- முனைவர் ர.தாரணி அவர்கள் அண்மையில் ஐரோப்பிய நாடுகள் பலவற்றுக்குப் பயணித்துத் திரும்பியிருக்கின்றார். தனது ஐரோப்பியப்பயண அனுபவங்களை இலக்கியச்சுவை ததும்பும் நடையில் தொடராகப் 'பதிவுகள்' இணைய இதழில் எழுதுகின்றார். அப்பயணத்தொடரின் நான்காவது  அத்தியாயம் '"லந்தினியம்" எனும் "லண்டன்" என்னும் தலைப்பில் இவ்விதழில் வெளியாகியுள்ளது. - பதிவுகள் -


அத்தியாயம் நான்கு:    "லந்தினியம்" எனும் "லண்டன்"

ஒருவன் லண்டன் வாழ்க்கையில் சலிப்புற்றானாகில், அவனது சொந்த வாழ்க்கையிலேயே   சலிப்புற்று விட்டான் என்று பொருள். (When a man is tired of London, he is tired of life  - Samuel Johnson - )

முனைவர் ர. தாரணிஐரோப்பியப்பயணத்தொடர்தமிழ் நாட்டின் அக்கினிமழையில் இருந்து தப்பி தோகா செல்லும் விமானத்தில் ஜில்லெனக் குளிர் சூழ ஆரம்பித்ததும் உறக்கத்தின் கடவுள் நம்மை ஆக்கிரமிக்க ஆரம்பித்தார். சின்ன தலையணை மற்றும் சிறிய சால்வை இருக்கும் தனித்தனியாக ஒவ்வொருவருக்கும். அதை வைத்துக்கொண்டு நன்கு தூங்கலாம். இடையிடையே சாப்பிட குளிர்பானங்கள் அல்லது காபி டீ என கொடுப்பார்கள். நம் இருக்கையின் முன் உள்ள சின்ன மானிட்டர் பெட்டியில் சினிமா படங்கள் தமிழ் படம் உட்பட (ஆனால் குறிப்பிட்ட ஒரு சில படங்கள் மட்டும் - அதில் முக்கியமானது கபாலி), பிற மொழிப் படங்கள், கணினி விளையாட்டு என அனைத்தும் இருக்கும். காதில் ஒரு ஹியர் போன் மாட்டிக்கொண்டு அதைப் பார்க்கலாம். அது வேண்டாம் எனில் ஏரோபிளான் மோட் என்று ஒரு பகுதி இருக்கும். அதைத் தேர்ந்தெடுத்தால் விமானம் பயணம் செய்யும் பாதை, எத்தனை அடி உயரத்தில் பறக்கிறது, எந்தக் கடல் மீது மற்றும் ஊரின் அருகே உள்ளது என விமானத்தின் பல கோண படங்களுடன் தகவல்களை நாம் பார்க்கலாம் கடைசி வரை. இடையில் நம்மூரில் விளம்பரங்கள் காட்டுவது போல் தோகாவில் உள்ள  ஹமாத் பன்னாட்டு விமான நிலையத்தின் சிறப்புகள் பற்றி சிறிய ஒரு படம் காண முடிந்தது. அந்த விளம்பரத்திலேயே அந்த விமான நிலையத்தின் பிரமாண்டம் தென்பட்டது. எனக்கு சிறு ஆறுதல். சரி! ஆறு மணி நேரம் நன்கு இந்த விமான நிலையத்தைச் சுற்றி பார்க்கலாம். என முடிவு செய்து கொண்டேன்.

இவ்வாறாகப் பாதி  உறங்கியும் பாதி தூங்கிய பிரமையிலும் பிரயாணம் செய்து காலை குறித்த நேரத்தில் தோகா வந்தடைந்தோம். விமானப்பயணம் சுகமான ஜில் தட்பவெப்பத்தில் இருந்ததால் ஒரு குறையும் தெரியவில்லை. விமானம் விட்டு வெளியேறி, விமானநிலையம் உள்ளே செல்ல மின்சார ஏறுபடிகளில் மற்ற பிரயாணிகளுடன் ஏறிக்கொண்டிருந்த எங்களுக்க்கோர் அதிர்ச்சி காத்திருந்தது. படிகளுக்கு மேலே ஒரு கத்தார் விமான சேவையைச் சேர்ந்த பெண் ஊழியர் கையில்  அட்டையொன்றில் “லண்டன்” எழுதி அனைத்து பயணிகளுக்கும் கண்ணில் படும் விதமாக வைத்துக்கொண்டு இருந்தார். கூடவே "லண்டன் செல்லும் பயணிகள் யாராவது இருக்கிறீர்களா?" என்று ஆங்கிலத்தில் கேட்டுக்கொண்டிருந்தார்.

எங்களுக்கு ஒன்றும் புரியவில்லை. நமக்கு ஆறு மணி நேரம் கழித்துதானே விமானம் புறப்படும். இப்போது எதற்கு லண்டன் என கூப்பிடுகிறார்கள் என குழப்பம். எனினும் அந்த பெண்ணிடம் சென்று நாங்கள் லண்டன் செல்கிறோம் என கூறினோம். எங்களுடனே இன்னொரு குடும்பம் அப்பா அம்மா மற்றும் மகன் என்ற மூன்று பேர். மற்ற அனைத்து பிரயாணிகளும் வேறு வேறு திசைக்கு போவார்கள் போல. நாங்கள் ஆறு பேர் மட்டும் அந்த பெண்ணிடம் சென்றோம். எங்களின் லண்டன் வரைக்கான போர்டிங் பாஸ் வாங்கி சரி பார்த்த அந்த பெண் ஊழியர் எங்களிடம் லண்டன் செல்ல மதியம் வரை காத்திருக்க தேவை இல்லை எனவும் தற்போது அவர்கள் கத்தார் சேவையிலேயே  வேறு ஒரு விமானம் புறப்பட தயாராக இன்னொரு கதவு அருகே உள்ளதாகவும், அதில் சில இருக்கைகள் காலியாக இருப்பதால் எங்களை அதில் அனுப்பவிருப்பதாகவும் தெரிவித்தார்.

சொல்லி முடித்த அவர் எங்களை வேகமாக வரச் சொல்லி பணித்தபடி புயல் வேகத்தில் எங்களுக்கு வழி காட்டியபடி முன்னே ஓட்டமும் நடையுமாக சென்றார். கையில் இருக்கும் நீண்ட கைபேசியில் விமானம் புறப்படும் இடத்துக்கு தகவல் சொல்லியபடியே விரைந்து சென்றார். எங்களுக்கோ ஒரே இன்ப அதிர்ச்சி. அதே சமயம் விரைவாக நாங்களும் அந்த பெண் பின்னே ஓடிக்கொண்டே இருந்தோம். எங்களுடன் லண்டன் செல்லும் அந்தக் குடும்ப உறுப்பினர்கள் வேறு. மூச்சு வாங்க ஓடிக்கொண்டே இருக்கிறோம். மின்படிகளில் ஏறவும் பின் வேற்றோர் இழுக்கும் படிகளில் நிற்காமல் வேக நடை போடவும் எனச் சரியான உடற்பயிற்சி.

மிகப் பிரமாண்டமான விமான நிலையம். கொஞ்சம் ஏமாந்தால் காணாமல் போய் விடுவோம். நம்மை நாமே கண்டு பிடிக்க முடியாது. ஒரு பத்து நிமிடம் இவ்வாறு ஓடிய பிறகு, புறப்படத் தயாராக இருந்த விமானத்தின் கதவு அருகே சென்று எங்களை ஒப்படைத்த அந்தப் பெண் ஊழியர் அப்பாடா என பெருமூச்சு விட்டார். நான் மிகுந்த பெருமையுடன் உளமார அவர்களின் துரித நடவடிக்கைக்காக அந்த பெண்ணைப் பாராட்டினேன். கடமையில் குறிக்கோளாக வழிகாட்டியமைக்கும்தான்.. பின் உடனடியாக நாங்கள் மூவரும் எங்களுடன் லண்டனில் வசிக்கும் அந்த குடும்பமும் லண்டன் செல்லும் கத்தார் விமானத்தில் ஏறும்போது மணி காலை 6.30.

விமானம் உள்ளே ஏறிய பிறகுதான்  மரமண்டை பல விஷயங்களை யோசிக்க ஆரம்பித்தது. எங்கள் பெட்டிகள் அந்த விமானத்தில் இருந்து இங்கே இவ்வளவு விரைவாக வந்திருக்குமா என்பது முதல் சந்தேகம். அடுத்ததாக லண்டன் விமான நிலையத்தில் எங்களை கூட்டிக்கொண்டு போக வரும் ஏற்பாட்டாளர் மாலை அல்லவா வருவார்? அவருக்கு எப்படி நாங்கள் முன்பே வந்து விடுவோம் என தெரியப்படுத்துவது? சரி இனி ஒன்றும்  செய்ய முடியாது. நடப்பது நடக்கட்டும் என்று தீர்மானித்து விட்டு அடுத்த பயணத்தில் மூழ்கி விட்டோம். எங்களுக்குச் சேவை புரிய வந்த விமானப் பணிப்பெண்ணிடம் இந்தச் சந்தேகம் பற்றி கேட்டபோது, உங்கள் பெட்டிகள் வந்திருக்கும் எனக்கூறினார். எனக்கு ஆனால் பலத்த சந்தேகம்தான். கூடவே ஒரு வருத்தம். ஹமாத் விமான நிலையம் சுற்றிப்பார்க்க முடியவில்லையே என்று. சரி, திரும்பி வரும்போது இந்த வழியாகத்தான் வருவோம். அப்போது பார்த்துக்கொள்ளலாம் என எங்களுக்கு நாங்களே ஆறுதல் கூறிக்கொண்டோம்.

ஒரு வழியாக மதியம் 12 மணி அளவில் (நம்மூர் நேரம் மாலை 4.30 அளவில்) லண்டன் ஹீத்ரு விமான நிலையம் வந்தடைந்தோம். அதாவது 21 -ம் தேதி அதிகாலை  3.30 மணிக்கு கிளம்பி அதே நாள்  மதியம் 12 மணிக்கு லண்டன் சென்று சேர்ந்ததாக கணக்கு. இப்போது லண்டனில் அல்லவா இருக்கிறோம்? எனவே லண்டன் மணிதான் கணக்கில் வரவேண்டும். கோவையில் இருந்து கோவை எக்ஸ்பிரஸ் ரயிலில் சென்னைக்கு அதிகாலை கிளம்பி மதியம் போய் சென்னை போய் சேர்வது போல் அல்லவா ஆகிவிட்டது இந்தப் பயணம். விமானப்பயணங்கள் உலகின் தொலைவுகளை எப்படிச் சுருக்கிவிட்டது! ஆச்சர்யம்!

விமானம் விட்டு வெளியே வந்தவுடன் ஒரு நீண்ட வரிசையில் காத்திருந்து குடிவரவு பதிவு செய்ய வேண்டும். அதற்கு குறைந்த பட்சம் இரண்டு மணி நேரம் பிடிக்கிறது. அவ்வாறு வரிசையில் காத்திருக்கையில் என் மகன் விமான நிலையத்தில் இருக்கும் Free Wifi  மூலம், எங்களுக்கு கொடுத்திருந்த குறிப்புகளில் இருந்து,  லண்டனில் வந்து அழைத்து செல்ல வேண்டிய பயண ஏற்பாட்டாளரின் கைபேசி எண்ணுக்கு  அழைப்பு விடுத்தான். இன்ப அதிர்ச்சியாக அவர் தமிழர் என்பது அவர் தமிழில் கூறிய வந்துடீங்களா? என்ற விசாரிப்பில் நாங்கள் புரிந்து கொண்டு நாங்கள் குறித்த நேரத்துக்கு முன்பே வந்துவிட்டதாகக் கூறினோம். அவரும் தான்  இங்கே விமான நிலையத்தின் வெளி லௌஞ்சில்தான் இருப்பதாகவும், ஒவ்வொரு விமானம் மூலமும் நமது குழு சக பிரயாணிகள் வந்து கொண்டு இருப்பதால் காத்திருப்பதாகவும் தெரிவித்தார். ஒரு பிரச்னை தீர்ந்தது. அடுத்ததாக குடிவரவு பதிவு முடித்து விட்டு வேகமாகப் பெட்டிகள் வரும் கன்வேயர் பெல்ட் அருகே ஓடினோம். அங்கே எங்கள் பெட்டிகள் சரியாக வந்து கொண்டு இருந்தன. அடுத்ததாக ஒரு பெரிய நிம்மதி பெருமூச்சு! அப்பாடா! இந்த இடத்தில் கண்டிப்பாக கத்தார் விமான சேவையின் துரித செயல்பாடுகளை மனமுவந்து பாராட்டியே தீர வேண்டும்.

