ஹிரோஷிமா நகரத்தின் நதிகளின் மேலே உள்ள பாலத்தில் நடந்தபடி, தற்போது நினைவுச் சின்னமாக இருக்கும் எலும்புக்கூடான (Atomic Bomb dome) என்ற ஒரு கட்டிடத்தைப் பார்த்தவுடன், எனது வயிற்றில் அமிலம் ஊற்றி வயிற்றில் நெருப்பு பற்றுவது போன்று எரிவைக் கொடுத்தது. லைவ் சஞ்சிகைக்காக (life Magazine) க்காக அனுப்பப்பட்ட ஜோன் ஹிசியின் (John Hersey) ஹிரோஷிமா என்ற நாவலின் சுருக்கம் ஏற்கனவே வாசித்திருந்தேன். அந்த நாவலில் 1946 ஆண்டு அமெரிக்காவிலிருந்து செய்திகளை சேகரிக்க சென்ற ஜோன் ஹிசி ( John Hersey), அணுக்குண்டு வெடித்தபோது அங்கு வாழ்ந்த ஆறு மனிதர்களை சந்தித்து அவர்களிடமிருந்து செவ்வியினைப் பெற்றார்.
அதன் பிரகாரம், அணுக்குண்டு வெடித்தபின் அவர்களது அடுத்த மூன்று நாட்களில் அவர்கள் அடைந்த அனுபவங்களை வைத்து ஹிரோஷிமா நாவலை எழுதினார். அவர்கள் ஆறு பேரில் , இரு வைத்தியர்கள் , எழுதுவினைஞர், யப்பானிய கிறிஸ்தவ பாதிரியார், ஜெர்மன் கிறிஸ்துவ பாதிரியார் மற்றையவர் யப்பானியத் தாயாகும். இந்த நாவல் அவர்களது மூன்று நாட்களை நமக்குத் தரும்போது இதயத்தை நிறுத்தி உறையப் பண்ணுகிறது.
1945 ஆம் ஆண்டு ஆகஸ்ட் காலை 8.15 மணியளவில் அந்த அழிவுக்கு நேரம் குறிக்கப்பட்டது. அமரிக்க அதிபர் ஹரி ரூமன் கட்டளைப்படி சிறிய பையன் (Little Boy )என்ற பெயரில் அணுக்குண்டு போடப்பட்டது. தற்பொழுது உள்ள நினைவு கட்டிடத்தின் மேலாக வெடித்தது. அப்பொழுது அந்தக் கட்டிடத்தின் (Industrial Promotion Hall) இரும்பைத் தவிர மற்றைய எந்த கட்டிடப் பொருட்களும் அங்கு மிஞ்சவில்லை . போட்ட குண்டு ஆகாய வெளியில் நிலத்தில் இருந்து 600 மீட்டர் உயரத்தில் வெடித்தது- காரணம் நிலத்தில் வெடித்ததால் அதனது தாக்கம் சுற்றியுள்ள கட்டிடங்களால் குறைக்கப்படும்.
