அத்தியாயம் 12

அக்காள் காட்டிய வீடியோ காட்சி, என்னை அதிரவைத்த காரணம், அதிலே அவளின் மகன் தனது இரண்டு கக்கத்திலும் கைத்தடியை வைத்தபடி மெதுவாக நடந்து வந்துகொண்டிருந்தான்.

மீண்டும் என்னைக் கிண்டல்,கேலி பண்ணும் நோக்காய் இருக்குமோ என்று ஒருகணம் தோன்றியபோதிலும், அந்தக் கைத்தடிகள் ஒறிஜினல் என்பதால் அங்கே விளையாடுவதற்கு சான்ஸ் இல்லை.

எத்தனை துடியாட்டம், எத்தனை சேட்டைகள், கூச்சல்,கும்மாளம்ண்ணு ஒருகணம்கூட சோர்ந்தே இருக்காத பையன், இலேசாகத் தலையைச் சாய்த்த நிலையில், ஊமைபோல வருவதைக் கண்டபோது, என் உள்ளம் உருகிப்போனது.

மீண்டும் அக்காளின் முகம். தொடர்ந்து பேசினாள்.

“பாத்துக்கிட்டியா…. சொல்லுப்பேச்சுக் கேக்காம சேக்காளி(friends)பசங்களோட சேந்து வாய்க்கால் தண்ணில “பல்டி”அடிச்சு பாய்ஞ்சிருக்கான்…. அந்த இடத்தில பாறையொண்ணு கெடந்ததுபத்தி கவனிக்கல…. வலக்காலில பலமான அடி…. இனி இந்த கைத்தடிய வெச்சுக்கிட்டு “பல்டி” அடீன்னு டாக்டர்மாரு சொல்லி அனுப்பியிருக்காங்க…. ”

“சம்பவம் நடந்து எத்தனை நாளாச்சு…..”

“அத தெரிஞ்சு என்னபண்ணப் போறே…. இந்த சமாச்சாரம் பத்தி உனக்கெல்லாம் போன்பண்ணி, தேவையில்லாமல் உன்னய “டிஸ்டாப்” ஆக்க வேண்டாம்ணு அத்தனை பேருக்கும் நான்தான் சொல்லித் தடுத்தேன்…. இருக்கிற புத்திய வெச்சு இனியாச்சும் கொரங்கா இருக்காம மனிசப் பயலா இருக்கசொல்லி நாலு அட்வைசு குடு….”

சொல்லியபடி மகனிடம் போனைக் குடுத்துவிட்டு, அப்பால் நகன்றாங்க அக்கா.

போனைக் கையில் பிடித்தபடி நின்றேனே தவிர, வாய் திறந்து பேச வார்த்தையே வரவில்லை.

“சித்தி………”

அவனே கூப்பிட்டான். ஆனால், குரலில் உற்சாகம் இல்லை. கண்ணீர் வழிந்துகொண்டிருந்தது.

“என்னப்பா…. என்னப்பா இது…. கொஞ்சமாச்சும் கவனமா இருக்கவேண்டாமாப்பா….”

இதற்குமேல் என்ன பேசுவதென்றே தெரியவில்லை. அதிர்ச்சி நீங்கா நிலையில் நான்.

“சித்தி…. மத்தவங்க முன்னாடி உங்களைக் கேலிபண்ணி வருத்தப்பட வெச்சிருக்கேனில்லியா…. அதுக்கு தண்டணையாத்தான் சாமி என்னய இப்பிடி ஆக்கிரிச்சு…..”

சொல்லிவிட்டுக் கதறிக்கதறி அவன் அழுவதை என்னால் தாங்க முடியவில்லை.

பிறந்த காலத்திலிருந்து, என்கையிலே தூக்கி அணத்து முத்தமிட்டு செல்லமாக வளர்த்த மகன் அல்லவா!

கல்லாக வாழ்ந்த அக்காள், கரைந்துபோய் விட்டதற்கான முழுமையான காரணம் இப்போது தெளிவாகப் புரிந்தது.

இதற்கும்மேலே பேசினால், என்னைக் கட்டுப்படுத்த யாராவது வரவேண்டியிருக்கும். இதற்கு ஒரே வழி…. நாளை காலையில் என்னவரை அழைத்துக்கொண்டு வீரவநல்லூர் கிளம்பவேண்டியதுதான்.

