யுத்தம் முடிவுக்கு வந்து பதின்மூன்று வருடங்களாகி விட்டன.  இன்னும் யுத்தக்குற்றங்களைப் புரிந்தோர் மீதான் விசாரணைகள் நடைபெறவில்லை. காணாமல் போனோருக்கான தீர்வுகள் கிடைக்கவில்லை. அபகரிக்கப்பட்ட நிலங்கள் பூரணமாக விடுவிக்கப்படவில்லை. இவ்விதமானதொரு சூழலில் பல்லின, பன்மத, பன்மொழி மக்கள் வாழும் இலங்கையில் மக்கள் அனைவரும் அமைதியாக, புரிந்துணர்வுடன் வாழுதற்கான சூழலை ஏற்படுத்துவதே அரசின் கடமையாக , செயற்பாடாகவிருக்க வேண்டும். மக்களுக்குகிடையில் பிரிவுகளை ஏற்படுத்துவதாக எவையும் நடைபெற இடமளிக்கக் கூடாது.  அண்மையில் மக்களால் விரட்டியடிக்கப்பட்ட இனவாதச் சக்திகள் மீண்டும் தலையை நுழைப்பதற்கு இனவாதத்தையே கைகளிலெடுப்பார்கள். அதற்கு ஏற்கனவே புரையோடிப்போயிருக்கும் தமிழ், சிங்களப்பிரச்சினையைத் தூண்டி அதைத்தீர்க்கும் நடவடிக்கைகளுக்கெதிராகச் செயற்படுவார்கள்.

தற்போது வெடுக்குநாறி மலைச் சிவன் ஆலயம் சிதைக்கப்பட்டிருப்பது இலங்கைத் தொல்லியல் திணைக்களத்திலுள்ள சக்திகள் சில மீண்டும் சிங்கள , தமிழ்  மக்களுக்கிடையில் இனவாதத்தைத் தூண்டி விடும் செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளனவோ என்னும் சந்தேகத்தை ஏற்படுத்துகின்றது. இலங்கையின் ஆட்சியாளர்களும் சரி, பெரும்பான்மையின மக்களும் சரி இலங்கை ஒரு தனிப்பெளத்த நாடு என்னும் சிந்தனையிலிருந்து விடுபட வேண்டும். இலங்கை பல்லின, மத, மொழி மக்கள் வாழும் நாடு என்பதை இதய சுத்தியுடன்  ஏற்றுச் செயற்பட வேண்டும். இனவாதச் சக்திகள் எப்பகுதிகளிலிருந்து வந்தாலும் அவை பெருந்தீயாகப்பற்றியெரிய விடாது தடுக்க வேண்டும்.

தொல்லியல் திணைக்களத்தின் கைகளிலுள்ள ஒரு சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த  பகுதி (இப்பகுதியில் தமிழ் பிராமி எழுத்துகள் கண்டு பிடிக்கப்பட்டதாக வாசித்திருக்கின்றேன். அவை பற்றி மேலதிக ஆய்வுகள் செய்யப்பட்டுள்ளனவா என்பது தெரியவில்லை. ) . இது பற்றிய முறையான ஆய்வுகள் செய்யப்பட வேண்டியதவசியம். இதே சமயம் இப்பகுதிக்குள் யாரும் செல்வதைத் தொல்லியல் திணைக்களம் தடை செய்துள்ளதாகவும் அறிகின்றேன். இது பற்றி வவுனியா நீதி மன்றத்தில் வழக்கிருப்பதாகவும் அறிகின்றேன்.  இவ்வாறானதொரு சுழலில் மேற்படி ஆலயம் சிதைக்கப்பட்டுள்ளதற்குத் தொல்லியல் திணைக்களமே பொறுப்பேற்க வேண்டும். இது பற்றி முறையான விசாரணைகள் நடைபெற்று குற்றவாளிகள் நீதியின் முன் நிறுத்தப்பட்டுத் தண்டிக்கப்பட வேண்டும்.

- யாழ்ப்பாணத்துத் துரையப்பா விளையாட்டு மைதானத்தை இந்தியப்பிரதமர் மோடி அங்கிருந்து திறந்து வைக்கும் காட்சி. -

அயலில் இந்துத்துவாவைப் பின்பற்றும் பாஜக அரசிருக்கும் இச்சூழலில், இப்பிரச்சினை ஆரம்பத்திலேயே அணைக்கப்படாவிட்டால், மிக  இலகுவாக எதிர்காலத்தில் பற்றியெரிய வாய்ப்புண்டு.  இன்று இலங்கையில் இந்தியா வலுவாகவே கால் பதித்துள்ளது. வடக்கு, கிழக்கு, மலையகம் எங்கும் இந்தியத்தூதரக அலுவலகங்கள் இயங்குகின்றன.  இதன் மூலம் இப்பகுதிகளில் நடைபெறும் சமூக, அரசியல் நிகழ்வுகளையெல்லாம் அவதானிப்பதற்கு இந்தியாவால் முடியும். அவற்றை அறிவதற்கு இலங்கையிடம் தங்கியிருக்க வேண்டிய தேவை இந்தியாவுக்கில்லை.

மேலும் இந்திய நிதி உதவியுடன் மீளமைக்கப்பட்ட யாழ்ப்பாணத்துத் துரையப்பா விளையாட்டு மைதானத்தை இந்தியப்பிரதமர் மோடி அங்கிருந்து திறந்து வைத்ததையும் மறக்க  முடியாது. அண்மையில் இந்திய நிதி உதவியுடன் ஆரம்பிக்கப்பட்ட கலாச்சார மண்டபத்தை இந்திய அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் தமிழ்  அமைச்சர் முருகன் திறந்து வைத்ததையும் மறக்க முடியாது. இலங்கையின் யாழ் கொழும்பு புகையிரதப்பாதையை மீளமைத்ததில் இந்தியாவின் பங்களிப்பை மறக்க  முடியாது. பலாலி சென்னை விமான சேவை ஏனைய தமிழக நகரங்களுக்கும் விஸ்தரிக்கப்படுமென்று அண்மையில் யாழ் இந்திய தூதரக அதிகாரி  கூறியுள்ளதையும் மறக்க முடியாது. இவையெல்லாம் படிப்படியாக இந்தியா இலங்கையில் தன்னை நிலை நிறுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதையே காட்டுகின்றது. இச்சூழலில் 13ஆவது திருத்தச்சட்ட அமுலாக்கலிலுருந்தும் இந்தியா ஒருபோதுமே பின்வாங்காது என்பதும் நிதர்சனம். இந்தியா இலங்கைத் தமிழர் பிரச்சினையில்  மதரீதியாகத் தலையிட்டால் அது இலங்கையின் இறையாண்மைக்குப் பெரிய பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதையும் இலங்கை அரசு உணர்ந்துகொள்ள வேண்டும்.

இச்சூழலை இலங்கை அரசு உணர்ந்துகொள்ள வேண்டும். தென்னிலங்கையின் பெரும்பான்மையின மக்களும் இலங்கை அனைத்து மக்களுக்குமுரியது. அனைவரும் அன்புடன், உரிமைகளுடன் வாழுவதே நாட்டின் அபிவிருத்திக்கும், அனைத்து மக்களின் நல்வாழ்வுக்கும் நல்லது என்பதை உணர்ந்து இதுபோன்ற பிளவுகளை ஏற்படுத்தும்  செயற்பாடுகளுக்கெதிராகக் குரல் கொடுகக வேண்டும்.