(11)

திருமணமாகி மதுரை வந்த நாள்முதல் அடிக்கடி இரவு ஒன்பதுமணிக்கு, எங்கள் பெட்ரூமிலிருந்து அம்மாவிடம், வீடியோ காலில்தான் பேசுவேன். அம்மா தனது பெட்ரூமிலயிருந்து பேசுவாங்க. சிலநாட்களில் சமையல்காரப் பையன் எடுத்துப் பேசுவான். தவிர, நேரம் கிடைக்கும்போதெல்லாம் அத்தானும் பேசத் தவறுவதில்லை.

முக்கியமாக, எனக்கு செயற்கைக்கால் மாட்டியது பற்றியும், முன்புபோல சரளமாக கார் ஓட்டுவதுபற்றியும் தெரிவித்தபோது, அம்மா அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.

தவிர, மீனாட்சி அம்மன் கோவில்முதல் தெப்பக்குளம் மாரியம்மன் கோவில், திருமலை நாயக்கர் மஹால், அழகர் கோவில்,திருப்பரங்குன்றம், காந்தி மியூசியம், ராஜாஜி பார்க் அனைத்தும் சுற்றுலா சென்றது பற்றியும், வாழ்க்கையில் முதன்முதல் இந்த இடங்களுக்கு போய்வந்த அனுபவம் மறக்க முடியாது என்றும் சொன்னபோது, அம்மா சிரித்துவிட்டாங்க.

“அம்மாடி…. நீ இந்த இடங்களுக்குப் போய்வந்தது சந்தோசம்…. ஆனால், இத்தனை இடத்துக்கும் நீ போனது இத்தோடை மூணாவது தடவை…. அதாவது உங்கப்பாவும், நானும்,குழந்தையாயிருந்த உங்கக்காவைக் கூட்டிக்கிட்டு வர்ரப்ப நீ என்வயித்தில மூணுமாசக் கர்ப்பத்தில இருந்தே…. அடுத்தவாட்டி வர்ரப்போ உனக்கு அஞ்சுவயசு…. உங்க அக்காளும் நீயும் அந்த இடங்கள் பூராவுமே ஓடிவிளையாடி எங்களைப்போட்டு தேடவெச்சு பாடாய் படுத்தியிடுவிய….”

“இத்தனை காலமா ஒருநாளாவது இதைப்பத்தி சொன்னீங்களா…. என்கூடவந்தவங்க இது இப்படி, அது அப்படீன்னு எனக்கு கிளாஸ் எடுத்து விளக்கம் குடுத்தப்போ, ஆமா ஆமா நான் எங்கம்மா அப்பாகூட ஏற்கனவே வந்திருக்கேன்…. இந்த இடத்திலயெல்லாம் ஓடிவிளையாடி என்கால் படாத இடமேயில்லைன்னு பெருமை பேசியிருப்பேனே….”

“நல்லவேளை…. நாங்க இந்த சமாச்சாரத்த உனக்கு சொல்லாம விட்டது எம்புட்டு நல்லதாப் போச்சு பாத்தியா…. நான் சொல்றதைக் கவனமா கேளும்மா….நீ புகுந்தவீட்டுக் குடும்பத்துக்காக மனசில எடுத்த முடிவுங்கபத்தி ரொம்பவும் பெருமைப் படுரேன்…. ஆனா ஒரு பொண்ணு, தான் புகுந்த வீட்டில இருந்துகிட்டு, பொறந்த வீடுபத்தின பெருமைங்களை பேசுறது ஆகாதது தெரிஞ்சுக்கோ….”

ஒரு மாத வைத்தியத்தை முடித்துக்கொண்டு ஆஸ்பத்திரியிலிருந்து டிச்சார்ஜ் ஆகி இன்றுதான் அக்கா வீடுதிரும்பியதாக போனிலே அம்மா பேசினாங்க.

அதைவிட, அக்காளின் போக்கிலே நிறைய மாற்றங்கள் இருப்பதாகவும்,எனக்கு செய்த கொடுமைகள் பற்றி மிகவும் வருந்துவதாகவும் அம்மா சொன்னபோது என்னால் நம்பவே முடியவில்லை. மேலும், அக்காளால் இன்னும் சரியாக செயல்பட முடியாத நிலையில், குளிப்பதற்கு வெந்நீர் வைப்பதுமுதல் உடுப்புகளைத் துவைப்பதுவரை அம்மாவும், அத்தானும்தான் கவனித்துக்கொள்கின்றார்களாம்.