காலையில் புறப்பட்டபோது, என் அத்தை, மாமா, அண்ணி,அண்ணன் அனைவரும் தயாராகி எங்களுடன் சேர்ந்துகொண்டதைப் பார்த்தபோது, மெய்சிலிர்த்துப் போனேன்.

என் அண்ணியார் அருகே வந்தாங்க.

“என்ன மதனி…. சத்தம் காட்டாம நீங்க கிளம்பினா எங்களுக்கு ஒண்ணுமே தெரியாமப் போயிடும்னு கணக்குப் பண்ணினீங்களா…. அது ரொமான்ஸ் பண்ணப் போறப்போ, நீங்க ரெண்டுபேரு மட்டும் போங்க…. இது உடம்புக்கு முடியாத புள்ளைய பாக்கப் போறோம்…. அந்தப் புள்ளை உங்களுக்கு மட்டும் உறவு இல்ல….எங்களுக்கும்தான்….”

ஆமோதிப்பதுபோல தலையசைத்தபடி அருகே வந்தாக அத்தை.

“என்னம்மா பாக்கிறே…. ஏம்மகன்புள்ள பேத்திக்கு, எப்ப நீ முழு அம்மாவா மாறினியோ, அப்பவே ஒங்கம்மா,அக்கா ஒறவுக எல்லாத்துக்குமே நாங்களும் முழு உறவு ஆகீட்டோம்…. புரியிதா….”

என்னால் எதுவுமே பேச முடியவில்லை. வெளியே பிரதான தெருவின் மறுபுறம் நிற்கும் ஆல மரத்தைநோக்கி என் பார்வை சென்றது.

அதன் விழுதுகள் அகன்று முற்றி, தரையைத் தொட்டு, அவையும் வேராக மாறிக்கொண்டிருந்தன.

போனிலே துயரங்களை மறைத்து எவ்வளவுதான் இறுக்கமாகப் பேசியபோதிலும், நேரிலே பார்க்கும்போது, அதைச் சரியாகச் சாதிக்க முடியாமல், ஒரு குழந்தையாகவே ஓடிவந்து என்னைக் கட்டிப்பிடித்துக் கதறினாங்க அக்கா.

அக்காமகனும் மெதுவாக நகர்ந்தபடி அருகே வந்தான். எங்கள்கதறலில் தன்னையும் சேர்த்துக்கொண்டாங்க அம்மா.எப்படி ஆறுதல் சொல்வதென்று குழம்பிய நிலையில் அத்தை.

அத்தான் ஒருபுறம் ஒதுங்கிப்போய் நின்று தனது வேதனைகளை தீர்க்க வழிதெரியாது கதறியழ, அவுகளைக் கைத்தாங்கல்போல அணைத்தபடி ஒதுக்கமாக அழைத்துச் சென்று, ஆறுதல் சொல்லிக்கொண்டிருந்தாக என்னவர்.

யாருக்கு யார் ஆறுதல் சொல்வது, என்ன சொல்வது என்று தெரியாமல், கொட்டித்தள்ளிய உளறல்கள்,புலம்பல்கள் அனைத்தும் மெல்ல மெல்ல ஓய்ந்தபோது, அனைவருக்கும் தேநீர் தயார்செய்து கொண்டுவந்தான் சமையல்காரப் பையன்.

ஏற்கனவே அம்மாவும், அக்காளும் அருகிலேயிருந்ததால், நான் பேசவந்த சமாச்சாரத்தை நல்லபடியாக முன்னெடுத்தேன்.

“அக்கா…. நைட்டு வீடியோ கால்ல நீ காட்டுறவரைக்கும், இந்த இன்சிடென்ற் பத்தி எங்களுக்கு எதுவுமே தெரியாது…. இந்த சிட்டிவேசனில நான் என்ன முடிவு பண்ணணுமோ அதே முடிவை நாலு நாளைக்கு முன்னாடியே, என் வீட்டுக்காரரு எடுத்திட்டாக…. நீ தப்பா எடுத்துக்காத…. நாங்க மதுரையிலயிருந்து இங்க கிளம்பி வந்ததுக்கு காரணம், எல்லாரையும் பாத்திட்டுப் போறத்துக்கு மட்டுமில்ல….”

