இனிய நண்பர் நந்தீஸ்வரர் அவர்கள் 27- 6 -2022 ஆண்டு கனடாவில் எம்மைவிட்டுப் பிரிந்துவிட்டார். பிறப்பு என்று ஒன்றிருந்தால் இறப்பு என்பதும் நிச்சயமே என்பதற்கிணங்க அவரது பிரிவையிட்டு அவரது குடும்பத்துடன் துயர் பகிர்ந்து கொள்வோம்.

பன்னாலையைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர் மகாஜனக் கல்லூரியின் பழைய மாணவராவார். இவர் தனது காலத்தில் தமிழ் சமூகத்தின் முன்னேற்றத்திற்காகப் புலம்பெயர்ந்த கனடிய மண்ணில் சமூகசேவகராக முன்னின்று உழைத்ததை யாரும் மறுக்க முடியாது. புலம்பெயர்ந்த பலர் தான் உண்டு, தன்குடும்பம் உண்டு என்று சுயநலமாக வாழமுற்பட்டபோது, ஒரு சிலர்தான் முன்வந்து பொதுநல சேவைகளில் ஈடுபடத் தொடங்கினர். அந்த வகையில் நண்பர் நந்தீஸ்வரனை மகாஜனக்கல்லூரி பழைய மாணவர் சங்கத்திலும், கனடா இந்து மா மன்றத்திலும் முனைப்போடு செயற்பட்ட ஒருவராக நான் சந்தித்தேன். அவரது சிந்தனை எல்லாம் தமிழ் மணவர்களது முன்னேற்றம் கருதியதாகவே இருந்தது. தனது நேரத்தையும் அதற்காகச் செலவிட்டார்.

பேராதனை பல்கலைக்கழகப் பொறியியல் பட்டதாரியான இவர் கணிதத்தில் சிறந்து விளங்கியதால் கனடாவில் சுற்றாடலில் உள்ள அடுத்த தலைமுறையைச் சேர்ந்த பிள்ளைகளுக்கு இலவசமாகக் கணிதபாடம் கற்பிக்கத் தொடங்கினார். அதில் திருப்திப்படாத இவர் மகாஜனக் கல்லூரி பழைய மாணவர் சங்கத்தினுடாக கணிதம், பொதுஅறிவு, தமிழ் போன்ற பாடங்களில் பரீட்சை வைத்து மாணவர்களை ஊக்குவிக்கத் தொடங்கினார். இதற்காகப் பல பயிற்சிப் பட்டறைகளையும் பழைய மாணவர் சங்கத்தின் ஊடாக நடத்திவைத்தார். தொடக்க காலத்தில் வருடாவருடம் சுமார் 1000 மேற்பட்ட தமிழ் மாணவர்கள் ரொறன்ரோ, மொன்றியல் போன்ற இடங்களில் இருந்து இந்தப் பரீட்சைக்குத் தோன்றினார்கள். சிறப்பாக இந்தப் பரீட்சைகள் நடைபெற்றதால், வடஅமெரிக்கா, இலங்கை போன்ற இடங்களில் இருந்தும் மாணவர்கள் பரீட்சைக்குத் தோன்றினார்கள். இன்று கனடிய தமிழ் சமூகத்தில் எழுச்சி பெற்று நல்ல நிலையில் இருக்கும் பலர் இந்தப் பரீட்சையில் தோன்றிக் கல்வியில் தங்கள் நிலை என்ன என்பதை இதன் மூலம் உறுதிப் படுத்தியவர்களேயாகும்.

