- எழுத்தாளர் கடல்புத்திரனிடம் ஒருமுறை பேச்சுவாக்கில் 'ஏன் நீங்கள் உங்கள் இயக்கப் பயிற்சி முகாம் அனுபவங்களைப் பதிவு செய்யக்கூடாது" என்று கேட்டேன்.எழுதுவதாகக் கூறிச் சிறு நாவலாக எழுதியுள்ளார். \ பெயர்களை மாற்றியிருக்கின்றாரென்று தெரிகின்றது. இருந்தாலும் தளத்திலியங்கிய அமைப்பின் பயிற்சி முகாமொன்றின் அனுபவங்களைப் பதிவு செய்திருக்கின்றார். அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது. - பதிவுகள்-


அத்தியாயம் இரண்டு:பெரிய டேவிட்!

        ஜீவன் பொதுவாகவே 'எனக்கே அரசியல் தெரியாது, இவர்களுக்கு எப்படித் தெரிய வரும் ?... என அனுதாபத்துடன் தோழர்களிடம் தெரிந்ததைக் கூறி வருபவன். கிராமப் பொறுப்பாளராளராக இருக்கிற போது அடிக்கடி ஏ.ஜி.ஏ பிரிவிற்கும் சென்று வருவது அங்கிருந்து அறிந்தவற்றை  அராலித் தோழர்களும் அறியச் செய்ய வேண்டும் என்ற நோக்கில் தான். அதாவது ஒரு தபால்காரனின் வேலை தான் என்னுடையது என்பதை உணர்ந்திருந்தான். ஏ.ஜி.ஏ பொறுப்பாளர் மாலித் தோழர் தான் அவனுடைய குருஜி.  காரைநகர்... முதலிய தீவுப்பகுதிகளில் எல்லாம் இவரின் கால் பதியாத இடமில்லை என்றுச் சொல்லுவார்கள்.

        ஜீவன் இயக்கத்திற்கு வர முதல், சங்கானை, வட்டுக்கோட்டை, தெற்கு அராலிக் கிராம வாசிகசாலைகளிற்கெல்லாம் சென்று பத்திரிகைகளையும், சஞ்சிகைகளையும் மேய்ந்து பொழுதைப் போக்கிக் கொண்டிருந்தவன். அச்சமயம் முறையான புத்தகங்கள் அவனுக்குக் கிடைத்திருக்கவில்லை. சஞ்சிகைகளில் வரும் தொடர்களை விடாமல் வாசிக்கிறதுக்காக செல்ல வேண்டி இருந்தது. அப்படித் தான் எழுத்தாளர் பாலகுமாரனின் "தாயுமானவர் "தொடரை குமுதத்தில் வாசித்தான். சிவசங்கரியின் "ஒரு மனிதனின் கதை" தொடர், முகமத் அலியின் " ஜெயித்துக் கொண்டே இருப்பேன் " தொடரையும் மொழி பெயர்த்து வெளியிட்டுக் கொண்டிருந்தார்கள். முழுதையுமே சஞ்சிகைகளிலே வாசித்தவன். ஆனால் நெடுகவல்லவா செல்கிறான். அத்தியாயம் வாசிச்சு முடிந்திருக்கும். பத்திரிகைகள் வாசிக்கிறது குறைவாகவே இருந்தது என்பதை ஒப்புக் கொள்ளவே வேண்டும். தலையங்கத்தைத் தட்டுவான் என்று சொல்லலாம். ஆனால் சஞ்சிகைகளை மேய்வான். ஒரு கட்டத்தில் விளம்பரம் , நகைச்சுவைத் துணுக்குகள் என வாசிக்க ,மேய இல்லாது  ஏற்பட்டிருந்தது. அந்தக் குணம் மாலியோடு வடையும் ,தேனீரும் குடிக்கிற போது வடை சுற்றி வந்திருந்த பேப்பர் துண்டையும் எடுத்து வாசித்துக் கொண்டிருந்தான். " நீ எதையுமே வாசிக்கிற பிரகிருதி " என மாலி சொல்லிச் சிரித்தான்.

