- முகநூற் பக்கங்களில் வெளியாகும் பயனுள்ள குறிப்புகள் அவற்றின் பயன் கருதிப் பதிவுகளின் இப்பக்கத்தில் வெளியாகும். -  பதிவுகள்.காம் -


                            - யுகதர்மம் நாடகக் காட்சி -

சரியாக ஐந்து வருடங்களுக்கு முன்னர் 30-03-2017 இல் இந்த நூல் இலங்கையில் இலங்கை கிழக்குப் பல்கலைக் கழக மட்டக்களப்பு விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவகத்தில் முதல் முறையாக வெளியிடப்பட்டது . இந்த நிகழ்வில் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், நாடகமும் அரங்கிலும் பயிலும் மாணவர்கள், நாடக ஆர்வலர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர். இந்த நூலுக்கு நான் எழுதிய தொகுப்புரையை இன்று முகநூலில் பதிவு செய்கிறேன். நாடக மாணவர்களுக்குப் பிரயோசனமாக இருக்கும் என்று நம்புகிறேன். இது ஒரு நீண்ட விபரமான பதிவு. ஆர்வமுள்ளவர்கள் வாசியுங்கள்.

ஜேர்மனியரான பேர்டோல்ட் பிரெக்ட்(1898-1956) உலக நாடக வரலாற்றில் மிக முக்கியமானவர். இலங்கையில் தற்போது தமிழ் நாடக ஆர்வலர்களுக்கு பேர்டோல்ட் பிரெக்ட் நாடகங்கள் பரிச்சயமாகி வருகின்றன என்று சொல்லலாம். எழுபதுகளிலும் எண்பதுகளிலும் நிலைமை வேறு. இந்த நிலைமையை இளம் தலைமுறையினர் குறிப்பாக அரங்கியல் பயிலும் மாணவர்கள் அறிய வேண்டும். ஈழத்து நவீன நாடகங்கள் பற்றிய பதிவுகள் அவசியம் என்று கருதியே இந்த நூலாக்க முயற்சி முன்னெடுக்கப்படுகிறது.

எழுபதுகளின் ஆரம்பங்களில் கொழும்பு மொரட்டுவ (கட்டுபெத்தை) பல்கலைக் கழகத்தில் நான் பொறியியல் துறை மாணவனாக இருந்தபோது பிரபல சிங்கள நாடக நெறியாளர் ஹென்றி ஜெயசேனா அவர்கள் நெறிப்படுத்திய ஜேர்மன் நாடகாசிரியர் பேர்டோல்ட் பிரெக்டின் நாடகமான “கோகேசியன் சோக் சேர்க்கிளை” (Caucasian Chalk Circle ) கொழும்பில் பார்க்க சந்தர்ப்பம் கிடைத்தது. அந்தக் காலங்களில்தான் நான் தீவிர நாடகத்துறையில் பிரவேசித்தேன். தீவிரமான நாடகத் தேடலில் நான் ஈடுபட்ட காலம் அது. “ஹு னுவட்டயே கதாவ” என்ற பெயரில் மேடையேறிய அந்த சிங்கள நாடகம் என்னில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது. அந்த நாடகத் தாயாரிப்பு என்னைப் பிரமிக்க வைத்தது. நான் பார்த்த முதலாவது பிரெக்டின் நாடகம் அது. தொடர்ந்து பிரெக்ட் பற்றி நிறைய ஆங்கிலத்தில் வாசித்து அறிந்தேன். தமிழில் அவர் பற்றிய எழுத்துக்கள் அப்போது மிகக் குறைவு. அவருடைய நாடகம் ஒன்றை தமிழில் செய்ய விரும்பினேன்.

கொழும்பில் பிறிட்டிஷ் கவுன்சில், அமெரிக்கன் சென்ரர் மற்றும் நூல் நிலையங்களில் பிறெக்டின் நாடகங்களைத் தேட ஆரம்பித்தேன். தீவிர தேடலுக்கு பின் பல வருடங்களுக்குப் பின்னர் “The Exception and The Rule” என்ற நாடகத்தின் ஆங்கிலப்பிரதி 1979 இல் என் கண்ணில் பட்டது. இந்த நாடகத்தை தயாரிக்க முடிவு செய்தேன். எனக்குப் பிடித்த நாடகமாகவும் எமக்கு பொருத்தமானதாவும் அந்நாடகம் இருந்தது. இது ஒரு(Didactic play (teaching piece) - கற்பித்தலுக்குரியது என்ற வகைப்படுத்தி 1930இல் அவரால் எழுதப்பட்டது. பேர்டோல்ட் பிறெக்டின் கற்பித்தலுக்கான நாடகம் - ‘யுகதர்மம்’

பேர்டோல்ட் பிறெக்ட் எழுதிய“The Exception and The Rule” என்ற ஜேர்மனிய மொழி நாடகத்தை தமிழில் தழுவி இலங்கையில் ‘யுகதர்மம்’ என்ற பெயரில் நெறிப்படுத்தி முதலில் 1979இல் மேடையேற்றினேன். இதே நாடகத்தை பின்னர் தமிழ்ச் சிறுவர்களைப் பயிற்றுவித்து ‘ஒரு பயணத்தின் கதை’ (1998) என்ற பெயரில் மேடையேற்றினேன். பேர்டோல்ட் பிறெக்ட் ஐரோப்பிய மற்றும் உலக வரலாற்றில் நாடக ஆசிரியராகவும், நாடக கோட்பாட்டாளராகவும் விளங்கியவர். 1979இல் ‘யுகதர்மம்’ நாடகமே தமிழ் மேடைக்கு இவரை முதன் முதலில் அறிமுகப்படுத்தியது.

நாடகாசிரியர் தனது இளமைப் பருவத்தில் 1930களில் எழுதிய நாடகம் இது. Lehrstucke (‘கற்பித்தல்’) என்ற வகைப்படுத்தி இவர் அக்காலத்தில் எழுதிய சில நாடகங்களில் இதுவும் ஒன்று. இவருடைய அமெரிக்க புகலிட வாழ்க்கையின் போதே (1939-1947) ‘சோக் சேக்கிள்’, ‘மதர் கரேஜ்’, ‘கலிலியோ’ போன்ற மிகப் புகழ் பெற்ற அழகியல் தன்மையும் கூடிய ‘காவிய நாடகங்கள்’ எழுதப்பட்டன. இந்த நாடகங்கள் போல ‘தி எக்செப்ஷன் அன்ட் த றூல்’ நாடகம் எழுபதுகளில் பரவலாக உலக அளவில் அறியப்படவில்லை. 30களில் இவர் கற்பித்தலுக்கான வகை நாடகங்களிலேயே தனது கவனத்தைக் குவித்திருந்தார். மார்க்ஸியவாதியாக தன்னை அடையாளப்படுத்தியிருந்தாலும் ஒரு போதும் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்திருக்கவில்லை. சுயாதீனமாகவே செயற்பட்டார் என்பது கவனத்தில் எடுக்கப்படவேண்டியது.

சாதாரணமாக ‘அரங்க’த்திற்கு வராத புதிய பார்வையாளர்களை நோக்கி அவர் சென்றார். பாடசாலை மாணவர்கள், தொழிலாளர்கள், சிறைவாசிகள் போன்றோரை தனது அரங்கத்தில் ஈடுபட வைத்தார். அவர்களுக்கு அரங்கம் மூலம் கல்வி புகட்டுவது அவரது நோக்கமாக அப்போது இருந்திருக்கிறது. நூற்றுக்கணக்கானோரை தனது அரங்கத்தில் பங்காளராக இணைத்துக் கொண்டார். உதாரணமாக ‘Measures Taken’ என்ற கற்பித்தல் வகை நாடகத்தில் சுமார் 450 பேரை வெவ்வேறு மேடையேற்றங்களில் கோரஸ் பாடகர்களாக பங்கு பற்ற வைத்தார். இவ்வாறு பங்கு பற்றுவதன் மூலம் அவர்களை அரங்கத்தின் ‘கற்பித்தல்’ நடைமுறைக்குள் உள்ளிழுத்துக் கொண்டார்.

