
5
இத்தாலியின் வரலாற்றிலும் உலக வரலாற்றிலும் முக்கியமானவர்கள் பிறந்த நகரம் ரஸ்கனிலுள்ள ஃபுளோரன்ஸ் நகரம்தான். நவீன அரசியல் ராஜதந்திரி எனப் புகழப்படும் பிரின்ஸ் மக்கியவில்லி, ஓவியம் மற்றும் சிற்பக்கலை எனப் புகழ் பெற்ற மைக்கேலஞ்சலோ, அதேபோல் மேதை இலியனாடோ டாவின்சி மற்றும் கவிஞர் தத்துவமேதை டான்டே ஆகியவர்கள் அவதரித்த நகரமே இது. விஞ்ஞானி கலிலியோ பீசா நகரத்தில் பேராசிரியராக இருந்தார்; ஆனால் கத்தோலிக்க தலைமைப்பீடத்திற்குப் பயந்து வந்த இடம் இதுதான். ஃபுளோரன்ஸ் நகரம் ஐரோப்பிய மறுமலர்ச்சியின் தோற்றுவாயாக இருந்தது.
இதுவரை நான் அரையும் குறையுமாகக் கேட்டு, படித்த இடத்தை பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்தபோது, அங்கு ஒரு பகல் மட்டுமே அலையமுடியும் என்பது, பலநாள் பட்டினியானவனுக்கு ஒரு கவளம் சோறு மட்டும் பிச்சையாக கிடைத்ததுபோலிருந்தது.
ஆணோ (Arno) என்ற நதி புளோரன்ஸ் நகரத்தின் மத்திய பகுதியில் ஓடுகிறது. நதியின் இரு பக்கமும் கடைகள் மற்றும் வீடுகள் அலங்கரிக்கப்பட்டன. ஆரம்பத்தில் வட்டிக்குப் பணம் கொடுப்பவர்கள் இருந்தனர்; இந்த இடம் மறுமலர்ச்சி காலத்தில் கலைஞர்கள் வாழும் இடமாக மாறியது. தற்போது முக்கியமாக உல்லாச பயணிகள் வருவதற்கான இடமாகியுள்ளது.

ஆணோ ஆற்றின் மேல் கட்டப்பட்ட பாலம் ( Ponti Vechchio)மிகவும் பழமையானது: பெயரே பழைய பாலம் என்பதாகும் ரோம் மன்னன் ஏட்ரியனால் 1900 வருடங்கள் முன்பாக கட்டப்பட்டது . இது வெள்ளம் படையெடுப்புகள் என்பவற்றைக் கடந்து மட்டுமல்ல, இரண்டாம் உலக போரில் வீசப்பட்ட குண்டுகளிலிருந்து தப்பித்தது . இப்போது வரலாற்றில் முக்கிய இடமாகும். இந்த பகுதி மறுமலர்ச்சி காலத்தின் தொட்டிலாக யுனெஸ்கோ நிறுவனம் பாதுகாக்கின்றது.
அந்த பாலத்தின் மீது நடந்தபோது எல்லா இடங்களிலும் நகைக்கடைகள் மட்டுமே இருந்தன. தற்போது, மற்றைய கடைகளை அகற்றி நகைக்கடைகளை மட்டும் அனுமதித்துள்ளனர். பாலத்தின் மேலாக வாகனங்கள் போவது தடுக்கப்பட்டுள்ளது.
ஃபுளோரன்ஸ் நகரின் மத்திய பகுதியில் புகழ்பெற்ற சாந்தா மரியா (Santa Maria Novella) தேவாலயம் அமைந்துள்ளது. அதனருகே அருங்காட்சியகம் அதன் முன்பாக ஞானஸ்நானம் பெறுவதற்கான தேவாலயம் உள்ளது . அக்காலத்தில் ஞானஸ்நானம் பெற்றவர்கள் மட்டுமே தேவாலயத்துள் செல்லமுடியும் என்ற சட்டம் இருந்தது.
நகரின் மத்திய பகுதியில் சுற்றிப் பார்த்தபோது அந்த பகுதியே ஒரு அருங்காட்சியகமாக காட்சியளித்தது. அருங்காட்சியகத்து வாசலில் டேவிட்டின் பளிங்குச் சிலை வைக்கப்பட்டிருந்தது. எனது பக்கத்தில் வந்த சீன பெண் (அவுஸ்திரேலியா) 'அது ஒரு மாதிரி, மைக்கலஞ்ஞலோவின் புகழ்பெற்ற டேவிட் உள்ளே இயற்கையின் தாக்கத்திற்கு உட்படாது உள்ளே வைக்கப்பட்டுள்ளது ' என்றாள்
மதியத்தில் உள்ளே போவோமா என யோசித்தபோது அருங்காட்சியகத்தின் வாசலில் பெரிய வரிசை நின்று கொண்டிருந்தது. சாப்பிட்டு வருவோம் என்று நினைத்து மதிய உணவும் சாப்பிடப் போய்விட்டு வந்தபோது அந்த வரிசை நகரவில்லை. எங்களுக்கு அரை நாள் மட்டுமே உள்ளது. நேரத்தை சிக்கனமாக செலவிட வேண்டும்.
