* ஓவியம் - AI

பிள்ளைப்பருவத்துக்கும் (childhood) வளர்ந்தோர் என்ற நிலைக்கும் (adulthood) இடையிலான காலம் வளரிளம்பருவம் எனப்படுகின்றது. இதன் தொடக்கமும் முடிவும் பிள்ளைக்குப் பிள்ளை வேறுபடலாம். ஒன்பது வயது முதல் 25 வயது வரையான காலத்துக்கிடையில் இப்பருவம் அமைந்திருக்கும்.

வளரிளம்பருவத்தினருடன் தொடர்பாக உள்ளவர்கள் எதிர்நோக்கும் சவால்கள் பற்றியே பொதுவாக பேசப்படுவதுண்டு.  இந்தக் கட்டுரை வளரிளம்பருவத்தினர் எதிர்நோக்கும் சவால்களையும், அவற்றுக்கான அடிப்படைக் காரணங்களையும் அவற்றை அவர்கள் மேவுவதற்கு வளர்ந்தோர் எவ்வகையில் உதவிசெய்யலாம் என்பதையும் ஆராய்கின்றது.

ஒருவரின் உளவியல்ரீதியான நலத்துக்கும், மேம்பாட்டுக்கும், குடும்பத்தவராலும், சூழவுள்ள சமூகத்தவராலும் அங்கீகரிக்கப்படும் ஒருவராக நான் இருக்கிறேன் (belonging), என் இருப்பு முக்கியமானது (significance) என்ற நம்பிக்கை அவசியமானது என்கின்றனர் உளவியலாளர்கள். குழந்தைகளினதும், வளரிளம்பருவத்தினரதும் உளவியல்ரீதியான இந்தத் தேவைகள் பூர்த்திசெய்யப்படும்போது, பத்திரமாகவும் பாதுகாப்பாகவும் இருப்பதாக அவர்கள் உணர்கிறார்கள். அந்த உணர்வு அவர்களின் சுயமதிப்பை மேம்படுத்துகிறது.

பெற்றோர், நண்பர்கள், ஆசிரியர்கள், சமூகத்தினர்/நண்பர்கள் என நான்குவகைப் பிரிவினர் வளரிளம்பருவத்தினருடன் தொடர்பானவர்களாக இருக்கின்றார்கள். இந்தப் பிரிவினரில் எவருடனாவது தாங்கள் சார்ந்திருக்கவில்லை என வளரிளம்பருவத்தினர் உணரும்போது குறிப்பிட்ட அந்தப் பிரிவினரின் கவனத்தைத் தங்கள்மீது ஈர்ப்பதற்கு அவர்கள் மிகுந்த பிரயத்தனப்படுவார்கள். அந்தக் கவன ஈர்ப்பு நடவடிக்கைகளுக்கு அவர்கள் விரும்பும்வகையில் எதிர்வினைகள் கிடைக்காதபோது, தங்களிடமும் அதிகாரம் இருக்கிறது எனக் காட்டுவதற்குச் சிலர் முயற்சிக்கிறார்கள். அது பெற்றோருடனும் ஆசிரியர்களுடனுமான அதிகார மோதலாக விஸ்வரூபம் எடுக்கிறது. அந்த மோதலிலும் அவர்களுக்கு வெற்றி கிடையாதபோது பழிவாங்கல் எண்ணம் அவர்களில் முனைப்படலாம். அதனால் அவர்கள் பணிவில்லாமல் நடக்கக்கூடும், வேண்டுமென்றே ஏற்கத்தகாத நடத்தைகளைக் காட்டக்கூடும். அதேநேரத்தில், இந்தச் சூழல் வேறு சிலரை தாங்கள் முக்கியமானவர்கள் அல்ல, இந்த உலகத்துக்குத் தங்களைத் தேவையில்லை என்றும் நம்பச்செய்கிறது. அப்படியானதொரு பரிதாபநிலை, அவர்களின் சுயமதிப்பைக் குறைக்கின்றது. வாழ்வில் நம்பிக்கையை இழக்கச்செய்கிறது. அது தங்களைத் தாங்களே காயப்படுத்தல், தற்கொலைக்கு முயற்சித்தல் போன்ற விபரீதமான முடிவுகளை அவர்கள் எடுக்கக் காரணமாகின்றது. சவால்களை எதிர்கொள்ள முடியாமைதான், எதிர்மறையான கவன ஈர்ப்பு நடவடிக்கைகள், அதிகார மோதல்கள், பழிவாங்கல்கள், விபரீதமான முடிவுகள் போன்ற அனைத்துக்குக்கும் காரணமாகின்றது.

