அத்தியாயம் இரண்டு: மாநகரத்து மாமழையும், மனோரஞ்சிதமும்!

இருண்டிருக்கும் மாநகரத்திரவு.
இருளைக்கிழித்தொரு மின்னலின் கோடிழுப்பு.
இடியின் பேரொலி.
யன்னலினூடு  பேசாத்திரைப்படமாய்
மழைக்காட்சி விரிகிறதெதிரே.

கட்டடக்காட்டு விருட்சமொன்றின் பொந்துக்குள்ளிருந்து பெய்யும் மாநகரத்து மழையைப் பார்த்துக்கொண்டிருக்கின்றேன். சலனப்படமொன்றின் நிகழ்வுகளைப் பார்த்துக்கொண்டிருப்பதைப்ப் போல் வானம் பொத்துக்கொண்டு பெய்துகொண்டிருக்கின்றது. இயற்கை நிகழ்வுகளில் எனக்குப் பிடித்த நிகழ்வு பொழியும் மழை. பெய்யும் மழையை இரசிப்பதிலுள்ள சுகமே தனி. பால்ய பருவத்தில் 'மழையே வா' என்று வரவேற்று பாடியது தொடக்கம், காகிதக் கப்பலை பீலியால் வீழ்ந்து ஓடும் நீரில் விடுவது தொடக்கம் ஆரம்பித்த தொடர்பு. பின்னர் பதின்ம வயதுகளிலும் தொடர்ந்தது. இரவு மழை, வயற்புறத்து மண்டூகங்களின் இசைக்கச்சேரி, சடசடக்கும் ஓட்டுக்கூரைகளில் பட்டுத்தெறிக்கும் நீரொலி, இடையிடையே மின்னும் மின்னல் நங்கையரின் ஒளியழகு, தொடரும் உருண்டோடும் பேரிடியோசை. இவற்றைப் படுக்கையில் படுத்திருந்தபடி இரசிப்பதிலுள்ள சுகம் தனித்துவம் மிக்கது. சில சமயங்களில் பகல் மழைகளில் .நாற்சாரப் பீலிகளிலிருந்து நீர் வீழ்ச்சியெனப் பாயும் நீரில் குளித்து மகிழ்வதிலென்னை மறந்திருக்கின்றேன்.

எழுத்துகள் எவ்வகையியாயினும் , கவிதை, கதை, கட்டுரை எவ்வகையினதாயினும் அவற்றில் விபரிக்கப்படும் மழைக்காட்சிகள் என் வாசிப்பனுபவங்களுக்கு இன்பத்தைத் தந்தன. எத்தனை மழைக்காட்சிகளில் என்னை நான் பறி கொடுத்திருக்கின்றேன்.

இழந்தது உறவுகள் , உருண்டு புரண்ட மண் மட்டுமல்ல, இதுபோன்ற இயற்கை நிகழ்வுகளையும்தாமென்று உணர்ந்தது உள்ளம். இழந்ததையெண்ணிக் கழிவிரக்கமா? இன்னுமா? அன்று மட்டுமல்ல, இன்று மட்டுமல்ல, என்றுமே இருக்கப்போகும் உணர்வு இதுவென்றும் உணர்ந்தேன்.

உணர்வுகளுக்கு அடை போட முடியுமா? எதற்காக? யாருக்காக? வயற்புறத்து மண்டூகங்களின் விடியும்வரைக் கச்சேரிகளற்ற மாநகரத்துப் பெருழை! பேய்மழை! மழையென்றாலெனக்கு எப்போதும் மாகவியின் மழைக்கவிதை மனத்தில் உருவெடுக்கும். உணர்ச்சிகள் ஊற்றெடுக்கும் என்ன கவிஞன் அவன்! "பேய்கொண்டு தக்கைய"டிக்கும்: காற்று! "வெட்டியிடிக்கும்" மின்னல்! "கொட்டியிடிக்கும்" மேகம்! "பக்கமலைகளுடைந்து"பாயும் வெள்ளம்! "தாளங்கள் கொட்டிக் கனைக்கும்" மேகம்! "பக்கமலைகளுடைந்து"பாயும் வெள்ளம்! "தாளங்கள் கொட்டிக் கனைக்கும்" மேகம்!

