அத்தியாயம் இரண்டு!

அம்மாவின் இடதுபுறத்தே நின்று தாங்கிக்கொண்டவர் வேறு யாருமல்ல. அத்தான்தான்.

அம்மா கேட்டாக….,

“இம்புட்டு நேரமும் நீங்களும் இங்கைதான் இருந்தீங்களா மாப்பிள்ளை….”

சமையல்காரப் பையன் குறுக்கிட்டான்.

“வேற யாருண்ணு நெனைச்சீங்கம்மா….. சின்னம்மா நிக்கிறவரைக்கும் மூச்சே காட்டாம இருந்துபுட்டு, அவுங்க கீழ எறங்கிப் போனப்புறம் திடீர்ன்னு வர்ரதாயிருந்தா அது நம்ம சின்னையாவாகத்தானே இருக்க முடியும்….. நான் சொல்ரது கரட்தானே சின்னையா…..”

அத்தானைப் பார்த்துத்தான் கேட்கின்றான் என்பது புரிந்தது.

கவலையின் மத்தியிலும் சிரிப்பு வந்தது.

அத்தானோ எதுவுமே பேசாமல் தலையைக் குனிந்தபடி கீழே இறங்கினார்.

அக்கா இல்லாத நேரங்களில், சிலவேளை கலகலப்பாகப் பேசுவதைக்கூட அத்தானிடம் காணலாம். ஆனால் அவளுக்கு முன்னால் மட்டும்……. சரி சரி அதுபற்றிப் பேசுவது வீண்.

மும்தாஜுக்காக தாஜ்மஹாலைக் கட்டிய ஷாஜகான், இறுதியிலே தன் மகன் அவுரங்கசீப்பினால் சிறை வைக்கப்பட்டபோது, சிறையின் யன்னல் கம்பிகளினூடே தாஜ்மஹாலின் ஒரு புறத்தை மட்டும் பார்த்துப் பெருமூச்சும், கண்ணீரும் விட்டுக்கொண்ட கதைபோல எனது நிலையும் இருந்தது.

வீட்டின் கொல்லைப்புறத்தில்தான், பின்புற மதிலின் கேற்றும், கார் ஷெட்டும் இருந்தன. தகரத்தால் மூடிமறைக்கப்பட்டிருந்த ஷெட் கூரைப்புறம் முழுமையாகத் தெரிந்தது.

தூரத்திலே தெரியும் பொதிகை மலையிலிருந்து, தமிழ்நதி தாமிரபரணியின் குளிரைக் கலந்துவரும் தென்றல்கூடத் தீயாகச் சுட்டது.

கண்களில் நீர்த் திவலைகள் திரண்டு, காட்சிகளெல்லாம் “அவுட்-ஆப்-போக்கஸ்” ஆக, உள்ளமோ எனது பால்யகால “பிளாஸ் பேக்” கை, “நெகடிவ் மூவி ஃபிகராக” பிளே பண்ணியது.

ஒருநாள் மாலை நாலுமணி.

ஷெட்டிலிருந்து வண்டி வெளியே வருகிறது. வெளியே வந்த வண்டியின் கதவு திறக்கப்பட்டபோது, அதைவிட்டு இறங்கிய அப்பா, எனக்கு “டாட்டா” காட்டுராக.

அப்பா திருநெல்வேலிக்குக் கிளம்பிட்டாக என்பது தெரிந்தது.

என்னைத் தன் இடுப்பிலே சுமந்தபடி அம்மா, என் காதுக்குள் குசுகுசுத்தாக.

“வர்ரப்போ இருட்டுக்கடையில நெறய அல்வா வாங்கிகிட்டு வரச்சொல்லும்மா…..”

அதை ஆமோதித்தேன் நான். நான்கு வயது மழலைமொழி நர்த்தனம் புரிந்தது.

“அப்பா…. நேக்கு ஈட்டுகட அலுவா…..”

என் பேச்சை சிரித்தபடி ரசித்தாக அப்பா.

“என்…ன……. புள்ளைக்கு மட்டுந்தான் அல்வா வேணுமா….. வேற யாருக்குமே தேவல போல….”

