- இலாப நோக்கற்று இயங்கும் ஓராயம் அமைப்பு பற்றியும், அதனுடனான தனது பயணம் பற்றியும் பொறியியலாளர் க.குருபரன் தன் எண்ணங்களை இங்கு பகிர்ந்துகொள்கின்றார். புகைப்பட உதவி - ஓராயம். - பதிவுகள்.காம் -


சமூகப்பணி என்பது எனக்கு இளவயதில் இருந்து இயல்பாக வந்ததொன்று. இருப்பினும் நீண்ட காலமாக ஒரு சில காரணத்திற்காக, நல்ல விடயங்களுக்கு நிதி உதவி அளிப்பது, சிறுசிறு பணிகளை நானே செய்வது தவிர, அமைப்புரீதியாக செயல்படுவதைத் தவிர்த்து வந்தேன். ஒரு சில காரணத்திற்காக என்று பொதுப்படையாக கூறிய போதிலும், எனது குணாம்சங்களுடன் கூட்டாக இயங்குவது கடினமானது என்பதே முக்கிய காரணமாகும்.

2020இல் ஒரு சூறாவளி போல் எம்மைக் கடந்து சென்ற பெருந்தொற்று உலகில் பல மாற்றங்களை செய்தது போல், எனது வாழ்விலும் இந்த விடயத்தில் ஒரு திருப்பம் ஏற்பட வித்திட்டது. மன உளைச்சல், அழுத்தத்துடன் என்ன செய்வதென்றறியாது எல்லோரும் வீட்டுக்குள் முடங்கி கிடந்த காலமது. இதில் இருந்து ஓரளவேனும் விடுதலை பெற ஏதாயினும் செய்ய வேண்டும் என்ற நிலையில்தான் உலகெல்லாம் பரந்து, தொடர்புகள் அற்று சிதறி வாழும் எமது பள்ளி மாணவர்களை ஒன்று சேர்த்து ஏன் கலந்துரையாடக்கூடாது என்ற எண்ணம் எமக்கு வந்தது. யாழ் இந்துவில் 1971 -1978 இல் படித்த நாம், எம்மால் தொடர்புகொள்ள முடிந்த எல்லோரையும் இணைத்து ZOOM ஊடாக இணைந்தோம். நீண்ட நாட்களிற்குப்பின் இடம்பெற்ற சந்திப்பென்பதால் மிகவும் ஆரோக்கியமாகவும், சுவாரசியமாகவும் இக்கலந்துரையாடல் நீண்ட நேரம் இடம்பெற்றது. எல்லோரும் வெவ்வேறு துறைகளில் விற்பன்னர்களாக இருந்தது மட்டுமல்லாது சமூகப்பணியிலும் ஈடுபட்டிருந்ததனால் நாம் ஏன் ஒரு அமைப்பொன்றை உருவாக்கி சமூகசேவை செய்ய கூடாது என்ற கேள்வி அப்போது எழுந்தது. இச்சூழ்நிலையில் பிறந்த குழந்தை "ஓராயம்" என்று அழகிய தமிழ் பெயர் சூட்டப்பட்டு பூரணமான யாப்புடன், ஒரு இலாப நோக்கற்ற அமைப்பாக கனடாவில் பதிவு செய்யப்பட்டது. தற்போது ஓராயம் அமையத்தினை இலங்கை உட்பட மற்றைய நாடுகளிலும் பதிவுசெய்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. இந்த சூழ்நிலைதான் என்னையும் அதில் முற்றாக ஈடுபட வழிவகுத்து, ஓராயம் அமையத்தினால் வரையறுக்கப்பட்ட 6 வேலைத்திட்டத்தில் ஒன்றான விவசாயம் மற்றும் சுற்றுச்சூழல் துறையினை வழி நடத்தும் பொறுப்பினை உருவாக்கியது.

