- மார்க் ட்வைன் -

முனைவர் ஆர்.தாரணி

என் பால்ய ,பதின்ம வயதுகளில் மேனாட்டு நாவலாசிரியர்களின் நாவல்கள் பலவற்றின் தமிழ் மொழிபெயர்ப்புகளை நான் யாழ்ப்பாணப் பொதுசன நூலகத்திலிருந்து இரவல் பெற்று வாசித்துள்ளேன். அவற்றில் என்னை மிகவும் கவர்ந்த நாவல்களாக  மார்க் ட்வைனின் 'ஹக்கில்பெர்ரி ஃபின்னின்  சாகசங்கள்', ரொபேர்ட் லூயி ஸ்டீவன்சனின் 'புதையல் தீவு' என்பவற்றைக் குறிப்பிடுவேன். பின்னர் வளர்ந்ததும் ஹக்கில்பெர்ரி ஃபின்னின்  சாகசங்கள் நாவலின் ஆங்கில; நூலினையும் வாசித்துள்ளேன். அண்மையில் முனைவர் ர.தாரணி 'பதிவுகள்' இணைய இதழுக்கு மார்க் ட்வைனின் சிறுகதையொன்றினைத் தமிழாக்கம் செய்து அனுப்பியபோது அவர் தமிழாக்கம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது.  உடனேயே ஒரு யோசனையும் தோன்றியது. அவரிடம் ஏன் அவர் 'ஹக்கில்பெர்ரி ஃபின்னின்  சாகசங்கள்' நாவலைத் தமிழாக்கம் செய்யக்கூடாது என்று கேட்டிருந்தேன். அதற்கு அவர் உடனடியாகவே மகிழ்ச்சியுடன் சம்மதித்தார். உடனேயே அத்தியாயங்கள் சிலவற்றையும் தமிழில் எழுதி அனுப்பியிருந்தார். அவருக்குப் 'பதிவுகள்' சார்பில் நன்றி. இந்நாவல் இனி பதிவுகளில் தொடராக வெளிவரும். வாசித்து மகிழுங்கள். உங்கள் கருத்துகளையும் அறியத்தாருங்கள்.  - வ.ந.கிரிதரன், ஆசிரியர் 'பதிவுகள்'


அத்தியாயம் இருபத்தி மூன்று

மேடை அமைப்பதிலும், அதில் திரைச்சீலை கட்டிவிடுவதிலும், மேடையில் தோன்றும் நடிகர்களின் பாதங்களை முன்னிலைப்படுத்திக் காட்டும் விதமாக மெழுகுவர்த்திகள் வரிசையாக வைப்பதிலும் ராஜாவும் பிரபுவும் மிகுந்த ஆர்வம் காட்டி உழைத்தார்கள். அன்றிரவு அங்கு கண்மூடித் திறப்பதற்குள் ஆண்கள் கூட்டம் வந்து கூடிவிட்டது. அதற்குமேல் இனியும் அந்த இடம் கூட்டம் கொள்ளாது என்ற நிலைக்கு வந்தபின் பிரபு அனுமதிச் சீட்டு கொடுப்பதை நிறுத்தினார்.. பின்னர் பின்புறமாக வந்து மேடையின் மீது ஏறினார். மூடியிருந்த திரைச்சீலையின் பின் நின்று தங்களின் சோக காவியம் இதுவரை யாருமே கண்டிராத அளவு மிகவும் பரபரப்பாக இருக்கப் போகிறது என்று ஒரு சிறு உரை நிகழ்த்தினார். நாடகம் பற்றியும், அதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ள முதிய எட்மண்ட் கீன் பற்றியும் புகழ்ந்து அவர் சொல்லிக்கொண்டே போனார். கடைசியாக அனைவரது எதிர்பார்ப்பையும் போதுமான அளவு நன்கு தூண்டியபிறகு, திரைச்சீலையை உருட்டி மேலே உயர்த்தினார்.

அடுத்த நொடி நான்கு திசைகளிலும் திரும்பியவாறு துள்ளுநடை போட்டு ஆடையற்ற நிலையில் ராஜா மேடை மேல் தோன்றினார். அவரின் ஆடையற்ற உடல் முழுதும் வட்டங்கள், கோடுகள் என்ற வடிவங்கள் அனைத்து வண்ணங்களிலும் பூசப்பட்டு ஒரு வானவில்லைப் போன்று ஒளி வீசினார். அப்புறம் உடலின் மற்ற இடங்கள் பற்றி கவனிக்காதீர்கள். பார்க்கக் காட்டுத்தனமாகவும் வேடிக்கையாகவும் இருந்தது. ஆனாலும் அது சிரிப்பு மூட்டும் விதமாக இருந்தது.

