இராமாயணத்தில் இராமபிரான் 14 ஆண்டுகள் வனவாசம் இருந்ததாகச் சொன்னபோது பக்தர்கள் கதிகலங்கிப் போனார்கள், இந்தக்கதை பழைய வரலாற்றில் இடம் பெற்றிருந்ததால் அந்த சம்பவம் முக்கியம் பெற்றிருந்தது. ஆனால் அதைவிட அதிக காலம் அதாவது 33 வருடங்கள் வடஇலங்கைத் தமிழ் மக்கள் அஞ்ஞாத வாசம் இருந்ததைக் கேள்விப்பட்ட போது யூரியூப் தொலைக்காட்சி நண்பரான தணூரன் என்பவர் கண்கள் கலங்கி நின்றதைக் காணமுடிந்தது.

‘முதன் முதலாக இந்த மண்ணில் காலடி எடுத்து வைத்திருக்கின்றேன், காரணம் நான் அப்போது பிறந்திருக்கவில்லை’ என்று அவர் குறிப்பிட்டிருந்தார். இது இராமாயண காலத்தில் நடக்கவில்லை, சென்ற வாரம் இலங்கைத் தீவின் வடபகுதியில் உள்ள, தமிழர்கள் பரம்பரையாக வாழ்ந்த காங்கேசந்துறையில் நடந்ததொரு சம்பவமாகும். இதைப் பார்த்த இன்னுமொரு நண்பர் சந்துரு என்ற ஊடகவியலாளர் ‘புதிய பூமி புதிய வானம்’ என்று கைகளைத்தூக்கி மகிழ்ச்சியில் பாடினார். இது அவருக்குப் புதிய பூமியாக இருக்கலாம், ஆனால் இது எமக்கு எங்கள் மூதாதையர் வாழ்ந்த ‘எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி இருந்ததும் இந்நாடே - அதன் முந்தையர் ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்து முடிந்ததும் இம் மண்ணே!

யுத்தம் காரணமான வடபகுதியில் வாழ்ந்த மக்கள் இடம் பெயர்ந்திருந்தார்கள். காங்கேசந்துறையை அதிபாதுகாப்பு வலயமாக இராணுவம் பிரகடனப் படுத்தியதால் 1990 ஆம் ஆண்டு பரம்பரையாக அங்கு வாழ்ந்த மக்கள் சொந்த மண்ணைவிட்டு வெளியேற்றப் பட்டார்கள். எங்கே செல்வது என்று தெரியாமல், உறவுகள் எல்லாம் வலி சுமந்த நெஞ்சோடு திக்குத் திக்காய்ப் பிரிந்து விட்டார்கள். மீண்டும் அந்த மண்ணில் காலடி எடுத்து வைக்க இப்போதுதான் சிலருக்குச் சந்தர்ப்பம் கிடைத்தது. உடைந்து சிதைந்து போயிருந்த தங்கள் வீடுகளை, 33 வருடங்களின் பின் பார்த்த மக்கள் சில நிமிடம் அதிர்ச்சியில் உறைந்து போயிருந்தனர். ஆனாலும் சொந்த மண்ணில் மீண்டும் காலடி வைத்ததில் தாங்கள் மகிழ்ச்சி அடைவதாகக் குறிப்பிட்டனர்.

காங்கேசந்துறையில் சுமார் 108 ஏக்கர் நிலப்பரப்பு மட்டும் சென்ற வாரம் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்து விடுவிக்கப்பட்டது. தனிப்பட்ட மக்களுக்குச் சொந்தமான விடுவிக்கப்பட்ட நிலத்தில் 80 ஏக்கர் நிலம் இராணுவத்திடம் இருந்தும், 28 ஏக்கர் நிலம் கடற்படையிடம் இருந்தும் விடுவிக்கப்பட்டன. தற்போது விடுவிக்கப்பட்ட பகுதிகளில் முக்கியமாக 1959 ஆம் ஆண்டு கட்டப்பட்ட காங்கேசந்துறை பட்டினசபையைச் (பிரதேசசபை) சூழ்ந்த பகுதிகளும், அதாவது பழைய துறைமுகம் இருந்த கலங்கரைவிளக்கம் தொடங்கி மேற்கே புதிய துறைமுகம் வரை விடுவிக்கப் பட்டிருக்கின்றது. ஜனாதிபதி மாளிகை இருக்கும் இடம், குறிப்பாகச் சடையம்மா மடத்தடி இன்னும் விடுவிக்கப்படவில்லை. அதேபோல நடேஸ்வராக் கல்லூரிவீதியில் உள்ள நரசிம்மவைரவர் கோயிலைச் சூழ்ந்த தையிட்டியின் சில பகுதிகளும் விடுவிக்கப்பட்ட இடங்களில் அடங்கும். எங்கள் வீடுகள் இருந்த பகுதியும், நடேஸ்வராக்கல்லூரியும் மக்களின் விடா முயற்சியால் ஏற்கனவே சில வருடங்களுக்குமுன் விடுவிக்கப்பட்டிருந்தன.