வளரிளம்பருவத்தினரைச் சுதந்திரமாகப் பேசுவதற்கு அனுமதிக்காதவர்களாகவும், அவர்களைத் தீவிரமாகக் கண்காணிப்பவர்களாகவும் பெற்றோர் இருக்கும்போது பிரச்சினைகள் தீவிரமாகின்றன என்கிறார்கள் மனநல மருத்துவர்கள்.

வளரிளம்பருவத்தினரில் இயற்கையாக நிகழும் மாற்றங்கள்:

உடல்ரீதியானவை:

ஒப்பீட்டளவில், அதிக வளர்ச்சி காணப்படும், அத்துடன் பருவமடைதலைக் காட்டும் மாற்றங்களும் தென்படும். இது தங்களின் தோற்றம் பற்றிய கரிசனைகளைப் பிள்ளைகளுக்கு உருவாக்கக்கூடும்.

சமூகரீதியானவை:

சகமாணவர்களின் செல்வாக்கு உச்சநிலையில் இருக்கும் பருவமாக இது இருக்கிறது. அதனால் நட்பைப் பேணுவதற்காக, அங்கீகாரத்தைப் பெறுவதற்காக அல்லது, அடாவடித்தனத்திலிருந்து தப்பிக்கொள்வதற்காக ஆபத்தான நடத்தைகளில்கூட அவர்கள் ஈடுபடக்கூடும்.

அத்துடன் சுதந்திரமாகவும் சுயாதீனமாகவும் இருக்கவேண்டுமென்ற விருப்பு, பெற்றோருடன் நெருக்கமாக இருப்பது "Not cool" என அவர்களைக் கருதவைக்கலாம்.

மனரீதியானவை:

அடையாளத்துக்கான தேடலும், பருவமடைதலின்போதான ஓமோன்களின் தாக்கங்களும் உணர்ச்சிக் குழப்பங்​கள், பதற்றம், மனச்சோர்வு என்பவற்றைப் வளரிளம்பருவத்தினரில் ஏற்படுத்தக்கூடும்.
 
நியாயப்படுத்தல், பிரச்சினைகளைத் தீர்த்தல் போன்ற அறிவாற்றல்ரீதியான திறன்கள் இப்பருவத்தில் விருத்தியடைகின்றபோதும், முன்மூளையின் விருத்தி முழுமை பெறாமலிருப்பதால் உணர்ச்சிகளைக் கையாளும், சிந்தித்து முடிவெடுக்கும் திறன் ஆகியவற்றில் சவால்களை அவர்கள் எதிர்நோக்கக்கூடும்.

இந்த மாற்றங்களின்போது ஏற்படும் சவால்களைப் 10 பிரிவுகளாக வகுக்கலாம்:

    சுயமதிப்பு மற்றும் தோற்றம் பற்றிய எண்ணப்பாடு பாதிக்கப்படல் - இப்பருவத்தில் உருவாகும் சுயமதிப்பும் தோற்றம் பற்றிய எண்ணப்பாடும் ஒருவர் எவ்வகையான வாழ்க்கைப் பெறுமானங்களைக் கொண்டவராக இருக்கப்போகின்றார், அவரின் வாழ்க்கை எப்படி அமையப்போகின்றது என்பவற்றை நிர்ணயிப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றது. இவற்றில் பாதிப்பு ஏற்படும்போது வளரிளம்பருவத்தினரின் சுயமதிப்புக் குறைகிறது. அதனால் ஏற்கத்தகாத நடத்தைகளை அவர்கள் காட்டக்கூடும்.

    அடையாளத்தை உருவாக்கலில் சிக்கல்: தாங்கள் யாரென்பதையும், தங்களின் சுதந்திரத்தின் எல்லைகளையும் அடையாளம்காண்பதில் இந்தப் பருவத்தினர் ஆர்வம் காட்டும்போது, அதில் சகமாணவரின் செல்வாக்கும் இருக்கக்கூடும். சகமாணவர்களின் செல்வாக்குப் பெற்றோரின் எதிர்பார்ப்புக்கு முற்றிலும் எதிரானதாக இருந்தால் அடையாளத்தை உருவாக்குவதில் சிக்கல்கள் ஏற்படக்கூடும்.

    அடாவடித்தனம்: சகமாணவர்களுடனான முரண்களால் இணையத்திலோ, பாடசாலையிலோ அடாவடித்தனத்துக்கு அவர்கள் முகம்கொடுக்க வேண்டியிருக்கலாம்.