பார்வையாளர்கள் விழுந்து விழுந்து சிரித்தார்கள். ராஜா தனது துள்ளல் நடையில் மேடையை ஒரு முறை சுற்றிவந்தபின், குதித்துக் கொண்டே ஒரு ஆட்டம் போட்டவாறு, அந்த மேடையின் பின்புறம் சென்றார். அவர் திரும்ப வந்த அதே போல் செய்யும் வரை, மக்கள் உரக்கச் சிரித்து. கூச்சல் ஒலியிட்டு, கைகளைத் தட்டி ஆரவாரம் செய்து அதை ரசித்தார்கள். அதே போன்று மீண்டும் செய்து காட்டச் சொல்லி விரும்பிக் கேட்டுப் பார்த்தார்கள். உண்மையாகச் சொல்லவேண்டுமென்றால், அந்த முதிய முட்டாள் செய்து காட்டிய விஷயங்களைப் பார்த்து மக்கள் தரையில் உருண்டு புரண்டு சிரித்தார்கள்.

 

பிறகு திரையை மூடியபடியே பிரபு மக்களிடம் தலை குனிந்து வணங்கினார். இரண்டு நாட்களுக்குப் பின் லண்டன் ட்ருயரி தெருவில் நடத்தப்படுவதற்காக அனுமதிச் சீட்டுகள் முன்பே விற்கப்பட்டுள்ள நிலையில், இந்த சோக காவியமானது இன்னும் இரண்டு தினங்களே இந்த இடத்தில் நடத்தப்படும் என்று அவர் கூறினார். மீண்டுமொருமுறை தலைவணங்கிவிட்டு இந்த நாடகம் அவர்களுக்கு மிகவும் பிடித்திருந்தால், இந்த நாடகத்தின் பெருமையை அவர்களின் நண்பர்களிடம் எடுத்துரைத்து அவர்களையும் இங்கே வந்து காணும்படி பரிந்துரைத்தால் தான் நன்றிக்கடன் பட்டவனாவேன் என்று பிரபு மேலும் அவர்களிடம் எடுத்துக் கூறினார்.

ஒரு இருபது மனிதர்கள் ஒன்றுகூடி கத்தினார்கள்.

"என்ன? முடிந்துவிட்டதா? அவ்வளவுதானா?"

ஆம் என்றுரைத்தார் பிரபு. அவ்வளவுதான். நரகம் நேரிலேயே வந்தது போல் ஆயிற்று. "ஏமாற்று வேலை" அனைவரும் கத்திக் கொண்டே மிகுந்த சீற்றத்துடன் மேடையில் உள்ள சோக காவிய நாயகர்களை நோக்கிப் பாய்ந்தார்கள். ஆனால், ஒரு நல்ல தோற்றமுடைய ஒரு பருத்த மனிதன் இருக்கையின் மீது ஏறி நின்றுகொண்டு கத்தினான்:

"நிறுத்துங்கள். ஒரு வார்த்தை கூறுகிறேன் கேளுங்கள், அன்பர்களே!"

அனைவரும் நின்று நிதானித்து பின் அவன் சொல்வதைக் கேட்டார்கள்.

"நாம் அனைவரும் மோசமாக, மிக மோசமாக ஏமாற்றப்பட்டிருக்கிறோம். ஆனால், இந்த மொத்த ஊருக்கும் நாம் கேலிப்பொருளாக மாறிவிடக் கூடாது. மாறவேண்டுமா, என்ன? இனி இது பற்றி நம் வாழ்நாளின் கடைசிவரை எதுவுமே பேசிக் கொள்ளக் கூடாது. இல்லை. இங்கிருந்து நாம் அமைதியாகச் சென்று இந்த காட்சியைப் பற்றி மற்ற அனைவரிடமும் பெருமையாக எடுத்துக் கூறுவோம். நம் ஊரில் உள்ள அனைவரும் இந்தக் காட்சியை வந்து காணும்படி நாம் செய்வோம். பின்னர் நாம் அனைவரும் ஒரே நிலையில் ஏமாற்றப்பட்டவர்களாக இருப்போம். என்ன நான் சொல்வது? அறிவுப் பூர்வமாக உள்ளதா?”