பெட்டிகளைத் தள்ளு வண்டியில் வைத்து தள்ளிக்கொண்டு வெளி லௌஞ்சில் வந்த போது ஒரு பெரிய இந்தியக் கூட்டமே, அதுவும் வடஇந்தியர்கள் கூட்டம் இருக்கும்  இடம் முழுதும் ஆக்கிரமிப்பு செய்து இருந்தது. எங்கள் பிரயாண ஏற்பாட்டாளர் Club7 Holidays  உடன் வேறு  ஏற்பாட்டாளர்களின் குழுவும் அங்கே கூடியிருந்தன. ஹிந்தி அல்லது பெங்காலி ஏதோ ஓர் இந்திய மொழி அங்கே நிரம்பி வழிந்து கொண்டிருந்தது. இன்னுமொரு விமானத்திற்காகக் காத்திருந்ததால் நாங்கள் அப்படியே குளியலறை சென்று கொஞ்சம் எங்களை தயார் படுத்திகொண்டு பின் அப்படியே ஹீத்ரு விமான நிலைய கடைகளைப் பார்வையிட்டோம். பின் சிறிது நேரத்தில் அனைவரும் வந்து விட எங்களுக்கு என்று இருந்த ஒரு பெரிய சொகுசு பேருந்து, நமது இரவு நேர செமி ஸ்லீப்பர் பேருந்துகளை விடவும் அதிக வசதியுடன் கூடிய ஒன்றில் பயணித்து ஒரு இருபது மணித்துளிகள் கழித்து நாங்கள் தங்கவேண்டிய விடுதியான கிரௌன் பிளாசா ஹீத்ருவிற்கு வந்து சேர்ந்தோம்.

விமான நிலையத்தில் இருந்து மூன்று  மைல்கல் தொலைவில் அமைத்துள்ள நான்கு நட்சத்திர விடுதி கிரௌன் பிளாசா. அங்கே பிரயாண வழிகாட்டி எங்கள் நண்பராகிப்போன தமிழர் பாலா அனைவருக்கும் அறைகளின் சாவி அவரவர் பெயர்களுடன் வாங்கி தந்தார். எங்கள் மூவருக்கும் மூன்று நபர்கள் தங்கும் வசதி உள்ள அறையொன்றைக் கொடுத்து எங்களிடம் ரகசியமாக "உங்களுக்கு தரை தளத்திலேயே வாங்கி வைத்து விட்டேன், அப்பா வயதில் பெரியவர் அல்லவா! லிப்ட் அல்லது படி ஏறி அலைய வேண்டாம்" கூறினார். அவர் கூறியது போலவே எங்களுடன் வந்த மற்ற அனைவருக்கும் குறைந்த பட்சம் இரண்டாம் அல்லது அதற்க்கு மேற்பட்ட தளங்கள்தான். அனைவரும் லிப்ட் உள்ளே போவதற்கு முண்டியடித்துக்கொண்டு நின்று கொண்டிருந்தார்கள்.

நாங்கள் விடுதிக்கு சென்ற போது மணி மாலை நான்கு. ஏற்பாட்டாளர் பாலா எங்களை ஒரு மணி நேரம் தயார் படுத்திக்கொள்ள நேரம் தந்து பின் ஐந்து மணி அளவில் மீண்டும் விடுதியின் முன்னறையில் கூட வேண்டும் என அனைவருக்கும் கூறியிருந்தார். லண்டன் மொத்தமாகச் சுற்றிப்பார்க்குமோர் ஓரியன்டேஷன் பயணம் செல்லலாம் எனக்கூறி இருந்தார். எனவே அறைக்கு வந்த நாங்கள் தயாராக ஆரம்பித்தோம்.  மிக அருமையான அறை. நல்ல வசதிகள் மற்றும் நடமாட நல்ல  இடத்துடன் கூடிய அறை, அப்போதுதான் சார்ஜ்ர் போட முடியாது என்ற அரிய கண்டுபிடிப்பையும் உணர்ந்தோம்.

அறையின் உள்ளேயே வெந்நீர் வைக்க உதவும் கெட்டில் ஒன்றும் அதனுடன் காபித்தூள் ,சர்க்கரை,  டீ பேக்ஸ் மற்றும் சாப்பிட பிஸ்கோத்துக்கள் என  அனைத்தும் இருந்தன. இந்த வசதி எல்லா பெரிய நட்சத்திர விடுதிகளிலும் இருக்கும். 'நன்கு குளித்து  சூடாகக் காபி குடித்துவிட்டு புத்துணர்ச்சியோடு மாலை ஐந்து மணிக்கு லண்டனை ஒரு மேற்பார்வையிட ஆயத்தம் ஆனோம். எங்களுடன் வந்த வட இந்தியர்கள் கொஞ்சம் சிரித்தார்கள். கொஞ்சம் வித்தியாசமாக பார்த்தார்கள். ஆனால் அனைவரும் பேருந்தில் முன் இருக்கைகளை பிடிப்பது குறித்து தீவிரமாக இருந்தார்கள். நாங்கள் பொறுமையாக ஏறிக் கடைசி இருக்கையில் அமர்ந்து கொண்டோம். உண்மையில் கடைசி இருக்கையின் பக்கத்தில் இருக்கும் கண்ணாடி ஜன்னல் நமது எல் சி டி டீவி போல் மிக பெரியது. அங்கிருந்து நன்கு வேடிக்கை பார்க்கலாம்.

லண்டன் என்றவுடன் நமது நாட்டவர்களுக்கு நமது நாட்டை ஆண்ட ஆங்கிலேயர்களின் தலைநகரம் என்று நினைவு வந்தாலும், எங்களைப் போன்ற ஆங்கில இலக்கிய ஆசிரியர்களுக்கு பல்வேறு சிறப்புகள் கண் முன் நிற்கும். அழகிய தேம்ஸ் நதிக்கரையில் அமைந்த லண்டன் மாநகரம் இரண்டாம் நூற்றாண்டில் ரோமானியர்கள் அங்கே ஆட்சி புரிந்தபோது லந்தினியம் என்று அழைக்கப்பட்டதாக குறிப்பிடப்படுகிறது. அந்த பெயரே நாளடைவில் லண்டன் என மாறிவிட்டது. கிரேட் பிரிட்டன் என அழைக்கப்படும் ஆங்கில சாம்ராஜ்ய தீவின் தென்கிழக்கில் அமைந்துள்ள அழகிய நகரம். சாதாரணமாக சாலைகளின் இருமருங்கும் அழகிய பூக்கள் நிறைந்த பாதைகள், அனுபவிக்க வைக்கும் குளிர், தங்கு தடையில்லா சாலைகள், நமது செங்கோட்டை போன்றே பல பழங்கால சிகப்பு நிற கட்டிடங்கள். சிகப்பு நிற மாடி பேருந்து (Red Bus.in), கருப்பு ஓவர்கோட் அணிந்த மனிதர்கள், பச்சை பசேல் என மரங்களும் புல்வெளிகளும் ஆங்காங்கே. பார்ப்பதற்கு கண்ணுக்கு மிகவும் குளுமையாக இருந்தன.

முதலில் நாங்கள் சென்றது கென்சிங்டன் பூங்காவில் அமைந்திருக்கும் ஆல்பர்ட் மெமோரியல் என்ற நினைவிடத்திற்கு. இங்கிலாந்து நாட்டின் தலைசிறந்த ராணிகளுள் ஒருவரான விக்டோரியா பேரரசி தன் கணவர் இறந்தவுடன் அவருக்காக எழுப்பிய நினைவிடம் இது. தனது நாற்பத்தி இரண்டாம் வயதில் எதிர்பாராவிதமாக டைபாய்டு சுரத்தில் கணவர் ஆல்பர்ட் உயிர் துறக்க, அவரை மறக்கமுடியாமல் தவித்த மஹாராணி விக்டோரியா அம்மையார் அமைத்த “கொதிக்” (Gothic) என்ற கட்டடக்காலைப்பாணியில் அமைந்த ஒரு மெமோரியல். தன் பதினெட்டாம் வயதில் அரசியாக பதவி ஏற்று தனது மாமா மகன் ஆல்பர்ட் என்பவரை திருமணம் செய்து ஒன்பது குழந்தைகளுக்கு தாயாகி, இந்தியாவின் பேரரசி என தன்னைப் பிரகடனப்படுத்திக்கொண்ட விக்டோரியா மஹாராணி, தன் காதல் கணவன் இறந்தபின் தான் இறக்கும் வரை (அவர் இறந்தது தன் 81-ம் வயதில்) துக்கம் அனுஷ்டித்து கருப்பு ஆடை அணிந்துபோது நிகழ்ச்சிகளை தவிர்த்து ஒதுங்கி வாழ்ந்தவர். நம் நாட்டில் மனைவிக்காக தாஜ்மஹால் கட்டிய  முகலாய பேரரசர்  ஷாஜஹான் போல் இந்த மகாராணியைக் குறிப்பிடலாம்.   

அந்த நினைவிடத்தில் பிரின்ஸ் ஆல்பெர்ட்டின் சிலை ஒன்றும் உள்ளது. இந்த நினைவிடத்தின் எதிரே உலகப்புகழ் பெற்ற 5272 இருக்கைகள் கொண்ட ராயல் ஆல்பர்ட் கலை அரங்கம் உள்ளது. உலகத்தின் புகழ் பெற்ற கலை வல்லுநர்கள், அறிவியல் மேதைகள் மற்றும் பலர் இந்த அரங்கத்தில் தங்கள் நிகழ்ச்சிகளைத் தந்துள்ளார்கள். 1933 -ல் அறிவியல் மேதை ஆல்பர்ட் எய்ன்ஸ்ட்டின் உரை நிகழ்த்தி உள்ளார். 1974 -ம் ஆண்டு முதல்முறையாக அந்த அரங்கத்தில் பாடும் முதல் இந்தியர் என்ற பெருமையை லதா மங்கேஸ்கர் பெற்றார். இவ்வாறாகப் பெருமை வாய்ந்த அரங்கமும் கட்டப்பட்டது விக்டோரியா மகாராணியின் கணவரின் நினைவாகவே. அதன் அருகிலேயே ராயல் ம்யூசிக்  காலேஜ் அமைந்துள்ளது.

பிரின்ஸ் ஆல்பர்ட் நினைவாலயத்தில் ஒரு பத்து நிமிடம் நின்று புகைப்படம் எடுத்துக்கொள்ளக் குழுவினர் அனுமதிக்கப்பட்டனர். அனைவரும் வேண்டிய மட்டும் நினைவாலயத்தைத் தங்கள் உருவத்துடன் சேர்த்து புகைப்படத்தில் பதிவு செய்து கொண்டனர். அடுத்தாக பேருந்து லண்டனை சுற்றும்  ஒரு சிறு பயணத்திற்குத் தயாரானது. பேருந்தில் அமர்ந்து வேடிக்கை பார்த்துக்கொண்டே வழிகாட்டி பாலா கூறும் விஷயங்களை மனதில் சேகரித்துக்கொண்டு வந்தோம்.
எல்லாவற்றிற்கும் முதலாவதாக அவர் கூறிய விதிமுறைகளாவன:

1.  இது அயல் நாடு. நம் நாடு போல் எது வேண்டுமானாலும் செய்யக்கூடாது உதாரணமாகச் சாலையின் எந்த இடத்தில வேண்டுமானாலும் நம் நாட்டில் கடப்பது போல் இங்கே கண்டிப்பாகச் செய்யக்கூடாது. அதற்கென அமைக்கப்பட்டு இருக்கும் ஜீப்ரா கிராஸ்ஸிங்கில்  மட்டுமே, அதுவும் பாதசாரிகளுக்கான பச்சை விளக்கு எரியும்போது மட்டும்தான் செய்ய வேண்டும். அப்படி இல்லாமல் எங்கு வேண்டுமானாலும் கடந்து சென்றால், வேகமாக வரும் வாகன ஓட்டிகள் மோத நேர்ந்தால், கண்டிப்பாக நமக்கு மருத்துவ காப்பீடு கிடைக்காது மேலும்  என்ன வேண்டுமானாலும் நமக்கு  நேரலாம்.

2. தங்கள் உடைமைகளைக் கண்டிப்பாக கவனமாக வைத்துக்கொள்ளவேண்டும். குறிப்பாக பாஸ்போர்ட் போன்ற ஆவணங்களை எந்த இடத்திலும் விடுதி உள்பட எங்கும் வைத்திருக்க கூடாது. கைப்பையில், பணம் வைப்பது போல் பத்திரமாக வைத்து இருக்க வேண்டும். கூட்டம் நிறைந்த இடங்களில் கைப்பையில் மீது கவனம் தேவை.

3. கண்ட இடங்களில் குப்பை போடுவது தவறு. அதற்கான குப்பைக் கூடையில்தான் போட வேண்டும். அதே போல் எங்கே வேண்டுமானாலும் எச்சில் துப்பக்கூடாது.

4. பொது இடங்களில் மற்ற ஜனங்கள் வரிசையாக நின்று இருக்கும் போது, நாமும் வரிசையில்தான் செல்ல வேண்டும். முட்டி மோதிக்கொண்டு போய் நிற்கக்கூடாது.

