இன்று, ஏப்ரில் 10,  சர்வதேச சகோதரர் நாள் ஆகும். எங்களுடைய வாழ்க்கையின் பெரும்பகுதியைச் சகோதரர்கள்தான் பங்கிட்டுக் கொள்கிறார்கள். நண்பர்களையோ, வேறெந்த உறவுகளையோ அறிவதற்கு முன் பெற்றோருக்கு அடுத்ததாக நாங்கள் பழகும் உறவும் அதுதான். எங்களின் ஆரம்பகால வருடங்களின் பெரும்நேரத்தைக் குடும்பமாக அவர்களுடன்தான் செலவிடுகிறோம். அவர்களுடன் சேர்ந்து நாங்களும் வளர்கிறோம். அந்தவகையில் சகோதரங்களுடான உறவு ஆரோக்கியமானதாக அமையவேண்டியது அத்தியாவசியமான தேவைகளில் ஒன்றெனலாம்.

சகோதர உறவின் மேன்மையைக் காட்டும் பல்வேறு திரைப்படங்களும் கதைகளும் வெளிவந்திருக்கின்றன. செம்புலப் பெயல்நீர் போல எனக் காதலுக்கு உறுதிகூறும் சங்ககாலத் தலைவனின் வரிகளை ஓட்டி,

“செம்மண்ணிலே தண்ணீரைப் போல் உண்டான சொந்தம் இது
சிந்தாமணி ஜோதியை போல் ஒன்றான பந்தம் இது”

எனக் கவிஞர் கண்ணதாசன் சகோதர உறவின் இறுக்கத்தையும் சிறப்பையும் மிக அழகாக வர்ணித்திருப்பார். இந்தப் பந்தத்துக்கு முக்கியத்துவம் வழங்கும் வகையில் 1995 முதல் கொண்டாடப்படும் சர்வதேச சகோதரர் நாள் வலுவிழந்த சகோதரர்களுக்கான நாளாக ஆரம்பிக்கப்பட்டிருந்தாலும், சகோதர வாஞ்சையுடன் பழகும் இரத்த உறவற்ற உறவுகளும் கொண்டாடக்கூடிய ஒரு நாளாகவே இருந்து வருகிறது.

சகோதர உறவுகளுக்கான கொண்டாட்டம் இந்தியா, நேபாளம் போன்ற நாடுகளில் பல நூற்றாண்டுகளாகக் கொண்டாடப்படுகிறது என்பதும் கவனிக்கத்தக்கது. இந்துக்கள் இதனை Raksha Bandhan என்றும் சீக்கியர்கள் இதனை Rakhardi என்றும் அழைக்கின்றனர். Sravana (ஆகஸ்ட்) மாதத்தில் வரும் பெளர்ணமி தினத்தில் பெண்கள் ஆண்களின் கையில் தாயத்து போன்ற ஒன்றைக் கட்டிவிடுகின்றனர். பின்னர் ஆண்களும் பெண்களுக்கு அன்பளிப்புக்களை வழங்கி ஒருவரை ஒருவர் பாதுகாத்துக்கொள்வதாக உறுதிசெய்து கொள்கின்றனர். இரத்த உறவில் இல்லாதவர்களும் இப்படிச் செய்வதை திரைப்படங்களில் நாங்கள் பார்த்திருக்கிறோம். உண்மையில் அப்படியான அர்ப்பணிப்புள்ள ஒரு சகோதர உறவைப் பெற்றவர்கள் பாக்கியசாலிகள்தான்.

‘இரத்தம் தண்ணீரைவிடக் கனமானது’ என்றும் ‘தான் ஆடாவிட்டாலும் தன் தசை ஆடும்’ என்றும் கொள்கையளவில் சகோதர உறவுகள் கருதப்பட்டாலும்கூட சிலரிடையே இப்படியான பிணைப்புக் காணப்படுவதில்லை என்பது துரதிஷ்டமே. இன்னும் சிலரிடையே அந்த உறவு அன்பும் வெறுப்பும் கலந்ததாக அல்லது பகைமை கொண்டதாக அமைந்திருப்பதைக்கூட நாங்கள் பார்க்கிறோம். இப்படியாக உறவுகள் மாறிவிடுவது வலிமிகுந்த அனுபவமாக இருக்கும் என்பது உண்மையே. சகோதர உறவுகளின் பிணைப்புக்கு அடிப்படையாக இருப்பது அவர்கள் வளர்க்கப்பட்ட முறைதான் என்கின்றனர் உளவியலாளர்கள்.