அக்காளை நினைக்கும்போது,என்னை நானே கட்டுப்படுத்த முடியாத துடிப்பு ஒன்றினை நெஞ்சுக்குள் உணர்ந்தேன். அன்றய தினம் அம்மாவும் அக்காளும் சண்டை போட்டபோது, நான் அக்காளை அடித்தது தப்பா என்றுகூட ஒருகணம் எண்ணத் தலைப்பட்டபோதிலும், அப்படிச் செய்யாதிருந்தால், அடுத்தடுத்து நடந்த சம்பவங்களின் முடிவுகள், நினைத்தே பார்க்கமுடியாத விபரீதங்களில் போய் நின்றிருக்கும் என்பதுவும் உண்மை.

“அக்காகிட்ட பேசணும்போல இருக்கம்மா…. கொஞ்சம் பேசச் சொல்றீங்களா….”

“நல்ல நியாயமா இருக்குடி…. என்ன இருந்தாலும் அவ உனக்கு மூத்தவடி…. நீதான் அவகிட்ட பேசணும்….”

பேசுவது வீடியோ கால் என்பதனால், அம்மாவின் பின்னால் அக்காள் வந்து போனை வாங்கிக்கொள்வது தெரிந்தது. மேலும் அவள் முகத்தில் முன்புபோன்ற இறுமாப்பெல்லாம் மாறி, தளர்ச்சியே தெரிய…. அவளே பேசினாள்.

“சொந்த சகோதரங்களுக்கு நடுவில, யாரு மொதல்ல பேசணும், யாரு அப்புறமா பேசணுங்கிற வரட்டுக் கவுரவம் அவசியம் இல்லை…. சண்டை சச்சரவு போடாத சகோதரங்களே இல்லை…. சண்டை சச்சரவு போட்டுக்காதவங்க சகோதரங்களும் இல்லை…. நம்ம சண்டைகளைத் தூக்கி குப்பையில போடு…. சொல்லுடி…. நீ நல்லா இருக்கியா…. மாப்பிள்ளை, கொழந்தை, நம்ம அத்தை,மாமா,நாத்தனாரு, அவங்க வீட்டுக்காரரு எல்லாரும் எப்பிடியிருக்காங்க….”

அக்கா பேசப்பேச அப்படியே விறைத்துப்போய்விட்டேன்.என்னால் நம்பவே முடியவில்லை. உணர்ச்சிவசத்தால் கண்கள் கலங்கி நிறைந்தன.

“அக்கா…. நீயாக்கா இப்பிடிப் பேசிறே…. என்மேல உனக்கு கோவமே இல்லியாக்கா…. என்னய மன்னிச்சுக்க அக்கா….”

“விட்டுத் தள்ளுடி…. ஏற்கனவே சொல்லிப்புட்டேனே, அதைத் தூக்கி குப்பையில போடுண்ணு…. என்னய நீ அடிச்சதுக்கு ஏங்கிட்ட மன்னிப்பு கேக்கணும்னா, உன்னய எத்தனை தடவை என்னபாடு படுத்தியிருக்கேன் சொல்லு…. அதுக்கெல்லாம் நானும் ஓங்கிட்ட மன்னிப்புக் கேக்க ஆரம்பிச்சா, அப்புறம் விடிஞ்சு போயிடும்…. சின்னவயசில நாம ரெண்டுபோரும் எத்தனை தடவை சண்டை போட்டிருக்கோம்…. பிளேடு எடுத்து நான் உன்னோட கையை கிழிச்சிருக்கேன்…. கல்லைத் தூக்கி எறிஞ்சு நீ என் மண்டையை ஒடைச்சிருக்கே…. நம்ம ரெண்டுபேரையும் வெச்சுக்கிட்டு எங்க அம்மா,அப்பா பட்ட பாடெல்லாம் மறந்திருக்க மாட்டாய்ன்னு நெனைக்கிறேன்…. அந்தக் கழுதையெல்லாத்தையும் விடு…. நான் முக்கியமா உனக்கு ரெண்டு அட்வைஸ் பண்ணுறேன்…..”

“சொல்லுக்கா…..”