        பாசறை வகுப்புகள் என ஏதாவது வைக்கப்பட்டால் " நீ அங்கே போய் வா " என அனுப்பினான். அப்படி ஒரு தடவை ஐந்து நாள்கள் தொடர்ச்சியாக இரவும் பகலும் நடைப்பெற்ற பாசறை வகுப்புக்குப் போய் " பெண்ணடிமைத்தன‌ம், இயக்க வரலாறு,  ...அது, இதுவென சிலதை அறிந்தான். இயக்கப் பிரசுரங்கள் வந்து சேரும். " நிர்மாணம் " போன்ற தரமான சஞ்சிகை , பத்திரிகைகள் கூட விற்பதற்காக வரும். அவற்றை வாசிக்கவும் தோழர் தந்தார். அப்படி,அங்கே இருந்து தங்கதுரையோ...யாரோ ஒருவர் எழுதிய   " உட்கட்சி ஜனநாயகம் " என்ற நூல் கூட வாசித்திருக்கிறான். மாலித் தோழர் விற்கவும் எடுத்து கொடுத்திருக்கிறார். அவற்றை அராலித் தோழர்களுடன் முதலில் கிராமத்தில் விற்றுப் பார்த்தான். பெரிதாக வாங்கவில்லை. சங்கரத்தை, சங்கானைக்குப் போகும் வழியில் இருக்கும் ஓடைக்கரைப்பக்க விவசாயக் குடும்பங்களில் எல்லாம் அராலித் தோழர்களுடன் சென்று விற்றான். வட்டுக்கோட்டைப் பொறுப்பாளர் " என்ன நீ , எங்கடப் பகுதிக்குள் எல்லாம் வாராய் " என்று சிரித்தார். அந்தத் தோழர் அவனுடன் யாழ் இந்துக்கல்லூரியில் கூடப் படித்த நண்பன்." நாம் போகாத பக்கங்கள் தான் நீ போறாய் ? , எப்படி வாங்கிறார்களா? " என்றும் கேட்டான். " வாங்கிறார்களோ இல்லையோ தேனீர் எல்லாம் போட்டுத் தந்து ,நிறையக் கேட்கிறார்கள். சிறுவனுடன், சிறுமிகள் கூட கேட்கிறார்கள். நாம் தாம் தாமரைத்தோழர்கள் ஆச்சே, வாயாலே வங்காளத்திலும் தமிழீழம் நிறுவி விடுவோமே !. பதில் சொல்ல நான் வாசித்த சிவப்பு மட்டைப் புத்தகங்கள், தவிர கொண்டு போறதில் ஒரு எழுத்து கூட விடாமல் வாசித்து விட்டிருப்பேன்...எல்லாம் உதவுகின்றன " என்றான்.உண்மையிலே அது புதிய அனுபவம் தான்.

        மாலி சொன்னான். " விற்கிறப் பணத்திலே போக்குவரத்துச் செலவு என தேனீர், வடைக்கு என எடுக்கலாம். நீ எடுக்காமல் அப்படியே  கொண்டு வாராய் " என்றான். ஆதவன் தோழரும் ஒன்றைக் குறிப்பிட்டார். " கஸ்டப்பட்ட பகுதித் தோழர்களிடம் கொடுக்கிற போது பணத்தைக் கொண்டு வந்து தர மாட்டார்கள் . அதற்காக அவர்களைப் புறக்கணித்து நடக்காதே. அவர்களிடமும் விற்கத் தொடர்ந்தும் கொடுத்து வா. நாளைக்கு விடுதலைப் போராட்டத்தில் கடைசி வரையில் நிற்கப் போகிற தோழர்கள் அவர்கள்" என்பான். அவன் இந்தியாவில் பயிற்சியுடன் சமூக விஞ்ஞான வகுப்பையும் எடுத்தவன். ஜீவன் அவனுடைய புத்திமதிகளையும் பின் பற்றுகிறவன்.

       பெரிய டேவிட் ,தொடக்கக்காலத் தோழர் (போராளிகள் எனப்படுகிறவர்களில் ஒருவர்) அந்த ஏ.ஜி.ஏ பிரிவிலேயே வழிகாட்டி போல இருந்தார். ஆனால், அரசியல் அமைப்பு வேலைகளில் தலையீடு புரிகிறதாக' மற்றைய ஏ.ஜி.ஏ  அரசியல் பிரிவினர்கள் சதா விமர்சனம் செய்தனர். இவர்களுடைய பிரிவினர் அந்த மாதிரியான தோழர்களிற்கு மரியாதைச் செய்வதை விடவில்லை. அதனால் இவர்களது அமைப்பையும் விமர்சித்துக் கொண்டிருந்தார்கள். பல கட்டமைப்புகளில் பல்கலைக்கழகத்தில் படித்த தோழர்கள் பலரும் இருந்தார்கள். அவர்களால் இவர்களைப் புரிந்து கொள்ள முடியவில்லை.

