(6)

இப்போதெல்லாம் அக்காள் என்னிடம் முகம்கொடுத்துப் பேசுவதே குறைவு. நினைக்கும்போது மனத்துக்குள் அழுத்தமாக இருந்தாலும், சுதந்திரமாக நடமாட முடிகிறதே என்னும் ஒரு ஆறுதல்.

என்பொருட்டு அம்மாவுக்கும் வேதனைகள் குறைந்துள்ளமை கண்டு மகிழ்கின்றேன். பக்கத்திலுள்ள பெரிய கோவிலுக்கு, அவ்வப்போ அம்மாவுடன் செல்வதும், தரிசனம் முடித்தபின் கோவில் மண்டபத்தில் சிறிதுநேரம் உட்கார்ந்திருப்பதும், அப்போது அம்மாவின் மடியில் தலைவைத்துப் படுத்திருப்பதும் என்னை வேறு வேறு உலகுகளுக்குக் கொண்டுசென்றன.

அம்மாவும் அதே சூழ்நிலையில் மெய்மறந்தவங்களாய் தனது பால்யகால நினைவுகளை, என் தாத்தா பாட்டியோடு வாழ்ந்த காலத்தில் இதே கோவில், இதே மண்டபம், இதே இடத்தில் பாட்டியின் மடியில் சாய்ந்திருந்த, சுவையான சம்பவங்களைக்கூட பேசுவாங்க.

அத்தகைய சூழலில் இன்றும் நாங்கள். அம்மாவிடம் கேட்டேன் நான்.

“யேம்மா…. செவ்வாய்க் கெழமையில எப்பவுமே சாயங்கால பூஜைக்குத்தானே என்னய இந்தக் கோயிலுக்குக் கூட்டிக்கிட்டு வருவீக…. இண்ணிக்கு எதுக்கு காலைப் பூஜைக்கே கூட்டிக்கிட்டு வந்திட்டிய….. முகத்தில வேற ரொம்ப பூரிப்பு தெரியிது…. சொன்னா நானும் சந்தோசப்படுவேன்…. இல்லியா….”

கருவறைப் பக்கம் திரும்பி ஒருகணம் கண்ணை மூடித் தொழுத அம்மா தனது பார்வையை எனது பக்கம் திருப்பினாக.

“நீயும் சந்தோசப்படாமல் வேறை யாரு சந்தோசப்படுவா…. நாளைக்கு காலையில ஒம்பதரை டூ பத்தரை மணிக்குள்ள உன்னய பொண்ணுபாக்க வர்ராங்க…. மாப்பிளை சொந்த ஊரு மதுரைப் பக்கம்…. அதனால, அதுசம்பந்தமா இண்ணைக்கு சாயங்காலம் பாத்து முடிக்கப் பல வேலைங்க இருக்கிறதால, எல்லா வெசயமும் நலமாய் முடியணும்னு வேண்டிக்க மொதல் வேலையாய் இங்க வந்தோம் புரியிதா….”

மகிழ்ச்சியின் பூரிப்பில், பத்து வயசைக் குறைத்திருந்தாங்க.

“அப்பிடியா….இதுவுமெல்லாம் அத்தானின் ஏற்பாடுதானேம்மா….”

“முழுசா சொல்ல முடியாது…. மூல காரணம் மாப்பிள்ள தான்….”

“புரியல்லையே…..” நெற்றியைச் சுருக்கினேன்.

“ஒனக்கு வரன் தேடிக்கிற பொறுப்பை எடுத்துக்கிட்டது தொடங்கி, நியூஸ் பேப்பரில வந்த “மணமகள் தேவை” விளம்பரத்தைப் பாத்து, தகவல் சேகரிச்சது, ஒன்னய பத்தின வெவரங்களைத் தெரிவிச்சது, ஏங்கிட்டயிருந்து ஓம்போட்டோவ வாங்கி அனுப்பிவெச்சது வரையில பண்ணினது உங்க அத்தான் வேலைதான்…. ஆனா, இதில மாட்டிக்காம இருக்கிறதிண்ணா, தன்னோட அத்தை, அதாவது நானு…. இந்தக் கோவிலுக்கு வர்ர சமயத்தில புரோக்கரை, அதாவது கலியாணப் புரோக்கரைச் சந்திச்சு, ஏற்கனவே சொல்லிவெச்சதாகவும், அதுக்கு ஏத்தபடி வரன் கெடைச்சப்போ, தகவலை கோயில்லை வெச்சே சாமி முன்னாடி புரோக்கரே பேசின மாதிரியும் இருக்கணும்னு சொல்லி உண்மையான ஒரு கலியாண புரோக்கரையே “செட்டப்” பண்ணியிருக்காங்க….. எந்த சூழ்நெலையிலையும் தன்னோட தலையீடு உங்கக்காக்கு தெரிஞ்சிடக் கூடாதுண்ண பயம் அவருக்கு…..”

