குழந்தை இலக்கியம் அல்லது சிறுவர் இலக்கியமென்பது குழந்தைகளின் நல்லதோர் எதிர்காலத்துக்கு முக்கியமானதொரு படிக்கட்டு. வளர்ச்சிக்கு அத்தியாவசியமானது. இலங்கையைப் பொறுத்தவரையில் சிறுவர் இலக்கியத்துக்குப் பக்கங்கள் ஒதுக்கும் பத்திரிகை, சஞ்சிகைகள் குழந்தைகளின் வளர்ச்சிக்கு முக்கியமான பங்கினை ஆற்றி வருகின்றன.
சுதந்திரன், தினகரன், வீரகேசரி , ஈழநாடு (பழைய) ஆகியவற்றில் வெளியான சிறுவர் பக்கங்கள் முக்கியமானவை. எழுத்தாளர்கள் பலரை உருவாக்கிய பக்கங்கள் அவை. சிரித்திர்ன கண்மணி என்னும் சிறுவர் சஞ்சிகையினை வெளியிட்டது. அழகான ஓவியங்களுடன், குழந்தைகளைக் கவரும் ஆக்கங்களுடன் வெளியான அச்சஞ்சிகை சில இதழ்களே வெளிவந்தது. கண்மணி நின்ற பின்னர் கண்மணி என்னும் பெயரில் சிரித்திரனில் சிறுவர் பக்கங்கள் வெளிவந்தன. இலங்கைத் தமிழ் இலக்கியத்தைப் பொறுத்தவரையில் அவ்வப்போது சிறுவர் சஞ்சிகைகள் வெளிவந்தாலும் அவை நிலைத்து நிற்பதில்லை என்பது துரதிருஷ்ட்டமானது. எழுத்தாளர் கணபதி சர்வானந்தாவும் அண்மையில் அறிந்திரன் என்னும் நல்லதொரு சிறுவர் சஞ்சிகையினை வெளியிட்டார்.அதுவும் நிலைத்து நிற்கவில்லை. மீண்டும் அதனைக் கொண்டு வருவதற்கு முயற்சி செய்கின்றார். இம்முறை அவர் வெற்றியடைய அனைவரும் உதவ வேண்டும்.
எத்தனையோ ஆடம்பரச் செலவுகளை நாடோறும் செய்யும் நாம், சிறுவர் இலக்கியத்துக்குப் போதிய அளவு ஆதரவு கொடுப்பதில்லை. அதுவே இவ்விதமான சஞ்சிகைகள் நிலைத்து நிற்காததற்கு முக்கிய காரணம். இந்நிலை மாற வேண்டும். இவ்விதமான சஞ்சிகைகள் , நூல்கள் எல்லாம் உங்கள் குழந்தைகளின் ஆரோக்கியமான, வெற்றிகரமான எதிர்காலத்துக்காக வெளிவருபவை என்பதை நினைத்துச் செயற்படுங்கள் , ஆதரவளியுங்கள் என்பதே எனது பணிவான வேண்டுகோள்.
இந்நிலையில் தாயகத்திலும், புகலிடத்திலும் எழுத்தாளர்கள் பலர் சொந்தமாகச் சிறுவருக்கான நூல்களை வெளியிட்டு வருகின்றார்கள். அவர்கள் உண்மையில் முக்கியமான சமுதாயப்பங்களிப்பினைச் செய்கின்றார்கள். அதற்காக அவர்களைப் பாராட்ட வேண்டும். அவர்கள்தம் முயற்சிகளுக்கு ஆதரவளிக்க வேண்டும்.
நான் ஈழநாடு மாணவர் மலர் மூலம் எழுத்துலகில் காலடி எடுத்து வைத்தவன். என்னைப்போல் பலர்.அவர்களில் ஒருவர்தான் வி.சந்திரகுமார் (தற்போது தம்பா என அறியப்படும் எழுத்தாளர்)> ஆரம்பத்தில் ஈழநாடு மாணவர் மலரில் துணுக்குகள் மூலம் அறிமுகமான வி.சந்திரகுமார் 'கொரில்லா அரக்கன்' என்னும் சிறுவர் நாவலொன்றையும் எழுதினார். கொரில்லா அரக்கன் போல் இலங்கையில் வெளியான, வெளியாகும் பத்திரிகைகள், சஞ்சிகைகளில் சிறுவர் நாவல்கள் பல வெளியாகியுள்ளன. இவ்வகையில் சிந்தாமணியின் சிறுவர் பக்கத்தில் தொடர்ச்சியாகச் சிறுவர் நாவல்களை எழுதி வந்தவர் மாஸ்டர் சிவலிங்கம். இவ்விதம் வெளியான சிறுவர் நவீனங்கள் கண்டறியப்பட்டு ,ஆவணப்படுத்தப்பட வேண்டும். அச்சுருவில் அல்லது டிஜிட்டல் வடிவில் மின்னூல்களாக வெளியாக வேண்டும்.