புதிய தலைமுறையினரில் சிலர் பொதுவறிவு குறைந்தவர்களாக இருந்ததால், அவர்களையும் இனங்கண்டு பயிற்சிப்பட்டறைகள் மூலம் பொதுவறிவு பெறச்செய்தார்கள். இவர் மகாஜனக் கல்லூரி கனடா பழைய மாணவர் சங்கத் தலைவராகவும், அதன்பின் போஷகராகவும் கடமையாற்றினார். திறமைக்கு மதிப்புக் கொடுக்கும் இவர் தலைவராக இருந்தபோது, முதன் முறையாக முத்தமிழ் விழாவில் உரையாற்ற எனக்கு ஒரு சந்தர்ப்பத்தை ஏற்படுத்தித் தந்தது இப்பொழுதும் நினைவில் நிற்கின்றது. தமிழ் பரீட்சைக்கு எட்டாம் தரம் வரை வினாத்தாள்கள் தயாரிக்கும் பொறுப்பையும், விடைத்தாள்களைத் திருத்தும் பொறுப்பையும் எனது பொறுப்பில் ஒப்படைத்திருந்தார். இதைவிட இங்கே வெளியிட்ட ‘மகாஜனன்’ மலருக்கும், மகாஜனக்கல்லூரியின் 100வது ஆண்டு நினைவு மலருக்கும் பொறுப்பாசிரியர்களில் ஒருவராக என்னை நியமித்திருந்தார். மகாஜனன் 100 ஆண்டு மலரை மிகவும் சிறப்பாகக் கொண்டு வருவதற்கு இவரது பங்களிப்பும் மிக முக்கியமானதாகும். 100வது ஆண்டு நினைவு மலர் வெளியீட்டுரையை நிகழ்த்தும்படியும் அப்போது இவர் என்னைக் கேட்டிருந்தார்.

சைவமும், தமிழும் இரு கண்கள் என்பதற்கிணங்க சைவசமயத்தில் அதிக ஈடுபாடு கொண்டிருந்ததால், கனடாவில் சைவசமயத்தின் சிறப்புக்களை அடுத்த தலைமுறையினரிடம் கொண்டு செல்வதற்காக சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் ஸ்காபரோ பியர்சன் பாடசாலையில் வகுப்புக்களை நடத்தினார். அப்போது எனது பிள்ளைகளும் அதில் இணைந்து படித்தார்கள். அந்த முயற்சி சிறந்த பலனைத் தரவே கனடா இந்து மாமன்றத்தில் வாழ்நாள் செயலதிபராக இணைந்து பெரிய அளவில் பயிற்சிப் பட்டறைகளும், பரீட்சைகளும், போட்டிகளும் மாணவ, மாணவிகளுக்காக நிர்வாகக் குழுவின் மூலம் நடத்திப் பரிசுகளும், சான்றிதழ்களும் கொடுத்திருந்தனர். இந்தப் போட்டிகளின் போது, அவரது அழைப்பின் பேரில் பல தடவை நடுவராகக் கடமையாற்றும் பாக்கியம் எனக்கும் கிடைத்தது. நான் ஒன்ராறியோ தமிழ் ஆசிரியர் சங்கத் தலைவராக இருந்தபோது, நாங்களும் தமிழ் மாணவர்களுக்காகத் தமிழ் மொழிப்பரீட்சையை வருடந்தோறும் நடத்தியிருந்தோம். அப்பொழுதெல்லாம் பலவகையிலும் எங்களுக்கு அவர் உதவியாகச் செயற்பட்டார்.

தாயகத்தில் மகாஜனக் கல்லூரியின் வளர்ச்சியில் பெரும் பங்காற்றினார். யுத்தம் காரணமாகப் பல இடங்களுக்கு இடம் பெயர்ந்த மகாஜனக் கல்லூரியை மீண்டும் பழைய இடத்திற்குக் கொண்டுவந்து செயற்பட வைப்பதற்கும், கட்டிடங்கள், வகுப்பறைகளை திருத்துவதற்கான நிதி உதவிகளைப் பழையமாணவர் சங்கத்தினூடாகச் செய்யவும், நூலகத்தை புதுப்பிக்கவும் முன்னின்று உழைத்தவர்களில் இவரும் ஒருவர். நன்றிக்கடனாக மகாஜனக் கல்லூரி சமூகத்தினர் அவரை அழைத்து தகுந்த முறையில் கௌரவித்திருந்தனர்.

அவரது பிரிவு தமிழ் சமூகத்திற்கு ஏற்பட்ட பெரியதொரு இழப்பாகும். அவரது பிரிவுத் துயரை அவரது குடும்பத்தினர், உற்றார், உறவினர், நண்பர்களுடன் நாங்களும் இணைந்து பகிர்ந்து கொண்டு, அவரது ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டிப் பிரார்த்திக்கின்றோம். ஓம் சாந்தி!

குரு அரவிந்தன்.
மகாஜனக் கல்லூரி பழைய மாணவன்.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.