வெடித்த அணுக்குண்டால் , உடனடியாக ஒரு லட்சம் மனிதர்கள் ஹிரோஷிமா நகரத்தின் சுற்று வட்டாரத்தில் உயிரிழந்தார்கள். குண்டு போட்டதும் நெருப்பு, மழை, வெள்ளம் எனப் பல மாற்றங்கள் அந்த சூழலில் ஏற்பட்டது. மரத்தாலான யப்பானிய வீடுகளில் உள்ள சமையல் எரிவாயுக் குளாய்கள் வெடித்து எரிந்தன. ஆண்கள் பலர் எரிகாயங்களுடன் ஆறுகளில் குதித்தனர். வெப்பத்தில் யப்பானிய பெண்களின் கிமோனாக்கள் உருகி உடலுடன் ஒட்டி அந்த இடங்களில் தோல் கருகியது . ஏராளமான பெண்கள் காயங்களோடும் தழும்புகளோடும் பல வருடங்கள் நடைப்பிணமாக உயிர் வாழ்ந்தார்கள்
ஹிரோஷிமா நாவலில் வந்த ஆறு மனிதர்கள் ஏதோ காரணத்தால் அன்று குண்டு விழுந்த அந்த இடத்தில் இருக்கவில்லை. இந்த ஆறு பேரும் அவர்கள் உயிர் வாழ்வதுடன் மற்றவர்களைக் காப்பாற்ற முனைவதை இங்கு விவரிக்கப்படுகிறது. இறுதியில் அவர்களும் இந்த கதிரியகத்தால் நோய் வாய் பெறுகிறார்கள் . குண்டு வெடித்த பின்னான காலத்தில் நண்பர்கள் , உறவினர்களைக் காப்பாற்றும் செயலை செய்ய விளையும் போது, அவர்கள் மன ஓட்டங்கள் இங்கு சித்தரிக்கப்படுவதால் இது நாவலாகிறது. இடிந்த கட்டிடங்கள் மத்தியிலிருந்து நண்பர்கள் உறவினர்களைக் காப்பற்றும் செயலில் ஈடுபடும் இவர்களுக்கு, பின்பு கதிரியக்கத்தால் தாமும் நோயுறுவார்கள் என்பது இவர்களுக்கே தெரியது என்பதும் இந்த நூலில் வருகிறது.
நாவலில் ஒரு இடத்தில், இறந்த குழந்தையை பிரியாது மூன்று நாட்கள் மார்போடு கையால் அணைத்துத் தூக்கியபடி நடமாடும் தாயின் அவலநிலையைத் தரிசிக்கிறோம் . வேறு ஒரு இடத்தில், பாடசாலை மாணவன் தனது நண்பர்கள் இருவரைச் சந்திக்கப் போகும்போது, ஒரு நண்பரின் தாய் காயமடைந்தும் மற்றைய நண்பனின் தாய் இறந்தும் இருக்கிறார்கள். இங்கே இந்த குழந்தைகளின் மன அவலங்கள் அவர்களுக்கே உரிய மன ஓட்டத்தின்படி இயல்பாக சித்தரிக்கப்படுகிறது.
ஹிரோஷிமா பற்றிய இந்த விடயம், நீயோர்கர் சஞ்சிகையில் வந்தபோது, அல்பேட் ஐயன்ரைன் 1000 பிரதிகளை வாங்கி தனது நண்பர்களுக்கு விநியோகித்தார் என்றால் அதன் தாக்கத்தை நாம் எண்ணிப் பார்க்க முடியும் இதுவரையிலும் அமெரிக்கர்கள், யப்பானியர்கள் மேல் போட்ட அணுக்குண்டு அவர்களுக்குத் தேவையானது, யப்பானியர்களை மனிதர்கள் அல்ல , அவர்கள் தரம் குறைந்தவரகள் என்ற கோணத்தில் கதை(Narrative) பின்னப்பட்டிருந்தது. ஆனால் இந்த நாவல் வந்ததும், அமரிக்கர்களது மனதில் மாற்றம் வந்தது.
நான்,ஹிரோஷிமா நகரத்தை பார்த்தபோது இந்த இடத்தை ஏன் தெரிவு செய்தார்கள் எனத் தெரிந்தது. யப்பானியர்களுக்கு மிகவும் கடுமையான தாக்கத்தை உருவாக்கவேண்டும் என்பதால் தொழில்த்துறையில் அதிக முன்னேற்றம் அடைந்த நகரைத் தேர்ந்தெடுத்தார்கள். அது மட்டுமல்ல, ( Ota River) ஓரா நதி , அங்கு நகரின் மத்தியில் ஆறு கிளைகளாக பிரிந்து செல்வதால் அழகான நகரும் கூட. அந்த நதியின் மேல் உள்ள பாலத்தின் மேல் குண்டு வெடித்தபோது, ஏராளமானவர்கள் உடலில் ஏற்பட்ட ஏரிவினால் ஆற்றில் குதித்து மரணமாகினார்கள். அதே பாலத்திலிருந்து நான் நதியை எட்டிப் பார்த்தபோது நதி இப்போது அமைதியாக ஓடுகிறது. தற்போது நகரமெங்கும் அணுகதிர் வீச்சு இல்லை என உறுதியளித்தார்கள்.
