அந்தக் குழந்தைகள் தப்பியது , தொடர்ந்து 40 நாட்கள் நச்சரவங்கள், கொல்மிருகங்கள் மலிந்த காட்டில் உயிர் பிழைத்தது நாம் நேரில் காணும் அற்புதம். குழந்தைகளின் துணிவு, விடாமுயற்சி, நம்பிக்கை இவையெல்லாம் வியக்கத்தக்கவை. அவர்கள் எதிர்கால வாழ்க்கை வளம், நலம் மிகுந்து சிறக்கட்டும்

ஜூன் 14 சேகுவேரா பிறந்ததினம்.   இலங்கையில் ஜேவிபியினரின் முதற்புரட்சி நடைபெற்றபோது அவர்களைச் சேகுவாராக்கள் என்றுதான் மக்கள் அழைத்தனர். அப்பொழுதுதான் முதன் முதலாக இப்பெயரை அறிந்துகொண்டேன். அப்பொழுதுகூட  எர்னெஸ்டோ குவேரா டி லா செர்னா (Ernesto Guevara de la Serna) என்னும் சேகுவேரா (Che Guevara) பற்றி எதுவுமே அறிந்திருக்கவேயில்லை.

பல ஆண்டுகளின் பின்னரே மார்க்சியம் பற்றி அறிந்தபோது, கியூபா பற்றி அறிந்தபோது சேகுவேரா பற்றியும் அறிந்துகொண்டேன். மருத்துவர், எழுத்தாளர், மானுட விடுதலைப்போராளி எனப் பன்முக ஆளுமைமிக்கவர் சேகுவேரா. மானுட விடுதலைப்போராளியான இவர் அப்போராட்டத்திலேயே தன்னுயிரை இழந்தார்.

அவர் ஒரு மருத்துவர். நினைத்திருந்தால் மிகவும் வளமான, செல்வச் செழிப்பான வாழ்வொன்றை வாழ்ந்திருக்கலாம். ஆனால் அவர் அவ்விதம் வாழவில்லை. ஏன்? வர்க்கங்களாகப் பிளவுபட்டிருக்கும் மானுட சமுதாயத்தில் , வாடும் மக்களின் துயரைத் தீர்க்க நினைத்தார். நினைத்து வாழ்ந்தார். அதற்காகவே தன்னுயிரையும் ஈந்தார். அவர் ஒரு மகா மனிதன்.

'சே' என்றால் உலகம் முழுவதும் அடக்குமுறைகளுக்கெதிராகப் போராடும் மக்களைப் பொறுத்தவரையில் 'தோழமை'க்கான  ஒரு குறியீடும் கூட.  அவர் எப்பொழுதும் அம்மக்களின் தோழனாகவிருப்பார்.