    கல்விரீதியான அடைவுகளை எட்டமுடியாமை: ஒவ்வொருவரினதும் திறனுக்கும் சூழலுக்கும் ஏற்ப அடைவுகள் மாறுபடும். அதனைப் பெற்றோர் விளங்கிக்கொள்ளாமல் அதிகம் எதிர்பார்க்கும்போது, பெற்றோர் கொடுக்கும் அழுத்தங்கள் தவறான முடிவுகளை எடுப்பதற்கு வளரிளம்பருவத்தினரைத் தூண்டக்கூடும்.

    மனத்தகைப்பு அதிகரிப்பு: American Psychological Associationஇன் 2014ம் ஆண்டுக் கருத்தாய்வு  வயதுவந்தவர்களைவிட வளரிளம்பருவத்தினரில் மனத்தகைப்பு அதிகமாகவுள்ளது என்கிறது. அதன் அறிகுறிகள், கோபம், அழுகை போன்ற உணர்ச்சிரீதியானவையாகவோ, வயிற்றுக்குழப்பம், தலையிடி போன்ற உடல்ரீதியானவையாகவோ, அல்லது சேதம்செய்தல், பொய்கூறல் போன்ற நடத்தைரீதியானவையாகவோ இருக்கலாம்.
    மனத்தகைப்புக்கான காரணங்கள் பாடங்களில் குறைவான புள்ளிகள், நேரமுகாமைத்துவமின்மை போன்ற கல்விசார்ந்தவையாகவோ, உருவம்சார்ந்த கரிசனைகள், நண்பர்கள் அற்ற நிலை போன்ற சமூகம்சார்ந்தவையாகவோ அல்லது விவாகரத்து, இறப்புப் போன்ற குடும்பம் சார்ந்தவையாகவோ இருக்கலாம்.

சமூக ஊடகங்களினூடான செய்தியின் பாதிப்பு  -

ஒல்லியான உருவம், வெள்ளை நிறம் என்பனதான் அழகு என்ற பிழையான எண்ணப்பாடு eating disorder போன்ற பிரச்சினைகளுக்குக் காரணமாகலாம்.

1. மன நலமின்மை: உலகளாவியரீதியில், 10–19 வயதானோரில் ஏழில் ஒருவருக்கு (14%) மனச்சோர்வுள்ளது என மதிப்பிடப்பட்டுள்ளது. தற்கொலை, தங்களைத் தாங்களே காயப்படுத்தல், மனப்பிரமை போன்ற சிக்கல்களுக்கு இப்பருவத்தினர் உள்ளாகுகிறார்கள்  

2. தீர்மானமெடுக்க முடியாமை - முன்மூளையின் வளர்ச்சி இப்பருவத்தில் முழுமையடையாததால், விளைவுகளை ஆராயாமல் முடிவுகளை அவர்கள் மேற்கொள்ளக்கூடும்.

3. சமூக ஊடாட்டங்கள்: சகமாணவர்களின் செல்வாக்கு சமூக ஊடகங்கள் ஊடான எதிர்மறையான பாதிப்புக்கு வழிசெய்கிறது. இதனால் நேரவிரயம், பொருள்களுக்கு அடிமையாதல் போன்ற பிரச்சினைகள் ஏற்படலாம்.

4. போதைப்பொருள்/மது பயன்படுத்தல் – கையாளமுடியாத மனத்தகைப்பு அல்லது சகமாணவர்களின் செல்வாக்கு போதைப்பொருள் அல்லது மதுபானப் பயன்பாட்டுக்குக் காரணமாக இருக்கக்கூடும்.

வளரிளம்பருவத்தினர் சொல்வதைக் காதுகொடுத்துக் கேட்பதற்கு யாராவது ஒருவர் இருந்தால் பாதிப் பிரச்சனைகள் தீர்ந்துவிடும் என்கிறார், கல்வியியலாளரும் மனோன்மனியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தருமான வி. வசந்திதேவி. "அவ்வகையான ஒரு மனிதர் அவர்களின் வாழ்க்கையில் இல்லாதபோது, நெருக்கீடு ஒன்று ஏற்படும்போது என்ன செய்வதெனத் தெரியாது விபரீதமான முடிவுகளை அவர்கள் எடுக்கின்றார்கள்” எனக்கூறும் அவர், “அந்தப் பிள்ளைகளுக்குத் தேவை, தாங்கள் சொல்வதைக் காதுகொடுத்துக் கேட்கக்கூடிய, நம்பத்தகுந்த ஒரு அக்கறையான மனிதர்தான்,” என வலியுறுத்துகிறார்.

