அத்தியாயம் நான்கு!

ஆஸ்பத்திரியிலிருந்து “டிஸ்சார்ஜ்” ஆகி, வீட்டுக்குப் புறப்படும்போது, எனக்குப் பக்கத் துணையாக ஒருஜோடி ஊன்றுகோல் தரப்பட்டது.

இரண்டு கக்கத்திலும் வைத்துக்கொண்டு உன்னி உன்னி நடப்பதுகூட எனக்குப் புது அனுபவமாகவே பட்டது.

எங்கள் வீட்டுத் தோட்டம் பூராவும் “சிட்டுக்குருவி”யாகச் சிறகடித்துப் பறந்த நான், இப்போது மாடிவீட்டு ஏழை ஆகிவிட்டேன்.

அக்காளின் ஆதிக்கம் அலை மோதியது. அம்மா நோயாளி. அத்தானோ வாயில்லாப் பூச்சி. சமையல்காரப் பையனோ மூன்றாவது மனிதனாக ஆக்கப்பட்டு விட்டான். முன்பு அவனுக்கிருந்த சுதந்திரங்களில் பல பறிக்கப்பட்டிருந்தன.

அக்காளின் மகனுக்கும், தாயின் குணம் அப்படியேயிருந்தது. பக்கத்துவீட்டுப் பையன்களுடன் விளையாடும்போது, “எங்க சித்தி இப்பிடித்தான் நடப்பாங்க….” ன்னு என்னைக் கேலி செய்து நடந்து காட்டுவது, அவனுக்கு அன்றாட பிழைப்பாக ஆகிவிட்டது.

“என் வீட்டில் எல்லாம் உண்டு…. ஆனால், எனக்கென்று எதுவும் இல்லை….” என்னும் வாசகம் எனக்கென்றே ஆக்கப்பட்டது போலாகியது.

அடிக்கடி அக்காளால் இம்சைப்படுத்தப்பட்டு, ஸ்டோர் ரூமில் அடைக்கப்படுகின்ற நிலைமைகூட , யாருக்குமே தெரியாமல் என் கவலைகளையெல்லாம் கொட்டித்தீர்த்து, கதறிக் கண்ணீர்சிந்தவும், அதனால் ஆறுதல் பெறவும் நல்லதோர் களமானது.

சாப்பாட்டைக்கூட சமையல்காரப் பையன் கொண்டுவந்து கொடுத்துவிட்டுப் போவான். மற்றும், அடிப்படை வசதியெல்லாம் மாடியிலே இருப்பதை காரணம் காட்டி, கீழே வரக்கூடாது என்பதும், மேலே படியேறி மொட்டைமாடிக்குப் போகக்கூடாது என்பதும் அக்காளின் கண்டிப்பான உத்தரவு.

ஏற்கனவே மாடியிலே வைத்துப் பார்த்துக்கொண்டிருந்த தொலக்காட்சிப் பெட்டியைக்கூட, அக்காள் கீழேயுள்ள தன்னுடைய “பெட்ரூமுக்கு” எடுத்துச் சென்றுவிட்டாள்.

பழுதாகிப் போய், பயனற்றுக் கிடக்கின்ற வானொலிப் பெட்டியை மட்டும், பார்வைக்கு வைத்துவிட்டிருக்கின்றாள்.

தன்னுடைய அலைபேசி பழுதாகிவிட்டதாகவும், அதனால் என்னுடைய அலைபேசியைத் தனக்கு வேண்டுமென்றும், பிடுங்கிக்கொண்டாள். புதியதொரு அலைபேசி வாங்கித் தருவதாகவும் சப்பைக்கட்டு கட்டினாள்.

அவையெல்லாம், அவ்வப்போ சம்பவமாகி, நாளடைவில் சரித்திரமாக எழுதிவைக்கமட்டும் ஆக்கப்படும் படைப்புக்களாக எனக்குத் தெரிந்தன.

நடந்து முடிந்த சம்பவமெல்லாம் கனவுபோல வந்து சென்றன. மாடிப்படியேறி வந்து ஸ்டோர்ரூம் கதவைத் திறக்கின்ற சத்தம். வேறு யார்…. எல்லாம் அந்த ராட்சசி எனது அக்காள்தான்.

உள்ளே தள்ளி கதவடைத்துவிட்டுச் சென்று ஒருமணி நேரம்கூட ஆகவில்லை. அதற்குள் என்ன திட்டத்தோடு வந்திருக்கின்றாளோ என நினைக்கும்போதுதான் பயமாக இருந்தது.

கவனியாதவள்போல யன்னல்வழியே வெளியே நோக்கினேன். அருகே வந்த அக்காள் என் தலையைக் கோலினாள். எனக்குள்ளே ஒரு குரல்……

“தலையை வாருகின்றாள்…. அப்படியானால் காலை வாரப் போகின்றாள்….. கவனம்…. ரொம்பக் கவனம்….”

அக்காளின் பேச்சிலோ அமைதி குழைந்து வந்தது. அன்பின் தேக்கம்போல நடித்தது.

“அக்காமேல கோபமாம்மா……”

வானத்தைக் கவனித்தேன். மழைக்கான இருள் படரத் தொடங்கியிருந்தது.

எதுவுமே பேசாமல் யன்னல்வழியே வெளியே பார்த்தபடி நின்றேன்.

அக்காளே மீண்டும் பேசினாள். இப்போது அவள் குரலில் சற்றுக் கடுமை தெரிந்தது.