5. நமது ஊரில் காரில் இருப்பது போல இங்கே பேருந்தில் பயணம் செய்யும் ஐம்பத்தொரு பேரும் அமரும் இருக்கையில் விமானத்தில் இருப்பது போல் சீட் பெல்ட் இருக்கிறது. ஐரோப்பிய நாடுகளில் சாலைகளில்  பயணம் செய்யும் எவரும் சீட் பெல்ட் அணிந்து பயணம் செய்வது கட்டாயம். திடீரென உள்ளே நுழைந்து பார்த்து பிடித்தார்களானால் கண்டிப்பாக அபராதம் விதிக்கப்படும்

6. இன்னும் சரியாகக் கோடைகாலம் ஆரம்பிக்காததால், குளிர்கால காற்று இருப்பதால் வெளியிடங்களுக்கு செல்லும்போது உடலை சரியாக பாதுகாக்க குளிர்கால ஆடைகள் இருக்க வேண்டும். நம் ஊர் குளிரில் இருப்பது போல் அலட்சியமாக இருந்து விட முடியாது.

7. ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் குடிப்பதற்கு மற்றும் குளிப்பதற்கு எனத் தனித்தனியே தண்ணீர் கிடையாது. குளியலறையில் வரும் தண்ணீரும் சுத்திகரிக்கப்பட்ட ஒன்றே. எனவே எந்த டாப் தண்ணீரும் பயமில்லாமல் குடிக்கலாம். தண்ணீருக்காகக் காசு செலவு செய்ய வேண்டியதில்ல.

8. பொதுவாக இந்த மாதிரி சுற்றுலாத் தலங்களில் நம்மிடம் வந்து பொருட்கள் வியாபாரம் செய்ப்பவரிடம் எந்த பொருட்களும் வாங்கக்கூடாது. அவர்களிடம் இருப்பது காப்பிரைட் இல்லாத பொருட்கள். அப்படி வாங்க வேண்டுமானால் அதற்கான கடைகளில் சென்று வாங்க வேண்டும்.

9. கழிவறைகள் இருக்கும் இடத்தில்தான் இயற்கை உபாதைகளை கழிக்க வேண்டும்.

10. பேருந்துக்குள் கண்டிப்பாகச் சிகரெட் பிடிக்கக்கூடாது.

11. பேருந்தில் அமர்கையில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு இருக்கையில் அமர வேண்டும். இதனால் அனைவருக்கும் அனைத்து இருக்கையிலும் அமரும் வாய்ப்பு கிட்டும்\

இத்தனையும் முதலிலேயே எங்களுக்குக் கொஞ்சம் தெரியும் என்றாலும் இப்போது கேட்கும்போது சிரிப்புதான் வந்தது. நம் நாட்டில் இவற்றில் ஒன்றேனும் கடைபிடிப்போமா? நம் நாட்டில் இப்படி யாராவது சொன்னால் நாம் கேட்டுக்கொள்வோமா என்ன? செய்யாதே என்றால் செய்யும் கூட்டம் ஆயிற்றே நாம்! அதுவே லட்சக்கணக்கில் பணம் கொடுத்து வந்து அயல் நாட்டில் அவர்கள் விதிமுறைகளை நல்ல பிள்ளைகளாக பின் பற்றி, ஊருக்கு போன முதல் வேலையாக எச்சில் துப்புவதும், குப்பை போடுவதும், ரோட்டில் குடு குடு என்று கபடி ஆடுவதும் என நம்மை மிஞ்ச ஆள்   இருக்காது. அதுவும் நாமெல்லாம் காரிலேயே சீட் பெல்ட் போடத்தயங்கும் ஆட்கள்.

எந்த நாட்டுக்கும் அதற்கான விதிமுறைகள் உண்டு. அந்த விதிகளை அந்த நாட்டவர் மதிப்பது மட்டும் அல்லாது, அங்கே பயணிகளாக வரும் மற்ற நாட்டவரும் மதிக்க வேண்டும் என்று மிகவும் கண்டிப்பாக எதிர்பார்க்கிறார்கள். நமது நாட்டுக்கு என எந்த விதிமுறை, வரைமுறை கிடையாது. மீறி தவறு செய்தால், பணம் என்னும் மாயப்பேயைக்காட்டி மயக்கி தப்பித்து விடுகிறார்கள். இதில், நாம் செய்யும் தவறுக்கு, "இந்தியா மாதிரி மோசமான நாடு எங்கும் இல்லை"  என்று தாய்நாட்டை பழிக்கும் இழிசெயல் வேறு.

ரோட்டிலேயே சிறுநீர்கழிப்பது, பார்க்கும் நாம்தான் வெட்கி தலைகுனிய வேண்டும். பொது இடங்களில் புகைபிடிக்கக்கூடாது என்ற சட்டத்தைச் சிறிது கூட சட்டை செய்யாமல் பேருந்து நிறுத்தங்களில் நின்று கொண்டு இருக்கும் அனைவர் முகத்திலும் ஊதுவது, பான் பராக் எச்சில் ரோடு முழுக்க ரத்தக்கறை போல். இந்தியாவை எவ்வளவு கேவலப்படுத்த முடியுமோ அவ்வளவும் அதற்கு மேலும் செய்துவிட்டு, தன்னைப் போல் உண்டா என நாம் காட்டிக்கொள்கிறோம். நாம் வாழும் இழிநிலை தெரிந்து கொள்ள ஒவ்வோர் இந்தியனும் கண்டிப்பாகத் தன் வாழ்நாளில் ஒரு முறையேனும் இந்த மாதிரி நாடுகளுக்கு சென்று அந்த நாட்டின் பிரஜைகள் எவ்வாறு தங்கள் விதிமுறைகளைப் பின்பற்றுகிறார்கள் என்று தன் ஊனக்கண்ணால் பார்த்து தான் ஆக வேண்டும்.

இப்படி கூறுவதால் இந்த மாதிரி நாடுகளில் கெட்ட விஷயம் எதுவுமே கிடையாது என்று அர்த்தம் இல்லை. அவர்களும் புகை பிடிக்கிறார்கள், மது அருந்துகிறார்கள். சிறுநீர் கழிக்கிறார்கள். ஆனால் பொது மக்களுக்கு பாதகம் விளைவிக்கும் வகையில் அல்ல. இரண்டு பேருக்கு மேல் ஒரு பேருந்து நிலையத்தில் நின்று இருந்தால், பேருந்து வந்தவுடன் தனக்குள்ளேயே ஒரு சிறு வரிசையை உருவாக்கி இருக்கிறார்கள். ஒரு நாடு முன்னேற்றப்பாதை நோக்கிப் போக வேண்டுமானால் அதன் மக்கள் சரியான முறையில் விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும். அயல் நாடுகளில் அது நடப்பதால் அவர்கள் முன்னேறிய நாடாக இருக்கிறார்கள். நமக்கு முன்னேற்றப்பாதை என்பது எந்தப்பக்கம் என்று கூட தெரியவில்லை. நமக்கு தெரிந்ததெல்லாம் ஒன்றுதான். பெட்டி பெட்டியாகப் பணம் கொடுத்து நம் தனிப்பட்ட முன்னேற்றத்தை கவனித்துக்கொள்வது. லஞ்சம் வாங்குபவர்களை விட லஞ்சம் கொடுத்து காரியம் சாதிக்க முயல்பவர்களே தேசத்துரோகிகள். அது கல்லூரிகள் சீட் வாங்குவதானாலும் சரி, கல்லூரி பேராசிரியராக ஆவதற்குக் கொடுப்பதானாலும் சரி.

லண்டனுக்கு வருவோம். லண்டன் மாநகரின் முக்கிய வணிக ஷாப்பிங் வீதிகளான கிங்ஸ் ஸ்ட்ரீட், கேனரி வார்ப் மற்றும் ட்ரபால்கர் ஸ்குயர்  போன்ற இடங்களை பேருந்தில் பயணித்த படி பார்த்துக்கொண்டே வந்தோம் கொஞ்சம் தொலைவில். லண்டனின் மேற்கில் உள்ள வெஸ்ட்மினிஸ்டர் நகரில் உள்ள பிக்காடிலி சர்க்கஸ் எனும் மிகவும் பிரபலமான ஒரு சந்திப்பு கடந்து வந்தோம். பிக்காடில் என்பது பதினான்காம் நூற்றாண்டில் வாழ்ந்த ஆண்கள் அணிந்த ஒரு கழுத்துப்பட்டையை குறிக்கும். அதை செய்து தரும் பிரபல தையல்காரர் அங்கு இருந்ததால் பிக்காடிலி என்ற பெயர் வழங்கப்பட்டு வந்தது எனவும், சர்க்கஸ் என்பது நாம் நினைப்பது போல் மிருகங்கள் மனிதர்கள் செய்யும் சாகசக்காட்சிகள் அல்ல. சர்க்கஸ் என்ற வார்த்தையின் அர்த்தமே வட்டமாகவும், திறந்த வெளியாகவும் உள்ள ஒரு ரவுண்டானா ரோடு என்ற அர்த்தம் லத்தீன் மொழியில். எனவே பிக்காடிலி சர்க்கஸ் என்பது லண்டனின் மிக பிரபலமான ஒரு சாலை சந்திப்பு என கொள்ளவேண்டும். தற்போது அங்கே ரவுண்டானா இல்லை.

வரும் வழியில் நிறைய மியூசியங்கள் தென்பட்டன. நாச்சுரல் லைஃப் ஹிஸ்டரி மியூசியம், விக்டோரியா மற்றும் ஆல்பர்ட் மியூசியம் என பல மியூசியங்கள் இருந்தாலும் உள்ள செல்ல முடியாது வெளியே இருந்தே பார்த்துக்கொண்டோம். மியூசியங்கள் அனைத்தையும் மாலை ஐந்து மணியுடன் மூடி விடுவார்கள். மேலும் ஒவ்வொரு மியூசியம் பார்க்கவும் ஒரு முழு நாளே வேண்டும். நம்மூர் போல் ஒரே நாளில் ஐந்து அல்லது ஆறு கோவில் பார்த்து விட்டோம் என்று பெருமை பேசுவது போல் அல்ல. ஓரிடத்தைக்கூட முழுமையாகப் பார்க்கமாட்டோம் என்பதுதான் நிதர்சனம். ஒரு நெடிய பெருமூச்சுடன் மியூசியம் போன்ற இடங்களை பார்த்துக்கொண்டே கடந்து சென்றோம். லண்டனின் பிரபலமான லண்டன் ஐ எனப்படும் உயரமான நம்மூர் ஜெயன்ட் வீல் போன்ற அமைப்பில் லண்டன் முழுதும் பார்க்கும் வண்ணமாக உள்ள ஒரு விஷயத்தையும் பார்த்துக்கொண்டே சென்றோம், வெளியில் இருந்துதான்.

இவ்வாறாக லண்டனை ஒரு பொத்தாம்பொதுவாக இரண்டு மணி நேரம் பார்த்து விட்டு இரவு உணவுக்காக மும்தாஜ் ரெஸ்டாரண்ட் எனும் இந்திய உணவு வகைகளை வழங்கும் உணவு விடுதிக்கு சென்றோம். பிரயாண  ஏற்பாட்டாளர்களின் முன்னேற்பாட்டால், உணவுகள் தயாராகச் சுட சுட வைக்கப்பட்டு இருந்தன. தானே பரிமாறிக்கொள்ளும் வசதியுடன். இந்திய உணவு வகைகளான ரொட்டி, சப்பாத்தி, சாதம், சப்ஜி மேலும் சிக்கன் கிரேவி என அனைத்தும் இருந்தாலும் நமது குழுவினர் முட்டி மோதிக்கொண்டு பரிமாறியதில் அனைவருக்கும் கிடைக்க நேரம் ஆனது. இந்திய உணவு விடுதியில், இந்திய உணவு சாப்பிடுகையில் இந்தியர்கள் அவ்வாறுதானே இருக்க முடியும் .நாங்கள் மூவரும் சிறிது நேரம் அமர்ந்து விட்டோம். பசி வயிற்றை கிள்ளியபோதும்,  அப்பா அந்த கூட்டத்தில் சென்று உணவு எடுக்க வேண்டாம் எனத் தடுத்து விட்டார்.

நாங்கள் ஒரு டேபிளில் அமைதியாக அமர்ந்திருப்பதைக்கண்டு பயண வழிகாட்டி பாலா அப்பாவிற்குப் பசிக்கும் என என்னிடம் கூறி முதலில் அப்பாவிற்குக் கொடுங்கள் என்றும் கூறினார். அங்குள்ளவர்களிலே அதிகம் வயது முதிர்ந்தவர் என் அப்பாதான். மற்றவர்களில் பெரும்பான்மையோர் அறுபது வயது கடந்த வங்காளிகள், மராத்தியர்கள் மற்றும் அஸ்ஸாமை சேர்ந்தவர்கள். வயது குறைவான இளம் தம்பதிகள் இருவர். என் மகன் வயதில் டாக்டருக்கு படிக்கும் வங்காளி மாணவன் அவன் பெற்றோருடன். அதே மாதிரி இளம் பெண் ஒருவர் அவரது தாய் தகப்பனுடன். அனைவருக்கும் எங்களைப் பார்த்து என்ன தோன்றியதோ தெரியவில்லை. என் அப்பா மட்டும் இப்படி வட இந்தியர்கள் கூட்டத்தில் மாட்டிக்கொண்டோம் என புலம்பிக்கொண்டார். ஐம்பத்தொரு நபர்கள் கொண்ட குழுவில் நாங்கள் மூன்று பேர் மட்டுமே தென்னிந்தியர்கள் என்பதால் அவர்கள் ஒரு மெஜாரிட்டி குழுவாகவே இருந்தார்கள். எனக்கு இது பற்றி எந்த புலம்பலும் இல்லை. என் மகனுக்கும் கொஞ்சம் பிடித்தம் இல்லை.

