குரு அரவிந்தன்ஊர்விட்டு ஊர் வந்தகதையை கதாபாத்திரம் சொல்லும்போது, இதே போலத்தான் ஈழத்தமிழர்களும் இராணுவ ஆக்கரமிப்பில் இருந்து தப்பிப் பிழைபதற்காக, சொந்த மண்ணைவிட்டு அல்லற்பட்டு வன்னி மண்ணுக்குப் புலம் பெயர்ந்து சென்ற ஞாபகம் நெஞ்சில் முட்டிக்கனக்கிறது.

ஊர் அழிஞ்சுபோச்சு, வீடு வாசல் இல்லை, மாடு கன்டு இல்ல, குடி தண்ணிக் கெணத்தில பச்சநாவியக் கலந்துட்டுப் போயிட்டாங்க பாவிக. ஒரு ஈகாக்கா குருவி இல்ல, ஊரு காலியாயிருச்சு! என்று ஆசிரியர் வேதனையோடு குறிப்பிடுகின்றார்.

தமிழீழ மண்ணில் நடந்தது, இன்று நடப்பது இதைவிடக் கேவலமானது. ஊரையே விமானத் திலிருந்து குண்டு போட்டுச் சீரழித்தது மட்டுமல்ல, தமிழ்ப்பெண்களைக் கற்பழித்து, மானபங்கப்படுத்தி, பச்சைப்பாலகர் களையும், இளைஞர்களையும் குத்தியும் வெட்டியும் கொன்று குவித்த அரச பயங்கரவாதத்தின் கண்ணீர்க்கதை சொல்லிமாளாது. எத்தனை தலைமுறைபோனாலும் மறக்கமுடியாதது!

சரித்திரம் மறந்தாலும், ஒவ்வொரு தமிழனின் நெஞ்சமும் மறக்காது!

‘அய்யா நாங்க பொன்ன எழப்போம், பொருளை எழப்போம், மண்ண எழப் போம், மானத்தை எழக்கமாட்டோம், போயிட்டுவாங்க’ என்று பெண்ணாசையால் வீடுதேடிவந்த சமீந்தாரைப் பார்த்துக் கதிகலங்கிச் சொல்கிறார் ஒரு பெண்ணைப் பெற்ற தந்தை.‘பெண்ணை தூக்கிக் கொடுக்கிறியா? தூக்கிட்டுப் போகவா?’ பெண்ணாசை அவன் கண்ணை மறைக்க தந்தையை மிரட்டுகின்றான்.

பெண்ணைத் தொடப்போனவனின் கை,அண்ணனால் துண்டாடப்படுகிறது. அப்புறம் என்ன? தெரிந்ததுதானே!

‘நடுச்சாமத்திலே ஊரே தீப்புடிச்சு எரியுது. வைக்கப்படப்புக்கு வச்சதீயி கூரகூரைக்குத்தவ்வுது, ஆடுமாடுக கத்துது. பொண்டு பொடுசுக அலறுது.

அவன் பொண்ட புள்ளயக் காப்பாத் துவானா..? காயம்புத்தேவனுக்கு கைகுடுப்பானா? சக்தியுள்ள மட்டும் சண்டை போடுறாங்க. தாக்குப்புடிக்க முடியல. பெண்ணைக் கூட்டிக்கிட்டு அண்ணன் காரங்க தப்பி ஓடுறாங்க!’

தமிழீழத்திலும் இதுதான் நடக்கிறது. ஆக்கிரமிப்பாளன் வீடு புகுந்து தாய்க்குலத்தில் கைவைக்கிறான். தாய்க்குலத்தை மதிப்பவன் தமிழன். பெண்ணிலே கைவைத்தால் தமிழன் பொங்கி எழுவான் என்பது எதிராளிக்குத் தெரியம். எதிராளி எதிர்பார்ப்பதும் அதைத்தான். சமாதானத்தை சாக்காக வைத்து, ஜனநாயகப் போர்வைக்குள் ஊரையே அழித்திடலாம்  என்று நினைத்தான்.