விறுவிறுப்பான கதை சொல்லல் பாணியில் குறுகிய தொன்மக் கதைகளைச் சொல்லும் நாடகங்களாக இவை இருந்தன. கற்றுக்கொள்வதும், மகிழ்வித்தலும் பிரிக்கமுடியாதபடி இவரது கற்பித்தல் அரங்கத்தில் நிகழ்ந்தது. யதார்த்தமும் நாடகமும் சங்கமிக்கும் நிகழ்வுகளாக அவை இருந்தன. அரசியல் நெறிமுறைகள், தார்மீக அறநெறிகள் சார்ந்த கேள்விகளுக்கு பார்வையாளர்களை உட்படுத்தினார். அங்கு எதுவும் முடிந்த முடிவு அல்ல. விவாதங்களை எழுப்பும் ஆரம்பமே அவரது அரங்கமாக இருக்கவேண்டும் என விரும்பினார்.

இந்த வகை நாடகங்கள் உக்கிரமான கலகத்தன்மை வாய்ந்தவையாக இருந்தன. விசித்திரமான அவலச்சுவையுடன் விரைவான காட்சிப் படிமங்களை கொண்ட இந்தவகை நாடகங்கள் சிலவேளைகளில் பார்வையாளர்களை துன்பப்படுத்துபவையாகவும் இருந்தன. யுகதர்மம் நாடகத்தில் வியாபாரி கூலியாளை தொடர்ந்து வதைப்பதும், இறுதியில் கொன்று விடுவதுமான காட்சிகளைச் சொல்லலாம்.

நடிப்பு முறை பற்றி ‘Gestus’ என்ற பதத்தினை பிறெக்ட் அடிக்கடி ஆரம்ப காலங்களில் பயன்படுத்தியுள்ளார். 1920 காலப் பகுதியில் அவரைக் கவர்ந்த நடிப்பு முறை மௌனத் திரைப்படங்களில் ‘சார்லி சப்ளின்’ கையாண்ட முறைமையாகும். பிறெக்ட் சரியான நடிப்புமுறை என்று ஏற்றுக்கொண்ட நடிப்புமுறை அதுவெனக் கொள்ளலாம்.

நடிகர்களின் அசைவுகள், நிலைகள் பற்றி மிக உன்னிப்பாக, ஒவ்வொரு கணத்திலும் எப்படிக் கையாள வேண்டும் என்று மிகத் தெளிவாக இருந்திருக்கிறார். பாத்திரங்கள், கற்பித்தல் நாடகங்களில் ‘வகைமாதிரி’களே. ‘யுகதர்மம்’ நாடகத்தில் கூலி, வியாபாரி, நீதிபதி போன்ற பாத்திரங்களைக் கூறலாம். நடிகர்கள் தாம் வாழும் சமூகத்தில் அந்தப் பாத்திரம் எப்படி நடந்துகொள்ளும் என்பதை உணர்ச்சிபூர்வமாக வெளிக்காட்டாமல் பொதுமைப்படுத்தி, அவர்கள் ஏன் அப்படி நடந்துகொள்கிறார்கள் என்ற விளக்கத்தைக் காட்ட வேண்டும் என்று எதிர்பார்த்தார். நடிகர்களின் அசைவு நிலைகள், தான் நடிக்கும் பாத்திரத்தின் நடத்தைகள்குறித்த விமர்சனமாக – விளக்கமாக இருக்க வேண்டும். நடிகர்களின் உடல்மொழியை முன்னிறுத்தும் கருத்து நிலை அது.

உடல் அசைவுகள், நிலைகள், முகவெளிப்பாடு, குரல் ஏற்ற இறக்கம், பேச்சில் உள்ள லயம், கோலங்கள், உடைவண்ணம், மேடைப் பொருட்கள் மூலம் ஒரு நடிகன் பார்வையாளன் மீது, ஆழமாக சிந்தனையைத் தூண்டும் காட்சிப் படிமங்களை உருவாக்க முனையும் முறைமை அது. பார்வையாளர்கள் சிந்திக்கும் மனிதர்களாகவே நாடகத்தைப் பார்க்க வேண்டும். ‘யுகதர்மம்’ நாடகத்தில் நீதிபதிகளின் அசைவுகளை இந்த வகையில் நெறிப்படுத்தியிருந்தேன்.

எனது நண்பன், கவிஞன் ச. வாசுதேவனிடம் இந்த நாடகத்தைக் கொடுத்து மொழிபெயர்க்கச் சொன்னேன். கொழும்பு பல்கலைக்கழகத்தில் பயின்ற அவர் அப்போது இலங்கை வானொலியில் இளைஞர் நிகழ்ச்சிகளைச் செய்து கொண்டிருந்தார். வாசுதேவனே முதலில் முழு நாடகத்தினையும் மொழி பெயர்த்துத் தந்தார். அப்போது நாங்கள் இருவரும் கொழும்பில் வசித்து வந்தோம். அடிக்கடி சந்;தித்து நாடகப்பிரதி பற்றி விவாதிப்பதுண்டு. “யுகதர்மம்” என்ற தலைப்பும் அவராலேயே இடப்பட்டது. அவரே எமது “கானசாகரம்” ஈழத்து மெல்லிசை நிகழ்ச்சிக்காக பிறெக்டின் “சோக் சேக்கிள்” என்ற நாடகத்தில் இருந்து “காலமது மாறிடினும் - காத்திருப்பேன்” என்ற பாடலை மொழிபெயர்த்துத் தந்திருந்தார். அத்துடன் எமது “முகமில்லாத மனிதர்கள்” நாடகத்தில் வரும் அத்தனை பாடல்களையும் ஆக்கித் தந்தார். நான் கேட்டுக்கொண்டதற்கு இணங்க “யுகதர்மம்” நாடகத் தயாரிப்பின் போது நிர்மலா நித்தியானந்தன் பிரதியை செம்மைப்படுத்தினார். நாடகப் பிரதிகளை காட்சிப்படுத்தும்போது, நாடகப் பிரதியில் நாடக ஆசிரியரின் ஆதார நோக்கை சிதைக்காமல் சில மாற்றங்கள் செய்வது எனது வழமை. எனது செயற்பாட்டுப் படிமுறைகளில் அதுவும் ஒன்று.

முதல் நாடக மேடையேற்றத்தின் போது தமிழாக்கம் நிர்மலா நித்தியானந்தன் என்றும் பாடல்கள் மட்டுமே வாசுதேவன் என்றும் விளம்பரப்படுத்தப்பட்டது. இந்த நாடகத்தை வாசுதேவன் முதலில் மொழிபெயர்த்தமையை மு. நித்தியானந்தன் எமது சுவிஸ் நாடக விழா (1994) மலரில் பதிவு செய்துள்ளார். தமிழ் மொழியாக்கம் வாசுதேவன்-நிர்மலா என்பதே சரியானது. இந் நூலில் இப்படியே குறிப்பிடப்படுகிறது.
1978இல், “கண்ணாடி வார்ப்புகள்” நாடகத்தில் பாத்திரப் பொருத்தம் கருதி நிர்மலாவை நாடக உலகிற்கு கொணர்ந்தேன். முதலில் நடிக்க மறுத்த அவர் மிகுந்த வற்புறுத்தலின் பின்னரே சம்மதித்தார். “கண்ணாடி வார்ப்புகள்” நாடகத்தைத் தொடர்ந்து, அவைக்காற்று கலைக்கழகம் உருவாக்கப்பட்டது. அவைக்காற்று கலைக் கழக ஆரம்ப காலங்களில் (1978-1980) நிர்மலா மிக உற்சாகமாக செயற்பட்டார். “புதிய உலகம் பழைய இருவர்”, “ஒரு பாலை வீடு”, “இடைவெளி” ஆகிய நாடகங்களை அவைக்காற்று கலைக் கழகத்திற்காக அவர் மொழிபெயர்த்துத் தந்ததோடு இந் நாடகங்களில் முக்கிய பாத்திரங்களில் சிறப்பாக நடித்துமிருந்தார். எமது 40 வருடங்களுக்கு மேற்பட்ட கலைப் பயணத்தில், நிர்மலா சில வருடங்களே பணியாற்றினாலும் முக்கிய இடத்தை வகிக்கிறார். லண்டனிலும் குறுகிய காலம் எமது நாடகப் பயணத்தில் அவர் பங்காற்றினார். எம்மோடு இயங்கிய காலங்களில் முழுமையான ஈடுபாட்டோடு அவர் செயற்பட்டார்.

