அத்தியாயம் ஒன்பது!

“சாமி….. முகூர்த்த டைம் முடியிறத்துக்கு இன்னும் அரைமணி நேரத்துக்கு மேல இருக்கு…. நாமெல்லாம் மனசுவெச்சா இந்தக் கேப்புக்குள்ள கலியாணத்தையும் முடிச்சிடலாம் இல்லியா….”

அனவருமே சற்று ஆடித்தான் போனோம்.

தன்னைச் சுதாகரித்துக்கொண்ட ஐயர் கேட்டாக.

“என்ன சொல்லிட்டேள்….. அதுக்கிண்ணு நாள் பாக்கவேண்டாமோ…. பந்தல்கால், பத்திரிகை எதுவுமே இல்லாம…… ”

பேச்சிலே சுதி குறைந்தது.

அண்ணன் சிரித்தபடி பேசினாங்க.

“என்னசாமி பேசிறீங்க…. என்னடா இவங்க நிச்சயார்த்தம்னு சொல்லி கூட்டிக்கிட்டு வந்தாங்க….. பேசின ரேட்டுக்குள்ளையே கலியாணத்தயும் முடிச்சிட்டு, நோவாம நம்மளைக் கழட்டி விட்டுருவாங்களோண்ணு பயப்பிடாதீங்க…. ரெண்டுக்கும் சேத்தே துட்டுக் குடுத்திடுறோம்….”

ஐயர் சமாளித்துச் சிரித்தார்.

“என்ன புசுக்கிண்ணு இப்பிடிச் சொல்லிட்டேள்…. அது அதுக்கிண்ணு முறைகள் உண்டில்லையா….. அதைத்தான் சொல்ல வந்தேன்….. அத்தோட அதெல்லாம் மாப்பிள்ளை வீட்டில வெச்சு நடத்தவேண்டிய பங்சன் பாருங்கோ…..”

“சாமி…. நியதிகளையும், முறைகளையும் மனிசனுக்காக, அவன் வசதி, வாழ்க்கைக்காகத்தான் ஆக்கியிருக்காங்க….. அந்த நியதிகளே மனிசனோட வசதிகளுக்கும், வாழ்க்கைக்கும் இடைஞ்சலா வர்ரப்போ அதயெல்லாம் மாத்திக்கவேண்டியதுதான் புத்திசாலித்தனம்…. இண்ணிக்கு பொதுநாள் கிடையாது….. நெறைஞ்ச முகூர்த்தநாள்…. நேரமும் அதுக்கிண்ணு உள்ளதைப் பாத்துத்தான் எல்லாமே செய்யிறோம்…. அந்த நேரத்துக்குள்ள செய்து முடிக்கலாமான்னுதான் கேக்குறேன்….”

ஐயர் உள்பட அனைவரிடமுமிருந்து அமைதியே வெளிப்பட்டது.

அண்ணனே தொடர்ந்து பேசினார்.

“சாமி…. சில சமாச்சாரங்களை வெளிப்படையா ஒடைச்சுப் பேசினாத்தான் நல்லது…. நீங்க இந்த ஊர்க்காரரு….. எங்களைவிட உங்களுக்குத்தான் அதிகப்பட்சமா பொண்ணுவீட்டு சூழ்நெலை தெரியும்….

இப்போ இந்த வீட்டு சூழ்நெலைய எடுத்துக்கிட்டா, பொண்ணோட அக்கா இப்போ இங்க இருந்திருந்தா, இப்போ நடந்து முடிஞ்ச சமாச்சாரமெல்லாம் சு(ல)பமா முடிஞ்சிருக்கும்ணு எதிர்பாக்க முடியாதில்லியா…. இல்லையா தங்கச்சி….”

பேசியபடியே, என்னை நோக்கினார். மறுத்துப்பேச என்ன இருக்கிறது. மறுக்க மட்டுமல்ல…. மறைக்கவும் ஏதுமில்லை…. மெளனமாக நின்றேன்.

தொடர்ந்தார் அண்ணன்.