பெருந்தொற்று உலகிற்கு பெரியதொரு கேட்டை விளைவித்தாலும் சுற்றுச்சூழல் மற்றும் சமூகத்தை ஒன்று சேர்த்தல் போன்ற விடயங்களுக்கு நல்லதொரு பங்களிப்பை செய்தது என்பதை மறுக்க முடியாது. ஆனால் இப்பேரிடர் போன கையோடேயே இந்த நல்ல விடயங்களும் போன இடம் தெரியாமல் போனதுபோல் இல்லாமல், ஓராயம் அமையம் தொடர்ந்தும் வளர்ந்து வருகின்றது. ஒரு வேலைத் திட்டத்தை அடிப்படையாகக் கொண்டு அதில் ஆர்வம் உள்ளவர்கள் இணைந்து ஒரு அமைப்பை உருவாக்கி செயல்படுவது என்பது வேறு, பாடசாலை நண்பர்கள் போன்றவர்கள் இணைந்து செயல்படுவது என்பது வேறு. இரண்டிலும் நிறைய சாதக பாதக சூழ்நிலைகள் இருக்கும். இதன் பாதிப்பு அதிகமாக ஆரம்ப காலத்திலேயே இருக்கும். இப்படியான ஒரு நிலையைத்தான் ஓராயமும் ஆரம்பத்தில் எதிர்கொண்டது. எப்படியான வேலைத்திட்டத்தை எமது துறையில் மேற்கொள்வது என்னும் விடயத்தில் குறிப்பாக பெரிய பிரச்சனையென்று ஒன்று இல்லாவிட்டாலும், ஒரு குழப்ப நிலை எழுந்திருந்தது. பாடசாலைகளில் நிழல்தரு மரங்களை வளர்க்கும் திட்டத்தினை நான் முன்மொழிய பலத்த வாதப் பிரதிவாதங்களுக்கு பின்னரே ஏற்றுக் கொள்ளப்பட்டது. அப்படி எதிர்ப்பு தெரிவித்தவர்கள் வாதத்திலும் நியாயம் இல்லாமலில்லை. இனப்போரினாலும், தொடர்ந்து வந்த பேரிடரினாலும் மோசமாகப் பாதிக்கப்பட்டு, மிகவும் நலிவடைந்த மக்களின் பல அடிப்படைத் தேவைகளே இன்னும் பூர்த்தியாக்கப்படாத நிலையில் இருக்கும்போது இது போன்ற திட்டம் தேவைதானா என்பதே அவர்களின் வாதம். இருப்பினும் கீழ் வரும் நடைமுறை காரணிகளே எனது தீர்மானத்தினை எடுக்க உதவின:

    அந்த நேரத்தில் எமது அமைப்பில் தாயகத்தில் இணைந்து செயல்பட போதுமான ஆட்பலம் இருக்கவில்லை

    மக்களின் அடிப்படைத் தேவைகளிலேயே சமூக பணியாளர்கள் முழுக்கவனமும் செலுத்தியதால், சுற்றுச்சூழல் போதுமான அளவு கவனத்தில் கொள்ளப்படவில்லை

    மாணவர் மத்தியில் சுற்று சூழல் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்படவேண்டிய அவசியம்

    பாடசாலைகளில் நிழல் தரும் மரங்கள் வளர்த்தல் என்பது, மிக குறைந்த செலவில் மிகநிறைந்த பயனை அளிக்கும்.

இந்த முடிவு சரியானது என்பதை அடுத்து வந்த காலங்கள் நிரூபித்தன. இதுவரை வடமாகாணத்தில் பல்வேறு மாவட்டங்களில் 18 பாடசாலைகளில் இத்திட்டம் வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இதே வேளை "மரம் மண்ணின் வரம்" என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்ட புலனக்குழு, 140க்கு மேற்பட்ட சுற்றுச்சூழல் ஆர்வலர்களை இணைத்து தகவல் பரிமாற்றத்திற்கான தளமாகச் செயல்படுகிறது.

