அத்தியாயம் ஒன்று!

பாண்டிய மன்னர் காலத்தில் கட்டப்பட்ட கோவில்களான, “பெரிய கோயில்” என்று உள்ளூருக்குள் அழைக்கப்படும், அருள்மிகு., ஸ்ரீ மரகதாம்பிகை உடனுறை பூமிநாதர் ஆலயம், ஸ்ரீ செண்பகவல்லி அம்பாள் உடனுறை விக்கிரம பாண்டீஸ்வரர் ஆலயம்,ஸ்ரீதேவி பூதேவி உடனுறை சுந்தர்ராஜப்பெருமாள் ஆலயம் போன்றவற்றால் பழம்பெருமையும்….. அருள்மிகு.,புனித வியாகப்பர் ஆலயம், மல்கா மலியார் ஜிம்ஆ பள்ளி போன்றவற்றால் சகோதரத்துவமும்….. ஊரைச்சுற்றி நிறைந்துள்ள உயர்வுமிக்க வயல்வெளிகளால் செழிப்பும்…. அவ்வப்போ பருவங்களில் ஜீவநதிபோல ஓடும் “கன்னடியன் கால்வா”யால் வயல்களுக்கு உயிரும்…… பொலிவினைத் தர, திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் தாலுகாவில் உள்ள, எங்க ஊரை “வீரவநல்லூர்”என்பாக.

இங்கு தெற்குரத வீதியில், வடக்கு வாசல் அமைப்பில்தான் எங்க வீடு உள்ளது.

அதன் மூன்றாவது மாடியில், அதாவது மொட்டை மாடியில் வடப்புறக் கிறிலோடு ஒட்டி, ஸ்டூல் போட்டு உட்கார்ந்த நிலையில் தூரத்தே தெரியும் வயலை ரசித்தவளாக நான்.

மஞ்சள் வர்ணத்தைப் பூசிக்கொண்ட மாலைக் கதிரவனின் ஒளியால், இயற்கைப் பசுமைக்கு இன்னும் மெருகூட்டப்பட, ஏற்கனவே வெளியுலகை எட்டிப் பார்த்துக்கொண்டிருந்த “குடலை” நெற்குருத்தெல்லாம், “விடலை”ப் பொற்குருத்தாக மாயம் செய்தன.

மொட்டை மாடிக்கு யாரோ வந்துவிட்டுப் போனதுபோல தெரிந்தது. அதிலே கவனம் செலுத்தாமல் இருந்தேனாயினும், அடுத்துக் கேட்ட சத்தம் என்னை அதிரவைத்தது.

“பாரும்மா…. சித்தி இங்கை, மொட்டை மாடி விளிம்பிலயிருந்து வெளிய எட்டிப் பாத்துக்கிட்டிருக்காம்மா…..”

ஏதோ விசித்திரத்தைக் கண்டவன்போல பலத்த சத்தமிட்டுக்கொண்டு மாடிப்படியிலிருந்து தாவிக்குதித்து, கீழே ஓடினான், எனது அக்காளின் மகன்.

. ஏழு வயது. ஒரே பையன் என்பதால், அதிகப்படியான செல்லத்தைக் கொடுத்து வளர்த்ததன் பயன், கட்டுப்படுத்த முடியாதளவு துடியாட்டம், சொற்பேச்சுக் கேட்காத பிடிவாதம். அவன், போட்ட சத்தத்தின் உலுக்கலில் வீடே அதிர்ந்தது.

சத்தம் தொடர்ந்தது.

“அம்மா….. மொட்டை மாடிப்பக்கம் போகக்கூடாது…. வெளிய தெருவை எட்டிப் பாக்கக்கூடாதுன்னு, சித்திகிட்ட சொல்லியிருக்கேல்ல…. ஆனா, சித்தியோ மொட்டை மாடிக் கிரில் ஓரத்தோட ஸ்டூல நகட்டிவெச்சு, அதுமேல ஒக்காந்து, தெருவை வேடிக்கை பாத்துக்கிட்டிருக்காம்மா….”

பெரிய சாதனை புரிந்த மகிழ்ச்சி அவனுக்கு.

“இவளு வரவர ரொம்ப அடங்காப்பிடாரியா இருப்பாபோல இருக்கே…..நான் எத்தனை நாள் சொல்லியிருக்கேன் இப்பிடியெல்லாம் பண்ணாதடின்னு…. கேட்டாளா….”

ஏசியபடி மாடிப்படிகளில் ஏறிவந்த அக்காளின், கண்களில் சிவப்பு ஏறியது. கைகள் துடித்தன.