“அதனாலதான் சொல்றேன்…. இண்ணைக்கு இத்தனை பாடுபட்டுச் செய்த இத்தனை சடங்குகளும், ஒருத்தரோட தலையீட்டால வம்பாப் போயிடக் கூடாது…. வீணான சண்டை, சச்சரவுகளுக்குள்ளை தலையை விட்டு, வம்பு வாதங்களை, சாபங்களை விலைகுடுத்து வாங்கிக்கிட்டு, விரக்தி வேதனையோட ஒரு நல்ல சமாச்சாரத்தை செய்யணுமா…. அத்தோட மாப்பிள்ளைக்கு அவரு வேலைபாக்கிற பேங்கில, ரொம்பவும் பொறுப்பான மேனேஜர் வேலை….. நெனைச்ச உடனை லீவு கிடைக்காது….. இதுக்கப்புறம் கலியாணத்துக்கு லீவு, மறுவீட்டுக்கு லீவுண்ணு எதையுமே எதிர்பாக்க முடியாது….. காலம் கனிஞ்சிருக்கு…. கல்யாணத்த முடிச்சுக்கலாம்…. அப்புறமா கலியாண ரெஜிஸ்டரை மதுரையிலயோ, இங்க வீரவநல்லூரிலயோ பின்னாடி ஒருநாளைக்கு வெச்சிடுவோம்….

இது ஒண்ணும் நான் யாருக்குமே ஆர்டர் போடல்ல…. என்னோட சொந்த அபிப்பராயம்….. இதைத் தப்பா யாராச்சும் நெனைச்சா மீதி அவங்க இஸ்டம்…..”

அண்ணன் சொல்வது அனைத்துமே சரியாகப்பட்டது எனக்கு. வெளியே செல்லும்போது அத்தானும் இதே கருத்தைத்தானே சொல்லிவிட்டுச் சென்றார். ஆனால், அதை நான் யாரிடம் எப்படிச் சொல்ல முடியும்? மணப்பெண் நானல்லவா!

“பாருடா….. கலியாணம்ன ஒடனை பொண்ணுக்கு வந்த அவசரத்தை…..”

அப்படியெல்லாம் கிண்டலும், கேலியும் பிறப்பதற்குச் சந்தர்ப்பத்தை ஏற்படுத்த வேண்டுமா?

சில நொடிப்பொழுது நிசப்தத்துக்குப் பின், யாருமே எதிர்பாரா விதமாக சமையல்காரப் பையன் வாய் திறந்தான்.

“எல்லாரும் என்னய மன்னிச்சுக்குங்க…. ஏதடா ஒரு சமையல்காரப் பய பேசிறான்னு நெனைக்காதீங்க…. இந்த வீட்டுப் பெரிய ஐயாவுக்கு நானு ஒரு தத்துப் புள்ளையாத்தான் வளந்தேன்…. எங்க குட்டியம்மா என்னயத் தன்னோட தம்பியாத்தான் நெனச்சுக்கிட்டிருக்காங்க….. இம்புட்டு நேரமும் அந்த ஐயா பேசினதில தப்பே இல்லை…. சொல்லப்போனா இது வெசயத்தில நானு அவங்க பக்கம்தான்….. பாவம், எங்க அம்மா பாசத்துக்குக் கட்டுப்பட்டவங்க….. என்னதான் வில்லங்கம் இருந்தாலும், பெரியபொண்ணு, மாப்பிளை,பேரப்புள்ளைண்ணு செண்டிமெண்டில போவாங்க…… அப்புறம் அவங்ககிட்ட சண்டைபோட்டு நொந்துகிட்டு , சீரியசில அழுவாங்க…. அம்மாவுக்கு அது வாடிக்கையாவே போச்சு….. மாத்திறது கொஞ்சம் செரமம்….. அவங்க பெத்தெடுத்த புள்ளையில ஒருத்தனா இருந்திருந்தா உரிமையோட சண்டைபோட்டு, எங்கக்கா கலியாணத்த உடனயே நடத்தும்மான்னு ஒரு தர்ணாவே பண்ணியிருப்பேன்….. என்ன பண்ண…. அனாதைப் பயலா வந்த சமையல்காரன்தானே….. வேதனையும், துடிப்பும் தாங்க முடியாமைப் பேசிட்டேன்…..”

