
- முகநூற் பக்கங்களில் வெளியாகும் பயனுள்ள குறிப்புகள் அவற்றின் பயன் கருதிப் பதிவுகளின் இப்பக்கத்தில் வெளியாகும். - பதிவுகள்.காம் -

தமிழ்நாட்டின் சிறந்த கலைஞன் பாரதிராஜா செத்த அதே நாளில் உலகின் மாபெரும் மானுடநேயவாதியும் அறிஞருமுமான ஜீன் சிக்கலரும் (Prof.Dr. Jean Ziegler) காலமானார் .
பல தசாப்தங்களாக அநீதிக்கு எதிராகப் போராடிய சுவிச்சர்லாந்து நாட்டின் முதுபெரும் சமூகவியலாளரும் , அரசியல்வாதியும் , புனைவல்லாத எழுத்தாளரும் நாவலாசிரியருமான ஜீன் சீக்லர் ( Jean Ziegler) தனது 92வது வயதில் காலமானார். சிமோன் டி பூவா , ஜீன் போல் சார்த்தார் , சே குவேரா உள்ளிட்ட பலருடன் நட்பாக இருந்த சீக்லர், சுவிட்சர்லாந்தையும் விமர்சித்தார்; உலகையும் விமர்சித்தார் .
ஜீன் சீக்லர், 1934’ஆம் ஆண்டு ஏப்ரல் 19-ஆம் தேதி, பெர்னுக்கு(Bern) அருகிலுள்ள தூன் (Thun ) என்ற கிராமத்தில் பிறந்தார். அவர் ஆரம்பத்தில் சுவிஸ்சர்லாந்தின் தேசிய மன்றத்தின் உறுப்பினராகப் பணியாற்றியதுடன் கூடவே , ஜெனீவா பல்கலைக்கழகத்தில் சமூகவியல் பேராசிரியராகவும் இருந்தார். அவர் பெர்ன்(Bern) கிரெனோபிலும் பாரிஸ் பல்கலைக்கழகங்களிலும் கற்பித்தார்.சிறந்த சிந்தனையாளர் !
மனித குலத்தின் மனச்சாட்சி மௌனமானது! ஜீன் சீக்லருக்கு வீரவணக்கம் கூற நான் கடமைப்பட்டுள்ளேன். உலகின் பசியால் வாடும் மக்களின் குரலாகவும், சுரண்டலுக்கு எதிரான மனித மனச்சாட்சியாகவும் விளங்கிய ஜீன் சீக்லர் தனது 92’ஆவது வயதில் காலமானார். அவரது மறைவுடன் உலகம் ஒரு தலைசிறந்த சிந்தனையாளரையும், முதலாளித்துவத்தின் கொடுமைகளை அஞ்சாமல் அம்பலப்படுத்திய போராளியையும் இழந்துள்ளது.
கடந்த முப்பது ஆண்டுகளாக அவரை அறிந்தவன் என்ற வகையில், அவர் வெறும் எழுத்தாளரோ அரசியல் விமர்சகரோ அல்ல என்பதை நான் அறிவேன். மனித நேயத்தின் மீது அளவற்ற நம்பிக்கை கொண்ட ஒரு மாபெரும் மனிதர் அவர். ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் மற்றும் உணவுரிமை தொடர்பான அதிகாரியாகப் பணியாற்றிய காலத்திலும் அவர் அதிகார மாளிகைகளின் மொழியில் பேசவில்லை; பசியால் வாடிய குழந்தைகளின் மொழியிலேயே பேசினார்.
1964’ ஆம் ஆண்டில் நிகழ்ந்த ஒரு சம்பவம் அவரது வாழ்வின் திசையை நிர்ணயித்தது. ஜெனீவாவில் இளம் வயதில் எர்னஸ்டோ “சே” குவேராவின் வாகனச்சாரதியாக இருந்தபோது, கியூபாப் புரட்சியில் தானும் இணைய விரும்புவதாக சீக்லர் தெரிவித்தார். அதற்குச் சே குவேரா கூறிய பதில் வரலாற்றுச் சிறப்புடையது: “இங்கேயே இருங்கள்; மிருகத்தின் இதயப்பகுதியில் இருந்து போராடுங்கள்.” அந்த வார்த்தைகளை வாழ்நாள் முழுவதும் தன் இதயத்தில் சுமந்தவர் ஜீன் சீக்லர்.
