( 5 )

அதிர்ச்சி…. ஆச்சரியம்…. குழப்பம்….. சந்தேகம்….. எல்லாமே என்னிடம் சமத்துவம் புரிந்தன.

நல்லவேளை…. மயக்கம் மட்டும் வரவில்லை. ஒருவாறு என்னைச் சுதாகரித்துக் கொண்டேன்.

“என்னக்கா சொல்றே…. நான் மனசு வெக்கணுமா….. அப்பிடீன்னா, ஏற்கனவே அறுத்துப் பொதைச்ச காலை, தோண்டி எடுத்துவந்து ஒட்டவெக்கப் போறீங்களா…..”

இலேசான கிண்டல்.

அக்காள் முகத்திலே இலேசான சிரிப்பு.

“உனக்கு எப்பவுமே இந்தக் கிண்டல் விட்டுப் போகாதில்ல…. ஒறிஜினல் காலுமாதிரியே பிளாஸ்டிக் கால் மாட்டி நடக்கலாமுன்னு நீ கேள்விப்பட்டதே இல்லியா….”

இப்போதுதான் எனக்கொரு சம்பவம் நினைவிற்கு வருகிறது. படிக்கின்ற காலத்தில் என்னோடு படித்த மாணவி ஒருத்திக்கு இதுபோன்ற நிலை ஏற்பட்டதும், பின்பு அவள் பிளாஸ்டிக் கால் மாட்டி பழையபடி நடமாடியதும், சமீபத்தில் திருமணமாகி கணவன், குழந்தையென மகிழ்ச்சியாக வாழ்வதும் ………

அப்படியானால்……,

உண்மையிலே அக்காளும், அதுபோல் எனக்குப் பிளாஸ்டிக் கால் போட முயற்சிக்கின்றாளா…..!

இனிமேல் நானும் மற்றவர்களோடு சேர்ந்து நடமாட முடியும்…. வண்டி ஓட்ட முடியும்…. எனது தோழிகளைச் சந்திக்க முடியும்…. சினிமா, நாடகம், திருவிழா, கொண்டாட்டங்கள் என்று கலகலப்புக்களைக் காண முடியும். நாளை எனக்கும் திருமணம் நடக்கும்….

அழகான கணவன்….
அளவோடு குழந்தை…..
மெய்யான அன்பு……
கைமீது உலகு….!

எண்ணக் கனவுகள் நீண்டுகொண்டே போயின. கண்கள் இலேசாகக் குளிர்ந்து பனித்தன.

“என்னடீ…… இப்பவே கனவு காண ஆரம்பிச்சிட்டியா….. சரியாப் போச்சு…..”

முதுகிலே தட்டினாள் அக்காள். முழுநினைவுக்கு வந்தேன் நான்.

முகத்திலே பூரிப்புத் தெரிய என்னையறியாமலே கொஞ்சம் கொஞ்சமாக அக்காளின் வசமானேன்.

“அக்கா…. உண்மையாத்தான் சொல்லுறியா…. நான் ஒன்னயபத்தியெல்லாம் எந்தளவுக்கு தப்புத்தப்பா நெனைச்சிட்டேன்….”

அக்காளைக் கட்டி அணைத்துக் கொண்டேன். என் தலையை இலேசாகக் கோதிவிட்டாள் அக்கா.

“நீ என்ன நெனைச்சாலும் பரவாயில்லைடி…. ஏதோ நான் என் கடமையை கடவுளுக்குத் துரோகமில்லாம செய்வேன்….”

பூரிப்பின் உச்சகட்டத்துக்கு வந்துவிட்டேன் நான்.

“அக்கா….. நானும் சீக்கிரமா வெளி உலகத்த பாக்கணும் அக்கா….”

என் பேச்சிலே ஆவலின் துடிப்பும் , சீக்கிரச் செயல்பாட்டுக்கான ஏக்கமும் தெரிந்தது.