அங்குள்ள அருங்காட்சியகத்திற்கு சென்றபோது அங்கு வைக்கப்பட்ட பொருட்கள் தகவல்கள் நெஞ்சை உறைய வைத்தன. கட்டிடங்களில் உள்ள இரும்புகள் உருகி, மீண்டும் திரவ நிலைக்கு சென்று பின் தகடுகளாக மீண்டன. இந்த யுரேனியம்- 235 குண்டு, நிலத்திலிருந்து 600 மீட்டர்கள் உயரத்தில் வெடித்தபோது , 7000 சென்ரிகிரேட் வெப்பம் உருவாகி ( 15 கிலோ தொன் ரிஎன் ரி சமனானது) , தரையில் 3000- 4000 சென்ரிகிரேட் வெப்பத்தில் தாக்கியது. அந்த வெப்பம் எப்படி இருக்கும் என்பதை கற்பனையில் நினைத்தேன் . நாங்கள் 100 சென்ரிகிரேட் நீர் கொதிக்கும்போது கையில் பட்டால் துடித்து அலறுவோம். நாகசாகி நகரில் போட்டது, இதிலும் பலமானது புலுட்டோனியம். 21 கிலோ தொன் ரிஎன் ரி சமனானது.
உடனே இறந்த மனிதர்கள் அதிஸ்டசாலிகள், ஆனால் உயிர் தப்பியவர்கள் அப்படியல்ல . எரிகாயங்களுடன் உணவு உண்ண முடியாது பட்டினி கிடந்து இறந்தார்கள். உடனடியாக இறக்காதவர்கள், பிற்காலத்தில் பல விதமான புற்றுநோய்கள் ( Leukemia, Thyroid. breast cancer, lung cancer, oesophagus and stomach cancer) கண்ணில் (Atomic Cataract) பார்வையற்று குருடர்களாகிறார்கள்.
ஹிரோஷிமா நாவலில் நெருக்கடியில் யப்பானியர்கள் எப்படி மீழ்கிறார்கள் எனவும் எழுதப்படடிருக்கிறது. துன்பத்தையும் வலியையும் அமைதியாக சகித்து, பிழைத்து மீண்டும் எழுகிறாரர்கள் என எழுதப்பட்டிருந்தது. என்னைப் பொறுத்தவரை யப்பானிய நாட்டில் புவி அதிர்வு , எரிமலை, சுனாமி , போன்ற இயற்கை அழிவுகளுடன் பௌத்தம், சின்ரோ என்ற மதங்களும் அவர்களை வாழ்விற்கான போராட்டத்தை நடத்த மேலும் புடம் போட்டுள்ளது என்பதாக புரிந்து கொண்டேன்.
இந்த இடத்தில் அமெரிக்காவின் மீது குற்றச்சாட்டாக வைக்காது மிகவும் தெளிவாக உண்மைகளை அங்கு தெரிவித்திருப்பது என்னை வியக்க வைத்தது. பிற்காலத்தில் அமரிக்க அதிபர் ரூமன் தனது செயலை நியாயப்படுத்திய போதிலும், ரூமனின் முக்கிய உதவியாளர்( Chief of Staff Amaral Leahy) ‘அமரிக்கா , தற்பொழுது உலகத்தின் காட்டுமிராண்டிகளிடத்தில் வந்துள்ளது’ என்றார்.
குண்டினால் பாதிக்கப்பட்டு உயிர் தப்பியவர்கள் மற்றைய யப்பானியர்களால் விலத்தப்பட்டார்கள் . குழந்தைகள் பாதிப்புடன் பிறக்கலாம் என்ற அச்சத்தால் திருமணங்கள் அவர்களுக்கிடையே நடக்கவில்லை. மேலும் பலரது எரிகாயங்கள் மாறினாலும் தோல்கள் சுருங்கி காயங்களுடன் வாழ்ந்தார்கள்.
