சுயமுன்னேற்றம் மற்றும் தனி நபர் வளர்ச்சி, தொழில் வளர்ச்சி முன்னேறுவது எப்படி இது போன்ற விடயங்களை யோசிக்கும் பொழுதும் அது பற்றிய புத்தகங்களை யோசிக்கும் பொழுதும் எப்பொழுதும் எல்லோரும் முன்வைக்கும் நூல்கள் அனைத்தும் பெரும்பாலும் ஆங்கில நூல்களாகவே இருப்பதையும் ஆங்கில எழுத்தாளர்கள் மட்டுமே இவை அனைத்தையும் அறிந்து இருப்பது போலவும் ஒரு மிகப்பெரிய மாயை நம்மவர்களிடையே தொடர்ந்து வருகிறது.

இதற்காக ஆங்கில எழுத்தாளர்களையும் ஆங்கிலப் புத்தகங்களையும் குறைத்து மதிப்பிட்டு குறை சொல்ல முன்வருகிறேன் என்று பொருள் கொள்ள கூடாது .மாறாக அதற்கு இணையாக சில சமயங்களில் அதற்கு முன்னோடியாகவும் மேலாகவும் தமிழிலும் நூல்களும் எழுத்தாளர்களும் உள்ளனர் என்பதைத்தான் நான் இங்கே சொல்ல வருகின்றேன்.

அந்த வகையில் மனிதவள மேலாண்மை,ஆளுமை மேம்பாடு மற்றும் நிதி முதலீடுகள் போன்ற துறைகளில் நிபுணராக உள்ளவர் சுயமுன்னேற்றம் பங்குச்சந்தை உணர்ச்சிகளை கையாள்வது பற்றிய நுண்ணறிவு, நேரத்தை எவ்வாறு நேரமேலாண்மை விற்பனை தலைமைப் பண்பு மற்றும் சுய ஆளுமை மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு விடயங்களை பற்றிய புத்தகம் எழுதிய ஆகச்சிறந்த தமிழ் எழுத்தாளர், பயிற்சியாளர் சோம வள்ளியப்பன் அவர்களைப் பற்றித்தான் என்னை கவர்ந்த நான் வியப்புக்கு ஆளான பல்வேறு விடயங்களை இக்கட்டுரையின் வாயிலாக நீங்களும் அறிந்து கொள்ள முன்வைக்கின்றேன்.

எழுத்தாளர்களைப் பற்றி நிறைய தேடல்களை செய்து கொண்டிருக்கும் வேளையில் எதேச்சையாக நான் கண்டறிய நேர்ந்த ஒரு மிகச் சிறந்த எழுத்தாளர் தான் சோம வள்ளியப்பன் அவர்கள். அவருடைய சுயமுன்னேற்ற நூல்களையும் அவர் எழுதிய "இட்லியாக இருங்கள்" என்ற புத்தகமும் மிகவும் சுவாரசியமாக கவரக்கூடியதாக இருந்தது. அவர் தமிழில் மட்டுமல்ல ஆங்கிலத்திலும் 45 க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார்.

சோம வள்ளியப்பன் தமிழகத்தின் அனைத்து முன்னணி பத்திரிக்கை இதழ்களிலும் தொடர்ந்து கட்டுரைகளை எழுதுபவர். தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் கூட மனிதவளம், பொருளாதாரம் ,பணம் பங்குச்சந்தை,நேர மேலாண்மை ,ஆளுமை மேம்பாடு போன்ற பல்வேறு கருத்துக்களை சொல்லி வருபவர்.

தமிழகம் முழுவதும் இருந்தும் பல்வேறு கல்லூரிகள்,தன்னார்வ நிறுவனங்கள், பல்வேறு தொழில் நிறுவனங்களில் முன்னேற்றத்தை ஏற்படுத்துவதற்கு பேசவும் பயிற்சி கொடுப்பதற்காகவும் அழைக்கப்படுபவர்.