பொதுவில் பெற்றோரின் கவனிப்புக்கான தேடுதலே சகோதரங்களிடையேயான சிக்கல்களுக்குக் காரணமாக இருக்கிறது. இரண்டாவது பிள்ளை பிறந்ததும் போட்டி மனப்பான்மையும் பொறமையும் துளிர்விடுவதை நாங்கள் பார்த்திருக்கிறோம். முடிவில் அந்தப் பொறமையும் போட்டியும் வாக்குவாதங்களுக்கும் சண்டைகளுக்கும் வித்திடுகின்றது. இப்படியாக ஆரம்பிக்கும் உறவுச் சிக்கல்களை ஒழுங்கான முறையில் கையாளாவிட்டால், அவை தொடர்ச்சியாக நிகழும் சண்டைகளாகி, பின்னர் நீண்ட காலம் நிலைத்திருக்கும் சகோதர வெறுப்பாக மாறுகின்றன.

சகோதரர்களிடையேயான பாசத்தையும் அந்நியோன்யத்தையும் வளர்ப்பதில் பெற்றோருக்குப் பெரும் பங்குண்டு. பொறமையை அல்லது போட்டியை உணரும் பிள்ளையின் உணர்ச்சிகளை விளங்கி அவற்றை ஏற்றுக்கொள்வதும், அந்தப் பிள்ளையின் தேடல்களுக்கு வழிசெய்வதும் முக்கியமாகும். மாறாகப் பெற்றோர் ஒரு பிள்ளைக்கு மேலதிக பாராட்டோ, ஊக்கமோ, கரிசனையோ வழங்கினால், அந்தப் போட்டியையும் பொறாமையையும் அவர்கள் மேலும் வளர்ப்பதாகத்தான் முடியும். ஏதோவொரு காரணத்துக்காகப் பெற்றோர் ஒரு பிள்ளைக்கு அதிக கவனம் செலுத்துவதையும், ‘பாமா நல்ல கெட்டிக்காரி,’ ‘பாலா எப்பவும் குழப்படிதான்,’ என்றெல்லாம் வெளிப்படையாகக் பேசுவதையும்கூட நாங்கள் பார்க்கிறோம். இவையாவும் பிள்ளைகளிடையே வன்மத்தை வளர்க்கவும், எதிர்மறையான கவனிப்புக்கான செயல்களைத் தூண்டவும் காரணமாகலாம் என்பதுடன், வளர்ந்த பின்பும் அவர்களைத் திறமையற்றவர்களாக உணரவைக்கலாம் அல்லது சகோதரர்கள் மீது பொறாமையுள்ளவர்களாக மாற்றலாம்.

பொறமையை அல்லது வெறுப்பை அல்லது போட்டியை வெளிக்காட்டும், பழித்தல், குற்றம்சாட்டுதல், அடித்தல், குறித்தவரின் பொருள்களைத் திருடல் போன்ற நடத்தைகளைப் பிள்ளைகள் காட்டும்போது, ‘இரண்டு பேரும் அடிவாங்கப் போகிறீர்கள்’ என அச்சுறுத்துவதோ, ‘அப்பா வரட்டும் பார்’ எனப் பயப்படுத்துவதோ, ‘உங்களால் ஒத்து விளையாட முடியாதா’ எனச் சலிப்பதோ பயனற்றது. மாறாக எதற்காக அவர்கள் சண்டையிடுகிறார்களோ அந்தப் பொருளை அகற்றுவதும், எப்படி அதை இருவரும் பயன்படுத்தலாமென அவர்களாக ஒரு முடிவுக்கு வரும்படி சொல்வதும் பயனுள்ளதாக அமையும். மேலும், அவர்கள் ஒவ்வொருவரும் வேறுபட்டவர்கள் என்பதால் ஒருவருடன் ஒருவர் எந்த நேரமும் ஒத்துப் போகத் தேவையில்லை என்பதையும் விரும்பாவிடில் அதைக் காட்டுவதற்கு வன்முறை ஒரு வழியல்ல என்பதையும் கற்பித்தல் முக்கியமானது.

ஒவ்வொரு பிள்ளையுடனும் தனித்தனிய நேரம் செலவழித்தல், மற்றச் சகோதரத்தைப் பற்றி குறைந்தது மூன்று நல்ல விடயங்களைக் கூறும்படி ஒரு விளையாட்டு விளையாடல், அவர்கள் ஒன்றாகச் சேர்ந்துசெய்யும் செயற்பாடுகளைத் திட்டமிடல், அவர்களை ஒப்பிடாமல் இருத்தல், பிழைசெய்பவரை மற்றவரிடம் மன்னிப்புக் கேட்கவைத்தல் என்பனவும் சகோதர்களிடையேயான உறவை வளர்ப்பதற்குப் பெற்றோர் செய்யக்கூடிய விடயங்களாகும்.