எனக்கு ஒருகால் இல்லையே என்கின்ற உணர்வையே மறந்துவிட்ட நிலையில், நிலத்திலே கால் மிதிக்கத் துள்ளிய நான், ஸ்டூலோடு சேர்ந்து சரிந்தேன். இடையிலே பலத்த அடி.

பக்கத் துணைக்கு வைத்திருந்த கைத்தடியும் விழுந்து, பல்லவி சேர்த்தது.

“அம்மா….” என்ற என் அலறல்….. ஸ்டூலின் “டனால்” சத்தம்….. கைத்தடி தந்த கலகலப்பு…..

அத்தனையும் அக்காளை வரவேற்றன.

பத்திரகாளியாக நின்றாள் அக்காள். கண்ணிலே பயம் தொனிக்க மிரண்டு, மிரண்டு பூனையாகக் குறுகினேன் நான்.

அடிபட்ட வலியைவிட பிடிபட்ட வலிதான் நெஞ்சை உலுக்கியது.

“ஏட்டீ….. நான் எத்தனை தடவைடி உனக்குச் சொல்லியிருக்கேன், மொட்டை மாடிக்கு போகாதடின்னு…. தானே நடக்கமுடியாத மூஞ்சூறு எதையோ கட்டிட்டு அலைஞ்சிச்சாம்….. வெளிய எட்டிப்பாக்க உனக்கு ஸ்டூல் வேற கேக்கிதோ…..” கூறியபடி காலால் ஒரு “எத்து” வைத்தாள்.

உயிரே போய்வந்தது எனக்கு.

“ஐய்யயோ அம்மா….. வலிக்குதக்கா….. இனி மொட்டை மாடிக்கு வரவே மாட்டேங்கா…..” கையெடுத்துக் கும்பிட்டேன் நான்.

சட்டென்று அக்காள் இரண்டடி பின்னால் நகர்வது தெரிந்தது.

கவனித்தேன். அங்கே எங்க அம்மா, அக்காளின் தோளைப்பிடித்து பலமாக இழுத்தாக.

ஐம்பத்தைந்து வயதை நெருங்கிவிட்ட அம்மா ஒரு ஆஸ்துமா நோயாளி. கடினமான வேலைகள் செய்வதையோ, முக்கியமாக இதுபோன்று மாடிப்படிகளில் ஏறுவதையோ, முடிந்தவரை தவிர்க்கவேண்டும் என்பது டாக்டரின் ஆலோசனை. அதன்படி காலம் கழிக்கவேண்டிய கட்டாயத்துக்கு உள்ளானவக. கட்டாயத்தை மீறவேண்டிய சூழ்நிலை வரும்போது என்ன செய்வது….?

அப்பா இறந்து நான்கு ஆண்டுகள் ஆகிவிட்ட போதிலும், அவரது நினைவுகளை நெஞ்சிலே தாங்கிக்கொண்டும், அவ்வப்போ அவர் கூறிய அறிவுரைகளை நினைத்துப் பார்த்துக்கொண்டும், கம்பீரமாக இருந்தாக அம்மா.

“பாத்தியாலே…. பிள்ளைவாழ் இருக்கிறப்போ எப்பிடி எல்லார்கிட்டயும் அன்பா இருந்தாங்களோ அதேமாதிரி அவங்கட வீட்டம்மாவும் இருக்காங்க…..”

வெளியார் மத்தியில் அப்படியொரு பெருமை அம்மாவுக்கு உள்ளது.

அக்காளுக்குத் திருமணமாகி, ஒரே பையன். அக்காளின் கணவர் - அதாவது அத்தானோ ஒரு கம்பெனியில் “கேசியர்” பொறுப்பிலே இருந்தாக.

திருமணத்தின்போது, பேசியபடி கொடுக்கவேண்டிய சீர்வரிசை அனைத்தையும் அப்பா கொடுத்துதான் அனுப்பினாக. பெற்ற பிள்ளைகள் இருவர் மட்டுமே என்பதனால், வஞ்சகமில்லாமல் அதேபோல அடுத்த மகளான எனக்கும், கொடுக்கவேண்டும் என்னும் எண்ணத்தில், இருக்கின்ற வீடு, நிலத்துக்கான பத்திரம் ஆகியவற்றை எனது பெயரிலே எழுதிவைத்துவிட்டாக.

எனக்கு எதையோ நிறைய எழுதிக் கொடுத்துவிட்டது போல, தப்பான ஒரு புரிதலை மனதில் கொண்ட அக்கா, பலதடவை அப்பாவுக்கு முன்னால் வைத்தே என்னிடம் நேரிலேயே பேசியிருக்காக.