("நீ சொல்வது சரியே. நீதிபதி சொல்லுதல் என்றுமே சரிதான்" அனைவரும் ஒன்றுகூடி ராகமிட்டார்கள்.)

"மிகவும் நல்லது. நாம் ஏமாற்றப்பட்டது பற்றி ஒரு வார்த்தை கூட வெளியே வரக் கூடாது. வீடு நோக்கிச் செல்லுங்கள். அனைவரிடமும் இங்கு வந்து இந்த சோக காவியத்தைக் காணச் சொல்லுங்கள்."

அடுத்த நாள் இந்த நாடகக் காட்சி எத்தனை சிறப்பாக இருந்தது என்பது பற்றியே ஊர் முழுதும் பேச்சு அடிபட்டது. அன்றிரவும் அரங்கு நிரம்பி வழிந்தது. மீண்டும் அனைவரையும் முதல் நாள் போன்றே நாங்கள் நன்கு ஏமாற்றினோம்.

ராஜா, பிரபு, நான் மூவரும் அன்று தோணிக்குத் திரும்பி வந்து உணவு உண்டோம். நள்ளிரவாகும் போது, ஜிம்மையையும், என்னையும் தோணியைக் கட்டவிழ்த்து நதியின் மத்திக்கு மிதக்க வைக்கச் சொன்னார்கள். அவ்வாறாக ஒரு இரண்டு மைல் தூரம் நதியின் கீழ்த்திசையில் மிதந்தபிறகு, தோணியை அங்கே மறைத்து வைத்தோம்.

மூன்றாம் நாளிரவும் மக்கள் கூட்டம் அந்த அரங்கில் அலைமோதியது. ஆனால் இந்த முறை புதிதாக வந்தவர்கள் யாருமில்லை. கடந்த இரண்டு நாட்கள் காட்சி பார்த்தவர்கள்தான் அங்கே வந்திருந்தார்கள். கதவருகே நின்றிருந்த பிரபுவின் பக்கத்தில் நான் நின்று கொண்டேன். உள்ளே நுழைந்த ஒவ்வொரு மனிதனின் சட்டைப்பையும் மிகவும் பருத்துக் காணப்பட்டது. அவர்கள் தங்கள் மேல்சட்டைக்குள் ஏதோ ஒன்று திணித்திருப்பது நன்கு தெரிந்தது. கண்டிப்பாக வாசனைத் திரவியமோ அல்லது வேறு ஏதோ நல்ல விஷயமோ அல்ல என்று மட்டும் தோன்றியது.

அழுகிய முட்டை, முட்டைகோசு மற்றும் அது போன்ற பொருட்களின் நெடி என் நாசியில் புகுந்தது. இன்னும் இறந்து போன பூனையின் வாசம் கூட இருந்திருக்கலாமோ என்னவோ, எனக்குச் சரியாகத் தெரியவில்லை. அங்கே அறுபத்தி நாலு ஆண்கள் அந்த இரவில் இருந்தனர். தள்ளிக்கொண்டு உள்ளே செல்ல ஒரு நிமிடம் நான் யோசித்தேன் ஆயினும் அது எனக்கு ஆபத்து என்று தோன்றியது. என்னால் அதைத் தாங்க முடியாது என்று தோன்றியது. அந்த அரங்கு நிரம்பி மேலும் மக்களுக்கு அங்கே இடம் இல்லாததால், ஒரு மனிதனிடம் ஒரு காலணா கொடுத்த பிரபு, அவனைக் கதவருகே நின்று அனுமதிச் சீட்டு விற்கச் சொல்லிவிட்டு, மேடையை நோக்கிச் சென்றார். நானும் அவரைப் பின்தொடர்ந்தேன்.

நாங்கள் மேடையின் இருட்டு மூலையை அடைந்ததும் அவர் சொன்னார்:

"உடனடியாக இந்த அரங்கை விட்டு வேகமாக நகர்ந்து, நமது தோணியை நோக்கிக் காற்றைப்போல் விரைந்தோடு."

