சமூக, அரசியற் செயற்பாட்டாளர் ராஜனி திரணகமவின் நினைவு தினம் செப்டம்பர் 21!

சமூக, அரசியற் செயற்பாட்டாளரும், உடற் கூற்றியல் விரிவுரையாளரும், 'முறிந்த பனை' நூலின் ஆசிரியர்களில் ஒருவருமான ராஜனி திரணகமவின் நினைவுதினம் செப்டம்பர் 21. அவர் நினைவாக அவரைப்பற்றிக் கனடிய அரச திரைப்படக் கூட்டுத்தாபனத்தயாரிப்பான   No More Tears Sister: Anatomy of Hope and Betrayal (2004) என்னும் இத்திரைப்படத்தைப் பகிர்ந்துகொள்கின்றேன்.

கனடாத்தேசியத் திரைப்படக்கூட்டுத்தாபனத்தின் வெளியீடாக  சுயாதீனத் திரைப்படத்தயாரிப்பாளர் ஹெலென் கிளோடாவ்ஸ்கி (Helene Klodawsky) எழுதி, இயக்கிய ஆவணத்திரைப்படமே No More Tears Sister: Anatomy of Hope and Betrayal (2004) என்னும் ஆவணத்திரைப்படம். மனித உரிமைப்போராட்டச் செயற்பாட்டாளரும், மருத்துவ  உடற் கூற்றியல் விரிவுரையாளராகவுமிருந்த ராஜனி திரணகம பற்றிய ஆவணத்திரைப்படமிது.   இவர் மனித உரிமைகளுக்கான யாழ் பல்கலைக்கழக  ஆசிரியர் சங்கத்தின்  ஸ்தாபர்களில் ஒருவர். ஏனையவர்கள் :  ராஜன் ஹூல், சிறிதரன், தயா சோமசுந்தரம். அவர்களுடன் இணைந்து 'The Broken Palmyra' ('முறிந்த பனை') என்னும் ஆவண நூலை எழுதி வெளியிட்டார்.

இவரது  கணவர்  தயாபால திரணகம களனிப் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராகப் பணியாற்றியவர். அவர் 1971இல் நடைபெற்ற ஜேவிபியினரின் அரசுக்கெதிரான புரட்சியில் பங்குபற்றியதற்காகக் கைது செய்யப்பட்டு வெலிக்கடையில் சிறை வைக்கப்பட்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இவர்களுக்கு நர்மதா,  ஷரிகா என்னும் பெண் குழந்தைகளுள்ளனர். இவர் சமூக, அரசியல் செயற்பாட்டாளரும், நாடகத்துறைக் கலைஞரும், மொழிபெயர்ப்பாளருமான நிர்மலா ராகவன், சமூக, பெண்ணியற் செயற்பாட்டளாரான பேராசிரியர் சுமதி சிவமோகன் ஆகியோரின் சகோதரி. இவருக்கு மேலுமிரு சகோதரிகள் உள்ளனர்.இவரது தந்தையார் யாழ்ப்பாணக் கல்லூரி அதிபராகவிருந்த ராஜசிங்கம்.

இவ்வாவணத்திரைப்படத்தில் ராஜனியாக நடித்திருப்பவர் அவரது மகள் ஷரிகா திரணகம. இதற்குக் குரல் கொடுத்திருப்பவர் பிரபல ஆங்கில நாவலாசிரியரும், புக்கர் விருதினைப் பெற்றவருமான மைக்கல் ஒந்தாச்சி.

ஆவணத்திரைப்படத்தைப் பார்க்க: No More Tears - Anatomy of Hope and Betrayal