சாவுக்குள் தமது வாழ்வை விதைத்துவிட்ட போராளிகளின் கைகளுக்கு ‘சமாதானம்’ என்ற விலங்கைப் போட்டுவிட்டு, தமிழ் மக்களை இவர்கள் பாதுகாக்கிறார்களாம். ஆடு நனைகிறது என்று ஓநாய் அழுதகதை!

உன்னுடைய தாயை, உன்னுடைய சகோதரியை, உன்னுடைய மகளை உனக்குமுன்னால் வைத்து மானபங்கப்படுத்தினால் உன்னுடைய மனநிலை எப்படி இருக்கும்? சிந்தித்துப்பார்! அந்த மனநிலையில் தான் இன்று ஒவ்வொரு தமிழனும் இருக்கின்றான்.

கனடியக் கவிஞர் ‘பவித்திரா’ அவர்கள் மனம்வெந்து எழுதிய கவிதையின் சில வரிகளைபாருங்கள்:

‘தொலைந்து போதலும் சூட்டிற்கிரை யாதலும்
சுற்றி வளைப்பினிலே மானமி ழத்தலும்
அலைந்து திரிதலும் அடியுதையில் அழிதலும்
ஆதர வின்றிச் சிறைதனில் மடிதலும்’

இன்று ஈழத்தமிழனின் சோகக் கதையாய்ப் போய்விட்டது.

எதிராளி நினைத்தது எதுவுமே நடக்கவில்லை. அவனது ஆத்திரத்தினால், ஒவ்வொரு தமிழனும் ஏதோ ஒரு விதத்தில் பழிவாங்கப் பட்டிருக்கிறான். தமிழன் கடந்தகால அனுபவங்களில் இருந்து நிறையவே கற்றிருக்கிறான். ஒற்றுமையின் அவசியத்தைப் புரிந்து கொண்டி ருக்கிறான். எங்கே அணைக்க வேண்டுமோ அங்கே அணைத்துக் கொண்டான், எங்கே அடிக்க வேண்டுமோ அங்கே அடித்துக் கொண்டான்!

தமிழீழமண்ணில் விருந்தாளியாய் வந்தால் வரவேற்போம், வீம்பிற்கு வந்தால் விடமாட்டோம் என்பதை செய்கையிலும் காட்டத்தொடங்கி விட்டார்கள் பொதுமக்கள்! வெகுஜனம் பொங்கி எழுந்து பேரெழுச்சி கொண்டால் என்ன நடக்கும் என்பதை ஆக்கிரமிப்பாளர்கள் தெரிந்து கொள்ளவில்லை. உலகசரித்திரம், வரலாறு தெரிந்தவன் நிச்சயம் புரிந்து கொள்வான்!

‘உழுக நெலமில்ல.. ஒக்கார இடமில்ல, கஞ்சிகாச்சக் காசில்ல.. காச்சி ஊத்தப் பெண்டாட்டியில்ல..! என்று ஒரு கதாபாத்திரம் குறை கூறும்போது யுத்தத்தினாலும், ஆழிப்பேரலையாலும் உறவிழந்து, வீடிழந்து, தொழில் இழந்து பாதிக்கப்பட்ட குடும்பங்கள்தான் கண் முன்னால் நிற்கின்றன. மனிதாபிமானம் அற்றவர்களிடம் இதை எல்லாம் சொல்லி அழுவதில் எந்தப் பலனும் இல்லை. பேரினவாதிகள் எதற்கெடுத்தாலும் மனித அபிமானம் அற்ற முறையில் பயங்கரவாத முத்திரை குத்துகிறார்கள், அதை சர்வதேசமும் நம்பவேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். ஆங்கில மொழியில், அல்லது பிற மொழியில் திறமை மிக்க ஒவ்வொரு தமிழனும் உண்மை நிலையை ஊடகங்களக்கூடாக சர்வதேசத்திற்கும் எடுத்துச் சொல்ல வேண்டும். எது உண்மை, எது பொய் என்பதை சர்வதேசம் புரிந்து கொள்ள வேண்டும். பொய்யும், பிரட்டும், பித்தலாட்டமும் அதிக நாட்கள் நிலைக்காது. தர்மம் எங்கள் பக்கம் இருப்பதால் தமிழ் மக்களுக்கு நிச்சயம் நீதி கிடைக்கும் என்பதை ஒவ்வொரு மானமுள்ள தமிழனும் உணர்ந்து செயற்பட வேண்டும். இந்தச் சந்தர்ப்பத்தைவிட்டால் இனி எப்பொழுதுமே தமிழர்களுக்கு இப்படி ஒரு சாதகமான சூழ்நிலை உருவாகமாட்டாது.

