அத்தியாயம் ஒன்று -  நான் விக்கிரமாதித்தன் பேசுகின்றேன்!

city_man_by_auguat_hermann_scherer

என் பெயர் விக்கிரமாதித்தன்.  என்னை நன்கு அறிந்த சிலர் என்னை நவீன விக்கிரமாதித்தனென்றும் கூறுவார்கள். முற்றும் தளராத விக்கிரமன் - விக்கிரமாதித்தன் - எவ்விதம் மீண்டும் மீண்டும்  முருங்கை மரத்திலேறி வேதாளம் குடியிருக்கும் தொங்குமுடலைத்  தூக்கி வருவானோ அவனைப்போன்றவனே நானும். முயற்சி செய்வதில் எனக்குச் சலிப்பில்லை.மீண்டும் மீண்டும் முயற்சி செய்வதில் எனக்குப் பெருங்களிப்பு என்று வேண்டுமானால் நீங்கள் கருதலாம். அதிலெனக்கு எவ்விதம் ஆட்சேபணையுமில்லை.

அட்டா, வித்தியாசமானவனாக இருக்கின்றானே இவன் என்று நீங்கள் எண்ணுவதை என்னால் நன்றாகவே உணர்ந்துகொள்ள முடிகின்றது. இங்கு நான் கூறப்போவது என்னைப்பற்றி. எனது எண்ணங்கள், என் வாழ்க்கைச் சம்பவங்கள் இவற்றைப்பற்றி. என் குறிப்பேடுகள் பலவற்றையும் இங்கு நான் உங்களுடன் அவ்வப்போது பகிர்ந்துகொள்வேன். அவை என்னைப்பற்றிய சரியானதொரு சித்திரத்தை உங்களுக்கு அறியத்தரலாம். கோடியிலொருவனான ஒரு சாதாரண மானுடன் இவனைப்பற்றி அறிவதிலென்ன சுவாரசியமிருக்க முடியுமென்று நீங்கள் கேட்பது என் காதுகளில் விழுகின்றது. இதற்கு நான் கூறப்போகும் பதிலிதுதான்: 'மகா காலக்சிகளை உள்ளடக்கியுள்ள மிகச்சாதாரணமான சுடரொன்றின் கோள்களிலொன்றில்தான் நாம் , மானுடர்கள் வாழ்கின்றோம். அவ்வகையில் ஒவ்வோருயிரும் இங்கு முக்கியத்துவம் மிக்கதுதான்.அவ்வகையில் நானும் முக்கியத்துவம் மிக்கவனே என்பது என் தீர்க்கமான நம்பிக்கை.

இருப்பை இரசிப்பதில், சிந்திப்பதில், வாசிப்பதில் எனக்கு எப்பொழுதுமே பெரு விருப்புண்டு. இப்பிரபஞ்சத்தில் நம் இருப்பு மகத்தானது மட்டுமல்ல அற்பமானதும் கூடத்தான். சிந்திப்பு  இன்பத்தைத் தருகின்றது. சிந்திப்பு எனக்குப் புரிதலைத் தருகின்றது. சிந்திப்பு எனக்குத் தெளிவைத்தருகின்றது.

முப்பரிமாண உருவங்களைக்கொண்டு நாம் கானும் உலகை, உயிர்களை , அவை தெரியும் அகத்தோற்றங்களை வரைவதைக் 'கியூபிச' ப் பாணி என்போம். இங்கு நீங்கள் என், விக்கிரமாதித்தனின் ஆளுமையை, எண்ணங்கள், குறிப்புகள், சம்பவங்கள் இவற்றினூடு கூடவே காலத்தையும் உள்ளடக்கிக்  காணப்போகின்றீர்கள். காலவெளிச்சட்டத்தில் என் ஆளுமையை அணுகப் போகின்றீர்கள். இத்தகைய அணுகுமுறைக்கு என்ன  பெயர் வைக்கலாமென்று எண்ணிக்கொண்டிருக்கின்றேன். உங்களுக்கு நல்லதொரு பெயர் தெரிந்தால் பகிர்ந்துகொள்ளுங்கள்.