மாநகரத்துப்பெருமழை பொழிந்து தள்ளுகிறது. படுக்கையில் குடங்கிக்கிடக்கின்றேன். பொழியும் மழையைப் பார்க்கின்றேன். வெளியே விரிந்திருக்கும் இருளில் வெட்டியடிக்கவில்லை மின்னல்! தக்கையடிக்கவில்லை; விண்ணைக்குடையவில்லை காற்று. கொட்டியிடிக்கவில்லை மேகம்! அப்படியா? அப்படித்தான் தோன்றியது. அல்லது என் மனப்பிரமையா! கழிவிரக்கத்தின் வெளிப்பாடா?

ஒரு காலத்தில் மழை பொழிந்தபோது கோவைமரத்தில் , நனைந்த சிறகு சிலிர்த்த பசுங்கிளிகளைப் பார்த்து மெய்ம்மறந்ததை எண்ணிக்கொண்டேன். 'மழை வா! வேயில் போ!" பாடிக்கழித்த பாடசாலைப் பருவங்களை எண்ணிக்கொண்டேன். ஓட்டுக்கூரையில் மழைத்தாரை பட்டுக் கேட்கும் சடசடப்பை இரசித்தபடி படுத்திருந்ததை எண்ணிக்கொண்டேன். வெளியே மழை அமைதியாகப் பெய்து கொண்டிருந்தது! ஆரவாரமற்ற அமைதியான மழை! பெருமழை! பேய்மழை! மாநகரத்துப் பெருமழை!

மனோரஞ்சிதத்துக்கு  மழைக்காட்சியென்றால் பெரு விருப்பு. குழந்தைபோல் குதித்துக் கும்மாளமிடுவாள். அத்துணை களிப்பு அவளுக்கு. மழையை இரசிப்பது, மழையில் குளிப்பது, மழையை நினைப்பது, அதில் நனைவது எல்லாவற்றிலும் அவளும் என்னைப்போல்தான்.  சங்கத்தமிழ் இலக்கியத்தில் வரும் மாமழை என்னும் சொல் அவளுக்கு மிகவும் பிடிக்கும். குறிப்பாகச் சிலப்பதிகாரத்தில் வரும்
 'மாமழை போற்றுதும் மாமழை போற்றுதும், நாமநீர் வேலி உலகிற்கு அவன்அளிபோல், மேல்நின்று தான்சுரத்த லான்' என்னும் வரிகள் அவளுக்கு மிகவும் பிடித்த வரிகள்.  நற்றிணையில் வரும  'இரு விசும்பு அதிர மின்னி கருவி மாமழை கடல் முகந்தனவே' என்னும் வரிகளும் அவளுக்குப் பிடித்த மேலுமிரு வரிகள்.  இவையெல்லாவற்றையும் விட அவளுக்கு அதிகமாகப் பிடித்த  வரிகள் செம்புலப் பெயல்நீரார் எழுதியவை:

 'யாயும் ஞாயும் யார் ஆகியரோ?
எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளீர்?
யானும் நீயும் எவ்வழி அறிதும்?
செம்புலப் பெயல் நீர் போல
அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே.'

