இன்று உலகளாவியரீதியான உள ஆரோக்கிய தினமாகும். உள ஆரோக்கியத்தைப் பேணும் வழிவகைகளை அறியச்செய்தல் இந்த நாளின் ஒரு நோக்கமாகும். அவ்வகையில் அந்தக் கணத்தில் இருப்பதன் மூலமும், நிகழ்காலத்தில் வாழ்வதன் மூலமும் எங்களின் மனநலத்துக்கு எவ்வகையில் நாங்கள் உதவிசெய்யலாம் என்பது பற்றி நான் அறிந்ததை உங்களுடனும் பகிர்ந்துகொள்ளலாமென நினைக்கிறேன்.

கடந்தகாலத்தை மறுபரிசீலனை செய்வதில் அல்லது எதிர்காலத்தைத் திட்டமிடுவதில் எங்களை அறியாமலே எங்களின் மனம் பரபரத்துக்கொண்டிருப்பதை நாங்கள் அனைவரும் கவனித்திருப்போம். அப்படியான நினைவுகள் சந்தோஷமான விடயங்களாகவோ அல்லது நேர்மறையான சிந்தனைகளாகவோ இல்லாமல், எங்களைத் திணறடிக்கச்செய்யும் உணர்ச்சிகளாகவோ அல்லது கண்கலங்க வைக்கும் சம்பவங்களாகவோ இருக்கும்போது அல்லது ஒருவருடனும் தொடர்பற்றிருப்பதுபோல அல்லது உணர்ச்சியற்ற ஒரு நிலையை உருவாக்குவதுபோல இருக்கும்போது, துயரம், வேதனை, வலி, பற்றற்ற தன்மை, மனவழுத்தம், மனச்சோர்வு போன்ற எதிர்மறையான நிலைகள் எங்களுக்கு வரக்கூடும்.

எனவே அவ்வகையான எதிர்மறை நினைவுகளில் உழலும் அல்லது எதிர்காலம் பற்றிய கவலைகளில் ஆழ்ந்துபோகும் நிலையை மேவுவதற்கு, அலைபாய்ந்து கொண்டிருக்கும் எங்களின் மனத்தைக் கவனித்து, மீளவும் அதனை அந்தக் கணத்தில் இருக்கச்செய்தல் (Grounding) மிகவும் முக்கியமாகும். அந்தக் கணத்தில் இருக்கும் திறனை நாங்கள் வளர்த்துக்கொள்வதற்கு நிகழ்காலத்தில் வாழும் உத்தி (Mindfulness) எங்களுக்கு உதவுகிறது என்கிறார், Harvard பல்கலைக்கழகத்தின் மருத்துவ நிபுணரான Westbrook.

எங்களின் உடலில் அல்லது சூழலில் என்ன நடக்கிறது என்பதில் கவனம்செலுத்தலே அந்தக் கணத்தில் இருத்தல் எனப்படுகிறது. குறித்த அந்தச் சூழல் எங்களுக்குப் பாதுகாப்பானதாக இருக்கிறது என்பதை எங்களின் மொழித் திறனைப் பயன்படுத்தி எங்களுக்கு நாங்களே நினைவுபடுத்துவதன் மூலம், போராட்டத்துக்கு அல்லது தப்பியோடலுக்குத் தயாராகும் எங்களின் உடலின் எதிர்வினையை இல்லாமல் செய்வதே நிகழ்காலத்தில் வாழ்தலின் நோக்கமாகும்.

உணர்ச்சிரீதியான அல்லது உடல்ரீதியான வலி ஒன்றினால் நாங்கள் திணறடிக்கப்பட்டிருக்கும்போது, எங்களின் அந்த உணர்வுகளைக் கட்டுப்படுத்துவதற்கும், பாதுகாப்பை நாங்கள் உணர்வதற்கும் எங்களுக்கு ஒரு வழி தேவைப்படுகிறது. எந்த இடத்திலும், எந்த நேரத்திலும் எங்களுக்கு அது கிடைப்பதற்கும், சமநிலை ஒன்றை நாங்கள் உணர்வதற்கும் நிகழ்காலத்தில் வாழ்தல் உத்தி உதவுகின்றது.