யுகதர்மம் நாடகப் பாடல்களுக்கு இசையமைக்க இசைவாணர் யாழ்.கண்ணனை அணுகினேன். அவர் 78 ஆரம்பத்தில் கட்டுப்பெத்தை மாணவர்களைக் கொண்டு நான் நெறிப்படுத்திய “நட்சத்திரவாஸி” நாடகத்திற்கு அருமையாக இசையமைத்திருந்தார். தீவிர நாடகத் துறையில் அவரது பிரவேசமும் அந்த நாடகம்தான். வார இறுதி நாட்களில் கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் சென்று அவருடன்; நானும் அவரும் பல மணி நேரம் செலவு செய்து பாடல்களுக்கான மெட்டுகளை அமைத்தோம். அவர் நாடகப் பிரதிக்கமைய வேறு வேறான மெட்டுகளை அமைத்துக் காட்ட, அவற்றுள் பொருத்தமான மெட்டுகளை நான் தெரிவு செய்தேன். பாடல்கள் மிக நன்றாக வந்தன. வாசுதேவனின் பாடல்களும் கண்ணனின் இசையும் நாடகத்தின் வெற்றிக்கு முக்கிய காரணங்கள் என்று என்னால் நிச்சயமாக சொல்ல முடியும். அவர் எனது “முகமில்லாத மனிதர்கள்”, “துக்ளக்” ஆகிய நாடகங்களுக்கும், அண்மையில் “நெட்டை மரங்கள்” நிகழ்வுக்கும் அருமையான இசை அமைத்தார். அவரது நினைவுக் குறிப்புகளையும் இந்நூலில் இணைக்க முடிந்ததில் எனக்கு மகிழ்ச்சி.

பேர்டோல்ட் பிரெக்ட் இந்த வகை கற்பித்தல் நாடகங்களுக்கு மிகப் பெரிய கோரஸ் இசையை 1930களில் பயன்படுத்தியுள்ளார். அதற்கு அவர் மாணவர்கள், தொழிலாளர்கள் போன்றவர்களை நூற்றுக் கணக்கில் பங்கு பற்ற வைத்தார். அதுபோலவே கட்டுப்பெத்தை (மொரட்டுவ) பல்கலைக் கழக மாணவர்களையும் இணைத்துக் கொண்டு ஒரு பெரிய கோரஸ் உருவாக்கினோம். இதற்கு முதல் நவீன தமிழ் நாடகத்தில் இப்படியான கோரஸ் இசை பயன்படுத்தப்படவில்லை. ஆனந்தராணியும், நிர்மலாவும் எனது முன்னைய நாடகங்களில் பிரதான நடிகைகளாக விளங்கிய போதும் கோரஸ் பாடகர்களாக அவர்கள் பங்குபற்றியமை குறிப்பிடத்தக்கது. யாழ்ப்பாணப் பாடசாலை நாடகச் சுற்றுலாவின் போது சுண்டிக்குளி மகளிர் கல்லூரி மாணவிகளும், மட்டக்களப்பு, பண்டாரவளை ஆற்றுகைகளில் மட்டக்களப்பு தேவாலய அங்கத்தவர்களும் கோரஸ் இசைக்கப் பயிற்றப்பட்டனர்.

பிரெக்டின் தூரப்படுத்தல் உத்திக்கு நல்ல கோரஸ் இசையும்; முகமூடிகளும் தேவை என கருதினேன். முகமூடிகளை அவுஸ்திரேலியாவில் தற்போது வசிக்கும் கட்டடக் கலைஞர் சி. குணசிங்கம் வடிவமைத்து தந்தார். அவரே இந்த நூலின் அட்டை வடிவமைப்பையும் செய்திருப்பது எனக்கு மிக்க மகிழ்ச்சி. இவரே எமது “நட்சத்திரவாஸி” , “கண்ணாடி வார்ப்புகள்” , “ஒரு பாலை வீடு” “அரையும் குறையும்” ஆகிய நாடகங்களுக்கு மேடை வடிவமைப்பு செய்தவர் என்பது குறிப்பிட வேண்டியது. எனது சில நாடகங்களில் நடிகராகவும் பங்காற்றியவர்.

இலங்கையில் நான் தீவிர நாடக இயக்கத்தில் இயங்கிய காலங்களில் (1972-1982) எனது முக்கிய நாடகக் களம் மொரட்டுவ பல்கலைக் கழகமாகவே இருந்தது. அந்தப் பல்கலைக் கழகத்தில் தமிழ்த் துறையோ கலைப் பீடமோ கிடையாது. பொறியியல் கட்டடக்கலை மாணவர்களை நாடகப் பட்டறைகள் மூலம் பயிற்றுவித்து பல நாடகங்களை இயக்கினேன். 1979ஆம் ஆண்டு மொரட்டுவ பல்கலைக் கழகத்தில் ஒரு நாடகப் பயிற்சிப் பட்டறையை ஆரம்பித்தேன். பயிற்சிப் பட்டறையூடாக நடிகர்களை சரியான பாத்திரங்களுக்கு தெரிவு செய்வது எனது வழக்கம். ந. முத்துசாமியின் “நாற்காலிக்காரர்” நாடகத்தையும்; பிறெக்டின் “ தி எக்செப்ஷன் அன்ட் த றூல்” நாடகத்தை “யுகதர்மம்”என்ற தலைப்பிலும்; நெறிப்படுத்தி பல்கலைக் கழக தமிழ்ச் சங்க நிதிக்காக மேடையேற்றினேன்.

மாணவ சமூகத்தில் பாத்திரங்களுக்கு ஏற்ற நடிகர்கள் எப்போதும் கிடைப்பது கடினம். ஆனால் இந்த நாடகத்திற்கு பொருத்தமான நடிகர்கள் கிடைத்தமையும் வெற்றிக்கு காரணம் என்று சொல்லலாம். குறிப்பாக வியாபாரியாக நடித்த ரவிச்சந்திராவை சொல்லமுடியும். மிக சிறப்பாக நடித்திருந்தார். தற்போது கட்டடக் கலைஞராக கனடா நாட்டில் பணி புரிகிறார். அவருடைய அனுபவப் பகிர்வும் இந்த நூலில் இடம்பெறுவது மகிழ்ச்சி தருகின்றது.

1978-1982 காலப் பகுதியில் “தொடர்ந்த நாடக மேடையேற்றங்களே தீவிர நாடக இயக்கத்தை வலுப்படுத்தும்” என்ற ரீதியில் மிகுந்த பொருளாதார நெருக்கடிகள் மத்தியிலும் பலருடைய அர்ப்பணிப்புடனும்; கடின உழைப்புடனும் நேர்த்தியான பல ஆற்றுகைகளை நிகழ்த்தினோம். தொழில் ரீதியில் இயங்காத குழுவிற்கு மிகப் பெரிய சவால் இது. குறைந்த வளங்களுடன் ஆற்றுகைகளை முடிந்தளவு தொழில்ரீதியான நேர்த்தியுடன் நிகழ்த்தினோம். “யுகதர்மம்” நாடகம் குறித்த விமர்சனக் கட்டுரைகள் சிலவற்றை இந் நூலில் பதிவு செய்துள்ளோம். இலங்கையிலும், புலம்பெயர் நாடுகளிலும் நிகழ்த்திய ஆற்றுகைகள் குறித்த பதிவுகளை அனுபந்தத்தில் பார்க்கலாம்.
எழுபதுகளில் நல்ல காத்திரமான நாடகங்கள்; ஓரிரு மேடையேற்றங்களுடன் முடிந்து விடும் நிலை தான் இருந்தது. அந்த அவலச்சூழலில் “யுகதர்மம்” நாடகத்தை 29 தடவைகள் யாழ்ப்பாணம், கொழும்பு, பேராதனைப் பல்கலைக் கழகம், மட்டக்களப்பு, மாத்தளை, பண்டாரவளை, திருகோணமலை என்று பல இடங்களிலும் மேடையேற்றினோம். யாழ்ப்பாணத்தில் பல பாடசாலைகளில் பகல் காட்சிகளாக “யுகதர்மம்” மேடையேறியது. வழக்கமாக பல்கலைக் கழக நாடகத் தயாரிப்புகளில் பங்குபற்றும் மாணவர்கள் அந்த நிகழ்ச்சிகளுடனேயே நின்று விடுவார்கள் - குறிப்பாக தமிழ்த் துறையோ கலைத் துறையோ சாராத மாணவர்கள். ஆனால் மொரட்டுவ பல்கலைக் கழகத்தில் பொறியியல் கட்டடக்கலை பயிலும் இந்த மாணவர்கள் தங்களது படிப்பிற்கு மத்தியிலும் தன்னார்வத் தொண்டர்களாக எனக்கு ஒத்துழைப்பு வழங்கி 29 மேடையேற்றங்களிலும் பங்கு பற்றி எமது நாடக இயக்கத்திற்கு வலுச் சேர்த்தார்கள். இலங்கையில் எனது நாடகங்களில் இந்த நாடகமே அதிகத் தடவைகள் மேடையேறிய நாடகமாகும். 1979இலிருந்து 1982 வரை இந்த நாடகம் இலங்கையில் மேடையேற்றப்பட்டது.