நடேஸ்வராக் கல்லூரி வீதியில் கல்லூரியோடு இணைந்த, கிழக்குப் பக்கத்தில் தொடர்வண்டிப் பாதைக்கு அருகே சிறிய பகுதி இன்னமும் 515 வது இராணுவ பிரிவிடம் இருக்கின்றது. அதையும் விட்டுக் கொடுத்தால், தையீட்டிப் பகுதிகளில் குடியிருக்கும் மாணவர்கள் கல்லூரிவீதி வழியாக இலகுவாகக் கல்லூரிக்கு வந்து செல்ல முடியும், இல்லாவிட்டால் நீண்டதூரம் சுற்றி வரவேண்டியிருக்கும். தொடர்வண்டி நிலையத்திற்கு அருகே இருந்த ரோமன் கத்தோலிக்க பாடசாலையும் தற்போது விடுவிக்கப் பட்டிருக்கின்றது. சுமார் 197 குடும்பங்களின் நிலங்களில் மீள்குடியேற்றம் நடைபெறுவதால், இனி வரும் காலங்களில் பாடசாலைகளில் மாணவர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கச் சந்தர்ப்பம் உண்டு.

தரைப்பாதை, தொடர்வண்டிப் பாதை, கடற்பாதை மற்றும் விமானப்பாதை ஆகிய நான்குவழிப் பாதைகளைக் கொண்ட நகரமாகக் காங்கேசந்துறை இருந்ததால், ஒரு காலத்தில் மிகவும் பிரபலமான நகரமாக இருந்தது. இயற்கை தந்த வெண்மணற் பரப்பைக் கொண்ட காங்கேசந்துறை கடற்கரையும், கம்பீரமாக நிமிர்ந்து நிற்கும் கலங்கரைவிளக்கமும், போத்துகேயரைக் கோட்டைகட்ட விடால் தடுத்து அத்திவாரச் சுவரோடு நிறுத்திய மக்களின் வீரவரலாறும், அதன் அருகே பழைய துறைமுகமும் அந்த நகருக்கு அழகுசேர்த்தன. விமானத்தையோ, கப்பல்களையோ, அல்லது தொடர் வண்டியையோ அருகே சென்று பார்க்க விரும்பியவர்களின் ஆசைகளை நிறைவேற்றிய நகரமாக அன்று காங்கேசந்துறை இருந்தது. 1970 களில் சுமார் 3000 மேற்பட்ட பணியாளர்கள் அங்கிருந்த சீமெந்துத் தொழிற்சாலையில் பணி புரிந்தார்கள்.

குரு வீதியில் உள்ள எங்கள் வீடு தரைமட்டம் ஆக்கப்பட்டிருந்தாலும், அருகே உள்ள நடேஸ்வராக் கல்லூரி நான் ஆரம்ப கல்விகற்ற பாடசாலை எப்பதாலும், எனது தந்தை நடேஸ்வராக் கல்லூர் அதிபராகவும், பட்டினசபை முதல்வராகவும் இருந்ததாலும் இந்த இடங்கள் விடுவிக்கப்பட்டதில் எனக்கு மிக்க மகிழ்ச்சியாக உள்ளது. ஆனால் இதையெல்லாம் பார்த்து மகிழ எனது பெற்றோர்கள் தான் இப்போது உயிருடன் இல்லை. எனக்கு மட்டுமல்ல, பலரும் சொந்தங்களை இந்த யுத்தத்தில் இழந்துவிட்டார்கள். எமது காலத்தில் இனமத வேறுபாடின்றி எல்லா இனத்தவரையும், மதத்தவரையும் அரவணைத்த நகரமாகக் காங்கேசந்துறை இருந்தது. பலவேறு இனத்தவர்களும் தொழில் நிமித்தம் அங்கு வந்து ஒற்றுமையாக வாடகை வீடுகளில் தங்கியிருந்தனர். அவர்களது பிள்ளைகள் நடேஸ்வராக் கல்லூரியில் கல்வி கற்றனர். எமது காலத்தில் சுமார் 1200 பிள்ளைகள்வரை கல்வி கற்ற இடத்தில் 160 பிள்ளைகள்தன் இப்போது படிக்கிறார்கள்.