பொதுவாக பெரும்பாலும் தாயகத்தில் மரம் நடும் நிகழ்வுகள் சுயவிளம்பரத்திற்காகவோ, அன்றி மற்றவர்களின் நிர்பந்தத்திற்காகவோ மட்டுமே நடைபெறும் சூழ்நிலை காணப்படுகின்றது. மரம் நடுவதில் காட்டப்படும் நாட்டம், அதனை வளர்ப்பதில் காட்டப்படுவதில்லை. தாயகத்தில் சுற்றுச்சூழலுக்கான வேலைத்திட்டங்களுக்கான தேவைகள் மிக அதிகமாக இருப்பினும் குறுகிய காலத்தில் நாம் பெற்ற மேற்கண்ட இந்த அனுபவம் எமது செயல்பாட்டின் வேகத்தை குறைக்க வேண்டிய நிலைக்குத் தள்ளியது. தற்போது சுற்றுச்சூழல் சம்மந்தமாக விழிப்புணர்வினை ஏற்படுத்தும் திட்டங்களில் ஈடுபடும் அதேவேளை அர்ப்பணிப்போடு மரம் வளர்க்கும் திட்டத்தில் ஈடுபடுவோரை மட்டுமே ஊக்குவிக்கின்றோம்.

இந்த காலகட்டத்தில் சிலரின் வேண்டுகோளுக்கு இணங்க பல பாடசாலைகளில் வீட்டு தோட்டத்தை ஊக்குவிக்கத் தொடங்கினோம். இவற்றிலே கடந்த வருடம் யாழ் இந்துக் கல்லூரி மாணவ முதல்வர்களினால் முன்னெடுக்கப்பட்ட 9ம் வகுப்பு மாணவர்களுக்கான வீட்டுத்தோட்ட வேலைத்திட்டம் மிகவும் சிறப்பான இடத்தை பெறுகிறது. இத்திட்டத்தில் உற்சாகமாகப் பங்கெடுத்த மாணவர்களின் ஈடுபாடும் ஆர்வமும் எமக்கு வருங்கால சந்ததியில் ஓர் நம்பிக்கையினை ஏற்படுத்தியுள்ளது. இவ்வாறான திட்டங்கள் எல்லாப் பாடசாலைகளிலும் நல்ல முறையில் நடைமுறைப் படுத்தப்படுமேயானால் இன்று இளைஞர்களிடையே நிலவும் கவனக்கலைப்பினைக் குறைப்பது மட்டுமல்லாமல் அவர்களை போதைப்பொருள் பாவனை போன்ற சீர்கேடுகளில் இருந்தும் பெருமளவில் காப்பாற்றலாம்.

தற்சார்பு பொருளாதாரச் சிந்தனையினை இளவயதிலிருந்தே வளர்த்தெடுக்கும் முயற்சியில் யாழ் இந்துக்கல்லூரியுடன் இணைந்து இயற்கை முறையில் ஒருங்கிணைந்த விவசாயப்பண்ணை ஒன்றை உருவாக்க, நாம் சிறிது காலத்திற்கு முன்னர் கல்லூரி அதிபருடன் ஏற்கனவே கலந்துரையாடி இருப்பதை இங்கே நினைவுகூர விரும்புகிறேன். இலங்கையின் தற்போதைய சமூக பொருளாதார சூழல் அதன் முக்கியத்துவத்தை, தேவையை எமக்கு நன்கு வெளிப்படுத்தி நிற்கிறது. தாயகத்தில் விவசாயத்திற்கும், குடிப்பதற்கும் நிலத்தடி நீரையே உபயோகிப்பதால் தண்ணீர் பிரச்சனை என்பது பாரிய பிரச்சனையாக இருக்கின்றது. இப்போதும் மக்கள் வாய்க்கால் மூலமே நீர்பாய்ச்சி வருகிறார்கள். சொட்டுநீர் நீர்ப்பாசன முறையை அறிமுகப்படுத்துவதன் மூலம், இந்த பிரச்சனையை பாரிய அளவில் குறைக்கலாம். சில நடைமுறைச் சிக்கல் காரணமாக இந்த தனித்துவமான செயல்திட்டத்தை நடைமுறைப் படுத்துவதில் சிறிது தாமதம் ஏற்பட்டாலும், இப்போது அங்கு நாம் நடைமுறைப்படுத்திய வீட்டுத்தோட்டத் திட்டம் அதை விரைவு படுத்த உதவும் என்று நம்புகின்றோம்.