காலையில் வெளியே நின்று பார்த்த அழகிய பளிங்கு முன்பக்கத்தைக் கொண்ட சாந்தா மரியா தேவாலயம் உள்ளே செல்ல நினைத்து அங்கு சென்றபோது பிரவேச கட்டணம் அரைவிலையில் உள்ளது என அங்குள்ள பெண் சொன்னதும் உள்ளே சென்றோம். 14 நூற்றாண்டில் கட்டப்பட்ட தேவாலயத்தின் உள்ளமைப்பு அழகாக இருந்தது. 200 வருடங்கள் எடுத்துக் கட்டப்பட்ட கடடிடத்துள்ளே இத்தாலியின் மறுமலர்ச்சிக் காலத்தது ஓவியங்கள், சிற்பங்கள் கண்களையும் இதயத்தையும் மீட்டியபடி இருந்தன.இங்கு உள்ள ஓவியங்களை 13 வயதில் உள்ள மைக்கேலஞ்லோ பார்த்து படித்ததாகவும் பிற்காலத்தில் “எனது காதலி” கூறியதாகஅறிந்தேன். பல அருங்காடசியங்களை பார்க்கத் தவறியபோதும் இந்ததேவாயத்துள் போகக் கிடைத்தது அதிஸ்டமே.
இதை விடத் தேவாலயத்தின் அருகே இருந்த கட்டிடத்துள் நுழைந்தபோது எனக்கு இதுவரை அறியாத அதிசயம் காத்திருந்தது. இந்த சாந்தா மரியா தேவாலயம் ஒரு டொமினிக்கன் பிரிவு சேர்ந்த தேவாலயம். இந்த தேவாலய பிரிவு சேர்ந்தவர்கள் இறந்தபோது இவர்களின் மையங்கள் இங்கு புதைக்கப்பட்டிருந்த இடம். இதைத் தேவாலயத்தின் கீழறை (Cloister of the Dead) என அழைக்கின்றனர். ஆரம்பத்தில் இந்த தேவாலயத்திற்கு அருகே அடக்கம் செய்யப்பட்ட சவக்காலை வெள்ளம் பெருக்கால் அழிவடைவதைத் தொடர்ந்து, இங்கு மீண்டும் அமைத்ததாகவும், சுவரோவியங்கள் மற்றும் அலங்கார வளைவுகளும் கொண்ட அழகான இடமாக தற்போது மக்கள் பார்வைக்கு வைத்திருக்கின்றன. அக்காலத்தில் ஃப்ளோரன்ஸ் நகரில் நடமாடிய முக்கியமானவர்களின் பெயர்களை அங்கு பார்க்க முடிந்தது.

6
இத்தாலியின் மத்திய பகுதியான தஸ்கனியில் முக்கிய நகரமான பிசா நகரத்தை நாம் நினைப்பது, நமது மனதில் நிழலாடும் சாய்ந்த கோபுரம்தான். இது ஏழு அதிசயங்களில் ஒன்றாக இருந்தது. தற்போது இல்லாதபோதிலும், முக்கியமான யுனெஸ்கோ பாதுகாக்கும் பிரதேசமான இது அமைந்துள்ள முழு பகுதி பிரகடனப் படுத்தப்பட்டுள்ளது. அருகே உள்ள தேவாலயத்துக்கு சொந்தமான மணிகோபுரமாக 1174-ல், 199 ஆண்டுகளாக கட்டப்பட்டது.
கட்டுவதற்கு வரைபடம் போட்ட கட்டிடக் கலைஞர்கள், கட்டி முடிப்பதற்குப் முன்பு இறந்துவிட்டனர். அவர்கள் தவறுகள் உலக அதிசயமாகப் பாதுகாக்கப்படும் என்பதை அவர்கள் அறிவார்களா?
சில தவறுகள, அதிசயமாக மாறுவது உண்மையே .