அம்மா,அக்காள்,அத்தான் ஆகியோரின் பார்வையில் எங்கள்மீது கேள்விக்கணைகள் கொழுவப்பட்டன. மெதுவகப் பார்வையை என்னவர்மீது திருப்பினேன்.

“பேசு……..” என்று தலையசைத்தார்.

“அக்கா…. இந்தாபாரு…. இந்தவீடு,நிலம் எல்லாத்தையும் மகன் பேரில, மாத்திக்குடுத்திடலாம்ணு முடிவோடதான் வந்திருக்கோம்…. அப்பா ஆசைப்பட்டமாதிரி, கெஸ்ட் ஹவுசை நம்ம சமையல்தம்பிக்கு எழுதிவைக்கப் போறோம்…..”

இப்போது, அக்காளின் பேச்சில் சிறிது கோபம் தெரிந்தது.

“என்னடி பேசிறே…. ஒருநேரத்தில, இவள் இதையெல்லாம் சுருட்ட நெனைச்சவதானேங்கிறத குத்தாமல் குத்திக்காட்டுறியா….”

அம்மாவைப் பொறுத்தவரைஅந்த சூழ்நிலைக்கு அந்த முடிவு சரியாகப்பட்டிருக்க வேண்டும் போலும். ஆனால், இந்த நேரத்தில் அக்காளின் பேச்சு ஏறுமாறாக இருப்பதைக்கண்டபோது, சில நல்ல முடிவுகள்,ஒருசிறு தவறான பேச்சின் நிமித்தம் நடக்காமலே போய்விடக்கூடாது, என்பதிலே கவனமும்,கவலையும் இருப்பதை அவுகளின் துடிப்பு காட்டிக்கொடுத்தது.

அம்மாவின் கோபம் அக்காமேல விழ,

“ஏண்டி…. அறிவுகெட்டவளே…. ஓன் தங்கச்சி என்னதான் சொல்ல வர்ராளிண்ணு முழுசா கேக்கமாட்டியா….”

அக்காள் குறுக்கிட்டாக.

“அம்மா…. இது எனக்கும் என் தங்கச்சிக்கும் இடையிலயுள்ள பெரச்சினை…. இதில நீதலையிடாத…. இது முழுக்க முழுக்க அவ சொத்து…. அவ விரும்பினா யாருக்காச்சும் எழுதி வெக்கட்டும்….. நம்ம அப்பா ஆசைப்பட்டமாதிரி கெஸ்ட் ஹவுசை சமையல் காரப் பையனுக்கு தாராளமா எழுதிக்குடு…. ஆனா வீடு,நிலம் எதுவுமே எங்களுக்கு வேண்டாம்…. ஒருநேரத்தில யாருக்காக இதையெல்லாம் எடுத்துக்கணும்னு நெனைச்சேனோ அவன் இண்ணக்கு கைத்தடிக்குள்ள முடங்கிப் போற நெலமை வந்ததுக்கு அப்புறம் இனி இந்தச் சொத்து எதுக்கு…. சொகம் எதுக்கு…. நாங்கள் மூணுபேரும் எங்கயாச்சும் போயிடலாம்னு இருக்கோம்….” கதறி அழுதாள்.

சமையல்காரப் பையன் அப்போது குறுக்கே வந்தான். அவனின் பார்வை அக்காளின்மீது விழுந்தது.

“சின்னம்மா….. குட்டியம்மா எழுதித் தர்ர வீடு,நெலம் எதுவுமே உங்களுக்கு வேணாமுண்ணா அவுங்க தர்ர கெஸ்ட் ஹவுஸ் வீடும் எனக்கு வேணாம்…. நானும் உங்ககூட கெழம்புறேன்….”

“நீ எதுக்குடா எங்க்கூடவந்து கஷ்டப்படணும்…. எங்க ஐயாவுக்கு நீ செல்லப்பிள்ளைதானே…. முன்னாடி எப்பபாத்தாலும், குட்டியம்மா…. குட்டியம்மான்னு என் தங்கச்சிக்குத்தானே தேவாரம் பாடிக்கிட்டிருப்பே…. அப்ப இருந்த அக்கறை அப்பிடியே மாறி, இப்ப சின்னம்மா…. சின்னம்மா…… ன்னு என்பக்கமா காத்து அடிக்கிது….”