வார்த்தையில் உள்ளர்த்தம் தொனித்தது. அம்மாவைப் பார்த்து சிரித்தபடி கண்ணைச் சிமிட்டினாக.

சிணுங்கியபடியே பதில் சொன்னாக அம்மா.

“ம்கூம்…. வேற யார்தான் அல்வா கேட்டாக…. உங்ககிட்ட……”

அடுத்து தன்பேச்சால் அம்மாவை மடக்கினாக அப்பா.

“வேற யாருக்குமே வேணாமான்னு நான் பெரிய பொண்ணை நெனைச்சில்லியா கேட்டேன்….. நீ எதுக்கு சிணுங்கிறே….. ஆமா…. எங்கே பெரியவளைக் காணோமே…….”

கள்ளச் சிரிப்பை உதிர்ந்தபடி கேட்டாங்க அப்பா.

“பக்கத்து வீட்டுப் பொண்ணுகூட குளிக்கண்ணு வாய்க்காலுக்குப் போயிருக்கா….. பன்ரெண்டு வயசாகியும் கொஞ்சம்கூட பொறுப்பு கிடையாது…. வர்ரப்போ அவளுக்கும் சேத்து அல்வா வாங்கிகிட்டு வந்திடுங்க…..”

அம்மா “வாய்க்கால்” என்று குறிப்பிட்டது “கன்னடியன் கால்வா” யைத்தான். எழுதும்போது “கால்வாய்” என்று பெரிதாகத் தோன்றினாலும், அதனைப் பற்றிப் பேசும்போது, “வாய்க்கால்” என்று சிறிதாக்கிவிடுவது, ஊரின் பழக்கமாகி விட்டது.

புறப்பட்டுக்கிட்டே பேசினாக அப்பா.

“மத்தவங்களுக்கிண்ணு எது வாங்கினாலும், அதில தனக்கும் பங்கு கிடைக்கும்ங்கிறத சரியாத் தெரிஞ்சுகிட்ட பொண்ணு பெரியவ….. அதனால தனக்கிண்ணு எதுக்குமே செரமப்படவேண்டிய அவசியம் அவளுக்கில்ல…. பொளைச்சுக்குவா கில்லாடி…..”

ஆஹா….. என்ன அருமையான காட்சி.

அந்த நிமிசத்திலேயே உலகின் ஓட்டங்கள், அத்தனையும் அப்படியே நின்று….. எல்லோருக்கும் அதே வயது, அதே கோலத்தில்…. அதே நிலையில்….

காலம் பல கடந்தாலும், வாழுகின்ற “கறுப்பு வெள்ளை” புகைப்படம் போல ….. கல்லிலே செதுக்கிய சிற்பம்போல…..

கடந்தகாலக் காட்சிகளெல்லாம் அப்படியே நிலைத்திருந்தால், எப்படி இருந்திருக்கும்.

அம்மாவின் இடையிலே தொங்கியபடி, ஆனந்தத்தில் மிதந்திருப்பேன்…. அப்பாவின் சிரித்த முகத்தையே ரசித்திருப்பேன்….. அன்பிற்கும், ஆதரவிற்கும் மத்தியில் ஓடிவிளையாடி, ஆதிக்கத்திலேயே பந்தாடியிருப்பேன்.

நீண்டதொரு பெருமூச்சு எழுந்து, நெஞ்சம் விம்மியது. கண்களிலே திரண்ட துளி, கன்னம் வழியாக அங்கே விழுந்தது.

அப்பா புறப்பட்டுப் போவதை ஜன்னல்வழியாகப் பார்ப்பதற்காக, அம்மாவின் இடையிலே தொங்கியபடி வந்து பார்க்கின்ற அந்த அறையானது, பின் நாளில் “ஸ்டோர் ரூம்” ஆகவும், அப்பப்போ என் அக்காளால் என்னைப் பூட்டிவைக்கும் “சிறைச்சாலை” ஆகவும் ஆனது.

துண்டிப்பால் பாதிப்புக்குள்ளான காலினை ஒருதடவை தடவிப் பார்த்துக்கொண்டேன். அதை இழப்பதற்குக் காரணமான அந்த விபத்து ஓர் ஆண்டுக்கு முன்…….

