*ஓவியம் AI

அத்தியாயம் ஒன்று - தழுவல் பற்றிய தர்க்கமொன்று!

இருண்டிருக்கின்றது. வீட்டின் முற்றத்தில் சாய்வு நாற்காலியில் அமர்ந்தவாறு மேலே விரிந்து கிடக்கும் விண்ணைப் பார்த்தவாறிருக்கின்றேன். இத்தனை வருடங்களில் எத்தனை தடவைகள் இவ்விதம் பார்த்திருப்பேன். ஒரு முறையேனும் அலுக்காத, சலிப்படைய வைக்காத  ஒன்றென்று இருக்குமென்றால் , என்னைப்பொறுத்தவரையில் அது இதுதான். இவ்விதம் விரிந்து கிடக்கும் பேரண்டத்தை பார்த்தபடி, சிந்தனையில் ஆழ்ந்தபடி , மெய்ம்மறந்து இருப்பதைப்போல் வேறோர் இன்பம்  எதுவும் இல்லையென்பேன். வழக்கம்போல் சிந்தனை நதி பெருவெள்ளமாகச் சீறிப்பாய்கின்றது. எதற்காக? எதற்காக? எதற்காக? அர்த்தமென்ன? ஏன்? ஏன்? ஏன்?  இதற்கு, இந்த வினாவுக்கு ஒருபோதுமே விடை கிடைக்கப்போவதில்லை. விடை கிடைக்காத வினா என்பது தெரிந்துதானிருக்கின்றது. இருந்தாலும் வினாக்கள் எழாமல் இருப்பதில்லை.  சிந்தித்தலென்னும் செயல் இருக்கும் வரையில் , அதற்கு ஒருபோதுமே முடிவில்லை. 

கோடி,கோடிக் கணக்கில் கொட்டிக் கிடக்கும் , என்ணற்ற சுடர்களில் மனது மூழ்கிப்போய்க் கிடக்கின்றது. அத்தனையும் சுடர்களா? அவற்றில் கோடிக்கணக்கில் சுடர்களைக் கொண்ட நட்சத்திரக் கூட்டங்களும் இருக்கலாம். இருக்கும். ஆயிரக்கணக்கான, மில்லியன் கணக்கான, பில்லியன் கணக்கான ஒளியாண்டுத் தொலைவுகள் பிரமிக்க வைக்கின்றன. ஏன்! எதற்காக? ஏன்? 

இவ்விதமான  சமயங்களில் எனக்குத் துணையாக ,மனோரஞ்சிதமும் வந்து விடுவாள். வந்தாள். வந்தவள் என்னுடன் நெருக்கியபடி, அருகில் தோளணைத்தாள். விண்ணைப்பார்த்தாள். விண்ணில் கொட்டிக்கிடக்கும் நட்சத்திரக் கூட்டங்களைப் பார்த்தாள். அப்பொழுது  அவள் 'ஷாம்பு' போட்டு, முழுகி வந்திருந்தாள். ஷாம்பு மணம் நாசியில் மெல்ல நுழைந்தது. என் கன்னத்தை ஒரு முறை செல்லமாகத்  தட்டினாள்.  அவளை ஒரு கணம் உற்று நோக்கினேன். இவள் மட்டும் துணையாக இல்லையென்றால்.. அவளற்ற இருப்பை ஒரு கணம் மனம் எண்ணிப்பார்த்தது. என் எண்ண ஓட்டத்தை அவள் புரிந்து கொண்டாள் என்பதை உணர்ந்தேன். சில விடயங்களை உள்ளுணர்வு மூலம் உணர முடிகின்றது. உள்ளுணர்வு மூலம் இவ்விதம் உணர முடிவதற்கு அடிப்படைக் காரணம் என்னவாக இருக்க முடியுமென்று இன்னுமொரு கிளை பிரித்துச் சிந்தனை நதி ஓடியது.'கண்ணா!" என்றாள்.

பதிலுக்கு நான் " கண்ணம்மா" என்றேன்.

அவளது கண்ணா என்னும் அழைப்பில், தொனியில் விரவிக்கிடந்தது நட்பு. காதல். அன்பு. நெஞ்சை வருடிச் செல்லும் குரல், தொனி, சொல். என் 'கண்ணம்மா'வுக்கும் அப்படியே தோன்றியிருக்கலாம். அவ்விதமே உணர்ந்து கொண்டேன். 

"கண்ணா, இன்றுனை வாட்டும் எண்ணமென்னடா? " என்றாள்.  அவளுக்குத்தெரியும் எப்பொழுதும் என் மனத்தில் கேள்விகளும், பதில்களற்ற வினாக்களும் நிறைந்திருக்குமென்று. 

"கண்ணம்மா,ஏன்?"

"ஏன் என்றால் .. ஏன் என்று எது பற்றி இன்றுனக்கு மன விசாரம்?"