பனைமரம் வச்சவன் பார்த்துக்கிட்டே சாவானாம், தென்னைமரம் வச்சவன் தின்னுட்டுச் சாவானாம்.. என்று இரண்டு மரங்களின் ஆயுளையும் ஒப்பிட்டுப் பார்க்கிறார் ஆசிரியர். தமிழீழத்தைப் பொறத்தவரை பனை மரங்கள் கூட்டமாக வளர்ந்திருக்கும் இடத்தை பனந்தோப்பு என்று சொல்லுவார்கள். பனங்காட்டுநரி சலசலப்புக்கு அஞ்சாது என்று ஊரிலே சொல்வார்கள். பனைமரம் ஒரு கற்பகவிருட்சம். வானளாவி நிற்கும் இந்தமரத்தின் ஒவ்வொரு பகுதியும் பாவனைக்குரியது. இன்று தமிழீழ மண்ணிலே ஒரு போராளிபோல, நிமிர்ந்து நின்று ஷெல்வீச்சிலிருந்து தமிழ்மக்களைப் பாதுகாக்க தன்னைத்தானே பலி கொடுக்கிறது. விமானத்தில் இருந்து குண்டு வீசித் தமிழர்களை அழிக்கமுயற்சிக்கும்போது, அவர்கள் பாதுகாப்பாக ஓடி ஒளிந்திருப்பதற்கு வேண்டிய பங்கர் என்ற சொல்லப்படும் பாதுகாப்பு நிலஅறை செய்யவதற்கு பனைமரம் நிறையவே பாவிக்கப்படுகின்றது.  இதைவிட பனைமரம் வீடுகட்ட, கிணற்றிற்கு துலாபோட உதவுகிறது.

ஓலை வீட்டுக்கூரைபோடவும், கால்நடைகளுக்கு உணவாகவும், வேலி அடைக்கவும், விறகாகவும், பாய், கடகம், பெட்டி, போன்றன செய்வதற்கும், நுங்கு, பனம்பழம், பனங்கிழங்கு, ஒடியல். கள்ளு, பதனீர், கருப்பட்டி, பனங்கற்கண்டு, பனாட்டு போன்ற உணவு வகைகளை எடுப்பதற்கும் பனைமரம் பயன்படுகின்றது.

பனை மரத்தைப்போலவே தென்னைமரமும் முக்கியமான ஒரு மரமாக தமிழீழ மக்களால் போற்றப்படுகின்றது. தென்னை மரமும் வீடுகட்ட, துலாபோட, பாவிக்கப்படுகின்றது. பனைமரத்திற்கு நீர்பாய்ச்சத் தேவை யில்லை.ஆனால் தென்னைமரம் அதிகபலனைத் தரவேண்டுமானால் அதற்கு நீர்பாய்ச்சவேண்டும். தென்னோலை வீட்டுக்கூரை போடவும், கால் நடைகளுக்குஉணவாகவும், கிடுகுவேலியடைக்கவும், துடைப்பம் செய்யவும் உதவுகிறது. பதனீர் மதுபானம் செய்யவும், இளநீர், தேங்காய், தேங்காய்எண்ணெய்,சிரட்டைக்கரி,கயிறு போன்றன செய்யவும் உதவுகின்றது.