எங்களின் மனதில் கவனத்தைச் செலுத்துதல், எங்களின் புலன்களில் கவனம் செலுத்துதல் எங்களை அமைதிப்படுத்தல் ஆகிய மூன்று வழிகளில் எங்களுக்குப் பொருத்தமான ஒரு வழியில் நிகழ்காலத்தில் வாழ்தலை நாங்கள் முயற்சிக்க முடியும் என்கின்றனர் உளவியலாளர்கள்.

எங்களின் மனதில் கவனம்செலுத்துவதைப் பின்வரும் வழிகளில் நாங்கள் செய்யமுடியும்:

• எங்களின் புலன்கள் அனைத்தையும் பயன்படுத்தி எங்களின் சூழலிலுள்ள பொருள்கள், ஒலிகள், இழையமைப்புகள், நிறங்கள், வாசனைகள், வடிவங்கள், இலக்கங்கள், வெப்பநிலை ஆகியவற்றை விரிவாக விபரிக்கலாம். உதாரணத்துக்கு, “இந்தச் சுவர்கள் வெண்மையானவை; அங்கே ஐந்து இளஞ்சிவப்பு நாற்காலிகள் உள்ளன; அந்தச் சுவருக்கு எதிரே மரத்தாலான புத்தக அலமாரி ஒன்று உள்ளது.”

• எங்களின் மனதுக்குள் விளையாடல். உதாரணத்துக்கு ‘க’ என்ற எழுத்தில் ஆரம்பிக்கும் நகரங்கள், எழுத்தாளர்கள், பாடல்கள் அல்லது பொருள்களின் பெயர்களைச் சொல்லலாம்.

• அன்றாடச் செயல்பாடுகளை விபரித்தல். உதாரணத்துக்கு, முதலில் நான், தண்ணீரைக் கொதிக்க வைக்கிறேன். பின்னர் உருளைக்கிழங்கைத் தோல் உரித்து நான்கு துண்டுகளாக வெட்டுகிறேன்.

• மிகவும் ஆறுதலாக 10 வரை எண்ணுதல் அல்லது அகரவரிசையைச் சொல்லல்.

எங்களின் உடலில் கவனம்செலுத்துவதைப் பின்வரும் வழிகளில் நாங்கள் செய்யமுடியும்:

• குளிர்ந்த அல்லது இளம்சூடான நீரை எங்களின் கைகளின் மேல் பாயவிடல்.
• முடிந்தவரை கதிரை ஒன்றை இறுக்கமாகப் பிடித்துக்கொள்ளல், பின்னர் கதிரையில் இருக்கும் கைகளின் தொடுகை உணர்வை உணரல்.
• எங்களைச் சுற்றியுள்ள பொருள்களைத் தொடல். அந்தப் பொருட்களை முதல்முறையாகப் பார்ப்பது போல் ஆர்வத்துடன் ஆராய்தல்.
• கைகளை மூடி மூடித் திறத்தல்.
• இடம், வலம் என்று சொல்லியபடி ஒவ்வொரு அடியையும் கவனித்து, மெதுவாக நடத்தல்.
• சுவைகளை விரிவாக விபரித்தபடி, எதையாவது சாப்பிடுதல்.
• உட்சுவாசம் மற்றும் வெளிச்சுவாசங்களை ஒவ்வொரு முறையும் கவனிப்பதன் மூலம் சுவாசத்தில் கவனம்செலுத்தல்.

எங்களை அமைதிப்படுத்தலைப் பின்வரும் வழிகளில் நாங்கள் செய்யமுடியும்

• நண்பர் ஒருவருடன் பேசுவதைப்போல், எங்களுடன் நாங்களே இரக்கத்துடன் கதைத்தல். உதாரணத்துக்கு, கஷ்டமான ஒரு நேரத்தை கடந்து வந்திருக்கிறன், இதையும் கடந்திடுவேன்.

• நாங்கள் கரிசனைவைத்திருக்கும் நபர்களைப் யோசித்துப்பார்த்தல், (உ+ம்., பிள்ளைகள் அல்லது பெற்றோர்) அத்துடன் அவர்களின் நிழல்படங்களைப் பார்த்தல்.

• நல்லதொரு உணர்வை ஏற்படுத்தும் அல்லது உத்வேகம் தருமொரு பாடலைக் கேட்டல்.

