கிரேக்க நாடகாசிரியர்  ஹோமர் அவர்கள் எழுதிய ஒடிசி பற்றிய சுருக்க வரைவு. - முனைவர் தாரணி அகில் -

-  Dr. R. Dharani M.A.,M.Phil., M.Ed., PGDCA., Ph.D. Assistant Professor in English, LRG Government Arts College for Women –

மிக நீண்ட பயணத்தின் பல்வேறு பரிணாமங்கள் என்பதே  ஒடிசி என்ற வார்த்தையின் பொருள். காலத்தால் அழியா    கிரேக்க காவியமான ஹோமரின் ஒடிசி, காப்பிய நாயகனான யூலிஸிஸ் என்ற மாபெரும் கிரேக்க வீரனின் ஒரு நெடுந்தூர பயணத்தை விவரிக்கும் விதமாக அமைந்துள்ளது. கி. மு எட்டாம் நூற்றாண்டில் எழுதப்பெற்ற ஒடிசி ஹோமரின் முந்தய காப்பியமான இலியட் என்ற புத்தகத்தின் தொடராக அமைகிறது. இலியட் காப்பியத்தில் கிரேக்கர்களும், டிராய் மக்களுக்கும் நடந்த  ட்ரோஜன் போர் மற்றும்  அதன் முடிவு பற்றி விவரிப்பதாக உள்ளது. எனினும், அதன் தொடர்ச்சிக்காப்பியமான ஒடிஸியில் கதாநாயகன் யூலிஸிஸ் ( இன்னொரு பெயர் ஒடிஸிஸ்) மேற்கொள்ளும் தீரம் நிறைந்த பயணங்களை எடுத்துரைப்பதாக உள்ளது. ட்ரோஜன் போரில் மிகுந்த துணிவுடன் பங்கு பெற்று தன் கிரேக்க நாட்டுக்கு மாபெரும் வெற்றிக்கனியை ஈட்டித்தரும் யூலிஸிஸ், தன் தாயகமான இதாகாவுக்கு செல்லும் வழியில் பத்து வருடங்களாக  மேற்கொள்ளும் பயண சாகசங்கள் நிறைந்த காப்பியம் என்ற வகையில் ஒடிசி புதுமைக்காப்பியமாக படைக்கப்பட்டு உள்ளது.

தன் சகாக்களுடன் தாயகம் நோக்கி புறப்படும் யூலிஸிஸ் பல்வேறு விதமான விசித்திர அனுபவங்கள் நிறைந்த நெடும்பயணம் மேற்கொள்ளுகிறான். டிராய் நகரத்தில் இருந்து பன்னிரண்டு கப்பல்களில் தன் குழுவினருடன் புறப்படும் யூலிஸிஸ் சிறு தூரம் அலைக்கடலில்  கடந்த பின் ஒரு சிறிய நிலப்பரப்பை காண்கிறான். சிகானீஸ் எனப்படும் அந்நிலப்பரப்புவாசிகள் இந்த குழுவினரை பார்த்து பக்கத்தில் உள்ள மலைகளை நோக்கி ஓடி தப்பிவிட, யூலிஸிஸ் தன் குழுவினருடன் அந்த  நிலப்பரப்பில் இறங்கி அங்குள்ள பொருட்களை சூறையாடி தன் கப்பல்களை நிரப்புவதுடன், நல்ல உணவு மற்றும் வைன் முதலியவற்றை ருசி பார்த்து அனுபவிக்கின்றான்,

நீராக வழிந்து ஓடும் வைன் ருசியில் மதி மயங்கி அந்த நிலப்பரப்பில் போதையில் உறங்கும் அவர்களை, நள்ளிரவில் எதிர்பாரா விதமாக சிகானீஸ் தங்களின் கொடூரமான நண்பர்களுடன் வந்து கொலைத் தாக்குதல் நடத்தி துரத்தி அடிக்கிறார்கள். நிலைகுலையும் யூலிஸிஸ் மற்றும் அவனது சகாக்கள் கப்பல்களை நோக்கி பின்வாங்கி தப்பிக்க முனைகிறார்கள். எனினும், அவர்கள் தரப்பில் அதிக சேதம் விளைகிறது. மிகுந்த தீரம் கொண்ட பல கிரேக்க வீரர்கள் மரணிக்கிறார்கள். தப்பிக்கும் யூலிஸிஸ் தன் சகாவான யூரிலோகாஸ் மீது மிகுந்த சினம் கொண்டு யுத்தம் செய்கிறான். அவர்கள் இருவரும் சக வீரர்களால் தடுக்கப்படுவதால் மீண்டும் அமைதி நிலவுகிறது.

தெற்கு நோக்கி வட்டமிடும் கப்பல்கள், சற்றும் எதிர்பாராவிதமாய் ஏற்படும் சூறாவளிக்காற்றின் சுழற்சியால் இழுத்து செல்லப்பட்டு, லோட்டஸ் ஈட்டர்ஸ் (தாமரை உண்ணிகள்) என்னும் தீவில் கரை சேர்கிறார்கள். தீவை சுற்றிப்பார்க்கும் யூலிஸிஸ் தன் சகாக்கள் அங்குள்ள மக்களிடம் அங்கு விளையும் தாமரை என்னும் உணவை உண்பதை காண்கிறான். அந்த தாமரை மலர்கள் போதை நிறைந்த வஸ்துக்கள் உள்ளதாக இருப்பதால், அதை உண்ணும் வீரர்கள் அதன் வசிய சக்தியில் மயங்கி தங்கள் சுற்றம் வீடு மனை மற்றும் மக்கள் அனைத்தையும் மறந்து அந்த தீவின் போதை நிறைந்த வஸ்துக்களிலேயே வாழ விழைகிறார்கள். நிலைமையின் தீவிரம் அறியும் யூலிஸிஸ் தன் மற்ற நண்பர்களுடன் தாமரை உணவில் மதி மயங்கி உள்ள வீரர்களை குண்டுக்கட்டாக தூக்கி கப்பலுக்கு எடுத்து வருகிறான்.