நான் அப்படியே செய்தேன். அவரும் அவ்வாறே ஓடினார். இருவரும் ஒரே நேரத்தில் ஓடித் தோணியை அடைந்தோம். அடுத்த இரண்டு நொடிகளில் நாங்கள் நதியின் கீழ்த்திசையில் சரிந்து மிதந்துகொண்டிருந்தோம். நதியின் மத்திய பகுதியை நாங்கள் தொடும்போது அந்த இடம் இருட்டாகவும், அமைதியாகவும் இருந்தது. யாரும் ஒரு வார்த்தை கூட பேசவில்லை. பாவம் அந்த ராஜா இந்நேரம் அந்தப் பார்வையாளர்களிடையே சிக்கிப் படாதபாடு பட்டுக் கொண்டிருப்பார் என்று கற்பனை செய்தேன்.

ஆனால் என் கற்பனையைப் பொய் என்று நிரூபிக்கும் விதமாக வெகு சீக்கிரமே அவர் எங்களின் தோணியின் கூம்பு வடிவக் குடிலுக்குள் இருந்து மெதுவாக வெளியே நகர்ந்து வந்து கூறினார்:

"இன்று உனது மோசடி எப்படி வேலை செய்தது, பிரபு?"

அப்படியென்றால் அவர் இன்று ஊருக்குள் வரவே இல்லை போலத் தெரிகிறதே!

அந்த ஊரின் கீழ்ப்பக்கமாக இன்னும் பத்து மைல் தொலைவு நாங்கள் சென்று சேரும் வரை தோணியில் விளக்கை ஏற்றவில்லை. பிறகு விளக்கை ஏற்றி வைத்து விட்டு, இரவு உணவு உண்டோம். பின்னர் ராஜாவும், பிரபுவும் தாங்கள் மக்களை ஏமாற்றிய விதத்தை நினைத்து வயிறு வலிக்க சிரித்தார்கள்.

"வடிகட்டின முட்டாள்கள். முதல் நாள் வந்த பார்வையாளர்கள் அமைதியாக இருந்து அடுத்தவர்களை வரவழைப்பார்கள் என்று எனக்கு முன்னமே தெரியும். அதே போல் மூன்றாம் நாளிரவு அனைவரும் ஒன்று சேர்ந்து அதுதான் சந்தர்ப்பம் என்று நினைத்து நமக்கு ஆப்பு வைப்பார்கள் என்பதும் எனக்கு நன்றாகவே தெரியும். நல்லது. இது அவர்களின் சந்தர்ப்பம்தான். அவர்கள் எவ்வளவு எடுத்துக் கொள்கிறார்கள் என்று அறிய நான் அவர்களுக்கு ஒரு சந்தர்ப்பம் கொடுத்தேன். அந்தச் சந்தர்ப்பத்தை அவர்கள் எவ்வாறு பயன்படுத்துகிறார்கள் என்று பார்க்க இப்போது நான் அங்கே இருந்திருக்க வேண்டும். அவர்கள் கையில் அதிக அளவில் அழுகிப் போன உணவுப் பொருட்கள் நிறைய இருப்பதால், கண்டிப்பாக அவர்கள் இப்போது அதை ஒரு சுற்றுலாவாகக் கொண்டாடி இருப்பார்கள் என்று நினைக்கிறேன்" என்று அந்த பிரபு சிரித்தவாறு கூறினார்.

அந்த மூன்று இரவுகளில் அந்த மோசக்காரர்கள் சம்பாதித்தது நானூற்றி அறுபத்தி ஐந்து டாலர்கள். இந்த அளவு மோசடி செய்து வண்டி வண்டியாகப் பணம் அள்ளியதை என் வாழ்வில் நான் கண்டதேயில்லை. வெகு சீக்கிரமே அவர்கள் குறட்டை விட்டுத் தூங்க ஆரம்பித்ததும், ஜிம் சொன்னான்:

" அந்த ராஜா மற்றும் பிரபு ஆகியவர்கள் நடந்து கொள்ளும் முறை உன்னை வியக்க வைக்கவில்லையா, ஹக்?"

"இல்லை" நான் கூறினேன் "வியப்பிலாழ்த்தவில்லை."

"ஏன் இல்லை, ஹக்?"

"நல்லது. ஏனென்றால். அவர்கள் அப்படி நடக்கவே அவ்வாறு பிறந்திருக்கிறார்கள். எல்லா அரச குடும்பத்தாரும் அப்படிதான் என்று நான் எண்ணுகிறேன்."