அன்று ஹிரோஷிமாவில் விழுந்த அணுக்குண்டோடு விடயம் முடிந்து விடவில்லை. தொடர்ச்சியாக அவர்கள் இறக்கும்வரை தண்டனைக்கு உட்பட்டிருக்கிறார்கள் என்பதே இந்த இடத்தில் நான் தெரிந்து கொண்ட உண்மையாகும் .
கனத்த இதயத்தோடு கண்காட்சியிலிருந்து வெளிவந்தபோது, எமது பார்வைக்கு தெரிந்தது: அணுகுண்டின் ஞாபகார்த்தமாக பூங்காவில் வைத்திருந்த டோம். அதனருகே 1964 ஆம் வருடத்தில் இருந்து நெருப்பு அணையாது எரிந்து கொண்டுள்ளது.பல தேசங்களில் உள்ள அணுக்குண்டுகள் அழிக்கப்படும்வரையும் எரியும் என்ற சொல்லப்படுகிறது. தற்போது அணுக்குண்டுகள் பல பெரிய யுத்தங்களை தடுக்கிறது என நினைக்கிறேன்.
அதைக் கடந்தபோது ஒரு இளம் பெண்ணின் சிலை வைக்கப்பட்டிருந்தது. அவளது கதையை வழிகாட்டி ரிச்சாட்டு சொன்னபோது மீண்டும் சோகம் என்னை கவ்விக்கொண்டது.
(Sadako Sasaki) என்ற அந்தப் பெண், குழந்தையாக இருந்தபோது 1945இல் ஹிரோஷிமா அணுக்குண்டு போடப்பட்டது. அவளுக்கு குழந்தைப் பருவம் சாதாரணமாக மற்றவர்கள் போல் இருந்து. பாடசாலைக்கு சென்றாள். மற்றைய சிறுமிகளுடன் விளையாடினாள் . உறங்கிய பேய் மீண்டும் விழித்ததுபோல் அவளுக்கு 12 வயதானபோது லியுகிமியா என்ற இரத்த புற்றுநோய் ஏற்பட்டது. அவளை வைத்தியசாலையில் சேர்த்து அவளுக்கு தொடர்ச்சியான சிகிச்சை நடந்தது. அக்காலத்தில் நாரை பறவைகள்,செல்வத்தையும் அதிக ஆயுளையும் தரும் எனப் புத்தகங்களிலிருந்து வாசித்தறிந்த அந்த சிறுமி, மற்றவர்கள்போல் தனக்கும் ஒரு சாதாரணமாக வாழ்க்கையை வேண்டிக் கனவு கண்டாள்.
அதன் நிமித்தம் சடகோ சசாகி தனது உயிர் வாழ்வை தேடி கடுதாசியில் ஆயிரம் நாரைகள் செய்யத் தொடங்கினாள். ஆனால், அவள் செய்து முடிக்க முன்பு இறந்தாள். அவள் இறந்த செய்தி உலகமெங்கும் அமைதியை வேண்டி, அணுவாயுதத்திற்கு எதிரான செய்தியாகவும் எங்கும் பரவியது. அவளுக்கு ஒரு என ஒரு பூங்காவை உருவாக்கி ,அணுக்குண்டு போட்ட இடத்தருகே அவளுக்கொரு சிலை வைத்திருக்கிறார்கள் .
எட்டு தசாப்தங்கள் கடந்தபோதிலும் ஹிரோஷிமாவின் கண்ட காட்சிகள் அக்காலத்தை அப்படியே எனது நினைவுக்குக் கொண்டு வருகிறது.