“நீங்க என்னய தப்பா நெனைச்சிட்டீங்க சின்னம்மா…. ஐயாக்கு நான் செல்லப்பிள்ளைண்ணா நீங்க எனக்கு யாரும்மா…. என்னய நீங்க எப்பிடி நெனைச்சாலும் பரவாயில்ல…. என்னய பொறுத்தவரையில, உங்களை எம்புட்டு பெரியக்காவாகவும், குட்டியம்மாவ சின்னக்காவாகவும்தான் நெனைச்சுக்கிட்டிருக்கேன்…. குட்டியம்மா தம்பிபேரில வீடு, நெலத்த எழுதிவைக்கிறத நீங்க எதுக்கு வேண்டாம்ங்கணும்…. தம்பி உங்களுக்கு மட்டுமா புள்ள? குட்டியம்மாக்கும் புள்ளைதானே….! ஒரு புள்ளைக்கு அவுங்கம்மா ஆசைப்பட்டு குடுக்கிறப்போ அதை நீங்க தடுத்தீங்கண்ணா, அப்புறம் நீங்களும்,குட்டியம்மாவும் ஒரே அம்மா,அப்பா புள்ளைங்கங்கிறத யாரு ஏத்துக்குவா….?

முன்னாடி அப்பப்போ குட்டியம்மாவ நீங்க அடிச்சு சண்டைபோடுறப்போ, பாதிக்கப்பட்ட குட்டியம்மாவுக்கு ஆறுதலா இருந்தேன்…. இப்போ நீங்க எதுவுமே வேண்டாம்னு சொல்லித் திக்குத்தெசை தெரியாம கெளம்புறப்போ நான் உங்களுக்கு ஆதரவா வர்ரேன்….. நீங்களே எதுவும் வேண்டாம்ணு ஒதுங்குறப்போ, நான் மட்டும் எதுக்கு கெஸ்ட் ஹவுஸ் வீட்டை எனக்கிண்ணு கேக்கணும் சொல்லுங்க…. ஐயா இருக்கிறப்போ ஒங்க ரெண்டுபேரிலயுமே ஒண்ணுபோலத்தான் பாசம் காட்டினாரு…. அப்பிடியிருக்கிறப்போ இந்த நெலையில நான் ஒங்க கூட இல்லாம கெஸ்ட் ஹவுஸ் வீடு கெடைச்சிருக்கேன்னு சந்தோசப்பட்டா, அப்புறம் ஐயாட ஆத்மாவே என்னய மன்னிக்காது….”

சமையல்காரப் பையனின் பேச்சைக் கேட்டபோது, அனைவரின் கண்களும் கலங்கின. சற்று அப்பால் நின்றுகொண்டிருந்த அத்தான் சட்டென வந்து, அவனை அணைத்துக் கொண்டார்.

“வாழ்க்கையில ஒவ்வொருத்தனும் சொத்து,சொத்துன்னு அலைகிறானுவ…. அண்ணன்,தம்பியே வெட்டிக்கிறானுவ…. ஆனா,சொத்திலையே பொரிய சொத்து அம்மா அப்பாமேல வெச்ச பாசமும், அண்ணன் தம்பிமேல வெக்கிற மதிப்பும்னு இதிகாசங்களே சொல்லிக்கிட்டிருக்கு…. ஆனா,விசுவாசமான வேலக்காரன்னு சொல்லுற மாதிரி, இதுவரைக்கும் யாரும் எழுதிவெச்சதா எனக்கு நெனைவில இல்ல…. வாழ்க்கையில எந்த சந்தர்ப்பத்திலயும் நீ எங்களை விட்டுப் போயிடாத….”

“போறத்துக்கு நாங்க விடவும் மாட்டோம்…. ஆமாடா…. உங்க சின்னையா சொன்னமாதிரி நீ எங்கள விட்டுப் போயிடாத….. கூட இருந்து வளந்த உனக்கே எங்கமேல இம்புட்டு பாசம் இருக்கிறப்போ உன்னய வளத்த எங்களுக்கு மட்டும் அதே பாசம் இல்லாமல் போகுமா….”