அவளுக்குப் பிடித்த முக்கியமான கவிஞர்களில் ஒருவர்  செம்புலப் பெயல்நீரார். இவ்வரிகளை வைத்துத் திரைப்படக் கவிஞர் கண்ணதாசனும் பாடலொன்றை எழுதியிருக்கின்றார். அதுவும் அவளுக்கு மிகவும் பிடிக்கும். 'வாழ்கைப் படகு' படத்தில் வரும் நேற்று வரை நீயாரோ? நான் யாரோ? பாடல்தான் அது. அப்பாடலை வைத்து நாமிருவரும் சில சமயங்களில் வேடிக்கையாக மாறி மாறி உரையாடிக் களிப்பதுண்டு.  உதாரணத்து ஒன்று.

மனோரஞ்சிதம் - 'நேற்றுவரை நீ யாரோ?"
நான் - 'நான் யாரோ?"
மனோரஞ்சிதம் - 'இன்று முதல் நீ வேறோ?"
நான் - 'நான் வேறோ"

இவ்விதம் அப்பாடலின் வரிகளை இருவரும் பாடிப் பொழுதைக் களிப்பதிலுள்ள இன்பம் தனி.

மனோரஞ்சிதத்தும் இலக்கியத்தில் மட்டும்தான் ஆர்வமென்றில்லை. இருப்பு , வானியற்பியல் , இயற்கை, நுண்கலைகள் என்று பல விடயங்களிலும் என்னைப் போல் ஆர்வமுண்டு. அவை பற்றிய நூல்கள் ,கட்டுரைகள் எவையென்றாலும் விரும்பி வாசிப்பாள். அதனால் அவளுடன் இவை பற்றித் தர்க்கபூர்வமாக, அறிவுபூர்வமாக இவளுடன் விவாதிக்கலாம். இருவருமே இவ்விதமான விவாதங்களை விரும்பிச் செய்வதுண்டு.

இருவரின் மனப்போக்கும் இலக்கியப் படைப்புகள் , கலைகள் விடயத்தில் பெரிதும் ஒன்றாகவே இருந்தது. எழுத்தாளர் சுந்தர ராமசாமி கிடைக்கும் சமயங்களிலெல்லாம் வெகுசன இலக்கியப் படைப்புகளை வாங்கு வாங்கென்று வாங்குவார். அவரது ஜே.ஜே.சில குறிப்புகள் நாவலின் நாயகன் புகழ்பெற்ற மலையாள எழுத்தாளரான ஜே.கே தமிழின் வெகுசன படைப்புகளைப்பற்றி வேடிக்கையும், எள்ளலுமாக 'உங்கள் சிவகாமி சபதத்தை முடித்துவிட்டாளா..? ' என்று கேட்பதாகத் தமிழின் வெகுசன இலக்கியத்தை அவர் எள்ளி நகையாடுவார்.

இதிலுள்ள மிகப்பெரிய குறை என்னவென்றால் என்பதை மனோரஞ்சிதம் பின்வருமாறு சுட்டிக்காட்டுவாள் - 'வெகுசன இலக்கியமென்பது தமிழுக்கு மட்டும் உரித்தான ஒன்றல்ல. எல்லா மொழிகளிலும் உள்ளதுதான். சுரா இது ஏதோ தமிழுக்கு மட்டுமே உரிய ஒன்றாகக் காட்டுவது முட்டாள்தனம். இவர் பதிலுக்கு மலையாள வெகுசனப் படைப்பொன்றைச் சுட்டிக்காட்டியிருக்க வேண்டும். அதைச் செய்யாமல் ஏதோ வெகுசன இலக்கியத்தால் தமிழின் இலக்கியத்தரம் குறைந்து போவதாகப் பாசாங்கு செய்வதை ஏற்க முடியாது விக்கிரமா'

மனோரஞ்சிதம் என்னை அன்புடன் விக்கிரமா என்றழைக்கையில்  உண்மையில் என் மெய் சிலிர்ப்பதுண்டு. அவ்வளவு இனிமையாக, கனிவாக என்னை அவள் அழைப்பாள். அவள் கூறுவது முற்றிலும் சரியானதொரு கூற்று. நான் அதனை முற்றாகவே ஏற்பவன். பதிலுக்கு 'ரஞ்சிதம், நீ கூறுவது சரிதான். குழந்தை இலக்கியம் போல் வெகுசன இலக்கியத்துக்கும் ஒருவரின் வாசிப்பனுபவத்தில் முக்கியமானடோரிடமுண்டு. பங்குண்டு. இதனை இவர் சுரா உணரவில்லை' என்பேன். நான் அவ்விதம் அவளை ரஞ்சிதமென்று அவ்வப்போது விளிப்பதை அவளும் மிகவும், விரும்புவாள்.