அவர் தெருக்களில் மட்டுமல்ல, நிறுவனங்களுக்குள்ளும் போராடினார். சமூகவியலாளராகவும், சுவிச்சர்லாந்து நாடாளுமன்ற உறுப்பினராகவும், பின்னர் ஐ.நா. சபையின் சிறப்பு அறிக்கையாளராகவும் இருந்தபோது, அதிகாரத்தின் முகத்திரையை கிழித்தெறிந்து உண்மையை உலகிற்கு எடுத்துரைத்தார்.
“பசியால் இறக்கும் ஒவ்வொரு குழந்தையும் கொலை செய்யப்படுகிறது” என்ற அவரது புகழ்பெற்ற கூற்று, உலக முதலாளித்துவ அமைப்பின் மீதான மிகத் தீவிரமான குற்றச்சாட்டாகும். உலகம் உணவுப் பெருக்கத்தில் மிதந்துகொண்டிருக்கும்போது கோடிக்கணக்கான மக்கள் பசியால் மரணமடைவது இயற்கையின் தவறல்ல; மனிதனால் உருவாக்கப்பட்ட அநீதியான பொருளாதார அமைப்பின் விளைவு என்பதை அவர் இடைவிடாது வலியுறுத்தினார்.
உலகப் பொருளாதாரத்தின் வல்லாதிக்க சக்திகளுக்கு எதிராக அவர் நேருக்கு நேர் நின்றார். அதனால் அதிகார வர்க்கங்களின் வெறுப்பையும் தாக்குதல்களையும் சந்தித்தார். சிலர் அவர் “அளவுக்கு மீறிப் பேசுகிறார்” என்று குற்றம்சாட்டினர். ஆனால் உலகை தெளிவாகப் பார்க்கும் அனைவரும் அறிந்த உண்மை ஒன்று உண்டு: ஜீன் சீக்லர் ஒருபோதும் இலக்கைத் தவறவிட்டதில்லை.
எனது நினைவில் அவர் ஒரு கோட்பாட்டாளராக மட்டும் நிற்கவில்லை. அப்பாவி மக்களுக்காக தனது குரலை அர்ப்பணித்த மனிதராகவே நிற்கிறார். அதிகாரத்தின் மேடைகளில் நின்றபோதும், அவரது இதயம் எப்போதும் பசியால் வாடும் குழந்தைகளின் பக்கம் இருந்தது.
நீதிக்காகப் போராடும் அனைவருக்கும் ஜீன் சீக்லர் என்ற பெயர் இனி ஒரு நினைவாக மட்டும் இருக்காது; அது ஒரு பொறுப்பாகவும் இருக்கும். மனித வாழ்வின் உண்மையான அர்த்தம் சமூக நீதிக்கான கூட்டு போராட்டத்தில்தான் இருக்கிறது என்ற அவரது நம்பிக்கை தலைமுறைகளைத் தொடர்ந்து வழிநடத்தும்.
அவர் எழுதிய நூல்களும், அவர் விதைத்த சிந்தனைகளும், மனித விடுதலைக்கான போராட்டங்களிலும் சமூக நீதிக்கான இயக்கங்களிலும் தொடர்ந்து உயிருடன் வாழும். ஜீன் சீக்லரின் பயணத் தோழர்களுக்கும், நண்பர்களுக்கும், குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
“வெற்றிவரை போராடு” என்ற சே குவேராவின் முழக்கம் அவருக்கும் பொருந்தும். Hasta la victoria siempre, Jean Ziegler! உங்கள் குரல் மௌனமானாலும், நீங்கள் எழுப்பிய மனச்சாட்சி இன்னும் உலகின் பசியுற்ற மக்களின் இதயங்களில் ஒலித்துக்கொண்டே இருக்கும்.
நன்றி - Sri Rangan Vijayaratnam முகநூற் பக்கம்
டிஜிட்டல் ஓவியம் - AI