பெரிய டேவிட் மணமானவர். அவரிற்கு சிறுமி மகள் ஒருத்தியும் இருந்தாள். அவர் அவ்விடத்து தோழரும் இல்லை ஆனால், உண்மை பேசுகிறவர், நேர்மையானவர் என்ற மதிப்பு நிலவியது. குடும்பம் இந்தியாவும் இங்கேயும் என வள்ளத்தில் மிதந்து கொண்டிருந்தது. அவரும் செல்வார். வந்து விடுவார். ஒருமுறை மகளுக்கு மஞ்சட்காமாலை வந்தது என இந்தியாவிற்கு கொண்டு சென்று வைத்தியம் பார்த்து , அவரின் மனைவி மகளோடு திரும்பி வருகின்றபோது வள்ளத்தை படையினர் பார்த்து விட்டனர்.  சூடு பட்டதில் படகு கவிழ்ந்து இருவரையுமே கடல் காவு கொண்டு விட்டது. ஓட்டிகள் கையறு நிலையில் நீந்தி வந்து சேர்ந்தார்கள். அந்தச் சோகத்தின் வலி அங்கிருந்த தோழர்கள், மக்களுக்குத்தான் தெரியும். ஆதவன் இவரையும் "பார், இயக்கத்தை விட்டு ஓடாத தோழர் இவர் " என்கின்றவன்.


அத்தியாயம் மூன்று:  பயிற்சி முகாமில்...


ரோபேர்ட் கத்த ஜீவனுக்கு சிரிப்பு தான் பொத்திக் கொண்டு வந்தது. அவன் குரல் என்ன மாயம் செய்ததோ... காற்றிலே முதல் தரமான கரணம் அடித்து கால்கள் உமியை அழுத்தநின்றான். எல்லாத் தோழர்களும் கைத் தட்டினார்கள். இப்படியும் ஒரு வழி இருக்கிறதா? ரோபேர்ட்டின் தோளில் தட்டி "நீ தான் அடிக்க வைச்சிருக்கே!, தாங்ஸ்டா"என்றான். அவன் கன்னம் குழி விழ அப்பாவித்தனமாகச் சிரித்தான். பிறகு ,ஒவ்வொரு தோழர்களும் ஓடி வர இதே வழிமுறையை பின்பற்றினார்கள்.  அவனும், ரோபேர்ட் உட்பட பல தோழர்களும் மண்மூட்டைக்கு கிட்டவாக வந்த பிறகே கத்தல்கள். "அடியடா " " அடியடா " . அராலித் தோழர்களில் அரைவாசிப் பேர்களுக்கு மேலானவர்களும் காற்றிலே கரணம் அடித்து எழும்பினார்கள்.

         கத்தல்கள் இல்லையோ... ? ,பழைய குருடி கதவைத் திறவடி தான். கரணம் அடி படுறதாயில்லை. உமியில், தலை மோத உமியை சுவைக்க வேண்டியிருந்தது

         பிறகும் இன்னொரு முறையும் ஜீவன் சரியாய் அடித்தான். இரு தடவைகள் அடித்தே மகிழ்ச்சியாகவிருந்தது. மேலும் ஒரு முறை முயலவில்லை. அடிபடாது. அந்த மகிழ்ச்சியை அடித்துக் கொண்டு போய் விடுறதை விரும்பவில்லை. சிவா ஆசிரியர் " நாளைக்கும் பார்ப்போம்.கரணம் அடிக்க உன்னோடு நெடுக ரொபேர்ட்டை கூட்டிக் கொண்டு போகவும்  முடியாது. நீயாகவே அடிக்கவும் வேண்டும் " என்று கூறினார். களைத்துப் போனார்கள். அன்றைய பயிற்சிகள் முடிவடைந்தன. குளிக்கச் செல்கிற போது வீசுகிற காற்றில் இலைகள் விலக கிளையில் இருந்து "குக் குறு","குக் குறு" என்கிற செண்பகத்தைப் பார்த்தார்கள். காகத்தின் சகோதரி போன்ற உருவமைப்பு. கறுப்பும்,சிவப்புச் செட்டையுமாக காகத்திலிருந்து வித்தியாசப்படுறது . குயிலின் இனம் என்கிறார்கள். இது இடைப்பட்ட இனமாக இருக்கவே வேண்டும். இந்த தொடர்பால் தான் குயில்,காகத்தின் கூட்டிலே  முட்டை இடுகிறதோ?.