“நான் உன்னைப்போட்டு அடிச்சதை, டாச்சர் பண்ணினதைப்பத்தி மத்தவங்க யாரு தெரிஞ்சுகிட்டாலும் பரவாயில்லை…. ஆனா, நீ எனக்கு அடிச்சதபத்தி யாருகிட்டயும் வாய்திறந்திடாத…. ஏன்னா எல்லா நேரமும் ஒண்ணுபோல இருக்காது…. உங்க குடும்பத்தில யாராச்சும் ஒருத்தர், ஏதாச்சும் ஒரு வெசயத்தில கோபப்படுறப்போ, நீ ஏற்கனவே உங்கக்காவையே அடிச்சவதானேடின்னு ஒருசொல்லு சொல்லிப்புட்டா, அப்புறம் அந்த வலியை மாத்திக்கிறது ரொம்பரொம்பக் கஷ்டமாகிடும்…. அப்புறம் எங்களுக்குப் போன் பண்ணுறப்போ வீட்டுக்குள்ளை ரூமுக்குள்ள தனியாப்போயி பண்ணாத…. அப்பிடிப் பண்ணுறப்போ, நீ புகுந்த வீட்டோட முழுசா இன்னும் ஒட்டிக்காத பீலிங்ஸை மத்தவங்களுக்கு குடுக்க சான்ஸ் இருக்கு…. அதில என்ன தப்பு, என் வீட்டுக்காரரு இதைப்பத்தியெல்லாம் பெரிசுபடுத்திக்க மாட்டாங்கன்னு சொல்ல வந்திடாத….ஏன்னா, உன்னோடை வீட்டுக்காரர் மட்டும் உன் குடும்பம் இல்லை…. புரிஞ்சிச்சா….”

இதிலே, முதலாவது அட்வைஸ் ஏற்கனவே அத்தானால் எனக்குச் சொல்லப்பட்டதுதான். ஆனால், அதை அக்காளிடம் சொல்ல முடியாது. அதேவேளை, அக்காளின் தற்போதய மனோநிலை சரியானதோர் மனிதாபிமானக் கோட்டிலேதான் செல்கின்றது என்பது உறுதி.

கருங்கல் கூட, காலநிலை மாற்றங்களால் காலப்போக்கிலே உருமாறிப் போவதும், ஒன்றுமில்லாமல் ஆவதும் இயற்கையின் நியதி. ஆனால், இந்தக் கருங்கல் கரையத்தொடங்கியமைக்கு காரணம், எங்களுக்குள் கடைசியாக நிகழ்ந்த சண்டை மட்டுந்தானா? அல்லது, இதற்கு மேலும் ஏதாவது வலுவாக உண்டா?

மகிழ்ச்சியும்,சிறுசிறு குழப்பங்களும் மனத்துள் ஊடுருவின.

இரண்டு நாட்களுக்கு முன், இரவு நித்திரைக்குச் செல்லுமுன், எனக்கும் என்னவருக்கும் இடையே நடந்த தனிப்பட்ட உரையாடல் நினைவிற்கு வந்தது.

என்னவர்தான் அதனை ஆரம்பித்தார்.

“உங்கக்கா உனக்கு எதிராக நடந்துகிட்டதுக்கெல்லாம் அடிப்படைக் காரணம், இப்போ உங்களுக்கிண்ணு வீரவநல்லூர்ல இருக்கிற சொத்துங்கதானே….”

“ஆமா…. அதில என்னங்க சந்தேகம்….”

“சரி…. அதெல்லாத்தையும் அவுங்களுக்கே குடுத்திடுவோம்…. பிரச்சினை சால்ட்….”

அதிர்ந்துவிட்டேன் நான்.

“என்ன பேசிறீங்க…. என்ன இது ரொட்டியா,சப்பாத்தியா பிச்சுக் குடுக்க…. இது சொத்துங்க….”

“அதனாலதான் சொல்றேன்…. அதை அவங்ககிட்டையே குடுத்திட்டா அப்புறம் சண்டை,சச்சரவு, பகை ஒண்ணுமே இருக்காதில்லியா….”

“அதேயளவு சொத்து அவங்களுக்கும் எங்கப்பா குடுத்திட்டாங்க…. ஆனா, அவுங்கதான் அதையெல்லாம் தொலைச்சிட்டாங்க….”