"கண்ணம்மா, என்னால் இதனை விளங்கிக்கொள்ளவே முடியவில்லையடி. ஏன் இந்த உலகும் எந்நேரமும் பற்றி எரிந்து கொண்டேயிருக்கின்ற்து. எதற்காக இந்தப் போர் வெறி? உயிர்கள், பாசம்,உறவுகளுக்கு அர்த்தமில்லையாடீ. இந்த இருப்புக்கு அர்த்தமே இல்லையாடி கண்ணம்மா."

விரிந்து செல்லும் பெரு வெளி!
புரியாத பொழுதுகள். கண்ணம்மா!
எரியும் சுடர்கள்! எரியும் கிரகங்கள்!
ஏன்? உனக்குத்தெரிந்தால் கூறடி?

"என்ன கண்ணா, வழக்கம்போல் மனத்துக்குள் கவிதை எழுதத்தொடங்கி விட்டாயா?"

என்றவள் கண்களைச் சிமிட்டினாள். அவ்விதம் கண்ணம்மா கண்களைச் சிமிட்டுகையில், அவளது இதழ்க்கோடியில் மெல்லியதொரு புன்னகை கோடிழுத்துச் செல்லும், கண்களில் அன்பு பொங்கும்.  

"கண்ணம்மா, உன் ஆற்றல் என்னைப் பிரமிக்க வைக்கிறதடீ. இதிலிருந்து என்ன தெரிகிறதடீ?"

"என்ன தெரிகிறது? நீயே கூறு  கண்ணா."

"அடி கண்ணம்மா, மனத்தின் சக்தி அற்புதமானது. அது பற்றி இன்னும் அறிவதற்கு நிறைய இருக்கிறதடீ. இல்லையா?"

"ஏன் அப்படிச் சொல்கிறாய் கண்ணா?"

"உள்ளுணர்வு மூலம் பலவற்றை அறிகின்றோமா இல்லையா? எப்படி? சொல்லு கண்ணம்மா. அதனால்தான் கூறுகின்றேன். மனத்தைப்பற்றி அறிய வேண்டுவதற்கு நிறைய உள்ளன. எல்லோர் மனச் செயற்பாடுகளும், தெளிவானதாக, அன்பு மயமானதாக, இருந்தால் மோதலற்ற உலகாக இவ்வுலகு இருக்குமல்லவா?  கண்ணம்மா என்னடி நினைக்கிறாய்?"

"கண்ணா, மீண்டும் பழையபடி முதற் படிக்கே கொண்டு வரும் கேள்வி இது."

"ஏன், அப்படிச் சொல்லுறாய் கண்ணம்மா?"

"படைப்பின் முக்கிய் குறைபாடே இங்குதான் 

"புரியவில்லையே கண்ணம்மா"

"கண்ணா, ஒரு போதுமே எம்மால் உண்மையைப் புரிந்து கொள்ள முடியாது. எம் அறிவு எல்லைக்குட்பட்டது. இந்நிலையில் இவ்விதமான தேடல்கள் எல்லாம் தேவையா என்றுதான் படுகிறது. "

"நீ என்ன கூற வ்ருகின்றாய் கண்ணம்மா. அப்படியென்றால் தின்று, உண்டு , உறங்கிச் செல்வதே போதுமென்று நீயும் நினைக்கின்றாயா?"

"சில சமயங்களில் அப்படி இருப்பதே போதுமானது என்றும் தோன்றுகின்ற்து கண்ணா> ஆனால் அது சரியில்லையென்றும் கூடவே தோன்றுகின்றது கண்ணா"

"கண்ணம்மா, சிந்தனையென்று ஒன்று மட்டும் இல்லையென்றால் இந்தப் பிரச்னையே இலலையல்லவா. பேசாமல் மிருகங்களைப் போல் வாழ்ந்து மடிந்து விடலாம் அல்லவா. இருப்பதில் நிறைவு கண்டு இருந்து விடலாம் அல்லவா."

"கண்ணா,கொஞ்ச நேரத்துக்கு இந்த விசாரத்தை ஒதுக்கி வைத்து விட்டு இலக்கியம் பற்றிச் சிந்திக்கலாமா?'

"இலக்கியம் பற்றி என்ன புதிதாகச் சொல்லப்போகின்றாய் கண்ணம்மா"

"நான் ஒரு கவிதை எழுதி வைத்திருக்கிறேன். வாசிக்கிறேன். கேட்கிறாயா?"

"வாசி கண்ணம்மா!"