“எங்கப்பா அம்மா பெத்தெடுத்த பொண்ணு நீ மட்டுந்தான்டீ….. தெருவோரத்தில கிடந்து, பொறுக்கியெடுத்த பொண்ணுதான் நான்….”

அப்போது எனக்குள்ளே நினைத்துக்கொள்வேன்…..

“யார் கண்டா….. அப்பா குணமும் இல்ல…. அம்மா குணமும் இல்ல……”

கட்டிக்கொடுத்தபோதிலும், அடிக்கடி வந்து தொணதொணத்துப் புழுபுழுத்து பிடுங்கக்கூடியவரை பிடுங்கிச் செல்வதில் கவனமாக இருந்தாக அக்கா.

துள்ளித் திரியும் புள்ளிமானாக இருந்த நான், அப்பா காலமாகியதும், ஆதரவற்றவளாக….. ஏக்கவாதியாக….. ஆகிவிட்டேன்.

அதே காலத்தில் அத்தான், தனது பொறுப்பிலிருந்த பணியில் என்ன செய்தாரோ தெரியாது. மொத்தத்தில் பத்து லட்சம் ரூபா மாயமாகிவிட்டது.

வேறு வழியில்லை. பணம் செலுத்தியே ஆகவேண்டும். இல்லையெனில் குடும்ப மானம் காற்றில் பறக்கவிடப்படும். கைக்கு விலங்கு வரும். பின்பு கோர்ட்…. விசாரணை…. ஜெயில்…..

பணத்தொகையை அடைக்க குடியிருந்த வீட்டை விற்றாக. கட்டவேண்டிய தொகை போக மீதிப் பணத்தை வெளிநாட்டுக்கு அனுப்பும் ஏஜெண்டு ஒருவரிடம் கொடுத்து ஏமாந்தாக.

சுத்தம்…….. பரிசுத்தம்………

பிறகெங்கே அவுக சத்தம்…….!

அத்தோடு அக்காள் குடும்பம் எங்கள் வீட்டுக்கு குடிவந்துவிட்டது.

இன்றோ எனது வலது முழந்தாழுக்கு கீழே இல்லை. என்னதான் அழகு இருந்தாலும், அங்கவீனமான பெண்ணை மணப்பதற்கு, யாருதான் முன்வரப்போகிறாக….?

மத்தியிலே கிழிந்த ரூபா நோட்டை வாங்க, வங்கியில்கூட முகம் சுழிக்கிறாகளே !

“அப்படியானால், தங்கைக்கு எட்டாப் பழமாகிப்போகும், இந்தச் சொத்து அனைத்தும்….. என் மகனுக்கே……..”

அக்காளின் எண்ணம் தெளிவாகப் புரிந்தது.

தங்கை சொத்து சோறுபோட்டது. தாலிகட்டிய கணவர் கூலிக்கு வேலைசெய்யும் எடுபிடியாக . அவுக வாய்க்கு “மாயத் தையல்” போட்டுவிட்டாக அக்கா.

எல்லாமே நடந்துமுடிந்த சம்பவங்களின் அடுக்குகள்.

மொட்டைமாடிவரை அம்மா வருவாகன்னு எதிர்பாராத அக்கா கொஞ்சம் அதிர்ச்சியடைந்தாக. எனினும், சமாளித்தபடி,

“என்னம்மா………”

அம்மா குறுக்கிட்டாக....

“என்னம்மாவாவது…. நொன்னம்மாவாவது….வாயமூடிட்டு தூரப் போலே…..”

“அருமை மகள் போட்ட கூச்சல், ஆளையே அசத்திட்டுதுபோல…. பாச உணர்ச்சி பொத்துக்கிட்டு வந்திடிச்சு….. உடனே பறந்து வந்திட்டே….”

“வாய மூடுடி செருக்கிபுள்ள….. உனக்குத்தான் கூடப்பொறந்த பாசம் கொஞ்சமும் இல்லேன்னா, பெத்தபாசம் எனக்குமா இல்லாம போயிரிச்சு…. அவள பாருடி….. பதினெட்டு வயசு…… வாழவேண்டிய காலத்தில, காலை மொடமாக்கிட்டு, கனவுகளைக் கண்டு கண்ணீர வடிச்சுக்கிட்டிருக்கா…..