எவ்வளவோ அதிசயமான விடயங்கள் நடந்த இத்தாலியில் இது ஒரு அசாதாரணமானதே அதைவிடத் தேவாலய மணி கோபுரம் தேவாலயத்திற்கு அருகில் இருக்கும் ஆனால் இங்கு பல மீட்டர்கள் தள்ளி அமைந்துள்ளது. கோபுரம் 293 படிகள் ஏறி மேலே உயரத்திற்குப் போக முடியும். வெளிப்பகுதி மட்டும் பளிங்குக் கற்களால் உள்ளே வெற்றிடமாக ஆன கோபுரம். 1934 ஆண்டில் வெளியிலிருந்து கொங்ரீட்டை கீழே (Injection) கொடுத்து ஓரளவு சாய்வை குறைத்து நிலைப்படுத்தியுள்ளார்கள். ஆனாலும் குறிப்பிட்ட சிறிய தொகையினரையே கோபுரத்தில் ஏற அனுமதிக்கிறார்கள்
கணிதப் பேராசிரியராக பிசா பல்கலைக்கழகத்தில் பதவியிலிருந்த கலிலி இரண்டு நிறையுள்ள பீரங்கிக் குண்டுகளை கோபுரத்தின் உச்சியிலிருந்து கீழே போட்டு, நிறை கூடிய பொருள் வேகமாக விழும் என்ற அரிஸ்டோடலின் கூற்றைத் தவறு என நிரூபித்தார். பின்பு சூரியனைச் சுற்றியே கிரகங்கள் சுற்றி வருவதென்ற போலந்து அறிஞர் கொப்பேனிகசின் கூற்றைத் தனது தொலைநோக்கியின் மூலம் நிரூபித்ததுடன், வியாழனினது உபக்கிரகங்களையும் ,அகண்ட பால்வெனும் உள்ளதையும் அவரால் தயாரிக்கப்பட்ட தொலைநோக்கியால் அறிந்து தெரிவித்தார்.
இவ்வரையில் கத்தோலிக்க தேவாலயத்தின் மதபீடம், பூமி மட்டுமே மற்ற கிரகங்கள், சூரியனும் உட்பட சுற்றிவருவதான கருத்துக்கு எதிராக பேசியதால், கத்தோலிக்க மதபீடம் அவரை துன்புறுத்தி சித்திரவதை செய்தது. இறுதியில் அவர் மண்டியிட்டு நீங்கள் சொல்லும் சரி என்று கத்தோலிக்க பீடத்தின் கருத்தை ஏற்றுக்கொண்டார. அவர் உயிர் பிழைத்தாலும், பலகாலம் வீட்டுக்காவலில் வைத்தார்கள். தற்போதைய இஸ்லாமிய முல்லாக்களின் பத்துவா எங்கே இருந்து வந்தது என்பதை நாம் புரிந்து கொள்ளலாம்.
பிசா நகரம் மற்றைய நகரங்களுடன் கடல் வாணிகத்தில் ஈடுபட்டதுடன் செல்வச்செழிப்பாக இருந்தது. வங்கி மற்றும் வாணிபங்கள் எல்லாம் இங்கு கத்தோலிக்க மதத்தின் செல்வாக்கை நமக்கு எடுத்துக்காட்டும்.
ரோமர் ஆட்சி அழிந்தபின் மற்றைய இத்தாலிய நகரங்கள்போல் பிசா நகரமும் தனி அரசாகச் செல்வாக்குடன் இயங்கியது.
நாங்கள் பிசா கோபுரத்தை காணச் சென்றபோது நகரத்தைச் சுற்றி அமைந்திருந்த கோட்டை பதினொரு அடி உயரமான உறுதியான மதிலைப் பார்க்க முடிந்தது.மூன்று கிலோமீட்டர் நீளமான மதில் பிசா நகரை பல போர்களிலிருந்து பாதுகாத்தது.
இந்த கோபுரம் உள்ள இடத்தில் அருகே ஞானஸ்தாம் பெறும் தேவாலயம் உள்ளது : இதுவே இத்தாலியில் பெரியது. அதை விட அழகான பிசா நகர மேரிமாதாவின் தேவாலயம் உள்ளது. இதுவே உலகத்தில் அக்காலத்தில் பெரிதானதாக இருந்தததாம்.
சவக்காலை மற்றும் வைத்தியசாலை என ஒரு வட்டமான பொதுமக்கள் கூடிய சதுக்கமாக இருந்த அந்த இடம். இங்குள்ள சவக்காலைக்குக் கட்ட கற்கள் இயேசுநாதர்க்கு சிலுவையில் அறைந்த இடமான கல்வாரி மலையிலிருந்து கொண்டுவரப்பட்டன என்று கூறப்படுகிறது. வெளியில் சுற்றிப் பார்க்க மட்டுமே எங்களுக்கு முடிந்தது. எங்கு உள்ளே செல்ல நேரம் வேண்டியது இல்லை.
