இருபது வயதுப் பெண்ணாக ஒரு ஊடகவியலாளராக பணிபுரிந்து கொண்டிருந்த சமயத்தில் இன்று திரைப்பட இயக்குநராக உள்ள ஒருவரால் தனக்கு நேர்ந்த பாலியல் ரீதியான அச்சுறுத்தல் குறித்து சக கவிஞர் லீனா மணி மேகலை மீ டூ இயக்கம் தந்த உலகளாவிய ஆதரவுக்கரங் களின் தோழமை அளித்த தெம்பில் பொதுவெளியில் பேசியதற்காக சம்பந்தப்பட்ட நபர் அவர் மீது மானநஷ்ட வழக்கு போட்டிருக்கிறார்.

நீதிமன்றத்தில் லீனாவின் ஒழுக்கத்தைக் கேள்விக்குட்படுத்தியும், தன் திறமைக்குக் கிடைக்கும் அங்கீகாரமாக அயல்நாடுகளிலிருந்து வரும் அழைப்பை லீனா மணி மேகலை ஏற்க முடியாமல் அவருடைய வெளிநாட்டுப் பயணங்களைத் தடைசெய்யக் கோரி வழக்கு தொடுத்தும் சக கவிஞர் லீனாவின் படைப்பெழுச்சிக்குப் பலவகையிலும் முட்டுக்கட்டை யிட்டுக்கொண்டிருக்கிறார்.

மான நஷ்ட வழக்கு போட யாருக்கும் உரிமையிருக்கிறது. அதே சமயம், அவரவர் மனசாட்சிக்குத் தெரியும் தன் மீது சுமத்தப்படும் குற்றம் உண்மையா, பொய்யா என்று.

அப்படி ME TOO இயக்கப் பின்னணியில் குற்றம் சுமத்தப் பட்ட ஆண்களில் சிலர் பல வருடங்கள் முன்பு தாம் அப்படி நடந்துகொண்டது உண்மை தானென்றும் அதற்காக வெட்கப்படுவதாகவும் மன்னிப்பு கேட்டதும் நடந்தது.

ME TOO இயக்கப் பின்புலத்தில் ஓர் ஆண் மீது ஒரு பெண் பொய்யாக குற்றம் சுமத்த் வாய்ப்பிருக்கிறது என்றாலும் ஒரு பெண் தன் பாதிப்பு குறித்துப் பேசும்போது அவர் உண்மை பேசுகிறாரா அல்லது பொய்யுரைக்கிறாரா என்பது நம் உள்ளுணர்வுக்கு எளிதாகப் புலப்பட்டுவிடும்.

பொய்யாக ஒருவர் மீது பழிசுமத்தி அதில் பிராபல்யம் தேடிக்கொள்ள வேண்டும் என்று நினைத்திருந்தால் அதற்கு சம்பந்தப்பட்ட நபரை லீனா குறிப்பிட்டிருக்க மாட்டார் என்பது தெளிவாகவே விளங்குகிறது. தவிர, இத்தகைய ஒரு குற்றச்சாட்டை அவர் வேறெப்போதும் வேறெந்த நபர் மீதும் சுமத்தியதில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

அதுவும், மான நஷ்ட வழக்கு என்ற பெயரில் சக கவிஞர் லீனா மணிமேகலைக்கு அவருடைய திறமைக்கான அங்கீகாரமாய் வரும் வெளி நாட்டுப் பல்கலைக்கழக விழாக்களிலும் கருத்தரங்குகளிலும் அவரைப் பங்கெடுக்க விடாமல் தடுப்பதொன்றே குறியாய் வழக்கை நடத்திச் செல்வது கண்டனத்திற்குரியது.

அவருடைய ’மாடத்தி’ சுயாதீனத் திரைப்படம் கொரோனா காலகட்டத்தின் இக்கட்டான சூழ்நிலைகளுக்கு, நெருக்கடி களுக்கு மத்தியில் ஓடிடியில் வெளியாகி பரவலான கவனத்தைப் பெற்றுக் கொண்டிருக்கிறது. அது தொடர்பாய் அயல்நாட்டில் இம்மாதம் ஒரு பல்கலைக்கழகத்தில் உரை யாற்ற கவிஞர் லீனா மணிமேகலைக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது.

பதினைந்து இருபது வருடங்களுக்கு முன் தனக்கு நேர்ந்த பாலியல் தொல்லையை ஆறா வடுவாக மனதில் சுமந்துகொண்டிருந்த பெண்கள் ME TOO MOVEMENT உலகளாவிய அளவில் பரவிய நேரம் ஒரு வடிகாலாக வும், தங்கள் அதிகாரத்தைப் பயன்படுத்தி பெண்களை அச்சுறுத்தி அடிபணிய வைக்கப் பார்க்கும் அராஜகப் போக்கைக் கடைப்பிடித்துவருவோருக்கு எச்சரிக்கை மணி அடிப்பதாகவும் தங்களுக்கு நேர்ந்த, நேர்ந்துகொண் டிருக்கும் பாலியல் தொல்லைகளைப் பற்றிப் பேச ஆரம்பித்தனர்.