“நான் என்னமோ கேட்டுக்கிட்டிருக்கேன்…. நீபாட்டில வெளியில பாத்துக்கிட்டு என்னபண்ணுறே….”

நானும் சற்றுக் கடுப்பானேன்.

“ஸ்டோர் ரூம் யன்னல்வழிய வெளியில கொல்லைப் புறத்தைப் பாருண்ணு நீதானே சொன்னே….. அதுதான் கொல்லைப்புறத்தைப் பாத்துக்கிட்டு, அங்கயிருந்து வர்ர நாத்தத்தை மோந்துகிட்டிருக்கேன்….”

முகத்திலே தெரிந்த இலேசான சிடுசிடுப்பை மறைத்தபடி , அமைதியாகப் பேசினாள் அவள்.

“நீ பேசிறது எனக்குப் புரியாமல் இல்ல…. நான் எதுக்காக உன்னய மொட்டைமாடிப் பக்கம் போவாதை, வெளிய எட்டிப் பாக்காதைன்னு கொஞ்சமாச்சும் யோசனை பண்ணிப்பாரு…. மாடியிலயுள்ள கிறில் கம்பிகள் ஸ்ராங்கே இல்லை….. ஏற்கனவே ஒருகாலு மொடமாப் போச்சு….. தப்பித் தவறி, மேலயிருந்து கீழ விழுந்திட்டீன்னா அடுத்தகாலும் மொடமாப் போவ, அப்புறம் எவ்வளவு வேதனை…..”

கவலையான நடிப்பில் கலக்கித் தள்ளினாள் அக்கா. நானும் விட்டுக்கொடுக்காது அப்பாவிபோல பேசினேன்.

“இப்போ இருக்கிற வேதனையை ரெண்டால பெருக்கிப் பாக்கணும்…. இல்லியாக்கா…..”

உள்ளத்துள் தோன்றியவலி, உறைப்போடு அவளை நோக்க வைத்தது.

“சே…. கற்பனை செஞ்சு பேசினாலும், பேசிற பொய் - நடைமுறைக்கு ஒத்துவர்ரமாதிரி இருக்கவேண்டாமா…..”

அக்கறை நிரம்பி வழிந்து, உலகமகா நடிப்பில் உச்சத்தை நோக்கினாள் அக்காள்.

“ஒருகாலு மொடமான பொண்ணு கல்யாணம் பண்ணிக்கவே முடியாத சூழ்நிலை இப்ப இருக்கிறப்போ, ரெண்டு காலுமே மொடமானா அப்புறம் எங்கே போய் மாப்பிளை தேட….”

நானும் சளைக்கவில்லை.

“மாப்பிளைய எதுக்கக்கா செரமப்பட்டுத் தேடணும்….. ஒத்தைக் காலு மொடமான ஒடனேயே என்னய சமையல்காரப் பயல்கூட கட்டிக்க மாட்டான்னு சொன்னே….. ரெண்டுகாலுமே மொடமானா என்ன…. ஏதாச்சும் ஒரு கழுதையைப் புடிச்சுக் கட்டிவெச்சு, தெருவில வெரட்டி விட வேண்டியதுதானே…..”

“நீ என்னமாச்சும் சொல்லம்மா…. எல்லாருமே சேந்து என்னய, ரத்த பாசமே இல்லாதவன்னு முடிவு பண்ணிட்டீங்க இல்லே…. பரவாயில்ல…. என்னயபத்தி ஆண்டவன் ஒருத்தனுக்குத்தான் தெரியும்….. நீ ரெண்டு கைக் கக்கத்திலும், கம்பை வெச்சுக்கிட்டு நடக்கிறதைப்பத்தி அக்கம் பக்கத்தவங்க கேலி பண்றப்போ மனசுக்கு எவ்வளவு சங்கடமா இருக்கு தெரியுமா….அந்த வேதனையை விட, உன்னய கீழவந்து வெளிய நடமாட விடாம மாடியிலயே வெச்சிக்கிட்டிருக்கிற வேதனை பரவாயில்லடி…..”

அவளின் கண்கள்கூட கலங்கியிருப்பதுபோலத் தோன்றின.

அடக்க முடியாத சிரிப்பை அள்ளிச் சிதறவிட்டேன் நான்.

“அதுதான் பெத்த புள்ளைகூட , அக்கம்பக்கத்துப் பசங்களோட வெளையாடுறப்போ, எங்க சித்தி இப்பிடித்தான் நடப்பான்னு நடந்து காட்டிக் கேலிபண்றப்போ உங்களுக்கு குளுகுளுண்ணு இருக்குமில்ல….”

“அவன் சின்னப்பயல்….. அவனுக்கு என்ன தெரியும்…. நீ வேணும்னா கூப்பிட்டு, உங்கம்மா எப்பிடி நடப்பாங்க…. எப்பிடிப் பேசுவாங்கன்னு கேட்டுப்பாரு….. உடனேயே என்னயமாதிரி பண்ணிக்காட்டுவான் பாரு…. அவனைப் போயி….”

ஒருகணம் நிறுத்தி, தன்னை ஆசுவாசப்படுத்திக்கொண்டு தொடர்ந்தாள். முகத்திலே சற்று சீரியஸ் தெரிந்தது.

“மத்தவங்க மாதிரி நீயும் வெளிய நல்லபடியா நடமாடணும்…. அதுக்கு நீதான் மனசு வெக்கணும்…..”

புதிர் போட்டாள்.

(தொடரும்)

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.