"ஆனால், ஹக்! நம்முடைய அரச குடும்ப ராஜாக்கள் உண்மையான போக்கிரிகள். அவர்கள் அப்படித்தான் என்றுமே போக்கிரிகள்."

"நல்லது. அதைத்தான் நானும் கூறுகிறேன். - அனைத்து ராஜாக்களுமே எனக்குத் தெரிந்தவரையில் போக்கிரிகள்தான்."

"அப்படியா?"

"நேரம் கிடைக்கும்போது அவர்களைப் பற்றி படித்துப்பாரு. உனக்கே புரியும். எட்டாம் ஹென்றியை எடுத்துக் கொள். அவரை ஒரு ஞாயிற்றுக்கிழமை பள்ளி ஆசிரியருடன் ஒப்பிடலாம். இல்லாவிடில், இரண்டாம் சார்லஸ், பதினாலாம் லூயி, இரண்டாம் ஜேம்ஸ், இரண்டாம் எட்வர்ட், மூன்றாம் ரிச்சர்ட் இன்னும் இது போன்ற நாப்பது ராஜாக்களை எடுத்துப் பார். அத்துடன் அனைத்து சாக்ஸோன் ராஜாக்களும் பழைய காலத்தில் நரகத்தை மக்களுக்குக் காட்டியிருந்திருக்கிறார்கள். ஏன், எட்டாம் ஹென்றியின் இளமைக் காலத்தை நீ பார்க்க வேண்டும். அவர் வேற லெவல்தான். ஒவ்வொரு நாளும் ஒரு புதுப் பெண்ணை மணந்து அடுத்த நாள் காலையிலேயே அவள் தலையையும் கொய்திருக்கிறார். அதில் மட்டும் எந்த பாரபட்சமும் காட்டாது ஏதோ முட்டைகளை உடைக்க ஆணையிடுவது போல வெகு சாதாரணமாகச் செய்திருக்கிறார்.”

"நெல் குவெய்ன் என்பவளைக் கூட்டி வாருங்கள்" என்று ஆணையிடுவார். அவர்களும் அவளைக் கூட்டி வருவார்கள். அடுத்த நாள் காலை "அவள் தலையைக் கொய்து விடுங்கள்" என்பார். அதையும் செய்து முடிப்பார்கள். "ஜென் ஷோர் என்பவளைக் கூட்டி வாருங்கள்" என்று ஆணையிடுவார். அவளும் வருவாள். அடுத்த நாள் காலை "அவள் தலையைக் கொய்து விடுங்கள்" என்பார். அவர்கள் செய்து முடிப்பார்கள். "அழகுமங்கை ரோசமம் எனக்கு வேண்டும்" என்பார். அழகு மங்கையும் வருவாள். அடுத்த நாள் காலை "அவள் தலையைக் கொய்து விடுங்கள்" என்பார்.”

“இவ்வாறாக ஒவ்வொரு பெண்ணையும் ஒவ்வொரு இரவுக்கும் ஒரு கதை சொல்ல வைத்து, அந்தக் கதைகளை ஆயிரத்தி ஒன்று என ஆகும் வரை சேர்த்து வைத்திருக்கிறார். பின்னர் அந்தக் கதைகள் அனைத்தையும் தொகுத்து "டூம்ஸ்டே புத்தகம் (தீர்ப்புநாள் புத்தகம்)" என்ற பெயரில் வெளியிட்டிருக்கிறார். தலை கொய்யப்பட்ட மனைவிகளுக்கு தகுந்தவாறே மிகவும் பொருத்தமான பெயர்தான் அந்த புத்தகத்திற்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது. உனக்கு ராஜாக்கள் பற்றி எதுவும் தெரியாது, ஜிம். ஆனால் எனக்குத் தெரியும்.”

“நம்முடைய இந்த பழைய போக்கிரி வரலாற்றில் பழக்கப்படுத்தப்பட்டுள்ள வீணர்களுள் ஒருவன். அவரது நாட்டில் எவ்வாறு ஹென்றி பிரச்னையை உண்டு பண்ணினார் என்று நீ நினைக்கிறாய்? அவர் என்ன செய்யப் போகிறார் என்று யாரிடமாவது அவர் சொன்னாரா? ஏதேனும் காட்சி போட்டுக் காண்பித்தாரா? இல்லை. யாரும் எதிர்பாராத சமயம் பாஸ்டன் துறைமுகத்தில் கப்பலில் இருந்த டீத்தூள் அனைத்தையும் கடலில் கொட்டி, சுத்தியலால் அடித்து சுதந்திரத்தைப் பிரகடனம் செய்து யாரும் எதிர்க்க துணியாதவாறு செய்து விட்டார்.”