அது நடந்தது கரிநாள். பஞ்சாங்கத்தில் மட்டுமல்ல….. என் வாழ்விலும் கூட.

வருடா வருடம் தைப்பொங்கலை அடுத்துவரும் கரிநாளில், சோறு கறி சமைத்து, மக்கள் கூட்டங்கூட்டமாக மணிமுத்தாறு அருவிக்குச் சென்று குளித்து, உண்டு அன்றய தினத்தை ஆனந்தமாக்க் கழித்துவிட்டுத்தான் வருவார்கள்.

மணிமுத்தாறைச் சமீபமாகக் கொண்டுள்ள அம்பாசமுத்திரம் தாலுகாவைச் சார்ந்த கல்லிடைக்குறிச்சி, விக்கிரமசிங்கபுரம் போன்ற இடங்களிலிருந்தும், கிழக்கே வீரவநல்லூரை அடுத்து சேரன்மகாதேவி, பத்தமடை வரையிலும், வடக்கே பாப்பாக்குடி, முக்கூடல், அரியநாயகி புரம் என்ற சுற்றுவட்டத்திலும், மேலும் வாகன வசதியுள்ளவர்கள் திருநெல்வேலி நகரிலிருந்துகூட வருவார்கள்.

இதிலே குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் மற்றும் முடியாதவர்கள் ஆகியோர் தமக்கேற்ற அளவுக்கு குளித்துவிட்டு ஒதுங்க,

இள இரத்தம் ஓடும் ஆண்,பெண் கூட்டங்கள் துள்ளிக் குதித்துக் குளித்துவிட்டுத், தலை துவட்டாமல், ஈரம் சொட்டச் சொட்ட உணவுண்ண ஆரம்பிப்பதைப் பார்க்கவே வேடிக்கையாக இருக்கும்.

பொங்கியோடும் தண்ணீரையொட்டி ஆங்காங்கே சமாந்தர மட்டமாகக் காணப்படும் வெற்றுப் பாறைகளில், நன்றாகத் தண்ணீரை எத்திக் கழுவிவிட்டு, அதன்மேலே சோற்றினைப் படைத்து, கறியினையும் ஊற்றி, வட்டமாக அமர்ந்து சாப்பிடுவார்கள்.

சாப்பிட்ட கையோடு மீண்டும் அருவியிலே தலையைக் கொடுத்துக் குளிக்க ஆரம்பித்து விடுவார்கள்.

பின்பு மீண்டும் உணவு…… மீண்டும் குளிப்பு……

வெறுப்புக்குரிய கரிநாளை, தமது விருப்புக்குரிய நாளாக ஆக்கிக் கொள்வார்கள்.

வனச்சருக அதிகாரிகளுக்குத் தெரியாமல் சிலர், மறைத்து வைத்துக் கொண்டுவரும் உற்சாக பானங்கள், மேலும் அவர்களுக்கு ஊக்கத்தைக் கொடுத்துக்கொண்டிருக்கும்.

ஆற்றின் மருங்கிலே ஆங்காங்கு காணப்படும் புதர்களை நாடிப்பார்த்தால், ஆங்கெல்லாம் சிதறிக் கிடக்கும் மதுப்பாட்டில்கள், இவர்களுக்குச் சாட்சியாகும்.

மணிமுத்தாறு செல்ல அக்காளும், அத்தானும் தயாராகினாக. பேரனைக் கூட்டிச்செல்ல வேண்டாமென அம்மா தடுத்திட்டாக. பயணம் செய்வதற்கான கார், நமது சொந்த வண்டி என்பதனால் பிரச்சினையில்லாது போய்விட்டது.

கூட வரும்படி, என்னைக் கட்டாயப்படுத்தினாக அக்கா. பக்குவம் தெரியாத குழந்தையல்ல நான். அவர்கள் இருவரும் ஜோடியாகப் போகும்போது நந்திபோல நான் எதற்கு?