இந்த நாடகம் அரங்கேறி 38 ஆண்டுகள் ஆகின்றன. இது மிக நீண்ட காலம். இருந்தும் ஒரு இளம் நாடக நெறியாளனாக, ஒரு இளைஞர் குழுவை வைத்து நான் நெறிப்படுத்திய “யுகதர்மம்” நாடகம் இப்போதும் பசுமையாக என் மனக்கண்ணில் உள்ளது. பார்வையாளர்கள் கூட இப்போதும் ஆற்றுகைகளை நினைவு படுத்திக் கூறுவதுண்டு. ஆற்றுகைகளின் வெற்றி எம்மை மிகவும் உற்சாகப்படுத்தியது.

நாம் நடத்திய நாடகப் பயணங்கள் மிக இனிமையானவை. யாழ். நகர வீதிகளிலும், திருகோணமலை, பேராதனை, மட்டக்களப்பு, பண்டாரவளை செல்லும் ரயில் பயணங்களிலும் இளைஞர்களாக குதூகலமாக நாடகப் பாடல்களை பாடி மகிழ்ந்தோம். அந்தக் காலங்கள் மறக்க முடியாதவை. பேராதனைப் பல்கலைக்கழகம் சென்ற போது ஏற்பட்ட அனுபவம் சுவையானது. நாடகத்திற்கான உடைகள் பேராதனை (“சரசவி உயன”) ரயில் நிலையத்தில் தவறவிடப்பட்டு விட்டது. நாடகம் ஆரம்பமாவதற்கு சற்று முன்னர்தான் இது பற்றி தெரிய வந்தது. உடைகளை எடுத்து வரும் வரை நாடகத்தை ஆரம்பிக்க முடியாத நிலை. பார்வையாளர்கள் அமைதி இழந்து கூக்குரலிட ஆரம்பித்து விட்டார்கள். எப்படி அவர்களை அமைதிப்படுத்தி நாடகத்தை தொடங்குவது என்று தெரியவில்லை. கூக்குரல் ஓயாமலே திரை திறக்கப்பட்டது. முதலாவது பாடல் இசைக்கத் தொடங்கி முடிந்தவுடன் பார்வையாளர்களின் கூக்குரல், பலத்த கரகோசமாக மாறியது. தொடர்ந்து ஒவ்வொரு காட்சி முடிவிலும் கரகோசம். உடனடியாக உரக்க எதிர்வினை காட்டும் அருமையான பார்வையாளர் கூட்டத்தை பேராதனையில் ஒவ்வொரு முறையும் கண்டேன். சில மாதங்களுக்குப் பின், நாம் ‘ஒரு பாலை வீடு’ நாடக மேடையேற்றத்திற்காக பேராதனை சென்றபோது, எம்மைக் கண்டவுடன் ஒரு மாணவர் கூட்டத்தினர் “யுகதர்மம்” பாடல்களை நினைவுபடுத்தி பாடிக் காட்டியபோது மகிழ்ச்சியாக இருந்தது. 1975இலிருந்து 1982 வரை என்னுடைய எல்லா நாடகங்களையும் அங்கு மேடையேற்றியுள்ளேன். அதில் எனக்கு மிக்க திருப்தியும் சந்தோசமும் கிடைத்தது.

தமிழிலும் சிங்களத்திலும் பிறெக்ட்டின் நாடகங்கள் ஒரே மேடையில் -அபூர்வ நிகழ்வு- இனங்களுக்கிடையிலான நல்லிணக்க நாடக விழா-1982

1982ல் திருகோணமலையில் மார்ச் மாதம் 12ஆம் திகதியில் இருந்து 15ஆம் திகதிவரை நான்கு நாட்கள் நடைபெற்ற இனங்களுக்கிடையிலான ஐக்கியத்தினையும் புரிந்துணர்வினையும் ஏற்படுத்த ஒழுங்கு செய்யப்பட்ட நல்லிணக்க நாடக விழாவில் ஹென்றி ஜெயசேனாவின், நான் பார்த்து வியந்த “ஹுனு வட்டயே கதாவ” நாடகமும்; எனது “யுகதர்மம்” நாடகமும் ஒரே மேடையில் மேடையேறியதில் எனக்கு மகிழ்ச்சி. இரண்டும் பிறெக்ட்டின் நாடகங்கள். ஒன்று சிங்கள மொழியிலும் மற்றது தமிழிலும் மேடையேறியமை ஒரு அபூர்வ நிகழ்வு. இந்த நாடக விழாவில் “மக்கு லொலுவ”வின் சார்பில் அரச நடனக் குழுவினர் வழங்கிய நாட்டிய நாடகம், திருமதி. லயனல் பெர்னாண்டோ தயாரித்த “தொப்பி வியாபாரி” சிறுவர் நாடகம், சோமலதா அபயசிங்க நெறிப்படுத்திய “கதந்தர தெகக்” என்ற சிறுவர் நாடகமும் மேடையேறின. இந்த விழாவினை அப்போது திருகோணமலையில் அரச அதிபராக இருந்த லயனல் பெர்னாண்;டோ ஒழுங்கு செய்திருந்தார்;. இந்த விழா திருகோணமலை புனித சூசையப்பர் கல்லூரி மண்டபத்தில் திருகோணமலை மாவட்ட கலாசாரப் பேரவையின் சார்பில் நடைபெற்றது.
இலக்கியப் பணிகளுக்கு உதவிய நாடகம்

;ஈழத்தில் எழுதப்பட்ட நாடகங்கள் அடங்கிய “ஆறு நாடகங்கள்” என்ற நூல், யாழ்.பல்கலைக் கழக தமிழ் இலக்கிய மன்றத்தால் 1980இல்; வெளியிடப்பட்டது. இதற்கான நிதி எமது “கண்ணாடி வார்ப்புகள்” நாடக மேடையேற்றத்தின் மூலம் 1978 இல் சேகரிக்கப்பட்டது. “ஆறு நாடகங்கள்” நூல் வெளியீடு ஒன்றை கொழும்பு இராமகிரு~;ண மண்டபத்தில் ஒழுங்கு செய்தேன். அந்த நிகழ்வைத் தலைமை தாங்கி நடத்தியதுடன் “யுகதர்மம்” நாடகத்தையும் அந்த விழாவில் மேடையேற்றினேன். “புதுசு” என்ற சிறு இலக்கிய சஞ்சிகை இளைஞர்கள் சிலரின் முயற்சியால்; யாழ்ப்பாணத்தில் அப்போது வெளிவந்தது. அவர்களது முயற்சிக்கு உதவும் முகமாக 1980இல் “யுகதர்மம்” நாடகம் தெல்லிப்பளை மகாஜனக் கல்லூரி துரையப்பாபிள்ளை அரங்கில் மேடையேற்றப்பட்டது.