“அதுக்கு ஏற்பாடு பண்ற சமாச்சாரமா பேசத்தான் இப்ப ஓங்கிட்ட வந்திருக்கேன்…..”

“என்ன பேசப்போறே…. பைசா எவ்வளவுண்ணாலும் தர்றேன்…. என் செக் புக்கை எடுத்துக் குடு….. எங்கப்பா போட்டுவெச்ச துட்டு, இதுக்கு இல்லேண்ணா வேற என்னத்துக்கு…..”

அவசரப்படுத்தினேன் நான். அமைதியாகப் பேசினாள் அக்காள்.

“அவசரப்படாதடீ….. நான் இப்ப ஓங்கிட்ட பணமா கேட்டேன்….”

பேசியபடி தனது பிளவுசுக்குள்ளிருந்து எதையோ எடுத்தாள். வேறு ஒன்றுமல்ல. வியர்வை படாமலிருப்பதற்காக ஒரு பாலித்தீன் பை. அதற்குள்ளிருந்து நீளமானதொரு பேப்பர். அதனை விரித்து என்பக்கம் திருப்பியபடி, பேனாவையும் எடுத்து, மூடியைத் திறந்து எழுதுவதற்குத் தயாரான நிலையில் என்னிடம் நீட்டினாள்.

“இந்தப் பேப்பரிலதான் பிளாஸ்டிக் காலுக்கு அப்பிளிக்கேசன் தயார் பண்ணணும்…. முன்னய மாதிரி காசைக் குடுத்த உடனையெல்லாம் பிளாஸ்டிக் கால் வாங்கிக்க முடியாது…. கவர்மெண்டுக்கு அப்பிளிக்கேசன் குடுத்து, அவுங்க வந்து நேரில பாத்துத் தரமாகவும், சலுகைங்களோடையும், கால் குடுப்பாங்க…. அதனால நீ இதில ஒட்டியிருக்கிற ஸ்டாம்பில ஒரு சின்னக் கையெழுத்துப் போட்டாப் போதும்…. மீதியை நான் பாத்துக்கிறேன்….. ”

அவளின் பேச்சில் ஒருவித பரபரப்பு தெரிந்தது.

அப்பிளிகேசன் எழுதவென நீட்டிய பேப்பரை கையில் வாங்கிப் பார்த்ததும், இலேசாக அதிர்ந்தேன்.

நீட்டப்பட்டது சாதாரண பேப்பர் அல்ல. ஆவணங்களை விற்பதற்கும், கை மாற்றுவதற்கும் பயன்படுத்தும் “பாண்ட்” பேப்பர். தவிர, “ஸ்டாம்ப்” என அக்காள் குறிப்பிட்டது, சாதாரண தபால்த்தலை அல்ல. அது, “ரெவினியூ ஸ்டாம்ப்”

என் அதிர்ச்சி தொடர்ந்தது.

அரசாங்கத்திடம் விண்ணப்பித்து, இலவசமாகவோ, அல்லது குறைந்த கட்டணத்திலோ, பிளாஸ்டிக் கால் வாங்கும் நடைமுறை இருப்பினும் கூட , அதற்காக “பாண்ட்” பத்திரத்தில் ரெவினியூ ஸ்டாம்ப் ஒட்டிக் கையெழுத்திட்டு அனுப்பும் முறைமை எதற்கு?

அத்துடன் அந்த பாண்ட் பத்திரத்திலும் எதுவுமே எழுதி நிரப்பப்படாதிருக்கும் நிலையில், அரசு ஆணைக்கான தலையில், கையெழுத்திடுவது, மேலே காட்டப்படும் சமாச்சாரங்களை உறுதிப்படுத்துவதாகவும், அது சம்மந்தப்பட்ட நியதிகளுக்கு கட்டுப்படுவதாகவுமல்லவா அர்த்தமாகும்.