“அதுவே அவருடைய பாணி. யாருக்கும் எந்த சந்தர்ப்பமும் கொடுக்க மாட்டார். அவரின் அப்பா வெலிங்டன் பிரபுவை சந்தேகப்பட்டார். எனவே என்ன செய்தார் தெரியுமா? அவரை வந்து சந்திக்கச் சொன்னாரா? இல்லை. அவரை ஒரு பூனையை அடைப்பது போல மதுப் பீப்பாயினுள் அடைத்து நீரில் மூழ்கடித்து விட்டார். அவர் இருக்கும் இடத்தில் யாரேனும் பணத்தைத் தவற விட்டால், அவர் என்ன செய்வார் தெரியுமா? அவர் அதை எடுத்துக் கொள்வார்.”

“ஏதேனும் வேலை செய்ய அவருக்குப் பணம் கொடுத்துவிட்டு அங்கேயே அமர்ந்து அவரைக் கண்காணிக்காவிடில் என்ன செய்வார் தெரியுமா? அதைச் செய்யாமல் டிமிக்கி கொடுத்துவிடுவார். அவர் தனது வாயைத் திறந்தால் என்ன நடக்கும் தெரியுமா? நீங்கள் வெகு வேகமாக அந்த வாயை மூடும் வரை ஒரே பொய்மழையாக நிற்காமல் கொட்டும். அப்படிப்பட்ட ஆள்தான் ஹென்றி. அவர் மட்டும் இங்குள்ள நமது ராஜாக்களுக்குப் பதிலாக இருந்திருந்தால், நம்முடையவர்கள் செய்ததை விட அதிகமான அளவில் அந்த ஊரை மோசடி செய்து ஏமாற்றியிருப்பார்.”

“நம்முடைய ஆட்கள் ஒன்றும் தெரியாத அப்படிப்பட்ட ஆட்டுக்குட்டிகள் என்று நான் சொல்ல வரவில்லை. அவர்களை அப்படி எடுத்துக் கொள்ளவும் முடியாது. ஆனால் கோரமான பழைய உண்மைகளைக் காணும்போது, நம்முடைய ராஜாக்கள் எட்டாம் ஹென்றியை விட மோசமானவர்கள் அல்ல என்று கூறலாம். மொத்தத்தில் ராஜாக்கள் ராஜாக்களாகத் தான் இருப்பார்கள். அவர்களைக் கொஞ்சம் நெகிழ விட்டுத்தான் பிடிக்கவேண்டும். ஆக மொத்தத்தில், அவர்கள் ஒரு முரட்டுக் கூட்டத்தைச் சேர்ந்தவர்கள்தான். அப்படிதான் அவர்கள் வளர்க்கப்பட்டுள்ளார்கள்.”

"ஆனால் இந்த ராஜா பிண நாற்றம் நாறுகிறாரே, ஹக்?"

"ஆம். அவர்கள் எல்லாருமே அப்படிதான், ஜிம்! அப்படி ராஜாக்கள் மேல் அடிக்கும் மோசமான வாடையை நாம் மாற்றிவிடமுடியாது. வரலாறு அது பற்றி எல்லாம் கூறியதில்லை."

"சில வழிகளில் இந்தப் பிரபு அவ்வளவு கெட்டவர் இல்லை."

"ஆம். பிரபு கொஞ்சம் வித்தியாசமானவர். ஆனால் முற்றிலும் மாறுபட்டவர் அல்ல. அவர் ஒரு கரடுமுரடான பிரபு. நன்கு போதையில் இருக்கும்போது அவருக்கும் அந்த ராஜாவுக்கும் வேறுபாடு தெரிவதில்லை."

"நல்லது. எப்படியிருந்தாலும், இது போன்ற ராஜாக்கள், பிரபுக்கள் நான் பார்க்க ஆவல் கொள்ளவில்லை, ஹக்! இவர்களைப் பொறுத்துக் கொள்வதே போதும்."