“ஓகே…. ஓகே……. எல்லாமே தெரிஞ்ச கதைதான்…. ஆனா, இந்தச் சொத்துங்க அவுங்க கையவிட்டுப் போறத்துக்கு காரணம், உங்க அக்காளா…. அவங்க ஊதாரித்தனம் பண்ணியோ இல்ல வெளிய யாருகிட்டயும் கடனாக வட்டிக்குக் குடுத்தோ ஏமாந்து போனாங்களா….”

“இல்லை…. எங்க அத்தானோட கவனக்குறைவால…..”

“போதும்…. போதும்…. இது எல்லாத்துக்குமே காரணம் உங்க அத்தான்தான்…. உங்க அத்தானோட கவனக்குறைவால உங்கக்காவும், அவங்க பையனும் ஏன் பாதிக்கப்படணும்….”

“இப்போ நீங்க என்னத்தை சொல்லவர்ரீங்க…. எங்களுக்கும் ஒரு பொண்ணு இருக்கா…. அம்மா சொத்துன்னு சொல்லிக்க அவளுக்கிண்ணு எதுவும் வேண்டாமா….”

“அம்மா சொத்தா…. நீ என்ன பேசிறே…. பெத்த அம்மாவுக்கும் மேலான சொத்தாக உன்னை ஆண்டவன் அவளுக்கு கிப்ட் பண்ணியிருக்கான்…. உனக்கும்மேல ஒரு சொத்தைக் குடுக்க யாரால முடியும்…. சொல்லு…..”

என் தேகமெல்லாம் புல்லரித்தது. ஆறாகப் பெருகிய கண்ணீரைக் கட்டுப்படுத்த முடியாமல், என்னவர் நெஞ்சிலே சாய்ந்தேன்.

தன் இடக்கரத்தால் அணைத்தபடி, வலக்கரத்தால் என் கண்ணீரைத் துடைத்துவிட்டாங்க.

“என்னங்க…. நீங்க ஈசியா சொல்லிப்புட்டீங்க…. இதெல்லாம் நாம ரெண்டுபேரும் எடுக்கிற முடிவா…. நமக்கும் பெரியவங்க அத்தை, மாமா இருக்காங்க…. பக்கத் துணையா இருக்கிற அண்ணன், அண்ணி இருக்காங்க….”

“இருக்கட்டுமே…. நிச்சயமா அவங்க இதுக்கு யாருமே மறுப்புச் சொல்ல மாட்டாங்க…. ஏன்னா எனக்கிண்ணு இருக்கிற சகோதரம், என் தங்கச்சி ஒருத்திதான்…. அவ புருசனைப் பொறுத்தவரையில போட்டோ ஸ்டூடியோ தவிர, கிராமத்தில நெறைய வயல் இருக்கு…. நெறைய கடைகள் கட்டி வாடகைக்கு குடுத்திருக்காங்க…. அதுபோல நமக்கிண்ணு இருக்கிற சொத்துகளை நீ கண்ணால பாத்துக்கிட்டிருக்கே…. இதுபோக எங்க அம்மாக்கும், அப்பாக்கும் தனித்தனிய பரம்பரை நிலங்கள் இருக்கு…. நமக்கு இருக்கிறது ஒரே பொண்ணு…. இதுக்கும் மேல என்ன சொத்து வேணும் சொல்லு…. வேணும்னா உன்னோட மனத் திருப்திக்காக நாளைக்கு காலையில தங்கச்சி பேமிலியையும் வரச்சொல்லி, எங்கம்மா அப்பாகூட பேசுவோம்…. நீ வேணும்னா பாரு…. இப்ப நான் சொன்னதிலயிருந்து யாராச்சும் ஒரு வார்த்தை மாத்திப் பேசினா அப்புறமா கேளு….”

என்னால் எதுவுமே பேசி நியாயப்படுத்த முடியவில்லை.சிலையாக அமர்ந்திருந்தேன். என்னவரே தொடர்ந்து பேசினார்.

