- எழுத்தாளரும் , 'நடு' இணைய இதழ் ஆசிரியருமான கோமகன் (தியாகராஜா ராஜராஜன்)  மறைந்து ஒரு வருடமாகின்றது. அவரது நினைவாக எழுத்தாளர் நெற்கொழுதாசன் எழுதிய அஞ்சலிக் குறிப்பிது. கோமகனின் சகோதரரான எழுத்தாளர் வடகோவை வரதராஜன் தன் முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். அதனைக் கோமகனின் நினைவாக பதிவுகள் இணைய இதழும் இங்கு பகிர்ந்துகொள்கின்றது.  மின்னலைப் போல் ஒளி வீசி மறைந்த கோமகனை வரலாறு அவரது இலக்கியப் பங்களிப்புகளூடு நினைவில் வைத்திருக்கும். - பதிவுகள்.காம் -


கோமகன் மறைந்து  ஆண்டு ஒன்றாயிற்று. பாரிஸின் ஆரம்பகாலங்களிலேயே உருவாகிய உறவு அவரது.   எப்போது கோமகனை சந்தித்தாலும்  ஒருவகையறியாத  மகிழ்வு  உண்டாகும். அவரது குரலில்  இழையும்  சொற்கள் மிதப்பான வெள்ளந்தித்தனத்தை  உருவாக்கும்.  அது அவரது உரையாடல் பாணி.  அல்லது  தனிக்கதை. ஓராண்டாக ஒலிக்காத, பிசுறு தட்டாத அவரது  குரலைக் கொண்டுவந்து மனத்தில் நிகழ்த்திப் பார்க்கிறேன். வெறுமை. அந்த இடம் கோமகனுக்கானது. யாராலும் நிரப்ப முடியாதது.

யாழ் இணையத்தில் நானும் எழுத்தாளன்தான் என்ற கோதாவில் எழுதிக்கொண்டிருந்த நாள்களில்,  பாராட்டும் சின்ன சின்ன சீண்டல்களுமென கருத்துக்களை எழுதுவார். ஒருநாள் உங்களோடு கதைக்கவேண்டும் என்று தொலைபேசி இலக்கத்தை அனுப்பியிருந்தார். அழைத்தேன். பேசினோம். சந்தித்தோம். பாரிஸில் நான் அமைத்து வைத்திருந்த நட்பு, உறவு வட்டத்திற்கு  வெளியேயான இன்னொரு தளத்தில் உருவாகிய நெருக்கம் அது. இறுதிவரை விலக்கமும் நெருக்கமுமாக தொடர்ந்துகொண்டு தானிருந்தது.   

சிறுகதைகள், பயணத்தொடர்கள், புத்தக குறிப்புகள் என தொடர்ந்து எதையாவது எழுதிக்கொண்டே இருந்தார். நட்பு  உரையாடல்களில் எப்படி சலிப்பில்லாமல் இருந்தாரோ அதேபோல, எழுதுவதிலும் சலிப்பில்லாமல்  இருந்தார். இலக்கியத்தில் தொடர்ச்சியான இயங்குதல் அவரை இன்னொரு தளத்தில் தள்ளியது.  தன் நேசிப்பு உழைப்பு நோக்கம் எல்லாவற்றையும் கொடுத்து அதனை "நடு" என்ற சஞ்சிகையாக மாற்றினார். தனது  தனிக்கதை. முரண் என்ற சிறுகதை தொகுப்புகளையும், நேர்காணல் தொகுதி ஒன்றையும், நடு பதிப்பகம் ஊடாக இன்னும் பலரது நூல்களையும் பதிப்பித்தார். இலக்கியமென தான் நம்பிய திசைகளெங்கும் கைகளை வீசி அள்ளிவந்து வெளியீடு செய்தார். பதிப்பித்தார். படைப்பு ஒன்றை பெறுவதற்கான அவரது அணுகுமுறை மறுப்பு சொல்ல இயலாதபடி இருக்கும். அதற்காக  தொடர்ந்து  தொல்லை செய்வார். இப்படியாகத் தன்னை ஒரு முழுமையான  எழுத்தாளனாக, இலக்கியச் செயற்பாட்டாளனாக  மாற்றிக்கொண்டிருந்தார். அதற்காகக் கடுமையாக உழைத்துக்கொண்டுமிருந்தார்.

இதை எழுதிக்கொண்டிருக்கையில் 'பேஸ்புக் மெஸெஞ்ச'ரை திறந்து பார்த்தேன். எவ்வளவு உரையாடல்கள். அவரது அக்கறையான விசாரிப்புகள், கிண்டலான பதில்கள் கேள்விகள்...  இந்த ஒரு மனிதரோடு மட்டும்தான் நிறையவே பேசியிருக்கிறேன் என்பது ஏனைய 'மெஸெஞ்சர்'களைப் பார்த்தபோதுதான் புரிந்தது. கோமகன் எழுத்தினூடாக  அறிமுகமாகியிருந்தாலும் இலக்கியவாதியாக நெருங்கியதைவிட அக்கறை கொண்ட அண்ணனாக, உறவாக மிக அதிகமாக நெருக்கியிருந்ததை உணர முடிகிறது. இலக்கியமென வரித்துக்கொண்ட நம்பிக்கையிலிருந்து முரண்பட எதுவுமேயில்லாத அவருடன் முரண்களிருந்தன. அவருடன் பழகிய எல்லோருக்கும் இருந்தது. ஆனால் அதையெல்லாம் கடந்து அன்பையும், நேசிப்பையும், அக்கறையையும் உள்ளார்ந்து வெளிப்படுத்திக்கொள்வார். பல தடவைகளில் அவரது நேசம் மிகுந்த ஆறுதலான வார்த்தைகள் ஆற்றுப்படுத்தியிருக்கின்றன. எழுதத் தூண்டியிருக்கின்றன.

புலம்பெயர் இலக்கியச்செயற்பாட்டாளராக தன்னை நிறுத்திக்கொண்ட  கோமகனது இயங்குதல் காலத்தால் குறிப்பிடப்படவேண்டியது. நிராகரிக்க முடியாத பெறுமதி வாய்ந்தது. கோமகன் இறந்தபோது இப்படியொரு குறிப்பை எழுதியிருந்தேன்.

நினைவுகளில்
ஏதாவதொரு நிகழ்வுகளில்
எங்காவதொரு பொழுதுகளில்
ஞாபகங்களில்  மீட்டுக்கொள்வோம்.
துயரத்தின் சாயல் சிறிதுமில்லாத புன்னகையை.
அப்போதெல்லாம் ஒரு புகைப்படம் எடுத்துவைத்துக்கொள்வோம்.
தவறவிட்ட,  
உங்கள் இருப்பை அதில் தேடிக்கண்டுகொள்வோம்.
சென்று வாருங்கள் கோமகன்.
காலம் உங்களை தன்னுள்ளே வைத்துக்கொண்டது.
நான் நினைவில் வைத்துக்கொள்கிறேன்.