-   -

அண்மையில் முக்கொம்பன்,  பூநகரியிலிருந்து என் முகநூல் நண்பர்களில் ஒருவரான குணரட்னம் குகனுஜன் ( Kunaradnam Kukanushan ) அவர்கள் ஒரு மின்னஞ்சல் அனுப்பியிருந்தார். அதில் அவர் தான் வசிக்கும் பகுதியில் ஊரிலுள்ள பலரின் உதவியுடன் நூலகமொன்றினை அமைத்துள்ளது பற்றியும், அதற்கு பலரின் உதவியுடன் பாட நூல்கள் பலவற்றைக் கொள்வனவு செய்துள்ள விபரத்தையும் தெரியப்படுத்தியிருந்தார். மாணவர்கள் தம் நன்மைக்காக பலரின் உதவிகளுடன்  நூலகம் அமைக்கும் இவரது முயற்சி பாராட்டுக்குரியது. சமுதாயப் பயன்மிக்க  செயற்பாடு. அதற்கு அனைவரும் ஆதரவு அளிக்க வேண்டும். அதற்குத் தமிழ்ப்பதிப்பகங்கள், எழுத்தாளர்கள் தம் நூல்களை அனுப்பி உதவலாம்.

தம்மிடமுள்ள நூல்களை இவர் உருவாக்கியுள்ள நூலகத்துக்கு அனுப்பி உதவ விரும்பினால் , இவருடன் மின்னஞ்சலில் அல்லது தொலைபேசியில் தொடர்பு கொண்டு மேலதிக விபரங்களைப் பெறுங்கள். இவருடைய மின்னஞ்சல் முகவரி: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.    தொலைபேசி இலக்கம்: +94770662917

இவர் அண்மையில் எனக்கு அனுப்பியிருந்த மின்னஞ்சலை இங்கு பகிர்ந்துகொள்கின்றேன்.


கு.குகனுஐன்.
முக்கொம்பன்,
பூநகரி.
12.05.2023.

 மதிப்புக்குரியவர்கட்கு!

நூலகத்திற்கான நூல்களை பெறுதல் தொடர்பானது:

மேற்படி விடயம் தொடர்பாக அறியத்தருவது யாதெனில் எனது கிராமத்தில் இன்றுவரை 550 இற்கும் மேற்பட்ட பாடசாலை மாணவர்கள் இருக்கின்றனர். எனினும் அவர்களுக்குரிய மேலதிகக் கற்றல் நடவடிக்கைக்கான வளம் மிகக் குறைவாகவே காணப்படுகின்றது. இலங்கையில் தற்போதைய உயர்தரக் கற்றலுக்குத்  தனியார் கல்வி நிலையக் கற்றலானது மாணவர்கள் மத்தியில் தவிர்க்க முடியாததாக மாறிவிட்டது. இதனால் கவரப்படும் கிராமப்புற மாணவர்கள் நகரப்புறங்களிற்குப் பெருந்தொகையான பணத்தையும் நேரத்தையும் செலவிடுகின்றனர். எனினும் இத்தகைய கற்றலினால் அதிக மாணவர்கள் இறுதிப்  பரீட்சையில் உயர் புள்ளிகளைப் பெற்று பல்கலைக்கழகம் செல்லும் எண்ணிக்கை மிகவும் அற்பமானதே.

என் கிராமம் கிளிநொச்சி நகரிலிருந்து சுமார் 25 கிலோமீற்றர் தூரம் கொண்டது. பேருந்துப் பிரயாண வசதிகளும் சீரானதாக இல்லாத நிலையில் மாணவர்கள் பயணம் செய்து தமது கற்றலை மேற்கொள்கின்றனர். குறிப்பாக மாணவிகள் உடல், உள ரீதியாக பாதிக்கப்பட்டு தமது கற்றலிலிருந்து திசை திரும்பியுள்ளனர். சாதாரண தரத்தில் உயர் பெறுபேற்றைப் பெற்ற மாணவர்கள் உயர்தர கற்றலிலிருந்து திசை திரும்பும் வகையில் என் கிராமத்தின் கற்றல் காணப்படுகின்றது.

