இந்தியாவின் முதுகெலும்பு விவசாயம். இல்லை உலக உயிர்களின் முதுகெலும்புதான் விவசாயம். கணிப்பொறியிலோ ஆய்வகத்திலோ நெல்லையும் கம்பையும் உருவாக்கமுடியாது . மற்ற நாடுகளைக் காட்டிலும் இந்தியாவின் விவசாயம் அதள பாதாளத்துக்குப் போய் விட்டது. காரணம் யோசிக்க வேண்டிய அரசாங்கமோ பன்னாட்டு நிறுவனங்களுக்கு பாய் விரித்துப் படுக்கச் சொல்கிறது . தன் நாட்டில் சுற்றுப்புறத்திற்கும் நிலத்திற்கும் பாதிப்பு ஏற்படும் தொழில்களை இங்கே நிறுவி வியாபாரம் பார்க்கிறார்கள் பன்னாட்டு வியாபாரிகள்.

என தாத்தா சொல்வார் “டே கண்ணு நாங்க சின்னப் பசங்களா இருக்கறப்போ இந்த ஊரெல்லா எப்படி இருந்துச்சு தெரியுமா எங்கியோ ஒரு பக்கத்தான் கட கிட இருக்கும்.மத்த பக்கம் பாத்தா சுத்தியும் பச்சம் பசேனு இருக்கும்.” அவர் சொன்னது இன்று மிகப்பெரிய நகரமாக கருதப் படுகிற இடங்கள்தான். ஆனால் இன்றோ அது நிறுவனங்களா வாழிடங்களாக மாறிவிட்டன. சரி மனிதப் பெருக்கத்திற்கு எல்லாம் இருந்தால் தான் வாழ முடியும் ஏற்றுக் கொள்கிறேன். ஆனால் எல்லா இடங்களிலும் இவை இருந்தால்தான் வாழ முடியும் என்றால் எப்படி ஏற்றுக் கொள்வது .

மந்திரிகளுக்கும் அரசாங்க அதிகாரிகளுக்கும் கோடி கோடியாய் கொட்டிக் கொடுக்கும் அரசாங்கம்  விவசாயிகளைக் கண்டு கொள்வதில்லையே. தற்கொலையின் தார்ச்சாலையாக மாறி வருகிறார்கள் விவசாயிகள். வாழ் நாள் முழுவதும் விவசாயம் செய்து சம்பாதித்த பணத்தில் பூச்சி கொல்லி மருந்துக்கு மட்டுமே மிச்சமிருக்கிறது என்றால் என்ன செய்வார்கள். வட்டிக் கடைக்காரர்களின வாய்ப்பாடாக மாறி விட்டார்கள். பயிர்களை அறுவடை செய்வதுதான் விவசாயின் வாழ்க்கை . ஆனால் வறுமையின் கொடுமையால் தங்களைத் தாங்களே அறுவடை செய்வதுதான் அவர்களது வாடிக்கை. பசுமைப் புரட்சி விவசாயத்தைச் சாகடித்தது என்றால் மரபுப் பயிர்களின் விவசாயச் சந்தையில் விவசாயத்தையும் விவசாயியையுமே சாகடித்து வருகிறோமே. நாம் சாகடித்தது போதாது என்றால் உரிமையை கேட்ட நம்மையே சாகடித்தது அசாங்கமே. அப்படிச் செய்தவர்களையே மறந்து அரியணையில் அமர வைத்துச் சங்கிதம் பாடுபவர்களும் இவர்களே.

கம்பையும் கேழ்வரகையும் , சோளத்தையும் பயிரிட்டு வந்த நாம் ஏன் தேயிலைக்கும் புகையிலைக்கும் மாறி விட்டோம். தன் வாழ்வாதாரத்திற்காக நிர்ப்பந்திக்கப்பட்ட இவற்றையே உணவுப் பயிராக்கி விட்டோம். பணப் பயர்களெல்லாம் இன்று நிலத்தை பங்கு போட்டு விட்டன. தடய வெப்ப நிலைக்கேற்ப விளையும் பல்வேறு வகையான அரிசிகளை மறந்து விட்டு ஐந்தாறு வகை அரிசிகளை விளைவித்து வருகிறோம். இராசாயன உரங்களையும் பூச்சிக் கொல்லிகளையும் செலுத்தி மண்ணையும் தண்ணியையும் நாசப் படுத்தி விட்டோம். இவை போதாது தொழிற்சாலைக் கழிவுகளை நீரில் கலக்கி குளம், குட்டை , ஏரி என எல்லா வற்றையும் நாசப்படுத்திவிடுகிறோம். மண்ணுக்குள் மண் புழுக்கள் இருந்து போய் மண்ணுக்குள் இரசாயன புழுக்கள்தான் அதிகம் இருக்கின்றன . இந்த நிலைமை நீடித்தே போனால் எதிர்காலத்தில் மண்ணுக்குள் விவசாயம் செய்ய முடியாது . ஆகாயத்தில்தான் விவசாயம் செய்ய முடியும்.