பிசா நகரிலிருந்து தற்போது கடல் 7 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது, ஆனால் ரோமர் காலத்திலும் மத்திய காலத்திலும் பிசா ஒரு துறைமுக நகரம். ஆற்றின் கழிவானதால் வாணிபத்தில் செழித்த நகரம், ஆனால் தற்போது நதி ஒதுங்கி, கடல் தூரமாகச் சென்றுபோய் விட்டது. கடல் ஊரின் உள்ளே வந்து இருப்பதை கேள்விப்பட்ட எனக்கு, கடல் ஊரைவிட்டு விலகியது என்◌பது என்பதும் வியப்பாக இருந்தது.
பீசா பல்கலைக்கழகம் ஐரோப்பாவில் பழமையானது. இத்தாலியில் செல்வாக்கு பெற்ற மெடிசி குடும்பத்தினர் இதை உருவாக்கினர். இவர்கள் குடும்பத்திலிருந்து பல பாப்பண்டவர், வங்கி நிறுவனர்களும், செல்வந்தர்களும் இருந்தார்கள். பின்னணியில் நெப்போலியனால் பீசா நகரம் கைப்பற்றபட்டபோது, அது உயர்நிலை அரச அதிகாரிகளை உருவாக்கும் மையமாக மாற்றப்பட்டது.
பிசா நகரத்தில் எனக்கு பிடித்தது அங்கு மதிய உணவாக முழு மீனை அப்படியே பொரித்து தந்தார்கள். இதுவரை நான் பார்த்த ஐரோப்பிய நாடுகளில் இத்தாலிய உணவே சிறந்தது என்பேன் -ஆனால் நான் அங்கு நின்ற இரு கிழமைகளில் பாஸ்ராவோ அல்லது பிட்சாவோ உண்ணவில்லை என்பதை நீங்கள் நம்பவேண்டும்.
லுகா
பிசாவிலிருந்து நாங்கள் சென்ற இடம் லுகா (Lucca) ஆரம்பத்தில் ரோமர்களால் கட்டப்பட்டபோதிலும் 16ம் நூற்றாண்டில் புகழ்பெற்றது: மத்திய கால நகரம். இது இரு நாட்கள் தங்கி பார்க்கக்கூடிய இடம் ஆனால் இரண்டு மணி நேரத்தில் எங்களுக்குப் பார்க்கும் அளவில் ஆகிவிட்டது. நாம் உள்ளே செல்லும்போது கோட்டையுள்ளே செல்வது போன்ற உணர்வு ஏற்பட்டது.
இரண்டு வாசல்கள் பெரியது. உள்ளே நுழைந்தது எதிர்வரும் கோடைகாலத்தில் இங்கு பல சங்கீத விழாக்கள் நடைபெறமென்ற அறிவிப்பு பார்த்துக் கொண்டிருந்தது. கிளாவோமோ போச்சினி (Giacomo Puccini) என்ற உலகப் புகழ்பெற்ற ஓப்பரா தயாரிப்பாளர் பிறந்த இடம் இது. இவரது படைப்பே மாடம் பட்டஃபிளை (Madam Butterfly) என்ற புகழ்பெற்ற ஓபராவாகும். இவரைவிட பல சங்கீத வித்துவான்கள் பிறந்த இடம் இது. தமிழ்நாட்டில் திருப்பூரை போல நீங்கள் லுகாவை நினைக்கலாம்.
இந்த நகரத்தின் சுற்று மதில்கள் மிகவும் அகலமானவை:கிட்டத்தட்ட சீனப்பெருஞ்சுவர்ப் போன்ற தோற்றம் அதாவது வாகனங்கள் போககூடியதாக இருந்தன. முழு ஊரையும் மதிலில் நடந்தபடியே பார்க்கலாம் . இந்தக் கோட்டைப் பாதுகாப்பால் லுகா நாகரம் 700 வருடங்கள் சுதந்திரமாக இருந்தது. இறுதியில் நெப்போலியனால் கைப்பற்றப்பட்டது.
மதிலின் மீது நடந்தபோது தேவாலங்கள், மணிக்கூட்டுக் கோபுரங்கள் கண்களுக்குத் தெரிந்தன. ஏற்கனவே பிசா நகரில் நடந்த களைப்பில் அங்குள்ள ஒரு கஃபேயில் கோப்பி குடித்துவிட்டு அந்த நகரை விட்டு வந்தோம். நாங்கள் போன காலம் முன்வசந்தகாலம் என்பதால் பல கடைகள் இன்னமும் திறக்கவில்லை.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.