இத்தகைய விடயங்களை கவனத்தில் கொண்ட நான் உயர்தரத்தில் தனியார் கல்வி நிலையத்தை நாடாது கற்றலில் ஈடுபட்டமைக்கு சிறுவயதில் கைக்கொண்ட வாசிப்பு பழக்கமே என்பதை உணர்ந்து கிராமத்து அபிவிருத்தி சபையின் ஒத்துழைப்புடன் அமைக்கப்பட்ட கல்வி நிலையத்துடன் இணைத்து நூலகம் ஒன்றை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டேன் நூற்றுக்கணக்கான மாணவர்களும் ஆயிரக்கணக்கான பொதுமக்களும் உள்ள கிராமத்தில் இதுவரை நூலகமே இல்லாததை சுட்டிக்காட்டி எனது நண்பர்கள் மற்றும் சமூக நலன்விரும்பிகளினதும், கல்வி நிலைய மாணவர்களது பெற்றோர்களினதும் பல்வேறுபட்ட உதவிகள் மூலம் நூலக கட்டடமொன்றை உருக்கிவிட்டேன். மேலும்  மாணவர்களது உறவினர்களின் நிதி அனுசரனையில் முப்பதாயிரம் ரூபாய்க்கு மேற்பட்ட பாட நூல்களை கொள்வனவு செய்து மாணவர்கள் பயன்பாட்டுக்கு உட்படுத்தியுள்ளேன்.

எனினும் உயர்தர மாணவர்களுக்கான பாடம் சார்ந்த ஆய்வுநூல்கள், கடந்த கால வினாத்தாள் தொகுப்புக்களையும் சிறார்களுக்கான வாசிப்பு அபிவிருத்திக்கேற்ற நூல்களை நூலகத்திற்கு உள்ளீர்க்க வேண்டும் என்ற அவா இருந்தாலும் நிதி சார்ந்த சவால்களை எதிர்கொள்கின்றேன்.  மாணவர்கள் சுய கற்றலில் நாட்டம் கொள்ள வாசிப்பு எந்தளவு உறுதுணை என்பதை அனுபவத்தால் உணர்ந்தவன். எனவேதான் என் கிராமத்தில் உயர்படிப்பால் மட்டுமே முன்னேற முடியும் என நம்பும் மாணவர்களை ஒன்றிணைத்து கற்பித்தலில் ஈடுபட்டுள்ளேன்.

சிறுவர்கள் தமக்கு வாசிக்க சிறுகதை புத்தகம் வேண்டும் என கேட்கும் போது இரண்டு புத்தகங்களை மட்டுமே கொடுத்து கொடுத்து சலிப்படைய வைத்துள்ளேன். அவர்களின் வாசிப்பு ஆர்வம் காலப்போக்கில் அதிகரிக்க வேண்டும் என்பதை ஆசையாகக் கொண்டே இக் கடிதத்தை தங்களுக்கு எழுதுகின்றேன். பல்வேறு பட்டவர்களுக்கு கோரிக்கை விடுத்தாலும் தனிநபர் மற்றும் சில குழப்பவாதிகளின் விமர்சனத்தால் நூலுதவி கிடைக்கவில்லை. தங்களை நான் பல்கலைக்கழக கற்கைக் காலத்தில் இதழியல் பகுதி சார்ந்த கற்றலின் நாளிலிருந்து இணையத்தில் பின் தொடர்கின்றேன். தங்கள் எழுத்துப்படைப்பு நூல்களாவது கிடைக்க வழி செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

நன்றி
இங்ஙனம்
கு.குகனுஜன்.
+94770662917
மின்னஞ்சல் முகவரி: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.