வி.சந்திரகுமாரின் கொரில்லா அரக்கன் மொத்தம் 25 அத்தியாயங்கள் வெளிவந்தன. அதன் இறுதி அத்தியாயம் 24 என்றிருந்தாலும், 19 அத்தியாயங்கள் என்று ஈர் அத்தியாயங்கள் வெளிவநதுள்ளதால் அதன் மொத்த அத்தியாயங்கள் 25. ஈழநாடு மாணவர் மலரில் 29.7.1970 தொடக்கம் 6.4.1980 வரை தொடராக வெளிவந்த நாவலது. அது வெளிவந்த காலத்தில் சில ஈழநாடு வாரமலர்கள் நூலகம் தளத்திலில்லை. இன்னும் சில வெளியான வாரமலர்களில் மாணவர்கள் மலர் வெளியாகவில்லை. மேலும் சில வெளியான மாணவர்மலர்களில் கொரில்லா அரக்கனைக் காணவில்லை.
கொரில்லா அரக்கனின் கதைச்சுருக்கம்:
நாகதீப அரசன் தீபராஜன், அவனது மகள் தீபா. அவள் உணவுண்டதும் தூங்கும் இயல்புள்ளவள். சோதிடர் ஒருவர் அவளுக்கு ஒரு வருடத்துக்குக் கொரில்லா
அரக்கனால் ஆபத்து என்று கூறவே, தீபராஜன் மகளைத் தனது அரண்மனையின் சுரங்க மாளிகையில் வைத்துப் பாதுகாக்கின்றான். ஆனால் கொரில்லா அரக்கனோ மான் மேடத்தில் வந்து அவளைக் கவர்ந்து , தன் விமானத்தில் கொண்டு சென்று விடுகின்றான். மாயவெளிக்காட்டிலுள்ள தன் மாளிகையில் அடைத்து வைக்கின்றான். இது மானைக் கண்டு பின் தொடர்ந்த சீதையைக் கவர்ந்து சென்ற இராவணன கதையைக்கூறும் இராமயணத்தின் பாதிப்பை வெளிப்படுத்துகின்றது.
மகள் கடத்தப்பட்டதை அறிந்த அரசியாரும் இறந்து விடுகின்றார். தீபராஜன் தன் மகளைக் கொரில்லா அரக்கனிடமிருந்து மீட்பவனுக்கு நாட்டைத்தருவதாக அறிவிக்கின்றான். கொரில்லா அரக்கனை எதிர்க்கும் துணவு யாருக்கும் இல்லை. இந்நிலையில் இளைஞன் வேலன் அதற்கு முன்வ\ருகின்றான்.
தீபராஜனின் தம்பி அரசைக் கவர்வதற்காக அரசனுடன் முரண்பட்டு நிற்பவன். வழியில் அவன் எதிர்ப்பட்டு வேலனுடன் மோதுகின்றான். வேலன் வெற்றியுடன் திரும்பினால் ஆட்சியை அவன் கைப்பற்றி விடுவான் அல்லவா? அதுதான் காரணம். அவனைக்கொன்று வேலன் தன் பயணத்தைத்தொடர்கின்றான். அவனுக்குத்துணை அவனது நட்புக்குரிய கிளி.
வேலனின் தொடரும் பயணத்தில் எலும்புப்பேய் எதிர்ப்படுகின்றது. அதனைக் கொரில்லா அரக்கனென்று எண்ணி வேலன் கொன்று விடுகின்றான். தேவதாரு மரமொன்று எதிர்ப்படுகின்றது. அதனை வேலன் வாளால் வெட்டவே அவன் கற்சிலையாகி விடுகின்றான். இந்து சமுத்திரத்திலுள்ள திமிங்கில வயிற்றுத் தீவின் அரசனிடமிருந்து அதிசய தைலத்தைப் பெற்று வந்து அந்த நட்புக் கிளி வேலனை மீண்டு உயிர்ப்பிக்கிறது.
இவ்விதமாகப் பல இன்னல்களையெல்லாம் கடந்து , மாயவெளியிலுள்ள கொரில்லா அரக்கனின் மாளிகையில் அடைக்கப்பட்டிருந்த தீபாவை அவ்வரக்கனுடன் மோதிக்கொன்று மீட்டு வந்து, தீபாவை மணந்து நாகதீப அரசனாகி வாழத்தொடங்குகின்றான் வேலன்.
கதையில் குள்ளர்கள் வசிக்கும் கேரளா, (இது கலிவர் கதையின் பாதிப்பாக இருக்கலாம்) , நட்புப் புலி என் மேலும் பல நினைவில் நிற்கக்கூடிய கதையம்சங்கள் உள்ளன.