கடந்த ஆண்டு (2022) கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள கண்ணகைபுரம் என்ற கிராமத்தில் வசிக்கும் மக்களை ஒன்றிணைத்து கூட்டுறவு முறைக்கூடாக அபிவிருத்தி செய்வதற்கு நெதர்லாந்தில் இருந்து இயங்கும் "நெதர்லாந்து மனித நேய கூட்டுறவு சங்கம்" என்ற அமைப்பு எமது உதவியை நாடியது. கிராம வளர்சியிலும், மறுமலர்ச்சியிலும் கூட்டுறவு அமைப்பு முக்கியப் பங்காற்ற முடியும் என்பதை நாங்கள் நன்கு அறிவோம். மலையகத்தில் இருந்து நாட்டு நிலைமை காரணமாக இடம்பெயர்ந்து இங்கு அரை ஏக்கர் காணிகளில் குடியமர்த்தப்பட்ட 50 குடும்பங்களை கொண்டது அக்கிராமம். இதுவரை கூலித்தொழிலாளிகளாகவே இருந்த அம்மக்கள், இத்திட்டத்தின் மூலம் ஒரு ஏக்கர் காணியில் சொந்தமாக விவசாயம் செய்யும் நிலையை அடைந்தார்கள். இது அவர்களின் பொருளாதாரத்தை மட்டுமல்ல தன்னம்பிக்கையையும் வளர்த்தெடுக்க உதவியுள்ளது. அடிப்படை வசதிகள் எதுவுமே இல்லாத மிகவும் பின்தங்கிய நிலையிலுள்ள கிராமத்தின் தரத்தை உயர்த்துவது என்பது எமது உதவியினால் மட்டுமே நிவர்த்தி செய்யக்கூடிய விடயமல்ல. தாயகத்தில் இருந்து சிறப்பாக இயங்கும் "சுவடி" என்ற நிறுவனத்தின் ஊட்டமிகு வடக்குச் செயற்திட்டதில் கண்ணகைபுரம் கிராமத்தினையும் இணைத்ததன் மூலம் இக்கிராமப் பெண்கள் மிகப்பெரிய பயனடைந்துள்ளார்கள். இக்கிராமத்தின் நீர்வள மேலாண்மைக்காக "புனர் வாழ்வும் புது வாழ்வும்" (ASSIST RR) என்ற அமைப்பும் முன்வந்துள்ளது.

கண்ணகைபுரம் போன்று பல குக்கிராமங்கள் வடக்கிலும் கிழக்கிலும் அபிவிருத்தி செய்யப்பட வேண்டிய நிலையில் இருப்பதை நாம் இனம் கண்டுள்ளோம். ஓராயமானது எந்த திட்டத்தை செய்வதானாலும் அதை உரிய முறையில் நடைமுறைப்படுத்தக்கூடிய ஒருங்கிணைப்பாளர்களை உள்ளூரில் இனங்கண்டு அவர்களூடாகவே திட்டத்தைச் செயல்படுத்தும் நடவடிக்கையினை மேற்கொள்ளும். தகுந்த ஒருங்கிணைப்பாளர்கள் கிடைத்தவுடன் கூடியவரையில் மற்றைய கிராமங்களிலும் இவ்வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்படும்.

இந்த இடத்தில் ஓராயம் அமையத்தினால் செயல்படுத்தப்படும் பின்தங்கிய சமூகங்களின் நிலையான சமூக மேம்பாட்டிற்கு தேவையான மிக முக்கிய கல்வி சார்ந்த முயற்சிகளினையும் குறிப்பிட்டுச் சொல்ல விரும்புகிறேன். முன்பள்ளிக் காலத்திலிருந்தே குழந்தையின் கல்வி வளர்சிக்கு அடித்தளம் போடுவது மிக மிக அவசியம் என்பதால், ஓராயம் பின்தங்கிய சமூகங்களுக்குள், செயல்திறன் மிக்க முன்பள்ளிகளை உருவாக்குவதில் பங்களிக்கிறது.

