அத்தியாயம் மூன்று  - இவாஞ்ஜிலின் கடற்கரை!

காலையில் குளித்து விட்டு  , நேற்றைய  ,  மிஞ்சிய  கோழிக்கறி  இருந்தது . அதை அவனுக்கு  பாணுடன் சாப்பிடக் கொடுத்து விட்டு  , முட்டையையைப் பொரித்து  சன்விச் செய்து சாப்பிடுகிறார்கள் . பூமலருக்கு சுமி பிறந்ததிலிருந்து நீரழிவு ஏற்பட்டிருக்கிறது . மாத்திரைகளை எடுப்பவள் . " கிழமையிலொரு தடவை இன்சுலின் வேறு  ஏற்றிக் கொள்கிறேன்  " என்கிறாள் . குட்டித் தங்கச்சியாக இருந்தவளை காலம் எப்படி மாற்றி விட்டிருக்கிறது . உதயனுக்கும் ( அண்ணர் ) ,  பானுவுக்கும் ( அக்கா ) ..கூட .. நீரழிவு   இருக்கிறது . அவனுக்கும் , குணவதிக்கு... இன்னம் தொந்தரவு கொடுக்கவில்லை .  வழக்கம் போல கராஜிலிருந்து காரை  சிரமப்பட்டு  எடுக்க .  இட பக்கக் கண்ணாடியை  மடக்கி விடுகிறான் .  சுலபமாக வெளியே வர பூமலர் வீட்டைப் பூட்டி விட்டு வருகிறாள் .  ஒரு தடவை, வீதியில்  குறுகலான லேன் என்ற உணர்வில்  கரைக்கு  இறக்கி விட   .    தடபுடல் என ...சத்தம் , அவனையும் குலுக்க  .  ஏன் ஓரங்களை ... சீர்படுத்தாது விடுகிறார்கள்  "  என ஒரேயடியாய் பற்றிக் கொண்டு வருகிறது  .  பார்த்து ஓடு " என்கிறாள் பூமலர் .  ரொரொன்ரோவில் இந்த குலுக்கல்  இராது . ' வரி குறைப்பு ' .... என்றால் அதற்கேற்ப கஸ்டமும் கொடுக்கிறது .  போக்குவரத்து அமைச்சராக ஒரு தேடல் உள்ள  பொறியிலாளர் ...தெரிவாக வேண்டும் . இல்லாதது   சீரழிவாகவே கிடக்கிறது .

"  உன்னைச் சொல்லிக் குற்றமில்லை  , என்னைச் சொல்லிக் குற்றமில்லை  , காலம் செய்த கோலமடி  , கடவுள் செய்த குற்றமடி ...!  " . பாட வேண்டியது தான் . வேற என்ன செய்வது ? . பின்னுக்கு .. போற காட்சிகளை  ஜெயந்தி  பார்த்து வந்தாள் .  அவளுக்கு ' தீவை நிறையப் பிடித்திருக்கிறது  ! ' . முன்னால் பூமலர் இருந்தாள் .  பூமலர் " இப்ப நாம் போறது  இவாஞ்ஜிலின்  கடற்கரை " என்றவள் . " இவள் , நம்ம  ஆச்சி வீட்டுப் பிள்ளைப் போல ...ஒரு ஏழை பிரெஞ்சுப் பெண் .  இவள் சிலையுடன் ஒரு அகாடியர் பார்க் கூட  இங்கே எங்கையோ கிட்டத்தில் இருக்கிறது . இவளைப்பற்றி ஒரு நாவல் எழுதப்பட்டிருக்கிறது . நாடகம் , சினிமாவாக எடுக்காமல் விட்டிருக்க மாட்டார்கள் . அமைதியாக வாழ்ந்தவளில்லை . அவளுடைய   ஆவி ... இங்கே , பழைய ரயில் பாதையில் எல்லாம் அலைகிறது என்று  சொல்கிறார்கள் . நம்மைப் போல ...ஒரு பழி வாங்கும் பெண் ... " என்று   அடுக்கடுக்காய் கூறி விட்டு  சிரிக்கிறாள் . நாங்க நினைக்கிறோம் . குடியுரிமை பறிக்கிற அதிசயம்  நம் நாட்டில் மட்டும் தான் நடக்கிறது என்று  நினைக்கிறோம் . பதினெட்டாம் நூற்றாண்டுகளில்...  (1700 களில்) இங்கே இருந்த பிரெஞ்சுஅகாடியர்களை ,  யாழ்ப்பாணத்தில் முஸ்லிம்களை வெளியேற்றியது போல , ...ஆனால் நாட்டை விட்டே ஆங்கிலேயர் துரத்தி விட்டிருக்கிறார்கள் . அடிப்படையில்   பயம் தான் காரணம் . எந்த உதவியும் செய்யாது உர்ரென இருந்திருக்கிறார்கள் .  பிரெஞ்சுக்காரர்கள்   மனச்சுமையுடன் அத்திலாந்திக் கடலில் மிதந்த போது அவர்களில்  ஆயிரம் பேர்கள் வரையில் ...கடலில் மாண்டும் போய் விட்டிருக்கிறார்கள் .