“என்ன இது….? அப்பிளிக்கேசன் எனப்படும் விண்ணப்பமா….? ஆளையே முழுங்கும் ஒப்பந்தமா…..? ”

அப்பா அடிக்கடி சொல்லும் வார்த்தையொன்று தக்க தருணத்தில், நினைவுக்கு வந்தது.

“தலையெழுத்தைக் குடுத்தாலும், கையெழுத்தைக் குடுக்காதே…..”

அப்பாவுக்கு எனது ஆத்மார்த்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டேன்.

இடது கையில் பேப்பரும், வலது கையில் பேனாவையும் வைத்துக்கொண்டு ஒருகணம் அக்காளின் செயல்பாட்டை எண்ணி எனக்குள் சிரித்துக்கொண்டேன்.

“அடி பாவிமவளே…. எனக்கு ஒருகால்தான் இல்லேங்கிரதுக்காக மண்டையில மசாலாவும் இல்லேண்ணு முடிவுபண்ணீட்டியேடீ….”

அதேவேளை, வாசல் பக்கம் நின்றபடி, “கையெழுத்துப் போடவேண்டாம்” என்று, அபிநயம் பிடித்துக் காட்டிவிட்டு அப்பால் நகர்ந்தது ஓர் உருவம். அக்காள் நின்ற கோணத்திற்குப் பின்புறத்தே வாசல் இருந்ததனால், அதனைக் கவனிக்க இவளால் முடியவில்லை.

அக்காளின் சதிமுயற்சி அன்பாகத் தொடர்வதை அறிய முடிந்தது. நினைக்கும்போது கோபம்கோபமாக வந்தது.

இரவுப் பொழுதுக்கு “சல்யூட்” அடித்தபடி, மேற்கு வானுக்குள் பதுங்கத் தொடங்கினான் சூரியன்.

“மவளே…. உனக்குமட்டுமா நடிக்கத் தெரியும்….. உன் நடிப்பில அன்பு வர்ரதைப் பாத்து என் நடிப்பில மயக்கமே வருதுடி…… பாரு…..”

மனதுக்குள் சொல்லியபடி மயங்கி (?) விழுந்தேன்.

என் அக்காளா அசரக்கூடிய ஆளு…. மயங்கி(?) விழுந்தெழுந்த மறுநாளே வந்து மறுபடியும் பழைய பல்லவியைத் தொடங்கினாள்.

“லேட் பண்ணாம இதில கையெழுத்தைப் போடு…. ”

“எனக்கு பிளாஸ்டிக் கால் வேணாக்கா…..” மறுத்தேன் நான்.

“எதுக்குடி வேணாங்கிறே…. நேத்தைக்கு வேணும்னு சொன்னியே…..” அவள் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தன.

“அது நேத்தைக்கு………” முனகினேன்.

மறுகணம்…….

“இது இண்ணைக்கோ……. என்னடீ என்னயபாத்தா காமெடி கீமெடி பீஸ் மாதிரியா தெரியிது….. இங்கை என்ன எவனாச்சும் சினிமா சூட்டிங்கா எடுத்திட்டிருக்கான்…… வேற ஒண்ணுமில்லடி, கொஞ்சம் அன்புகாட்டிப் பேசினா உனக்கெல்லாம் குளிர்விட்டுப் போயிரிச்சு இல்லே…..”

பேசியபடியே என்னை அறைவதற்குக் கையை ஓங்கினாள்.

எங்கோ கண்ணுக்கு எட்டாத தூரத்தில் இடி இடிப்பது இலேசாகக் காதில் விழுந்தது.

மறுகணம், ஓங்கிய கையை வெறொரு கை தடுத்ததோடு மட்டுமன்றி, அக்காளின் கன்னத்தில் பலமானதோர் “பளார்” விழுந்தது.

அக்காள் மட்டுமல்ல. நானுந்தான் அதிர்ந்துபோனேன். அங்கே பத்திரகாளியாக அம்மா. கண்கள் சிவப்பேற, கடுஞ்சொற்களால் அக்காளை வைதாக.