பிள்ளைகளுக்குத் தேவையானவை:

    பிணைப்பு மற்றும் பாதுகாப்பு

    உணர்ச்சிகளை வெளிக்காட்டுவதற்கான இடம் மற்றும் அங்கீகாரம்

    உணர்ச்சியைக் கையாளத் தேவையான திறன்கள்- திறன்கள் இல்லாதபோதே நடத்தைச் சவால்கள் உருவாகின்றன.

        உதாரணத்துக்கு ஏமாற்றத்தைக் கையாளத் தெரியாதபோது வெறுப்பை அல்லது கோபத்தைக் காட்டல்

வளரிளம்பருவத்தினரின் நடத்தை தொடர்பான சவால்களுக்கு நம்பிக்கையான அன்பான உறவுகள் இல்லாமைதான் காரணமாக இருக்கின்றது. பிள்ளைகளின் ஏற்கத்தகாத நடத்தையை தண்டனை வழங்குவதால் மாற்றமுடியாது. அவர்களின் நடத்தைக்குக் காரணமாக விடயத்தை விளங்கி, அதற்கேற்பச் செயல்பட்டால்தான் மாற்றமுடியும். அத்துடன் அவர்கள் எதிர்நோக்கும் சவால்களைக் கையாள்வதற்கான திறன்களைக் கற்றுக்கொள்வதற்கான வாய்ப்பு அவர்களுக்குக் கிடைக்காமையே நடத்தைச் சவால்களின் அடிப்படையாக இருக்கின்றது. காலத்துடன் தொழில்நுட்ப மாற்றமும் வெகுவேகமாக முன்னேறிக்கொண்டிருப்பதால் பிள்ளைகள் எதிர்நோக்கும் சவால்களும் அதிகமானவையாக இருக்கின்றன.

வளரிளம்பருவத்தினரை வளர்க்கும்போது ஏற்படும் சவால்களைக் கையாள முடியாதளவுக்குப் பெற்றோரிலும் பின்வருவனவற்றின் தாக்கம் இருக்கக்கூடும்.

* போர் நிகழுமொரு இடத்தில் வாழ்ந்த வாழ்வினால் ஏற்பட்ட மனத்தாக்கங்கள்
* நேரமின்மை
* மொழிப் பிரச்சினை
*  தொடர்பாடல் திறன்கள் இல்லாமை
* ஒப்பிட்டுப் பேசும் கலாசாரம்
* நல்ல விடயத்தை மெச்சுவதற்குப் பதில் பிழையில் கவனம்செலுத்தும் இயல்பு / மேலதிக எதிர்பார்ப்பு
* ஆண்/பெண் நண்பர், பாலின அடையாளம் LGBTQ2S+  ஆகியவற்றை ஏற்கமுடியாமை
* தங்களின் ஆர்வங்களிலும், வாழ்க்கையிலும் ஆர்வமாக இருத்தல்

பெற்றோரின் கடமைகள்:

* மாதிரியாக அமைந்திருத்தல் - தங்களின் உணர்ச்சிகளைப் பொருத்தமான வகையில் கையாளல்
* பிள்ளைகளின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்திசெய்தல்
* பொறுப்பாகக் கவனித்தல், பாதுகாப்பாக வைத்திருத்தல் (மகிழ்ச்சியாக வைத்திருத்தல் அல்ல)
* பிள்ளைகளுக்காக நேரம் ஒதுக்கல், அவர்களுடன் மனம்திறந்து கதைத்தல்
* பச்சாதாபம் காட்டல், அங்கீகாரம் வழங்கல், எல்லைகள் வகுத்தலுடன் அவற்றுக்கான விளக்கம் அளித்தல்
* தவறுசெய்திருந்தால் அதை ஒத்துக்கொள்ளல், மன்னிப்புக் கேட்டல்
* பிரச்சினை ஒன்றைப் பிள்ளை பகிர்ந்துகொள்ளும்போது, ஆலோசனையோ விளக்கமோ சொல்லாமல் பிள்ளையின் உணர்ச்சிகளை அங்கீகரித்தல்
* நேர்மறை நடத்தைகளில் அதிகம் கவனம்செலுத்தல்
* நம்பிக்கைகளைத் தகர்க்காமல் இருத்தல், பொறுமையாக இருத்தல்
* எங்களின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்திசெய்ய வேண்டுமென்ற எதிர்பார்ப்பின்றி இருத்தல்