அவர்களின் குரல்களை அடக்குவதே குறியாக ’ஆதாரத்தைக் கொண்டுவா , சாட்சிகளைக் கொண்டுவா’ என்ற எதிர்க்குரல்களும் கிளம்பின.

அநியாயம் நடந்தபோதே குரலெழுப்பியிருந்தால் அதற்குப் பின் எத்தனையோ பெண்கள் சம்பந்தப்பட்ட அத்துமீறல்காரரிடமிருந்து தங்களைத் தற்காத்துக் கொள்ள வழியேற்பட்டிருக்குமே என்றெல்லாம் தோன்றி னாலும் ஒரு பெண்ணுக்கு ஏற்படலாகும் பாலியல்சார் அத்துமீறல்களையும், அந்த அத்து மீறல்களைச் செய் பவர்களையும் சம்பந்தப்பட்ட இருவருக்கும் பரிச்சய மானவர்களும் அவர்கள் புழங்கும் பணியிடப்பரப்புகளில் இயங்குபவர்களும் அறிந்தேயிருக்கிறார்கள்.

திரைப்படத் துறையில் அப்படியொருவரைச் சந்திக்கச் செல்லும் பெண்களிடம் சக பெண்கள் கவனமாக இருக்கச் சொல்வது வழக்கம் என்று ஒரு பேட்டியில் படிக்கக் கிடைத்தது.

ஆனால், தனியொரு பெண் தனக்கு நேர்ந்த பாலியல் சார் அத்துமீறல்களைப் பொதுவெளியில் தெரியப்படுத்த இதுவரை அந்தப் பெண்ணுக்கு ஒரு இடம் இருந்த தில்லை. அப்படி வெளிப்படுத்தும் பெண்களே சமூகப் புறக்கணிப்புக்கு ஆளாகி இழிவுபடுத்தப்படும் நிலையே அதிகம்.

தங்கள் உடற்கூறுக்கு எந்த வகையிலும் தாம் பொறுப் பாகாத நிலையிலும் உடற்குறை உடையவர்கள், திருநங்கைகளை இந்த சமூகம் எப்படி நடத்துகிறது என்பதை நம்மைச் சுற்றிப் பார்த்தாலே தெரியும்.

பாலியல்ரீதியான தொந்தரவுக்கு ஆளான பெண்கள் அதைப் பற்றிப் பேசத் தயங்குவார்கள் என்பதுதான் சம்பந்தப்பட்ட ஆண்களுக்கு அந்தத் துணிச்ச லைக் கொடுக்கிறது என்பது வெளிப்படை.

ME TOO இயக்கம் மூலம் தான் ஒரு உலகளாவிய வெளி இன்று கிடைத் துள்ளது. பல காலமாகத் தங்களுக்குள் கனன்றுகொண்டிருக்கும் வடுவை ஆற்ற அவர்கள் பேசுகிறார்கள். அப்படித்தான் லீனா மணிமேகலையும் இருபது வயதுப் பெண்ணாக சென்னை நகரில் ஊடக வெளியில் வேலையேற்றிருந்த சமயத்தில் தனக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவத்தைப் பொதுவெளியில் பகிர்ந்துகொண்டார்.

அதற்காக அவர் இன்னமும் நீதிமன்றப் படிகளில் ஏறியிறங்கிக்கொண்டிருக் கிறார். தனது படைப்பாக்கப் பணியில் ஈடுபட முடியாதபடி அலைக்கழிக்கப் பட்டுக் கொண்டிருக்கிறார்.

அதே சமயம் இருபது பெண்கள் போல் பாலியல் அத்து மீறலில் ஈடுபட்டதாகச் சுட்டிய ஒருவர் இன்று சர்வ சாதாரணமாகப் பொதுவெளியில் இயங்கிக் கொண்டிருக் கிறார். இதுதான் ஆணுக்கும் பெண்ணுக்குமான சம நீதியா?

ME TOO இயக்கச் செயற்பாட்டாளர்களும் சக படைப்பாளிகளும் கவிஞர் லீனா மணிமேகலைக்காக எழுப்பிவரும் ஆதரவுக்குரல் இன்னும் வலுக்கவேண்டியது அவசியம்.

பி.கு: தனது பாஸ்போர்ட் முடக்கப்பட்டதை எதிர்த்து கவிஞர் லீனா மணிமேகலை தொடர்ந்திருக்கும் வழக்கை விசாரித்த நீதிபதி ஆர்.மகாதேவன் அவர்கள் கவிஞரின் பாஸ்போர்ட் பறிமுதல் செய்யப்பட்டதற்கான காரணத்தை விளக்கி இரண்டு வாரங்களுக் குள் பிரமாணப் பத்திரத்தை (COUNTER AFFIDAVIT)த் தாக்கல் செய்யும்படி உத்தரவிட்டிருக்கிறார்.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.