'சாமி அக்கவுண்டிங் சேர்விஸ்' நிறுவனத் ('டொராண்டோ', கனடா) தலைவரும், கணக்காளருமான திரு.சார்ள்ஸ் நிமலரஞ்சன் அவர்களின் மறைவு அதிர்ச்சியைத் தந்தது. கடந்த இருபது வருடங்களாக நான் இவரை அறிந்திருக்கின்றேன். வருமானவரி சம்பந்தமான ஆலோசனைகள் எவையாயினும் முதலில் நான் நாடுவது இவரைத்தான். எப்பொழுதும் சிரித்த முகத்துடன் காணப்படும் நண்பர் சார்ள்ஸ் பழகுவதற்கு இனியவர். சார்ள்ஸ் மட்டக்களப்பைச் சேர்ந்தவர். நண்பர் சார்ள்ஸின் எதிர்பாராத மறைவு பலருக்கும் அதிர்ச்சியைத் தந்திருக்கும். இவரது மறைவு பற்றிய செய்தி தந்த அதிர்ச்சியிலிருந்து நானின்னும் மீளவில்லை.
சில நாட்களுக்கு முன்னர் இவருடன் மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொண்டிருந்தேன். இதுவரையில் எனது மின்னஞ்சல்கள் எவற்றுக்கும் அவர் பதிலளிக்காமல் விட்டதில்லை. ஆனால் இதற்கு அவரிடமிருந்து எவ்விதப் பதிலும் வரவில்லை. வேலையில் 'பிசி'யாக இருக்கக்கூடுமென்று நினைத்திருந்தேன். நத்தார் தின வாழ்த்து மடலும் அனுப்பியிருந்தேன். அதற்கும் அவரிடமிருந்து பதிலெதுவும் வரவில்லை. அவரது வழமைக்கு மாறான நடத்தை சிறிது வியப்பைத் தந்தது. அவரது நிறுவன இணையத்தளத்தையும் வடிவமைத்துக்கொடுத்திருந்தேன். அதுவும் கடந்த சில நாட்களாக இயங்காமலிருப்பதை அறிந்தேன். அவருடன் தொடர்பு கொள்ள வேண்டுமென்று எண்ணியிருந்தேன். இன்று மாலை செய்தி அறிந்தேன். கடந்த இரு வாரங்களாக வைத்தியசாலையில் கோவிட் நோய் காரணமாக அனுமதிக்கப்பட்டு, 'வெண்டிலேட்டர்' பொருத்தப்பட்ட நிலையில் இன்று இவர் மறைந்ததாக அறிந்து திகைப்பும், துயரும் அடைந்தேன்.
அவரது எதிர்பாராத மறைவால் துயரில் ஆழ்ந்திருக்கும் குடும்பத்தவர், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அனைவர்தம் துயரில் நானும் பங்குகொள்கின்றேன்.
*** நண்பர்களே! இவரது மறைவு இன்னுமொன்றையும் வெளிப்படுத்துகின்றது. கோவிட் வைரஸை இலேசாக எடுத்து விடாதீர்கள். கோவிட் பலரைக் காவிச்சென்றுள்ளது. சிலருக்குக் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது. இதன் ஆட்டம் கட்டுப்பாட்டுக்குள் வரும் வரையில் தேவையான பாதுகாப்பு முன் நடவடிக்கைகள் எடுங்கள். முகக் கவசம் அணியுங்கள். அடிக்கடி கைகளைச் சுத்தப்படுத்துங்கள். எக்காரணத்தைக்கொண்டும் வீடுகளில் கொண்டாட்டங்களில் ஈடுபடாதீர்கள். வைரசால் தாக்கப்பட்டிருந்தால், தாக்கப்பட்ட ஒருவருடன் நெருங்கிப் பழகியிருந்தால் உங்களைத் தனிமைப்படுத்திக்கொள்ளுங்கள். இந்த வைரஸ் எல்லோரையும் ஒரே மாதிரித் தாக்குவதில்லை. பெரும்பாலனவர்களுக்கு சிறிது தொல்லை கொடுத்துச் சென்று விடுகின்றது. சிலருக்கு அவர்கள்தம் உடல்நிலைக்கேற்ப உயிராபத்தானதாக அமைந்து விடுகின்றது. அவதானமாக இருங்கள். பாதுகாப்பாக இருங்கள். ***