இந்திய – மலேசியா – சிங்கப்பூர் உட்பட புகலிட தேசத்து கலை, இலக்கிய ஆளுமைகள் பற்றி எழுதிவருகின்றேன். இந்தத் தொடரில் நூற்றுக்கணக்கானோரைபற்றி எழுதியிருக்கின்றேன். இந்தத் தொடருக்கு காலமும் கணங்களும் என்ற தலைப்பினையும் சூட்டியிருக்கின்றேன்.

12. இதுவரை கால உங்களது இலக்கியச் செயற்பாடுகள், பங்களிப்பு பற்றிய திருப்தி உங்களுக்குண்டா?

முருகபூபதி: எழுத்தே வாழ்க்கை என்றாகிவிட்ட பின்னர்,  திருப்தி என்ற பேச்சுக்கே இடமில்லை. நானும் இயங்கி, மற்றவர்களையும் இயங்கவைக்கவேண்டும் என்பதுதான் எனது நோக்கம்.  நண்பர்கள் பிறப்பதில்லை. உருவாக்கப்படுகிறார்கள். எனது செயற்பாடுகளில் பலரையும் இணைத்துக்கொள்கின்றேன்.