பேருந்தில் முதல் ஆளாக இருக்கை பிடிப்பதில் இருந்து, பேருந்து நிற்கும்போது நாம் பின்னால் இருந்து இறங்க வரும் நமக்கு  வழி விடாமல் இருக்கையின் பக்கத்தில் நின்று கொண்டு கையில் உள்ள பைகளை மேலே திணிப்பதும் எடுப்பதுமாக அடுத்தவர்களைப் பற்றிக் கொஞ்சம் கக்ச் சிந்திக்காமல் அதிக அளவில் சுயநலமாக இருக்கிறார்கள் என்று புலம்பினான். முதல் இரு நாட்களுக்கு எங்களுக்கு இது ரொம்ப சிரமமாக இருந்தது. இரண்டாம் நாளில் இருந்தே அவர்கள் செயலைப்பார்த்து ரசித்துச் சிரிக்க ஆரம்பித்து விட்டோம். இதில் அவர்கள் யாருக்கும் தமிழ் தெரியாது என்பதும் ஆங்கிலம் பெரும்பான்மையோருக்கு சுத்தமாக வராது என்பதும் நன்கு புரிந்து விட்டது. ஹிந்தியை விட அவர்கள் வங்காள மொழி மட்டுமே பயன்படுத்துகிறார்கள். அவர்களுக்குள்ளேயே பல கருத்து வேறுபாடுகள். சில சமயம் சண்டைகள். நாங்கள் அதை பார்த்துக்கொண்டு பேசாமல் அமர்த்திருப்போம். ஒரு சிலர் ஆங்கிலம் தெரிந்த காரணத்தால் நன்கு எங்களிடம் பழகி விட்டார்கள்.

இரவு உணவுக்கு பின், சுமார் எட்டு மணி அளவில் உணவகம் விட்டு வெளியே வந்து பார்த்தால், சூரியன் இன்னும் நல்ல வெளிச்சத்துடன் வானில் அமர்ந்திருக்கிறான். நமது ஊரில் மாலை ஐந்து மணியளவில் இருக்கும் வெளிச்சம் அங்கே இரவு எட்டு மணிக்கு கூட இருக்கிறது. போனமுறை 2007  -ம் ஆண்டு பாரிஸ் வழியாக அமெரிக்காவில் இருந்து வரும்போதும் அப்படிதான்.  அது மே மாத இறுதி.  ஒரு வாரம் பாரிஸில் தங்கி இருந்தோம். அப்போது ஒவ்வொரு நாளும் சூரியன் எப்போது மறைவான் என்று கூர்ந்து கவனித்துக்கொண்டு இருப்பேன். சொன்னால் நம்ப மாட்டீர்கள். இரவு 10 .30 -க்கு மேல் தான் கொஞ்சம் இருள் கவிய ஆரம்பிக்கும் நம்மூரில் மாலை ஆறு மணி போல. பிறகு எப்போது முழுதாக இருள் சூழ்கிறது என்பது நான் காணவே இல்லை. அதற்குள் தூக்கம் தழுவி விடும். பின் காலை ஆறு மணிக்கு எழும்போது சூரியன் சரியாக ஆஜராகி இருப்பான். 

நான் பார்த்து வியந்த விஷயம் இது. லண்டனிலும் அப்படிதான். ஆனால் ஏப்ரல் மாதம் எட்டு அல்லது ஒன்பது மணி வாக்கில் சூரியன் மறையும். மே மாதம் அவர்களுக்கு கோடை ஆனதால் சூரியன் மறைவு நள்ளிரவு மட்டுமே. அதனால்தான் “The Sun never sets on the British Empire” என்று  ஒரு பழமொழி வழக்கில் இருக்கிறது. வேறு பல அர்த்தங்கள் இந்த பழமொழியில் புதைந்திருந்தாலும், சூரியனின் இருப்பு அதிக அளவில் வானில் இருப்பதே முக்கிய காரணம். எனவே இருளில் போடும் மின்சார விளக்குகள் மற்றும் வாகனங்களின் முகப்பு விளக்குகள் அனைத்துக்கும் சிறிது நேரம் மட்டுமே வேலை கோடை காலத்தில். அதுவே குளிர்காலத்தில் எல்லாமே தலைகீழாக மாறிவிடும். சூரியனைக் கண்டுபிடிக்கவே முடியாது. ஓடி ஒளிந்து விடுவான்.

உணவகத்தில் இருந்து நேராக தங்கும் விடுதிக்கு செல்லும் போது, அனைவருமே மிகுந்த களைப்பில் இருந்தனர். எட்டு மணிக்கே தூங்கி விடும் என் அப்பாவும் கொஞ்சம் களைப்புடன் பிரயாணம் செய்தார். கடைசியில் ஒரு மணி நேர பேருந்து பிரயாணத்திற்கு பின் விடுதியை அடையும் முன் எங்கள் நண்பர் பாலா அடுத்த நாள் காலை விடுதியில் தரும் காலை உணவை முடித்துக்கொண்டு சரியாக எட்டு முப்பது மணிக்குப் பேருந்தின் அருகே வர வேண்டும் என கூறி விடை பெற்று சென்றார். அறையை அடைந்தபோது மணி  இரவு ஒன்பது முப்பது அங்கே. ஆனால் இந்திய நேரம் நள்ளிரவு இரண்டு மணி. என்னே விசித்திரம்! 21-ம் தேதி காலை சென்னையில் கிளம்பி இத்தனை அனுபவங்கள். நம் வாழ்க்கை சுவாரஸ்யமானவைதாம்.  

மறு நாள் அதாவது ஏப்ரல் மாதம் 22 -ம் தேதி காலை விடுதியில் கொடுத்த கான்டினென்டல் பிரேக்பாஸ்ட் எனப்படும் உணவு வகைகளில் எதுவும் வாய்க்கு பிடிக்காமல் முட்டை ஒன்று இரண்டாக வதக்கி வைத்திருந்ததும் பிடிக்காமல் நம் கண் முன்னே முட்டையை உடைத்து தோசை போல் சுட்டுக்கொண்டிருந்த சமையல்காரர் - தாய்லாந்துக்காரர் போல் இருந்தார்- எனக்குக் கொஞ்சம் வெங்காயம் போட்டு ஆம்லெட் போல் செய்ய முடியுமா என வினவினேன். அவரும் சந்தோசமாக ஸ்பைஸி ஆம்லெட் போட்டு தரேன் என்று நல்ல முறையில் செய்து கொடுத்தார். அவருடன் இருந்த இன்னொரு சமையல் வல்லுநர் ஸ்ரீலங்காவைச் சேர்ந்த தமிழர். பல காலம் முன்னே லண்டனில் வந்து குடியேறியவர்கள். எங்களை பார்த்ததும் சந்தோசமாக தமிழில் உரையாடிவிட்டு, அவர்கள் குடும்ப புகைப்படங்களைக் கைபேசியில் இருந்து  காட்டினார். எங்களுக்கும் மிகுந்த சந்தோசம். தமிழனுக்கு இன்னொரு தமிழனை அதுவும் அயல் நாட்டில் பார்க்கும்போது பெரும் மகிழ்ச்சியாகத்தானே இருக்கும்.

லண்டனில் இரண்டாவது நாளாக எங்களின் சுற்றிப்பார்க்கும் படலம் ஆரம்பித்தது. முதல் கட்டமாக உலகிலேயே மிகவும் பிரபலமான மெழுகுச்சிலைகளுக்கு பெயர் பெற்ற மேடம் துஸ்ஸாட்ஸ் மெழுகு மியூசியம் சென்றோம். கடந்த முறை 2015 -ம் வருடம் லண்டன் போய் இருந்த போது இந்த மியூசியம் பார்க்க முடியவில்லை. காரணம் உள்ளே செல்லும் என்ட்ரி டிக்கெட் வாங்கவே ஒரு மிக நீண்ட வரிசை காத்திருந்தது. லண்டன் டவர் நான் பார்க்க வேண்டும் என்ற அவாவில் இதைத் தவிர்த்து விட்டேன். இந்த முறை கண்டிப்பாக பார்த்து விடுவது என்ற முடிவில்தான் இருந்தேன். அதே போல் பிரயாண ஏற்பாட்டாளர்கள் முதலிலேயே டிக்கெட் ஆன்லைனில் மொத்த குழுவுக்கும் பதிவு செய்து விட்ட படியால், நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்காமல் உள்ளே செல்ல முடிந்தது. கோடை விடுமுறைக்காலம் தொடங்கி விட்டதால் உலகெங்கும் இருந்து மக்கள் வெள்ளம் இந்த மாதிரி இடங்களுக்கு வந்து குவிகிறார்கள். போதாக்குறைக்கு அன்று சனிக்கிழமையும் கூட. கூட்டத்திற்குக் குறையும் உண்டோ?

மேடம் துஸ்ஸாட்ஸ் மெழுகு மியூசியம் உலகப்பிரசித்தி பெற்ற ஒன்று. வேறு சில முக்கிய நகரங்களில் வேறு நாடுகளில் இருந்தாலும், அதனின் ஆரம்பப்புள்ளியாக  இந்த மியூசியம் கருதப்படுகிறது. பதினெட்டாம் நூற்றாண்டைச் சார்ந்த பிரான்ஸ் நாட்டு பெண்மணியான மேரி துஸ்ஸாட் என்பவரின் மெழுகு வடிவமைப்பு திறமையே இந்த மியூசியம் உருவாக்க மூல காரணம். ஒரு மருத்துவரிடம் வேலை பார்த்த மேரி துஸ்ஸாட் மெழுகை உபயோகித்து  மனித முகம் மற்றும் உடலைத் தத்ரூபமாக உருவாக்கும் தேர்ச்சித்திறம் பெற்றார். அந்த மருத்துவர் இறந்த பின் அந்த மெழுகுச் சிலைகளை பெற்ற மேரி லண்டனில் உள்ள பேக்கர் வீதியில் அவற்றை பார்வைக்கு வைத்தார். அதிலிருந்து ஆரம்பித்து இன்று 21 - ம் நூற்றாண்டு வரை இந்த மியூசியம் மக்களிடையே மிகுந்த வரவேற்பு பெற்று வருவதால், இந்த மியூசியம் முழுக்க உலகம் எங்கும் பிரபலமாக உள்ள பல்வேறு துறைகளை சேர்ந்த வல்லுனர்களின் மெழுகு உருவங்கள் தத்ரூபமான வகையில் வைக்கப்பட்டு உள்ளன.   

இரண்டு மாடிகளை கொண்ட இந்த மியூசியம் மிகவும் அதிகஅளவில் மனம் கவரும் விதமாக உள்ளது என்பதில் ஐயம் இல்லை. ஒவ்வொரு இடத்திலும் கூட்டம் நிரம்பி வழிகிறது. தனக்கு பிடித்தவர்கள் சிலையுடன் புகைப்படம் எடுக்க சரியான போட்ட போட்டி. நம்மூர் பாலிவுட் கதாநாயகிகள் மாதுரி தீட்சித் மற்றும் ஐஸ்வர்யா பச்சன், கதாநாயகர்கள் அமிதாப், ஷாருக் கான், ஹ்ரித்திக் ரோஷன் போன்றோர் நம் இந்திய மக்களிடையே மிகவும் பிரபலம். தமிழ் நாட்டை சார்ந்த எந்த பிரபலங்களும் அங்கு இல்லாதது ஒரு வருத்தமே. நமது இந்திய பிரதமர் திரு நரேந்திர மோடி, பழைய முதல்வர் திருமதி இந்திராகாந்தி, தேசப்பிதா மகாத்மா காந்தி என நமக்கு பரிச்சயமான முகங்கள். தலாய்  லாமா, ஒபாமா, டிரம்ப் போன்றோர்கள் ஒரு புறம், நமது நாட்டு சச்சின் விளையாட்டுக்கான பகுதியில், மேலும் அறிவியல் துறையில் ஐன்ஸ்டீன், ஸ்டீபன் ஹாக்கிங் மற்றும் நியூட்டன் ஆகியோர். இது தவிர ஹாலிவுட் பிரபலங்கள் பிராட் பிட் ஜூடி டென்ச், ஆர்னோல்ட் என ஒரு கூட்டம். இது தவிர குழந்தைகளுக்கான கார்ட்டூன் பாத்திரங்கள் மற்றும் பாப் சிங்கர்ஸ் ஜாஸ் சிங்கர்ஸ் என ஒரு குழுவும் ஒவ்வொரு பகுதியிலும் காணப்படுகிறது. அதில் இருந்து திரும்பி வருகையில் ஒரு ரயில் மாதிரியான வண்டியில் அமர்ந்து இரு மருங்கிலும் இங்கிலாந்தின் ஆரம்பம் முதல் இன்று வரை வாழ்ந்த மக்களின் மாதிரிகள் அவர்கள் வாழ்க்கை முறை என மெழுகில் செய்யப்பட்டு காட்சி பொருளாக பார்க்க முடிகிறது. இன்னும் பல சினிமா மாதிரியான காட்சிகள் மெழுகை எப்படி சிலையாக வடிவமைப்பது போன்ற செயல்பாடுகளை விளக்கும் சித்திரம் என நம்  கவனத்தை ஈர்க்கும் வேடிக்கைக்காட்சிகள் நிறைய இருக்கின்றன.