அவன் பேசி முடிப்பதற்குள், வெளியே “சபாஷ்” என்ற சத்தமுடன், கைதட்டி வரவேற்கும் ஒலியும் கேட்டது. அனைவரும் திரும்பினோம்.

தொடர்ந்து கைதட்டியபடி அத்தான் வந்துகொண்டிருந்தாக.

“வீட்டுக்காரியை ஆஸ்பிட்டல்ல அட்மிட் பண்ணிட்டு, பையனை பாத்துக்க வெச்சிட்டு, கடையில சாப்பாட்டுப் பார்சல் எடுத்திட்டு வர்ரதா சொல்லிட்டு ரொம்ப வேகமா வந்தேன்….. நீங்க ரண்டுபேரும் பேசினதை வாசல்ல நின்னு கேட்டுக்கிட்டுத்தான் அப்புறமா உள்ளை வர்ரேன்…. என்ன பண்ரது…. எங்கத்தை செண்டிமெண்டில ஊறிப் போனவங்க….. மாத்திறது சிரமம்னு சொல்றதை விட….. மாத்த முடியாதிண்ணு சொல்றதுதான் கரெட்….. மணி பத்தேகால்….. முகூர்த்த டைம் முடிய இன்னும் கால்மணி நேரந்தான் இருக்கு….. இந்தா பாருங்க ஐயரே…..,… கலியாணத்துக்கு தாலி-தாலிக்கொடின்னு இப்ப ஒண்ணுமே பண்ணமுடியாது….. நல்லா பகவனை வேண்டிக்கிட்டு, சட்டுப்புட்டுண்ணு ஒரு மஞ்சள் கயித்தை எடுங்க….. ஒருமஞ்சள் துண்டைக் கட்டுங்க…… இமீடியேட்டா ஒரு தாலி தயார் பண்ணுங்க…..”

இந்த உலகத்தில், என்னைச் சேர்ந்தவர்கள், மற்றும் என்னைத் தம் உறவில் இணைத்துக்கொள்ள வந்தவர்கள் அனைவரும் என்மீது காட்டும் அன்புக்கு நான் என்ன கைம்மாறு செய்யப்போகின்றேன் என்றெல்லாம் நினக்கும்போது, கதறி அழவேண்டும் போல தோன்றியது. ஆனால், எனது கண்ணிலிருந்து நீர் வழிவதை என் அம்மா பார்த்துவிட்டால், அதன்பின் அவங்களை நிதானத்துக்குள் கொண்டுவர நேரம் அதிகமாகிவிடும்.

அத்தான் சொற்படியே ஐயரும் தாலியைத் தயார் செய்து, தட்டிலே வைக்க, அனைவரும் இயந்திரமாக இயங்கித் தொட்டு வணங்க, என் அண்ணன் அலைபேசியிலுள்ள கெட்டிமேள நாதஸ்வர ஒலி,

ஹை-ஸ்பீடில் ஒலிக்க, என்னவர் கரத்தால் என்கழுத்து சிறப்புற்றது.

அனைவரும் பூமழை தூவி வாழ்த்தினார்கள். அம்மாவின் கண்களிலிருந்து கண்ணீர் மழை பொழிய, கண்களைமூடியபடி கையெடுத்து வணங்கினாங்க. அவங்க நெஞ்சிலிருந்து, அப்பா வாழ்த்துவதை என்னால் உணரமுடிந்தது.

அப்போதுதான் கவனித்தேன் : “பளிச்….பளிச்….” என்று மின்னும் கேமரா “பிளாஷ்” வெளிச்சத்தை.

போட்டோ ஸ்டூடியோக்களிலும், அவுட்டோர் காட்சிகளிலும் பயன்படுத்தும் ஸ்டில் கேமராவைக் கழுத்தில் தொங்கவிட்டபடி, கல்யாணக் காட்சிகளைப் படமாக்கிக்கொண்டிருந்தார் அண்ணன்.

