பொருள் ஒன்றின் பயன்பாடு அல்லது பழக்கப்பட்டுப்போன நடத்தை ஒன்று எங்களுக்குத் தீங்கு விளைவிக்கின்றது என்பது தெரிந்தாலும்கூட, அந்தப் பொருளைப் பயன்படுத்துவதை அல்லது குறித்த நடத்தையில் ஈடுபடுவதை எங்களால் நிறுத்தமுடியாமல் இருக்கிறதெனில், அந்தப் பொருள்/நடத்தை எங்களைக் கட்டுப்படுத்துகிறது எனலாம், இல்லையா? இதுவே அடிமையாதல் (addiction) எனப்படுகின்றது.

இவ்வகையான அடிமையாதல் நிலை ஒருவரிடம் காணப்படும்போது, அது அவரின் தெரிவு என்றோ அல்லது அது அவரின் ஒழுக்கப் பிரச்சினை என்றோதான் நாங்கள் பொதுவாகக் கருதுகிறோம். அப்படி அடிமையாவதால், அவருக்கோ அல்லது அவரின் குடும்பத்தவருக்கோ பிரச்சினைகள் ஏற்படும்போது, ‘குறித்த பொருளின் பாவனையை/நடத்தையை நிறுத்த வேண்டியதுதானே,’ என நாங்கள் சுலபமாகக் கூறிவிடுகிறோம். அதேபோல, அந்தப் பழக்கத்தை நிறுத்தமுடியாமல் அல்லல்படுபவர்கள் மேல் கோபப்படுகின்றோம். ஆனால், உண்மை என்னவென்றால் அப்படி நிறுத்திவிடுவது என்பது ஒரு இலேசான விடயமில்லை என்கிறார், NIH’s National Institute on Alcohol Abuse & Alcoholism என்ற அமைப்பின் தலைவரான Dr. George Koob.

இந்த யதார்த்தத்தை எனது மொழிபெயர்ப்பாளர் வேலை ஊடாக நானும் விளங்கிக்கொண்டேன். என் தொழிலின்போது நான் இதுவரை சந்தித்திருந்த மனிதர்களின் அனுபவங்களும், அவர்களுக்கான சிகிச்சைகளின்போது நான் கற்றுக்கொண்டவைகளும் என் கருத்துக்களை மாற்றிக்கொள்வதற்கு மிகவும் உதவியிருக்கின்றன. அவ்வாறாக நான் கற்றுக்கொண்டவற்றை பொதுவெளியில் பகிர்ந்துகொள்வது சிலருக்காவது பயனளிக்கக்கூடும் என நினைத்தேன். அதற்கான சந்தர்ப்பத்தை கனடா உதயன் பத்திரிகையின் வெள்ளி விழா மலரில் வழங்கியிருக்கும் உதயன் ஆசிரியருக்கு முதலில் என் மனமார்ந்த நன்றி.

உடற்பயிற்சி, அளவான ஆரோக்கியமான உணவு, இசை, கல்வியில் கிடைக்கும் வெற்றி, வேலை ஊடாகப் பெறும் திருப்தி, எங்கள் மேல் அன்பானவர்களுடனான எங்களின் பிணைப்பு என்பவை மன ஆரோக்கியத்துக்கு உதவும் விடயங்களுக்குச் சில உதாரணங்கள் ஆகும். இவற்றை நாங்கள் அனுபவிக்கும்போது, எங்களின் மூளையில் டொபமைன் (dopamine) என்ற இரசாயனப் பொருள் அதிகமாகச் சுரக்கின்றது. அது நாங்கள் சந்தோஷத்தை உணர்வதற்கு உதவுகின்றது. இப்படியாக, அந்தத் தருணங்களுக்குரிய வெகுமதியை எங்களின் மூளை எங்களுக்கு அளிப்பதால், எங்களின் மனம் மீளவும் மீளவும் அந்த விடயங்களை அனுபவிக்கும்படி எங்ளைத் தூண்டுகின்றது. ஆனால், ஏதாவது ஓர் ஆபத்தில் நாங்கள் இருக்கும்போது அதே மூளை முற்றிலும் நேர்மாறாகச் செயல்படுகிறது. எங்களின் இதயவடிப்பை அதிகரிப்பதன் மூலமும், எங்களுக்குப் பயத்தை உருவாக்குவதன் மூலமும் அந்த இடத்தை விட்டு எங்களை விரைவாக அகற்றுவதுதான் அந்த நேரத்தில் எங்களின் மூளையின் நோக்கமாக இருக்கிறது.