இங்கிலாந்து அரச குடும்பத்தை சார்ந்த அனைவரின் உருவ சிலைகளும் தனியாக ஒரு மேடையில் வைக்கப்பட்டுள்ளன. அங்கே புகைப்படம் எடுக்க மட்டும்  கட்டணம் செலுத்த வேண்டும் . மற்ற எந்த உருவச் சிலைக்கும் அந்தக் கட்டணம் தேவை இல்லை. இங்கிலாந்து ராணி முன் ஒரு மரியாதை வணக்கம் குனிந்து செலுத்திவிட்டு, அவர்கள் நாட்டு கொடியை கையில் ஏந்தியவாறு நானும் என் அப்பாவும் புகைப்படம் எடுத்து கொண்டோம். என் மகனுக்க்ச் சயின்டிஸ்ட் மற்றும் விளையாட்டு துறை பிரபலங்களை விட்டு வர மனமே இல்லை. இங்கிலாந்து ராணி மற்றும் அவர் குடும்பத்தாருடன் எடுத்த புகைப்படம் முக நூலில் பதிவேற்றிய போது நிறைய நண்பர்கள் அந்த சந்திப்பு உண்மை என நினைத்துக்கொண்டார்கள்.

இந்த மியூசியம் பார்க்க கொடுக்கும் கட்டணம் 35 பவுண்ட் ஆகும். நாள் முழுக்க இங்கே செலவிடலாம் எனினும் எங்களுக்குக் கொடுக்கப்பட்ட இரண்டு மணி நேரம் முடிந்து வெளியே வந்து மீண்டும் பேருந்தில் அமர்ந்து அடுத்த இடமான பக்கிங்ஹாம் அரண்மனை நோக்கி காவலாளிகள் மாறும் நிகழ்ச்சி (Change of Guards) பார்க்க வேகமாக சென்றோம். இங்கிலாந்து நாட்டு ராணி இரண்டாம் எலிசபெத் அவர்களுக்கு இருக்கும் மாளிகைகளில் ஒன்று பக்கிங்ஹாம் பேலஸ். அது அமைந்துள்ள இடம்  லண்டன் நகரின்  நடுப்பகுதியான வெஸ்ட்மினிஸ்டர் நகரம். மன்னராட்சியின் நிர்வாகத்தின்  அதிகாரபூர்வ மாளிகையாகவும் இது திகழ்கிறது. இந்த மாளிகையில் அதிகம் ராணி வசிப்பதில்லை என்றாலும், அரசியல் ரீதியிலான  அயல்நாட்டு விருந்தாளிகள்  வரும் போது  அவர்களை ராணி வரவேற்று பேச்சு வார்த்தை நடத்துவது இந்த மாளிகையில்தான். ராணி அதிகம் தன் நாட்களை செலவிடுவது  இங்கிலாந்தின் தென்கிழக்கில் அமைந்துள்ள பெர்க்ஷைர் என்ற இடத்தில உள்ள வின்ட்சர் காசில் என்ற மாளிகையிலும், ஸ்காட்லாண்டில் அபர்டீன்ஸைர்என்ற இடத்தில்உள்ள பால்மோரல் காசில் என்ற மாளிகையிலும் ஆகும். பக்கிங்காம் பாலசில் ராணி இருந்தால் அந்த மாளிகையின் மேற்கூரையில் உள்ள கொடிக்கம்பத்தில் கொடி பறக்கும். அங்கு மட்டுமல்ல, எங்கெல்லாம் ராணி வசிக்கிறாரோ அங்கெல்லாம் இந்த கொடி கண்டிப்பாக கம்பத்தில் பறக்கும்.   

காவலாளிகள் மாறும் நிகழ்ச்சி (Change of Guards) என்பது ஏப்ரல் மாதம் தொடங்கி ஆகஸ்ட் மாதம்  வரை ஒவ்வொரு நாள் காலை 11.30 மணி அளவில் தொடங்கி 12 வரை நடக்கும். பக்கிங்ஹாம்  மாளிகையைப் பாதுகாக்கும் காலாட்படை வீரர்கள் மாளிகையை விட்டு வெளி வந்து தங்கள் பணிகளை ஒரு குழுவினரிடம் இருந்து இன்னொரு குழுவுக்கு மிகவும் சம்பிரதாயமாக தங்களின் சிகப்பு வண்ண   ட்யூனிக் ( மேல் அங்கி) அணிந்து தலையில் பேர்ஸ்கின் எனப்படும் கரடியின் முடி போன்ற நீண்ட தொப்பி அணிந்து  கண் கவர் வண்ணம் மார்ச் பாஸ்ட் செய்து சடங்கு நிகழ்த்துவதே இதன் தாத்பர்யம் ஆகும். இதைப்பார்க்க மாளிகையின் முன் மக்கள் வெள்ளம் திரண்டிருக்கும்.   சுமார் அரைமணி நேரம் நடக்கும் இந்த நிகழ்வை  மக்கள் வெள்ளத்தில் நீந்திக் கொஞ்சம் கஷ்டப்பட்டுதான் பார்க்க வேண்டி இருக்கும். நாங்கள் சென்ற போது அந்த சடங்கின் நிறைவுப்பகுதி நடந்து கொண்டிருந்தது. மழைநாட்கள் மற்றும் கடுங்குளிர் நாட்களில் இந்த நிகழ்வு நடக்காது. சில மாதங்களில் ஒரு நாள் விட்டு ஒரு நாள் நடக்கும். இது பற்றி நன்கு தெரிந்து கொண்டு செல்வது நல்லது.

இதை தவிர அந்த மாளிகையின் மூடிய கம்பி கதவு வழியாகத்தான் அந்த மாளிகையின் வெளித்தோற்றத்தைக் காண முடியும். உள்ளே செல்ல முடியாது. நாம் என்ன இந்தியாவின் மஹாராஜா, மஹாராணிகளா? உள்ளே அழைத்து நம்மை உபசரிக்க. எனவே வெளியே நின்றே உள்ளிருக்கும் மாளிகையையை அனைவரும் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். மாளிகையின் வெளிய மிக அழகிய மலர் தோட்டம் கண்ணை பறிக்கும் வண்ணங்களில் புத்தம் புதிதாய் மலர்ந்து காற்றில் அசைந்தாடியது. அந்த மலர்களின் பெயரும் பாஷையும் எனக்கு புரியாவிடினும், அவற்றின் சுகந்தம் என்னை ஈர்த்தது. பல்வேறு வண்ண மலர் குவியலுக்கு இடையே என் மனம் கவர் துலிப் மலர்கள் வேறு. என் மனம் முழுதும் ஆக்கிரமிப்பு செய்தது  இரும்புக்கம்பியில் ஆன கதவுகளால் பூட்டப்பட்டு கடும் காவலுடன் இருக்கும் பக்கிங்ஹாம் மாளிகை அல்ல.  சுதந்திரமாகச் சாலையின் நடுவே யாரிடமும் அகப்படாமல் தங்களுக்குள்ளே சந்தோஷ மொழி பரிமாறிக்கொண்டிருந்த அந்த மலர்களே. அந்த மலர்களின் சுதந்திரம் அந்த ராணிக்கு இருக்குமா என எனக்குச் சந்தேகம்தான்.

பக்கிங்ஹாம் மாளிகையின் எதிரே ராணி விக்டோரியாவுக்கான ஒரு நினைவாலயம் உள்ளது. அதில் விக்டோரியா ராணியின் குணாதிசயங்களைப் பிரதிபலிக்கும் வெற்றி தேவதையின் சிலை தங்க நிறத்தில்  உயரத்தில் வைக்கப்பட்டு உள்ளது. அதன் கீழேயே மஹாராணி விக்டோரியா அரசாசனத்தில் அமர்ந்து இருக்கும் ஒரு வெண்ணிறச் சிலை. இந்த நினைவாலயத்தின் நான்கு புறங்களிலும் வெண்கலத்தினால் ஆன  சிங்கத்தின் மேல் அமர்ந்திருக்கும் நான்கு ரோமானிய வீரர்களின் சிலைகள். இந்த நினைவாலயத்தின் பின் அழகிய நீரூற்று. பார்ப்பதற்கு மிக மிகவும் அம்சமாக அமைந்துள்ளது.

நண்பகல் வேலை ஆனதால் பசி வயிற்றைக் கிள்ள ஆரம்பித்தது. அனைவரின் கவனமும் மாளிகையை விட்டு விலகியது. அடுத்த நிகழ்ச்சி என்னவாக இருக்க முடியும்? உணவுதான். லண்டனை விட்டு சிறிது  தள்ளி இருந்ததோர்  இந்திய உணவகத்தில் முந்தையநாள் போன்றே வட இந்திய உணவு வகைகளான ரொட்டி, சப்ஜி  மற்றும் பாசுமதி அரிசியில் சாதம் தயிர் மற்றும் ஒரு பாயசம் என்ற உணவு. லண்டனில் கிடைக்கும் இந்திய உணவு மறுக்க முடியுமா?

உணவு முடித்ததும் எங்களுடன் மேலும் ஒரு பிரயாண வழிகாட்டியாகச் சாரா என்ற ஆங்கிலேய பெண்மணி இணைந்து கொண்டார். மதியம் முழுதும் அவர் வழிகாட்டுதலில் சுற்றிப்பார்க்க ஆரம்பித்தோம். உணவு முடித்ததும் புறப்பட்ட பேருந்தில் சாரா இங்கிலாந்து நாடு அதன் ஆட்சி முறை மற்றும் மஹாராணி இரண்டாம் எலிசபெத், அவரின் அதிகார எல்லை, வருமானம், ராணியின் கணவர் கோமான் பிலிப் அவரது மாத வருமானம் என பல சுவையான தகவல்கள் கூறினார். மேலும் லண்டன் நகரத்தின் வரலாறு பற்றியும் விவரமாக கூறினார்.

லண்டனில் நிகழ்ந்த மாபெரும் இரு சோக நிகழ்வுகள் பற்றிக் குறிப்பிடுகையில் முதலாவது  1665  முதல் ஆரம்பித்து 1666  வரை தொடர்ந்த கிரேட் பிளேக் (The Great Plague of London) - காரணம்  அறிய இயலா தொடர் சாவுகள்- காற்றில் பரவும் நோய்க்கிருமிகள் என லண்டனின் கால்வாசி மக்கள் தொகையை, அதாவது சுமார் ஒரு லட்சம் மக்களை அழித்த சாபக்கேடு. இரண்டாவதாக   1666 - ல் நிகழ்ந்த  கிரேட் பைர் (The Great Fire of London) - அது கபளீகரம் செய்ததோ லண்டனின் பெரும்பான்மையான பகுதிகளை. அந்தக் காலத்தில் மரத்தினால் ஆன கட்டிடங்கள் அதிகம் என்பதாலும், தீ முழுதும் பரவிய பிறகே அதை பார்த்ததால் அணைக்க இயலாமல் போனதாலும் லண்டன் நகரமே நாசம் ஆனது. உலகப்புகழ் பெற்ற நாடக  ஆசிரியர் ஷேக்ஸ்பியர் நடத்தி வந்த க்ளோப் நாடக கொட்டகையும் இதில் எரிந்து சாம்பலானது குறிப்பிடத்தக்கது இந்த இரு நிகழ்வுக்குப்பிறகு லண்டன் மீண்டும் புதுப்பிக்கப்பட்டு ஆரம்பிக்கப்பட்டது.

இவ்வாறாகப் பல தகவல்களைக் கேட்டுக்கொண்டே லண்டன் நகரின் மிக அருமையான அடையாளமான இங்கிலாந்திலேயே மிக நீளமான  தேம்ஸ் நதியை அடைந்தோம். போன முறை 2015 -ல் சென்ற போதே அந்த நதியைப் பார்த்துக்கொண்டே வெகு நேரம் குளிரையும் பொருட்படுத்தாமல் நின்று கொண்டிருந்தேன். “உன்னை மீண்டும் சந்திப்பேனா” மனம் நதியிடம் வினவியது. தேம்ஸ் நதியும் சின்ன சலசலப்புச் சிரிப்புடன் நிற்காமல் ஓடிக்கொண்டே இருந்தது. இதோ இன்று மீண்டும் உன்னிடம் நான்!

