இலங்கையின் பெண் சட்டத்தரணிகளில் ஒருவரான  சுவஸ்திகா அருள்லிங்கம் விடுதலைப்புலிகளைப் பாஸிஸ்டுகள் என்று கூறியதற்காக , நீதித்துறை பற்றி  அவர் ஆற்றவிருந்த உரையினை யாழ் பல்கலைக்கழக நிர்வாகம் நீக்கியுள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. தற்போது தமிழர் அரசியலில் இருக்கும் சகல முன்னாள் ஆயுத அமைப்புகளும் விடுதலைப்புலிகளுடன் முரண்பாடுகள் நிலவிய காலகட்டத்தில் விடுதலைப்புலிகளைப் பாசிஸ்டுகள் என்றே கூறி வந்தனர். பதிலுக்கு விடுதலைப்புலிகளும் எதிரான அமைப்புகளைத் துரோகிகள், ஒட்டுக்குழுக்கள் என்றே கூறி வந்தனர்.

விடுதலைப்புலிகளைப் பாஸிஸ்டுகள் என்று விமர்சித்ததற்காக யாழ் பல்கலைக்கழக மாணவர்களில் பலர் சட்டத்தரணி  சுவஸ்திகா அருள்லிங்கத்தை  எதிர்க்கலாம். அதற்குப்பதிலாக மாணவர்கள் மாற்றுக் கருத்தினை முன் வைக்கலாம், அது அவர்களது உரிமை. ஆனால் அதற்காக யாழ் பல்கலைக்கழக நிர்வாகம் மேற்படி உரையினைத் தடுத்திருப்பது சரியான செயலா? என்னைப்பொறுத்தவரையில் பல்கலைக்கழகம் பல்வேறு அரசியல் கோட்பாடுகள் பற்றியும் மாணவர்கள் கற்குமொரு கல்விக்கூடம். மார்க்சியம், சோசலிசம், நாசிசம், சியோனிசம், ஃபாசிசம் ,, என்று பல்வேறு வகையான அரசியல் கருத்து நிலைகள் உள்ளதை நாம் அறிவோம். இவற்றைப்பற்றிக் கற்கும்போது காய்தல் உவத்தலற்றுக் கற்கும் இருப்பிடமாக இயங்கவேண்டியது பல்கலைக்கழகமொன்றின் கடமையாகும். பல்வேறு  வகையான அரசியல் கோட்பாடுகளையும் கற்று, அறிந்து அவற்றின் அடிப்படையில் அரசியல் அமைப்புகளை, விடுதலை அமைப்புகளை விமர்சனங்களுக்கு உள்ளாக்க வேண்டும். அவ்விமர்சனங்களின் அடிப்படையில் முடிவுகளுக்கு வர வேண்டும்.

சட்டத்தரணி   சுவஸ்திகா அருள்லிங்கத்தின் விடுதலைப்புலிகள் பற்றிய கருத்துகள் தவறென்றால் அவை ஏன் தவறு என்பதை அவரிடமே நேரில் எடுத்துரைக்கும் சந்தர்ப்பத்தினை மாணவர்கள் இழந்திருக்கின்றார்கள்.  மாணவர்கள் உணர்ச்சிவசப்பட்டதால் பல்கலைக்கழக நிர்வாகம் உரையினை அங்கு நடத்த முடியாத முடிவை எடுத்தது என்றால் அது  தவறானதொரு நிலைப்பாடு.