           காகத்தின் அடுத்தக் கிளை தான் குயில். அப்படித் தான் பிரிந்திருக்க வேண்டும். குயில் கணக்கில் காகம் கூவ முயற்சித்து சதா கரைகிறது. குயில் பொந்தில் போய் அமர்ந்தும் சும்மா இராது பாடத் தொடங்கி விடுகிறது. " செண்பகமே, செண்பகமே..." எனக் குளரியும் பாடத் தொடங்கினான். " கங்கை அமரனுக்கு உதைக் கொடுக்க வேண்டும். கண்ணில் படுகிற பறவைகளை எல்லாம் காதலிக்கின்ற பெண்ணாக ...நினைத்துக் கொண்டு கவிதை எழுதி விடுகிறார். இது பெண்ணைப் போலவா இருக்கிறது? " என்று தியாகு ஜீவனிடம் கேட்டான். சிவப்புச் செட்டை , சிவப்பு அரைச்சேலை போர்த்தியது போல தெரிந்திருக்கும். காதலைப் பற்றி தெரியாத நாமெல்லாம் அதைப் பற்றிக் கதைக்கக் கூடாது " என்று பதில் அளித்தான். தியாகு முறைத்துப் பார்த்தான். " என்ன ஐயாவுக்கு அனுபவம், கினுபவம் இருக்கிறதோ ? , ஒரு நாள் உன் காதலி இந்த‌ வயிற்றுக்குள் போய் விடப் போகிறாள் " என்று தன் வயிற்றைக் காட்டினான். தொடர்ந்து     "பார்த்தாயா, நம் விடுதலைப் போராட்டமும் (ஒரு விதத்தில் சுயநலம் செறிந்தது தான் .மற்ற உயிரிகளைக் கணக்கிலே எடுக்கிறோமில்லையே " என்றான். ஜீவன், சிவா ஆசிரியரைப் பார்த்தான். " இப்பப் போய் ஏன் அந்த அத்தியாயத்தை இழுக்கிறாய். அப்பப்ப பார்த்துக் கொள்வோம் " என்றார். 'கடைசியிலே, எவருமே நல்லவரில்லை இல்லை' என்ற நிலையைத் தான் எட்டி வருகிறது.

           சிறிய அளவில் மரப்பட்டை நிறத்தில் காட்டு முயல் ஒன்றும் இவர்களைப் பார்த்து நின்று விட்டு ஓடியது. குருவிச்சை செடி ஒன்று உயரத்தில் ஒரு மரத்தில் தொத்தி செழிப்பான இலைகளுடன் காணப்பட்டது. ஆறுதலாக பைய ,பைய இவற்றையும் வேடிக்கைப் பார்த்துக் கொண்டு நடந்தார்கள். குளித்துப் போனப் போது எஞ்சிய சோற்றை பிரட்டி குழையலாக்கியும் வைத்திருந்தார்கள். பருப்புக் கறியும் அரை இறாத்தல் பாணும் இருந்தது. விரும்பினவர்களுக்கு கொடுக்கப்பட்டன. தியாகும் அவனும் சோற்றுப் பட்டாளம் குழையலை எடுத்துக் கொண்டார்கள். இரவுச் சாப்பாடு குறைவு தான். மத்தியானம் தான் வெட்டுகிறார்களே