‘ஒரு ஒத்தமாட்டு வில்வண்டி சல்சல்சல்ன்னு சத்தம் போட்டுக்கிட்டு வந்து கிட்டிருக்கு’வண்டியில் வந்தவர் வீடுவிசாரிக்க,‘அந்தா.. அந்த வேப்பமரத்து வீடு’ என்று யாரோஅடையாளம் காட்டுகிறார்கள். ஒற்றைமாட்டு வண்டியை தாய்மண்ணில் இப்போதெல்லாம் காண்பதே மிகவும் அருமை. எனது தாத்தாவிடமும் ஒற்றைமாட்டு வில்வண்டிஇருந்ததாம். இங்கே வீதியில் ‘லெமொஸினை’பார்க்கும்போதெல்லாம்,சின்னவயதில் சில்லாலையில் இருந்து ஒரு ஆயுள்வேத வைத்தியரும், ஊரெழுவில் இருந்து உறவினர் ஒருவரும் சல்சல்சத்தத்தோடு ஒற்றைமாட்டு வில்வண்டியில் எங்கள் ஊருக்கு வந்துபோகும் ஞாபகம் என் மனதில் நிழலாடும்.

 


கள்ளிக்காடும் கண்ணீர்நாடும் - 4

தமிழீழத்தில் அனேகமான ஒவ்வொரு வீட்டுக் காணியிலும் வேப்பமரங்கள் நிற்பதைக் காணமுடியும். வேப்பங்காற்று மிகவும் ஆரோக்கியமானது மட்டுமல்ல, வேப்பமிலை கால்நடைகளுக்கு உணவாகவும், வேப்பம்பூ வடகம் செய்யவும், வேப்பம்விதை நுளம்புக் கடியில் இருந்து பாதுகாக்கவும் உதவுகின்றது. விடுமுறை நாட்களில் இந்த வேப்பமர நிழலில், பிரம்பு நாரினால் பின்னப்பட்ட சாய்மனைநாற்காலியில் அந்தவீட்டுத் தலைவர் சாய்ந்து படுத்து ஓய்வெடுத்துக் கொண்டிருப்பதையும், சில சமயங்களில் அவரைச் சுற்றிக் குடும்ப அங்கத்தினர் உட்கார்ந்திருப்பதையுத் அனேகமாகக் காணமுடியும். வீட்டிற்கு வருபவர்கள் முதலில் அவரிடம் நலன் விசாரித்து விட்டுத்தான் உள்ளே செல்வார்கள்.

அங்கே வேப்பமரத்தை அடையாளம் சொன்னதுபோல, வில்லவராயமுதலியார் வீட்டிற்கு வழி கேட்டபோது கவிதையில், பொன்பூச் சொரியும் பொலிந்த செழும் தாதிறைக்கும் கொன்றைமரத்தைச் சொல்லி அடையாளம் சொன்ன ஈழத்து சின்னத்தம்பி புலவரின் சிறுவயதுப் பாடல் ஒன்று ஞாபகம் வருகிறது.

பொன்பூச் சொரியும் பொலிந்தசெழுந் தாதிறைக்கும்
நன்பூ தலத்தோர்க்கு நன்னிழலாம் - மின்பிரபை
வீசுபுகழ் நல்லூரான் வில்லவ ராயன்றன்
வாசலிடைக் கொன்றை மரம்.

மஞ்சள் நிறமான பூக்களைச் சொரியும் இந்த கொன்றைமரத்தின் காய்கள் முருக்கங்காய் போல நீண்டதாக இருக்கும்.