என் பிள்ளை எப்படி இப்படி மாறிப்போனான் எனப் பெற்றோர் கவலை கொள்வது இயல்பாக உள்ளது. சமூக ஊடகங்களினுள் பிள்ளைகள் அமிழ்ந்துபோகும்போது சோம்பேறித்தனம், பெற்றோருக்கு மரியாதை கொடுக்காமை, திரைக்கு அடிமையாகின்றமை என்றெல்லாம் பெற்றோர் நினைக்கிறார்கள். ஆனால், அது உணர்ச்சிரீதியான அழுத்தங்களில் இருந்து தப்பித்தலாக இருக்கின்றது எனலாம். இதற்கு அவர்களுடனான தொடர்பையும் நம்பிக்கையையும் வளர்ப்பதே உசிதமானது. அப்போதுதான் தங்களின் பிரச்சினைகளைப் பெற்றோருடன் பேசலாமென்ற நம்பிக்கை அவர்களுக்கு வரும்.

அனேகமான பெற்றோர் முடிந்ததைச் செய்கிறார்கள். எல்லோருமே மனிதர்கள் என்பதால் தவறு நிகழத்தான் செய்யும். அப்படி ஏதாவது நிகழ்ந்தால் உறவைச் சீர்திருத்துவது முக்கியமானது. அது ஒருபோதும் காலம்கடந்ததாக இருக்காது. அது உறவைப் புதுப்பிக்க உதவும். ஆனால், மன்னிப்புக் கேட்கும்போது பிழையான நடத்தைக்கான நியாயப்படுத்தல் எதுவும் இருக்கக்கூடாது.

போரின் விளைவுகளான பேரதிர்ச்சி, மனத்தகைப்பு, போசாக்கின்மை என்பவை மூளை விருத்தியை, மீண்டெழும் தன்மையை, நித்திரையை, உணவுக்கால்வாய்ச் செயற்பாட்டைப் பாதித்திருக்கலாம். அதனால் இலகுவாகப் போதைக்கு அடிமையாகும் சாத்தியம் பெற்றோரிலும் இருக்கலாம். இது மேலதிகமான சவால்களை உருவாக்கக்கூடும். அத்துடன் Epigenetics (பிறப்புரிமை அலகுகளில் செயற்பாட்டில் சூழலின் தாக்கம்) - சந்ததிகள் ஊடாகக் கடத்தப்படக்கூடியது. இவ்வாறாகப் பாதிக்கப்பட்ட பெற்றோரின் பிள்ளைகளுக்கும் அந்தப் பாதிப்புக்கள் இருக்கக்கூடும்.

போசாக்குள்ள உணவு, தேகப்பியாசம், போதுமான நித்திரை, மூச்சுப்பயிற்சி, அந்தக் கணத்தில் வாழல், நேர்மறையானவற்றில் கவனம்செலுத்தல் போன்ற உத்திகள் மனத்தகைப்பைக் கையாள உதவக்கூடும். நாள்காட்டி எழுதுதலும் அதை எழுதும்படி வளரிளம்பருவத்தினரை ஊக்குவித்தலும் நன்று. அப்படியாக எண்ணங்களையும் உணர்ச்சிகளையும் எழுத்தில் கொட்டும்போது மன அமைதி கிடைக்கலாம்.

ஒப்பீட்டளவில் 12 முதல் 14 வயதான பிள்ளைகளை வளர்ப்பது சவாலானது என்கிறது ஆய்வு. அந்தச் சவாலை மேவுவதற்கு அவர்களின் உணர்ச்சிகளை விளங்கிக்கொள்ளல், தெளிவான எதிர்பார்ப்புகளை அறியச்செய்தல், எல்லைகளை வகுத்தல், அமைதியாக உறுதியான குரலில் பேசுதல், பச்சாதாபம் காட்டுதல், சுதந்திரத்தை ஊக்குவித்தல் பல்வேறு வகையான ஆர்வங்களை வளர்த்தல், மாற்றக்கூடியவற்றை மாற்றும் திறன்களையும் மாற்றமுடியாதவற்றை ஏற்றுக்கொள்ளும் திறனையும் கற்பித்தல் என்பன அவசியம். அத்துடன் தேவைப்பட்டால் நிபுணர்களின் உதவியை நாடுவதும் பயன் தரும்.

:இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.