            ஐயர் , கடமைக்கு பயிற்சி எடுப்பது போலவே இருந்தான். " அவனையும் சேர்த்துக் கொள்ளுங்கடா " என்று சிவா ஆசிரியர், அவர்களிடம் வலியுறுத்தி விட்டு சாப்பாட்டை எடுக்கப் போனார். கூட நின்ற பாரி " நாளைக்கு நான் வாரேன் " என்று சைக்கிளை எடுத்துக் கொண்டு கழன்று போனான். அன்றைய சந்திக் காவல் குழுக்களில் குளறியும், ஜீவனும் , நிலாந்தனும் இருந்தார்கள். எட்டு மணிக்கு ஆரமமாகும் முதல் காவலுக்கு வெளிக்கிட்டார்கள். அன்றும் விசேச வகுப்பு நடை பெறவில்லை. மூன்று மணி நேரம் அவர்களின் கால எல்லை  பதினொரு மணிக்கு மற்றக் குழு வந்து பொறுப்பெடுத்துக் கொள்ளும். சில குழுக்கள் கூட்டுச் சேர்ந்து கள்ளம் செய்து விடுவதும் உண்டு. முகாமில் இருக்கிற அலாரம் கடிகாரத்தின் முட்களை நகர்த்தி மாற்றி விட்டு , பிறகு சரியும் செய்து விடுவார்கள். காலையிலே கடிகாரம் சரியாய் ஓடிக்கொண்டிருக்கும். சிலநாள்களில் தான் நடந்து விடும். மனிதக்குணமே குழப்படியும் , முஸ்பாத்தியும் கொண்டது தானே. தூக்கக் கலக்கத்தில் என்ன நடந்தது எனப் பார்க்காது தோழர்கள் வந்து குப்புற விழுந்து மரக்கட்டையாகி விடுவார்கள். அதைக் கவனிக்கவும் ஒரு அமைப்பை ஏற்படுத்தி  வைத்திருக்கவில்லை. வேலை,வேலை என அவர்களிடமும் அடிக்கடி வேலையும் வாங்க முடியாது. பயிற்சிக்கு வந்தவர்களை பயிற்சிகள்ப் பெற விட்டு விட வேண்டும். சில வேளை, " நடைமுறைச் சிக்கல்களை தோழர்களே கலைந்து விட வேண்டும் " என சிவா ஆசிரியரும் குறிப்பிடுவார்.

             காவலைச் சோதனை செய்வதற்கு ஜி.ஏ.மட்டத் தோழர்கள் வாகனத்தில் வருவார்கள். இருவர் பதுங்கி நிற்க, ஒருவர் வாகனத்தை மறித்து கேள்வி கேட்க  " இப்படித்தான் இருக்க வேண்டும் " என்று குளறியைத் தட்டிக் கொடுத்தார்கள். அவர்கள் சென்று விட ஆள் அரவமற்ற நிலை இருளில் கிடந்தது. நிலா வெளிச்சம் மட்டும் தான்.வீதியில் விளக்குகள் எதுவும் ஒளிரவில்லை. இவர்கள் மறிக்கிற போது வேற இயக்கத்தைச் சேர்ந்தவர்களாக இருக்கிற போது பிடிக்காமலும் போய் விடலாம். ஆயுதம் வைத்திருக்கிறார்களா, இல்லையா என பார்த்தவுடனே தெரியாது. இவர்களின் கையில் எந்த ஆயுதமும் இல்லை.ஆரம்ப காலங்களில் செமி கிரனைற் என்ற யானைவெடி போன்ற நீளத் தோற்றத்தில் திரியுடன் கூடிய வகையை வைத்திருந்தார்கள். பிறகு இன்றைய கிரனைற் ஒன்றையாவது வைத்திருந்தார்கள். கிளிப் கம்பி இழுப்பட்டு சிக்கலாகி விடக் கூடாது என்று அடித்தட்டை கழற்றி ஃபியூஸை வெளியில் எடுத்து காற்சட்டைப் பொக்கற்றில் வைத்திருந்து வெடிக்காத நிலையில் வைத்திருப்பார்கள். படையினர் நடமாட்டம் இருந்த போதே வைத்திருந்தார்கள். மள,மளவெனப் போட்டு விட்டு  வெடிக்க எறிய முடியும் தான். ஆனால் , எறிந்த சில வெடியாது இருந்து நிலைமையை மோசமாக்கியும்  இருந்தன. அரைகுறையாய் வேலை செய்தாலும் அபாயகரமானவை.எதிரியைத் தாக்குவதற்காக எறியிறதில்லை. எதிரியின் நடமாட்டத்தை தெரியப் படுத்துவதற்காகவே இருந்தன. ஒரு கிரனைற்றை வைத்துக் கொண்டு சண்டை பிடிக்கவா முடியும்.  ஆனாலும் சில தோழர்கள் எதிரியைக் குறி வைத்தும் விடுவார்கள்.