‘நல்லது கெட்டதுக்கெல்லாம் நான் இருக்கேன்னு சொன்ன ஆளு போயிட்டாரு. இனிமே எனக்கொரு தெம்பு தெறம் சொல்ல ஆளிருக்கா?’

நல்ல நண்பனாய், வழிகாட்டியாய் இருந்தவரைச் சடுதியாகப் பிரிந்த வேதனையில் வேட்டியிலே கண்ணைத் தொடச்சிக்கிட்டாரு பேயத்தேவரு. என்று ஆசிரியர் குறிப்பிடுகின்றார்.

தமிழீழத்திலும் நல்லது கெட்டதுக்கெல்லாம் நான் இருக்கேன் என்று துணிந்து ஐனநாயகவழியில் அரசியலில் இறங்கி, முன்னுக்கு நின்று தமிழ் மக்களுக்காக உழைத்தவர்கள் எல்லாம் கூலிப் படைகளால் பலிஎடுக்கப்பட்டு விட்டார்கள். தமிழீழ மண்ணைத் தோண்டினால் எங்கும் குருதிப்பூக்கள்.

சட்டம்போட்டு மிருகபலியை நிறுத்திவிட்டார்களே என்ற கோபத்தினால்தான் அவர்கள் இன்று தேடித்தேடி நரபலி எடுக்கிறார்களோ தெரியவில்லை!

வடக்குக் கிழக்கு மாகாணத்தில் இராணுவக் கெடுபிடிகளால் குடும்பத்தோடு வெளியேறும் மக்களின் அவலநிலையை சற்று எண்ணிப்பாருங்கள். இந்த வேதனையைத்தான் தமிழீழமக்களும் உயிரிழப்புகளோடு அனுபவிக்கிறார்கள்.

தென்னம்பிள்ளையைக் கட்டிக்கிட்டு நெத்திய மரத்தில முட்டி முட்டி அழுதார் பேயத்தேவர். சின்ன வயசுல பீப்பீசெஞ்சு ஊத எல குடுத்த பூவரசு மரத்தத் தடவித்தடவி அண்ணாந்து பாத்து அழுதாரு பேயத்தேவர். கத்தாழங்காடே போயிட்டு வாரோம்! கள்ளிச் செடிகளா போயிட்டுவாரோம்! காடைகது வாலிகளா போயிட்டு வாரோம்! கம்மாக்கரையே போயிட்டுவாரோம்!

கரிசத்தரிசே போயிட்டுவாரோம்! சொந்தவீடே போயிட்டு வரோம்! சுடுகாடே போயிட்டுவாரோம்!– மனசுக்குள்ளே சொல்லி வாய்க்குள்ளேளே அழுதவருக்கு, கடைசியில ஞாபகம் வருது, போயிட்டு எங்க வாரது? போறோம்! ஆண்டாண்டு காலமாய் ஆண்டு அனுபவிச்ச அந்தப் பூமியைவிட்டுப் பிரியும் நேரம் வந்தபோது  அந்தக் கதாபாத்திரம் அழுவதைக் கவிப்பேரரசு இப்படி வர்ணிக்கிறார்.

‘வம்சம் வளத்தமண்ணு வகுத்துப்பசி தீத்தமண்ணு-இது
இல்லேன்னு போகுமுன்னே என்னுசுரு போனாலென்ன?’

தமிழீழத்தில் சொந்த மண்ணைவிட்டு ஏதிலியாய் பிரிந்தபோது, எங்கள் மதிப்புக்குரிய இளவாலை அமுது அவர்களின் மனநிலையைப் பாருங்கள்:

‘அடுப்புகள் அணைந்து கிடக்கக் கூரைகள் எரிந்து கொண்டிருந்தன.