புகலிட நாடுகளில் “யுகதர்மம்”

“யுகதர்மம்” நாடகத்தை லண்டனில் 01-10-1988 லண்டன் பாரதிய வித்ய பவன் அரங்கில் மீள் தயாரிப்பாக மேடையேற்றினேன். கே. கிருஷ்ணராஜா வியாபாரியாகவும், பா. சத்தியேந்திரன் கூலியாகவும், சி. சாந்தகுணம் வழிகாட்டியாகவும், சி. ராஜ்குமார் நீதிபதியாகவும், ஆனந்தராணி கூலியின் மனைவியாகவும், மற்றும் கமலகாந்தன், விஜயன், ரஞ்சன், ராஜேந்திரன், ஞானஸ்கந்தன் ஆகியோரும் நடித்தார்கள். இசைப் பொறுப்பை முதலில் நிர்மலாவும், பின்னைய மேடையேற்றங்களில் ஆ. வேந்தனும் கையாண்டார்கள். இலங்கையைப் போலவே லண்டனிலும் பெரிய கோரஸ் இசை பயன்படுத்தப்பட்டது. எமது லண்டன் நாடக இசைக் குழுவைச் சேர்ந்த பலரும் பங்குபற்றினார்கள்.

எண்பதுகளில் லண்டனில் குடியேறிய இலங்கைத் தமிழர்கள் பெரும்பாலானோர் கடும் பொருளாதாரச் சிக்கல்களுக்குள் வாழ வேண்டிய நிர்ப்பந்தம். இந்தச் சூழலில் கலை முயற்சி பாலையில் பயிர் வளர்க்கும் ஒரு முயற்சிதான். எம்மோடு பணி புரிந்த, புரியும் பலரும் நீண்ட மணித்தியாலங்கள் வெவ்வேறு தொழில்கள் செய்ய வேண்டிய கட்டாயம். வார இறுதி நாட்களிலும் மாலை நேரங்களிலும் தமது சொந்த நேரத்தை நாடகத்திற்கு ஒதுக்கி தன்னார்வத் தொண்டர்களாக செயலாற்றுபவர்கள். நான் கூட பொறியியலாளராக ஆங்கிலச் சூழலில் வாரத்திற்கு 60 -70 மணித்தியாலங்கள் கடும் அழுத்தங்களுக்கு மத்தியில் வேலை செய்து கொண்டு மிகுதி நேரத்தில் நாடகச் செயற்பாட்டில் ஈடுபட்டேன். கடின உழைப்புடன் அர்ப்பணிப்புடன்தான் இதனை சாதித்து வருகிறோம். “யுகதர்மம்” நாடகம் தொடர்ந்து லண்டனில் பல்வேறு அரங்குகளிலும் கனடாவிலும், பாரிஸ் நகரிலும் மேடையேறியது.

“இளையவர்களே எமது எதிர்காலம்” - சிறுவர்களுக்கு உரிய நாடகமாக இந்த நாடகம் - லண்டனில் “ஒரு பயணத்தின் கதை” – பிறெக்டின் நூற்றாண்டு தயாரிப்பு – 1998

1991இலிருந்து லண்டனில் வாழும் தமிழ் சிறுவர்களுக்கு “இளையவர்களே எமது எதிர்காலம்” என்ற ரீதியில் நாடகப் பட்டறைகள் செய்து வருகிறோம். சுமார் 15 வருடங்களாக மனைவி ஆனந்தராணியுடன் இணைந்து லண்டனில் ஒரு தமிழ் நாடகப் பள்ளியை வாராந்தம் நடத்தி வருகிறோம். ஆனந்தராணி 1975 இலிருந்து இன்று வரை தொடர்ச்சியாக எனது நாடக முயற்சிகளுக்கு உறுதுணையாக உழைப்பவர்.

1998ஆம் ஆண்டு பிறெக்டின் நூற்றாண்டு உலகின் பல பாகங்களிலும் கொண்டாடப்பட்டது. அதையொட்டி லண்டனில் அவரது “தி எக்செப்ஷன் அன்ட் த றூல்” நாடகத்தை “ஒரு பயணத்தின் கதை” என்ற புதிய தயாரிப்பாக தழுவல் வடிவத்திவ் சிறுவர் நாடகமாக மேடையேற்றினேன். “யுகதர்மம்” நாடகத்தைத் தமிழப் பெயர் மாற்றங்களுடன் தழுவல் நாடகமாக செய்து தரும்படி அப்போது லண்டனில் வசித்து வந்த பேராசிரியர் சி சிவசேகரம் அவர்களை கேட்டேன். அதற்கிணங்க அவர் நாடகப் பிரதியை மாற்றி எழுதித் தந்தார். எமக்காக அவர் பல சிறுவர் நாடகங்களையும், மொழிபெயர்ப்புகளையும் அப்போது செய்து தந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மீள் தயாரிப்புகளின் போது இந்த மாதிரி மாற்றங்களை நான் நெறிப்படுத்திய எல்லா நாடகங்களிலும் சூழலுக்கும் காலத்திற்கும் தகுந்த மாதிரி அவ்வப்போது புதிதாக மாற்றி அமைப்பது வழமை. அப்போது நாடகங்களுக்கு கூடியளவு ‘தற்காலத்தன்மை’ கிடைக்கிறது. பாடல்களில் மாற்றம் ஏதும் செய்யவில்லை. நாடகத்தின் இறுதிப் பாடலான “ஒரு பயணத்தின் கதையை நீர் கேட்டீரா” பாடல் வரியில் இருந்து “ஒரு பயணத்தின் கதை” என்ற தலைப்பை எடுத்தேன். இந்தத் தயாரிப்பின்போது முகமூடிகளைப் பயன்படுத்தவில்லை. பிரான்ஸ், ஜேர்மனி ஆகிய நாடுகளில் பாடசாலைகளில் இந்த நாடகம் சிறுவர்களுக்கு கற்பிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆங்கிலச் சூழலில் வளரும் 13 வயதுக்கு உட்பட்ட லண்டன் தமிழ் சிறுவர்களைப் பயிற்றுவித்து நாடகத்தை மேடையேற்றினோம். “ஒரு பயணத்தின் கதை” நாடகத்தில் விpயாபாரியாக சாலினி பாலேந்திரா, வேலையாளாக மானசி பாலேந்திரா, வழிகாட்டியாக தயாளினி தனபாலசிங்கம், நீதிபதியாக லக்ஷ்மன் ஸ்ரீகாந்தலிங்கம், சிந்து பசுபதி, கூலியாளின் மனைவியாக ஜெகானி தியாகராஜா, மற்றும் தூயவன் தியாகலிங்கம், ரிவீனா ஜோதிபால் ஆகியோரும் நடித்தனர். இவர்களுக்கு தமிழ் இரண்டாம் மொழிகூட இல்லை.

அண்மையில் நாடக காணொளியை வியாபாரியாக நடித்த சாலினிக்கு அனுப்பியபோது அவர் எனக்கும் மனைவி ஆனந்தராணிக்கும் அனுப்பிய செய்தி இது..

““ Thank you so much Uncle. Watching this back brings so many fond memories of practising under you and Aunty’s mentorship. Cannot believe this was 17 years ago, still so close to my heart and remember the lines still so clearly! Thank you both for the lifetime experience that I have never forgotten!
You both shaped my life into a meaningful one and have never forgot how much that meant to me and still means to me. You gave childhood a story, directing me to great lengths – confidence, moral values, performance perfection and so much more. And the wonderful times I spent at your house with you, Auntie and Maanasi. Like everyone said, you have been like family to all of us. Thank you both of you! Words never enough to say this but you both are so great!”
- Dr Salini Ponn
(SaliniBalendra)26-01-2017

இந்த நாடகத்தில் பங்குபற்றிய சிறுவர்கள் அனைவரும் தற்போது இளைஞர்களாக புலம்பெயர் சமூகத்தில் வைத்தியம், சட்டம், கணக்கியல் போன்ற துறைகளில் நல்ல நிலையில் உள்ளார்கள். நாடகப் பயிற்சி அவர்களது ஆளுமை வளர்ச்சிக்கு பெரிதும் உதவியிருக்கிறது. இவர்கள் என்னுடைய நாடகங்களில் பங்குபற்றிய மூன்றாவது தலைமுறையினர் ஆவர். இவர்கள் சிறுவர்களாக 6 வயதில் எமது நாடகப் பயணத்தில் இணைந்தவர்கள். இவர்களில் சிலர் தற்போது 20 வருடங்களைத் தாண்டியும் எம்மோடு நாடகத்துறையில் பயணிக்கிறார்கள் என்பது மகிழ்ச்சி தரும் செய்தியாகும். 2016 இல் நடந்த எமது வருடாந்த நாடக விழாவில் லண்டனில் வளரும் தமிழ் இளையவர்கள் தாமாகவே தமிழில் “புதிய பயணம்” என்ற நாடகத்தை எழுதி நெறிப்படுத்தி மேடையேற்றியமை எமது வளர்ச்சியின் அடுத்த கட்டமாகும்.