மூளையின் இவ்வகையான செயற்பாட்டினை அடிமையாதல் முற்றாக மாற்றிவிடுகின்றது. மதுபானம், புகையிலை, மருவானா போன்ற பொருள்களுக்கோ, அல்லது கட்டுபாடற்ற உணவு உண்ணல், பொருள்களைத் தேவையின்றி வாங்கல், வேலையில் அளவுக்கதிகமாக மூழ்கிப்போதல், இணையதளங்களில் அதிகளவு நேரத்தைச் செலவழித்தல், வீடியோவில் நேரம்தெரியாது விளையாடல், கைப்பேசியுடன் சீவித்தல் மற்றும் சூதாடல் போன்ற நடத்தைகளுக்கோ அடிமையாகிப் போவோரில் அந்த விடயங்கள் மகிழ்ச்சியை உணரவைக்கும் மூளையின் பகுதிகளைத் தூண்டுவனவாக மாறிவிடுகின்றன. மேலும், அவற்றினால் கிடைக்கும் மகிழ்ச்சி எந்தவிதமான முயற்சியும் இல்லாமலேயே சுலபமாகக் கிடைப்பதால், அவர்கள் முடிவில் அவற்றையே அதிகமாக நாடிப்போகிறார்கள். அதனால்தான், அடிமையாகிப் போனபின் அதிலிருந்து மீள்வது சுலபமானதாக இருப்பதில்லை. ஏனெனில் அடிமையாதலுக்குக் காரணமான பொருள் / நடத்தை மூளையில் டொபமைனின் அளவை அளவுக்கதிகமாக அதிகரிப்பதால், மூளை இயல்பாகச் சுரக்கும் அதன் அளவு குறைந்துவிடுகின்றது. அதாவது புதியதொரு சமநிலை அவர்களில் ஏற்பட்டுவிடுகின்றது. அவ்வாறாக டொபமைனை மூளை இயற்கையாகச் சுரக்கும் அளவு குறைந்துவிடுவதால், அடிமையாதலுக்குக் காரணமான பொருளைப் பயன்படுத்தாவிட்டால் நடுக்கம், வியர்த்தல், களைப்பு, வலி, வாந்தி, வலிப்பு போன்ற அறிகுறிகள் அவர்களில் ஏற்படுகின்றன. எனவே குறித்த நபர் அந்தப் பொருளில் தங்கியிருக்கவேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்படுகிறார். சிலர் காலையில் எழும்பியவுடனேயே மதுபானம் அருந்துவதும் இதனால்தான். எனவேதான், அடிமையாதலில் இருந்து மீளும் ஒருவரின் மூளை அதன் இயல்பு நிலைக்குத் திரும்புவதற்கு அவர் நிறைய முயற்சி செய்யவேண்டியிருக்கிறது. இருப்பினும், பொருள் பயன்பாட்டை அல்லது குறித்த நடத்தையை நிறுத்துவதால் இயல்பு நிலைக்கு மாறலாம் என்பது ஒரு நல்ல விடயமாகும்.

நண்பர்கள் அல்லது சமூக ஊடகங்கள் ஊடாக அறிந்தவற்றைப் பரீட்சித்துப் பார்க்கும் ஆர்வம் அல்லது நண்பர்களுடன் ஒத்திருப்பதற்கான முயற்சி என்பனதான், ஒரு புதிய பழக்கத்தை ஒருவர் தொடங்குவதற்கான பொதுவான காரணங்களாக இருக்கின்றன. இப்படித் தன்னார்வத்துடன் ஆரம்பிக்கும் ஒரு பழக்கம் பின்னர் கட்டுப்படுத்த முடியாத அடிமையாதல் பிரச்சினையாக சிலரில் உருவெடுக்கின்றது. பரிசோதித்துப் பார்க்கும் விடயம் பிடித்துப்போனால் பரிசோதித்தவர்கள் அதனைத் தொடர்கிறார்கள். உதாரணத்துக்கு, மதுபானப் பாவனையைப் பார்த்தோமேயானால், நண்பர்களுடனான சந்திப்புக்களின்போது சமூக ஒட்டலுக்காக அல்லது வேலைக் களைப்புக்கு நித்திரைக்கு முதல் கொஞ்சமெனப் பயன்படுத்தத் தொடங்குபவர்கள், கால ஓட்டத்தில் வேலையிலோ அல்லது குடும்பத்திலோ, அதனால் பிரச்சினை வருமளவுக்கு அல்லது அது அவருக்கு ஆபத்து விளைவிப்பதாக மாறுமளவுக்கு அதிகமாகப் பயன்படுத்துகிறார்கள். பின்னர், தினமும் பல தடவைகள் தேவைப்படும் அளவுக்கு அதில் தங்கியிருப்பவர்களாக அவர்கள் மாறிவிடுகின்றார்கள். இருந்தாலும், இப்படியான பழக்கம் ஒன்றைப் பழகுபவர்கள் எல்லோரும் அதற்கு அடிமையாவது இல்லை.