எத்துணை முறை பார்த்தாலும் அலுக்காத ஓரிளம் அழகி போல் தோற்றம் கொண்ட சிங்கார நதி. பெயர்தான் ஆணுடையது. அதன் குணாதிசயமோ சரித்திரத்தில் வரும் கற்பனைக்கெட்டா காவியநாயகிகளின் விவரிக்க இயலா அழகு கொண்டது. இளம் நீல வண்ணத்தில் இருமருங்கும் கரை புரண்டு ஓடும் தேம்ஸ் எத்தனையோ கவிஞர்களின் கற்பனைக்குதிரையைத் தட்டிவிட்ட புண்ணியாத்மா அல்லவா? என் ஆதர்ச ஆங்கிலக்கவிகள் கண்டு களித்த அந்த நதியின் பேரலைகளை பார்த்தவண்ணம் நின்றால் நமக்கே எத்தனையோ கவிதைகள் மனதில் உதிக்கும்., கீழ்க்கண்டவை என் மனதில் ஓடிய நினைவலைகள்: உன்னை மீண்டும் சந்தித்தது என் வாழ்வில் நான் பெற்ற மாபெரும் பேறு அல்லவா? என் நாட்டின் நதிகள் எல்லாம் வெறும் கழிவு பொருள் மிதக்கும் சாக்கடையாக மாறி வரும் அவலம் உனக்கு புரியவே வேண்டாம். என் நாட்டு ஜீவ நதிகள் ஜீவன் இழந்து மடிந்து  கொண்டிருப்பதைக் காண சகியாமல் அல்லவா நான் உன்னிடம் தஞ்சம் புகுந்தேன். ஒரு நாள் சந்திப்பாயினும் என்னை வாழ வைக்கும் ஜீவ நதி நீ.

என் மண்ணை ஆண்ட ஆங்கிலேயர்களுக்க்ச் சொந்தமாக நீ இருந்தாலும், உன்னை வரம்பு மீறி நான் சொந்தம் கொண்டாடுவேன் என் மனதில் வைத்து. எல்லைக்கோடுகள் உனக்கும் எனக்கும் இல்லையே! எங்கள் ப்ரஹ்மபுத்திரனின் சகோதரன் அல்லவா நீ? நிலத்தின் மேல் தான் நீங்கள் வேறு வேறு. நீ ஆங்கிலேயருக்கு. அவன் எங்களுக்கு. நிலமகள் கருப்பையில் நீங்கள் ஒன்றாக தோன்றியவர்கள்தானே. உன்னிடம் எனக்கு அதிக வாஞ்சை என்பது உனக்கு தெரியும் அல்லவா? இவ்வாறாக ஓடிய என் மனோரதத்தின் உண்மையைப் புரிந்து கொண்டதாலோ என்னவோ, தேம்ஸ் சிலுப்பிக்கொண்டு அனுப்பிய சில்லென்ற மென்காற்று என் தலை முடிகளை வருடி கலைத்தது. நதிகளுடன் உரையாடுவது எவ்வளவு இனிமை என்பது அந்த அனுபவம் பெற்றவர்களுக்கு மட்டுமே விளங்கும்.

அதனுடன் இணைந்த இரு பாலங்களும் பிரபலமானவை. ஒன்று லண்டன் பிரிட்ஜ் என அழைக்கப்படும் பாலமும், இன்னொன்று டவர் பிரிட்ஜ் என்ற பாலமும் ஆகும். தேம்ஸ் நதியின் மேல் லண்டனில் தோராயமாக 12 பாலங்கள் இருந்தாலும், இந்த இரண்டு பாலங்கள் மிகவும் பெயர் போனவை. குழந்தைகளுக்கான நர்சரி பாட்டில் வரும் "லண்டன் பிரிட்ஜ் கீழே விழுகிறது" என்ற வரிகளில் குறிப்பிடப்படும் இந்த பாலம் ரோமானியர்கள் காலத்தில் கட்டப்பட்டு மீண்டும் 19 -ம் நூற்றாண்டு புதுப்பிக்கப்பட்டது. எனினும் பார்ப்பதற்கு கொஞ்சம் பழைய தோற்றத்தில் தான் உள்ளது. டவர் பிரிட்ஜ் புதிதாக இரும்பு கட்டுமான கம்பிகள் கொண்டு கட்டப்பெற்று மிகவும் நேர்த்தியாக தெரிகிறது. டவர் பிரிட்ஜ்ல் சென்றால் சரித்திரத்தில் இடம் பிடித்த லண்டன் டவரை அடையலாம்.

லண்டன் டவர் என்ற சரித்திரத்தில் மிக பிரபலமாக கோட்டை பற்றி இங்கு ஒரு சில விஷயங்கள் குறிப்பிட்டே ஆகவேண்டும். இங்கிலாந்து நாட்டு வரலாற்றின் ரத்தப் பக்கங்கள் கொடூரங்கள் நிறைவேற்றப்பட்ட இடம் லண்டன் டவர் என்னும் அரச கோட்டை. வில்லியம் (William the Conqueror) என்ற பிரான்ஸ் நாட்டு (Duke of Normandy) அரசன் 1066  -ல் இங்கிலாந்தை வென்று அரசனான போது கட்டப்பட்ட கோட்டையே இது. முதலில் அரச குடும்பம் வசிக்கவும், பின்னர் அரசாங்க காரியங்களுக்காகவும் பயன் படுத்தப்பட்ட இந்த கோட்டை காலப்போக்கில் அரசகுடும்பத்தின் எதிரிகளை வைத்திருக்கும் அரசாங்கச் சிறையாகவும் அந்த கோட்டையின் நடுவில் உள்ள மேடையில் எதிரிகளை சிரச்சேதம் அதாவது கோடரியை கொண்டு தலையை கொய்யவும் பயன்படுத்தும் இடமாக மாறியது.

இந்தக் கோட்டையில் அரசகுடும்பத்தின் கைதியாக வைக்கப்பட்ட மிக முக்கியமான நபர்களும் ஒருவர், ராஜா  எட்டாம் ஹென்றியின் (Henry the VIII) காதல் மனைவி  ஆன் போலின் (Anne Bolyn) என்ற ராணி. எட்டாம் ஹென்றிக்கு ஆறு மனைவிகள். முதல் மனைவியான ஸ்பெயின் ராணி பெற்றது பெண் மகவு மேரி (Mary). ராஜாவுக்கு ஆண் வாரிசின் மீது இருந்த மோகம் மட்டும் அல்லாமல் அழகிய பெண்களை தன்வசம் ஆக்கும் பித்தும் இருந்தது. ஸ்பெயின் மனைவி கேத்தரின் (Catherine of Aragon) மீது பிடிப்பு இல்லாதபோது அவர் கண்ணில் பட்ட  ஆன் போலின் என்ற அழகிய நவநாகரீக நாரிமணி மேல் மோகம் ஏற்பட்டது.

எல்லாப் பெண்களையும் அந்தப்புரத்தில் சேர்த்து எண்ணிக்கை அதிகரிப்பது போல் எந்த பெண்ணிடம் பாச்சா பலிக்கவில்லை. ஆன் போட்ட கடுமையான விதி என்னவெனில் ராஜா அவளை மனைவியாக ஏற்றால் மட்டுமே அவர் ஆசைக்கு அடிபணிய முடியும் என்று திட்டவட்டமாக கூறியதுடன், அவளால் ராஜாவுக்கு ஆண் வாரிசு அரசுரிமைக்கு தர முடியும் என்றும் உறுதி கூறினாள் வேறு வழி இல்லாமல்  ராஜா தன் முதல் மனைவியை விவாகரத்து செய்ய போப்பிடம் அனுமதி கேட்க  போப் அனுமதி மறுக்க, கோபத்தில் ராஜா ஹென்றி ஆன்  போலின் வழிகாட்டுதல் படி அவளை விவாகம் செய்யும் பொருட்டே கத்தோலிக்க (Catholic) பிரிவில் இருந்து விலகி ,  போப்பின் ஆதிக்கத்தில் இருந்து முற்றிலுமாக நீங்கி, இங்கிலாந்தில் ஒரு பிரிவு சர்ச் ஆரம்பித்து,  அதற்கு ஆங்கிலிகன் சர்ச் (Anglican Church) என வகுத்து  அந்த பிரிவை சேர்ந்தவர்கள் ப்ராட்டஸ்டன்ட்ஸ் (Protestants) என அறிவித்து அந்த வகை சர்ச்சுக்கு ராஜாவாகிய தானே தலைவர் என அறிவித்து கேத்தரின் விவாக முறிவு செய்து ஆன் போலினை மணந்தார்.

அப்படிப்பட்ட காதல் மனைவி முதலில் பெற்றுக்கொடுத்ததோ ஒரு பெண் மகவு. ஏமாற்றம் அடைந்த ராஜா சிறிது நாளில் மனம் மாறி வேறு ஒரு மலரை நோக்கித் தாவ முயற்சிக்கும்போது, ஆன் போலின் தன் அதிகாரத்தைக் காட்ட முற்பட்ட சமயத்தில் ராஜாவின் சில நண்பர்கள் அவர் மனதை தீய நிலமாக்கி ஆன் போலின் நடத்தை கெட்ட ஒரு பெண்மணி என நம்பவைத்து இந்த லண்டன் டவரில் அரசாங்கக் கைதியாக வைக்கப்பட்டார். பல முறை ராணி ஆன் போலின் ராஜாவை நேரில் பார்த்து பேச அனுமதி கேட்டதும் கிடையாமல் ராணிக்க்ச் சாவு மணி அடிக்க ராஜாவால் கட்டளை பிறப்பிக்கப்பட்டது.

கடைசியாக ராணி தனக்கு வேறு வழி இல்லை என்று தெரிந்ததும், காவலர்கள் மூலம் ராஜாவிடம் ஒரு கோரிக்கை வைத்தாள். அதாவது, ராஜா எத்தனையோ நாள் வர்ணித்து மகிழ்ந்த தன் அழகிய கழுத்து அங்கு உள்ள கோடாரியால் வெட்டப்படக்கூடாது எனவும், தன் சிறிய கழுத்துக்கு ஒரு உடைவாள் கொண்டே சிரச்சேதம் நிகழ்த்தப்படவேண்டும் என்பது. மனம் இறங்கி ராஜாவும் பிரான்சில் இருந்து பிரத்தியேகமாக கொண்டு வந்த நீண்ட மெல்லிய வாளினை வைத்து ராணி ஆன் போலினை சிரச்சேதம் செய்ய அனுமதி வழங்கினார். மே 19 -ம் தேதி, 1536 -ம் வருடம் காலை ராணியின் கழுத்து மண்ணில் வீழ்ந்தபோது ராணியின் வயது 35 -க்குள். அவள் பெற்ற மகவு இரண்டு வயது சிறுமி.. இன்றளவும் இறந்த ஆன் போலின் அந்த டவரை சுற்றி வெட்டுண்ட தன் தலையை தன் கையில் எடுத்துக்கொண்டு அலைவதாக கூறப்படுகிறது சிறிது கூட தன் காதல் மனைவியின் சிரச்சேதம் பற்றி பொருட்படுத்தாத ராஜா அடுத்தடுத்த மனைவிகளை தேடி சென்றது ஒரு தனி கதை.

ஆண் வாரிசுதான் ஆளவேண்டும் என்ற ஆணாதிக்க மனப்பான்மை கொண்ட ராஜா ஹென்றியின் அடுத்த மனைவியின் மகன் ஆறாம் எட்வர்ட்  ராஜாவின் மறைவுக்குப்பின் தன் ஒன்பதாம் வயதில் பதவி ஏற்று உடல் நலக்குறைவு காரணமாக பதினைந்தாம் வயதில் உயிர் துறக்கிறான். அதன் பின், முதல் மனைவி காதரினின் மகள் மேரி நாட்டின் ராணியாகி கொடூரக் கொலைகள் கொடுமைகள் புரிந்து வெறும் ஐந்து வருடமே ஆட்சி புரிந்து உடல் கோளாறு காரணமாக மரணமடைகிறாள். அடுத்ததாக பதவி ஏற்கும் ராணி எலிசபெத் சிரச்சேதம் செய்யப்பட்ட ராணி ஆன் போலினின் மகள் ஆட்சி செய்ததோ 45 வருடங்கள். முதலாம் எலிசபெத் என வரலாற்றில் அழைக்கப்படும் இந்தச் செல்வி ( இறக்கும்  வரை திருமணம் செய்து கொள்ளவில்லை)  எலிசபெத்தின் ஆட்சிகாலம்தான் இன்றுவரை இங்கிலாந்து மன்னராட்சியில் பொற்காலம் என வழங்கப்படுகிறது. அவர் காலத்தில்தான்  ஷேக்ஸ்பியர், மார்லோ போன்ற மாபெரும் எழுத்தாளர்கள் வாழ்ந்து மாபெரும் நாடகங்களை இயற்றினர்.

இந்த மாதிரி பல கதைகள் கூறிக்கொண்டே செல்லலாம். இந்தச் சரித்திர சம்பவங்கள் என் வகுப்பில் முதலாம் ஆண்டு ஆங்கில இலக்கியத்தில் ஒரு பாடமாகவே இருக்கிறது. அதை போதிக்கும் போது எனக்கு தோன்றுவது ஆண் வாரிசுக்காக இங்கிலாந்தில் கூட மறுமணம் நடக்கிறது. அடுத்து தன் மோகம் முடிந்த பின் அந்த பெண்ணைக் கொன்று வீசுவது  என ராஜாவாக இருந்தாலும் கொலைகார மோசமான புத்தியுடன்தான் வாழ்ந்திருக்கிறார்கள் என்பது.

