அத்தியாயம் ஒன்பது - மின்காந்தமணி என்னுமென் சகி!

வழக்கம்போல் முடிவற்று விரிந்திருக்கும் இரவு வானை, நட்சத்திரங்கள் கொட்டிக்கிடக்கும் இரவும் வானைப் பார்த்தபடியிருக்கின்றேன்.  இரவு வான் எப்பொழுதும் புதிர்களை அடுக்கி வைத்துள்ள நூலைப்போல் என்னைப் பிரமிக்க வைக்குமொன்று. காலத்தின் அடுக்குகளுக்குள் விரிந்து கிடக்கும் இரவு வான் இருப்பின் புதிர்களின் விடைகளைத் தாங்கி நிற்கும் ஞானப்பெட்டகமாக எப்பொழுதும் எனக்குத் தெரிவதுண்டு. அதனால் அதனை எத்தனை தடவைகள் பார்த்துக்கொண்டிருந்தாலும் எனக்கு அலுப்பதேயில்லை.

"என்ன எவளைப்பற்றி யோசனை?"

எதிரில் மந்தகாசப் புன்னகையுடன் மனோரஞ்சிதம் நிற்கின்றாள்.

"வேறு யாரைப்பற்றி? எல்லாம் என் சகியைப்பற்றித்தான். இருப்பில் என்னுடன் எப்பொழுதுமிருக்கும் என் இன்பச் சகியைப்பற்றித்தான்  கண்ணம்மா"

"கண்ணா,  இந்தக் கண்ணம்மாவை விட்டால் உனக்கு வேறு யார் சகி இருக்க முடியும்?"

"யார் சொன்னது இருக்க முடியாது என்று. இவள் என்னை எப்பொழுதும்  வியப்பிலாழ்த்தும் என் சகி. மின்காந்தமணி. இவளது ஆளுமை எப்பொழுதும் என்னைப் பிரமிக்க வைக்குமொன்று."

'அதென்ன மின்காந்தமணி. வித்தியாசமான பெயராகவிருக்கிறதே. கண்ணா யாரிவள்? உண்மையா இல்லை இதுவும் உன் வேடிக்கைப்பேச்சுத்தானா?"

"கண்ணம்மா, நான் ஏனுனக்கு  வேடிக்கை காட்ட வேண்டும். காந்தமணியைப்பற்றி நீ மட்டும் விரிவாக அறிந்திருந்தால் இவ்விதம் கூற மாட்டாய்."

"கண்ணா, நிச்சயமாக இவளும் உன்  அகவெளி நண்பர்களிலொருத்திதான், இல்லையா? அவ்விதமிருக்கும் பட்சத்தில் எனக்கு எவ்வித ஆட்சேபணையுமில்லை. நீ தாராளமாக எவ்வளவு நேரமானாலும் உரையாடு. நினைத்து நினைத்து மாய்ந்து போ. கவலையில்லை."

"கண்ணம்மா, உண்மையில் காந்தமணியின் இருப்பு என்னைப் பிரமிக்க வைப்பது. இவளை மிஞ்சி இப்பிரபஞ்சத்தில் யாரும் இயங்க முடியாது. இவளைத் தொலைவுகளோ , வெற்றிடங்களோ தடுப்பதில்லை. நெடிய பயணங்கள், காலம் தாண்டிய நெடும் பயணங்கள் கண்டு இவள் ஓருபோதுமே தயங்குவதில்லை. அஞ்சுவதில்லை. தன் பயணத்தை நிறுத்துவதுமில்லை. அதற்கும் மேலாக இவளது இன்னுமோர் இயல்புதான் என்னை இன்னும் அதிகமாகப் பிரமிக்க வைக்கின்றது."

"அது என்ன கண்ணா. அப்படியென்ன அப்படியோர் இயல்பு இவளிடமுண்டென்று பிரமிக்கின்றாய்?"

'பொருள்முதல்வாதிகள், கருத்துமுதல்வாதிகளை ஆட்டிப்படைக்கின்றாள் இவள் இயல்பால். பொருள் உண்மையென்பவர்களையும் திகைக்க வைக்கின்றாள். சக்தி உண்மையென்பதையும் பிரமிக்க வைக்கின்றாள். ஏனென்றால்..."

"ஏனென்றால்.. என்ன கண்ணா? மேலே சொல்லு. ஏன் நிறுத்தி விட்டாயடா?"

"கண்ணம்மா, காந்தமணி பொருளாகவுமிருப்பாள். சக்தியாகவுமிருப்பாள்."