“ஆனால், வளர்ந்தபின்பும் உறவு நன்றாக அமையவில்லை, மனதையோ உடலையோ காயப்படுத்துவதாக இருக்கிறது என்றால் உறவுகளைத் துண்டிப்பது சிறந்ததொரு தீர்வாக இருக்கக்கூடும்,” என்கிறார் Dr. Leah Hartman. மேலும், “உறவுகளை துண்டிக்க வேண்டிய நேரம் எது என்பதை ஒருவர் முடிவெடுப்பது அவரது தனிப்பட்ட சூழ்நிலை மற்றும் செள்கரியத்தின் அளவைப் பொறுத்திருக்கலாம்,” என்கிறார் அவர். “உடன்பிறந்தவர் இறந்துவிட்டால், அனைவரும் ஆதரவளிப்பார்கள். ஆனால் தீர்க்கப்படாத பிரச்சனைகளால் உறவற்றுப் போகும்போது எதிர்வினை வேறாக இருக்கும், ஏனைய குடும்பத்தவரும் நண்பர்களும் உங்களைப் பரிதாபமாகவோ அல்லது வித்தியாசமான கண்ணோட்டத்திலோ பார்க்கக்கூடும். அது உங்களின் மனநலம் மற்றும் நல்வாழ்வுக்காக நீங்கள் எடுக்கும் முடிவைப் பாதிக்காமல் இருப்பதற்கு முயற்சி செய்யுங்கள். அவர்களுடன் நீங்கள்ஒன்றாக வளர்ந்ததால் உங்களின் வாழ்க்கையில் என்றென்றும் அவர்கள் இருக்கவேண்டுமென்ற அவசியமில்லை,” என்கிறார் Dr. Heidi Horsley. “உடன்பிறப்புக்களுடான உறவில் எந்த மாற்றமும் நிகழப்போவதில்லை என்றால் எங்களுக்காகத் தெரிந்தெடுக்கப்பட்ட உடன்பிறப்புகளைவிட, நாங்கள் தெரிந்தெடுத்த நண்பர்களுடனான உறவைப் பேணுவது நல்லது,” என்றும் அவர் கருத்துத் தெரிவிக்கிறார்.

“சகோதரங்களுடனான உறவை நீங்கள் துண்டிக்கும்போது, அவை அர்த்தமற்ற அல்லது தெளிவற்ற இழப்புகளாயின் அது ஒரு சூழ்நிலை இழப்பு ஆக இருக்கலாம். மேலும் தீர்க்கப்படாத உணர்ச்சிகள் கையாள்வதற்குக் கடினமானவையாகவும் மிகுந்த வேதனை தருபவையாகவும் இருக்கலாம்” என்கிறார் Dr.Horsley Gantt. இப்படியொரு அனுபவத்தை வாழ்க்கையில் நான் சந்தித்ததால் பிள்ளைகள் எப்போதும் ஒற்றுமையாகவும், வாழ்க்கைச் சவால்களில் ஒருவருக்கொருவர் உதவுபவராகவும், மனம் விட்டுப் பேசுபவர்களாகவும் இருக்கவேண்டுமென மிகவும் கவனமாகப் பிள்ளைகளை வளர்த்திருக்றேன் என இதுவரை நான் பெருமைப்பட்டுக் கொண்டிருந்தேன். ஆனால் அண்மையில் வேலையில் சந்தித்ததொரு சம்பவம் அதைக் கேள்விக்குறியாக்கியுள்ளது. எண்பது வயதுவரை ஒன்றாக வாழ்ந்த இரண்டு சகோதரிகளை, கனடாவிலும் முப்பது வருடங்களாக ஒரே வீட்டில் ஒற்றுமையாக இருந்தவர்களை குடும்பத்தில் நிகழ்ந்த பேரிழப்பு ஒன்று தற்போது அவர்கள் ஒருவரை ஒருவர் பார்ப்பதைக்கூடத் தவிர்க்கச் செய்திருக்கிறது எனும் போது என்ன நடந்தது எனக் கேள்வி எழும்புகிறது. எனினும் எப்போதும் வெளிப்படையாகப் பேசிப் பிரச்சினைகளுக்கான தீர்வைக் காண்பதும் ஒவ்வொருவருக்கும் வேறுபட்ட திறன்களும் அபிப்பிராயங்களும் உள்ளன என்பதை ஏற்றுக்கொள்வதும் உறவுகளை அவை எதுவானாலும் செழிக்கவைக்குமென நம்பலாம்.

எனவே இந்தச் சர்வதேச சகோதரர் நாளில், சகோதரர்கள் தங்களின் பிணைப்பைக் கொண்டாடுவதற்கும் அதற்கு நன்றிகூறுவதற்கும், மனஸ்தாபங்கள் உள்ள உறவுகளில் இருப்போர் பழையவற்றை மறந்து உறவுகளைப் புதுப்பிக்க ஆவன செய்வதற்கும் முயன்றால் இந்த நாளுக்கு ஓர் அர்த்தம் இருக்கும்.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.