உள்ளிருந்து எள்ளி நகைத்தது யார்?!
ஒவ்வொரு முறையும் இவ்விதம்!
நகைப்பதே உன் தொழிலாயிற்று.!
விரிவெளியில் படர்ந்து கிடக்குமுன்!
நகைப்போ , நீ விளைவிக்கும் கோலங்களோ,!
அல்லது உன் தந்திரம் மிக்க!
கதையளப்போ எனக்கொன்றும் புதியதல்லவே.!
இரவுவானின் அடுக்குகளில்!
உனது சாகசம் மிக்க!
நகைப்பினை உற்றுப் பார்த்திடும்!
ஒவ்வொரு இரவிலும்,!
நட்சத்திரச் சுடர்களில்,!
அவற்றின் வலிமையில்!
உன்னை உணர்கின்றேன்.!
எப்பொழுதுமே இறுதி வெற்றி!
உனக்குத்தான்.!
எப்பொழுதுமே உன்காட்டில்!
மழைதான். அதற்காக!
மனந்தளர்வதென் பண்பல்ல. ஆயின்!
உன்னை வெற்றி கொள்ளுதலுமென்!
பேரவாவன்று.பின்!
உனைப் புரிதல்தான்.!
ஓரெல்லையினை!
ஒளிச்சுடருனக்குத்!
தந்துவிடும் பொருளறிந்த!
எனக்கு!
அவ்வெல்லையினை மீறிடும்!
ஆற்றலும், பக்குவமும்!
உண்டு; புரியுமா?!
வெளியும், கதியும், ஈர்ப்பும்!
உன்னை, உன் இருப்பினை!
நிர்ணயித்து விடுகையில்!
சுயாதீனத்துடன்!
பீற்றித் திரிவதாக உணரும்!
உன் சுயாதீனமற்ற,!
இறுமாப்புக்கு!
அர்த்தமேதுமுண்டா?!
இடம், வலம் , மேல், கீழ்.!
இருதிசை, நோக்கு கொண்ட!
பரிமாணங்களில் இதுவரையில்!
நீ!
ஒருதிசையினைத் தானே காட்டி!
புதிருடன் விளங்குகின்றாய்?!
உன் புதிரவிழ்த்துன்!
மறுபக்கத்தைக் காட்டுதலெப்போ?!
இரவி , இச் சுடர் இவையெலாம்!
ஓய்வாயிருத்தலுண்டோ? பின்!
நான் மட்டுமேன்?!
நீ எத்தனை முறை தான்!
உள்ளிருந்து!
எள்ளி நகைத்தாலும்!
மீண்டும் மீண்டும்!
முயன்று கொண்டேயிருப்பேன்.!
நீ!
போடும் புதிர்களுக்கு!
விளக்கம் காணுதற்கு!
முயன்று கொண்டேயிருப்பேன்.!
வேதாளங்களின் உள்ளிருந்து!
எள்ளி நகைத்தல் கண்டும்!
முயற்சியில்!
முற்றுந் தளராதவன் விக்கிரமாதித்தன்!
மட்டும்தானா?

'என்ன பலமான சிந்தனை நண்பரே'

சிந்தனை கலைந்து திரும்பிப் பார்க்கின்றேன்.

கவிஞர் , மகா கவிஞர், நம் காலத்து மகா கவிஞர் புன்னகையுடன் நிற்கின்றார்.

சொற்களைத்  தேர்ந்தெடுத்து சோகங்களை வடித்தெடுப்பதில் வல்லவர் இவர். அச்சோகங்களில் மூழ்கி இவரைக் கொண்டாடப் பலருள்ளனர்.  இவரது கவிதை வரிகளில் இவர் வெளிப்படுத்தும் உணர்வுகள் இவரது ஆழ்மனத்து உணர்வுகளல்ல. அவை அவரது ஆழ்மனத்தை மூடிநிற்கும் அவரது வெளி மனத்துச் செருக்குகள். சிந்தித்துச் சொற்களைத் தேர்ந்தெடுத்துப்பதில் வல்லவர் இவர். அவ்வகையில் இவர் மகா கவிஞரல்லர். மகா புலவர்.  கவிதைகளை இரசிக்க முடிந்த என்னால் புலவர்களின் புத்திச் செருக்குகளை இரசிக்க முடிந்ததில்லை; முடிவதில்லை. அது அவருக்கும் தெரியும். ஆனால் அது பற்றியெல்லாம் அவர் என்னுடன் அலட்டிக்கொள்வதேயில்லை.

இவரைப்பற்றிய என் எண்ணங்களை என் குறிப்பேட்டிலொரு கவிதையாக நீங்கள் காணலாம். அதனை உங்களுக்காக இங்கு தருகின்றேன். படித்துப் பாருங்கள்.

