இலங்கை சீனசார்பு கொம்யூனிஸ்ட் கட்சி, தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம், காந்தீயம், தேடகம் போன்ற அமைப்புகளின் முன்னாள் உறுப்பினராகவிருந்தவர் அமரர் சண்முகலிங்கம் அவர்கள். பெப்ருவரி 22 அவரது நினைவு நாள்.

எப்பொழுது கண்டாலும் சிரித்த முகத்துடன் , வாயூற  உரையாடும் இவரது தோற்றம் நினைவுக்கு வருகின்றது. தான் நம்பிய கொள்கைகளுக்காகத் தன் இருப்பில் உறுதியாகத் தடம்  பதித்தவர். இவர் காந்திய அமைப்பில் செயற்பட்டுக்கொண்டிருந்தபோது அச்செயற்பாடுகளுக்காக இலங்கை அரசால் கைது செய்யப்பட்டு சிறையினில் வாடியவர். இவரை நான் சந்திக்கும் சந்தர்ப்பம் ஏற்படும்போதெல்லாம் நான் அவரது சிறை அனுபவங்கள் பதிவு செய்யப்பட வேண்டியவை; ஆவணப்படுத்தப்பட வேண்டியவை. அவற்றைப் பற்றி எழுதுங்கள். 'பதிவுகள்' இணைய இதழுக்கும் எழுதுங்கள் என்று வலியுறுத்துவதுண்டு. எழுதுவதாக உறுதியளிப்பார்.

எம் மக்களுக்காகச் சிறையிலிருந்தார். அதற்கான நன்றிக்கடனாக நாம் செய்யக்கூடியது இவரை என்றும் அதற்காக நினைவில் வைத்திருப்பதுதான். இவரைப்பற்றிய நினைவுகளை எடுத்துரைப்பதுதான். இவருடன் காந்தியம் போன்ற அமைப்புகளில் இணைந்து இயங்கியவர்கள் பலர் இருக்கின்றார்கள். அவர்கள் தம் மெளனம் களைந்து , தம் உள்ளம் திறக்க வேண்டும். அவரைப்பற்றிய தம் நினைவுகளைப் பதிவு  செய்ய வேண்டும்.