"அதிலென்ன வியப்பு!  ஏன் நாங்கள் கூட அப்படித்தானே இருக்கிறோம் கண்ணா."

"நாங்கள் கூடவா கண்ணம்மா?  நீ என்ன கூற வருகிறாயடி என் செல்லம்மா."

"கண்ணா  நம் முன் காணும் பொருளெல்லாம் அடிப்படையில் பொருளல்லதானே. 'இலக்ட்ரோன்' நுணுக்குக் காட்டிகொண்டு பார்த்தால் நாமனைவரும் பொருளாகவா தெரிவோம் கண்ணா?"

"கண்ணம்மா, உன்னைத் தர்க்கத்தால் ஒருபோதுமே என்னால் வெல்ல முடியாதடி. உன் ஞானத்தெளிவு என்னை எப்பொழுதும் பிரமிக்க வைக்கிறதடி."

"கண்ணா, அலையாயும், துகளாயும் அண்டத்தே பயணித்து உனை மயக்கும் உன் காந்தமணியைப்போல் தான் அண்டத்திலுள்ள நாம் அனைவருமுள்ளோம்.  அதனைத்தான் கூற வந்தேன்."

"கண்ணம்மா,  உன் தர்க்கத்தின் முன் நான் தலை வணங்குகின்றேன். அதிலொரு பெருமையும் எனக்குண்டு."

"அப்படியென்ன பெருமை கண்ணா?"

'நான் எப்பொழுதும் அறிவுக்குத் தலை வணங்குபவன் கண்ணம்மா. அறிவுக்கு அடிபணிபவன் செல்லம்மா"

'கண்ணா, உன் மின்காந்தமணியைப்போலொரு சகியாக நானும் இருப்பதில் எனக்கும் மகிழ்ச்சிதான்."

"அகமோ புறமோ சகிகள் இருவருமே என் பிரிய சகிகள்தாம்."

மீண்டும் என் பார்வை விரிந்திருக்கும் இரவு வானை நோக்கிப்  படர்கின்றது. அங்கு பில்லியன்  கணக்கில் கொட்டிக்கிடக்கும் சுடர்களை, அவற்றிலிருந்து வெற்றிடங்களை ஊடறுத்துப் பயணிக்கும் ஒளிக்கதிர்களின் விளையாட்டுகளில் மனதொன்றிட  நோக்குகின்றேன். என்னருகில் என்னுடன் இணைந்து பிரபஞ்சத்தின் பெரு நடனத்தில் தன்னை மறந்து இலயித்துக் கிடக்கின்றாள் மனோரஞ்சிதம். என் கண்ணம்மா.

சுடர்ப்பெண்கள் சொல்லும் இரகசியம்?

இருண்ட அடிவானை நோக்குவீர். ஆங்கு
இலங்கிடும் சுடர்ப்பெண்கள் உரைத்திடும்
இரகசியம் தானென்ன?
புரிந்ததா? புரிந்திடினோ, பின்னேன் நீவிர்
புழுதியில் கிடந்துருள்கின்றீர்?
சாக்கடையில் புழுத்துளம் வேகுகின்றீர்?
சூன்யத்தைத் துளைத்து வருமொளிக்கதிர்கள்.
நோக்குங்கள்! நோக்குங்கள்! நோக்கம் தான்
தெரிந்ததுவோ? தெரிந்துவிடின்
போக்கற்ற பிறவியெனப் புவியில்
தாக்குண்டலைகின்றீரே? ஏன்?

'அஞ்சுதலற்ற கதிர்கள். அட,
அண்டத்தே யார்க்கும் அஞ்சுவமோ?
ஓராயிரம் கோடி கோடியாண்டுகள்
ஓடியே வந்தோம். வருகின்றோம். வருவோம்.
காலப் பரிமாணங்களை வெளியினிலே
காவியே வந்தோம்.
சூன்யங்கள் கண்டு சிறிதேனும்
துவண்டுதான் போனோமோ?
அஞ்சுதலற்ற நெஞ்சினர் எம்முன்னே
மிஞ்சி நிற்பவர் தானுண்டோ?
தெரிந்ததா? விளக்கம் புரிந்ததா?
தெரிந்திடினோ? அன்றி புரிந்திடினோ?
உரிமையற்ற புள்ளெனவே உழல்கின்றீரே யிவ்வுலகில்.
அட,
துள்ளியெழத் தான் மாட்டீரோ?
புத்துலகம் சமைத்திடத்தான் மாட்டீரோ?
புரிந்ததா? சுடர்ப்பெண்கள் பகரும் இரகசியம்
புரிந்ததா?

[தொடரும்]

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.