என்னையறியாமலே எனக்குள் ஒரு பெருமூச்சு எழுந்தது.

“அத்தானை நெனைச்சா, ரொம்பவும் பாவமாயிருக்கில்லியாம்மா…. அவகதான் என்ன பண்ணுவாக….”

“யாரு என்னத்தைப் பண்ண முடியும்….. மனசையே கருங்கல்லா வெச்சுக்கிடிருக்கிற மவராசி, எண்ணைக்கு அந்தக் கல்லைக் கரைச்சுக்குவாளோ…. அண்ணைக்குத்தான் நம்ப மாப்பிள்ளை நிமிந்து நடப்பாக…..”

உள்ளூர எனக்குள் ஏதோவொன்று உறைத்தது. என்னதான் இருந்தாலும், அக்காவுக்குத் தெரியாமல் இப்படியொன்று நடப்பது சாத்தியப்படாது என்பது மட்டுமல்ல, முறையான செயலும் அல்ல. இதனால் சம்பந்தி வீட்டாருக்கும் நம்மீது நல்லபிப்பராயம் சேதமுறவே சந்தர்ப்பங்கள் உருவாகும்.

எனது துடிப்பினைப் புரிந்துகொண்ட அம்மா, தானே முந்திக்கொண்டு பேசினாங்க.

“பயப்பிடாதம்மா…. இப்ப அவசரப்பட்டு, அக்காகிட்ட எதுவுமே பேசவேண்டாம்…. நாளைக்குக் காலையிலயே நாம ரெண்டுபேருமா உங்கக்கா ரூமுக்குப் போயி, நைசா மேட்டரை ஓப்பன் பண்ணுவோம்…. அதுமட்டுமில்ல…. இதில ஒரு முக்கியமான சமாச்சாரம் என்னண்ணா, நாளைக்கு வர்ர மாப்பிளை வீட்டுக்காரங்க ஒரு சம்பிரதாயத்துக்காக பாக்கிறாங்களேதவிர, உண்மையிலயே தட்டுமாதிக்க ரெடியாத்தான் வர்ராக….. ஏற்கனவே உங்கத்தான் மூலமா அனுப்பின வெவரமும், போட்டோவுமே அவுங்களுக்குத் திருப்தி……….”

பேசிய அம்மா ஒருகணம் அமைதியாகி, என் முகத்தையே நோக்கினாக.

“என்னம்மா யோசனை பண்ணுறே….. என்னடா இது, என்னயபத்தின வெவரம் எல்லாத்தையும் மாப்பிளைக்கு அனுப்பினாக…. ஆனா மாப்பிளையப் பத்தி எதையுமே ஏங்கிட்ட கேக்காம,காட்டாம,தெரிவிக்காம அவுங்க இஷ்டத்துக்கு பண்ணிட்டாக……….. அப்பிடீன்னு யோசிக்கிறியா…..”

ஒருகணம் துடித்தே போய்விட்டேன் நான்.

“என்னம்மா இப்பிடிக் கேட்டுப்புட்டீக….. இந்த ஒலகத்தில, நானு

நல்லாயிருக்கணும்னு ஆசைப்படக்கூடிய ஜீவனுக ரெண்டே பேருதான்…. ஒண்ணு நீங்க….. மத்தது அத்தான்…. அப்பிடியிருக்கிறப்போ நீங்க எனக்காக செய்யிற எந்தவொரு வேலையும் பத்தி நான் எதுக்கு யோசனை பண்ணிக்கணும்…..”