மொட்டை மாடியிலயிருந்து, கீழ பாத்துக்கிட்டிருக்கிறகூட உனக்குப் புடிக்கலியோ…. தெரியும்டி உன்னோட நரிப்புத்தி…. தெருவ பாத்தா சோடியா போறவங்களை பாத்து கலியாண ஆசைவந்திடும், அப்பிடி ஆசைவந்து ஒருவேளை கலியாணம் பண்ணிக்கிட்டா இந்தச் சொத்தை நீ சுருட்டிக்க முடியாதில்ல……”

மூச்சு இறைத்தது. ஆஸ்துமாவின் அவஸ்தைச் சத்தம் அடுத்தவீட்டுக் கூரையிலும் தட்டியது.

காய்கனிச் சாமான்கள் வாங்குவதற்காக வெளியே சென்றிருந்த சமையல்காரப் பையன், வேகமாக வந்து, சாமான்களைப் பையோடு சமையல்க் கட்டிலேயே போட்டுவிட்டு, படிகளில் துள்ளிக் குதித்து ஓடிவந்தான்.

வந்தவன் அம்மாவை ஒருபுறம் தாங்கிக்கொண்டான். வயதிலே பதினைந்தாக இருந்தாலும், மனதிலே அவன் இன்னும் பச்சைக் குழந்தைதான்.

அக்காளின் மனது இன்னமும் ஆறவில்லை. அவளின் சாமியாட்டமும் தீரவில்லை. எனக்குப் பின்புறமாக வந்து, இரண்டு கக்கத்திலும், பிடித்துத் தரதரவென இழுத்துக்கொண்டே ஸ்டோர்ரூம் வரை சென்றவள், நொடிப்பொழுதுக்குள் உள்ளே தள்ளி “படார்” என்று கதவை அடித்து மூடினாள்.

“மொட்டைமாடி கேக்கிதோ தெரு பாக்க….. நம்ம ஸ்டோர் ரூமிலயும் யன்னல் இருக்கு….. அதுவழிய கொல்லைப் புறத்தைப் பாத்துக்கிட்டிரு…..”

ஏளனம் செய்யும்போது, அவள் முகத்திலே தெரியும் மகிழ்ச்சியின் ரேகைகள், என் இதயத்தைத் துளைத்து எடுத்தன. வலிதாங்க முடியாமலும், இயலாமையின் கொதிப்பாலும் கதறிக்கொண்டிருந்தேன் நான்.

சமையல்காரப் பையனுடன் அம்மா போடும் சத்தம் கேட்டது.

“விடுடா என்னய….. இண்ணிக்கு ரெண்டில ஒண்ணு பாத்துப்புடுரேன்….. ”

அவனோ விடவில்லை. மாடிப்படியிலிருந்து அம்மாவைக் கீழே அழைத்துச்செல்லும் பணியிலேயே தீவிரமாயிருந்தான்.

“வேண்டாம்மா…. ஒங்க ஒடம்பு இருக்கிற நெலமைக்கு நீங்க டென்சனே ஆகக்கூடாதும்மா….. சின்னம்மா குட்டியம்மாவைப் போட்டு அடிக்கிறதொண்ணும் புது சமாச்சாரம் இல்லியேம்மா…..”

என் அம்மாவை, தானும் “அம்மா” என்றும், அக்காளைச் “சின்னம்மா” என்றும், என்னைக் “குட்டியம்மா” என்றும் கூப்பிடுவான் அவன்.

அவனது பேச்சு அம்மாவுக்கு கோபத்தை அதிகரிக்கச் செய்துவிட்டது போலும். அம்மாவின் சத்தம் இன்னும் பலமாகக் கேட்டது.

“என்னடா சொன்னே…. புது சமாச்சாரம் இல்லேன்னா, எத்தனை நாளுக்கு இந்த அநியாயத்த பாத்துக்கிட்டிருக்கச் சொல்ரே…. தெனசரி ஏதாச்சும் சாக்குவெச்சு அந்தப்புள்ளயப் போட்டு கொண்ணுட்டே இருக்கா….. என்னய விடப்போறியா, இல்லியா……”

அடுத்து, அவனின் முதுகிலே ஓங்கிக் குத்துகின்ற ஒலி கேட்டது.

அக்காள் மேலிருந்த கோபத்தையெல்லாம் அவனிடம் காட்டினாங்க அம்மா.

தொடர்ந்து அவனின் குரலும் கேட்டது.

“அம்மா….. என்னய வேணும்னா அடிச்சே கொண்ணிடுங்கம்மா…. சந்தோசமா செத்துப் போயிடுரேன்…. இந்த ஒடம்பில ஓடுற ரத்தம் ஒங்க வீட்டு ரத்தம் அம்மா…. என்னய பெத்தவங்க என் அறியாவயசில கோயில் திருவிழாவில தொலைச்சிட்டுப் போனப்போ….. நீங்களும், ஐயாவும் என்னை எடுத்துவந்து பாசம்காட்டி…………..”