இது அக்காளின் வாய்மொழி. அவளின் கண்களும் கலங்கியிருந்தன.

“சரி சின்னம்மா…. நீங்களும் சின்னையாவும்,மனசாரத்தான் இதைச் சொல்றீங்களா….”

“எதுக்குடா இப்பிடிப் பேசிறே….”

“வேற எப்பிடீம்மா பேசச் சொல்றிய…. உங்க கூடப்பொறந்த தங்கச்சி, அதுதான் நம்ம குட்டியம்மாவைத்தான் சொல்றேன்…. அவங்க இதுக்கு முன்னாடி இங்க இருந்த காலத்தில எப்பயாச்சும் இந்த சொத்துப் பிரச்சினபத்தி ஏதும் ஒரு வார்த்தை பேசியிருப்பாங்களா…. ஆனா, இண்ணைக்கு, யாரும் எதுவும் பேசாம, கேக்காம இருக்கிறப்போ அவுக,அதுவும் அவுக குடும்பத்திலயுள்ள அத்தன பேரையுமே கூட்டிக்கிட்டு வந்து, அவுக முன்னாடி வெச்சே இந்த சொத்து எல்லாத்தையும் தம்பி பேரில எழுதப்போறதா சொல்ராங்கண்ணா அவங்க குடும்பத்துக்காரங்க அத்தனை பேரோட ஒத்துழைப்பும் இல்லாமலா பேசுவாக…. இதுவரை காலமும் நான் கேள்விப்பட்ட சம்பவங்களில, பாத்த சினிமால கூட, அவங்க அவங்ககிட்ட எம்புட்டுச் சொத்திருந்தாலும், இன்னும் எந்தெந்த வழியில சொத்து வரும்ணு அத வழிச்சுவழிச்சு சேர்க்கிறதிலதான் கவனமாயிருப்பாக…. ஆனா, குட்டியம்மாக்குன்னு இருக்கிற சொத்தை எடுத்துக்கணும்னு நெனைக்காம, அத தம்பி பேரிலயே குடுத்திடணும்னு அத்தனை பேருமே ஒரேமனசோட சொல்லவர்ர பாசமான குடும்பம் யாருக்குக் கிடைக்கும் சொல்லுங்க…. ஒரு சமையல்காரப் பயல், என்மேலயே பாசம் வெக்கிற நீங்க, உங்க கூடப் பொறந்தவ உங்கமேல காட்டுறபாசத்த புரிஞ்சுக்காம இருக்கேளே…. நிஜமான பாசம் இருக்கிறது உண்மையானா, எல்லாருமே சேந்து ஒண்ணுபோல எடுத்துக்கிட்டு வந்த முடிவை நீங்க தூரப்போடுறமாதிரி வேண்டாம்ணு சொல்றது மட்டும் சரியா….”

அதுவரை நேரமும் பேசாமல் நின்ற அண்ணியார்,மெதுவாக அருகே வந்து, எனக்கு மட்டும் கேட்பதுபோல் பேசினாக.

“ மதனி….உங்க சமையகாரப் பையனைச் சர்வ சாதாரணமாய்த்தான் நெனைச்சேன்….. நாம அவனை சரியான முறையில கோச்சிங் பண்ணினா, பியூச்சரில பெரிய ஆளா வருவான்….”

“உங்க வாக்கு பொன்வாக்கு ஆகட்டும் அண்ணி…. பாப்போம், இப்போ அவன் மெனைக்கெட்டு,இம்புட்டு நேரமா அக்கா அடுப்பில போட்ட பருப்பு எந்தளவுக்கு வேகுதெண்ணு….

சமையல்காரப் பையன், பாசத்தை மையப்படுத்திப் போட்ட வட்டச் சக்கரம், அக்காளை நன்கு சுழற்றியெடுத்திருக்க வேண்டும். பத்து நிமிட அமைதிக்குப் பின்,சமையல்காரப் பையனைப் பார்த்துக் கேட்டாக.