நேற்று வாற்சப் வீடியோ கால் செய்து என்னவருடன் பேசும்போது , தனது தங்கையின் கணவர் போட்டோவைக் காட்டி, மதுரையில் போட்டோ ஸ்டூடியோ வைத்து நடத்திக்கொண்டிருக்கிறார் என்று தெரிவித்தது அப்போதுதான் நினைவில் வந்தது.

“குட்டி ஐயா உங்க செல்போனைக் குடுங்க…. நானும் போட்டோ எடுத்துக்கிறேன்…..” என்னவரிடம் கேட்டான் சமையல்காரப் பையன்.

சற்று தள்ளிநின்ற என் அண்ணன் பதில் கூறினார்.

“தம்பி….. ரொம்ப விலையான செல்போனிலயிருந்து படம் எடுத்தாலும், போட்டோவுக்கிண்ணே யூஸ் பண்ணிற கேமராட ரிசல்ட்டைக் கொண்டுவர முடியாதுப்பா….. அதனால ஸ்டூடியோ கேமரால எடுக்கிற படமே போதும்….. ஊருக்குப் போன கையோட இந்தப் போட்டோ எல்லாத்தையும் ஒங்க சின்னையா போனுக்கு வாற்சப் பண்ணுறேன்…. ஆசைப்படும்போதெல்லாம் வாங்கிப் பாத்துக்க….. இப்ப உனக்கு ஆசையாயிருந்தா சொல்லு….. கேமரா தர்ரேன்…..எப்பிடி போட்டோ பிடிக்கிறதுண்ணு காட்டித்தற்றேன்…. நாலு போட்டோ எடுத்துப்பாரு….. சரியா…..”

அப்போது, கிண்டலாக மறுப்பு தெரிவித்தார் அத்தான்.

“அதெல்லாம் வேணாம்…. இந்தப் பயலை நம்பியெல்லாம் கேமராவ கையில குடுத்து, எப்பிடி எடுக்கிறதிண்ணும் சொல்லிக்குடுத்தா அவ்வளவுதான்…. நாலு படத்த பிடிச்ச கையோட, என்னய விட சிறப்பான போட்டோகிராபர் இந்த உலகத்தில யாருமே இல்ல…. அப்பிடீன்னு சொல்லிக்கிட்டு உங்க கடைக்குப் பக்கத்திலயே தனியா ஸ்டூடியோ வெச்சிடுவானுவ….. கேர்புல்லா இருங்க….”

அவர் கூறியதைக் கேட்டு சிரித்தான் அவன்.

“பயப்பிடாதீங்க சின்னய்யா…. அப்பிடியொரு நெலமை வந்தா, அதில மேனேஜர் வேலை போட்டுக் குடுப்பேன்…. பெரியொரு ரிலீப் கெடைக்குமில்லியா ஒங்களுக்கு….”

குரூப் போட்டோ பிடிக்கும்போது, எங்களுடன் அம்மா, அத்தான்,மற்றும் சமையல்காரப் பையன் ஆகியோர் சேர்ந்து எடுத்துக்கொண்டோம்.

மறுகணம் ரெக்கைகட்டிப் பறப்பதற்குத் தயாரானார் அத்தான்.

“ஓகே…. முக்கியமான டைமுக்கு தவறாம அட்டேண் பண்ணிட்டேன்…. வந்தவேலை முடிஞ்சுபோச்சு….. நான் கெளம்புறேன்…..”

“எங்ககூட உக்காந்து ஒருவாய் சோறுபோட்டு சாப்பிட்டிட்டுப் போகலாமே மாப்பிளை….” தயங்கியபடியே கேட்டாங்க அம்மா

சமையல்காரப் பையன் பதில் பேசினான்.

“சரியாப் போச்சு….. சின்னையா ஒருவாய் சோறுபோட , அப்புறம் அவங்களை சின்னம்மா ஒரேவாயில கூறுபோட்டிடுவாங்க…..”