சற்றே நிறுத்திப் பேசினான்.

“நான் உங்க புள்ளைம்மா…… என்னய எதுவேணும்னாலும் பண்ணுங்க….. ஆனா, இப்ப நீங்க அங்கைமட்டும் போகாதீங்க….. கொஞ்ச நேரத்தில எல்லாம் சரியாப் போயிடும்…..”

அம்மாவின் வேகம் சற்று தணியத் தொடங்கியது. என்னை ஸ்டோர் ரூமில் தள்ளிப் பூட்டிய அக்காள், சத்தமாகத் திட்டியபடி கீழே இறங்கினாக.

“தன்னால தான்கெட்டா அதுக்கு யார்தான் என்ன பண்ணுவா….. இவள் வண்டிய ஓட்டத்தெரியாமல் ஓட்டி, வம்பில மாட்டிக்கிட்டதுக்கு அடுத்தவளா பொறுப்பு…..”

அனைவரும் ஒருகணம் அதிர்ந்துவிட்டோம். அதிலும், முக்கியமாக அம்மா மிகவும் கோபத்துக்குள்ளாகியிருக்காக என்பதை அவக வார்த்தைகளிலே புரிய முடிந்தது.

“ஆமாண்டி…. அதுக்கு நீதாண்டி முழுக்க முழுக்கப் பொறுப்பு….. அண்ணைக்கு நீபண்ணின கூத்தாலதாண்டி அவளுக்கு இந்தக்கேடு வந்திருக்கு…….” வெம்பினாக.

“வேடிக்கைதான்…. வண்டிய ஓட்டுறவங்க நேரா ரோட்டைக் கவனிச்சு ஓட்டுவாகளா….. இல்லே பின்சீட்டில உக்காந்திருக்கிறவங்க என்ன பேசிறாங்க, என்ன பண்ணிறாங்கண்ணு பாத்துக்கிட்டு ஓட்டுவாகளா….”

அக்காளின் பேச்சு அம்மாவை இன்னும் சூடாக்கியது.

“நாசமாய் போறவளே….. அண்ணைக்கு போனப்போ நீங்க ரெண்டுபேர் மட்டும் போய்த் தொலைஞ்சிருக்க வேண்டியதுதானே…. அவள் வரமாட்டேன்னு எவ்வளவோ சொல்லியும் கேக்காம பிடிவாதமா அவளையும் பிக்னிக்குக்கு கூட்டிக்கிட்டுப் போனியே…. சரி, போறதும் போறிய – வண்டிய ஓட்டச்சொல்லி மாப்பிள்ளைகிட்ட சொல்லிட்டு, நீயும் அவளும் பின்னாடி உக்காந்திருக்க வேண்டியதுதானே….. அதைவிட்டு, வயசுப் பொண்ணைக் கூட்டிக்கிட்டுப் போறோமேங்கிற யோசனைகூட இல்லாம அவளை வண்டியோட்டச்சொல்லி விட்டுப்பிட்டு நீங்க ரெண்டுபேரும் பின்னாடி உக்காந்துகிட்டு……”

சட்டென்று நிறுத்தி சற்று மூச்சு விட்டுக்கொண்டாக.

“இந்தா பாருடி…. பெத்த புள்ளைண்ணும் பாக்கமாட்டேன்….. அப்புறம் என் வாயிலயிருந்து என்ன வரும்ணு எனக்கே தெரியாது….. நானும் கன்னிப் பொண்ணாயிருந்து ஆசைங்க, ஏக்கங்க, எதிர்பாப்புங்க எல்லாத்தையும் கடந்து கலியாணமாகி உங்க ரெண்டு பேரையுமே பெத்திருக்கேன்….. எனக்கு நீ புதுசா வேதம் ஓத வராதை, பாத்துக்க…. ஆனா ஒண்ணு…. ஏழை அழுதகண்ணீர் கூரிய வாளையொக்கும்ணு பெரியவங்க சொல்லியிருக்காங்க….. வேண்டாத வேலையப் பாத்து உன் புள்ளைகுட்டிக்குப் பாவத்த சேத்துப்புடாதை….. அம்புட்டுத்தான்…..”

அதற்குமேல் அம்மா எதுவும் பேசவில்லை. படியிலே இறங்கினாக. வலதுபுறம் சமையல்காரப் பையன்.

இடதுபுறம் யார்….?

அப்போதுதான் கவனித்தாக. சிறிய ஆச்சரியம்….!

(தொடரும்)

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.