“உனக்கே தெரியிது, உங்கக்காவுக்கான சொத்துங்க வம்பா போறத்துக்கு காரணம் உங்கத்தான்தான்னு…. அப்பிடியிருக்கிறப்ப அந்த உறுத்தல் உங்கத்தானுக்கு மட்டும் இருக்காதா சொல்லு…. நாளைக்கு நமக்கேதும் ஒண்ணு ஆனா, என் பொண்டாட்டிக்கும் பையனுக்கும்னு சொந்தமா ஏதுமில்லியேங்கிற ஏக்கமும், வேதனையும் இருக்குமா இல்லையா சொல்லு…. அப்பிடியிருக்கிறப்போ இப்போ உங்க அக்கா பண்ற வில்லத்தனமெல்லாத்தையுமே பண்ணவேண்டியவரு உங்க அத்தான்தான்….

ஆனா, அவரு அதையெல்லாம் பண்ணாமெ எல்லா செரமத்திலயிருந்தும் உங்களுக்கு பாதுகாப்பா இருக்காரு…. நம்ம கலியாணத்துக்குக் கூட, அடிப்படைக் ஹெல்ப்பு உங்கத்தான்தான்….

இப்ப சொல்லு….. அந்த மனுசனுக்காக நாம பண்ற ஒரு நன்றிக்கடன்னு இதை வெச்சுக்கலாமே…. எந்த சொத்துக்களை தன்னால எழந்ததால அந்த மனுசன் உங்கக்கா முன்னாடி தலைகுனிஞ்சு வாழுறாரோ, அதேயளவு சொத்துக்கள் தன்னால கெடைச்சதுங்கிற சந்தோஷத்தோட தலைநிமிந்து வாழுவாரில்லையா…..உங்கம்மாவும், பெரியபொண்ணுகூட இருக்க ஆசைப்படும்வரைக்கும் அங்கை இருக்கட்டும்…. போர் அடிக்கும்போது ஒருபோன் பண்ணச் சொல்லு, மறுநாளே போயி கூட்டிகிட்டு வந்திடலாம்….. அதேபோல இன்னும் கொஞ்சநாளில உங்க வீட்டு சமையல்காரப் பையனுக்கும் ஒரு பொண்ணு பாத்து கட்டிவெச்சு உங்கப்பா சொன்னமாதிரி அந்த கெஸ்ட் ஹவுஸ் வீட்டை அவனுக்கே எழுதி வெச்சிட்டோம்ன்னா நம்ம கடமை முடிஞ்ச மாதிரி…. உங்கப்பாவோட முழு ஆசியும் நமக்குக் கெடைக்கும்…. இல்லியா…”

என்னவரைப் பொறுத்தவரையில், பேச்சைப் பேச்சாக விடாமல், மறுநாள் காலையில், மாமா,அத்தை…. அண்ணன், அண்ணி ஆகியோருடன் என்னையும் வைத்துக் கலந்து பேசி முடித்தாங்க.

அவங்க சொன்னபடியேதான் எல்லாம் நடந்தன. வீரவநல்லூரிலிருக்கும் எனது சொத்துகள்பற்றி அவர்கள் யாருமே அலட்டிக்கொள்ளவில்லை.

நடந்து முடிந்த சம்பவங்களில் மூழ்கிப்போயிருந்த என்னை, அக்காளின் சத்தம் உசுப்பிவிட்டது.

“என்னடி….சத்தத்தையே காணோம்…. தூங்கீட்டியா…..”

“அதெல்லாம் இல்லைக்கா…. நீ போனில பேசின சமாச்சாரங்களை நெனைக்கிறப்போ உண்மையா, கனவான்னு நம்பமுடியாத அளவுக்கு “ஷாக்” ஆக இருக்கு….”

“போனில பேசின சமாச்சாரமே உனக்கு “ஷாக்” அடிக்கிது…. பேசாமெ மறைச்சு வெச்சுக்கிட்டிருக்கிற சமாச்சாரம் என்ன பண்ணப் போவுதிண்ணு நெனைச்சுப் பாத்தேன்….”

இதுவே “ஷாக்” அடித்தது போலத்தான் இருந்தது.

“என்னக்கா சொல்றே…. பேசாம மறைச்ச சமாச்சாரமா…. சுத்தி வளைக்காமல் சொல்லுக்கா....”

“நான் சுத்தவும் இல்லை…. வளைக்கவும் இல்லை…. இந்தா நீயே பாரு….”

அக்காள் காட்டிய காட்சியைக் கண்டு விக்கித்துப் போனேன்.

(தொடரும்)

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.