“ஏண்டீ…. சொந்தவீட்டில குடியிருக்கத் துப்புக்கெட்ட நாயே…. பாவப்பட்டு இருக்க இடம் குடுத்தா, அப்பிடியே சுருட்டிக்கத் தோணுதோ…..”

குறுக்கிட்டாள் அக்கா. கோபத்தின் உச்சத்தில் அவள்.

“என்ன சின்னப் பொண்ணுமேல வெச்ச பாசம், பெரிய பொண்ணை மறைச்சுக்கிட்டுப் போவுதோ….. ஆஸ்துமா வியாதிக்காரி ஒடம்பை அலட்டிக்கிட்டு படியிலயெல்லாம் ஏறிஎறங்கக் கூடாதிண்ணு டாக்டர் சொன்னதையும் கேக்காம மாடிக்கு வர்ரே….. அந்தளவுக்கு உனக்கென்ன பாசத்தைக் கொட்டிக் குவிச்சுப்புட்டா இந்த மொடச் சிறுக்கி…..”

பேசி முடிப்பதற்குள் புலியாய் பாய்ந்து அக்காளை ஒரு தள்ளுத் தள்ளினாங்க அம்மா. தள்ளப்பட்ட வேகத்தில் பின்புறமாகப் போய் முதுகுப்புறம் சுவரில் முட்ட விறைத்து நின்றாள் அக்காள். இனம்புரியாத பயம் முகத்தில் தெரிந்தது.

எங்கோ கேட்ட இடிக்கு, இங்கே மழைகொட்டத் தொடங்கியது. பேரிரைச்சலும்,காற்றும் அதனைப் பெருமழையாகப் பரிணமித்தன.

“தலைக்கு ஒசந்த பொண்ணுண்ணும் பாக்க மாட்டேன்….. செருப்பைக் கழட்டி அடிச்சுப்புடுவேன் நாயே…… பாண்டு பேப்பரில, அதுவும் ரெவினியூ ஸ்டாம்பில கையெழுத்துப் போட்டாத்தான் பிளாஸ்டிக் கால் குடுப்பாங்களோ….. இத இப்பிடியே கொண்டுபோயி போலீஸ் ஸ்டேசனில குடுத்தா, அவுங்க உனக்கு பிளாஸ்டிக் கையே தருவாங்க….. பாக்கிறியா….. குடுக்கவா…..”

பேச்சின் வேகம் கூடியபோது, ஆஸ்துமாவின் அவஸ்தை ஆட்கொள்ளத் தொடங்கியது. மனதிலே பயம் கெளவத் தொடங்க, சமாதானப்படுத்தும் முயற்சியாக அம்மாவை மெதுவாகத் தொட்டேன்.

சடார் என்று என்கையிலும் ஒரு அடி விழுந்தது.

“எந்த கழுதையும் என்னய சமாதானப்படுத்த முடியாது….. சத்தம் காட்டாம உக்காருடி….. விளங்காத அக்காள்….. அவளுக்கு நீயொரு வெறகு கட்டைத் தங்கச்சி…. அவள் ஓயாமெ நொட்டிகிட்டே இருப்பா….

பெரச்சினை வெளிய போனா குடும்ப மானம் போயிடுமே, உங்க அப்பா பேரு கெட்டுப் போயிடுமேன்னு நாம அமுக்கிக்கிட்டே கிடக்கணும்…. அப்பிடித்தானே….. நல்லா கேட்டுக்குங்கடி, ரண்டு பொண்ணுங்களில எவ பெரிசு, எவ சிறிசுண்ணு பேதம் பாக்கிறவ நான் இல்ல…. எனக்கு ரெண்டுபேருமே ஒண்ணுபோலத்தான்…. ஆனா, ஒருத்தியால ஒருத்திக்கு ஏதாச்சும் வில்லங்கம் வந்திச்சிண்ணா, அப்பிடிப் பண்ணுறவளுக்கு நிச்சயமா நான் சப்போட் பண்ண மாட்டேன்…..”