இப்பிலிப்பிலி என்று ஒருவகை மரம் பற்றையாக எல்லா இடமும் காணப்பட்டது. படையினர் தங்கள் பாதுகாப்பிற்காக யுத்தகாலத்தில் அதன் விதைகளை வானத்தில் இருந்து தூவியிருந்தனர். வடபகுதியில் எல்லா இடமும் இப்போது அந்த மரம்தான் காணப்படுகின்றது. விடுவிக்கப்பட்ட இடங்களில் இராணுவம் தங்கியிருந்த வீடுகள் மட்டும் நல்ல நிலையில் இருக்கின்றன. ஏனைய வீடுகள் இடிந்து அழிந்து போனவையாகவும், வளவுகள் முழுதும் பற்றைகள் வளர்ந்து பாதுகாப்பு அற்றவையாக இருக்கின்றன. தெருநாய்களைக் கூட்டம் கூட்டமாகக் காணமுடிந்தது. அவை இரவிலே படையினருக்குக் காவல் நாய்களாக மட்டுமல்ல, இராணுவ முகாங்களின் சாப்பாட்டையும் இதுவரை காலமும் நம்பியிருந்தன.

கோயிற் கடவை என்று அழைக்கப்பட்ட இந்த சுற்றுவட்டாரத்தில் சிறிதும் பெரிதுமாய் 67 இந்துக் கோயில்கள் இருந்தன. தையீட்டி நரசிம்ம வயிரவர் கோயிலைப் பௌத்த கோயிலாக மாற்ற முயற்சிகள் நடந்திருக்கின்றன. சூலம் உடைக்கப்பட்ட நிலையில், மூலவர் அகற்றப்பட்டு இருந்ததை அவதானிக்க முடிந்தது. அங்கிருந்த அரச மரத்தில் பௌத்த கொடிகள் கட்டப்பட்டிருந்தன. சுவர்களில் புத்தரின் படங்கள் வரையப்பட்டிருந்தன. வாசலில் பொலநறுவை சோழர்காலத்து சந்திர வட்டக்கல் அடையாளங்கள் போல, பௌத்த வரலாற்றைச் சொல்லும் அரைவட்டக் கல் ஒன்றையும் பதித்திருக்கிறார்கள். சீமெந்துத் தொழிற்சாலைக்கு முன்னால் இருந்த குமாரகோயில் வளாகத்தில் பௌத்த விகாரை ஒன்று கட்டப்பட்டிருக்கின்றது. கைவிடப்பட்ட வீட்டுச் சுவர்களில் பெரிய அளவில் பெண்களின் ஆபாசப் படங்கள் வரையப் பட்டிருந்ததையும் சில இடங்களில் அவதானிக்க முடிந்தது.

எங்கள் பாரம்பரிய நிலங்களைத் திரும்பப் பெறுவதற்கு யார்யாரிடமோ எல்லாம் மண்டியிட்டுக் கையேந்த வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கின்றோம். இங்கே கிணறுகளை வைத்துத்தான் காணிகளை அடையாளப்படுத்த முடிகின்றது. சில கிணறுகள் தொலைக்கப்பட்டு விட்டன. 33 வருடங்கள் வலிசுமந்த நெஞ்சோடு உறவுகளைப் பிரிந்து வாழ்ந்தது போதும், இனியாவது எல்லைச் சண்டை, வேலிச்சண்டைகளைச் சுமூகமாகத் தீர்த்து ஒன்றுபட்டுச் செயற்படுவோம். விழுந்தாலும் மீண்டும் எழுந்து நிற்போம், எங்கள் அடையாளங்களைக் கட்டி எழுப்புவோம் என்பதைச் செய்கையில் காட்டுவோம். எமது மிகுதி நிலங்களையும் மீட்டெடுப்போம். மக்களும், காலமும்தான் இதற்குப் பதில் சொல்ல வேண்டும்.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.