என் பதில் அம்மாவுக்குப் பூரண திருப்தியைக் கொடுத்தது என்பதை அவுங்க முகத்துப் புன்னகையே காட்டியது.

“ரொம்ப சந்தோசம்….. நேத்தைக்கு சாயங்காலம் நான் பசாருக்கு வந்தப்போ, அப்பத்தான் புரோக்கரு மதுரையிலயிருந்து வந்து பஸ்சால எறங்கி, புதன்கெழமை மாப்பிளை வீட்டுக்காரங்க வர்ரது சம்மந்தமான சமாச்சாரங்களை அவசரமாகச் சொல்லிப்புட்டு, நாளைக்கு காலையில கோயிலுக்கு வாங்க, பேசிக்கலாம்னு சொல்லிட்டுப் போனாக….. சாமி கும்பிட்டாச்சு…. கொஞ்சம் வெயிட் பண்ணி, அவுகளையும் பாத்துப் பேசீட்டுப் போவோம்……”

அம்மா சொல்லி முடிக்கவும், தரகர் வரவும் சரியாக இருந்தது.

நாளையதினம் மாப்பிள்ளை வீட்டுக்காரர் வருவது சம்பந்தமாக விபரமாகக் கூறிய தரகர், அம்மா கவனியாதிருந்தபோது என்னிடம் வந்து,

“யாருக்குமே தெரியாம ஓங்கிட்ட குடுக்கச்சொல்லி, மாப்பிளை ஏங்கிட்ட ஒரு கிப்ட் வாங்கிக் குடுத்தாரு…. கோயில சுத்திக் கும்பிடுறமாதிரிப் போயி, பின்னாடி முருகன் சந்நிதியில வெயிட் பண்ணுறேன்…. லேட்டு பண்ணாம வந்து வாங்கிக்க…..”

பதிலை எதிர்பாராமல், பிரகாரத்தில் இறங்கினார்.

அவர் சென்று இரண்டு நிமிடம் கழித்து, நானும் தயாரானேன். என் பார்வை அம்மாவிடம் சென்றது.

“நேரா வீட்டுக்குத்தானே போகப் போறோம்…. கொஞ்சம் தாமதிச்சலும் பரவாயில்லை…. நான் இன்னொரு வாட்டி ஒரு சுத்து பிரகாரத்த சுத்திவந்திடுரேனே…..”

இப்போது நான் பிரகாரத்தில் நடக்கத் தொடங்கினேன்.

என்னைப் பொறுத்தவரை, எனது திருமணவாழ்வில் துணைவராக வரப்போகின்றவர், என்ன நிறம், எவ்வளவு உயரம், எப்படியான குணம், அவரது குடும்பத்தவர்கள் எத்தகையவர்கள் என்பதுபற்றியெல்லாம், இதுவரை எதுவுமே தெரியாது.

தெரியவேண்டியதுகூட அவசியமில்லை. ஒருகால் இல்லாத என்னை மணக்கச் சம்மதித்தவர், என்மனத்தில் “என்னவர்” ஆகிவிட்டார். அவரது ஐந்துவயதுப் பெண்குழந்தை, மானசீகமாகவே “என்மகள்” ஆகிவிட்டாள்.பெற்றோர்கள் “அத்தை – மாமா” வாகவும், என்னவரின் தங்கை “நாத்தனார்” ஆகவும் ஆகிவிட்டாக. அம்புட்டுதான்.

உள்ளத்தளவில், பெரிதாக விரிவடைந்த நான், என்னை நாடிவரும் உறவுகளை, வாரி அணைப்பதற்குத் துடித்துக்கொண்டிருந்தேன்.

என்னவர் எனக்காகப் புதிதாக ஒரு அலைபேசி சிம்மோடு அன்பளிப்புச் செய்திருந்தார்.வாழ்நாளில் இனியினி எத்தனையோ பரிசுகள் வாங்கித் தரப்போகின்றார் எனினும், எனக்காக முதன் முதலில் இரகசியமாக வாங்கித்தந்த அன்பளிப்பு, என் வாழ்நாள் உள்ளவரை என்னுடனேயே இருக்கவேண்டும் என்று உள்ளூர உறுதி எடுத்துக்கொண்டேன்.