யாழ்இந்துக்கல்லூரியில் கணித ஆசிரியராக 1965 -1979 ஆண்டுகளில் பணியாற்றிய திரு.சோமசேகரசுந்தரம் அவர்கள் கடந்த வருடம் கனடாவில் காலமானர். இவர் யாழ் இந்துவின் மிகவும் அர்ப்பணிப்பான, பிரபல்யமான ஆசிரியர் என்பதுடன், கனடாவில் வசித்த காலத்தில் யாழ் இந்து கனடா சங்கத்துடனும் நெருங்கிய உறவை வைத்திருந்த எமது மதிப்புக்குரிய ஆசான். ஆசிரியர் சோமசேகரசுந்தரத்தின் குடும்பத்தினருடன் இணைந்து ஓராயம் அமையம், யாழ் இந்துக்கல்லூரியில் "சோமசேகரசுந்தரம் ஞாபகார்த்த புலமைப்பரிசில்" ஒன்றினை வழங்க ஏற்பாடு செய்துள்ளது. இப்புலமைப்பரிசில், பொருளாதார வசதியற்ற, பின்தங்கிய சமூக சூழ்நிலையில் உள்ள , கணித பாட கற்கைநெறி பயிலும் க.பொ.த உயர்தர வகுப்பு மாணவனுக்கு வருடா வருடம் தொடர்ந்து வழங்கப்படும். அத்துடன் யாழ் இந்துக் கல்லூரி வருடாந்த பரிசளிப்பு விழாவில் க.பொ.த உயர்தரத்தில் கணிதத்தில் முதலிடம் பெறும் மாணவனுக்கு "சோமசேகரசுந்தரம் ஞாபகார்த்த" வெற்றிப்பதக்கமும் ரூ.10,000 பரிசுத்தொகையும் வழங்கப்படும்.