“ஒரு பயணத்தின் கதை” தயாரிப்பின் போது ஆ.ஆவந்தன் இசைக்கு பொறுப்பாக இருந்தார். “யுகதர்மம்” பாரீஸ், கனடா மேடையேற்றங்களின் போது கூலியாளாக இவர் நடித்திருந்தார். இவர் இப்போது லண்டனில் இசையும் பாடல்களும் கலந்த எமது சிறுவர் நாடகங்களில் 20 வருடங்களாக இசைப் பணியாற்றுகிறார்.

“ஒரு பயணத்தின் கதை” என்ற இந்த நாடகத்தின் ஆற்றுகை விபரங்களையும் விமர்சனக் கட்டுரைகளையும் நூலில் இணைத்துள்ளோம்.

மொழிபெயர்ப்பு நாடகங்கள் - சர்ச்சைகள்

அண்மையில் சில தடவைகள் இலங்கை சென்று நாடகம் - அரங்கியலை ஒரு பாடமாகப் படிக்கும் மாணவர்களுடன் நாடகப் பட்டறைகள் நடத்திய பொழுது இளைய தலைமுறையினர் பலரும் மொழிபெயர்ப்பு நாடகங்கள் மட்டுமே நான் செய்துள்ளதாக அறிந்து வைத்துள்ளனர் என்பதனை அவதானித்தேன். அது உண்மை அல்ல. கடந்த 40 ஆண்டுகளில் நான் நெறிப்படுத்திய 68 நாடகங்களில் மொழிபெயர்ப்புகளை விட சுயமொழி ஆக்கங்களே அதிகம். மேலும் தற்போது தொடரும் எமது நாடக முயற்சிகள் பற்றி அவர்கள் அதிகம் அறிந்திருக்கவில்லை.

மொழிபெயர்ப்புகள் எந்த நாட்டிலும் எந்த மொழியிலும் எப்டீபாதும் நடந்து கொண்டே இருக்கும். நடக்கவும் வேண்டும். நான் தற்போது வாழும் லண்டன் நகரில் 2017 இல் மேடையேற இருக்கும் பேர்டோல்ட் பிரெக்ட் எழுதிய “The Resistible Rise of Arturo Ui” என்ற நாடகத்திற்கு நுழைவுச்சீட்டுகள் மேடையேற்றத்திற்கு சில மாதங்களுக்கு முன்பே விற்று முடிந்து விட்டன. இந்த நாடகத்தின் பிறிதொரு தயாரிப்பை சில வருடங்களுக்கு முன் லண்டனில் ஒரு அரங்கில் பார்த்திருக்கிறேன். இப்படியாக லண்டனில் வேற்று மொழி நாடகங்கள் தொடர்ந்து மேடையேற்றப்பட்டு வருகின்றன. இப்சன், செக்கோவ் போன்ற நாடகாசிரியர்களின் பல வேற்று மொழி நாடகங்கள் தொடர்ந்து புதிது புதிதாக ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு மேடையேறிக் கொண்டுதான் உள்ளன. ஆனால் எழுபதுகளில் இலங்கையில் தமிழில் நாம் மேற்கொண்ட மொழிபெயர்ப்பு முயற்சிகளை ஒரு அணியினர் புறக்கணிக்க முற்பட்டார்கள். ஆனால் மொழிபெயர்ப்புகள் எப்பொழுதும் எந்த மொழிக்கும் வளம் சேர்ப்பவையே.

தமிழ் உயர் கல்விச் சமூகத்தின் ;குழு’ மனப்பான்மை ஈழத் தமிழர் கலை இலக்கியப் பரப்பில் கோலோச்சிய காலம் அது. ஒரு ஆதிக்க சக்தியாக அது இருந்தது. ஆதிக்க சக்திகளே வரலாற்றை நிர்ணயிக்கின்றன போலும். இவர்களின் மார்க்ஸிய முற்போக்கு அணியை சாராதவர்களை புறக்கணிக்கும் போக்கே மேலோங்கி இருந்தது. உற்சாகமாக, அர்ப்பணிப்புடன் தமிழ் நாடகத்தின் பன்முகத் தன்மைக்கு உழைத்த இளம் தலைமுறையினரின் நாடகச் செயற்பாடுகளை மழுங்கடிக்க முயன்ற செயல் அது.

“யுகதர்மம்” நாடகத்தைத் தொடர்ந்து மொழிபெயர்ப்பு நாடகங்கள் பற்றிய விவாதங்கள் தமிழிலும் ஆங்கிலத்திலும் 1980இல் மிக உக்கிரமாக நடைபெற்றன. இளம் தலைமுறையினர் எண்பதுகளில் நிகழ்ந்த இந்த விவாதங்களை அறிந்திருப்பது அவசியம். தினகரன் பத்திரிகையிலும், அலை, லங்கா கார்டியன் ஆகிய சஞ்சிகைகளிலும் இடம் பெற்ற இந்த விவாதங்களுக்கு எனது நாடக முயற்சிகளும், குறிப்பாக “யுகதர்மம்” நாடகமுமே முக்கிய கருப் பொருளாக அமைந்தன. இந்த விவாதங்களில் பேராசிரியர் க. கைலாசபதி, கே.எஸ். சிவகுமாரன், பேராசிரியர் என். சண்முகரட்ணம் (சமுத்திரன்) பேராசிரியர் சி. சிவசேகரம், ஏ.ஜே. கனகரத்தினா, அ. யேசுராசா, பேராசிரியர் எம். ஏ. நுஹ்மான், க. பாலேந்திரா, நா. சுந்தரலிங்கம், ரெஜி சிறிவர்த்தனா ஆகியோர் பங்குபற்றினர். இவர்களில் பேராசிரியர் சி. சிவசேகரம், ஏ.ஜே.கனகரத்தினா, அ. யேசுராசா, ரெஜி சிறிவர்த்தனா ஆகியோர் மொழிபெயர்ப்புகளுக்கு ஆதரவாக கருத்துத் தெரிவித்தனர். எமது முயற்சிகளை உருவவாதம் என்று வரலாற்றைத் திரிபுபடுத்தும் முன்னையவர்களின் நோக்கினை எதிர்த்தும் இவர்கள் வாதிட்டனர். கவிதை, கதை, நாவல்களில் மொழிபெயர்ப்புகளை ஏற்றுக்கொள்ளும்போது நாடகங்களில் மொழிபெயர்ப்புகளை ஏன் புறக்கணிக்க வேண்டும் என்றும் எமக்கு ஆதரவாக குரல் கொடுத்தனர்.

இந்த விவாதங்களைத் தொடக்கி வைத்த பேராசிரியர். க. கைலாசபதி அவர்கள் எமது நாடகங்கள் பலதையும் பார்க்காமலேயே எழுதியுள்ளார் என்பது மிகக் கவலைக்குரியது. நாடக ஆற்றுகைகள் ஒரு நிகழ்ச்சியாகவே நடந்து முடிந்து விடும் தன்மையுடையன. அவற்றின் பதிவுகள்தான் அவை பற்றிய விபரங்களை அடுத்த சந்ததியினருக்கு எடுத்து செல்ல முடியும். அந்த வகையில் வரலாறு எழுதுபவர்கள் பொறுப்புணர்ச்சியுடன் செயலாற்ற வேண்டிய தேவையுண்டு. அவரது மேற்படி கட்டுரையை விரிவுபடுத்தி “நாடகம் நான்கு” நூலின் முன்னுரையாக மே 1980 இல் வெளியிட்டார். இக் கட்டுரை “ஈழத்து நாடக வரலாறு – சில படிகள்” என்ற தலைப்பில் விபவி அமைப்பின் “அரங்கின் பரிமாணங்கள்” என்ற நூலிலும் பிரசுரிக்கப்பட்டுள்ளது. இதனது அடிப்படையிலேயே ஈழத்தமிழ் நாடக வரலாறு தற்போதும் பார்க்கப்படுவது வேதனைக்குரியது. அவரது கட்டுரையில் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்.