விடுதலைப்புலிகள் அமைப்பைப்பொறுத்தவரை அது ஒரு தலைவன் கீழான ஓர் அமைப்பாகவே இறுதி வரை இருந்து வந்தது. முள்ளிவாய்க்காலில்  நிகழ்ந்த  முக்கிய தலைவர்களின் மறைவு வரை அந்த அமைப்பு இந்நடைமுறையிலிருந்து பின்வாங்கவில்லை. ஒரு சிலரைத்தவிர முக்கிய தலைவர்கள் அனைவரும் தம் தலைவனுடன் இறுதிவரை இருந்தே மடித்துள்ளனர். அதற்கு முக்கிய காரணங்களில் ஒன்று ஒரு தலைவனுக்கு விசுவாசமாக இருந்து, இறுதிவரை அவனுடன் இருப்பது என்று அவர்கள் எடுத்த உறுதிமொழியும், அதை இறுதிவரை கடைப்பிடித்த உறுதியும்தான். இந்தக் கட்டுக்கோப்ப்பு ஏனைய அமைப்புகளிடம் இருக்கவில்லை. ஆனால் இவ்விதமான கட்டுக்கோப்பு மிக்க அமைப்பு இன்று தமிழர் அரசியலில் இல்லை. ஆனால் அவர்களை வைத்து உயிர்வாழும் நிலையில் விடுதலைப்புலிகள் போன்ற உறுதியான கட்டுப்பாடுகள் அற்றிருந்த ஏனைய அமைப்புகள் இன்றும் தமிழர்தம் அரசியலில் உள்ளன.

இந்நிலையில் ஒரு கேள்வி எழுகின்றது? விடுதலைப்புலிகள் அமைப்பு எவ்விதமாகக் கட்டமைக்கப்பட்டிருந்தது? அவ்விதம் கட்டமைக்கப்பட்டிருந்ததை ஃபாசிசக் கட்டமைப்பு என்று கூறலாமா?  இன்றுள்ள நிலையில் அரசியல்ரீதியில் ஆய்வுக்குரியது. இன்று நிலவும் பாராளுமன்ற அரசியலில் இருக்கும் பல்வகை கட்சிகளும் ஒரு தலைவரை மையமாகக் கொண்டு இயங்குகின்றன. அதற்காக அவற்றைப் பொதுவாக ஃபாசிசக் கட்சிகள் என்று கூறி விடமுடியாது. அதுபோல் விடுதலைப்புலிகளையும் கூறிவிடமுடியாது. அவ்விதமானதொரு முடிவுக்கு வருவதற்கு முன் , விடுதலைப்புலிகளின் அமைப்பு, அதன் தலைவர்கள்,அதன் உறுப்பினர்கள், அதன் ஆயுதப்போராட்டப் போராளிகள், மக்கள் அமைப்புகள், அமைப்பின் பல்வேறு படிநிலைகளும் எவ்விதம் செயற்பட்டன, எவ்விதம் தீர்மானங்கள் எடுக்கப்பட்டன, அமைப்பினுள் மாற்றுக் கருத்துகள் எவ்விதம் எதிர்கொள்ளப்பட்டன எனப் பல்வேறு விடயங்கள் கவனத்திலெடுக்கப்பட வேண்டும்.   இதுவரையில் விடுதலைப்புலிகள்  அமைப்பைச் சேர்ந்த போராளிகளில் தமிழினி ஜெயக்குமரனின் 'ஒரு கூர்வாளில் நிழலில் ' மட்டுமே ஓரளவு இது பற்றிப் பேசியுள்ளது. விரிவான ஆய்வுகள் வெளிவந்ததாகத் தெரியவில்லை.

தமிழ் மக்களின் ஆயுதப் போராட்டமானது மெளனிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போதுள்ள சூழலில் அனைத்து ஆயுதப் போராட்ட அமைப்புகள் பற்றியும், அனைத்துத் தமிழர் அரசியல் அமைப்புகள் பற்றியும் காய்தல் உவத்தலற்று ஆய்வுகள், சுய ஆய்வுகள் செய்யப்பட வேண்டியது அவசியம். அதற்குச் சரியானவை பல்கலைக்கழக ஆய்வுகள்தாம். இந்நிலையில் யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் அறிவுக் கண் கொண்டு இப்பிரச்சனையை அணுகியிருக்க வேண்டும். உணர்ச்சிக்கண் கொண்டு அல்ல.