பொருளாதாரம் எம்பிஏ பிஜேபியும் படித்திருக்கும் சோம வள்ளியப்பன் பெப்ஸி வால்போல் டாக்டர் ரெட்டிஸ் பவுண்டேஷன் நவியா உள்பட பல்வேறு நிறுவனங்களில் 30 ஆண்டுகள் மனிதவளத் துறையில் பணியாற்றி விட்டு தற்போது மேன்மை மேனேஜ்மெண்ட் கன்சல்டன்சி மேலாண் இயக்குனராக சென்னையில் பணிபுரிந்து வருகிறார்.

இவர் எழுதிய ஒவ்வொரு புத்தகமும் அதன் தலைப்பே வாசிக்கவும் மிகவும் உற்சாகமூட்டுவதாகவும் தான் இருக்கிறது."வீட்டுக் கணக்கு", "இட்லியாக இருங்கள்"," சிறந்த நிர்வாகி ஆவது எப்படி"," காலம்"," தள்ளு", "உலகம் உன் கையில்", "காதலில் இருந்து திருமணம் வரை", "எல்லோரும் வல்லவரே", "அள்ள அள்ள பணம் ","பங்குச்சந்தை அடிப்படைகள்"," உறவுகள் மேம்பட" ," உஷார் உள்ளே பார்" என்று ஒவ்வொரு தலைப்பும் மிகவும் வித்தியாசமாகவும் சுவாரசியமாகவும் நிறைய புத்தகங்களை வெளியிட்டு இருக்கிறார்.

தலைப்புகள் மட்டும் சுவாரசியமானது அல்ல உள்ளே இவருடைய எழுத்து ஆதாரப்பூர்வமான ஆய்வின் அடிப்படையில் பல்வேறு விடயங்கள் தரவுகளோடு விவாதிக்கப்பட்டு அதற்கான தீர்வுகளும் முன்வைக்கப்படுவது தான் இவருடைய எழுத்தில் வெற்றிக்கும் அது நம்மை கவர்ந்து இழுப்பதற்கும் காரணமாக நான் உணர்கிறேன். இதுவரை இவருடைய சிறந்த நிர்வாகி ஆவது எப்படி மற்றும் இட்லியாக இருங்கள் ஆகிய இரண்டு புத்தகங்களை நான் வாசித்திருக்கிறேன் அந்த சிறந்த நிர்வாகி ஆவது எப்படி என்ற புத்தகத்தில் அவர் பெரும்பாலும் அனைத்து விடயங்களையும் கொண்டுவர முயற்சி செய்திருக்கிறார் மூன்றாவதாக தற்போது மேனேஜ்மென்ட் குரு கம்பன் என்ற அந்த புத்தகத்தை வாசித்து வருகிறேன்

காலம் அனைவருக்கும் பொதுவானது தான். எல்லோருக்கும் 24 மணி நேரம் தான் கொடுக்கப்பட்டு இருக்கிறது .அதை எப்படி திறம்பட பயன்படுத்துவது அல்லது அதை நிர்வகிப்பது என்பது மட்டும்தான் சாதனையாளர்களுக்கு, சாதாரணமானவர்களுக்கும் உள்ள வேறுபாடு. இவர் எழுதிய "நேரத்தை உரமாக்கு" என்னும் இந்நூல் நேர மேலாண்மையை சுவையாகவும் தகுந்த உதாரணங்களுடன் கற்றுத்தரும் ஒரு அருமையான நூல்.

"உறவுகள் மேம்பட" என்ற இவரது இன்னொரு நூல் மனிதர்களை ஈர்க்கும் வித்தையை நெருக்கமான சம்பவங்கள் அழகான கதைகள் ஆழமான உதாரணங்கள் மூலம் நமக்கு கற்றுத் தருகிறது.