இவ்வளவு சரித்திர பின்னணி கொண்ட இந்த லண்டன் டவர் இந்த பயணத்தில் எங்கள் பார்வையிடும் இடங்களின் பட்டியலில் இல்லாவிடினும், கடந்த முறை 2015 -ல் லண்டன் வந்த போது என் குடும்ப உறுப்பினர்கள் பார்க்க ஆர்வம் காட்டாததால், நானே தனித்து தேம்ஸ் நதியின் ஒரு கரையில் இருந்து, தேம்ஸ் உடன் மனதில் உரையாடிக்கொண்டே டவர் பிரிட்ஜ் நீளத்தை கடந்து சில்லென வீசும் காற்றை பொருட்படுத்தாமல் லண்டன் டவர் நடந்தே சென்றேன். அங்கே நாள் முழுதும் நிறையக் காட்சிகள் நடைபெற்றுக்கொண்டு இருக்கும். லண்டன் டவர் பற்றிய விவரங்கள் அடங்கிய குறிப்பு புத்தகம், அதன் வரை படம், எங்கே சென்றால் என்ன பார்க்கலாம் என்ற அனைத்து தகவல்களும் இலவச கையேடுகளாக கிடைக்கின்றன.     அதனுடன் அங்கே பல பிரிவுகளை உள்ளடக்கிய  மியூசியம் உள்ளது. அதில் பார்வைக்கு இருக்கும் லண்டன் டவர் சார்ந்த பொருட்கள் பற்றிய மேலும் சில சுவையான தகவல்கள். அங்கே ஒரு காட்டு விலங்கு காட்சிசாலை இருக்கிறது. இங்கிலாந்து ராணிக்கு பரிசளிக்கப்படும் விலங்குகள் அங்கே பராமரிக்கப்படுகிறது . அங்கோர் அரச நகைகள் கொண்ட மியூசியம் உள்ளது. அந்த கண்காட்சிசாலையில் இருக்கும் பல கிரீடங்களில் ஜொலிக்கும் வைரங்களில் மிக முக்கியமான இரு வைரங்கள். ஒன்று நமது இந்தியாவின் கோஹினூர்  (மலையின் வெளிச்சம் என்ற பொருள்) வைரம் மற்றும் ஆப்பிரிக்காவின் ஸ்டார் எனும் வைரம். இவை இரண்டுமே மிக அதிக புகழும் மதிப்பும் வாய்ந்தவை. மேலும் இன்னொரு கண்காட்சி அரங்கில் சிரச்சேதம் செய்ய பயன்படுத்திய கோடாரிகள் மற்றும் ஆன் போலின் கழுத்து வெட்ட பயன்படுத்திய நீண்ட வாள் அதனுடன் ராணி எழுதி அனுப்பிய கோரிக்கை கடிதம் எல்லாம் பார்வைக்கு வைக்கப்பட்டு இருக்கும். லண்டன் செல்பவர்கள் கண்டிப்பாக இந்த இடத்தைப் பார்க்கவேண்டும் என்பது எனது தாழ்மையான கருத்து.

தேம்ஸ் நதியின் இக்கரையில் இருந்தே தொலைவில் தெரிந்த லண்டன் டவரை நோக்கிவிட்டு மீண்டும் பேருந்து திரும்பினோம். எங்களுடன் வந்த குழுவினருக்கு  லண்டன்ட  டவர் பார்க்கும் வாய்ப்பு இல்லை என்பது எனக்கு வருத்தமே. அது பற்றி அவர்களுக்குத் தெரியுமா என்று கூட எனக்குத் தெரியாது. ஒரு வேளை! ஆங்கில இலக்கிய வகுப்பில் இங்கிலாந்தின் சமூக வரலாறு நடத்திக்கொண்டு இருக்கும் ஆசிரியராக இருப்பதினால் இவ்வாறு ஒரு அதீத தொடர்பு எனக்கும்  இந்த இடங்களுக்கு இருப்பதாக நான் கற்பனை செய்து மிகைப்படுத்துகிறேனா, அதுவும் எனக்கு தெரியாது. எதுவாக இருந்தாலும், எனக்கு என்னை அந்த இடங்களுடன்  தொடர்பு செய்து உணர்வது . மிகவும் நிறைவை தந்தது.

பேருந்தில் பயணம் செய்யும் போது சாரா இங்கிலாந்தின் ஆட்சி முறை பற்றி விளக்கம் அளித்தார். மன்னராட்சி முறை தற்போது இல்லை ஆனாலும் ராணிதான் தலைமை பொறுப்பில் இருக்கும் அதிகாரி.  நாட்டின் பிரதம மந்திரியை நியமிக்கும் உரிமையும் ராணிக்கே உண்டு. பார்லிமென்டில் இருவகை பிரிவுகள் உள்ளது. ஒன்று ஹவுஸ் ஆப் காம்மன்ஸ் என்பதும் ஹவுஸ் ஆப் லார்ட்ஸ் எனபதும் ஆகும். இந்த இப்பிரிவின் பெரும்பான்மை பெரும் நபரே பிரதம மந்திரி.   

அடுத்ததாக நாங்கள் செல்லவிருக்கும் இடம் இந்த விளக்கம் சம்பந்தப்பட்டது என்பதால்  இந்தச் செயல் முறையை  பல முறை சாரா கூறினார். நாங்கள் சென்ற இடம் லண்டனின் அடுத்த பிரபலமான இடம். வெஸ்ட்மினிஸ்டர் பேலஸ், மற்றும் வெஸ்ட் மினிஸ்டர் அபே. மத்திய லண்டன் பகுதியில் வெஸ்ட் மினிஸ்டர் நகரத்தில், தேம்ஸ் நதியின் வடகரையில் அமைந்துள்ள வெஸ்ட் மினிஸ்டர் மாளிகையே ஹவுஸ் ஆப் பார்லிமென்ட் என வழங்கப்படுகிறது.

வெஸ்ட் மினிஸ்டர் மாளிகையை ஒட்டி ஹவுஸ் ஆப் காமன்ஸ் மற்றும் ஹவுஸ் ஆப் லார்ட்ஸ்க்கு தனித்தனியாக மாளிகைகள் தென்படுகின்றன. வெஸ்ட் மினிஸ்டர் மாளிகையில் மட்டும் சுமார் 1100  அறைகள் இருப்பதாகவும், இந்த மொத்த இடமும் எட்டு ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ளதாகவும் தகவல் கூறப்பட்டது. பழங்கால கட்டிட கலை முறையில்  வெளித்தோற்றத்தில் தெரிந்தாலும், உள்ளே சகல வசதிகளும் உள்ளது. 100  இடங்களில் படிக்கட்டு, மூன்று மைல்கல் அளவில் நடக்கக்கூடிய காரிடோர் என உள்ளே அசத்தும் விஷயங்கள் உள்ளன. ஆனால் நமக்கு உள்ளே செல்ல அனுமதியில்லை. நம் நாட்டின் பார்லிமென்ட் அறைக்கு நாம் முதலில் சென்று இருக்கிறோமா? அப்படித்தான் இதுவும்.  அந்த மாளிகையை ஒட்டி பிக் பென் எனப்படும் லண்டனின் மிக உயரத்தில் உள்ள  கடிகாரம் கம்பீரமாகக் காட்சி அளிக்கிறது.  லண்டன் என்று எந்த இடத்தில் புகைப்படமாக பார்த்தாலும் இந்த கடிகாரம்தான் முன் நிற்கும். லண்டன் ஜகான்ஸ் எனக்கருதப்படும் குறியீடுகளில் இது மிகவும் பிரபலமான ஒன்று. உண்மையில் அது கடிகார டவர் அல்ல. ஆலய மணி உள்ள  டவர் என்பது கொஞ்சம் ஆச்சர்யம் ஊட்டும் உண்மை.

பிக் பென் எதிரே ஒரு பூங்காவில்  இங்கிலாந்து நாட்டின்   சட்ட வல்லுநர்கள், அரசியல் தலைவர்கள் என பலருக்கு வைத்திருக்கும் சிலைகள் நடுவே   உலகின்  மாமனிதர்கள் சிலைகளும் காணப்படுகின்றன. அதில் நமது தேசப்பிதா காந்தி அவர்கள் நடு நாயகமாய்த் தென்படுகிறார். கூடவே நெல்சன் மண்டேலா போன்றவர்கள் சிலைகளும் காணப்படுகின்றன. இங்கிலாந்து நாட்டின் பார்லிமென்ட் அருகே நமது மஹாத்மா சிலை ரூபத்தில் இருப்பது இந்தியாவின் சிறப்பு எனவே கருத வேண்டும். நிறைய இந்தியர்கள் அவர் சிலையின் அருகே சென்று புகைப்படம் எடுத்து மகிழ்கிறார்கள்.

அங்கிருந்தே நாம் பார்க்க முடிந்த இன்னொரு பிரமாண்டம் வெஸ்ட் மினிஸ்டர் அபே.  ஒரு சர்ச்சுக்கும் அபேவுக்கும் உள்ள வித்தியாசமானது யாதெனில் சர்ச் என்பது வழிபாட்டு தலம். ஆனால் அபேயில் வழிபாட்டு தலம் மட்டும் அல்லது அதனுடன் கூடிய அனைத்து செயல்களுக்கும் இடம் இருக்கும். உதாரணமாக அந்த வழிபாட்டு தலத்தை சார்ந்த கன்னியாஸ்திரீகள், மத குருமார்கள் வசிக்கும் இடம்,  அவர்கள் போதனை செய்ய இடம் என அனைத்தும் ஒருங்கிணைந்தது அபே. லண்டனின் மிக  பிரமாண்டமான வெஸ்ட் மினிஸ்டர் அபே செயின்ட் பீட்டர் சர்ச்சுடன் தொடர்புடையது. மேலும் இந்த அபேயில் வந்து வழிபடும் உரிமை அரச குடும்பத்தை மட்டுமே சாரும். ஏழாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்த பழமை வாய்ந்த ஆலயம் பல்வேறு பெருமைகளை உள்ளடக்கியது. அவையாவன:

1 .1066 -ம் வருடம் முதல் இது வரை ராஜ குடும்பத்தின் பல் வேறு ராஜா ராணிக்களுக்கு -இன்றைய ராணி இரண்டாம் எலிசபெத் உள்பட -  மணி முடி சூட்டும் (Church of  Coronation) தலமாக இருந்து வருகிறது.

2. அரச குடும்பத்தைச் சார்ந்த சுமாராக 17 திருமணங்கள் இங்கே நிகழ்த்தப்பட்டு இருக்கின்றன. அதில் எனக்கு தெரிந்து ஆவென தொலைக்காட்சி பேட்டியின் முன்னே தவம் கிடந்தது பார்த்த திருமணம், துரதிஷ்டத்தில் முடிந்த பிரின்ஸ் சார்ல்ஸ், பிரின்சஸ் டயானா அவர்களின் திருமணம். அதன் பின், பிரின்ஸ் சார்லெசின் மகன் வில்லியம் திருமணம் கதே மிடில்டன் உடன்.

3. இந்த அபே கட்டப்பட்ட முறை ரோமானிய கொதிக் (Gothic Architecture) கட்டடக்கலைப்பாணியில் - அதாவது எந்த தூண்களும் இல்லாத பிரமாண்ட மேற்பரப்புகள் உள்ள உட்புறம். மிகவும் முக்கியமாக வெளியில் மேல்புறம் கூர்மையான நுனியுடன் (Pointed Arch) கூடிய வளைவு மிக்க வடிவமாக இருக்கும்.

4. கிட்டத்தட்ட பிரபலங்கள் மூவாயிரம் பேர் இங்கே கல்லறையில் அமைதியாக துயில் கொள்கிறார்கள். கல்லறையில் நாம் சில இட ஒதுக்கீட்டு முறைகளைக் காணலாம். ராஜ குடும்பத்க்ச் சார்ந்தவர்களின் கல்லறைகள் தனி இடம். அவர்களுக்குச் சேவை செய்தவர்கள், தரம் வாரியாக - அந்தப்புரத்து பெண்கள், காலாட்படை வீரர்கள், மெய்காப்பாளர்கள் என இனம் வாரியாக கல்லறைகள். பின் நினைவு சின்னங்களாக சில கல்லறைகள் - போரில் இறந்தவர்கள், நாட்டுக்காக உயிர் நீத்தவர்கள் என ஒரு பகுதி. கவிகளின் தனியிடம் என்ற இடத்தில் ஆங்கில இலக்கியத்தில் என்றும் உயிர் வாழும் மாபெரும் கவிகளின் கல்லறைகள் அவர்களின் பெருமைகளை இன்னும் உலகுக்கு பறை சாற்றுகின்றன.