மகாகவிஞர் அவர் என்று கூறுவர்.
சொற்களைத் தேர்ந்துடுத்து
சோகங்களை வடித்தெடுப்பதில்
அவர் வல்லவர்.
அவரது கவிதை வரிகளில்
அவர் வெளிப்படுத்தும் உணர்வுகள்
அவரது ஆழ்மனத்து உணர்வுகள்
அல்ல.
அவரது ஆழ்மனத்தை மூடிநிற்கும்
அவரது வெளிமனத்தின் செருக்குகள் அவை.
 சிந்தித்துப் பொருத்தமான சொற்களை
அவர் தேர்ந்தெடுப்பது
அவற்றின் வாசகரைக் கவர மட்டுமே.
அவை அவரின் இதயத்தின்
ஆழ்ஊற்றென்றால்
அவற்றுக்கு நான் அடிமை.
ஆனால் அவரிதயத்தில்
அவ்விதம் ஊற்றுகள் ஊறுவதில்லை.
ஆழ் உணர்வுகளை அவர் சொற்கள்
வெளிப்படுத்துவதில்லை.
அதனால் அவை கவிதைகள்
அல்ல.
 
ஆழமனத்தின், அக உணர்வின்
வெளிப்பாடு கவிதை.
புறமனத்தின் புத்தியின்
வெளிப்பாடு புலமை.
அவர் மகாகவிஞரல்லர். ஆனால்
மகா புலவர்.
கவிதைகளை இரசிக்க முடிந்த என்னால்
புலவர்களின் புத்திச் செருக்குகளை இரசிக்க
முடிந்ததில்லை; முடிவதில்லை.

இதுபோன்ற பல கவிதைகளை என் குறிப்பேடு தாங்கி நிற்கின்றது. கலை, இலக்கியம் , அரசியல், பொருளாதாரம், வானியற்பியலென்று பலவற்றைப் பற்றி அவை பேசும். பல்வகை மானுட உணர்வுகளைப் பற்றி அவை பேசும். அவற்றையும் அவ்வப்போது உங்களுடன் பகிர்ந்துகொள்வேன்.

கவிஞர் மீண்டும் கேட்டார் 'என்ன பலமான சிந்தனை'

அதற்கு நான் கூறினேன் 'பலமான சிந்தனையெதுவுமில்லை. பலங்குறைந்த சிந்தனைதான். வலிமையற்ற சாதாரண சிந்தனைதான்.'

கவிஞர் என் பதிலைக்கேட்டுச் சிரித்தார் 'அந்தப் பலத்தைப் பற்றி நான் இங்கு கூறவில்லை. ஆனால் எல்லோரும் அவ்விதமே  எண்ணிக்கொள்கின்றார்கள். கடுமையான சிந்தனையைப் பலமான சிந்தனையென்றும் வழக்கில் கூறுவதுண்டு. நண்பர் மறந்து விட்டாரென்று நினைக்கின்றேன்.'

இதற்கு நான் இவ்விதம் பதிலளித்தேன் 'மகா கவிஞருக்கு நகைச்சுவை உணர்வு குறைந்து விட்டது போலும். கொரோனா பலரையும் மாற்றி விட்டதுதான்.'

ஆனால் கவிஞர் சளைக்கவில்லை. ' நானும் பகடியாகத்தான் கூறினேன். பாவம் நீங்கள் அதனைப்புரிந்துகொள்ளவில்லை.'

'இந்தச் சொற்றொடர் பலமான சிந்தனை என்னும் சொற்றோடர் ஏன் வந்ததென்று நினைத்துப் பார்த்திருக்கின்றீர்களா?"

கவிஞர் தர்க்கரீதியான, நல்லதொரு பதிலை இவ்விதம் தந்தார் 'சிந்தனைகள் பலவற்றில் ஒருவர் மூழ்கியிருக்கையில், அவரைப்பார்த்து என்ன பலவாகச் சிந்தனை என்று கேட்டதுதான் காலப்போக்கில் பலமான சிந்தனையாகப் பரிணாமம் அடைந்திருக்க வேண்டும்.'

'நல்ல பதில்' என்றேன். கூடவே 'இதனால்தான் நீங்கள் மகா புலவர்' என்றேன். கவிஞரும் அதை இரசித்தாரென்பதை அவரது முகபாவனைகள் எடுத்துரைத்தன. சிறிது நேரம் உரையாடிய  பின்னர் மகா புலவர் சென்று விட்டார். மானுடர்கள்தாம் எத்தனை வகையினர். ஓவ்வொருவர் உளவியலும்தான் எத்தனை எத்தனை வகை!

[தொடரும்]

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.