எனது நீண்ட அனுபவத்தில் இருந்தும், இந்த வருடம் தாயகம் சென்று சிறிது காலம் இருந்து அங்குள்ள நிலையை நேரடியாக பார்த்தவன் என்னும் வகையிலும் அது பற்றிய எனது கணிப்பு, கருத்தை இங்கு பகிரலாம் என்று எண்ணுகின்றேன். இலங்கையில் உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்து 14 வருடங்களுக்கு மேலாகிவிட்டது. அன்றிலிருந்து வெளிநாடுகளில் இருந்து தாயகத்திற்கு பெருமளவு பணம் சமூக பணிகளுகளுக்காக அனுப்பப்பட்ட போதிலும் பாரிய முன்னேற்றம் எதையும் அங்கு காணவில்லை. இதற்கு தாயகத்தில் உள்ளவர்களின் அசமந்தப்போக்கே காரணம் என்பது இங்கே புலம்பெயர் தமிழர்களின் மனக்குறை அல்லது குற்றச்சாட்டு. இதன் காரணமாக ஆரம்பத்தில் உத்வேகத்துடன் உதவி செய்த பலர் விரக்தி அடைந்து தமது செயல்பாட்டை நிறுத்தி இருப்பதை பார்க்கக் கூடியதாக உள்ளது. இதில் ஓரளவு உண்மை இருந்தாலும் இதை முழுமையாக ஏற்றுக்கொள்ள முடியாது. எமது பக்கத்திலும் தவறு இருக்கின்றது என்று நான் கூற வருகின்றேன். முப்பது நாற்பது வருடங்களுக்கு முன்பு தாயகத்தில் இருந்து வந்து மேலைத்ததேய தரத்தில் இங்கு வாழ்பவர்கள் , கடுமையான போரினால் பாதிக்கப்பட்டு உயிர் உடமைகளை இழந்து சொல்லொணா துயரோடு மன உளைச்சலில் அங்கு வாழும் மக்களையும் அதே தரத்தில் எதிர் பார்த்ததும் இதற்கு ஒரு காரணமாகும். அடுத்ததாக, உணர்ச்சி வேகத்தில் வேண்டுதலின் உண்மைத்தன்மையினை அறியாமல் பணத்தை வாரி இறைத்ததன் காரணமாக போரினால் பெரிதாக பாதிக்கப்படாதவர்கள் பணத்தைக் கொண்டு சென்றதும், உண்மையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இறுதிவரை எந்தவிதமான உதவியும் கிடைக்காமல் போனதுமாகும். இப்படி மேலதிக பணம் பெற்றவர்கள் சமூக சீர்கேட்டுக்கு வழிவகுத்ததோடு, பாதிக்கப்பட்டோர் தொடர்ந்தும் நிர்கதியாக இருக்கவே வழிவகுத்துள்ளது. தற்போது இப்படியான தவறுகள் ஏற்படும் சாத்தியக்கூறுகள் குறைந்துள்ளன என்ற போதிலும் முற்றாக இல்லாமல் போய் விட்டன என்று கூறமுடியாது. புலம்பெயர் நாடுகளில் இருந்து சமூக பணியாற்றும் அமைப்புகளிடையே ஒரு புரிந்துணர்வும், கூட்டுறவும் இருப்பது இவற்றினை தவிர்ப்பதற்கு மிகப்பெரும் உதவியாக இருக்கும். திட்டமிடலில் இவ்வமைப்புகள் இணைந்து, பிரம்மாண்டத் திட்டத்தின் ஒரு பகுதியாக ஒருங்கிணைக்கப்பட்ட பல்வேறு சிறிய திட்டங்கள் நடைமுறைப் படுத்தப்படும்போது வினைத்திறன் பன்மடங்காக அதிகரிக்கும்.

இதனையே தாரக மந்திரமாக கொண்டு ஓராயம் இயங்குகின்றது. ஓராயம் என்ற சொல்லுக்கு "இணைப்பு" என்றோர் அர்த்தமும் உண்டு. வேலைத்திட்டங்களின் எண்ணிக்கையிலோ அன்றி தம்மை முன்னிலைப்படுத்துவதில் கவனம் செய்வதை விடுத்து அர்ப்பணிப்புடன் இயங்கும் எல்லோருடனும் கைகோர்த்து நட்புறவுடன் வேலை செய்து வருகிறோம். நாம் தெளிவான பார்வையோடு நிதானமாக, ஆழக்கால் பதித்து பயணிப்பதால் செய்யும் செயல்களை சிறப்பாக செய்துவருகிறோம். இது வரும் காலத்தில் பாரிய வேலைத் திட்டங்களை முன்னெடுத்து செய்து முடிப்போம் என்ற நம்பிக்கையும் எமக்கு தந்திருக்கிறது.

எனது குணாதிசயங்களைக் காரணங்காட்டி சமூகபணியினை தனியே செயற்பட்டு வந்த நான், ஓராயத்துடன் இணைந்து செயற்பட்டதன் மூலம், எனது செயற்திறன் அதிகரித்தது மட்டுமல்லாமல் சிந்தனை தெளிவும் ஏற்படவும் வழி வகுத்தது. தனியே சமூகப்பணி செய்து வருபவர்கள், கூட்டாக இணைந்து அமைப்பு ரீதியாக செயற்படும் போது குறைந்த முயற்சியிலேயே கூடிய பலாபலன்களை சமூகத்திற்கு அளிக்கமுடியும். இவ்வாறே தனித்தனியே இயங்கும் அமைப்புகளும் புரிந்துணர்வோடு கூட்டுறவாக இணைந்து இயங்கும் போது எங்கள் இலக்குகளை இலகுவாக அடையலாம்.

இணைவோம் !

செயற்படுவோம் !!

சாதிப்போம் !!!

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.