    அந்த பகை இன்றும் பிரெஞ்சு , ஆங்கிலேயர்களிடம்   ஜென்மப்பகையாக    கிடக்கிறது . கனடா , பிரெஞ்சு மொழியை ஆட்சியில் இருத்தி , பிரெஞ்சுக்காரர்களை இங்கே தலைவர்களாக்கி..சூட்டைத்  .தணிக்க முயல்கிறது . என்னென்னோ செய்கிறார்கள்  .  இன்றும் பிரான்சும்  , பிரிட்டனும் பேசுகிற போது தீப்பொறி பறக்கிறது .  ஒன்று தெரியுமா ? ,  2 ம் போரில் இரு நாடுகளும் ஒன்று சேர்ந்து நின்று  போரிட்டதில்லை . கனடாவுடன் சேர்ந்து நின்று...போரிட்டிருக்கிறது .  கனடா   நட்பை ஏற்படுத்த   பாலமாக நிற்க முயல்கிறது .   ஆனால் , இதுவும் இங்குள்ள பழங்குடி மக்களிற்கு அதிகாரபரவலாக்கம்  கொடாது  , இலங்கையைப் போல சிக்குப்பட்டும் கிடக்கிறது . இருந்தாலும் மத்தியில்   அதிகாரப் பதவிகளில் அவர்களை நிறுத்தி வருக்கிறது .   முன்னேறா விட்டாலும் அது குளிர  வைக்கிறது  .  இங்கே சேவல் கூவி , ஈழத்தில் , விடியப்   போவதில்லை   , விடுங்கள் .
 
    ஆங்கிலேயரின்  கையில்  நொவாகோர்ஸியா வீழ்வதற்கு முன்  இவாஞ்ஜிலின் , காதலனுடன்  காதலுடன் டூயட் பாடிக் கொண்டு ...திரிகிறாள் . அறுந்த போர் ஏற்பட்டு வாழும் உரிமை பறிக்கப் படுகிறது . காதலன் ஒரு புறம் , இவள் இன்னொரு புறமாக பிரிக்கப்பட்டு விடுகிறார்கள்  . லூசியானாவிற்கு சென்றவள் தேடுகிறாள் . தேடிக் கொண்டிருக்க வாழ்நாள் போய் விடுகிறது . இவளை கிழவியாகக் காட்ட பிரெஞ்க்காரருக்கு துப்பரவாக  விருப்பமில்லை .  அழகிய தேவதையாக்கி ,   நர்ஸாகி  காயப்பட்ட போர் வீரர்களின் கூடாரத்தில் காயப்பட்ட கிழவனான , காதலனை சந்திக்கிறாள் . பிறகென்ன ...மணமுடிக்கிறாள் . சுபம் . போரிலே  அவனை  .... சாக்கடிச்சிருந்தால் ... எழுத்தாளரைக் கொன்றிருப்பார்கள் . கவிஞர் நோட்டைக் காணோம் , பென்னைக் காணோம் என்று ஓட்டம் பிடித்திருப்பார் . காவியமாக இந்தக் கதை இன்றும்  திகழ்கிறது .  ஆத்திரத்திரத்தைக் கொட்டவும் வேண்டுமல்லவா ! . மூத்தவளுக்கு இந்தப் பெயர் , செல்ல நாய்க்குட்டிக்கும் ...இதே  பெயர் . கடை  வைக்கிறீரோ அதற்கும் இதே பெயர் , பாலம் , வீதி , கைவே ...என ... கண்ட , கிண்ட  எல்லாதிற்கும் இவள் பெயர் தான்  .  திரும்பும் இடமெல்லாம்   இவாஞ்ஜிலின் மயம்   .