சத்தமிட்டபடி, அக்காளை நெருங்கினாங்க அம்மா.

“இந்தா பாருடி…. இம்புட்டு நாளும் நான் பேசல்ல…. இனிப் பேசாம இருக்கப் போறதில்லை…. என்னய நீ பேச வெச்சிட்டே….. நல்லாக் கேட்டுக்க….. நீயும், மாப்பிளையும், பேரனும் குடியிருக்கிற இந்த வீடு உன் தங்கச்சிக்கு உள்ளது…. அவள் வீட்டிலயே இருந்துகிட்டு, அவள் சொத்தையே அனுபவிச்சுக்கிட்டு, அவள் மேலயே கைய வெப்பியா நீ…. அவளைப் போல கிண்டல் பண்ணி நடிச்சுக் காட்டுவானா ஓம் பையன்…. உங்க மூணுபேரையும் கம்பி எண்ண வெச்சு, களி திங்கப் பண்ணிப்புடுவேன் பாத்துக்க…….”

“அம்மாவா இப்படிப் பேசிறாங்க…..”

எனக்குள்ளே கேட்டுக்கொண்டேன் நான். அம்மாவே தொடர்ந்தாங்க. அவங்க பார்வையாலேயே அக்காளை எரித்துக்கொண்டிருந்தாங்க.

“ பாருடி….. அப்பா இல்லேன்னாலும், அக்கா நீயிருக்கே….. உன் தங்கச்சிக்கு நல்லவாழ்க்கை அமைச்சுக்குடுப்பே, உனக்கில்லாத அக்கறை யாருக்கு வந்திடப்போவுதுன்னு நெனைச்சித்தான் இம்புட்டு நாளும் “போகட்டும் போகட்டும்”னு விட்டுபுட்டிருந்தேன்….. ஆனா, இத்தனை நாளும், உன் மனசுக்குள்ளை வெச்சுத் தாழிசம் பண்ணிப் பொரியல் பண்ணிக்கிட்டதையெல்லாம் இண்ணைக்கு இந்த பாண்டு பேப்பர் மூலமா படையலே பண்ணிட்டே…… போதும்…. இனி உன்னைய நம்புறதில எந்தப் பிரயோஜனமும் இல்லை….. அவள் சமாச்சாரத்த நானே பாத்துக்கிறேன்….. உனக்கு கடைசியா ஒரு எச்சரிக்கை பண்ணுறேன் கேட்டுக்க….. இது அவளுக்கு உண்டான வீடு…. அவள் எங்கை போகணும்னு தோணுதோ அங்கையெல்லாம் போவா, வருவா….. அதைத் தடுக்கவோ, தட்டிக் கேக்கவோ எந்த நாய்க்குமே அதிகாரம் இல்லை…. அதே டயிம்ல நீ எந்தக் காரணத்தை வெச்சும், இனி இந்த மாடிப்பக்கம் வந்திடவே கூடாது பாத்துக்க…..

மீறி ஏதாச்சும் எசகுபிசகா நடந்துகிட்டீங்கண்ணா, அப்புறம் உங்க மூணுபேருக்கும் போலீசு, ஜெயிலு, களிதான்…. போய்த்தொலைடீ நாயே…..”

. மழையின் சுவடே இல்லாதபடி வானம் மெதுவாகச் சிரித்தது. தென்காசி, குற்றாலப் பக்கமிருந்து போராளிபோலப் புறப்பட்டு வரும் குளிர்ந்த காற்று, மிகவும் வேகமாகப் பொதிகை மலையைக் கிழித்துக்கொண்டு வந்து, உடலை இதமாகத் தழுவியது.

அக்காளைப் பார்க்கவே பாவமாக இருந்தது. சுட்டெரிப்பதுபோல ஒருகணம் என்னை நோக்கிவிட்டு, தலையைத் தொங்கவிட்டபடி கீழே இறங்கினாள்.