யப்பானிய போர்க்கால அரசியலில் ஒரு பகுதி:
போர் தளபதிகள் ஏற்கனவே 3 மில்லியன் போராளிகளையும் பலி கொடுத்துவிட்டோம் . எங்களது தகவல்படி இரண்டு குண்டுகளே அமெரிக்கர்களிடம் இருந்தது. அவற்றைப் போட்டு விட்டார்கள். அதன்பின்பாக அவர்கள் தயாரிக்க பலகாலம் செல்லும் என்பதால் சரணடையக் கூடாது என வாதிட்டார்கள்.
சரணடையும்போது அதனால் போரின் முக்கிய தளபதிகளுக்கு என்ன நடக்கும் என்பதும் அவர்களுக்கு தெரிந்திருந்தது. ஆனால், யப்பானிய மன்னர் மட்டும் பிடிவாதமாக, இனியும் மக்கள் இறக்கக்கூடாது என்று வாதிட்டதன் பிரகாரம் யப்பான் சரணாகதி அடைந்தது .
எனது யப்பான் பயணத்தின் பத்தாவது நாளில் ஹிரோஷிமாவை பார்த்தபோதும் மொத்தமான பயணத்தின் (Nub) அடிநாதமாக இது இருந்தது எனலாம் .
ஹிரோஷிமா நகரத்திற்கு பின்பாக ஒரு தீவிற்குச் சென்றோம் அந்த (Miyajima”, literally “shrine island) தீவில் உள்ள ஒரு சின்ரோ ஆலயம் கடலுக்குள் உள்ளது. அதேபோல் கடலுக்குள் சொர்க்கத்தின் வாசல் கதவுகள் உள்ளன. அந்த தீவில் இறங்கியதும் எங்களைப் பல மான்கள் வரவேற்றன. மான்கள் எங்களைப் பார்த்து மருளவில்லை . ஆனால் , அவைக்கு உணவு கொடுக்கக் கூடாது என்பது அங்கு உத்தரவு எழுதப்பட்டிருந்தது. ஆனாலும் அவை நாம் வளர்த்த நாய்கள் போல் அவை எங்களிடம் வந்து உராய்ந்தபடி நிற்கும்.
இந்த சிறு தீவிலிருந்து கடலுக்குள் அந்த ஆலயம் உள்ளது படகில் போகவேண்டும் . ஏற்கனவே பல ஷின்ரோ ஆலயங்கள் பார்த்ததால் அங்குப் போகவில்லை. மிகவும் அமைதியான அழகான தீவு. பகலில் பிரயாணிகள் வந்து விட்டுப் போவதால் சில நாட்களைக் கழிப்பதற்கு மிகவும் ஏகாந்தமான இடம். அந்த தீவிற்குப் பல ஜோடிகள் வந்து திருமணம் செய்தார்கள். யப்பானியர்கள் சின்ரோ ஆலயத்தில் திருமணமும் புத்தகோவிலில் மரணச்சடங்கும் செய்வார்கள் என அறிந்தேன். எங்கள் குடும்பத்தினர் நயினதீவு நாகபூசணிகோவிலில் போய் முடி இறக்குவது எனது நினைவில் வந்தது. அர்த்தங்கள் அற்றபோதும் நம்பிக்கைகள் உலகெங்கும் பொதுவானவை.
இங்கு உள்ள கடலின் நீலநிறப் பின்புலத்தில் சிவப்பாக கதவுகள் உலகம் எங்கும் பிரபலமானது. ஆறாம் நூற்றாண்டிலிருந்து இந்த ஷின்ரோ ஆலயம் பிரபலமானது.
கடலுணவுகளை அழகாக செய்து விற்கிறார்கள். யப்பானிய உணவில் பல நொதிப்படைந்தவை. இவைகள் வயிற்றுக்கு ஆரோக்கியமானது. அத்துடன் உடல் ஒவ்வாமைக்கு நல்லது என்பது சியாமளாவின் கருத்தானதால் அங்கு கடலுணவை உணடுவிட்டு மான்களுடன் சிறிது நேரம் அங்கு கழித்துவிட்டு மீண்டும் கப்பலேறி
[தொடரும்]
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.