"நானும் அப்படிதான் உணர்கிறேன், ஜிம்! ஆனால் அவர்கள் இப்போது நம் கையில் இருக்கிறார்கள். அவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதை நாம் நன்கு நினைவில் இருத்திக்கொண்டு அவர்களை சரியாக வைத்துக் கொள்ளவேண்டும். சில சமயங்களில் ராஜாக்கள் பற்றாக்குறை உள்ள ஏதேனும் ஒரு நாட்டை நாம் கண்டுபிடிக்க வேண்டும் என்றே நான் விரும்புகிறேன்."

இந்த இரு போக்கிரிகளும் ராஜாவும் இல்லை, பிரபுவும் இல்லை என்று ஜிம்மிடம் கூறுவதில் என்ன பலன்? அதனால் எந்த நல்லதும் நடக்கப் போவதில்லை. அத்துடன் நான் முன்னமே கூறியது போல இவர்களுக்கும் உண்மையான ராஜாக்களுக்கும் பெரிதாக எந்த வித்தியாசமும் இல்லை.

நான் தூங்கச் சென்றேன். தோணியைக் கவனித்து ஓட்டுவதற்கான எனது முறை வரும் சமயம் ஜிம் என்னை எழுப்பவில்லை. இவ்வாறு அவன் அடிக்கடி செய்வதுண்டு. விடிகாலை நான் கண்விழித்துப் பார்த்தபோது, ஜிம் அமர்ந்தவாறே தலையைத் தனது கால்முட்டிகளுக்குள் புதைத்துக் கொண்டு தன்னுள் முனங்கிக் கொண்டே அழுது கொண்டிருந்தான். அதைக் கவனிக்காதவாறு நான் திரும்பிக் கொண்டேன். அவன் அழுவது எதற்கு என்று எனக்குப் புரிந்தது.

அங்கே நதியின் மேல்கரையில் இருக்கும் தனது மனைவி மற்றும் குழந்தைகளை எண்ணுகிறன் என்றும் மிகுந்த சோகத்துடனும் வீட்டு நினைப்புடனும் இருக்கிறான் என்று நான் உணர்ந்தேன். அவன் தன் வீட்டை விட்டு ஒருபோதும் பிரிந்த அனுபவம் இல்லை போலும். வெள்ளை இன மக்கள் எவ்வாறு தங்கள் குடும்பத்தை அக்கறையுடன் பாதுகாப்பார்களோ, அதே போன்றே அவனும் அவன் குடும்பத்தை பாதுகாத்திருந்திருக்க வேண்டும் என்று நான் நம்பினேன். அப்படி பாதுகாப்பது இயற்கையில் நடக்கும் விஷயம் அல்ல என்றாலும் அது அப்படிதான் இருந்திருக்கும் என்று நான் நம்பினேன். சில இரவுகளில் நான் அசந்து தூங்குவதாக அவன் நினைத்துக் கொண்டு அடிக்கடி விம்மலுடன் புலம்புவதை நான் கேட்டிருக்கிறேன். "பாவம், குட்டி எலிசபெத், பாவம் குட்டி ஜானி. ரொம்ப கஷ்டம். நான் உங்களைத் திரும்பப் பார்ப்பேன் என்ற எதிர்பார்ப்பு என்னிடம் இப்போது சுத்தமாக இல்லை. ஒருபோதும் இல்லவே இல்லை."

பாவம் ஜிம்! அவன் ஒரு மிக நல்ல மனதுடைய நீக்ரோ.

இந்தமுறை அவன் மனைவி பற்றியும், பிள்ளைகள் பற்றியும் நான் பேச்சுக் கொடுத்தேன். சிறிது நேரத்திற்குப் பின் அவன் கூறினான்:

"கொஞ்ச நேரம் முன்பு நதிக்கரையில் ஏதோ படாரென்ற சத்தமோ அல்லது பளார் என்ற ஓசையோ கேட்டதிலிருந்து என் மனது மிகவும் சரியில்லாது போய்விட்டது. ஒரு காலத்தில் நான் எனது குட்டி எலிசபெத்திடம் மிகவும் கேவலமாக நடந்து கொண்டதை அது எனக்கு ஞாபகப்படுத்தி விட்டது. அவளுக்கு அப்போது நான்கு வயதுதான் இருக்கும். அவளுக்கு கொடுமையான ஒரு காய்ச்சல் அப்போது வந்திருந்தது. ஆனாலும் அது அவளுக்கு சரியாகி விட்டது. இப்படியிருக்க, ஒரு நாள் அவள் அங்கே நின்றுகொண்டிருக்கும் வேளை நான் அவளிடம் கூறினேன்.