"கண்ணா! 
அலைக்கூம்புக்குள்
விரிந்திருக்கின்றதடா நம்காலவெளி.
ஆம்!
கூம்புக்காலவெளியில் நாம்
கும்மாளமடிக்கின்றோமடா.
கூம்புக்கும் வெளியேயொரு யதார்த்தம்.
நாமறியாக் காலவெளி அது கண்ணா
கண்ணா! நீ இவைபற்றி என்றாவது
கருத்தில் கொண்டதுண்டா? கூறடா!
இருப்புப்பற்றி இங்கு நினைப்பதிலுண்ட
இன்பம் வேறொன்றுண்டோ கண்ணா
காலவெளியடா கண்ணா! நீ என்
காலவெளியடா கண்ணா!
எல்லைகடந்து சிறகடிக்க எப்போதும்
விரும்புதடா என் மனம் கண்ணா!
உன் மனமும் அப்படியா கண்ணா!
காலவெளி கடந்து சிறகடிக்க முடியுமெனின்
கண்ணா
அக்கனவுலகம் காணத்துடிக்குதென்
மனமே. கண்ணா என் மனமே!
ஒரு வினா! விடைபகிர் கண்ணா!
நீ அலையா கண்ணா!
நீ துகளா கண்ணா!
நீ அலையென்றால் காலவெளியும் அலையன்றோ!
நீ துகளென்றால் காலவெளியும் துகளன்றோ!
அலையா? துகளா ? கண்ணா
அறிந்தால் அறிவியடா என் பெரு வரையே."

"கண்ணம்மா, இது என் கவிதையொன்றின் தழுவல் மாதிரித் தெரியுதே. 'கண்ணம்மா! அலைக்கூம்புக்குள் விரிந்திருக்கின்றதடி நம்காலவெளி. என்றெழுதியிருந்தேன்,. அதைத்தான் சிறு மாறுதலுடன் இப்படி எழுதியிருக்கின்றாய். கண்ணாம்மா என்பதைக் கண்ணா என்று மாற்றியிருக்கின்றாய். அடுத்தது..'

"அடுத்தது என்ன கண்ணா?"  மனோரஞ்சிதத்தின் குரலில் ஒருவித ஆர்வம் இழையோடியதை அவதானித்தேன்.

"கண்ணம்மா, என் கவிதையை 'அலையா? துகளா ? கண்ணம்மா!,  அறிந்தால் அறிவியடி அருவியே!' என்று முடித்திருந்தேன். ஆனால் நீயோ..."

"ஆனால் நான்... என்ன நிறுத்தி விட்டாய் கண்ணா, மேலே சொல்"

"அலையா? துகளா ? கண்ணா, அறிந்தால் அறிவியடா என் பெரு வரையே" என்று  முடித்திருக்கிறாயடி கண்ணம்மா!" என்றேன்.அதற்கு அவள் சிரித்தாள். அத்துடன் பின்மவருமாறு கூறவும் செய்தாள்:

"உன்னிடம் களவு செய்வது அவ்வளவு இலேசான  விடயமல்ல கண்ணா"

"ஆனால், உனக்கு அந்த உரிமை உண்டு கண்ணம்மா"

"காப்புரிமை கேட்டு வழக்குப் போட மாட்டாயே கண்ணா. அப்படியென்றால் அது போதும்" என்று கூறியவாறே , கேலிப் புன்னகை தவள, கண்களைச் சிமிட்டினாள்  மனோரஞ்சிதம்.

அவளது கேலி ததும்பிய வதனத்தை அவதானித்தபடியே கூறினேன் - "இருந்தாலும் நீ 'அறிந்தால் அறிவியடா என் பெரு வரையே' எனறு முடித்திருந்ததை உண்மையிலேயே இரசித்தேன் கண்ணம்மா. ஆனால் நீ அருவி, ஆனால் நான் பெருவரை அல்லன்" 

"எனக்கு நீ எப்போதுமே பெருவரைதான் கண்ணா" என்றவள் என் தோளணைத்து மார்பில் சாய்ந்தாள். 

விண்ணில் கெக்கலி கொட்டிச் சிரிக்கும் சுடர்க்கன்னியரின் கேலி ததும்பும் நகைப்பினை அவதானித்தபடியே அவளின் அணைப்பு தந்த மென்மையில் நான் என்னை மறந்திருந்தேன்.  

எனக்கு அப்போது ஓர் எண்ணம் முகிழ்த்தது. எபப்டி இந்த விரிவெளியின் தொலைவுகளைக் கடப்பது? பரிமாணங்களைக் கடந்து செல்வதற்கு ஏதாவது குறுக்கு வழி ஏதாவது உண்டா? அப்படியிருந்தால் அதைக் கண்டு பிடிப்பது  எப்படி?  நல்லவேளை கண்ணம்மா நனவுலகில் இல்லை. கனவுலகில் சஞ்சரிக்கத் தொடங்கி விட்டாள். இல்லாவிட்டால் அடுத்த  தர்க்கம் தொடங்கி விட்டிருக்கும். இருந்தாலும் கண்ணம்மாவுடன் தர்க்கிப்பதிலுள்ள இன்பமே, அதுவும் இருப்புப் பற்றி,  தனியென்றே உணர்ந்தேன்.

[தொடரும்]

 இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.