வீட்டுக்கு வந்ததும், மாடியில் எனது அறைக்குள் சென்று, கதவுகளைத் தாழ்ப்பாழிட்டுக் கொண்டேன். அலைபேசிக்குத் தேவையான அளவு “சார்ஜ்”, மற்றும் இண்டர்நெட் டேட்ட்டா இருந்ததனால், அதன் ஸ்கிரீனைத் திறக்க அதிக நேரம் ஆகவில்லை.

என் கண்ணுக்குக் குளிர்ச்சிதரும் அளவிலும், அழகிலும் தோற்றமளித்த ஆடவரும், அவரால் கையிலே தூக்கி வைத்தபடி சிரிக்கும் ஐந்துவயதுத் தோற்றத்திலுள்ள பெண்குழந்தையும்……

வேறு யாருமல்ல. என்னவரும், என் மகளுமே என்பதைத் தெளிவாகப் புரிந்துகொண்டேன்.

மறுகணம், மெசேஜ் வரும் ஒலி கேட்டது. முதலாவது மெசேஜ். திறந்தேன்.

“வாழ்க வளமுடன்…. தங்கள் தொடர்பு அனைத்துப் பிறவிகளுக்கும் தொடரட்டும்….”

எத்துணை அருமையான வார்த்தை. வாழ்வின் தொடக்கத்தில் மனத்துக்கு மனம் போட்டுக்கொள்ள வேண்டிய மாண்புமிகு ஒப்பந்தம்.

முதல் மெசேஜிலேயே முடங்கிப் போனேன்.

சாதாரண தொடர்பாகப் பேசத்தொடங்கியது , வாற்சப் வாயிஸ் ஆக ஓடி, வாற்சப் வீடியோ காலில் போய் தொடர்ந்தது.

மேலும், நாளை நேரில்வந்து பேசக்கூடிய சமாச்சாரங்கள், முக்கியமாக எமக்குள் பேசித் தெளிவு படுத்திக்கொள்ள வேண்டிய அனைத்தும் இப்போதே மனம்விட்டுப் பேசப்பட்டன.

என்னவர் முக்கியமாக என்னிடம் தெரிவித்த கருத்தானது,

“பொம்பிளைங்க எப்ப பாத்தாலும், கூனிக் குறுகிப்போயி, குடங்கி முடங்கி அடங்கிப்போயிடக் கூடாது….. வேணும், வேண்டாம்ங்கிறதை நிமிந்து துணிஞ்சு சொல்லணும்…. முக்கியமா எதுக்குச் சொல்றேன்னா, நாளைக்கு நாங்க உங்க வீட்டுக்கு வர்ரப்ப, அங்க வெச்சு எங்க பெரிசுங்க யாராச்சும் கேப்பாங்க….. மாப்பிளையப் புடிச்சிருக்கா, அப்பிடியா….இப்பிடியான்னு ஏதாச்சும் தொணதொணத்திட்டே இருப்பாங்க….. அந்த நேரத்தில நிமிந்து பாத்து யெஸ், நோ சொல்லிட்டா அடுத்த பேச்சுப் பேச யோசனை பண்ணுவாங்க…. மொகத்த நாணிக் கோணிக்கிட்டிருந்தா அடுத்தடுத்துக் கேள்வியாக் கேட்டே , போட்டு அறு அறுண்ணு அறுத்திடுவாங்க….. புரியிதா…..”

“ஓகே…. ஓகே…… இதில நாணிக் கோண என்ன இருக்கு….. பொதுவா எனக்கும் அது புடிக்கிறதில்லை….. அதுமட்டுமில்லாம இது வெசயத்தில உங்க சப்போட்டும் இருக்கிறப்ப, அப்புறம் நான் எதுக்குத் தயங்கணும்….” பதில் சொல்லியிருக்கிறேன் நான்.