     கனகாலத்திற்குப் பிறகு கனடியர்கள் ,    பிரெஞ்சுக்காரர்களை நொவாகோர்ஸியாற்கு  .. "  வெல்கம் "  கூறி அழைத்த போது  ,  சிறிய தேவாலயம் ஒன்றை எழுப்பி  ...முதல் வேலையாக இவாஞ்ஜிலின்  சிலையையே நிறுவி  பெரிய நிலப்பரப்பில் பூங்காவை அகாடியர் அமைத்தார்கள் . நல்ல காலத்திற்கு  பிரெஞ்சுக்காரர்கள் திரும்பி வந்த போது  இவர்கள் நிறுவிய பழைய தேவாலயங்களை  புத்தர் சிலையை வைக்கிறேன் , இதை , அதை வைக்கிறேன் என ...அழித்து , சிதைத்திருக்கவில்லை . இன்று இங்கே , பிரெஞ்சுக்காரர்   பரவி இருக்க  அவை  உதவுகின்றன . உண்மையிலே இவாஞ்ஜிலின் உயிருடன்  இருந்தவளா? என்ற கேள்விக்கு ...யாருக்குமே   பதில் தெரியாது . இருந்தவள் என்று ஒப்பிக்கினர்   ஒரு பிரிவினர் .   'பேய்' என்பவர் இன்னொரு பிரிவினர்.   " உருவகம் " என்று ஒரு  சிலர் .   " நியூயோர்கிற்கு பிரான்ஸ் அளித்த சுதந்திர சிலைக்கு மொடலாக இருந்தவள்  '  இவளே தான்  ' என்று  சிலர்  அடித்தும் கூறுகிறார்கள்  . அந்த சோகப் பெண் நாமம்  நீடூழி ,  வாழ  நாமும்   ஆசியை வழங்குவோம் .
 
     அந்த பீச்சைக் கவனிக்கிற ஓபீஸ்  , கழிப்பிட வசதி  இருக்கிற  ஒரு கட்டடம் ஓரத்தில் நிற்கிறது  . விளையாட்டு திடல் போன்ற ,  வாகன நிறுத்தல் இடம் . வாகனத்தை கொண்டு போய் நிறுத்தினார்கள் . கீழே இறங்கிற படிகள்  . பள்ளத்தினில் தான் இங்கே   கற்கரையைக் காண முடியும் .  தூரல் விழுந்து கொண்டிருந்தது .  மழை பிடிக்கலாம் .  பள்ளத்தை பார்த்து விட்டு"   அம்மாடி  ! ,  நான் மேலேயே நிற்கிறேன்" என ஜெயந்தி நின்று  விட்டாள் . பூமலரும் , தில்லையும் இறங்க ஒரு தட்டு ,  மேலும் இறங்கல் என ஐம்பது அடி  ....கீழே   இருக்கும் , இறங்கினார்கள் . ஈர மண் , சில இடங்களில் நீர்த் தேங்கள் . கடல் தூரத்தில் இருந்தது . நிலத்தில் தூரம்  ,  தூரமாக  புல் கூட்டம் . கிட்ட இருந்த ஒன்றிற்குப் சென்று ஒரு புல்லை பிடுங்கி எடுக்க முயன்றான் . உறுதியாக  தரையோடு கிடந்தது . ரப்பர் போன்ற ஒரு இழையை மடித்து சிரமப்பட்டு ஒடித்து எடுத்தான் . நீரினுள் வளர்கிறது , இவ்வளவு  பலமாக கிடக்கிறதே !  கையில்   வைத்து  அதை   கிறுக்கு பிடித்த விஞ்ஞானி போலப் பார்த்தான் .  பூமலர் சிறிய ஓடை போல இருந்த  பகுதியிற்குப் போய் நின்று கொண்டிருந்தாள் . தூரல் கூடியது . " மேலே ஏறுவோம் " என்று பூமலர் கூற மேலே வந்தார்கள் . ஜெயந்தி வாகனத்தினுள் இருந்தாள் . பட , படவென மழை  கொட்ட  மள , மளவென ஏறினார்கள்  . சிறு கப்பில் தேனீரை ஊத்தி ஜெயந்தி தந்தாள் . சிப்ஸ் என்கிற உருளைக்கிழங்கு பொறியலையும் கொறித்துக் கொண்டு வெளியை வேடிக்கை பார்த்தார்கள் .  ஒரு தாய் , மகனுடன்....  மழைக் கோட்டணிந்து குடையும் பிடித்துக் கொண்டு கடற்கரைக்கு பாசத்துடன்  கதைத்துக் கொண்டு  இறங்கிக் கொண்டிருந்தாள் . அவனுக்கு அம்மா நினைவில் வந்தார் . காலநிலை தெரிந்திருக்கிறது .  மழையைப்   பொருட்படுத்தாது அவர்கள்  செல்வது   அழகான காட்சிமாக  தெரிந்தது  .  ஆச்சரியமாகவும்   இருந்தது .