இறுதியில் அக்காளின் பிடிவாதமே வென்றது. நான் கூடவருவதில் அத்தானுக்கு உடன்பாடில்லை எனினும், மனைவியை எதிர்த்துப் பேசும் தைரியம் அவருக்கில்லை என்பது தெரிந்ததே.

வண்டியை அத்தானே ஓட்டினாக. பின் சீட்டில் அக்கா என்னோடு கூட உட்காருவாக எனக் காத்திருந்த எனக்கு ஏமாற்றமே கிடைத்தது.

தாம் இருவர் மட்டுமே பயணம் செய்வதுபோலச் செயல்பட்டாக அக்காள்……

முன்சீட்டிலே அத்தானுடன் நெருக்கமாக உட்கார்ந்துகொண்டாள். பின்சீட்டில் தங்கை ஒருத்தி, அதுவும் திருமண வயதிலுள்ள பெண் இருக்கின்றாளே என்ற எண்ணமே இல்லாமல்(?) தனது வலது கையைத்தூக்கி, அத்தானின் தோள்களிலே இணைத்துக்கொண்டு……..

பார்க்கக்கூடாதென நினைக்கும்போதும், பார்…. பார்…… என உள்ளூர ஏதோ உருட்டிக்கொண்டிருந்தது. கண்கள் நாடியபோதும் அதனை வர்ணிப்பதற்கு வார்த்தைகள் வர மறுத்தன.

வீட்டு நிர்வாகத்திலும் மற்றும் வெளி விவகாரங்களிலும், அத்தானைத் தனது கணவனாகவே மதிக்காது செயல்படும் அக்காள், தனக்கெனத் “தேவை” ஏற்படுகின்ற போது மட்டும், தானாகவே வந்து செல்லச் சீண்டல் செய்வதுவும், உறவாடுவதும் அவள் எத்தகையதொரு சுயநலக்காரி என்பதை என்முன்னே பலதடவை காட்டியிருக்கின்றாள்.

இடதுபுறக் கதவின் பின்சீட் யன்னல் வழியே வெளியே வேடிக்கை பார்ப்பதிலே கவனத்தைத் திருப்பினேன்

அதிலும் முக்கியமாக,கல்லிடைக்குறிச்சி ஆற்றுப்பாலத்தின்மேலே வண்டி செல்லும்போது முக்கியமாக, கீழே செழுமை பொங்கும் தாமிரபரணி நதியும்,அதனை தொடுவதுபோல தோற்றம் தரும் மேற்குத்தொடர்ச்சி மலைவரிசையும், அதிலே ஆங்காங்கே சிதறிக்கிடக்கும் வெண்பட்டு மேகமும்…………ஆஹா…….

அவை ஒவ்வொன்றும் திரண்டு, அருவி மழையாகக் கொட்டிவிடும். ஆனால், இதுபோலே நெஞ்சினிலே சிதறிக் கிடக்கும் ஆசைகள் அனைத்தும் கைகூடித் திரண்டு, ஆனந்த மழையாகக் கொட்டுவது எப்போது?

எண்ணங்கள் தவிக்கின்றன. உதடுகளோ தம்மையறியாமலே துடிக்கின்றன. கண்கள்கூடக் கலங்குகின்றனவே…..! ஏன்?

“ஏன்” என்று கேட்டால், பதில்கூறமுடியாத ஒரு வக்கிரமான ஆசை.

அறிவானது வெறுக்கும்படி உறுத்துகின்றது. ஆனால், ஆசை மட்டும் கண்கள் வழியாக அவர்களது சில்மிஷத்தைக் காணத் துடிக்கின்றதே….!

யன்னலுக்கு வெளியே முகத்தைப் போட்டாலும், ஓரக்கண் பார்வை அடிக்கடி என்னைமீறி, அவர்களை நோக்கியது.

எனினும், இலேசான நிதானம்.

பேசாமல் வண்டியை நிறுத்தி, தலை வலிக்கின்றது எனப் பொய் கூறி, இவர்கள் இருவரையும் மணிமுத்தாறுக்கு அனுப்பி வைத்துவிட்டு, அம்பாசமுத்திரத்திலிருந்து பஸ்ஏறி, வீரவநல்லூருக்கு திரும்பிவிடலாமா….!