காவல் நிலையங்கள் கற்பழிப்பு மையமாகி பயிரைமேயும் பாவவேலிகளாகின. தேசியக்கொடி கந்தல் கந்தலாகக் கிழிந்து என் அந்தர ஆத்மாவில் தொங்கியது. தேசியப்பாடல் அடி வயிற்றில் குமட்டியது. இழவு வீடாக ஈழம் மாறியது. அவலக் குரல் கேளாத வீடுகள் இல்லை. உண்மைகள் உலகில் பரம்பாமல் மறைக்கப்பட்டன. தாயகம் நெருப்பு நீரில் நீந்தியது. மரங்கள் எல்லாம் அசையாமல் நின்று துயரத்தோடு எங்களை உற்றுப் பார்த்தன.

பிரியும் கடைசி நேரத்தில் வீட்டின் புறங்கையைத் தொட்டு முத்தமிட்டேன். மனைவிக்குத் தெரியாமல் கண்களை மெல்லத் துடைத்துக் கொண்டேன். அரும்பாடுபட்டு யானும் என் மனைவியும் அந்த வீட்டைக் கட்டினோம். ஒரு கல்லைப் புரட்டி எடுத்தாலும் அது எங்கள் பெயரைச் சொல்லிப் பெருமூச்சுவிடும்! என்று அவர் பிரிவுத்துயரம் தாங்கமுடியாமல் மிகுந்த வேதனையோடு குமுறுகின்றார்.

‘கடைசியாச் சொல்றேன், காலி பண்ணிருங்க இல்லேன்னா காலி பண்ண வப்போம்!’ திருகோணமலை பகுதியில் பரம்பரை பரம்பரையாய் வாழ்ந்து வந்த தமிழ்மக்களைத் தினமும் துப்பாக்கி முனையில் ஊர்காவற்படையும் இராணுவமும் மிரட்டிவெளியேற்றிக் கொண்டிருப்பதுபோல அங்கேயும் அரச

உத்தியோகத்தர் தாசில்தார் குடி மக்களை மிரட்டுகின்றார்.

ஊரே வெறிச்சுன்னு போச்சு. காக்கா குருவி மட்டும் சொந்தக்காரகளக் காணோமேன்னு அங்கிட்டும் இங்கிட்டுமாப் பறந்து பறந்து அலையுதுக. பேயத்தேவரு கம்பங்காட்டப் பாக்குறாரு, பூமியப்பாக்குறாரு, அழுதகண்ணோட தலயத் தூக்கி ஆகாயம் பாக்குறாரு. ஊச்சக்குரல்ல ஒப்புச்சொல்லி அவரா அழுதுபாடுறாரு:

‘நாலுபோகம் வெளைஞ்சகாடு நாளைக்கு என்னதில்ல
நெஞ்சமுட்டும் கண்ணீரு நில்லுன்னா நிக்குதில்லை
புடிச்சுவச்ச என்னுசுரு போ ன்னாப் போகுதில்ல.’

ஆகாயத்தையும் பூமியையும் அவரு கையைடுத்துக் கும்பிட்டு ரெண்டு
கையாலும் அகலமா விரிச்சு, தங்கத்தூளா நெனச்சு மண்ணை அள்ளி

மடியேந்தி நின்னவுகளுக்கெல்லாம் போட்டாரு. மண்ணவிடமாட்டேன் என்றுகடைசிவரைக்கும் கருமாயப்பட்ட ஆள, கடைசியாமண்ணு விடல.

 

ஒரு மகாமனுசனக் கொன்டுபுட்டமேன்னு ஒரு நிமிசம்கூட மவுனம் காக்காம அதுபாட்டுக்குப் பேசிக்கிட்டேயிருந்துச்சு அல.

உண்மைதான், தமிழீழமண்ணைக் காத்துநின்ற இப்படி எத்தனை மகாமனிதர்களை வங்கக்கடல் பலி எடுத்திருக்கிறது. அந்த மகாமனிதர்களிள் அருமை ஆரவாரிக்கும் கடலலைக்கோ, மனித நேயமற்றவர்களுக்கோ புரியாமல் இருக்கலாம், ஆனால் இதயமுள்ள ஒவ்வொரு தமிழனுக்கும் புரியும்! வானத்திலிருந்து ஒரு நட்சத்திரம் உதிர்ந்தாலும் மரத்திலிருந்து ஒரு பூ உதிர்ந்தாலும் இழப்பு இழப்புத்தான்!