பன்னாட்டு வியாபாரிகள் இப்போது தொழிற்சாலைகளை விட்டு விட்டு விவசாயத்தை பங்கு போட வந்து விட்டாரகள் . அதாவது எங்கெங்கெல்லாம் நீர்வளம் நிலவளம் இருக்கிறதோ அதை ஏக்கர் கணக்கில் வாங்குகிறார்கள். விவசாயிகளின் ஏழ்மை நிலையை புரிந்து கொண்டு அவர்களைப் பணிய வைத்தோ , அல்லது மிரட்டியோ நிலங்களை வாங்குகிறார்கள் . அதே ஆயிரக் கணக்கான நிலத்தில் அந்த விவசாயிகளைக் கொண்டு விவசாயம் செய்கிறார்கள் . தன் நிலத்திலேயே தான் அடிமையாக வேலை பார்க்கும் அவல நிலைதான் இந்தியாவில் இனி நிகழப் போகும்.

ஊர் முழுக்க இருக்கும் நிலத்தை பங்குபோடுவது மட்டுமல்லாமல் அவர்களே காய்கறி மண்டிகளையும் ஆங்காகே நிருவுகிறார்கள் .விளைவு எதிர்காலத்தில் விவசாயம் நசுக்கப் படும் . விவசாயும் அரசாங்கமும் பொருளின் விலையைத் தீர்மானிக்க முடியாது . பன்னாட்டு முதலாளிகளின் கையில் அது போய்விடும்.

விவசாயம் செய்வது கடினம் என்ற மனநிலையைப் போக்க வேண்டும். வெறும் பத்திரிக்கைகளில் எளிய முறையில் விவசாயம் என்று எழுதினால் மட்டும் முன்னேற்றம் அடைந்து விடாது. எங்கோ ஓா் மூலையில் படிப்பறிவற்ற , பாமரர்களாக இருக்கும் அவர்களுக்கு கு இது தெரியாது . அதற்குண்டான ஆட்களை நியமித்து ஒவ்வொரு கிராமங்கள் தோறும் இருக்கும் விவசாயிகளுக்குப் பயிற்சி கொடுக்க வேண்டும் . குறைந்த நீர்வளம், நிலவளம் இருந்தாலும் கூட அதிலேயே நல்ல முறையில் விவசாயம் செய்து வாழ முடியும் என்பதையும் பார்த்திருக்கிறேன்.

சமீபத்தில் தொலைக்காட்சியிலும் , பத்திரிக்கையிலும் பெரிய படிப்பு படித்த இளைஞர்கள் எல்லாம் விலசாயம் செய்யத் துணிந்து வெற்றியடைந்தார்கள் என்பதைப் பார்க்கும் போது சந்தோஷமாக இருக்கிறது. போலி கௌரவத்திற்காகவும் ஆடம்பரத்திற்காகவும் ஒரு விவசாயின் மகனான நான் நிலங்களைத் துறந்து நகர்ப்புறத்தில் வாழ்ந்து கொண்டிருப்பது இழிவாக இருக்கிறது . பொன் விளைந்த பூமியில் கல் விளைந்து நிற்பதைப் பார்க்கும் போது வேதனையாகஇருக்கிறது . நீர்வளம் , நிலவளம் இருந்தும் எத்தனை பேர் விவசாயம் செய்யத் துணிகிறோம். நாம் படித்தும் பட்டம் பெற வேண்டாம் என்று சொல்லவில்லை. பாடுபட்டு இந்தப் பாரை உயா்த்த வேண்டும் என்று சொல்கிறேன். இந்தியாவில் தற்கொலையின் கூடாரமாக விவசாயிகள் இருக்கக் கூடாது . உற்பத்தியின் கூடாரமாக அவர்கள் மாற வேண்டும் , , அதற்கு அரசாங்கமும் , அதனை நன்கு அறிந்தவா்களும் அவா்களுக்கு உதவ வேண்டும்.விவசாயம் விவசாயிகளின் கையில்தான் இருக்கவேண்டும். பன்னாட்டு பன்னிகளிடம் அது சென்று விடக்கூடாது. ஒரு பொருளின் விலையை விவசாயிகள் தீர்மானிக்கும் காலம் வர வேண்டும்.வரும்.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.