அதன் பின் சில நாட்கள் பயணம் செய்யும் நிலையில், அவர்கள் ஒரு விசித்திரமான ஓர் இடம் காண்கிறார்கள். அந்த இடத்தில் மிக பிரமாண்டமான ஒரு குகையின் முகத்துவாரத்தையும் பார்க்கிறார்கள். அதன் உள்ளே செல்லும் அவர்கள் அங்கே காணப்படும் ஆடுகளை வெட்டித் தம் பசியாறுகிறார்கள். துரதிஷ்டவசமாக, அந்த ஆடுகள் பாலிபீமஸ் என்ற கொடூர அரக்கனுக்குச் சொந்தமானவை என்பது அவர்களுக்கு தெரியாமல் போகிறது. கடும் கோபம் கொள்ளும் அரக்கன் யூலிசிஸின் இரண்டு சகாக்களின் தலையை குகை சுவற்றில் மோதி இறக்க செய்கிறான். மேலும் மற்ற அனைவரையும் அந்த குகையில் அடைத்து வைக்கிறான். யூலிஸிஸ் தன் சமயோசித புத்தியினால் கடைசியில் அந்த அரக்கனை கொண்டு தன் சகாக்களை அங்கிருந்து தப்ப வைத்து மீண்டும் தங்கள் கப்பலை அடைகிறான். அடுத்து அவர்கள் கப்பல் சென்று சேரும் இடம் காற்றின் கடவுளான ஏஓலிஸ் வசிப்பிடம். ஏஓலிஸ் தன் பரிசாக ஒரு பை நிறைய காற்றை அளித்து அதனை சாமர்த்தியமாக பிரயோகித்து யூலிசிஸின் சொந்த பூமியான இத்தாக்கா செல்ல வரம் அளிக்கிறார். ஆனால், கப்பலில் யூலிஸிஸ் உறங்கும் சமயம், அவனது சக வீரர்கள் ஆர்வக்கோளாறில் அந்த பையை திறந்து விட, கடும் புயல் காற்று ஏற்பட்டு மீண்டும் யூலிஸிஸ் ஏஓலிஸ் வசம் வந்து சேர நேர்கிறது. சினம் கொண்ட ஏஓலிஸ் மீண்டும் யூலிசிஸ்க்கு உதவ மறுக்கிறார். மனம் நொந்த யூலிஸிஸ் தன் விதியை சபித்த படி கடலில் மீண்டும் பயணம் மேற்கொள்ளுகிறான்,

நரமாமிசம் உண்ணும் அரக்கர்கள், மாய வலை விரிக்கும் மோகினி என யூலிஸிஸ் சந்திக்கும் விசித்திரங்களின் பட்டியல் நீளுகிறது. இறந்து பாதாள உலகம் வசிக்கும் தன் தாயையும் அவன் சந்திக்க நேரும் விந்தையும் நிகழ்கிறது. பாடல்கள் மூலம் வசியம் செய்யும் மாயப்பெண், ஆறு தலையுடன் காணப்படும் நாகம் என கடக்கும் யூலிஸிஸ்,  ஒரு கட்டத்தில் தன் கப்பல் முழுதும் பழுதடைந்துவிட, காலிப்சோ என்ற கடல் கன்னியுடன்ஏழு ஆண்டுகள் குடித்தனம் நடத்துகிறான்.
ஒரு வழியாக புது கப்பலை உருவாக்கி பின் தாயகம் திரும்புகிறான். முதன் முதலாக தன் குல வாரிசான தன் மகன் டெலிமாக்கஸ் என்னும் பதினைந்து வயது சிறுவனையும், மனைவி பெனிலோபியையும் பார்த்து பூரிப்படைகிறான்.

டிராய் வெற்றியை தொடர்ந்து மாவீரனாக தாய்நாடு திரும்பும் யூலிசிஸின் போக்கை அவன் பயணம் மாற்றுகிறது.பயணங்கள் யூலிசிஸ்க்கு கற்று கொடுத்த பாடங்கள் ஏராளம். தன் பாதையில் சந்தித்த ஆபத்துகள் யூலிஸிஸை சிறந்த சாகசக்காரனாக மாற்றியது என்பதில் ஐயம் இல்லை. யூலிசிஸின் பயணங்கள் மூலம் அவன் மிக சிறந்த மதி நுட்பத்தை அடைவதுடன், மற்ற மனிதர்களை எடை போட்டு தரம் பிரிப்பதிலும் தேர்ந்தவனாகிறான். தன் சகாக்களுக்கு நேரும் பல ஆபத்துக்களை தன் வீரத்தால், விவேகத்தால் தவிர்த்து தன் பயணத்தை தொடர முற்படுகிறான்.    பயணம் கொடுத்த அனுபவத்தின் காரணமாக நாட்டில் இருக்க விரும்பாமல், யூலிஸிஸ் தன் மகன் டெலிமாக்கஸ்க்கு முடி சூட்டிய பின் தன் நாடு துறந்து, இலக்கற்ற குறிக்கோளுடன் கடலின் மீது மேற்கு நோக்கி மீண்டும் ஒரு நெடிய புறப்பாடு மேற்கொள்ளுகிறான்.

- - முனைவர் ஆர்.தாரணி-  - இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.