“..தற்சமயம் மேனாட்டு நாடகங்களை மொழி பெயர்த்து மேடையேற்றுவதே முனைப்பான போக்காகக் காணப்படுகிறது. இது விவாதத்துக்கு உரியது. …அணுச்சக்தி உலையிலிருந்து ஆட்டாமா ஆலை வரையில் பொறியியல் நுணுக்கங்களையும் தொழில் நுட்ப நிபுணத்துவத்தையும் கீழைத்தேயங்களுக்கு – வளர்முக நாடுகளுக்கு வழங்கும் தகுதி வாய்ந்தனவாய்க் கருதப்படும் நவீன கைத்தொழில் நாடுகளில் இருந்து கலை நுணுக்கங்களும் வந்து புகுவதில் வியப்பென்ன இருக்கின்றது? குடியேற்றவாதத்தின் மீதமிச்சங்களில் இதுவும் ஒன்று போலும்!.. மொழிபெயர்ப்புகளும், தழுவல்களும் தற்காலிகமான கவர்ச்சியை உண்டுபண்ணக்கூடுமாயினும், நாளடைவில் உறுதியான பங்களிப்பைச் செய்யமாட்டா. இன்று இது முக்கியமாக மனங்கொள்ள வேண்டியதான்றாகும்." - பேராசிரியர் க. கைலாசபதி, தினகரன் 23-03-1980

1968இல் தமிழ் அரங்கம் பற்றி அமரர் எஸ். சிவநாயகம் ஆங்கிலத்தில் எழுதிய கட்டுரை பற்றி அமரர் பேராசிரியர் க. கைலாசபதி அவர்கள் மேற்குறிப்பிட்ட கட்டுரையில் சிலாகித்துக் கூறியுள்ளார். “பரத நாட்டியம், நாடகம் ஆகிய கலைகளை உன்னிப்பாய்க் கவனித்து அவ்வப்போது தீட்சண்யமான கருத்துகளைக் கூறி வரும் இரசிகரும் விமர்சகருமான “அர்ஜீனா” (எஸ். சிவநாயகம்) என்று, பேராசிரியர் க. கைலாசபதி இந்தக் கட்டுரையில் அவரைப் பற்றி புகழ்ந்து குறிப்பிட்டுள்ளார். திரு. சிவநாயகம் அவர்கள் இலங்கையில் “Saturday Review” ” மற்றும் லண்டனில் “Hot Spring” ஆகிய பிரசுரங்களின் ஆசிரியராக இருந்தவர். 1960களில் இருந்து ஈழத்து தமிழ் நாடகங்களை அவதானித்து வந்தவர். அவர் 1980இலும் 1998இலும் எழுதிய இரு கட்டுரைகளில் பின்வருமாறு குறிப்பிடுகிறார்.

“In the near cross-roads Tamil drama finds itself today, there is in fact a great need for more and more translations: after all what we have is a producer’s theatre, not a playwright’s one. Even Tarcisius and Suntharlingam cannot claim the status of literature for their scripts” - S Sivanayagam, “Tamil Drama at the Crossroads”
The Sunday Times 16-03-1980

“ The avant garde Tamil theatre movement which saw birth in Jaffna, but found expression in Colombo in mid-70s, has now come of age, interestingly enough, in the Tamil expatriate world of the West! Although there were a few other talented pioneer producers too on the Colombo stage – the credit for sustaining the modern stage tradition, and carrying it from East to West and from country to country goes to K. Balendra and the Tamil Performing Arts Society.” -S Sivanayagam “Hot Spring” December 1998

எமது “ஒரு பாலை வீடு” நாடகம் கொழும்பு புதிய கதிரேசன் மண்டபத்தில் 02-03-1980ல் மேடையேறியபோது, பிரபல விமர்சகர் திரு. கே. எஸ். சிவகுமாரன் எழுதிய பதிவின் சில பகுதிகளை கீழே தருகிறோம். திரு. கே. எஸ். சிவகுமாரன் அவர்கள் அனைத்து நிகழ்வுகளையும் பார்த்து, தமிழிலும் ஆங்கிலத்திலும் மிக நீண்ட காலமாக விமர்சனப் பதிவுகளை மேற்கொள்ளும் ஒருவர். தற்போது கொழும்பில் வசித்து வருகிறார்.

“ மேனாட்டு இலக்கியம் என்பதற்காக, துடக்கு மனப்பான்மை கொள்வதோ, தற்காலச் சூழலுக்குப் பொருத்தமோ என்பதில்தான் நாம் அக்கறை கொண்டு வந்திருக்கிறோம். ஆனால் அப்பிறநாட்டு இலக்கியங்கள் தரும் சுவையனுபவத்தைப் பகிர்ந்து கொண்டு பின்னர் மதிப்பீடு செய்து, தள்ளுவதைத் தள்ளிக் கொள்ளுவதைக் கொள்ளு முன்னரே, குழு மனப்பான்மை வந்து மட்டந்தட்டும் முயற்சிகளில் ஈடுபடுகிறோம்.
….கெட்டிக்காரத்தனத்தை இருட்டடிப்புச் செய்தாலும், அது எல்லாத் தடைகளையும் மீறி ஒளிவிடத்தான் செய்யும்”. கே. எஸ். சிவகுமாரன், தினகரன் 09-03-1980

“ Extended frontiers of Tamil drama” என்ற எம்மைப் பற்றிய ஒரு ஆங்கிலக் கட்டுரையில் கே. எஸ். சிவகுமாரன் மேலும் இவ்வாறு எழுதியுள்ளார்.
“K. Balendra, an enthusiastic young man shows tremendous potential both as an actor and a producer. With the frontiers of Tamil drama extending thematically and structurally, one hopes for further development in the field.” K. S. Sivakumaran, Daily News 23-03-1980

நாடகங்களை நேரில் வந்து திறந்த மனதுடன் பார்த்த விமர்சகர்களின் கருத்துகள் மொழிபெயர்ப்புகளுக்கு ஆதரவாகவே இருந்தன. அனேகமான கட்டுரைகள் எம்மிடம் உள்ளன. அரங்கியல் மாணவர்கள் அறிந்து கொள்ளும் முகமாக இவற்றை முழுமையாக இனிவரும் காலங்களில் பதிவு செய்யவுள்ளோம்.

நாடக இயக்கத்தில் தன்னார்வத் தொண்டர்கள் - ஒரு குடும்பமாக ஒரு அரங்க நிகழ்வை பெரிய அரங்குகளில், திட்டமிட்டு ஒரு குறிப்பிட்ட தினத்தில் நடத்தி முடிப்பது இலகுவான காரியமல்ல. திறமையுள்ள பலரது கூட்டுழைப்பு தேவை. பல்கலை அறிவும், தொழில்நுட்ப அறிவும், நிர்வாகத்திறனும் கூட வேண்டப்படுகிறது. மனிதர்களை இணைத்து செயற்படும் பண்பும் வேண்டும்.

இலங்கையில் “யுகதர்மம்” நாடகத்தில் பங்குகொண்ட நடிகர்கள், பாடகர்கள், தொழில்நுட்பவியலாளர்கள் எல்லோரும் தன்னார்வத் தொண்டர்களாகவே, நாடக முயற்சிகளுக்கு உதவினர். அதகால் பெரிய ஸ்தாபனங்களின் நிதி உதவி பெறாமல் சுயாதீனமாக இயங்க முடிந்தது. அவர்கள் அனைவரையும் நன்றியோடு நினைவு கூருகிறேன்.