அத்தியாயம் நான்கு -  கிங்  துறைமுகக் கடற்கரை

    இவாஞ்ஜிலின் கடற்கரையிலிருந்து வெளியேறி வளைந்து ,நெளிந்து , ஏறி விழுந்து ....., மழைத் தூரல் விட்டிருந்தது   . இலங்கையிலுள்ள வயல்வெளிகளைப் போலவே இருக்கிறது , புல் நிலங்களும் இருந்தன , விவசாய நிலங்களுக்கூடாக ... இரண்டு வாகனங்கள் மட்டுமே செல்லக் கூடிய குறுகிய  கிராமத்து சிறிய வீதியில்   நெடுகவே வாகனம் ஓடியது . " இந்தப் பகுதிகள்  அராலியையே  ஞாபகப்படுத்துகிறது "  என்று பூமலர் குறிப்பிட்டாள் .  ஒரு மதகு குறுக்கிட்டது . மதகில் ஒரு வாகனம் மட்டுமே போகலாம்  . குட்டி வீதீப்பாலம் .எதிரில்  ஒரு வாகனம் வர   ஓரம்கட்டினான் . அது  கடந்த பிறகு இவர்களுடையது ஓடியது . ஒரு வாகனம் மட்டுமே  சுருங்கி ஓடுற மேலும் சில மதகுப்பாலங்களும் எதிர்ப்பட்டன .

    தனியே அவன் வாகனம் ஓடி  வந்தால் அந்த வீதிவலைக்குள்ளே சுற்றிக் கொண்டிருப்பான் . வீடு வந்து சேரவே மாட்டான் . பூமலருக்கு  கிங் கவுண்டியிலுள்ள வீதிகள் அனைத்துமே தலைகீழ் பாடம்  . அத்துப்படி . " இதிலே போறது எனக்கு அராலி வீதியிலே போறது மாதிரியே  இருக்கிறது .   இந்த வழியாலே ஓட விருப்பம் " என்றாள் .  . " இந்த வீதியாலே போனாலும் வீட்டிற்றுப் போகலாம் . அதாலே போனாலும் போகலாம் . ( தீவுப் பிரதேசம்  )  இப்படி  பூமலர் மூளையக் குழப்பிக் கொண்டு வந்தாள் ." இப்ப நாம் கிங் துறைக்குப் போகப் போறோம் . இந்த வீதியாலே விடு " என்றாள் .தில்லை அப்படியே செலுத்தினான் . வந்தடைந்து விட்டார்கள் . தில்லை அராலித்துறையில் பார்த்தது  மாதிரியே  ,  இங்கே நீளப்பாக்கமும் குறுக்கவுமாக ஒரே இணைப்பிலான  பெரிய தார் பூசிய அடைத்த உருளை தகரக் குழாய் மிதவை , மேலே அதே பலகைத்தளம்...பாவனையில் கழித்து விட்டது போல வீதி ஓரத்தில் இருப்பதைக் கண்டான் . இங்கே எல்லா இடங்களிலுமே  கிராமப்புற  சாயல்  காணப்படுகிறது  .  ஆனால் , எந்த  ஒரு வேலையையும்  முறையாய்  செய்த முடிப்புடனும் அழகாயும்   இருக்கிறது .

      எல்லாம் சிறிய , சிறிய துறைகள்  (முகம்) . " இங்கே ஒரு காலத்தில்  படகு கட்டி ...கலக்கிக் கொண்டிருந்தார்கள் .  கலிப்பஸை விட  , பாய்மரக்கப்பல்கள்   நிறைய கட்டி இருக்கிறார்கள் . ஆங்கிலேயர்கள் எப்பவும் கடல் வலிமையைக் கூட்டிக் கொண்டிருந்தவர்கள் . அதற்குதந்த மரங்கள்  இயற்கயாக இங்கேயுள்ள வனப்பகுதியில் இருந்ததாலே ,பிரெஞ்ச்காரரகளிடமிருந்து  அபாயமிக்க பாறைக் கரையைக் கொண்ட தீவை அடிச்சுப் பிடிச்சு  பறித்தெடுத்திருக்கிறார்கள் .