இத்தகைய சிறப்பு மிக்க வெஸ்ட் மினிஸ்டர் அபே பார்த்த பின் லண்டனின் அடுத்த பார்க்க வேண்டிய விஷயமான லண்டனின் கண் (London Eye) எனப்படும் ஜெயண்ட் வீல் போல் உயரே நம்மை தூக்கி சென்று லண்டனைக் காண்பிக்கும் ஒரு சாதனம் சென்றோம். மிக நீண்ட வரிசையில் மக்கள் வெள்ளம். டிக்கெட் வாங்க எங்கள் ஏற்பாட்டாளர் சென்று இருந்த போது  அந்த கூட்டத்தில் ஒரே சலசலப்பு. ஆம்புலன்ஸ் வண்டிகள் வரவும், மிக ஒழுங்கான முறையில் மக்கள் கூட்டத்தைக் கட்டுப்படுத்தி யாரையோ அதில் எடுத்து செல்வதும் தெரிந்தது. யாரோ ஒருவருக்கு கழிவறையில் இருக்கும்போது மயக்கம் வந்து விட்டதாகவும், உடலில் ஏதோ கடுமையான சுகவீனம் ஏற்பட்டு இருப்பதாகவும் அதனால் மருத்துவமனை கொண்டு செல்வதாகவும் கூறினார்கள். அடுத்த பாத்து நிமிடங்களில் லண்டன் கண்களின் சுழற்சி நிறுத்தப்பட்டு அன்று அந்த சாதனம் இயங்கப்போவதில்லை  என்ற அறிவிப்பு வெளியானது. முதலிலேயே டிக்கெட் வாங்கியவர்கள் அடுத்த நாள் அல்லது வேறு ஒரு நாள் அதை பயன்படுத்திக்கொள்ளலாம் எனவும் கூறப்பட்டது. அந்த லண்டன் காரணமாக அந்த நோயாளிக்கு பிரச்சினை இல்லை எனினும் உடனே அதை நிறுத்தியது நிர்வாகம். அது அவர்கள் செயல்முறை.    அதற்கு எல்லாரும் கட்டுப்படவும் செய்தார்கள். எங்கள் குழுவில்தான்

அனைவருக்கும் சரியான கோபம். அதற்கும் சேர்த்து நாங்கள் பணம் செலுத்தி இருக்கிறோமே. நாங்கள் நாளையாவது இதை பார்க்க வேண்டும் என்று ஒரே வாக்குவாதம். அடுத்த நாள் அதிகாலையே கிளம்பி பாரிஸ் நகரம் செல்லவேண்டி உள்ளதால் இந்த லண்டனைப் பார்க்க இயலாது என எங்கள் பயண வழிகாட்டி நண்பர் பாலா அமைதியாக எடுத்து கூறியும் அனைவரும் மிகுந்த கோபத்துடன் இந்தியாவில் உள்ள பிரயாண ஏற்பாட்டாளர்களிடம் தகவல் கூறச் சொன்னார்கள். நாங்கள் இந்த விஷயத்தில் சேரவில்லை. இந்த சாதனம் நிறுத்தப்பட்டது எதிர்பாரா நிகழ்வு. மேலும் லண்டனைப் போலவே உள்ள சிங்கப்பூர் ஃப்ளையர் ஏற்கனவே நாங்கள் சிங்கப்பூரில் பார்த்திருந்த காரணத்தால் பெரிதாக ஏதோ இழந்தது போல் எங்களுக்குத் தோன்றவில்லை. கடைசியாக பாலா அவர்களை சமாதானப்படுத்தி ஆக்ஸ்போர்ட் வீதி சென்று ஷாப்பிங் செல்லலாம் என்று கூறி முடித்தார். அதே போல் ஷாப்பிங் கொஞ்ச நேரம் (எல்லாமே கண்ணாடி ஷோ கேசில் தெரிவதை வேடிக்கை பார்ப்பதுதான், வேறு என்ன?) செய்துவிட்டு, இரவு உணவுக்கு இந்திய உணவகமொன்றுக்குச் சென்று உணவருந்திவிட்டு, அடுத்த நாள் காலை நேரத்தில் கிளம்பி படகின் மூலம் பிரான்ஸ் நாடு செல்ல வேண்டும் என்ற நினைவுடன் உறங்க ஆரம்பித்தோம்.

லண்டனை பொருத்தமட்டும் நாங்கள் எல்லா இடங்களையும் பார்த்தோம் என்று கூறிவிட முடியாது. இன்னும் சொல்லப்போனால் ஒவ்வொரு இடம் ஒரு நாளில் கூட பார்க்க முடியாது. அவசரமாக சாதத்தை வாயில் அள்ளி திணித்து உணவு அருந்தியதாக எண்ணிக்கொள்வது போலத்தான் இதுவும். எனினும், மனம் எனக்கு பிடித்த இடங்களை பார்த்த திருப்தியில் நிறைந்திருந்தது. நாங்கள் தங்கி இருந்த இரண்டு நாட்களும் லண்டனின் தட்பவெப்ப நிலை 14 டிகிரிசெல்சியஸ் பகலிலும் இரவில் 6 டிகிரிசெல்சியஸ்  வரையும் இருந்தது. பெரிதாக குளிரில் அவதிப்படவில்லை. மழையும் இல்லாததால் சூரிய வெளிச்சம் நன்கு எங்களுக்கு சுற்றிப்பார்க்க உதவியது. மொத்தத்தில், எங்கள் லண்டன் பயணம் மனநிறைவு தந்த  ஒன்றாகவே இருந்தது.

[தொடரும்]

* முனைவர் ஆர்.தாரணிஇந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R

 
பதிவுகளுக்குப் படைப்புகளை அனுப்புவோர் கவனத்துக்கு!
 உள்ளே
குடிவரவாளர் இலக்கியத்துக்கான ஆஸ்திரிய இருமொழிச் சஞ்சிகை!
வாசிக்க

அ.ந.கந்தசாமியின் நாவல் 'மனக்கண்' மின்னூல்!
வாங்க
வ.ந.கிரிதரனின் 'பால்ய காலத்துச் சிநேகிதி' மின்னூல்!
பதிவுகளில் வெளியான சிறு நாவலான எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'பால்ய காலத்துச் சிநேகிதி' தற்போது அமேசன் & கிண்டில் மின்னூற் பதிப்பாக, பதிவுகள்.காம் வெளியீடாக வெளியாகியுள்ளது. தமிழ் அகதி இளைஞன் ஒருவனின் முதற்காதல் அனுபவங்களை விபரிக்கும் புனைகதை.  மின்னூலினை வாங்க

                                         

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991
'பதிவுகள்' - ISSN  1481 - 2991
ஆசிரியர்:  வ.ந.கிரிதரன்
Editor-in - Chief:  V.N.Giritharan
"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்"
"Sharing Knowledge With Every One"

ஆசிரியர்:  வ.ந.கிரிதரன்
மின்னஞ்சல் முகவரி: editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com
 
'பதிவுகள்' ஆலோசகர் குழு:
பேராசிரியர்  நா.சுப்பிரமணியன் (கனடா)
பேராசிரியர்  துரை மணிகண்டன் (தமிழ்நாடு)
பேராசிரியர்   மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)
எழுத்தாளர்  லெ.முருகபூபதி (ஆஸ்திரேலியா)

அடையாளச் சின்ன  வடிவமைப்பு:
தமயந்தி கிரிதரன்

'Pathivukal'  Advisory Board:
Professor N.Subramaniyan (Canada)
Professor  Durai Manikandan (TamilNadu)
Professor  Kopan Mahadeva (United Kingdom)
Writer L. Murugapoopathy  (Australia)
 
Logo Design: Thamayanthi Giritharan

பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு!

பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே  வெளிவரும்.  அதே சமயம்  'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD)  நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு  உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை  அனுப்ப  விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது  மின்னஞ்சல் மூலமும்  admin@pathivukal.com என்னும் மின்னஞ்சலுக்கு  e-transfer மூலம் அனுப்பலாம்.  உங்கள் ஆதரவுக்கு நன்றி.


பதிவுகள்.காம் மின்னூல்கள்

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991

பதிவுகள்.காம் மின்னூல்கள்


Yes We Can
வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க
வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்'
எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை  கிண்டில் பதிப்பு மின்னூலாக வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $6.99 USD. வாங்க
https://www.amazon.ca/dp/B08TGKY855

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' நாவலின் திருத்திய இரண்டாம் பதிப்பினை மின்னூலாக  வாங்க...

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW'
எழுத்தாளர் வ.ந.கிரிதரன்
' வ.ந.கிரிதரன் பக்கம்'என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/

 


வ.ந.கிரிதரனின் 'கணங்களும் குணங்களும்'

தாயகம் (கனடா) பத்திரிகையாக வெளிவந்தபோது மணிவாணன் என்னும் பெயரில் எழுதிய நாவல் இது. என் ஆரம்ப காலத்து நாவல்களில் இதுவுமொன்று. மானுட வாழ்வின் நன்மை, தீமைகளுக்கிடையிலான போராட்டங்கள் பற்றிய நாவல். கணங்களும், குணங்களும்' நாவல்தான் 'தாயகம்' பத்திரிகையாக வெளிவந்த காலகட்டத்தில் வெளிவந்த எனது முதல் நாவல்.  மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08TQRSDWH


அறிவியல் மின்னூல்: அண்டவெளி ஆய்வுக்கு அடிகோலும் தத்துவங்கள்!

கிண்டில் பதிப்பு மின்னூலாக வ.ந.கிரிதரனின் அறிவியற்  கட்டுரைகள், கவிதைகள் & சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு 'அண்டவெளி ஆய்வுக்கு அடிகோலும் தத்துவங்கள்' என்னும் பெயரில் பதிவுகள்.காம் வெளியீடாக வெளிவந்துள்ளது.
சார்பியற் கோட்பாடுகள், கரும் ஈர்ப்பு மையங்கள் (கருந்துளைகள்), நவீன பிரபஞ்சக் கோட்பாடுகள், அடிப்படைத்துணிக்கைகள் பற்றிய வானியற்பியல் பற்றிய கோட்பாடுகள் அனைவருக்கும் புரிந்துகொள்ளும் வகையில் விபரிக்கப்பட்டுள்ளன.
மின்னூலை அமேசன் தளத்தில் வாங்கலாம். வாங்க: https://www.amazon.ca/dp/B08TKJ17DQ


அ.ந.க.வின் 'எதிர்காலச் சித்தன் பாடல்' - கிண்டில் மின்னூற் பதிப்பாக , அமேசன் தளத்தில்...


அ.ந.கந்தசாமியின் இருபது கவிதைகள் அடங்கிய கிண்டில் மின்னூற் தொகுப்பு 'எதிர்காலச் சித்தன் பாடல்' ! இலங்கைத் தமிழ் இலக்கியப்பரப்பில் அ.ந.க.வின் (கவீந்திரன்) கவிதைகள் முக்கியமானவை. தொகுப்பினை அமேசன் இணையத்தளத்தில் வாங்கலாம். அவரது புகழ்பெற்ற கவிதைகளான 'எதிர்காலச்சித்தன் பாடல்', 'வில்லூன்றி மயானம்', 'துறவியும் குஷ்ட்டரோகியும்', 'கைதி', 'சிந்தனையும் மின்னொளியும்' ஆகிய கவிதைகளையும் உள்ளடக்கிய தொகுதி.

https://www.amazon.ca/dp/B08V1V7BYS/ref=sr_1_1?dchild=1&keywords=%E0%AE%85.%E0%AE%A8.%E0%AE%95%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF&qid=1611674116&sr=8-1


'நான் ஏன் எழுதுகிறேன்' அ.ந.கந்தசாமி (பதினான்கு கட்டுரைகளின் தொகுதி)


'நான் ஏன் எழுதுகிறேன்' அ.ந.கந்தசாமி - கிண்டில் மின்னூற் தொகுப்பாக அமேசன் இணையத்தளத்தில்! பதிவுகள்.காம் வெளியீடு! அ.ந.க.வின் பதினான்கு கட்டுரைகளை உள்ளடக்கிய தொகுதி.

நூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08TZV3QTQ


An Immigrant Kindle Edition

by V.N. Giritharan (Author), Latha Ramakrishnan (Translator) Format: Kindle Edition


I have already written a novella , AMERICA , in Tamil, based on a Srilankan Tamil refugee’s life at the detention camp in New York. The journal, ‘Thaayagam’ was published from Canada while this novella was serialized. Then, adding some more short-stories, a short-story collection of mine was published under the title America by Tamil Nadu based publishing house Sneha. In short, if my short-novel describes life at the detention camp, this novel ,An Immigrant , describes the struggles and setbacks a Tamil migrant to America faces for the sake of his survival – outside the walls of the detention camp. The English translation from Tamil is done by Latha Ramakrishnan.

https://www.amazon.ca/dp/B08T6QJ2DK


America Kindle Edition

by V.N. Giritharan (Author), Latha Ramakrishnan (Translator)


AMERICA is based on a Srilankan Tamil refugee’s life at the detention camp in New York. The journal, ‘Thaayagam’ was published from Canada while this novella was serialized. It describes life at the detention camp.

https://www.amazon.ca/dp/B08T6186TJ