படைப்பிலக்கியவாதி ஒருவர் எழுதும் பயண அனுபவங்களுக்கும், சாதாரணமான ஒருவர் எழுதும் பயண அனுபவங்களுக்குமிடையில் அதிக வித்தியாசம் இருக்கும். படைப்பிலக்கியவாதி எழுதும் அனுபவங்களில் இலக்கியச் சுவை இருக்கும். உணர்வுகளின் வெளிப்பாடு இருக்கும். அதனால் அவை இலக்கியத் தரம் மிக்கதாக அமைந்து விடுகின்றன. 

உதாரணத்துக்கு எழுத்தாளர் நடேசன் எழுதும் பயண அனுபவங்களைக் குறிப்பிடலாம். தற்போது  பதிவுகள் இணைய இதழில் வெளியாகியுள்ள அவரது இந்தியப் பயணத்தொடரில் இம்முறை மத்திய பிரதேசத்திலுள்ள  பீம்பேத்கா (Rock Shelters of Bhimbetka) குகை ஓவியங்களைப் பற்றிக் குறிப்பிட்டிருக்கின்றார். ஆதி மனிதர்களால் பல்வேறு காலகட்டங்களில் வரையப்பட்ட ஓவியங்களை உள்ளடக்கிய குகைகள். 

இவ்வோவியங்களைப் பற்றிக் குறிப்பிடுகையில் அவருக்கு ஆதி மனிதர்களின் அக்குகை ஓவியங்களைப் பார்ப்பதில் அவ்வளவு ஆர்வமில்லை. இஷ்ட்டமில்லை. ஆனாலும் மனைவிக்கு விருப்பமென்பதால் அவர் அவர் பின்னால் அவர் போன இடமெல்லாம் பின் தொடர்ந்து செல்கின்றார்.  அவ்விதம் செல்லும் அவரது அந்த நிலை அவருக்குச் சங்கப்பாடலொன்றின் வரிகளை நினைவூட்டுகின்றன.  

அப்பாடல் புறநானூறுத் தொகுப்பில் இடம் பெறும் 256ஆவது பாடல்.  தலைப்பு - அகலிதாக வனைமோ?  இயற்றியவர் பெயர்  இல்லாமல் தொகுக்கப்பட்டுள்ள பாடல்களில் ஒன்று., அப்பாட்ல் இதுதான்:

அகலிதாக வனைமோ!

கலம்செய் கோவே : கலம்செய் கோவே!
அச்சுடைச் சாகாட்டு ஆரம் பொருந்திய
சிறுவெண் பல்லி போலத் தன்னொடு
சுரம்பல வந்த எமக்கும் அருளி,
வியன்மலர் அகன்பொழில் ஈமத் தாழி
அகலிது ஆக வனைமோ
நனந்தலை மூதூர்க் கலம்செய் கோவே!

 [புறநானூறு 256 'அகலிதாக வனைமோ!)

தன் கணவனின் பின்னால் அவனுடன் இணைந்து தொடர்ந்து செல்கின்றாள் அப்பெண். அவள கணவன் இறந்து  விடுகின்றான். அவள் தனித்துப் போகின்றாள். அப்பொழுது அவள் ஈமத்தாழி வனையும் அக்குயவனைக் காண்கின்றாள். அவள் அக்குயவனைப்பார்த்து, 'குயவனே! நீ  வனையப் பாவிக்கும் சக்கரத்தின் ஆரக்காலில் நிற்கும் சிறு வெண்பல்லி, சக்கரம் சுழலும் இடமெல்லாம் தானும் சுற்றிச் செல்வதுபோல் நானும் என் கணவனுடன் அவன் செல்லும் இடமெல்லாம் பின் தொடர்ந்து சென்றேன்.  அவன் மறைந்து விட்டான். அவனது உடலை அடக்கம் செய்வதற்கு ஈமத்தாழி ஒன்று செய்து தா. அது என்னையும் உள்ளடக்கும் வகையில் அகலமாக இருக்கட்டும்.' என்கின்றாள். அப்பெண்ணின் துயரை வெளிப்படுத்தும் வரிகள். வாசிப்பவர் உள்ளங்களைக் கலங்கடித்து விடும் சொற்கள்.

இதை விபரிக்கும் நடேசன் மேலும் கூறுவார்: 'இதில் இருக்கும் சோகம் மனதை கலங்க அடிக்கும் ஒரு மாபெரும் சோகம். ஆழியை விடப் பெரிய ஒரு சோகத்தை இத்தனை சிறு வரிகளில் அடைத்து விட்டிருக்கிறார் அந்தப் புலவர்'

சுருக்கமாகத்   தன் பயண அனுபவங்களை விபரிக்கும் நடேசனின் இவ்வனுபவ விபரிப்புகள் நெஞ்சைத்தொட்டன. அச்சங்கக்காலத்துப் பெண்ணின் தீராத சோகத்தால் தவிக்கும் உள்ளத்துணர்வுகள் எம்மையும் வாட்டுகின்றன.  உண்மைதான். ஒரு படைப்பிலக்கியவாதியினால் மட்டுமே இவ்விதமான இலக்கியத்தரம் மிக்க, உணர்ச்சி பூர்வமான விபரிப்பைத்தர முடியும்.

[டிஜிட்டல் ஓவியத் தொழில் நுட்ப (Google Nano Banada) உதவி : VNG]