"கதவை மூடு."

"அவள் அதைச் செய்யவில்லை. அவள் அங்கேயே நின்றுகொண்டு என்னைப் பார்த்து புன்னகை புரிந்துகொண்டிருந்தாள். எனக்கு அது கடுமையான கோபத்தைக் கொடுத்தது. எனவே கொஞ்சம் உரக்கவே இந்த முறை கூறினேன்."

"நான் கூறியது காதில் விழவில்லையா? கதவை மூடு."

"அவள் அப்படியே புன்னகை பூத்தபடி அங்கேயே நின்றுகொண்டிருந்தாள். நான் கோபத்தின் உச்சநிலையை அடைந்தேன். எனவே நான் கூறினேன்."

"உன்னை இப்போது என்ன செய்கிறேன் என்று பார்."

“அவ்வாறு கத்தியவாறே, அவளைப் பிடித்து இரு கன்னங்களிலும் மாறி மாறி அறைந்து கைகால்களை பரப்பிக் கொண்டு கீழே விழும்படி வீசினேன். பின்னர் கோபத்துடன் இன்னொரு அறைக்கு நான் சென்று அங்கே பத்து நிமிடம் இருந்தேன். பின்னர் நான் திரும்பி வந்தபோது, கதவு அப்போதும் திறந்தே இருந்தது. கதவினருகே நின்றபடி அந்தக் குழந்தை கன்னங்களில் நீர் வழிய கீழே பார்த்தபடி நின்றிருந்தாள். ஐயோ! கடவுளே! மிகுந்த பச்சாதாபத்துடன் குழந்தையை அள்ளி அணைக்க ஓடினேன். ஆனால் அப்போது பார்த்து படார் என்று காற்று கதவை குழந்தையின் பின்புறமாக விட்டு விட்டு அறைந்து சாத்தியது. படார்! ஓ! கடவுளே! என் குழந்தை நகரவேயில்லை.”

“என் மூச்சு என்னை விட்டுச் சென்றதைப் போல உணர்ந்தேன். அப்படிதான் நான் உணர்தேன். இன்னும் என்னால் அதை நினைவு கூரமுடியும். நடுங்கியபடியே மெதுவாக ஊர்ந்து, அவளைச் சுற்றி வந்து, அந்தக் கதவை மெதுவாகத் திறந்தேன். கதவு வழியாக மென்மையாக என் தலையை நீட்டி திடீரென குழந்தையிடம் "பாவ்" என்று மிகவும் சத்தமாகக் கத்தினேன். அவள் அசையக்கூட இல்லை. ஓ! ஹக்! கதறி அழுதபடி எனது குழந்தையை என் கரங்களால் அள்ளி அணைத்தபடியே நான் பீறிட்டு அழுதேன். "ஓ பாவப்பட்ட சிறிய உயிரே! எல்லாம் வல்ல அந்த ஆண்டவன் இந்த முதிய ஜிம்மை மன்னிக்கட்டும், ஏனெனில் அவனே அவனை தன் வாழ்நாள் முழுதும் மன்னிக்கத் தயாராக இல்லை. அவள் முற்றிலும் செவிடாக மாறியதுடன், அவளால் பேசவும் முடியாது போய்விட்டது. அதன் காரணம் அவளை அத்துணை குரூரமாக நான் அடித்தததுதான்.”

[தொடரும்]


முனைவர் ஆர்.தாரணி

- முனைவர்  ர. தாரணி M.A., M.Phil., M.Ed., PGDCA., Ph.D.  தமிழ்நாட்டில், திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தேவாரப்பாடல் பெற்ற சிவஸ்தலமான, திருப்புக்கொளியூர் என்று முன்பு திருநாமம் பெற்ற அவிநாசி என்ற ஊரில் உள்ள  அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் ஆங்கிலத்துறையின் தலைவராக பணியாற்றி வருகிறார். ஆங்கில இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றது கல்வித்துறையில் அவர் தேர்வு செய்த விஷயம் என்றாலும் அவரின் பேரார்வம் மொழிபெயர்ப்பின் மீதும்தான். -

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.