மனோரஞ்சிதம் அத்துடன் நல்லதொரு பாடகியும் கூட.  அவளுக்குப் பாரதியாரின் கவிதைகள் மிகவும் பிடிக்கும். குறிப்பாக 'நின்னைச் சரணடைந்தேன் கண்ணமா' பாடல் அவளுக்கு மிகவும் பிடிக்கும். அதனை மனதொன்றி, இனிமையாக பாடுவாள். அவ்விதம் அவள் பாடுவதைக் கேட்பது எனக்கும்  மிகவும் பிடிக்கும். மனம் அமைதியற்றிருக்கும் தருணங்களில் அவளை அக்கவிதையைப் பாடச்சொல்லிக் கேட்பதுண்டு. அடிக்கடி இவ்விதம் கேட்பதைக் கண்ட அவள் அதனை ஒலிப்பதிவு செய்து தேவையான நேரமெல்லாம் கேளு விக்கிரமா என்று தந்துவிட்டாள்.

நின்னைச் சரணடைந்தேன்- கண்ணம்மா
நின்னைச் சரணடைந்தேன்!

பொன்னை உயர்வைப் புகழை விரும்பிடும்
என்னைக் கவலைகள் தின்னத் தகாதென்று

மிடிமையும் அச்சமும் மேவி என் நெஞ்சில்
குடிமை புகுந்தன, கொன்றவை போக்கென்று

தன் செயலெண்ணித் தவிப்பது தீர்ந்திங்கு
நின் செயல் செய்து நிறைவு பெறும்வண்ணம்

துன்பமினியில்லை சோர்வில்லை
சோர்வில்லை தோற்பில்லை
நல்லது தீயது நாமறியோம் நாமறியோம்
நாமறியோம்
அன்பு நெறிகள் அறங்கள் வளர்ந்திட
நல்லது நாட்டுக! தீமையை ஓட்டுக!
நின்னைச் சரணடைந்தேன்- கண்ணம்மா
நின்னைச் சரணடைந்தேன்!

ஜன்னைலூடு இன்னும் பொழிந்துகொண்டிருக்கும் மழையை,. மாநகரத்து மழையை, சலனமற்ற அமைதியான மழையைப் பார்க்கின்றேன். நம் சங்கத்துப்புலவருக்குத்தான் எத்துணை மொழி வளம்.  ʻபெரும்பெயல்’, ʻமாமழை’,ʻபடுமழை’,ʻகலிமழை’ போன்ற் சொற்றொடர்கள் குறுந்தொகை போன்ற சங்க இலக்கியங்களில் அதிகம். ʻபெரும் பெயல் உழந்த இரும்பிணர்த் துறுகல்’, ʻபடுமழை பொழிந்த சாரல்’,ʻகலிமழை கெழீஇய கான்யாற்று இடுகரை’ போன்ற வரிகள் என்னை மிகவும் கவர்ந்தவை. உரிய  காலத்தில் பெய்யும் மழையைக் காலமாரி என்றார்கள். காலந்தப்பிப் பெய்யும் மழையை வம்பமாரி என்றார்கள். வம்பமாரி என்னும் சொற்றொடர் புன்னகையை வரவழைத்தது. வம்பு என்னும் சொல் பழந்தமிழ்ச் சொல். இலங்கைத் தமிழர்கள் பேச்சு வழக்கில் குறிப்பாக ஆத்திரத்துடன் சண்டை பிடிக்கையில் வம்பிலை பிறந்ததுகள் என்று சாதாரணமாகவே இச்சொல்லைப் பாவிப்பதை அவதானித்திருக்கின்றேன். முறை தவறி, காலந் தவறி பெய்த மழையைப்போல் முறை தவறிப் பிறந்ததைக் குறிக்கப் பயன்படுத்தினார்கள் போலும்.