திரும்பிவிடலாம்….. இருந்தாலும் இன்னும் சிறிதுநேரம் மட்டும் இவற்றைப் பார்த்துவிட்டு….. வி.கே.புரத்திலே (விக்கிரமசிங்க புரம்) இறங்கிவிடலாம்…..

தவிர்க்க முடியாததோர் தவிப்பு….!

இப்போது முகத்திலே குளிர்காற்று “ஜில்” என்று வீசியபோதும், ஆங்காங்கே வியர்வை முத்துக்களும் தோன்றியுள்ள விசித்திரம் எனக்குள் தோன்றித் தோன்றி மறையும் சபலங்களுக்குச் சாட்சியமாகின.

கர்சீப்பை எடுத்து முகத்தைத் துடைத்துக்கொண்டேன். பின்புறக் கண்ணாடியோடு வைத்திருந்த தலையணையொன்று என்னையறியாமலே என் மடிக்கு வந்தது.

எதிர்காலக்கனவுகளின் மிதப்பிலே, முகம்தெரியாத மன்னவன் ஒருவனின் உருவத்தை அந்தத் தலையணையில் காணத் தொடங்கினேன்.

அவனுக்குப் பஞ்சுத் தலையணையாகத் தரப்படவேண்டிய எனது மடி, அந்தத் தலையணைக்கே தலையணையானது.

அங்கே நிதானங்கள் நிர்மூலமாகின. புதிய உணர்வுகள் பூக்கத் தொடங்கின. நரம்புகளோ நர்த்தனம் புரியத் தவித்தன. பறந்து செல்லும் பட்டாம் பூச்சிகளை முந்திச்செல்லும் பக்குவத்திலே மனச்சிறகை விரித்தேன் நான்.

உடலைச் சுத்தப்படுத்தும் அருவியின் சூழ்நிலை, என் உள்ளத்தை மேலும் அசிங்கப்படுத்தியது.

ஆமாம். மணிமுத்தாறு அருவிக்கு சுற்றுலா வந்தவர்களில் அதிக பட்சமானோர் ஜோடிகள்தான்.

திருமணமாகாத காதல்ஜோடிகள், காலேஜ் காதலர்கள், புதுமணத் தம்பதிகள் மட்டுமன்றி குழந்தைகளுடன் வந்த குடும்பஸ்தர், பேரன் பேத்தி கண்டவர்கள்கூட தனித்தனியே….

ருசியான பானங்களெல்லாம் அவர்கள் பருகிக்கொண்டிருந்தார்கள். பசியோடு இங்கொருத்தி உருகிக்கொண்டிருந்தேன்.

சிரமத்துடன் மனதை நிலைப்படுத்தியபோது, ஒரு முடிவுக்கு வந்தேன். திரும்பிச் செல்லும்போது, இவர்கள் இருவரையும் பின்சீட்டிலே போட்டுவிட்டு, வண்டியை நானே ஓட்டிச் செல்ல வேண்டும்.

அப்போதுதான் இவர்களது “கன்றாவி ” களையெல்லாம் பாராமல், மனத்தைப் பறக்கவிடாமல் நிதானத்தைக் கடைப்பிடிக்க முடியும்.

புறப்படும்போது மணியோ நாலுமுப்பதை நெருங்கிவிட்டது. வனச்சரக அதிகாரிகள் வந்து சத்தமாக அறிவித்தார்கள்.

“இன்னும் பத்து நிமிசத்துக்குள்ள ஒருத்தர்கூட இருக்கக் கூடாது….. பாரெஸ்ட் டிப்பாட்மெண்டில இதுக்குமேல அனுமதி இல்லை…. யானை முதல்கொண்டு பயங்கர மிருகங்கள் வந்து, நடுரோட்டிலயே நடமாடும்…. சீக்கிரமா மணிமுத்தாறு பார்டரைக் கடந்திடுங்க….. அப்புறம் உங்க உசிருக்கு நாங்க பொறுப்பில்லை….. சீக்கிரம் கிளம்புங்க…..”

வண்டியை நானே செலுத்தினேன். இப்போது மனதிலே கொஞ்சம் தெளிவு.