     இந்த கரை எல்லாம் உயர் ,  தாழ் அலைகள்  பிரச்சனை  உடையவை . அதாவது ஒரு நேரம் நீர் நிறைந்து இருக்கும் .. இன்னொரு நேரம்  நிலம் தெரியும் . சுனாமியின் போது கடல் உள்வாங்க கன்னியாகுமரிக் கடலில் நிலம் தெரிந்ததை இங்கே சாதாரணமாக பல மணி நேரத்தில் நேரிலே பார்க்கலாம் . பூமியை சுற்றுற போது சந்திரன்  இப்பகுதிக்கு  அதிக   கிட்ட வருகிறது  .  பெரிய ஏணி ஒன்றை சாற்றி வைத்து சந்திரனுகே  ஏறி போய் விடலாம் போல   கிட்ட வருகிறதோ . சந்திரனின்  ஈர்ப்பு விசை பூமியைத் தாக்குறதால் அலைகள் அதிகமாக கொந்தளிக்கிறதால்  ...காற்றழுத்தம் வேறுபடுகிறது . அலை உள்வாங்கி பழையபடி வருகின்றது . அது நிகழ ஞாயமான நேரத்தை எடுத்துக் கொள்கிறது . தாழ் அலையின் போது வளைகுடாவின் கரையோரங்களில் ஒரு பீச்சளவு  பரந்த பகுதியில் ஈரமண்  நிலப்பரப்பை பார்க்க முடிகிறது . இங்கே இருக்கிற பீச்சுகள் இவைதான் . ஒருநாள் பீச் , இரண்டு நாள் பீச் ...பிறகு நீர் வந்து மூடி விடுகிறது . அபாயமற்ற முறையில் படிப்படியாய் நீர் குறைந்து , ஏறுறதெல்லாம் நேர அளவில் அளந்த விபரங்கள்  பீச்சில் குறித்து  , குறித்து   வைத்திருக்கிறார்கள் .  தில்லையின் அண்ணருக்கு குருவிகளை , பறவைகளைப் பார்க்கிறது மாதிரி சுற்றுலாப் பயணிகளிற்கு  ' அலை 'பையித்தியம் . இததைப் பார்க்கவே   ஃபண்டி பே  க்கு  வருகிறார்கள் . உலகிலேயே ...இங்கே மட்டும் தான் இந்த அதிசயம் நிகழ்கிறதோ ? அப்படி போலவே படுகிறது .
                                                
     இந்த துறையிலே அகண்ட  50 அடி அகலத்தில்  சாய்ந்து கீழே நீருக்கு தளப் பாதை இறங்கிறது . வேற என்ன செய்த கப்பலை கடலுக்கு இறக்கிய பாதை.  வன்னி விவசாயிகளின் ஏர் இறைப்பு மேடைப் போல  கல்லுப் போட்டு மொங்காண் இட்டு தார் பூசி அதெல்லாம் அழகாக செய்வார்கள் .  .சிறிய நாக உலோகப் குழாய்களைக் கொன்ட தடுப்பு வேலி. ஓரப்பகுதியில் பெரிய கற்கள் .அதில் குமிழ்களை உடைய பாறையிலே ஒட்டி மூடிக் படர்ந்து கிடக்கிற  அல்காபாசி .  கற்களிடையே தாமரை இலையைப் போன்ற இலையைக் கொண்ட ஒரு தாவரத்தையும் பார்த்தான் .  பறவைகள் விதைகளைப் போட்டிருக்கலாம்  .

      ஜெயந்தியும் பூமலரும் அப்பிள் போனில் அங்கே ,இங்கே நின்று படமாக எடுத்து  தள்ளிக் கொண்டிருந்தார்கள் ." தோற்றமும் முக்கியம் "என்று உடையைப் பற்றி கவலைப்படாத தில்லைக்கு கூடை ,கூடையாய் புத்திமதிகளை அப்பப்ப்பச் சொல்லிக் கொண்டுமிருந்தார்கள் . தில்லையும்  படம் எடுத்தான் . அல்கா, மிதவை ...இப்படி வகையறாக்கள் .  பிறந்ததிலிருந்து அவனுக்கு தலை மயிர் சரியாக நின்றதில்லை .  பரட்டைத்தை தலை . இப்ப மொட்டை வேறு விழத் தொடங்கி விட்டது . இவர்கள் சொல்லியா கேட்கப்  போகிறது ." ஆடை பாதி, ஆள் பாதி". இவனை ஒரு சினிமா நடிகனாக்கி விடுறது என்ற முடிவில் தான் அவர்கள் இருந்தார்கள்  .  போதுமடா சாமி !

[தொடரும்]

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.