             அரச படையினர் மலினமாக தமிழர்க‌ளின் உயிர்களை எடுத்துக் கொண்டிருந்ததனால்,  சிறு கல்லை எடுத்தாலும் கூட அவர்களது மண்டையை  உடைக்கணும் என்ற வெறியும் வளர்ந்து கொண்டிருந்தது. அவர்களை நோக்கி எறிந்த சில வெடிக்காத கிரனைற்றாலும் பெடியளின் உயிர்கள் ப‌றி போயின. சவாலான கருவி என்பதால் பயிற்சிக்கு வந்த தோழர்களின் கையில் எதுவும் கொடுக்கப்படவில்லை. தவிர இந்த முகாமின் போது  படையினர் முகாமை விட்டு வெளியேற முடியாது முடக்கி விடப்பட்ட நிலை. அதாவது  அனைத்துப்படைமுகாங்களைச் சுற்றி  24 மணிநேரமும் காவல் நிலைகள் இயக்கங்களின் கண்காணிப்பில் இருந்தன. உள்ளே இருந்து அடிக்கிறதும் , வெளிய வான் பரப்பிலே வந்து கொட்டுறதும் அல்லது சுடுறதுமே இருந்தன. பரல் குண்டுகளையும் போட்டு விடுவார்கள். இப்பவெல்லாம் , பொம்மைவெளிப் பெடியளை  சைக்கிளில் ஓடி வெளியில்  வியாபாரம் செய்ய விடுவதில்லை. அவர்களுக்கூடாகப் புலன் அறிகிறார்கள் என்ற சந்தேகமும் இருந்தது. இவர்கள் அப்பாவிகளாகவும் கூட இருக்கலாம். ஆனால், ஊர்காவற்படை என்ற அமைப்பு படையினருடன் இருந்ததால் தவிர்க்க முடியவில்லை. பொதுவாகவே சமூகப்பிரிவினரின் பகுதிகளுக்குள் நுழைய முடியாத மாதிரியான நிலைமை இந்த மதப் பிரிவினர் பக்கத்திலும் இருந்தது. அதாவது விடுதலைப் போராட்டத்திற்கு முன்னரே இந்த நிலமை தான். கழுகைச் சேர்ந்தவர்கள் அதற்குள்ளும் நுழைந்தார்கள். அது அறவே அவர்களுக்கும் பிடிக்கவில்லை. கழுகுக்கு மட்டுமில்லை எல்லாத் தோழர்களுக்குமே வாழ்வு ஆபத்தைச் சுமந்த பயணம் தான். கையில் இருக்கிற ஆயுதம் தான் தோழனும் பகைவனும். தமிழ்ச்சமுதாயம் பயத்தை விட்டு இறங்கினால் தான் விடுதலையும் கிடைக்கும். சகோதரச் சண்டை மட்டும் இல்லையானால் " இந்தப் போராட்டம் நெடுக‌ உயிர் வாழ்ந்து கொண்டு இருக்கப் போகிறதொன்று " என்ற நம்பிக்கை நசிந்த நிலையிலாவது   தோழர்களிற்கு இருக்கவே செய்தது.