• மிகவும் ஆறுதல்தரும் ஒரு இடத்தைக் கற்பனைசெய்தல் (கடற்கரை அல்லது பூங்கா).

Steven F. Hick என்பவரின் கருத்தின்படி, அந்தக் கணத்தில் இருத்தல் என்பது முறைசார்ந்தும் முறைசாராமலும் செய்யக்கூடிய ஒரு பயிற்சியாகும். இதனை நாளாந்தம் நாங்கள் செய்யும் பின்வரும் செயல்பாடுகளுடனும் இணைத்துக்கொள்ளவும் முடியும். இப்படிப் பழகிவிட்டால் திணறடிக்கச்செய்யும் நிகழ்வுகள் நிகழும்போது நிகழ்காலத்தில் வாழும் உத்தியைப் பயன்படுத்தல் இலகுவானதாக இருக்கும்.

• பற்களைத் துலக்குதல்: எங்களின் பாதங்கள் தரையில் ஊன்றியிருப்பதை, கையில் பற்தூரிகை இருப்பதை, கை மேலும் கீழும் அசைவதை அவதானித்தல்.
• பாத்திரங்களைக் கழுவுதல்: கைகளில் வெதுவெதுப்பான நீர் படுவதை, சவர்க்காரக் குமிழிகளின் தோற்றத்தை, கழுவும்தொட்டியின் அடிப்பகுதியில் சட்டிகள் மோதும் சத்தத்தை அனுபவித்தல்.
• உடுப்புத் தோய்த்தல்: சுத்தமான துணிகளின் வாசனையை முகர்தல் மற்றும் துணிகளின் இழையமைப்பில் கவனம்செலுத்தல். உடுப்புக்களை மடிக்கும்போது சுவாசத்தை எண்ணுதல்.
• உடற்பயிற்சி: எங்களின் சுவாசத்திலும், நகரும்போது எங்களின் கால்கள் இருக்கும் இடத்திலும் கவனம்செலுத்தல்.

இதேபோல வீட்டுக்கு வெளியில் இருக்கும்போதும் அந்தக் கணத்தில் இருத்தலுக்கான நிகழ்காலத்தில் வாழும் உத்தியை நாங்கள் பயிற்சி செய்யமுடியும். தேவையற்ற எண்ணங்கள் மனதில் எழும்போது, அவற்றைக் கவனித்து மெதுவாக அவற்றை ஒரு கரையில் ஒதுக்கிவிட்டு, எது எங்களை நன்றாக உணரச்செய்கிறதோ அதைச் செய்ய முயற்சிக்கலாம். எங்களின் பாதங்களுக்குக் கீழேயுள்ள தரையைக் கவனித்துக் காலால் தாளம் போடலாம். எங்களின் சுவாசத்தை உள்ளெடுத்து வெளிவிடும்போது அதன் வெப்பநிலையில் ஏற்படும் மாற்றத்தைக் கவனிக்கலாம். எங்களின் உடையை வருடுவதில், வெளிமூச்சின் கால அளவில், அல்லது எங்களின் கையில் இருக்கும் ஒரு கோப்பையின் சூட்டில் கிடைக்கும் செளகரியத்தைக் கவனிப்பதாகவும் அது இருக்கலாம்.

இந்து சமயத்திலும் புத்த சமயத்திலும் உள்ள தியானம் என்ற கருத்துருவிலிருந்து உருவாக்கப்பட்ட மையக் கருவான அந்தக் கணத்தில் இருக்கும் திறனை வளர்த்துக்கொள்வது, திருப்திகரமான ஒரு வாழ்க்கையை நாங்கள் வாழ உதவுகிறது; வாழ்க்கையில் எங்களுக்குக் கிடைக்கும் மகிழ்ச்சியை நிறைவாக அனுபவிக்க வைக்கிறது; எங்களின் செயல்பாடுகளில் நாங்கள் முழுமையாக ஈடுபடுவதற்கு வழிகாட்டுகிறது; அத்துடன் பாதகமான நிகழ்வுகளைச் சமாளிப்பதற்கான திறன்களை வழங்குகிறது என்கிறார், மேற்கத்தைய நாடுகளில் இதனைப் பிரபல்யப்படுத்திய Jon-Kabat Zinn.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.