பாலினம், வாழும் சூழல், உடலமைப்பு, ஆதரவுவழங்கும் அமைப்பு ஆகிய நான்கு விடயங்களை அடிமையாதலுக்கான முக்கிய காரணிகளாகக் கூறமுடியும் என்கின்றனர், மருத்துவர்கள். ஆண்கள், பெண்களைவிட இலகுவில் அடிமையாகின்றார்கள் என அண்மையக் கற்கை ஒன்று காட்டியுள்ளது. அதேபோல ஏதாவது ஒரு பொருளுக்கு அடிமையாதலுக்கு உட்பட்டவர்களின் பிள்ளைகள் அந்தப் பொருளுக்கு அடிமையாகும் சாத்தியம் ஏனையோரின் பிள்ளைகளை விட அதிகமாக (25%) உள்ளது. மூளையின் செயற்பாடு ஆளுக்கு ஆள் வேறுபடுவதால் டொபமைன் என்ற அந்த இரசாயனப் பொருளின் சுரப்பின் அளவில் ஏற்படும் மாற்றமும் வேறுபடுகின்றது. அடுத்ததாக, ஆதரவு வழங்குவோர் இல்லாதவர்களுக்கு அந்தப் பொருளே உற்ற துணையாவதால் அவர்களால் அது இல்லாமல் இருக்கமுடியாமல் போகின்றது.

முரண்பாடுகளையோ அல்லது இழப்புக்களையோ எப்படிக் கையாள்வது எனத் தெரியாதபோது அதிலிருந்து தப்பித்துக்கொள்ளும் ஒரு வழியாக அல்லது திருப்திகரமான உறவுகள் அமையாதபோது மனதில் ஏற்படும் வெறுமையை நிரப்பும் ஒரு வழியாகப் போதை தரும் பொருள்களைப் பயன்படுத்த ஒருவர் ஆரம்பிக்கின்றார் எனில், அடிமையாதலில் அவரைச் சூழவிருப்பவர்களும் குறிப்பிட்ட பங்குவகிக்கிறார்கள் எனலாம். விவாகரத்து, வேலை இழப்பு, குடும்பத்தினரின் மரணம் போன்ற வாழ்க்கை மாற்றங்களின்போது அடிமையாதலின் உச்சக்கட்டத்துக்குச் சென்ற சிலரை நான் சந்தித்திருக்கிறேன்.

சூழலில் நிகழும் மாற்றங்களினால் ஏற்படும் உணர்ச்சிக் குழப்பங்களைக் கையாளப் பழகுதல் குழந்தையிலிருந்து ஆரம்பமாகின்றது. அதற்கான பயிற்சி கிடைக்காதவர்களுக்கு பிரச்சினைகளைத் தாங்கும்சக்தி குறைவாக இருத்தலும் அடிமையாதலுக்கு ஒரு காரணமாகிறது. சூதாடும் பழக்கத்திலிருந்து விடுபட முயற்சிப்போர்களுக்கான பட்டறைகளுக்கு வருவோரில் பலர் அவர்களை மீள மீள அதற்குள் தள்ளும் விடயமாக தங்களின் நெருங்கிய உறவுகளும் இருப்பது பற்றிக் கூறுவார்கள். அதாவது, ‘நீ உருப்பட மாட்டாய், உன்னால் எதுவும் முடியாது,’ என்பது போன்ற கூற்றுக்கள் அவர்கள் பெறுமதியற்றவர்கள் என அவர்களை உணரச்செய்வதால் தாங்கள் ஏதாவது செய்துகாட்டவேண்டுமென அவர்களைத் தூண்டுகின்றன. முடிவில், அவர்கள் மேலும் மேலும் பிரச்சினைகளைத் தேடிக்கொள்கின்றனர். இப்படியானவர்களுக்கு அன்பான ஆதரவான உறவு இருந்தால் உதவியாக இருக்கலாம்.