           போர் விமானங்கள் , கெலியின் சத்தம் எப்படியும் அறிய வைத்து விடும். பரல் குண்டு என்பது எண்ணெய் பீப்பாய் போன்ற பெரிய பீப்பாயில் எளிதில் தீப்பிடிக்கக் கூடிய கிறீஸை அடைந்து கீழே போட்டு விடுவது. அது விழுந்து வெடித்து சிதறி கிறீஸ் படிந்த பகுதி எல்லாம் எரியும். ஈரானின் தயாரிப்பு. மேலே இருந்து கீழே வரும் பீப்பாய்யை ஜீவன் பார்த்திருக்கிறான்,தவிர வெடித்து எரிந்ததை நேரிலே பார்த்ததில்லை. கொட்டிய செல்லில் தரைமட்டமாகிய ஒரு வீட்டையும் பார்த்ததாக ஞாபகம்.அந்த வீட்டினர் பதுங்கு குழியில் இருந்ததால் தப்பியவர்கள். வெடித்துச் சிதறிய மண்ணில் பலதை ஏன் பார்க்கத் தவறினான் ? அவனிடம் இருந்த பழைய சைக்கில் பலவிதப் பிரச்சனைகளைக் கொடுத்துக் கொண்டிருந்தது. பிறகு தான் அவனுடைய சின்னம்மா  நல்ல நிலையில் உள்ள சைக்கிளைப் பெற உதவி செய்தார் . தாமதமாகக்  கிடைக்கப் பெற்றிருந்ததும் காரணமாக இருக்கலாம் .இருந்தாலும் எல்லா இடங்களும் தெரிந்தவனாக  இல்லை என்பதை ஒப்புக் கொள்ள வேண்டும். ஆனால் சாதாரணக் கிராமத்துப் பெடியளை விட அவன் பரந்த பார்வையும் பார்த்தவனும் கூட. சகோதரச் சண்டையும் அவனை திரிய விடாமல் தடுத்திருப்பதாகப் படுகிறது. அமைப்பினர் அயலைக் கண்காணிக்கிறதும் இருந்தது. காவல் நிலைக்குப் பக்கத்தில் மதிலுடன் கூடிய வீடு ஒன்று இருந்தது. அந்த மதிலில் ஏறி நடந்தும் பயிற்சி எடுப்பார்கள். தடைப்பயிற்சியில் நேர்கிற சிரமங்களின் போதெல்லாம் அப்படி கண்ட, கிண்ட இடங்களிலும் பழகுறதும் இலகு படுத்தும் என்ற‌ நம்பிக்கையும் இருந்தது.

           அடுத்த நாள் காலைக்கடனின் போது பாம்பு ஏதும் ஊருமோ என்ற பயத்துடன் கழித்து விட்டு தூய மூச்சுடன் தேனீரைக் குடித்தார்கள். முகாமிலிருந்து சிறிய தூரத்திற்கு நடந்து சென்று புல்வெளியாக இருந்த ஒன்றரை ,இரண்டுப் பரப்பு வெளியில் உடற்பயிற்சிகளைச் செய்யத் தொடங்கினார்கள். செழியன் செய்து காட்ட ,பாரி சரியாய்ச் செய்கிறார்களா எனக் கவனித்து வந்தான். சிவா ஆசிரியர் வீட்டுக்குப் போய் இருந்தார். ஐயரின் குழு சமையலில் இருந்தது. புளியல்சாதம்,தயிர் சாதம் செய்வதில் திறமையான அந்த குடும்பத்திலிருக்கிற ஆண்களுக்கும் ஓரளவிற்கு சமைக்க தெரிந்திருக்கின்றது என்றே படுகிறது. சமையல் பரவாயில்லை. " சமையல் நல்லாய் இருக்கிறது " எனக் கூற குழு ஐயரைக் காட்டி "குரு அவர் தான் " என்றார்கள் . "எங்கே சமைக்கப் பிடித்தீர்கள் ? " என ஜீவன் ஐயரைக் கேட்டான். " பூசைச் சமாச்சாரங்கள் சமையலோடு தொடர்பு பட்டவை. எங்கள் எல்லோருக்குமே சமைக்கவும் தெரியும். பெரும் படையல்கள் எல்லாம் செய்பவர்கள் ஐயர்மார்கள் தான் " என்றான். அவன் முகத்தில் ஓரளவு தெளிவு நிலவுகிறது. சினிமாப் படங்களில் ஐயர்மார்களே பெரும் சமையல் ஆசிரியர்களாக இருப்பதைப் பார்த்திருக்கிறான். 'நளமகராசனை சமையற் கலையில் விற்பன்னனாக  உருவாக்கியவர்கள்' இந்த ஐயர்மார்கள் என்பதை ஊகிக்க முடிகிறது. அரசர்களுக்கு கல்வி கற்பித்தவர்கள் இவர்கள் தானே. 64 கலைகளில் சமையற்கலை,வர்மக்கலை,குங்பூகலைகள் கூட இருப்பவை தானே. கற்றுக் கொடுத்திருக்கிறார்கள்.

[தொடரும்]