கதைப்பின்னலைச் சுவையாகப் பின்னியிருக்கின்றார் சந்திரகுமார். இது அவரது கற்பனையாற்றலைப் புலப்படுத்துகின்றது. இதன் விடுபட்ட அத்தியாயங்களையெல்லாம் மீண்டும் எழுதி (அவை இல்லாவிட்டாலும் கூட கதையின் தொடர்ச்சிக்குத்தடங்கல் வாசிப்பில் ஏற்படவில்லை. அதனால் அவற்றை நீக்கி, கொரில்லா அரக்கன் நாவலில் திருத்தம் செய்தாலும் கூட நாவல் சிறப்பாகவே அமையும். இதனைச் செய்து நாவலை அச்சு வடிவில் அல்லது டிஜிட்டல் வடிவில் மின்னூலாக வெளியிடலாம். சந்திரகுமார் நல்லதோர் ஓவியரும் கூட. அவரே நாவலுக்கு உரிய , பொருத்தமான சித்திரங்களையும் தீட்டலாம். தம்பா கவனிப்பாராக.
நிச்சயமாக, இலங்கையில் வெளியான சிறுவர் நாவல்களில் ஒன்றாகச் சந்திரகுமாரின் 'கொரில்லா அரக்கன்' நாவலைக் குறிப்பிடலாம். சுவையான , சிறுவர்களைக் கவரக்கூடிய , சாகசப்பயணத்தை உள்ளடக்கிய நாவல் 'கொரில்லா அரக்கன்'. தன் பதின்ம வயதிலேயே இந்நாவலை அவர் எழுதியிருக்கின்றார் என்பது வியப்பைத்தருகின்றது.
ஈழநாடு மாணவர் மலரில் வெளியான கொரில்லா அரக்கன் நாவல் அத்தியாயங்கள் (நூலகம் தளத்தில் உள்ள ஈழநாடு பத்திரிகைப் பிரதிகள்) :
கொரில்லா அரக்கன் 1 - வி.சந்திரகுமார் (தம்பா) - 29.7.,1979 - ஈழநாடு -
கொரில்லா அரக்கன் 2 - 5.8.1979 -
11.8.1979 ஈழநாடு கிடைக்கவில்லை
19.8.1979 - கொரில்லா அரக்கன் வெளிவரவில்லை
26.8.1979 மாணவர் மலர் வெளியாகவில்லை.
2.9.1979 - ஈழநாடு கிடைக்கவில்லை.
9.9.1979 - கொரில்லா அரக்கன் 4 -
16.9.1979 - கொரில்லா அரக்கன் 5 -
23.9.1979 - கொரில்லா அரக்கன் 6 -
கொரில்லா அரக்கன் 7 - ஈழநாடு 30.9.1979 -
கொரில்லா அரக்கன் 8 - ஈழநாடு 7.10.,1979 -
கொரில்லா அரக்கன் வெளிவரவில்லை. ஈழநாடு 14.10.1979
21.10.1979 ஈழநாடு கிடைக்கவில்லை.
28.10.1979- ஈழநாடு - கிடைக்கவில்லை.
4.11.1979 - ஈழநாடு கிடைக்கவில்லை.
11.11.1979 - கொரில்லா அரக்கன் 12 -
18.11.1979 மாணவஎர் மலர் வெளியாகவில்லை.
25.11.1979 மாணவர் மலரில் கொரில்லா அரக்கன் வெளியாகவில்லை.
ஈழநாடு 6.1.1980 - கொரில்லா அரக்கன் 16 -
13.1.1980 ஈழநாடு மாணவர் மலரில் கொரில்லா அரக்கன் வெளியாகவில்லை.
20.1.1980 ஈழநாடு கொரில்லா அரக்கன் 17 -
27.1.980 - கொரில்லா அரக்கன் 18 - f
3.2.1980 ஈழநாடு கொரில்லா அரக்கன் 19 -
10.2.1980 - கொரில்லா அரக்கன் 19 -
17.10.1979 ஈழநாடு கொரில்லா அரக்கன் -
24.2.1980 - ஈழநாடு - கொரில்லா அரக்கன் 21-
2.3.1980 - ஈழநாடு - கொரில்லா அரக்கன் 22 -
9.3.1980 ஈழநாடு மாணவர் மலர் வெளியாகவில்லை.
16.3.1980 ஈழநாடு கொரில்லா அரக்கன் 23
23.3.1980 மாணவர் மலர் வெளியாகவிலலை.
30.3.1980 - மாணவர் மலரில் கொரில்லா அர்க்கனைக் காணவில்லை.
6.4.1980 கொரில்லா அரக்கன் 24 , இறுதி அத்தியாயம் , -
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
*******************************************************