அடிமையாதல் என்பது உண்மையில் நீண்ட காலம் நிலைத்திருக்கும் ஒரு மருத்துவ நோயாகும். இளம் வயதில் இப்படியான பழக்கங்களை ஆரம்பிப்பவர்களுக்கு அடிமையாதலுக்கான சாத்தியங்கள் அதிகமாக இருக்கின்றன. நான் சந்தித்த ஒருவர் இளம் வயதில் கப்பலில் வேலைசெய்யும் போது பழகிய பழக்கத்தை விட்டுவிட முடியாமல் சீக்கிரமாகவே இறந்துபோயிருக்கிறார். நல்லவிடயம் என்னவென்றால் நேரத்துடன் உதவி தேடினால் சிகிச்சையினால் தேறமுடியும்.

சிகிச்சை அளிக்கப்படாத போதை நீண்ட கால விளைவுகளுக்கு வழிவகுக்கிறது. அவை இதய நோய், ஈரல் பாதிப்பு, நரம்பியல் சேதம் போன்ற உடல்ரீதியான பிரச்சினைகளாகவோ, பதற்றம், மனவழுத்தம் மற்றும் மனச்சோர்வு போன்ற உளவியல்ரீதியான பிரச்சினைகளாகவோ, உறவுகளுடன் அல்லது சட்டத்துடனான பிரச்சினை போன்ற சமூகரீதியான பிரச்சினைகளாகவோ அல்லது கடன் போன்ற பொருளாதாரப் பிரச்சினையாகவோ இருக்கலாம்

அடிமையாதலில் இருந்து மீள்வதற்குத் தனிப்பட்டரீதியான, குழுரீதியான, துணைவர்களுடனான சிகிச்சை உட்பட பல்வேறு வடிவங்களில் கவுன்சலிங் உதவியைப் பெறலாம். கவுன்சிலிங் மூலம் பொருள் பயன்பாடு/நடத்தை அவர்களின் வாழ்க்கையை எவ்வாறு பாதிக்கிறது என்பதை விளங்கிக்கொள்வதுடன், அதற்கான ஏக்கங்களையும் தூண்டிகளையும் எப்படிக் கையாளலாம் என்பது பற்றிய அறிவையும் பெற்றுக்கொள்ளலாம். அத்துடன், அடிமையாதலுக்கு உட்பட்டவர்கள் தங்களின் எண்ணங்களையும் உணர்ச்சிகளையும் ஆராய்வதற்கும், அந்த அனுபவங்கள் எப்படி அவர்களின் நடத்தையில் பாதிப்பை ஏற்படுத்துகிறது என்பதை விளங்கிக்கொள்வதற்கும், அவர்களுக்கான தேவைகளை அவர்கள் போதை இன்றி எப்படிப் பூர்த்திசெய்யலாம் என்பது பற்றிய வழிகளை அறிவதற்கும்கூட கவுன்சலிங் உதவுகிறது.

அடிமையாதலுக்கு அடிப்படையாக இருந்த விடயத்துக்கான தீர்வு காணலே அடிமையாதலுக்கான தீர்வாக அமைய முடியும். நண்பர்கள், சந்திப்புகள், கொண்டாட்டங்கள், விற்பனை நிலையங்கள், உறவுகளிலுள்ள முரண்கள், தொடர்பாடல் பிரச்சினைகள், வலிகள், அன்புக்குரியவர்களின் இழப்பு, நித்திரைக் குழப்பம் போன்ற தூண்டிகளை இனம்காணல் அவசியம், அத்துடன் அடிமையாதலுக்குக் காரணமான பொருள்/நடத்தைக்கான ஏக்கம், விடுதலை உணர்வுக்காகவா, பாதுகாப்பு உணர்வுக்காகவா அல்லது வலியையோ அல்லது தனிமையையோ போக்கவா என அடையாளம் காணலும் முக்கியமானது. பின்னர் அது எதுவோ அதை அகற்றுவதற்கான அல்லது அதற்கான தீர்வைப் பெறுவதற்கான வழிவகைகளை ஆராய வேண்டும்.

மேலும், மனவழுத்தம் அல்லது கோபம் போன்றவற்றைக் கையாள்வதற்கான பட்டறைகள், பேரதிர்ச்சி, நெருக்கீடு போன்றவற்றை மேவுவதற்கான உதவிகள், ஆரோக்கியமான உணவு, தொடர்பாடல் உத்தி முறைகள், பணத்தை நிர்வகித்தல் மற்றும் வரவு செலவு பற்றிய அறிவூட்டல்கள், நித்திரை போன்ற பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான உதவிகள் போன்றவை அடிமையாதலில் இருந்து மீள்வதற்கு உதவிசெய்யக்கூடும்.