மறுகணம், சலவை செய்யும்பொருட்டு தன் உடுப்புக்கள் சிலவற்றைப் பொறுக்கி எடுத்துக்கொண்டு, குளியல் அறைப்பக்கம் போவதை மாடியிலிருந்தபடி அவதானித்தேன்.

கீழே கெஸ்ட் ஹவுசையொட்டித்தான் குளியலறையும், மோட்டர் ரூமும் உள்ளன.

கெஸ்ட் ஹவுசைப் பொறுத்தவரையில், நெருங்கிய உறவினர்கள், மற்றும் தவிர்க்க முடியாத முக்கியஸ்தர்கள் வரும்பட்சத்தில் அங்கு தங்கவைக்கப் படுவார்கள். மற்ற நாட்களிலெல்லாம் அடைத்தே கிடக்கும்.

ஆனால், தினசரி காலையில் எங்கள் சமையல்காரப் பையன் அந்த வீட்டைச் சுத்தப்படுத்தியே வைத்திருப்பான்.

“கெஸ்ட் ஹவுஸ் வீட்டை ரொம்ப சுத்தமா வெச்சுக்கடா…. உனக்கு எப்போ கலியாணமாகுதோ அப்போ இந்த வீட்டை உனக்கே தர்ரோம்….”

அப்பா அடிக்கடி சொல்வது, இன்னும் என் காதில் ரீங்காரமிடுகிறது. அதன் சாவி இப்போது அக்காளின் கைவசம்தான் இருக்கின்றது.

அக்காளுக்குத் தெரியாமல் சமையல்காரப் பையனிடம் சொல்லி, வேறோர் டூப்ளிகேட் சாவி செய்வித்து வைத்திருக்கின்றாங்க அத்தான். எப்படியும் மாதத்தில் ஒருநாளேனும் ஏதாவது தொழில் முயற்சியாக வெளியூர் செல்வதாக அக்காளிடம் கதையளந்து நம்பவைத்துவிட்டு, கிளம்பிப் போவதுபோல முன்வாசல் வழியாக வெளியே கிளம்பி, பக்கத்து தெருவழியே சுற்றிப் பின்புறத்தே மதிலேறிப் பாய்ந்து, கெஸ்ட் ஹவுசின் பின்கதவைத் திறந்து உள்ளே வந்து தங்கிவிட்டு, மறுநாட் காலையில் பின் வாசல்வழியாக வெளியேறி,மீண்டும் மதில் பாய்ந்து தெருச் சுற்றி, நல்ல பிள்ளையாக வீட்டுக்கு வருவாங்க.

அத்தானின் இந்த இரகசியப் பயண வேளைகளில், எங்கள் சமையல்காரப் பையனின் கைங்கரியத் திறமையால் பிரியாணிப் பாசல்,சிக்கன் ரோஸ்ட், ஒரு குவாட்டர் பாட்டில்(bottle) பிரண்டி ஆகியன ஏற்கனவே வாங்கி ஒழித்து வைக்கப்பட்டிருக்கும்.

காரணம் : ஆசார அனுஷ்டான்ங்களில் ஊறிப்போன எங்கள் குடும்பத்திற்கும் மேற்காட்டிய பொருள்களுக்கும் தொடர்பே இல்லாத நிலை இருப்பினும், ஏதோ வெளிப் பழக்க காரணங்களால், இவைகள் அத்தானிடமும் ஊடுருவி விட்டன.

ஆனால், அதனைத் தனது குடும்பத்துக்கும், வெளியுலகினுக்கும் பயந்து இரகசியமாகச் செய்கின்றவரையில், அத்தானால் எந்தவிதமான கண்ணியக் குறைவும் வராது என்பது எனது உறுதியான நம்பிக்கை.