என்னருகே நின்ற என்னவரின் காதிலும் இது விழத் தவறவில்லை. அவனைப் பார்த்துவிட்டு மெதுவாகத் திரும்பி என்னைப் பார்த்து மெளனமாகச் சிரித்தாங்க.

எனக்கும் சிரிப்பு வந்ததாயினும், அதைவிட அந்தப் பயல்மீது கோபமும் வரத் தவறவில்லை. எரித்துவிடுவதுபோல பார்த்தேன்.

சமையல்காரப் பையனின் அருகே வந்தாக அத்தான். முகத்திலே தெரிந்த மெல்லிய சிரிப்பை அடக்கியபடி, அவங்களும் மெதுவாகவே பேசினாங்க.

“மவனே…. நக்கலா பண்றே…. இருந்துக்க…. அப்புறமா வந்து வெச்சுக்கிறேன்…..”

இவனும் விடவில்லை.

“என்னயயா வெச்சுக்கிறேன்னு மெரட்டுறீங்க சின்னையா…. சின்னம்மாகிட்ட கேக்காம எட்டணா செல்லாக் காசைக்கூட உங்களால வெச்சுக்க முடியாது…..”

பதில் பேசாமல் சிரித்தபடி கிளம்பினாங்க அத்தான்.

அருகே நின்ற சமையகாரப் பையனை மிகநெருக்கமாக அருகே அழைத்து என்னவர் மிக ரகசியமாகக் கேட்டாங்க.

“என்னப்பா…. நீ இம்புட்டுக் கிண்டல் பண்ணியும், உங்க சின்னையா கோவிச்சுக்காம இருக்காரே…..”

“சின்னய்யா எனக்கு நல்ல பிரெண்டு குட்டிஐயா….. சின்னம்மாக்கு தெரியாம பண்ணிற சமாச்சாரங்களுக்கு பேக்கிரவுண்டு சப்போட்டு பண்ணிறது நான்தானே…..”

“தெரியாமெ பண்ற சமாச்சாரம்னா…..”

“ஏதாச்சும் சின்னையா இஸ்டத்துக்கு வாங்கிறதாயிருந்தாலும், சின்னம்மாகிட்ட போயி கேட்டு, சரியான காரணம் சொன்னாத்தான் துட்டுக் குடுப்பாங்க….. அதனால சின்னையா எதையுமே சுதந்திரமா வாங்க முடியாது…. முக்கியமா சின்னம்மாவுக்கு தெரியாம “தம்” அடிப்பாங்க….. அதெல்லாம் ரகசியமா வாங்கிறதும், ரகசியமா வெச்சுக் குடுக்கிறதும் நான்தான்…..”

“தம்…. மட்டுந்தானா…..இல்ல….” இழுத்தார் என்னவர்.

“மேல்கொண்டு சிட்டிவேசனைப் பொறுத்தது…. அதெல்லாத்தயும் புளி போட்டு விளக்க முடியாது குட்டி ஐயா….”

“ஓ…. அப்பிடீன்னா என்னையும் ஓம் பிரெண்டாச் சேத்துக்கிறியா…..” சிரித்தபடி என்னவர் கேட்டாக.

இதற்குமேல் பொறுமை காக்க என்னால் முடியவில்லை. மெதுவாகவும் சடாரென்றும், அதாவது சத்தமில்லாமல் கோபப்பட்டேன் நான்.

“இங்கை என்னதான் நடக்குது…..” முழங்கையால் என்னவரை இலேசாக இடித்தேன்.

கர்சீப்பால் வாயைப் பொற்றிக்கொண்டு, சத்தம் வராமல் சிரித்தாக.

தூரத்தே நின்ற அம்மா, சமையல்காரப் பையனைச் சத்தமாகக் கூப்பிட்டாக.

“ஏலே…..அங்கை என்னலே பண்ணிட்டிருக்கே….. எல்லாரும் சாப்பிட வேணாமா….. வந்து இலையைப் போடு…..”

(தொடரும்)

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.