இருண்டிருக்கும் மாநகரத்திரவு.
இருளைக்கிழித்தொரு மின்னலின் கோடிழுப்பு.
இடியின் பேரொலி.
யன்னலினூடு பேசாத்திரைப்படமாய்
மழைக்காட்சி விரிகிறதெதிரே.
இழந்தது உறவுகள் , உருண்டு புரண்ட மண்
மட்டுமல்ல,
இதுபோன்ற இயற்கை நிகழ்வுகளையும்தாமென்று
உணர்ந்தது உள்ளம்.
இழந்ததையெண்ணிக் கழிவிரக்கமா?
இன்னுமா?
அன்று மட்டுமல்ல,
இன்று மட்டுமல்ல,
என்றுமே இருக்கப்போகும்
உணர்வு இதுவென்றும்
உணர்ந்தேன்.

உணர்வுகளுக்கு அடை போட முடியுமா?
எதற்காக? யாருக்காக?
வயற்புறத்து மண்டூகங்களின்
விடியும்வரைக் கச்சேரிகளற்ற
மாநகரத்துப் பெருழை! பேய்மழை!
மழையென்றாலெனக்கு எப்போதும்
மாகவியின் மழைக்கவிதை
மனத்தில் உருவெடுக்கும்.
உணர்ச்சிகள் ஊற்றெடுக்கும்
என்ன கவிஞன் அவன்!
"பேய்கொண்டு தக்கைய"டிக்கும்: காற்று!
"வெட்டியிடிக்கும்" மின்னல்!
"கொட்டியிடிக்கும்" மேகம்!
"பக்கமலைகளுடைந்து"பாயும் வெள்ளம்!
"தாளங்கள் கொட்டிக் கனைக்கும்" மேகம்!

மாநகரத்துப்பெருமழை பொழிந்து தள்ளுகிறது.
படுக்கையில் குடங்கிக்கிடக்கின்றேன்.
பொழியும் மழையைப் பார்க்கின்றேன்.
வெளியே விரிந்திருக்கும் இருளில்
வெட்டியடிக்கவில்லை மின்னல்!
தக்கையடிக்கவில்லை;
விண்ணைக்குடையவில்லை காற்று.
கொட்டியிடிக்கவில்லை மேகம்!
அப்படியா? அப்படித்தான் தோன்றியது.
அல்லது என் மனப்பிரமையா!
கழிவிரக்கத்தின் வெளிப்பாடா?

ஒரு காலத்தில் மழை பொழிந்தபோது
கோவைமரத்தில் , நனைந்த சிறகு சிலிர்த்த
பசுங்கிளிகளைப் பார்த்து மெய்ம்மறந்ததை
எண்ணிக்கொண்டேன்.
'மழை வா! வேயில் போ!"
பாடிக்கழித்த பாடசாலைப் பருவங்களை
எண்ணிக்கொண்டேன்.
ஓட்டுக்கூரையில் மழைத்தாரை பட்டுக்
கேட்கும் சடசடப்பை இரசித்தபடி
படுத்திருந்ததை
எண்ணிக்கொண்டேன்.
வெளியே மழை அமைதியாகப்
பெய்து கொண்டிருந்தது!
ஆரவாரமற்ற அமைதியான மழை!
பெருமழை! பேய்மழை!
மாநகரத்துப் பெருமழை!

மாமழை போற்றுதும்.
மாமழை போற்றுதும்.

[தொடரும்]