இதையெல்லாம் தெரிந்திருந்தாலும், இன்னமும் எதுவுமே தெரியாதவள்போல வாழ்கின்றேன் என்றால், அத்தான்மீதும், அவங்க அடிப்படை உணர்வுகள் மீதும் நான் கொண்ட மதிப்புத்தான்.

நான் வைத்திருக்கும் மதிப்பினுக்கு ஏற்றாற்போல, நியாயத்தின் பக்கம் இயங்கி, தான் கட்டிய மனைவியின் அராஜகக் கெடுபிடிகளுக்கு தலை சாய்க்காமல், மறைமுகமாகவேனும் எங்களுக்கு உதவிக்கொண்டிப்பது……

அதுதான் எங்க அத்தான்……!

அதுவரை பக்கத்துரூம் கதவோரம் மறைவாக நின்ற அத்தானும், சமையல்காரப் பையனும் வேகமாக வந்து, அம்மாவை இரு பக்கமும் தாங்கியபடி கீழே இறங்கினார்கள்.

சமையல்காரப் பையனின் குரல் சற்றுத் தடிப்பானது என்பதால், அவன் மெதுவாகப் பேசுவதாய் எண்ணியபடி பேசியதுகூட, என் காதில் விழத் தவறவில்லை.

“சின்ன அய்யா சொல்லிக்குடுத்தமாதிரியே போலீசு சமாச்சாரத்த பின்னிப்புட்டீங்கம்மா…..”

அவர்கள் கீழே இறங்கிவிட்டார்கள்.

“அப்படியானால், அத்தானின் மறைமுக இயக்கத்தில்தான் அம்மாவின் இந்த அபிநயங்களும் அரங்கேறினவா…..”

புரிந்தது.

அக்காளின் அதிகாரத்துக்கு அத்தானால், ஈடுகட்ட முடியவில்லை என்றாலும், அவரது மனச்சாட்சியோ இந்த அகம்பாவங்களுக்கு அனுமதி தரவில்லை.

நேற்றும் இதுபோல அக்காள் வந்து, பாண்டு பேப்பரில் கையெழுத்துக் கேட்டபோது, அவள் பின்னாலே நின்று, “போடவேண்டாம்” என்று சைகை காட்டிச் சென்றதும், இப்போ அவள் மீண்டும் அதே முயற்சியில் ஈடுபடும்போது, அதை நேரடியாகத் தடுக்காவிட்டாலும், அதற்கான சரியான ஆலோசனையை வழங்கி, அம்மாவை இயக்குவதையும் எண்ணிப்பார்த்தபோது, என்மனத்தில் ஏணி வைத்தாலும் எட்டமுடியாதளவு உயரத்தில் அவர் தெரிந்தார்.

அதேவேளை அன்று, மணிமுத்தாறு சென்று திரும்பும்போது அக்காளானவள் வேண்டுமென்றே செய்த சில்மிஷத்தால், ஒருகணம் உணர்ச்சிவசப்பட்டு என்னையே மறந்தநிலையில் நான், தப்பான எண்ணக் கிளர்ச்சியோடு அத்தானின் பக்கம் திரும்பியதை இப்போது நினைத்தாலும், இதயம் பதறுகின்றது.

பகவானுக்குப் படைக்கப்பட்ட நெய்வேத்தியத்தில், பறந்துபோய் உட்காரத் துடித்த ஈயைப்போல, துச்சமாக என்னையே நான் கண்டு துடித்தேன்.

கட்டுப்படுத்த முடியாதளவு கண்ணீருடன் கதறியபடி, அத்தானிடம் ஆத்மார்த்தமாக மன்னிப்புக் கேட்டுக்கொண்டேன்.

அந்தப் பாவத்துக்குப் பரிகாரமாக என்னுலில் கிடைத்த இழப்பு, இறைவனால் கொடுக்கப்பட்ட தண்டணையென எண்ணியபோது, கொஞ்சம், கொஞ்சமாகச் சமாதானத்தைக் கண்டுகொண்டிருந்தேன்.

(தொடரும்)