“வெரி குட்…. இதில முக்கியமான அம்சம் என்னண்ணா, இதே கருத்த என் பிரெண்ட்ஸ்கூட பேசிறப்போ, என் கூடப்பொறந்த தங்கச்சி என்கூட சண்டையே போட்டிருக்கா…. பெரிசுகளோட சேந்துகிட்டு, பண்பாடு, கலாச்சாரம் அது,இதுன்னு பேசியே கொன்னுபுடுவா….. நீ சொல்றமாதிரி, உனக்கு வரப்போற பொண்டாட்டிய நாணிக் கோணாம பேச வெச்சிடு…. அப்ப நானு ஒத்துக்கிறேன்…. இத உன்னால பண்ண முடியாம பெயிலியராய்ப் போச்சு……..மவனே - ஓங் கழுத்தில இருக்கிற ஒருபவுண் செயின், அடுத்த நிமிசம் என் கைக்கு வந்திடணும்…..பாத்துக்கன்னு பந்தயமே போட்டிருக்கா…..”

“அதுபத்தி யோசிக்காதீக…. நான் பாத்துக்கிறேன்…..”

என்னவர், மகள் மட்டுமன்றி, அத்தை, மாமனார், நாத்தனார்…. மற்றும் அவங்க கணவர் அனைவரின் புகைப்படத்தையும் காட்டி எனக்கு அறிமுகப்படுத்தினார்.

இவர்கள்தான் நாளை, என்னப் பெண்பார்க்க…. எங்கள் வீட்டுக்கு வரப்போகின்றவர்கள். இவர்களில் முக்கியமாகத் தங்கையின் கணவர் புகைப்படத்தைக் காட்டி, மதுரையில் அவர் போட்டோ ஸ்டூடியோ வைத்திருப்பதாகவும், நாளை நடக்கவிருக்கும் நிச்சயார்த்த வைபவத்தைப் புகைப்படம் பிடிக்கப் போவதாகவும் தெரிவித்தார்.

எனினும், எனக்குள் ஒரு பயம். என்னவர், எனக்காக வாங்கி தரகர்வசம் கொடுத்துவிட்ட அலைபேசி பற்றி, என் அம்மாவுக்குக்கூடத் தெரியாது. அப்படியிருக்கும்போது, முறைப்படி அவர்கள் வந்து அறிமுகமாகிப் பேசுவதன் முன், அவருடனும் நான் பேசிப்பழகுவதை நிச்சயமாக அம்மா விரும்பமாட்டாக.

“எல்லாமே நல்லாப் பேசினாலும், மனசுக்குள்ள ஒரு பரபரப்பு இருக்கிறமாதிரி தெரியிதே…. என்னாச்சு…..”

என்னவர் கேட்கின்றார். மறைக்க முடியவில்லை.

“ஒண்ணுமில்லிங்க…. நீங்க தரகர்கிட்ட செல்போன் குடுத்தாலும் குடுத்தீக…. அதை ஏன் மறைச்சுக் குடுக்கணும்….. அம்மா முன்னாடியே குடுத்திருக்கலாமே…. மறைச்சுக் குடுக்கணும்னு, நீங்க சொல்லப்போயி புரோக்கரும் அப்பிடியே பண்ண, அதுக்கு நானும் மதிப்புக்குடுத்து சீக்கிரட்டாக வாங்கி, சீக்கிரட்டாகவே யூஸ் பண்ணிக்கிட்டிருக்கேன்…..”

“அட இம்புட்டுத்தானா….. நான் என்ன ஏதோன்னு கொஞ்சம் டென்சனாகிட்டேன்…..ஏற்கனவே உங்கக்காகூட நீங்க ஏற்கனவே பிராப்ளெம்மில இருக்கிறப்போ நான் இந்தப் போனைக் குடுக்கிறதுபத்தி தெரிஞ்சா, இதனாலயே பிரச்சினை பெரிசாகிடுமோன்னு யோசிச்சுத்தான் சீக்கிரட்டா குடுக்கச் சொன்னேன்…. அவங்க என்னண்ணா, உங்க அம்மாவுக்கே தெரியாம குடுக்கிற அளவில அட்வான்சா இருந்திட்டாங்க…..”

“பரவாயில்லை…. நாளைக்கு நீங்க வர்ரப்பகூட , இதுபத்தி எதுவுமே காட்டிக்காதீங்க …..”

“ஓகே…. ஓகே……….”

இப்போதுதான் எனக்கு நிம்மதியாக இருந்தது.

 

[ தொடரும் ]

 

 

….-