இலேசான தூறலாய் ஆரம்பித்தது பெருமழையாகக் கொட்டத் தொடங்கியது.

வண்டியின் கதவிலுள்ள கண்ணாடிகள் அடைக்கப்பட்டன. மழையின் பொருட்டு பொழுதும் சற்று இருட்டியதாகத் தென்பட, வண்டியின் வெளிலைட்டைப் போட்டுக்கொண்டேன். வைபர் மழைத்தண்ணீரைத் துடைத்தபடி பாதையைத் தெளிவுபடுத்தியது.

கல்லிடைக்குறிச்சி, கோட்டைத்தெரு கடந்தபோது வண்டிக்குள்ளும் லைட் எரிந்தது. மனதுக்குள்ளே திட்டினேன் நான்.

“நிச்சயமாக இது அக்காளின் வேலைதான். சந்தேகமே இல்லை….”

வண்டி வீரவநல்லூரை நோக்கி விரைந்துகொண்டிருந்தது. பின்னால் அக்காளின் செல்லமான முணுமுணுப்பு.

எனது கண்கள் இரண்டும் அடிக்கடி கண்ணாடிக்குத் தாவித்தாவி இறங்கின. அவர்களது உருவமும், செயலும் தெளிவாகத் தெரிந்தன.

“பார்ப்பது தவறுதான்….. அது டிரைவிங்கிற்கே ஆபத்து….. என்பது புரிகிறது….. பாராதிருப்பதும் தவறுபோல உள்ளத்தில் ஏதோ உறுமுகின்றதே…..”

அந்த உறுமல்கூட அக்காளுக்காக வக்காலத்து வாங்கத் தொடங்கியது.

லைட்டை அணைக்கும்படி சொல்லவும் முடியவில்லை. சொன்னாலோ அல்லது அணைத்தாலோ, அக்காள் திட்டுவாள். மீண்டும் லைட்டைப் போடுவாள்.

“லைட்டப்பத்தி உனக்கென்ன கவலை….. உன்பாட்டில ரோட்டைப்பத்து ஓட்டவேண்டியதுதானே…..”

என்று சத்தமிடுவாள்.

ஆனால், உள்ளமோ அவர்கள் லைட்டை அணைத்துவிடக்கூடாது என்பதிலே ஆழ்ந்து என்னைத் தோற்கடித்து, அத்தானுக்குப் பக்கத்தில் என்னை அழுத்தி உட்காரவைக்கும் அவ நினைப்பிற்கு என்னை ஆளாக்கியது.

கல்யாணப் பருவத்தை நெருங்கி, கண்ணிலே ஏக்கத்துடன் தவிக்கும் என் கண்களில் நீர் முட்டியது. பயங்கரமானதொரு பெருமூச்சு. விபரிக்க முடியாத்தொரு பொறாமை உணர்வு.

வண்டி இப்போது வெள்ளங்குளி வளைவை நெருங்குகின்றது. அடிக்கடி விபத்துக்களைச் சந்திக்கும் பகுதி அது என்பது நினைவில் வந்தபோதிலும், அந்தப் பயத்தைக்கூட மீறிய ஒரு துடிப்பை அப்போது அனுபவித்தேன் நான்.

விவரிக்கப்போனால் அநாகரிக வார்த்தைக்கு ஆராதனை செய்யும் சூழல் உருவாகும் என்னும் கட்டத்தில், என் நிலையை மறந்தவளாக, ஸ்டேரிங்கைக் கைவிட்டு, அத்தானுக்கு நேராகத் திரும்ப….

அருகாமையிலுள்ள ரயில்வே பாதையில், செங்கோட்டையிலிருந்து திருநெல்வேலி செல்லும் புகையிரதம் பயங்கரமாகச் சத்தமிட்டே ஊளையிட்டுக்கொண்டு செல்ல…..

எதிரே ஒரு லாரி வருவதுகூட என்னால் கவனிக்க முடியாது போக, கண் இமைக்கும் நேரத்துக்குள் காட்சிகள் “கட்” ஆகின.

(தொடரும்)

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.