தூண்டிகள் என்னவென்று தெரியாவிட்டால், போதைக்கான ஆசை வந்தவுடன் வரும் உணர்வு என்னவென்பதைப் பதிவுசெய்து ஆராயலாம். அடிமையாதலுக்குக் காரணமான பொருளின் பயன்பாட்டை முற்றாக விட வேண்டியதில்லை, அதற்குத் தயாரில்லை எனில் அந்தப் பயன்பாட்டைக் குறைப்பதற்கு முயற்சி செய்யலாம். தெளிவான இலக்கை அமைத்தலும், அதனை அடைவதற்கான உந்துதலைப் பெறுவதற்காக, அடிமையாதலில் இருந்து வெளியேறுவதால் கிடைக்கக்கூடிய நன்மைகளான மகிழ்ச்சி, ஆரோக்கியம் மற்றும் அடிமையாதலைத் தொடர்வதால் வரக்கூடிய தீமைகளான ஆரோக்கியப் பாதிப்பு, பொருளாதாரப் பிரச்சினை, உறவுகள் இழப்பு என்பவற்றைப் பற்றி எழுதி வைத்திருத்தலும் உதவிசெய்யலாம்.

அடிமையாதலை எது தூண்டுகின்றதோ அது முடிவில் பின்விளைவுகளை ஏற்படுத்தத் தவறுவதில்லை. பின்விளைவுகள் குடும்பத்தில், நண்பர்களிடையே, வேலையில் பிரச்சினையை ஏற்படுத்தும்போது அதற்கான ஒருவரின் எதிர்வினைகள் மோசமானவையாக இருக்கலாம். ஏனெனில் பின்விளைவுகளைப் பற்றிச் சிந்திக்கக்கூடிய நிலையில் அவரின் மூளை இருப்பதில்லை. பின்னர் அது ஒரு வெட்கக்கேடான செயல் என அவர் உணரும்போது, அந்த உணர்வு அவருக்கு ஒரு தூண்டியாக அமைய மீளவும் அந்தப் பொருளுக்கு அவர் அடிமையாகிறார். இப்படியாக இது ஒரு சுழற்சியாக நடைபெறுகின்றது. எனவே இந்தச் சுழற்சியை உடைத்தல் முக்கியமானது. அதற்கு அது பற்றிய விழிப்புணர்வு, வாழ்க்கையில் பற்று, மாற்றம் ஏற்படுத்தும் ஆர்வம், அதற்கான முயற்சி என்பவை அவசியமாகும். சுயபராமரிப்பில் கவனம் செலுத்தல், தியானம், உடல்பயிற்சி, தூண்டிகளைத் தவிர்த்தல், மனக்கட்டுப்பாட்டை வளர்த்தல் போன்றவையும் அதற்கு உதவிசெய்யலாம்.

அடிமையாதலில் இருந்து மீண்டாலும் அதனைப் பேணல் சிரமமாக இருக்கலாம். பொதுவில் 3-12 மாதங்களின் பின் மீளவும் அதே பொருள் பயன்பாட்டை/நடத்தையை ஆரம்பிப்போரும் உண்டு. எனவே ஆரோக்கியமற்ற பழக்கத்தை நிறுத்த முன்னர் அதிலிருந்து விலகியிருத்தல் உங்களுக்கு எவ்வளவு முக்கியம், உங்களின் இலக்கை அடைவதற்கு எவர் உதவியாக இருப்பார், இலக்கிலிருந்து விலகும் நிலைவந்தால் எப்படி மீளவும் இலக்கை நோக்கித் திரும்பலாம் என்பவற்றைப் பற்றிச் சிந்தித்தல் அவசியம். அவற்றை நீங்கள் எழுதிவைத்தால், தேவை வந்தால், அவற்றை மீட்டிப்பார்க்க முடியும். அது தொடர்ந்தும் அந்தப் பழக்கத்திலிருந்து நீங்கள் விலகியிருக்க உதவும். அத்துடன், மதுபானம் போன்ற பொருள்களின் பயன்பாட்டைக் குறைப்பதற்கு மருந்துகளும் உதவிசெய்யும்.

கடந்தகாலம் எதுவாக இருந்தாலும், அது எதிர்காலத்தைத் திருட அனுமதிக்கலாமா? எனவே இன்றே அதற்கான படிமுறைகளை எடுத்தல் அவசியமல்லவா? நீங்களாக நினைக்காவிட்டால் எதுவும் சாத்தியமாகாது, நீங்களாக நினைத்தால் எதுவும் சாத்தியமாகும்.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.