"எல்லோரும் வல்லவரே" சாதனையாளர்களுக்கு சாத்தியமானவை அனைத்தும் சாதாரணமானவர்களுக்கும் சாத்தியப்படும்.அவர்களைப் போலவே நீங்களும் ஒரு வல்லவர் தான் இதை நீங்கள் உறுதியாக நம்ப தொடங்கும் பொழுது உங்கள் ஆளுமை பல மடங்கு பிரகாசிப்பதை நீங்களே உணரலாம் என்று கூறும் நூல். வரலாற்றில் இடம் பிடித்திருக்கும் அனைத்து வரலாற்று சாதனை அவர்களுக்கும் உள்ள அடிப்படையான ஒற்றுமை அவர்களிடம் இருந்த உறுதிதான். இந்த மன உறுதியை சாதாரணமான நாமும் சரித்திரம் படைப்பவர்களாக மாறுவதற்கும் அந்த உறுதி மட்டுமே வேண்டும். அதைத்தான் இந்த "உறுதி மட்டுமே வேண்டும்" என்ற இந்த புத்தகம் நமக்கு சொல்லிக் கொடுக்கும் ஒரு உந்து சக்தியாக உள்ளது.

உங்கள் கனவுகளை விரிவாக்குவது நிறுத்திக் கொள்ளாமல் அந்த கனவுகளை நிறைவேற்றுவதற்கான சூட்சுமங்களையும் சொல்லிக் கொடுக்கிறது இந்த உறுதி மட்டுமே வேண்டும் இப்படி ஒரு அவருடைய புத்தகங்களைப் பற்றி சொல்லிக்கொண்டே போகலாம்.

சம்பாதிக்க தெரிந்த அளவுக்கு சம்பாதிக்க தெரிந்த பணத்தை சரியாக நிர்வகிக்க பலருக்கு தெரிவதில்லை.இனியாவது தெரிந்து கொள்ள வேண்டும் என்றுகூட நினைப்பதில்லை. இதில் படித்தவர் ,படிக்காதவர் ,உயர்ந்த பதவியில் இருப்பவர், சாதாரண ஊழியர் போன்ற வேறுபாடுகள் ஏதுமே இல்லை. உண்மையில் பணத்தை சம்பாதிப்பது அத்தனை கடினமான விடயமே கிடையாது, நம்மிடம் இருக்கும் சிறு அளவு பணமே பெரும் பணத்தை சம்பாதித்து விடும். அதற்கான எளிமையான வழிமுறைகளை சொல்லும் புத்தகம்தான் "பணமே ஓடிவா"

இப்படி தமிழிலும் ஆகச்சிறந்த சுயமுன்னேற்ற நூல்களையும் அன்றாடம் பயன்படும் நடைமுறைக்கு ஏற்ற வழிமுறைகளையும் சொல்லிக் கொடுப்பதற்கு ஒரு ஆகச் சிறந்த எழுத்தாளர் சுயமுன்னேற்ற ஊக்குவிப்பவர் மேலாண்மை குரு இருக்கிறார் என்றுதான் எனக்கு இவரை படித்த பிறகு தெரிந்தது.

தற்போது இவரை அவருடைய யூடியூப் சேனல் வழியாக நான் பின் தொடர்ந்து வருகிறேன்.அன்றாடம் காலத்திற்கு ஏற்ப மிக அருமையான விடயங்களை நடைமுறைக்கு ஏற்றவாறு சொல்லித்தருகிறார். மனம் ஏற்றுக்கொள்ள கூடியதாக இருக்கிறது. நிறைய விடயங்களை அன்றாட வாழ்வை இன்னும் சுலபமாக்க வேண்டும் ,மேம்படுத்தவேண்டும், நேரத்தை சரியாக கையாள வேண்டும் என்று நினைப்பவர்கள் இன்று நாம் வாழும் வாழ்க்கையில் இருந்து நிச்சயமாக ஒரு படி உயர்ந்து உயர்வான ஒரு இடத்தை அடைய வேண்டும் என நினைப்பவர்கள் நிச்சயமாக சோம வள்ளியப்பனை வாசிக்கலாம். பின்பற்றலாம். பின் தொடரலாம்.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.