“இப்ப நீ என்னதான் சொல்றே……. ”

உண்மையிலே திகைத்துவிட்டேன் நான். எத்தனை வைரம் பாய்ந்த கருங்கல்லு அக்காளைக், காலச் சூழ்நிலைகள் கரைத்துக் கரைத்துக் காணாமல் போக வைத்துக்கொண்டிருக்கின்றன. சமையல்காரப் பையனின் இந்தப் பேச்சிலே, அந்தக் கல்லிலேயுள்ள ஒரு துகள்கூட இருக்காது என்பது எனது தெளிவான முடிவு.

அதுவரை நேரமும் பேசாமலிருந்த அம்மா அக்காளை நோக்கி திட்டினாங்க.

“ஏண்டி…. இம்புட்டு நேரமா அவுக பேசிறது வடநாட்டு ஹிந்திலயா, இல்ல கொழும்புச் சிங்களத்திலயா…. அறிவுகெட்டவளே….”

யாரும் எதிர்பார்க்கவில்லை.வெண்ணெய் திரண்டு வரும்போது, தாழி உடைந்த கதைபோல, அம்மாவின் இந்தக் கொடுஞ் சொல்….

மீண்டும் அண்ணியார் அருகே வந்து அவசரமாகப் பேசிவிட்டு விலகினாக.

“மதனி….. இமீடியேட்டா அம்மாவ கன்றோல் பண்ணுங்க…. இல்லேன்னா, கதை கந்தலாகிடும்…..”

உண்மையிலே நான் கடுப்பாகிப் போனேன்.

“அம்மா…. பேசாமெ வாய மூடிகிட்டு உக்காருக…. எல்லாரும் நல்லாயிருக்கணும்ங்கிற நோக்கம் மனசில இருக்கா, இல்லியா…. அக்காகிட்ட நாமதான் பேசீட்டிருக்கோமில்ல….”

பேசிமுடித்து அம்மாவை மெளனியாக்கிவிட்டு, அக்காளை நோக்கினேன்.

“இந்தா பாருக்கா…. அம்மா ஏதாச்சும் லூசுத்தனமா பேசினா, அதை பெரிசா தூக்கிப் புடிச்சுக்கிட்டு நிக்காதிய…..இதுக்கும்மேல பேசிப் புரியவெக்க யாருக்குமே தெம்பில்ல….. நானும், நான் வாழ்க்கைப்பட்டு போன வீட்டுக்காரங்க உறவும் உங்களுக்கு வேணும்னு நெனைக்கேளா, வேண்டாம்ணு நெனைக்கேளா…. வெட்டொண்ணு – துண்டுரண்டா பேசிமுடிக…….

எனது கோபம் அக்காளை நன்கு அதிர வைத்தது புரிந்தது. சலனம் ஏதுமற்றவளாக கேட்டாள்

“நான் என்ன பண்ணணும்னுதான் ரொம்ப நேரமா கேட்டுகிட்டிருக்கேன்….”

அப்பாடா…. திருப்தியாக இருந்தது எனக்கு.

“நீ எதுவுமே பண்ண வேண்டாம்…. பண்ணப்போற எதுக்குமே கட்டை போடாமலிருந்தாப் போதும்….”

“சரி தாயே….நான் எதுவுமே பேசல்ல…. உங்களுக்கு சரீண்ணு என்ன தோணுதோ…. அதப் பண்ணுக….”

பேசிவிட்டு என்னவரையும், உறவுகளையும் பார்த்துக் கைகூப்பினாள். “எல்லாரும் மன்னிச்சுக்குங்க…. வந்த உங்கள வாங்கண்ணு சொல்லாம எங்க வாய்ப்பாட்டையே ஓதிக்கிட்டிருந்திட்டேன்…. என் தங்கச்சி படிச்ச அளவுக்கு நான் படிக்கல்ல…. திரும்பத் திரும்பக் கேட்டுக்கிறேன்…. மன்னிச்சுக்குங்க…. மனசார எல்லாரும் வாங்க….”

அவள் பேசிய வார்த்தைகள் மகிழ்ச்சி தந்ததுடன், ஏனைய கடமைகளையும் நலமே செய்ய உதவும் என்னும், நம்பிக்கையையும் நிறைத்தன.

 

நிறைவு