ஈழத் தமிழ் நாடகச் சூழலில், 1978இலிருந்து இன்றுவரை தொடர்ச்சி அறுபடாமல் இயங்கும் அரங்க அமைப்பான அவைக்காற்று கலைக் கழகத்தில் பல நூற்றுக்கணக்கானோர் பணியாற்றியுள்ளனர். அவரவர் வசதிக்கேற்ப, ஒரு சிலர் சில நாட்கள், சிலர் மாதங்கள், சிலர் வருடங்கள். எல்லோருக்குமே நாடகப் பணியில் பங்குண்டு. அவர்கள் உரிமை கோரவும் முடியும். செயலாற்றுவதற்கு சட்ட திட்டங்கள் எதுவுமில்லாமல், திறந்த புத்தகம் போலவே பரஸ்பர புரிந்துணர்வுடன் இத்தனை ஆண்டுகள் தொடர்ச்சியாக இயங்கி வந்துள்ளது. ஆரம்பத்தில் இருந்து இன்றுவரை தொடர்ந்து நானும் ஆனந்தராணியும் பணியாற்றி வருகிறோம். மா. சத்தியமூர்த்தி, பா. சத்தியேந்திரன், மனோ மனுவேற்பிள்ளை, ச. வாசுதேவன், விஜயகுமாரி பரமகுமரன், ஆ. வேந்தன், தர்சினி, சிவசுதன் போன்றவர்கள் சுமார் 25 வருடங்களைக் கடந்தும் தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் லண்டனில் பணியாற்றி வருகிறார்கள். துஷி தனு சகோதரிகள், ரமேஷ் கந்தசாமி, ச. கணேசலிங்கம், ம. சுதாகரன், சஞ்சீவ்ராஜ், சோ. குமரகுரு, சுகுணசபேசன் ஆகியோரும் பல வருடங்களாக அதே அர்ப்பணிப்புடன் செயலாற்றி வருகிறார்கள். தற்போது இளையவர்களையும் இணைத்துக் கொண்டு பயணத்தைத் தொடர்கிறோம். லண்டனில் எமது சிறுவர் நாடகங்களில் நடித்த பலர் தற்போது இளைஞர்களாக தொடர்ந்தும் எமது நாடக செயற்பாடுகளில் ஆர்வத்துடன் பங்குபற்றி வருகிறார்கள். இது எமக்கு மேலதிக பலமாகும். எல்லோரும் ஒரு குடும்பமாகவே செயற்படுகிறோம்.

இன்றும் லண்டனில் தமிழ் அவைக்காற்று கலைக் கழக நாடகங்களில் பணியாற்றும் அனைவருமே தன்னார்வத் தொண்டர்களாகவே இருக்கின்றார்கள். இதனால் நாம் தொடர்ந்து சுயாதீனமாக நான்கு தசாப்தங்களாக எந்த ஒரு அணியிலும் சேராமல் உயிர்ப்புடன் இயங்க முடிகிறது. இவர்களுக்கு எனது மனப்பூர்வமான நன்றி.

ஒரு பெரு விருட்சமாக பல்வேறு நாடுகளில் நண்பர்களைக் கொண்டிருக்கிறோம். அதனால்தான் உலகின் பல பாகங்களிலும் நாம் ஆற்றுகைகளை நிகழ்த்த முடிந்திருக்கிறது. கனடாவில் ப. ஸ்ரீஸ்கந்தன், நா. சாந்திநாதன், மனவெளி ஆற்றுகைக் குழு, நோர்வேயில் தே. ஸ்ரீதேவா, ஒஸ்ரேலியாவில் ராஜேந்திரன், குணசிங்கம், பாரிஸில் கலைச்செல்வன், லக்ஷ்மி, சுவிஸில் கணபதிப்பிள்ளை போன்றவர்கள் பெரும்பாலும் தனிமனிதர்களாகவே அந்தந்த நாடுகளில் நாடக விழாக்களை ஒழுங்கு செய்தனர். இவர்களில் கனடா ப. ஸ்ரீஸ்கந்தன் அவர்களது குறிப்புகள் இந் நூலில் இடம்பெறுவது மகிழ்ச்சி.

2010 இல் சென்னையில் “கூத்துப் பட்டறை” நாடக ஆளுமை ந. முத்துசாமி, “மூன்றாம் அரங்கு” கருணபிரசாத், ஆகியோர் எமது நாடக விழாவை நடத்த உதவினர். 2013 இல் லண்டனில் இருந்து இலங்கை சென்று நாடக விழாக்களை நடத்தினோம். இதற்கு வண.பிதா. மரியசேவியர், ஜோன்சன் ராஜ்குமார் தலைமையில் திருமறைக்கலாமன்றம், சோ. தேவராஜா, சி. சிவசேகரம் ஆகியோரின் முன்னெடுப்பில் தேசிய கலை இலக்கியப் பேரவை, சப்தமி கலையகம் - முரளி, கொழும்பு தமிழ்ச் சங்கம் ஆகிய அமைப்புக்கள் உதவின. லண்டனிலும் மற்றைய நாடுகளிலும் நடந்த நாடக விழா விபரங்களை அனுபந்தத்தில் பார்க்கலாம்.

தமிழக நாடக ஆளுமை பேராசிரியர் இந்திரா பார்த்தசாரதி அவர்கள் எமது சுவிஸ் நாடக விழாவில் ஒரு வாரம் எம்முடன் பங்குபற்றிச் சிறப்பித்தார். இவர் எழுதிய ‘மழை’, ;பசி’, ‘சூறாவளி’ ஆகிய நாடகங்களை நான் நெறிப்படுத்தியுள்ளேன். அவ்வப்போது எமது நாடக விழாக்களை வாழ்த்தி வரும் அவர் எமது நன்றிக்குரியவர். “ஒரு தமிழ் நாடக இயக்கம் அயல் நாட்டில் 25 ஆண்டுகளாக தமிழ் நாடக விழா நடத்தி வருவது ஒரு மாபெரும் சாதனை. வாழ்த்துக்கள். தமிழ் நாட்டிலும் இவ்வாறு நடந்ததாக வரலாறு இல்லை. கலந்து கொள்ள விழைவு.But the spirit is willing and the flesh is weak”

இலங்கையில் இருந்த ஆவணங்கள் பலவற்றை புலம் பெயர்ந்த தேசங்களில் பேணிப் பாதுகாத்து வருகிறேன். நாடக ஆற்றுகைகளிலேயே எமது முழுக்கவனமும் இருந்தது. இவற்றை நூலாக்கும் முயற்சியில் தற்போதுதான் ஈடுபடுகிறோம். விடுபட்டவைகளை இலங்கையிலிருந்து தேடி எடுக்கும் பணி கடினமானது. இலங்கையில் பேராதனை பல்கலைக்கழகத்தில் தத்துவத்துறை விரிவுரையாளராக இருக்கும் எனது தங்கை மல்லிகாவும், தினகரன் பத்திரிகை ஆசிரியர் செந்தில்வேலவரும், அங்கு பணியிலிருக்கும் வாசுகியும் இதற்கு உதவினர். இந்தப் பணி இன்னும் முழுமையடையவில்லை.

யாழ் பல்கலைக்கழகத்தில் நுண்கலை, நாடகத் துறையில் விரிவுரையாளராக இருக்கும் நவதர்சினி கருணாகரன் தனது மாணவர்கள் நிதர்சன், சுமலதா ஆகிய இருவரைக் கொண்டு 2009-2010 காலப் பகுதியில் எமது முயற்சிகளை ஆவணப்படுத்தியுள்ளார். ஆற்றுகைகளில் கவனம் செலுத்தும்போது ஆவணப்படுத்தல் விடுபட்டுப் போய்விடுகிறது. நாடகப் பிரதிகளை நூலாக்க வேண்டும் என்ற இவரது தூண்டுதலும் எனக்கு ஊக்கியாக செயற்படுகிறது. இவர்களுக்கு எனது நன்றி.

“கண்ணாடி வார்ப்புகள்” (2013) நூல் வெளியீட்டைத் தொடர்ந்து இரண்டாவதாக இந்நூல் வெளியாகிறது. வரலாற்று முக்கியத்துவம் கருதி முதலாவதாக ஆற்றுகைக்குப் பயன்படுத்தப்பட்ட “யுகதர்மம்” பிரதியே அச்சுக்கு வருகிறது.

இந்நூலுக்கு முன்னுரை வழங்கிய எனக்கு அடுத்த தலைமுறையைச் சேர்ந்த கலாநிதி சி. ஜெயசங்கருக்கும் நூலாக்கத்திற்கு உதவிய ப. ஸ்ரீஸ்கந்தன் மற்றும் பல வழிகளிலும் உதவிய பலருக்கும், பிரசுரித்து உதவிய குமரன் புத்தக இல்லத்திற்கும் எனது நன்றி.

நன்றி: இயக்குநர் க.பாலேந்திராவின் முகநூற் பக்கம்