இதிகாசம் எனில் இது நிச்சயமாய் நடந்தது என்று பொருள். 42 ஆண்டுகளாய் நெஞ்சில் தூக்கிச் சுமந்த துயரத்தை ஆனந்தவிகடனில் பவளவிழாவில் ‘கள்ளிக்காட்டு இதிகாசமாய்’ இறக்கி வைத்ததாக கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் குறிப்பிடுகிறார்கள். கடைசி அத்தியாயம் எழுதி முடித்த கனத்த மனதோடு, வைகை அணையின் மதகில் படுத்துப் புரண்டுகொண்டே இந்தப் படைப்புக்காகத்தான் காலம் எங்களைத் தண்ணீரில் அமிழ்த்துப் பிழிந்து தரையில் வீசியதோ என்று கடைவிழியில் நீரொழுக நீரொழுக நினைத்துக் கிடந்தேன் என்று ஆனந்தம் துக்கம் என்ற இரண்டுக்கும் மத்தியில் ஒரு மனநிலையோடு குறிப்பிடுகின்றார்.

சாராயம் காய்ச்சுவது முதல் சவரத் தொழில்வரை கேட்டு-பார்த்து-பேசி- பழகிப்-பயின்று கொண்டேன் என்று மேலும் குறிப்பிடும் கவிப்பேரரசு, இந்த இதிகாசத்தைத் தொடர்ந்து, இன்று ஆனந்தவிகடனில் ‘கருவாச்சிக் காவியம்’ படைத்துக் கொண்டிருக்கிறார். கவிப்பேரரசுவின் கவிதைநயம் மிக்க வார்த்தையாடல்கள், யதார்தமான வசனநடைகள், அடுத்து என்ன நடக்கும் என்ற திருப்பு முனைகள் வாசகர்களின் தொடர்ந்து படிக்கும் ஆவலைத் தூண்டுகிறது. இலக்கிய ஆர்வலர்கள் ஒவ்வொருவரும் படித்துப் பயன்பெறவேண்டிய இதிகாசமிது. கவிப்பேரரசு வைரமுத்துவின் இலக்கியப்பணி பாராட்டும், பலபரிசுகளும் பெற்று மேலும் சிறப்புற வாழ்த்துகின்றேன்.

இதே ஆர்வத்தோடு ஆனந்தவிகடனில் எங்கள் சரித்திரத்தைச் சொல்ல எனக்குச் சந்தர்பம் தந்தார் விகடன் அதிபர் பாலன் அவர்கள். உண்மைச் சம்பவமான 'நங்கூரி 'என்ற எனது கதை மூலம் எங்கள் வலிகளை விகடன் தீபாவளி மலரில் இலட்சக்கணக்கான வாசகர்களுக்கு எடுத்துச் சொல்ல முடிந்தது. இதோ போல கல்கி, கலைமகள், குமுதம், யுகமாயினி போன்ற தமிழக இதழ்களிலும் எடுத்துச் சொல்வதற்குச் சந்தர்பம் எனக்குக் கிடைத்தது.

என்றாவது ஒரு நாள் ஈழத்தமிழரின் கண்ணீர்கதையும் காவியமாகும், ஈழத்தமிழன் பூண்டோடு அழித்தொளிக்கப்பட்டாலும் அவனைப்பற்றி, நாளைய சரித்திரம் சொல்லும்! அப்பொழுதாவது மனித நேயம் மிக்கவர்கள் ஈழத்தமிழரின் நியாயமானபோராட்டத்தைப் பற்றிப் புரிந்து கொள்வார்கள் என்ற நம்பிக்கையோடு, 

அன்புடன் - குரு அரவிந்தன்.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.